Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Monday, March 17, 2014

சா. மு. கா. வே. உலக சினிமா - த்ரிஷ்யம் (2013)

*********************************************************************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


சமீபத்தில் வெளிவந்து என்னை மிகவும் கவர்ந்த சினிமா த்ரிஷ்யம் என்னும் மலையாள மொழி திரைப்படம். படம் பற்றிய விமர்சனங்கள் வந்து குவிய, இந்தப் படத்தை நிச்சயம் திரையரங்கில் தான் காணவேண்டும் என்று ஜனவரியில் முடிவு செய்தேன். சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் வாரா வாரம் புதுப் படங்களின் வருகையால் காட்சிகள் மாறுவது வழக்கம். அப்படி ஓரம் தள்ளப் பட்டது  த்ரிஷ்யம். சென்னையில், ஸ்கைவாக்  PVR திரையரங்கில் 6 45 மணிக்கும், எஸ்கேப் திரையரங்கில் இரவு பத்து மணிக்கும்  மொத்தம் இரண்டு காட்சிகள் மட்டும் தான் திரையிடப்பட்டன. பல மாத போராட்டங்களுக்கு பிறகு மார்ச் முதல் வாரம் PVR திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவு செய்து, டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டேன். மேலும் ஒரு தடங்கலாக 7 மணி ஆனபோதும் படம் தொடங்கவில்லை. காட்சி தடை செய்யப்பட்டால் என்னுள் ஏற்படும் ஏமாற்றத்தை எப்படி தீர்ப்பது என்று நான் ஐயம் கொள்ள,  7 30 மணிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக படம் தொடங்கியது. 

எனக்கு மலையாளம் தெரியாது என்பதையும், திரையில் சப்-டைட்டில் போடவில்லை என்பதையும் முன்னமே தெரிவித்துக்கொள்கிறேன். என் புரிதலில் பிழை இருந்தால் மலையாளம் அறிந்தவர்கள் மன்னித்து திருத்தவும்.        

ஒரு சிறிய கிராமத்தில் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் கடை வைத்திருப்பவர் ஜார்ஜ் குட்டி (மோகன் லால்). இவரது மனைவியாக மீனா நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு படத்தில் பள்ளி செல்லும் வயதில் இரு மகள்கள். ஜார்ஜ் குட்டி கிராமத்து மக்களிடம் கலகலப்பாக பழகும் ஒரு வெள்ளந்தி மனிதர். முழு நேரமும் சினிமா பார்க்கும் பழக்கம் அவருக்கு உண்டு. பல நாட்கள் வீட்டிற்கு கூடச் செல்லாமல் விடிய விடிய தன் கடையிலேய சினிமா பார்க்கும் (என்னைப் போன்ற) ஒரு உலக சினிமா பைத்தியம் என்றே சொல்லலாம். நான்காம் வகுப்பு வரை மட்டும் படித்து, தனது உழைப்பால், தனது நடுத்தர குடும்பத்தை நம்பிக்கையுடன் நடத்திவருபவர்.


இப்படி அன்பும் கலகலப்பும் நிறைந்து இருக்கும் குடும்பத்தில் ஒரு சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. காவல் துறை உயர் அதிகாரியின் ஒரே மகன் ஜார்ஜ் குட்டியின் வீட்டில், அவனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயல, அவள் அவன் தலையில் அடிக்க, அவன் இறந்துவிடுகிறான். தனது சினிமா அறிவை பயன்படுத்தி ஜார்ஜ் குட்டி கொலைக்கான தடையங்களை மறைக்கிறான்.

இறந்தவனின் கைபேசி கடைசியாக இயங்கியது ஜார்ஜ் குட்டியின் கிராமம் என்பதாலும், மேலும் அந்த காணாமல் போன பையன் ஜார்ஜ் குட்டியின் மூத்த மகளுடன் கேம்ப் சென்றான் என்பதாலும், காவல் துறைக்கு ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் மேல் சந்தேகம் எழுகின்றது.

தனது மகனின் நிலையை அறிய போராடும், தாய்ப் பாசமும் அதிகார கர்வமும் கலந்த காவல் துறை DIG, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் மேல் குற்றம் உறுதி செய்ய போராடுவதும், நான்காம் வகுப்பு வரைப் படித்த ஒரு சாமான்யனான ஜார்ஜ் குட்டி, தனது சினிமா பார்த்த அறிவை மட்டுமே பயன்படுத்தி, தனது குடும்பத்தை கொலைப் பழியில் இருந்து காக்கக் போராடுவதுமே மீதிப் படம்.

படத்தில் நான் ரசித்தவை:

ஜார்ஜ் குட்டியாக படம் முழுவதும் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும்   மோகன் லால்.


ஒரு குடும்பத் தலைவியாக ராணி கதாப்பாத்திரத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மீனா.

காவல் துறை அதிகாரியாகவும்  மகனை பறிகொடுத்த  தாயாகவும் நம்மை மிரட்டியுள்ளார் ஆஷா.


படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை என்றாலும், கான்ஸ்டபிள் சஹாதேவன் மீது நமக்கு வெறுப்பை உண்டாக்கி அவரையே வில்லன் போல் பாவிக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

சகாதேவன் 

தேவையின்றி எரியும் மின் விளக்கை அணைக்கும் காட்சி, தேவையற்ற பாடல்கள் படத்தில் இல்லாதது, சண்டைக் காட்சிகள் போன்ற மசாலாக் கலவைகள் இல்லாதது, படத்தின் இயல்பான திரைக்கதைக்கு பலம் சேர்க்கின்றன. 

ஒரு மனிதனின் சினிமா அறிவு அவனை எந்த அளவு சாதிக்கச் செய்யும் என்பதை   ஜார்ஜ் குட்டியின் மூலம் பிரதிபலித்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

படம் முடியும் பொழுது திரையில் தோன்றும் எதிர்பாராத திருப்பம், உங்களை அறியாமலே உங்களை விசில் அடிக்கச் செய்துவிடும்.

மொத்தத்தில் யாரும் தவற விடக்ககூடாத ஒரு அழகான சினிமா.      

*******************************************************************************************************
ஆண்டு : 2013
மொழி : மலையாளம்
என் மதிப்பீடு : 4.8/5
*******************************************************************************************************  

இன்று வலைச்சரத்தில் நான் எழுதிய பதிவு : 'எனது வலையுலகப் பயணம்'  

Tuesday, March 4, 2014

சா. மு. கா. வே. உலக சினிமா - Old Boy (2003)

**********************************************************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
ஒரு தனியார் தொலைக்காட்சி சானலில் எதற்சையாக சில காட்சிகள் பார்த்து, மிகவும் பிடித்து போய், பின் நான் தரவிறக்கி பார்த்த கொரிய மொழி திரைப்படம் தான் இந்த ஓல்ட் பாய்'.



கதையின் நாயகன் மது அருந்திவிட்டு சாலையில் கலாட்டா செய்ய, அவன் காவல் துறையால் கைது செய்யப்படுகிறான். அவனது நண்பன் அவனை விடுதலை செய்துகொண்டு, இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறான். செல்லும் வழியில் நாயகன் தன் நான்கு வயது மகளை பொது தொலைபேசியில் அழைத்து, அவளுக்கு பிறந்தநாள் பரிசுடன் வருவதாக சொல்லி முடிக்க, அவன் நண்பன் தொலைபேசியில் இவன் மனைவியிடம் எல்லா விபரத்தையும் சொல்லி முடித்து பூத்தில் இருந்து வெளியே வரும் பொழுது நாயகன் காணாமல் போகிறான்.        

