Wednesday, July 31, 2013

தேன் மிட்டாய் - ஜூலை 2013

கடிதாசி  

நம்ம சீனுவுக்கு எதோ சக்தி இருக்குங்க, அவர் காதல் கடிதம் பரிசு போட்டி துவக்கி சில நாட்களில், தந்தி சேவையை நிறுத்திட்டாங்க.  இருப்பினும் சமீபத்தில் 'இலங்கை தமிழர் பிரச்சனைக்காக' நம் முதல்வர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் கடிதம் எழுதினார் என்று செய்தி ஒன்று கேட்டேன். இவங்களுக்கு கால் பண்ண காசு இல்லையா என்ன? அவசர தீர்வுகள் காண அழைத்து பேச மாட்டார்களா, இன்னும் கடிதம் எழுதிக் கொண்டு... முடியல.   

அம்மா புராணம் 

விவேக் காணாமல் போனாரா என்று கேட்கும் அளவிற்கு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து விட, அவர் பல திரையரங்குகளில் படம் துவங்கும் முன் ஒரு வெள்ளைக்காரனுடன், காமடியாக (?), அம்மாப் புராணம் பாடிக் கொண்டிருக்கிறார். ஏழு மணி படத்திற்கு, 6 40க்கே செல்லும் என்னைப் போன்ற திறமைசாலிகளுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிட்டும்..  

மரியான் - நல்ல போலீஸ் 

முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது என்று முடிவாகி, முந்தைய தினம் பெய்த மழையால் சாலைகளில் ஓடும் ஓடைகளைக் கடந்து, வாகன வெள்ளத்தில் நீந்தி, அவசர அவசரமாக AGS OMR நோக்கி சென்று கொண்டிருந்தேன். சோழிங்கநல்லூரில் வழக்கமாக வலது புறம் திரும்புவதை தடுத்து, இடது புறம் சென்று, wipro அம்மணிகளை தரிசித்த பின் தான் U turn எடுக்க வேண்டும் என்று காவல் துறை விதிகளை மாற்றி இருந்தது. 10 30க்கு படம், மணி 10 05,  சோலிங்கநல்லூர் சந்திப்பை நெருங்கிய போழுது மஞ்சள் விளக்கு மின்ன, அருகில் ஒரு லாரி முக்கியபடி சாலையை கடக்க, சிவப்பு வண்ணம் மாறியது. அந்த லாரியுடனே கடந்து விடலாம் என்று நான் நகர, போக்கு வரத்து காவல் துறையிடம் சிக்கினேன். 'என்ன நீங்க அப்படியே வந்தா, ரோட் கிராஸ் பண்றவுங்க, எப்படி போவாங்க', ஐம்பதா  நூறா என்று என் மனம் கணக்கு போட,'அடுத்த முறை இப்படி செய்யாதிங்க,போங்க' என்றார்.நல்ல போலீஸ்!  
இந்த மாத க்ரஷ் - பார்வதி!  

முகநூலில் ரசித்த படம் 
(லைக் ஏதும் போடாமலேயே சுட்டு விட்டேன் )

ஒரு பொறியியல் மாணவனின் பார்வையில் வாழ்க்கை. (பொறியியலில் அரியர் வைத்தவர்களாலே மட்டும் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்)   
டிஸ்கவரி புக் பேலஸ்


பதிவர் திருவிழா குறித்த வாராந்திர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டிஸ்கவரி புக் பேலஸ் சென்றிருந்த பொழுது காவல் துறை எனது மற்றும் ஆரூர் மூனா செந்தில் அவர்களின் வண்டியை 'No Parking' ஏரியாவில் நிறுத்தியதாக தூக்கியது குறித்து கணேஷ் சார் எழுதிய பதிவு இங்கு சொடுக்கவும்.

இதில் நான் மட்டும் காவல் துறை வாகனத்தில் வண்டியை மீட்க சென்றேன், அரூர் மூனா செந்தில், KRP செந்திலுடன் இரு சக்கர வண்டியில் எங்கள் முன் கே.கே. நகர் காவல் நிலையம் சென்றார். அந்த காவல் துறை வாகனத்தில் சென்ற பொழுது என்ன ஒரு ராஜ மரியாதை, என்னைப் பார்பவர்கள் கண்ணில் பயம் இருந்தது. மற்றொருவன் வண்டியை தூக்க, நான் போலீஸ் என்று நினைத்து அவன் என்னிடம் வந்து 'சார்' என்று கெஞ்சினான், என் அருகில் வண்டியை ஒட்டிய நிஜ போலீசிடம் அவனை நான் செலுத்தினாலும், என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது  'ஏன் நம்ம  IPS படிச்சு ஒரு வால்டர் வெற்றிவேலாவோ இல்ல சேதுபதியாவோ இல்ல அன்புச் செல்வனாவோ  இல்ல ராகவனாவோ இல்ல  ஈஸ்வரசிங்கமாவோ ஆகக்கூடாது?'    

தமிழ் இனி !

ஒரு பிரபல கைபேசி விற்பனை நிலையத்தில் (பேர் சொல்ல மாட்டேன்) கதவில் இருந்த அறிவிப்பு.

Please                                                                     தயவு செய்து 
remove your                                                          உங்கள் காலனிகளை
footwear outside                                                  வெளியே விடவும்.              

பின் ஒரு நல்லவர் சுட்டிக் காட்ட அந்த பிழை திருத்தப் பட்டது. நான் அவன் இல்லிங்கோ!

திருமதி தமிழ்! 

நேற்று வெளியான தந்தியில் பார்த்து, இதயம் துடிக்க மறுத்த செய்தி.

 
டச் குழாய் 

சில நாட்கள் முன்பு தொலைக்காட்சியில் பார்த்து வியந்த விளம்பரம் ஒன்று. இதுவரை சென்ஸர் மூலம் செயல் பட்ட குழாய்களை மட்டும் கண்டுள்ளோம், இப்பொழுது டெல்டா என்ற நிறுவனம், தொட்டால் நீர் வரும், மீண்டும் தொட்டால் நீர் வராமல் மூடிக்கொள்ளும் குழாய்களை அறிமுகம் செய்துள்ளனர். அந்த முப்பது நொடி வீடியோவை கீழே இணைத்துள்ளேன்.
குறும் படம்

அலுவலக நண்பரான சுரேஷ் நடித்து இயக்கிய த்ரில் குறும்படம் சாவி, நேரம் கிடைப்பின் பார்த்து ரசியுங்கள்.   

பதிவர் திருவிழா 

பதிவர் திருவிழா பற்றிய தகவல்களை அறிய தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் பாலோயராக  தொடருங்கள்.

Monday, July 29, 2013

சாப்பாட்டு ராமன் - ஹலீம் (ஹைதராபாதி அசைவ உணவு)

ஹலீம் என்பது மட்டனில் செய்யப்படும், ஒரு வகையான ஹைதராபாதி அசைவ உணவு. பெரும்பாலும் முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் அதிகம் சமைக்கப் படுவது, அதிலும் குறிப்பாக இந்த ரம்ஜான் நோன்பு காலங்களில் அதிகம் செய்யப்படுவதாக கேள்வி பட்டுள்ளேன்.      


கோதுமையுடன் நன்கு வேகவைத்த மட்டன், பட்டை, லவங்கம், பிரிஞ்சு  இலை, மிளகு போன்ற வாசனைப் பொருட்களை சேர்த்து, பல மணி நேரம் சமைத்து உருவாகும் கலவை தான் ஹலீம். இதை உண்ணும் பொழுது உங்கள் நாவில் உள்ள சுவை அரும்புகள் தானாக இசை பாடும், உங்கள் வயிறில் ஒரு விதமான முழுமை உணர்வு பிறக்கும்.         