கண் விழித்துக் பார்க்கும் நாயகன், தான் ஒரு புதிய அறையில் இருப்பதை உணர்கிறான். தொலைக்காட்சி மெத்தையுடன் அந்த அறையில் அவனை சிறை படுத்தி வைத்திருப்பதை எண்ணி வியக்கிறான். யார்? எதற்காக? என்று பல கேள்விகள் அவனுள் தோன்றுகிறது. அறையினுள் மயக்க மருந்து செலுத்தி இவன் மயங்கிய பின் தினமும் அவனுக்கு உணவு கொடுக்கப்படும். அந்த தனிமையில் அவனுக்கு உலகமே அந்தத் தொலைக்காட்சிதான். அந்தத் தொலைக்காட்சியில் ஒரு நாள் அவன் மனைவி கொல்லப்பட்டதாகவும் அதற்குக்காரணம் இவன்தான் என்பது போன்ற தடயங்கள் சிக்கி இருப்பதாகவும் செய்தி வெளியாகிறது. தன்னை சிறை செய்து வைத்திருப்பவர்கள் தான் இதற்குக்காரணம் என்ற முடிவுக்கு வருகிறான். அவன் இது வரை யாருக்கெல்லாம் தீங்கு செய்துள்ளானோ அவர்களின் நீண்ட பட்டியலை தயார் செய்து வெளியில் சென்றவுடன் அவர்களை கண்டறிந்து பழி தீர்க்க எண்ணுகிறான். 


தொலைக்காட்சியை தன் குருவாகக்கொண்டு  தன் உடலை வலிமை படுத்தி தற்காப்புக் கலைகளையும் தானே கற்கிறான்.இப்படியே அந்த அறையின் தனிமையில் 15 வருடங்கள் செல்ல அவன் தன் மனித குணங்களை இழந்து மிருகமாக இருக்கும் நிலையில் ஒரு நாள் விடுதலை செய்யப்படுகிறான். அதன் பின் தன்னை சிறை படுத்தியவர்களை தேடி அவன் பழிவாங்கும் படலமே இந்தப் படம். இதுவரை சொன்ன கதை சுருக்கம் வெறும் பதினைந்து நிமிடம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

'யார்? யார்?' என்ற கேள்வியை நோக்கி தன் தேடலை தொடரும் நாயகன் இறுதியில் தான் தன் கேள்வி தவறு என்பதை உணருகின்றான். அவன் கேட்க வேண்டிய கேள்வி என்ன, யார் அவனை தண்டித்தார்கள் என்பதை அறிய படத்தை பாருங்கள்.        


படத்தில் நான் ரசித்தவை :

தனிமை சிறைச்சாலையில் பதினைந்து ஆண்டுகள் அடைப்பட்டு இருந்து வெளிவரும் மனிதன் எவ்வளவு மிருக குணங்களுடன் செயல்படுவான் என்பதை கதாநாயகன் தத்ரூபமாக நடித்திருப்பார்.


ஒரு காட்சியில் எதிரிகளை அடிக்க நாயகன் சுத்தியை ஓங்க, திரை freeze ஆகி, அந்த சுத்தியின் நுனியில் இருந்து அவர் அடிக்கப் போகும் ஆளின் நெற்றி வரை ஒரு வெள்ளை நிற கொடு வரைவது ரசிக்கும் படி இருந்தது.

இடைவேளைக்கு முன்னமே யார் வில்லன் என்று தெரிந்து விட்டாலும், இரண்டாம் பாதியில் வேறு ஒரு முக்கிய கேள்வியுடன் விறு விறுப்பு குறையாமல் திரைகதை நகர்வது நம்மை படத்துடன் ஒன்றச் செய்துவிடும். 

ஒரு மனிதனை பழிவாங்க இவ்வளவு மோசமான எல்லைக்கு ஒருவனால் செல்ல முடியுமா? என்ற கேள்வி படம் முடியும் பொழுது நம் மனதில் தோன்றும்.




பழிவாங்கும் படலத்தை கருவாக கொண்ட படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ஓல்ட் பாய் தான். நீங்களும் தவறாமல் பாருங்கள், கேட்கவேண்டிய சரியான கேள்வியும் அதன் பதிலும் தெரியவேண்டும் அல்லவா. ​

*******************************************************************************************************
ஆண்டு : 2003
மொழி : கொரியா
என் மதிப்பீடு : 4.5/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

Sunday, January 12, 2014

வீரத்துடன் ஜில்லா பார்த்த கதை

அஜித் மற்றும் விஜய் படம் ஒரே நாளில் வெளி வருகின்றது என்றால் இரு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பும் மற்றவர்கள் மத்தியில் சற்று பயமும் தோன்றத்தான் செய்கிறது. என் வீட்டில் நிச்சயம் முதல் நாள் படம் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனையும் தோன்றியது. காரணம் இரு தரப்பிற்கும் இருக்கும் பழைய மோதல் வரலாறுகள் தான். 

மேலும் தொடரும் முன் எனக்கு என்று எந்த ஒரு தலைவனும் இல்லை நான் ஒரு சினிமா ரசிகன் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன். 

ஒரு சினிமா ரசிகனுக்கு என்ன வேண்டும், மக்கள் வெள்ளத்தில் விசில் பறக்க முதல் நாள் மாஸ் படம் பார்ப்பது தானே அவனது ஆசை. எனக்கும் அதே ஆசை தான். ரஜினி கமல் படம் முதல் நாள் பார்க்கும் அட்டகாசத்தை விட இந்நாளில் அஜித் விஜய் படங்களுக்கு இளவட்டங்கள் இடையே மௌஸ் கூடித் தான் இருக்கின்றது. அலுவலகத்தில் விடுப்பு வாங்கி வீட்டின் எதிர்ப்பை மீறி முதல் நாள், ஜனவரி பத்து, 'வீரம்' மற்றும் 'ஜில்லா' பார்ப்பது என்று முடிவானது.     
   
வீரம் 
மார்கழியின் காலை குளிர் என்னை சற்று நேரம் அலாரம் ஓசையையும் தாண்டி உறங்கச் செய்யவே, எனது body  sprayவை பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாற்பத்து ஐந்து நிமிடங்களில் முதல் படம் வீரம் துவங்க இருக்க எனது splendor என் வீட்டு வாசலை விட்டு வெளியேறியது.      

என் வீட்டில் இருந்து நாவலூர் செல்ல இரு வழிகள் உண்டு. ஒன்று நகர்புற மேடவாக்கம் - omr வழி . இரண்டாவது கிராமப்புற சித்தாலப்பாக்கம் - தாழம்பூர் வழி. காலை வேளை  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க   சித்தாலபாக்கம் - தாழம்பூர் வழியில் பலத்த எதிர்பார்ப்புடன் வழக்கத்தை விட அதிக வேகத்தில் விரைந்தேன். சாலையில் வாகன  கூட்டம் சற்று குறைவாக  இருந்தமையால் என் வேகம் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.  

தாழம்பூர் கூட் ரோட்டில் இடது புறம் திரும்பி ஐந்து நிமிடப் பயணத்தில் நாவலூர் வந்துவிடும். முதல் நாள் படம் பார்க்கும் ஆர்வத்துடன் நான் விரைந்துகொண்டிருக்க, ஒருவன் சாலையை இடமிருந்து வலது பக்கம் கடக்க முயன்றான். அவன் தனது இடதுபுறம் மட்டுமே பார்த்துக் கொண்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தான். அவனது வலதுபுறமிருந்து வந்து கொண்டிருந்த நான் எழுப்பிய ஹோர்ன் சத்தம் அவனுக்கு கேட்கவில்லை. அவனைத் தாண்டி சென்றுவிடலாம் என்று என் மனதில் கணக்கு போட்டு வண்டியை வலது புறம் நகர்த்தவும் அவன் எனக்கு நேர் எதிரே வரவும்,  சடக்கென brake போட்டு வண்டியை நான் நிறுத்த, என் வண்டி சக்கரத்தின் அழுக்கு அவன் காற்சட்டையில் கரையை உண்டாக்கியது.         

என் இதயம் அந்த நொடி அதன் துடிப்பின் உச்சத்திற்கு சென்று திரும்பியது.   ஜிவ்வென ஏறிய கோபத்துடன் 'யோவ் ரெண்டு பக்கம் பார்த்து ரோட கிராஸ் பண்ண மாட்டியா?' என்று நான் கேட்பதற்குள் என்னைச் சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்தது. அந்த கூட்டத்தில்  ஒருவன் 'இந்த IT  கம்பனிங்க வந்த அப்பறம் இந்த ரோட்ல எல்லாம் கண்ண மூடிகிட்டு பறக்கறாங்க' என்று குறை கூற ஆரம்பித்தான். எல்லாம் அந்த வட்டது ஆட்கள் போலத் தெரிந்தது, தனியாக சிக்கிக் கொண்டோமே என்று மனதினுள் பீதி கிளம்பினாலும், முகத்தை சற்று முறைப்பாகவே வைத்துக் கொண்டேன்.

கூட்டத்தை விளக்கிக் கொண்டு ஆறு அடி உயரத்தில் வேஷ்டி சட்டையுடன் ஒருவன் உள்ளே நுழைந்தான். வசமாக சிக்கிக் கொண்டோம் என்று என் மனம் துடிக்க, அருகிலே வசிக்கும் நண்பர்கள் யார் என்ற கணக்கை என் மூளை போடத் தொடங்கியது. எனது நண்பனின் போலீஸ் தந்தை என் வரிசையில் முன் நின்றார். உள்ளே வந்தவன் 'என்ன பிரச்சனை. தம்பி எங்க அவசரமா போகுது?' என்று கேட்டான். 

இது வேறு ஒரு சூழ்நிலை என்றால் 'என் அலுவலகம்' என்று சொல்லி இருப்பேன், ஏற்கனவே அந்தக் கூட்டத்தில்  ஒருவன் IT துறை  மீது தன் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்க, சற்று தயக்கத்துடன் 'வீரம் படம் பார்க்க போயிட்டு இருக்கேன் ஷோக்கு டைம் ஆகுது' என்றேன். அவன் முகத்தில் ஒரு பொலிவுடன் 'தல படத்திற்கு போறிங்களா. நான் காலையிலேயே பார்த்துட்டு இப்பதான் வர்றேன். படம் செம மாஸ். தல பட்டய கிளப்பி இருக்காரு. இந்த முட்டாப் பையனுக்கு ரோடு கிராஸ் பண்ணவே தெரியாது' என்று அவன் தலையில் கொட்டி, 'நீ போ தம்பி தல இன்ட்ரோ மிஸ் பண்ணாத' என்று கூட்டத்தை விலக்கினான்.

 'தல படமும்   மலமாடுகளும்' என்று நண்பர் ராம் குமார் எழுதிய அவருடைய அனுபவம் போலவே என் வாழ்விலும் நடந்ததை எண்ணி வியந்து திரையரங்கை அடைந்தேன். 9 20க்கு துவங்க வேண்டிய படம் 9 15 தொடங்க எழுத்து பார்க்க முடியாமல் போனாலும் திரையில் அஜித் தோன்றும் காட்சியில் படி ஏறி திரை அருகே சென்றேன். என்னை போல் தாமதமாக உள்ளே வந்து கொண்டிருந்தவர்களும் இருந்த இடத்தில அப்படியே நின்று ஐந்து நிமிட ஆரவாரதிற்குப் பின்னரே தம் இருக்கையை நோக்கிச் சென்றனர்.                        

ஜில்லா 
அடையாரில் இருக்கும் 'கணபதி ராம்' திரையரங்கில்  நான் பார்க்கும் முதல் மற்றும் இறுதிப் படம் ஜில்லா என்று வரலாற்றில் பதிக்கிறேன். 2 30 மணிக்கு தொடங்கும் படத்திற்கு ஒரு மணிக்கே கிளம்பி திரையரங்கை  1 45 மணிக்கு சென்றடைந்தோம். 60 மற்றும் 80 ரூபாய் டிக்கெட் விலை கொண்ட அந்த திரையரங்கம்  முதல் நாள் ரசிகர்களுடன் காண்பதற்கு உகந்த திரையரங்கம் எனபது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டததில் நன்கு தெரிந்தது. காவல் துறை உதவி கொண்டு கூட்டத்தை வரிசை படுத்தி சீரமைக்க முயன்றும் அந்த முயற்சி பெரும் தோல்வி தான்.

முந்தைய காட்சி முடிவடைய வெளியே காத்துக்கொண்டிருந்தோம். டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட நேரம் 2 30, ஆனால் முந்தைய காட்சி முடியவே 2 45 ஆகிவிட்டது.  நுழைவு வாயிலை ஒருவர் செல்லும் அளவிற்கு திறந்து வைத்துக்கொண்டு, அந்தக் காவல் துறை அதிகாரி டிக்கெட்டுக்களை சரி பார்த்து ரசிகர்களை உள்ளே விடத் தொடங்கினார்.    

 வாயில் கதவின் படிகளுக்கு அருகிலேயே நாங்கள் இருந்தாலும் வாயிலை நெருங்க பெரும் போராட்டமாக மாறியது. ரசிகர் கூட்டம் எல்லாத் திசைகளில் இருந்தும் வாயிலை நோக்கி நகர, கூட்டத்தில் நசுங்கத் தொடங்கினேன். மன்னன் படத்தில் கொடுப்பது போல் இங்கு தங்க சங்கிலியும் மோதிரமும் கொடுக்கவில்லை என்றாலும் யார் முதலில் செல்வது என்ற போட்டியில் அந்தக் கூட்டத்தில் ஒழுங்கின்றி பலரும் முந்தத் தொடங்க, மைதா மாவு போல் என்னை பிசைந்தனர். கூட்டத்தில் எந்தப் பக்கமும் விழ வாய்ப்பில்லை என்ற மனதில் உறுதியுடன் வாயிலை நோக்கி முன்னேறினேன்.  

 நாவில் தாகம் தவிக்க, இன்னும் பத்து அடி சென்றால் ஆபத்து விலகிடும் என்று மனம் சொல்ல, உடலை மூலை முன் நோக்கி செயல் படுத்தியது. பெரும் போராட்த்ததிற்குப் பின் ஒரு வழியாக உள்ளே நுழைந்த பொழுது, சட்டை கசங்கி தலை, கலைந்து, செருப்பு கிழிந்து, ஒரு சண்டையில் இருந்து வெளிவந்த 'கைப்புள்ள' போலவே நான் காட்சியளித்தேன். நிதானித்துக் கொண்டு திரையரங்கினுள் நுழைந்து, முந்தைய காட்சிகளில் வான் நோக்கி பறந்து, தற்போது தரையில் குவிந்து கிடக்கும் பேப்பர் குப்பைகளின் மேல் நடந்து சென்று, என் இருக்கையில் அமர்ந்தேன். 

அந்த நெரிசலை சமாளித்து அனைவரும் உள்ளே வர காத்திருந்த அந்த அரை மணி நேரத்தில் மூன்று படங்களின் முன்னோட்டம் போட்டப் பிறகே படம் திரையிடப்பட்டது.  படம் தொடங்கி ஒரு பத்து நிமிடங்கள் சென்றவுடன் எங்களுக்கு முன் மூன்றாவது வரிசையில் ஒரு சலசலப்பு கேட்க எங்கள் கவனம் அங்கு திரும்பியது. 

'நான் நகர மாட்டேன். ...தா ரெண்டு மன்நேரம் இங்கதான் நிப்பேன் என்ன செய்வ?' என்று இருக்கையில் இருந்த ஒருவனைப் பார்த்து நின்று கொண்டிருந்த ஒருவன் சண்டை பிடித்தான். அவன் நண்பன் அவனை சமாதானப் படுத்தியும் 'என்ன திமிரா பேசறான் இவன். என்னால நகர முடியாது. என்னடா பண்ணுவ ...லு' என்று வம்புடன் நின்றான். அமர்ந்திருந்தவன் அமைதி காக்க, இவனது நண்பர்கள் அவனை சமாதனம் செய்து அவனை இருக்கையில் அமர வைக்க ஐந்து நிமிடங்கள் ஆனது. இது போன்ற செயல்களால் தான் முதல் நாள் படம் பார்ப்பது என்பது ஒரு தடை செய்யப்பட்ட செயலாகவே உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. 

இரு படங்களின் விமர்சனத்தை எதிர் பார்த்து வந்தவர்களுக்கு என்னிடம் சொல்ல ஒன்றும் இல்லை. இரு தரப்பு ரசிகர்களுக்கும் விருந்து என்றாலும்,   இரண்டு படங்களுமே வழக்கமான சண்டை, காதல், குடும்பம், பாட்டு, நகைச்சுவை கலந்த மசாலா படங்கள். முந்தைய flopஆன அஜித்-விஜய் படங்களுடன்  ஒப்பிடுகையில் இவை எவ்வளவோ பரவாயில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.  இதுபோல மசாலா இல்லாமல் வரும்  இயல்பான படங்களின் மீதே எனக்கு நாட்டம் அதிகமாக உள்ளது.                    

Thursday, September 19, 2013

Casablanca - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************



கிளாசிக் சினிமா மேல் வந்த ஈர்ப்பு, என் தேடலை விரிவு செய்தபோது IMDB மூலம் எனக்கு அறிமுகமான படம் இது. கதை நடக்கும் காலம் இரண்டாம் உலக யுத்த சமயம், ஜேர்மன் ஆதிக்கம் உலகெங்கும் பரவி இருந்த நிலையில், ஜெர்மன் கட்டுப்பாட்டில் இல்லாத ஆப்ரிக்க நகரம் தான் Casablanca. அமேரிக்கா செல்லும் கனவுகளுடன் ஐரோப்பா நாடுகளில் இருந்து வருபவர்களின் இறுதி புகலிடம். இங்கிருந்து வீசா கிடைத்தால் மட்டுமே சுகந்திர அமேரிக்கா செல்ல முடியும். 



இந்த நகரத்தில் ஒரு கிளப் நடத்தி வருபவர் தான் ரிக் என்கிற ரிச்சர்ட், கதையின் நாயகன். அந்த நகரை விட்டு வெளியேற, ஜெர்மன் அதிகாரிகளை கொன்று திருடப்பட்ட இரண்டு வீசாக்கள், யாரும் அறியாமல் ரிக்கின் வசம் வருகின்றது. இந்த வீசாவைத் தேடி ஒரு மறைமுக போராட்டக்கும்பலின் தலைவர் விக்டர்(Victor) தன் மனைவி இல்சா(Ilsa)வுடன் Casablanca வருகிறார். அவரை பிடிக்க ஜெர்மன் அதிகாரிகள் அவரைத் தொடர்ந்து வருகின்றனர். 

Casablanca சுகந்திர நகரம் என்பதால், அவர்களால் அவரை நேரடியாக ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், அந்த நகர காவல்துறை உதவியுடன், அவருக்கு வீசா கிடைக்காதவாரு ஏற்ப்பாடு செய்கின்றனர். லூயிஸ்(Louis)என்ற Casablanca காவல் துறை உயர் அதிகாரியுடன் ரிக் சாவல் விடுகிறார், விக்டர்(Victor) மற்றும் அவர் மனைவி இல்சா(Ilsa) நிச்சயம் அமேரிக்கா செல்வர் என்று.

விக்டர் - இல்சா - ரிக்  

ரிக், எந்த விலை கொடுத்தாலும் அந்த வீசாக்களை விற்க முடியாது என்று விக்டரிடம் மறுத்து,காரணத்தை அவர் மனைவியிடமே கேட்க சொல்லிவிடுகிறார். இல்சா தான் நாயகன் ரிக்கின் முன்னாள் காதலி என்ற உண்மை திரையில் விரிகிறது. ரிக் மற்றும் இல்சா இடையில் பழையக் காதல் மீண்டும் மலர, ஜெர்மன் கடுபடி அதிகரிக்க, ரிக் லூயிசுடன் அவரும் இல்சாவும் அமேரிக்கா செல்ல ரகசிய ஒப்பந்தம் போட, இறுதியில் ரிக் தான் போட்ட சவாலில் வெல்வார இல்லையா என்று படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

படத்தில் நான் ரசித்தவை

படத்தின் பெரிய பலமே திரைக்கதை தான், ஒவ்வொன்றாக உண்மைகள் வெளி வர, நம்மை படத்துடன் ஒன்றச் செய்துவிடுகிறது. 

நாயகனாக வரும் Humphrey Bogartஇன் இயல்பான நடிப்பின் மூலம்  படம் முழுவதும் ரிக் என்ற கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவம் கொடுத்து அசத்தியுள்ளார்.
ரிக் 

அடுத்த முக்கிய கதாபாத்திரம் காவல் துறை உயர் அதிகாரி லூயிஸாக வரும் Claude Rains என்பவர். இறுதிக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தார்.

லூயிஸ் 

இரண்டாம் உலக யுத்தத்தை மைய்யமாக வைத்த கதை என்றாலும், எந்த விதமான துப்பாக்கிச் சுடுதலோ, சண்டைக் காட்சிகளோ இல்லாமல் படத்தை இயக்கிய இயக்குனர் Michael Curtizஐ பாராட்டாமல் இருக்க முடியாது. 

வசதி இல்லாத ஒரு இளம் மனைவி தன் கணவனுடன் அமேரிக்கா செல்ல வீசா கேட்க லூயிஸிடம் செல்ல, பணம் இல்லையேல் உடல் உறவு என்று லூயிஸ் நிபந்தனை வைக்க, அதை அறிந்த ரிக் அந்த மனைவியின் கணவனை தன் கிளப்பில் நடக்கும் சூதாட்டம் மூலம் போதிய பணம் ஜெயிக்க வைக்கும் காட்சி, நம்மை நெகிழச் செய்யும்.

இந்த விஷயத்தை அறிந்தவுடன் அந்த கிளப்பில் பணிபுரியும் ஒரு ரஸ்சிய சர்வர், மகிழ்ச்சியில் ரிக்கை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பான். இந்த காட்சியை இன்று பார்த்த பொழுது, தன் மனம் கவர்ந்த பதிவுகளை எழுதிய பதிவர்களை 'கட்டி அணைத்து' பாராட்ட வேண்டும் என்று கருத்துரையிடும் ஜீவன் சுப்பு தான் நினைவிற்கு வந்தார். 

படத்தில் நான் ரசித்த வசனங்கள்:

வசனம் 1:
தன் முன்னாள் காதலியைக் கண்ட ரிக், அவன் கிளப் பியானோ பிளேயர் சாமிடம்(Sam) சொல்லும் வசனம்

"Of all the gin joints in all the towns in all the world, she walks into mine."

(இதை பல modulationஇல் பல சினிமாக்களில் கேட்டது போல் இல்லை? )


வசனம் 2:

இறுதிக் காட்சியில் என்னை விசில் அடிக்க தூண்டிய வசனம்

"Louis, I think this is the beginning of a beautiful friendship." 


படம் பார்க்கையில், இந்த வசனம் பேசும் காட்சி வரும் போது உங்களுக்கும் நிச்சயம் விசில் அடிக்கத் தூண்டும். 


'ரொமாண்டிக் டிராமா' என்ற பிரிவில், என்றுமே நான் முதலில் பரிந்துரை செய்யும் படம் Casablanca.

*******************************************************************************************************
ஆண்டு : 1942
மொழி : ஆங்கிலம்
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

Monday, August 5, 2013

After Hours - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

என்னைக் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவரான Martin Scorseseயின் படங்களை தேடித் பிடித்து பார்த்த பொழுது தான் கண்ணில் சிக்கியது இந்த படம். ஏழு முறை சிறந்து இயக்குனருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இவரின் பல படங்களை நீங்கள் பார்த்து இருந்தாலும், பெரிதும் பேசப் படாத இந்த After Hours படத்தை பார்த்திருப்பது சற்று கடினமே.

படத்தின் முன்னோட்டம் : 

(முதலில் play பொத்தானை கிளிக் செய்து பின் pause செய்து மேலே படிக்கவும்)


கதை சுருக்கம் :

பால்(Paul) என்ற ஒரு கணினி நிறுவன ஊழியன், ஒரு மாலை தன் வீடு திரும்பும் பொழுது ஒரு உணவகத்தில் மார்சி(Marcy) என்ற பெண்ணை சந்திக்கிறான். இருவருக்கும் ஒரு புத்தகத்தின் மேல் நாட்டம் இருக்க, அதை பற்றி அவர்கள் பேச, மார்சி விடை பெற்று செல்லும் முன் தன் தொலைபேசி எண்ணை பாலிடம் கூறிச் செல்கிறாள். 


தன் வீடு சென்று அந்த எண்ணுக்கு பால் அழைக்க, மார்சி அவனை அவள் தங்கியிருக்கும் தோழியின் இல்லத்திற்கு வருமாறு அழைக்க, அவனும் இருபது டாலர்களுடன், ஒரு டாக்ஸி பிடிக்க, அந்த டாலர் நோட்டு காற்றில் பறக்க, வேறு பணம் ஏதும் இன்றி அவன் தவிக்க, அன்றைய இரவின் அவன் இன்னல்கள் தொடங்குகின்றன. இப்படி ஒரு இரவு முழுக்க அடுத்து அடுத்து அவன் சந்திக்கும் சிக்கல்களே மீதி கதை.

படத்தில் நான் ரசித்தவை :

ஓர் இரவில் நாயகனுக்கு இன்னல்கள் நடக்கும் வண்ணம் கதை படமாக்கப் பட்டுள்ளது முதல் சிறப்பு. படம் முழுக்க இரவில் எடுக்கப் பட்டக் காட்சிகளே இருக்கும். 

மார்சி வீடு சென்ற பால், சில குறிப்புகள் மூலம், மார்சிக்கு எதோ ஒரு பயங்கரத் தீக்காயம் இருக்குமோ என்று எண்ணும் நிமிடங்கள், அந்த காயங்களைக் கண்டது போல் நம்மையும் ஒரு கணம் கண் மூட வைத்து விடும்.
    
நல்லிரவில் ரயில் கட்டணம் உயர, ஒரு டாலருக்கு குறைவான பணமே அவனிடம் இருக்க, வீடு திரும்ப முடியாமல் ரயில் நிலையத்தில் அவன் தவிக்கும் காட்சிகள் மிகவும்  இயல்பாக இருக்கும்.


அவன் அந்த இரவில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் முதலில் அவனுக்கு உதவினாலும், ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் அவன் எதிரி ஆகிவிடுகிறான். 

படம் தொடங்குவது அவன் அலுவலகத்தில், கடும் போராட்டங்களுக்கு பின், அவனது காலை விடியும் பொழுது, அதே அலுவலகத்தின் வாசலில் அவன் இருப்பபான்.

படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு ஓட்டம் இருக்க, எந்த நிமிடமும் நமக்கு விறு விறுப்பு குறையாது. 

எதார்த்த சினிமா என்ற பட்டியலில் என்றுமே இந்த படத்தை நான் பரிந்துரைப்பேன்.

முக்கிய எச்சரிக்கை: ஆங்கில படத்திற்கே உரிதான சில ஆபாச காட்சிகள், இரண்டு இடங்களில் இந்த படத்தில் வரும். பார்த்துவிட்டு என்னை அடிக்க தேடக் கூடாது.

 (இப்பொழுது மேலே pause  செய்த முன்னோட்டத்தை play செய்யவும்)

*******************************************************************************************************
ஆண்டு                        : 1985
மொழி                          : ஆங்கிலம்
என் மதிப்பீடு             : 4.4/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

Thursday, July 25, 2013

The General - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************

என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.

*********************************************************************************************************

சமீபத்தில் 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார், முகநூலில் பகிர்ந்த Buster Keaton வீடியோ என் கண்ணில் சிக்க, என் கல்லூரியில் நான் பார்த்த 'The General' படம் நினைவிற்கு வந்தது. என் நண்பன் ஒரு நாள் என்னிடம் 'கமலோட பேட்டி ஒன்னு ஹிந்துல பார்த்தேன், அவரு யாரோ Buster Keaton மற்றும் Peter Sellers னு ரெண்டு பேர பத்தி ரொம்ப புகழ்ந்து பேசி இருக்காரு' என்று சொன்னான். உடனே IMDB துணையுடன் இருவரையும் அடையாளம் கண்டு கொண்டு, நான் முதலில் பார்த்த படம் தான் இது.



அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையில் போர் நடந்த 1890களில் கதை நடப்பதாக துவங்கும். ஜானி(Buster Keaton) ரயில்வே பொறியாளராக பணி செய்வதால் அவன் சேவை மக்களுக்கு தேவை என்று அவனை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அதிகாரிகள் மறுத்து விடுவர். அவன் ராணுவத்தில் சேரவே முயற்சிக்காமல் பொய் சொல்வது போல் சந்தர்ப்பமும் சூழ்நிலையம் அவனுக்கு எதிராக செயல்பட, அவன் காதலி அவனை விட்டு பிரிந்திடுவாள். 



எதிரிகளின் சதியால் இவன் வேலை செய்யும் ரயிலான 'The General' கடத்தப் படும், ஒற்றை ஆளாக அவர்களை வேறு ஒரு ரயில் என்ஜினில் துரத்திக் கொண்டு எதிரி நாடு வரை சென்ற பிறகுதான் அவன் காதலி மட்டும் அந்த ரயிலில் சிக்கியது அவனுக்கு தெரியவரும்.எதிரிகளின் ரகசியத் திட்டத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் காதலியை மீட்டு, அவன் தாய் நாடு திரும்பி எப்படி எதிரிகளின் சதியை முறியடிக்கிறான் என்பதே கதை. 



படத்தில் நான் ரசித்தவை: 

ஜானி  புகை வண்டி ரயில் என்ஜினுடன் போராடும் காட்சிகள் அசத்தலாக, நகைச்சுவையாக இருக்கும். 


முதல் பாதியில் ஜானி பெரும் படையுடன் ரயிலில் துரத்துவதாகவே எதிரிகள் நினைத்து பயந்து கடத்திய ரயிலில் வேகமாக செல்லும் காட்சிகள் மிகவும் இயல்பாக சித்தரிக்கப் பட்டு இருக்கும்.



இரண்டாம் பாதியில் ஜானி தாய் நாடு திரும்பக் கூடாது என்று, முதல் பாதியில் அவன் துரத்திய அதே கும்பல், இம்முறை அவனை துரத்துவது போல் காட்சி வருவது படத்திற்கு சிறப்பு. 

வசனமே இன்றி அந்த ரயில் ஓட்டத்தில் நம்மை பயணிக்க வைக்கும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். 

திரையில் நடித்தது மட்டுமின்றி, கதை எழுதியதிலும், இயக்கியதிலும் Buster Keatonனுக்கு பங்கு உண்டு. 

வசனம் இல்லாத ஊமைப் படம் என்றால்,முழு நீள நகைச்சுவை படமாகத்தான் இருக்க வேண்டும் என்று என்னுள் இருந்த எண்ணத்தை மாற்றிய இந்த படம் தான், பேசாத ஊமைப் படங்களின் வரிசையில் என்றுமே நான் முதல் இடத்தில வைப்பது. 

*******************************************************************************************************

ஆண்டு              : 1926
மொழி                : ஆங்கிலம் (ஊமைப் படம்) 
என் மதிப்பீடு   : 4.7/5 

மேலும் விபரங்களுக்கு IMDB

*******************************************************************************************************

Monday, July 1, 2013

ஆண்பாவம் - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில், திரைக்கதையை நகைச்சுவைக்காக  கஷ்டப்பட்டு வளர்ப்பதை பார்த்து நொந்து, பிறரை கேளி செய்வதே நகைச்சுவை என்று இருக்கும் இந்த நிலைப்பாட்டை கண்டு வருந்தி, தமிழில் வெளி வந்த உண்மையான முழு நீள நகைச்சுவை படங்களின் பட்டியலை யோசித்தேன், முதலில் மனதில் தோன்றியது இந்தப் படமே.  

பாக்யராஜின் நிழலில் இருந்து பிரிந்த பாண்டியராஜன், கன்னி ராசி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின் தானே இயக்கி நடித்த படம் ஆண்பாவம். இளவட்டம் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவைப்படம். தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றிய ஒரு புது முயற்சி என்றும் சொல்லலாம்.

கிராமத்தில் புதிதாய் திரையரங்கம் நிறுவும் வி.கே. ராமசாமியின் மகன்களான பெரிய பாண்டி, சின்ன பாண்டி இருவரும் திருமண ஆசை கொள்ள, அவர் பெரிய பாண்டியை பெண் பார்க்க அனுப்ப, பெரிய பாண்டி ஊர் மாறி சென்று வேறு பெண்ணை பார்த்து அவள் மேல் காதல் கொள்ள, அதனை தொடர்ந்து நிகழும் சிக்கல்களை நகைச்சுவையாகச் சொல்வதே படம்.

'வந்தனம் வந்தனம்' என்று இளையராஜாவின் இசையில் சினிமாவின் பெருமையை சொல்லும் பாடலும், எப்பொழுது காதலியுடன் சண்டை வந்தாலும் 'காதல் கசக்குதையா' என்று மனம் பாடும் பாடலும், என்னை யாரவது பாடு என்று தொல்லை செய்தால் நான் பாடும் முதல் பாடல் 'என்னைப் பாட சொல்லாதே' என்ற பாடலும்,  மனதில் நின்றவை.

படத்தில் நான் ரசித்தவை:

ஆரம்ப காட்சியில் படப் பெட்டி வருவதற்காக காத்திருக்கும் போது, நிகழும் வசனங்கள், அந்த காலக்கட்டத்தில் சினிமாவின் மேல் மக்களுக்கு இருந்த மோகத்தை சொல்லும்.

'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டிடுச்சி'.... என்று வரும் எவர்கிரீன்   காமெடி சீன் யாருமே மறக்க முடியாது.  


'எங்க அம்மாவ மட்டும் நீ கட்டிகுட்ட, உங்க அம்மாவ நான் கட்றதுல என்ன தப்பு?' என்று பாண்டியராஜன் 'கொல்லங்குடி' கருப்பாயியை வைத்து செய்யும் நையாண்டிகள் அட்டகாசம்.

வி.கே.ராமசாமியின் இயல்பான நடிப்பும், ஜனகராஜின் சைட் காமெடி ட்ராக்கும் படத்திற்கு பலம். 


தாவணியில் வலம் வரும் இரு கதாநாயகிகள், ரேவதி மற்றும் சீதாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சீதாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை இந்த படத்திற்கே சேரும்.

இறுதியில் ஒரு சின்ன திருப்பமும், ஒரு ஓட்டமும் கொண்டதோடு நிறுத்தி விடும், இயக்குனரின் துணிச்சலுக்கு கிடைத்து பரிசு ஒரு பெரிய ஹிட்.

இன்று வரை நான் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று கணக்கே இல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போல் சிரிக்கத்தான் செய்வென், நீங்க எப்படி?
  
*****************************************************************************************
ஆண்டு : 1985
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.8/5
*****************************************************************************************

Monday, June 24, 2013

ராஜ பார்வை - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


தமிழில் எந்த படத்தை பற்றி எழுதுவது என்று சிந்தித்து கொண்டிருந்த போது, சென்ற வாரம் புலவர் ராமானுஜம் ஐயா வீட்டில், சேட்டைக்காரன் உடன் நிகழ்ந்த உரையாடல் நினைவிற்கு வர, அப்பொழுது பேசப்பட்ட படங்களில் ஒன்றான ராஜ பார்வை பற்றி இங்கு என் கருத்துக்களை பகிர்கிறேன்.

இந்த தலைமுறையில் பலருக்கு இப்படி ஒரு படம் இருப்பது தெரியாதது சற்று வருத்தம். பிரபல தெலுங்கு இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தமிழில் இயக்க, கமல்ஹாசன் கதை எழுத, கமலும் மாதவியும் நடித்து, 1981ஆம் ஆண்டு  கமலின் நூறாவது படமாக வெளிவந்தது 'ராஜ பார்வை'.

மாதவி.... 

இளமையில் டைப்பாய்டு நோயின் தாக்கத்தால் கண் பார்வை இழந்து, பணக்கார வாழ்கையை துறந்து, சொந்தக் காலில் ஒரு பின்னணி இசை குழுவில் வயலின் வாசிக்கும் ரகுவிற்கும் (கமல்), கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து, கதை எழுதும் ஆர்வம் கொண்ட நான்சிக்கும்(மாதவி) இடையில் மலரும் அழகிய காதலை சொல்லும் படம் இது.
       
படத்தில் நான் ரசித்தவை:

படத்தின் தொடக்கத்தில் எல்லோரும் தம் முன் இருக்கும் இசைக் குறிப்புகளை பார்த்துக்கொண்டு, தம்  இசைக் கருவிகளை வாசித்து கொண்டிருக்க, படத்தில் தொடர்புடையர்வர்களின் பெயர்கள் திரையில் செல்ல, இறுதியில் கமல் முன் இருக்கும் தாங்கி காலியாக இருப்பதை காட்டி, அவருக்கு பார்வை இல்லை என்பதை அழகாக காட்டியிருப்பார்.     



கண் பார்வை இல்லாதவர்கள் தம் அடியை கணக்கில் வைப்பதை மிக இயல்பாக சொல்லி இருப்பர். கண் பார்வை இல்லாத ரகுவாக கமல் நம் நெஞ்சில் வாழ்வார். எந்த ஒரு காட்சியிலும் கண் இமைக்காமல் நடித்து இருக்கும் கமலுக்கு சல்யூட்.

நான்சி மற்றும் ரகு, ரகுவின் வீட்டில் இருக்கும் பொழுது, மின்சாரம் தடை பட ' அய்யோ இருட்டு' என்று நான்சி பதற, 'எங்களுக்கு எப்பொழுதும் இருட்டு தான்' என்று ரகு நகைத்தாலும், அந்த வசனம் என்னை தாக்கியது.       

நானும் நான்சியை (மாதவியை) காதலித்தேன் என்பது மறுக்க முடியாத உண்மை. 



படத்தின் பெரிய பலம் பின்னணி இசைதான், பல வசனம் இல்லா காட்சிகளுக்கு இளையராஜாவின் இசை அழகு சேர்த்துள்ளது.

திரைக்கதை மற்றும் கேமரா மிகவும் சிறப்பாக கையாளப்பட்டு இருக்கும், ஒரு காட்சியின் முடிவிற்கும் அடுத்த காட்சியின் தொடக்கத்திற்கும் ஒரு இணைப்பு இருப்பது பல இடங்களில் ரசிக்க வைத்தது. குறிப்பாக ஒரு காட்சியில் நான்சி 'You fool' என்று முடிக்க, அடுத்த காட்சி பால் குண்டான் விசிலுடன் அந்த 'fool' ஓசையை ஒத்து தொடங்கும். இது போன்று பல இணைப்புகள் ரசிக்கும் படி இருக்கும்.  

நான்சி தன் தந்தை வீட்டை விட்டு வெளியே செல்ல காத்திருக்கும் காட்சி வசனமே இல்லாமல், பின்னணி இசையால் பல எண்ணங்களை சொல்லும்.



வீட்டை கல்யாணத்துக்காக தயார் செய்யும் காட்சி மிகவும் பிரமாதமாக இருக்கும், அதிலும் வசனம் கிடையாது, திரைகள் இசையுடன் விரைவாக நகரும் காட்சி அது.    

காதல் படம் என்றால் முடிவு சுபமாகவோ அல்லது சோகமாகவோ இருப்பது வழக்கம், ஆனால் இந்த படத்தில் ரெண்டுமே இல்லாமல் பகுதி இரண்டு எடுக்கலாம் என்பது போல் அமைந்து இருக்கும். எப்படி என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

'அந்தி மழை பொழிகிறது' என்று SPB பாடிய பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 'அழகே அழகு' என்ற பாடல், கேட்ட நொடி முதல் மனதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. 

இப்படி பத்து இருபது ஆண்டுகள் பின் வர வேண்டிய கதையையும் தொழில்நுட்பத்தையும்  கொடுத்தனாளோ என்னவோ படம் பெரும் அளவில் வெற்றி பெற வில்லை என்றாலும், இது எல்லா காலத்திற்கும் பொருந்தும், அனைவரும் காணவேண்டிய ஒரு காதல் காவியம்.      

*****************************************************************************************
ஆண்டு : 1981
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.5/5
*****************************************************************************************

Friday, June 7, 2013

Duel - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


சீருந்து என்ஜின் ஓசையுடன், வாகனக்கூடத்தில் இருந்து வெளிவர படம் தொடங்குகிறது. படத்தில் தொடர்புடயவர்களின் பெயர்களை திரையில் காட்டியவாறு சிவப்பு சீருந்து தன் பயணத்தை தொடர்ந்து, நகரத்தை கடந்து நெடுஞ்சாலையை அடைய, ரியர் வியுவ் மிர்ரர் வழியாக கேமரா நம் ஹீரோவை முதன் முதலில் கெத்தாக அறிமுகம் செய்கிறது. தனிமையில் வண்டி ஓட்டிச்செல்லும் நம் ஹீரோவுக்கு பேச்சுத் துணையாக இருந்தது அந்த வானொலி தான், அதவாது வில்லனாகிய அவன் காட்சியினுள் வரும் வரை..

நெடுஞ்சாலையில் ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கருப்பு ஆயில் டாங்க் கொண்ட நெடுநீள டிரக் வேகமாக நம் சீருந்து பின் வந்து முந்தி செல்வதற்காக வழி  கேட்க, நம் ஹீரோவும் பெருந்தன்மையுடன் வழிவிட, அந்த நொடி தொடங்கும் இந்த டூயல், நம்ம  பாஷையில சொல்லனும்னா ' ஒண்டிக்கு ஒண்டிசண்டை '. ஆமாங்க அந்த   துரு பிடித்த டிரக் தான் இந்த படத்தின் வில்லன்.


சீருந்து ஓட்டும் ஹீரோ அந்த டிரக்கினால் நெடுஞ்சாலையில் சந்திக்கும் போராட்டங்களை எந்த நொடியிலும் வேகம் குறையாமல் காட்சிகளாக அமைத்து இருப்பார் இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க். எப்படி அந்த டிரக்கிடம் ஹீரோ வசமாக மாட்டி தவிக்கிறார், எப்படி இறுதியில் தப்பிக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   

படத்தில் நான் ரசித்தவை:

ஒரு காருக்கும் டிரக்குக்கும் இடையில் நெடுஞ்சாலையில் நடக்கும் போராட்டத்தை தொண்ணூறு நிமிட படமாக எடுப்பது என்பதே ஒரு சவால். 

படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், ஹீரோ, அவர் சீருந்து மற்றும் நெடுநீள டிரக், இந்த மூன்று மட்டுமே படம் முழுவதும் வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அந்த டிரக் ஓட்டுனர் யார் என்று படம் முடியும் வரையும் நமக்கு தெரியாது. முழுக்க முழுக்க ஒரு டிரக்கை மட்டும் வைத்து மிரட்டியிருப்பார் இயக்குனர். 

படத்தில் வசனங்கள் மிக குறைவு என்றாலும், சீட் நுனிக்கு நம்மை கொண்டு செல்லும் வேகமான திரைக்கதை வசனங்களை மறக்க செய்கிறது.

படத்தின் மிக பெரிய பலம் கேமரா தான், பல கோணங்களில் நெடுஞ்சாலையில் ஓடும் இரு வாகனங்களை படமாக்கி இருப்பர்.   

ஒரு உணவகத்தில் நம் ஹீரோ இருக்கும் போது, அந்த டிரக் உணவகம் வெளியே நிற்பதைக் கண்டு, அதன் ஓட்டுனர் உள்ளே இருப்பவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும், அந்த ஓட்டுனர் யார் என்று அவர் ஆராயும் காட்சிகள் அருமையாக இருக்கும். 

ஹீரோ ஓரு போன் பூத் சென்று காவல் துறைக்கு தகவல் சொல்ல முயற்சிக்கும் போது, அந்த டிரக் வேகமாக வந்து அந்த பூத்தை உடைக்கும் காட்சியின் பொழுது  உங்கள் இதயம் கண்டிப்பாக ரத்தத்தை சற்று வேகமாகவே வெளியேற்றும்.

    
ஸ்டீவென் ஸ்பீல்பெர்கின் தலைசிறந்த இந்த படைப்பை ரோட் மூவீஸ் என்ற பிரிவில் என்றுமே முதல் இடம் தான் என்பது என்னைப் போன்ற பலரின் ஒருமித்த கருத்து. 

*****************************************************************************************
ஆண்டு : 1971
மொழி   : ஆங்கிலம் 
என் மதிப்பீடு : 4.7/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

Tuesday, June 4, 2013

புதுவையில் அஜித்தின் வரலாறு

நான் உயற்கல்வி பயில புதுவை செல்ல வேண்டிய கட்டாயம்.  பத்து, 11, 12 ஆம் வகுப்புகளை அங்கு தான் பயின்றேன். புதுவையில் யார் இருந்தாலும் மூன்று விசயத்துக்கு கண்டிப்பாக அடிமையாக வேண்டும், அதில் ஒன்று ஊர் அறிந்த உண்மை. அதற்கு நான் அடிமை ஆகாவில்லை, சைட் டிஷ் மட்டும் சாப்பிடும் கூட்டத்தின் 'கொ. ப. செ'வாகவே, கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறேன் .

இரண்டாவது நம்மை சுண்டி இழுக்கும் சாலை ஒர உணவுகள், முதலில் நான் அடிமை ஆனது அவற்றிக்கு தான். பானி பூரி, காளான் போண்டா, முட்டை போண்டா, சிக்கன் போண்டா, மட்டன் போண்டா, பஜ்ஜி வகைகள், குல்பி, சூப் வகைகள் என்று பட்டியல் நீளும். ஒரு தெருவில் ஒரு தள்ளு வண்டியாவது இருந்து விடும். சனிக்கிழமைகளில் பள்ளி முடித்து மத்திய வேளையில்   லாஸ்பேட்டை கள்ளுக்கடை வழியாக செல்லும் போது, அங்கு இருக்கும் ஒரு தள்ளு வண்டியில் வெங்காய பகோடா வாங்குவது வழக்கம். மந்தாரை இலையில் மடித்து ரூ. 2.50 க்கு ஐம்பது கிராம் பகோடாவுடன், தன் பகோடா பிரான்ஸ் வரை சென்ற புகழையும் சேர்த்து கொடுப்பார். அந்த அளவு சுவை இருப்பதை சாப்பிட்ட யாரும் மறுக்க முடியாது. என்ன செய்வது எல்லோருக்கும் குரு ஒன்பதில் இருப்பது இல்லையே, தள்ளு வண்டியிலேயே அவர் காலம் சென்றுவிட்டது.
  
மூன்றாவது விசயம்தான் சினிமா. புதுவையில் என்னைப் போன்று சினிமா வெறியர்களே அதிகம். 1970களில் மொத்தம் முப்பத்து ஆறு திரையரங்குகள் அங்கு இருந்து இருக்கின்றன, அக்கம் பக்கம் இருக்கும் எல்லா ஊர்களில் இருப்பவர்களும் சினிமா காண (அன்றைய) பாண்டி செல்வதுதான் வழக்கம். ஏன், என் தாத்தா கூட அங்கு சினிமா கண்ட பல கதைகளை என்னிடம் கூறியதுண்டு. இப்படி 'திரையரங்க' நகரமாக இருந்த புதுவை, மற்ற நகரங்களின் வளர்ச்சியால், சினிமா காண வரும் கூட்டம் குறையை, காலப்போக்கில்  பெரும்பாலான திரையரங்குகள் மக்களை ஈர்க்கும் விதமாக உல்லாச மற்றும் நட்சத்திர விடுதிகளாக மாறி, நான் இருந்த காலகட்டத்தில் வெறும் ஏழு திரையரங்குகள் மட்டுமே இருந்தன.

ஒரு நாள் சாலை உணவுகளை வேட்டையாட சென்றபோது, தலை முடியை கொண்டை போட்ட படி நடிகர் விக்ரம் எங்கள் சாலை ஓரம் நிட்க, அதை கண்டு ஆச்சரியத்தில் நான் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டேன். அந்நியன் படத்தில் துவக்க காட்சிகளில், ஒரு சாலை விபத்தில் அடி பட்டவனை வைத்து 'அம்பி' விக்ரம் போராடியது எங்கள் தெருவில் தான் என்று பின் படம் பார்த்த போது புரிந்தது. தமிழகத்தில் கேளிக்கை வரி அதிகமானதால், பல படங்களின் படப்பிடிப்பு புதுவைக்கு வந்த காலம் அது. கன்னத்தில் முத்தமிட்டால், மௌனம் பேசியதே, காக்க காக்க, ஆயுத எழுத்து, அறிந்தும் அறியாமலும், பட்டியல், சிவாஜி, பீமா , வாரணம் ஆயிரம், யாரடி நீ மோகினி என்ற ஏகப்பட்ட படங்களின் படப்பிடிப்பு அரங்கேறியது இங்கு தான்.

ஒரு முறை பத்தாம் வகுப்பில் வசூல் ராஜா காண வாய்ப்பு கிட்டியபோதும் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அன்று செல்ல முடியவில்லை. பத்தாம் வகுப்பு முடித்த பின்பு, அது வரை ரஜினி படம் பார்க்க மட்டுமே திரையரங்கம் சென்றவன், பதினோறாம்  வகுப்பில் அந்நியன் படத்துடன் என்  கணக்கை தொடங்கினேன், பார்த்த படங்களின் எண்ணிக்கையில் இன்று வரை காற்புள்ளி கூடிக்கொண்டே இருக்கிறது. 

அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு என்று பல படங்களை பதினோறாம் வகுப்பில் ஆனந்தா திரையரங்கில் பார்த்தேன். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சென்னைக்கு எப்படி ஒரு சத்தியமோ அப்படித்தான் புதுவைக்கு ஒரு ஆனந்தா. ஆனால் அந்த ஆனந்தா திரையரங்கமும் இன்று இடிக்க பட்டு ஒரு விடுதியாக உருமாறிவிட்டதைப் பார்க்கும் பொழுது, கவசம் இல்லாத கர்ணன் போலத் தான் பாண்டி எனக்கு காட்சியளிக்கிறது.

புதுவையின் திரையரங்குகளில், நான் அங்கு வசித்தபொழுது, ஐந்து  வகையான சீட் வரிசைகள் இருக்கும். 

பாக்ஸ்                         - 50 ரூபாய் 
பால்கனி                     - 33 ரூபாய் 
ப்ர்ஸ்ட் கிளாஸ்      - 25 ரூபாய் 
செகண்ட் கிளாஸ்  - 15 ரூபாய்
தேர்ட் கிளாஸ்         - 10 ரூபாய் 

நமக்கு என்றுமே தேர்ட் கிளாஸ் தான், அன்றைய நாள் கொஞ்சம் செழிப்பாக இருந்தால் மட்டும் செகண்ட் கிளாஸ். இந்த இரண்டுக்குமே சீட் நம்பர் கிடையாது, முந்தி சென்று இடம் பிடிக்க வேண்டும். என் வீட்டை விட்டு வெளியே வந்தால், தெரு முனையில் இருக்கும் பாலாஜி திரையரங்கிலே தான் பெரும்பாலான படங்களை பார்த்ததுண்டு. படம் வெளியாகின்ற முதல் வாரம் என்றுமே கவுன்டரில் டிக்கெட் வாங்கியதே கிடையாது, எல்லாமே பிளாக் டிக்கெட் தான். என்னதான் ஆன்லைன்ல புக் பண்ணிட்டு ஹாயா போய் படம் பார்த்தாலும்,  பிளாக்ல பேரம் பேசி, ஓடிப்போய் சீட் பிடித்து, விசில் சத்தத்துல  படம் பார்க்கற சுகமே தனி.

இப்ப உங்களுக்கு, புதுவையும் சினிமாவும் எந்த அளவு நெருக்கம் என்று கொஞ்சமாவது புரிந்து இருக்கும் என்று நம்பி நம்ம 'வரலாறு' நிகழ்வுக்கு செல்கின்றேன். ஆஞ்சநேயா, ஜனா, ஜீ, பரமிசிவன், திருப்பதி என்று தொடர் தோல்விகளை சந்தித்த அஜித், வில்லன் படத்தில் வெற்றி கூட்டணி தந்த கே.எஸ். ரவி குமாருடன் இணைந்து உருவானது 'Godfather'. சில பல காரணங்களுக்காக அதிக நாட்கள் பெட்டியிலேயே தூங்கி, தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற அறிவிப்பால், 'வரலாறு' என்று பெயர் மாறி அக்டோபர் இருபது 2006இல், என் கால் ஆண்டு பரிட்சையின் போது  வெளியானது.


கால் ஆண்டுத் தேர்வு, பிளஸ் 2 என்று பல காரணங்களால் கால்கள் கட்ட பட்டன. பெரிதும் எதிர் பார்த்த படம், முதல் நாளே நண்பன் பார்த்துவிட்டு 'படம் செம மாஸ் டா, அஜித் பட்டய கெளப்பிட்டாரு' என்று கதை  சொல்ல ஆரம்பித்தவனின் வாயை மூடி, தூரம் ஓடி விட்டேன். டி.வி. யில் எந்த காட்சியோ அல்லது பாடலோ வந்தால் மாற்றி விடுவேன்,எல்லா காட்சிகளையும் திரையில் தான் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன்.

பத்து நாட்கள் நரக வேதனைக்கு நடுவில், தேர்வுகளை வெற்றிகரமாக முடித்து விட்டு, அன்று மாலையே என் மிதி வண்டியில் ஆனந்தா திரையரங்கம் நோக்கி சென்று, செகண்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கி, உள்ளே அடித்து பிடித்து நடுவில் ஒரு இருக்கையில் அமர்ந்து பொறுமையின்றி காத்துக்கொண்டிருந்தேன். புதன் கிழமை என்றபோதும், கள்ள சிடிக்கள் மலிவு விலையில் கிடைத்தபோதும் அரங்கம் நிரம்பியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. வழக்கமான லக்ஷ்மி விலாஸ், ரஜினி சுபாரி விளம்பரங்களின் மொக்கைக்கு பின் படம் தொடங்கியது. முதல் பத்து நிமிடம் எந்த வசனமும் கேட்காவிட்டாலும், அந்த விசில் சத்தத்தில் எத்தனை ஆனந்தம். 


இடைவேளைக்கு முந்தைய காட்சியில், ஊனமாக இருந்த அப்பா அஜித், தன் காலை எடுத்து கீழே வைத்து நிற்கும் போது, அணு குண்டு வெடித்தால் இவ்வளவு சத்தம் கேட்குமா என்று எனக்கு தெரியவில்லை, அரங்கம் அதிர்ந்தது, பேப்பர் பிட்டுக்கள் பறந்தன. ஒரு அஜித் இருந்தாலே தாங்காது, இதில் மூன்று அஜித் என்றால் சொல்லவா வேண்டும், தனியாக வந்த எண்ணமே வெளியில் வரும் வரை தோன்றவில்லை. பல நாள் பட்டினியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு அசைவ விருந்தாக அமைந்தது.

ஐந்து பேர் சினிமா பற்றி பேசுகையில் இருவர் விஜய் பக்கம் என்றால், மற்ற மூவர் கண்டிப்பாக அஜித் பக்கம் இருப்பதை நீங்கள் பல இடங்களில் பார்க்க முடியும். தொடர் தோல்வியை சந்தித்து, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹிட் கொடுக்கும் போதே இவருக்கு இப்படி ஒரு ஆதரவு என்றால், தொடர்ந்து ஹிட் கொடுத்தால் இவரை அசைக்க ஆளே இருக்காது என்று எண்ணியபடியே வீட்டிற்கு சென்றேன்.
    
அதன் பின் பல படங்களை சென்னையில் பார்த்து விட்டேன். பில்லா, மங்காத்தா படங்களை சென்னையில் முதல் நாளே பார்த்தபோதும், புதுவையில் அன்று கேட்ட சத்தம் இந்த சென்னை மாநகரத்தில் எந்த திரையரங்கிலும் கேட்கவில்லை.  அடுத்து வெளி வர இருக்கும் 'வலை' படத்தை புதுவையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், மே ஒன்று எழுத நினைத்த பதிவை ஜூன் ஒன்று எழுதி இன்று வெளியிடுகிறேன்.

ஐ மிஸ் யூ பாண்டி!