இந்த உணவை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது என் நண்பன் தான். அவன் தந்தை ஹைதராபாத் சென்று வந்த பொழுது, அவர் வாங்கி வந்த இந்த ஹலீமை எனக்கு சுவைக்க கொடுத்தான். முதல் வாயிலேயே அந்த ஆட்டுக் கறியின் மென்மை ராமனை ஈர்த்து விட்டது,அந்த டப்பா முழுவதையும் அவனே  உண்டு தீர்த்தான். 

பின் பல நாட்கள் இதை தேடி அலைந்தான், தெரிந்த முஸ்லிம் நண்பர்களிடமும் விசாரித்தான், ஒரு பயனும் இல்லை. சென்ற ஏப்ரல் மாதம் இந்த உணவை சுவைக்க ஹைதராபாத் செல்ல, ரயில் டிக்கெட்டும் வாங்கினான், சில அலுவல்களால் அந்த டிக்கெட்டை ரத்து செய்ய நேரிட்டது. இருப்பினும் ராமன் ஓயவில்லை, முஸ்லிம் பெயருடன் யாரை முதலில் சந்தித் தாலும் அவன் கேட்கும் முதல் கேள்வி 'உங்க வீட்ல ஹலீம் செய்வாங்களா?' என்பதுதான். 

இப்படியே நாட்கள் செல்ல, ஜூன் 24ஆம் தேதி தன் சக அலுவலக நண்பர்களுடன் உரையாடுகையில், ஒருவன் எதார்த்தமாக, அவன் ஹலீமை OMRஇல் எதோ ஒரு உணவகத்தில் கண்டதாக சொல்ல, அவனை நச்சரித்து, அவன் மூளையை பிசைந்து, அந்த உணவகத்தின் பெயரை கக்க வைத்தான். கூகிள் உதவியுடன் அந்த இடத்தையும் கண்டு அவர்களின் தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டு, மறு நாள் எழுந்தவுடன் அவர்களை தொடர்புகொண்டு, ஹலீம் கிடைப்பதை உறுதி செய்தான்.

கிடைக்கும் இடம் :
                        Rasavid Multi Cuisine Restaurant, காரப்பாக்கம், OMR  (opp. to Aravind theatre)

விலைப் பட்டியல்: 
                                       பேமிலி பேக்   : 175 + VAT
                                       ஜம்போ  பேக்  : 275 + VAT             

ஜூன் 25, மதியம் 12 45 மணிக்கு(வரலாறு மிக முக்கியம்) அந்த உணவகம் சென்றடைந்தான். இவனுக்கு வேற வேலை இல்லையா என்று கேக்கறிங்களா, நம்ம ராமனுக்கு சாப்பாடு தாங்க முக்கியம். அங்கு இருப்பவன் 'பேமிலி பேக் ஆர் ஜம்போ பேக்?' என்று கேட்க, மாசக் கடைசி என்பதால் பேமிலி பேக் வங்கினான். எந்தக் குறையும் இன்றி முதல் முறை உண்ட சுவை நாவில் மீண்டும் இசை பாட, மூவர் சாப்பிட வேண்டிய அந்த பேமிலி பேக்கை ஒற்றை ஆளாக ஆசை அடங்க, ராமன் உண்டு தீர்த்தான். 

Thursday, July 25, 2013

The General - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************

என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.

*********************************************************************************************************

சமீபத்தில் 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார், முகநூலில் பகிர்ந்த Buster Keaton வீடியோ என் கண்ணில் சிக்க, என் கல்லூரியில் நான் பார்த்த 'The General' படம் நினைவிற்கு வந்தது. என் நண்பன் ஒரு நாள் என்னிடம் 'கமலோட பேட்டி ஒன்னு ஹிந்துல பார்த்தேன், அவரு யாரோ Buster Keaton மற்றும் Peter Sellers னு ரெண்டு பேர பத்தி ரொம்ப புகழ்ந்து பேசி இருக்காரு' என்று சொன்னான். உடனே IMDB துணையுடன் இருவரையும் அடையாளம் கண்டு கொண்டு, நான் முதலில் பார்த்த படம் தான் இது.அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையில் போர் நடந்த 1890களில் கதை நடப்பதாக துவங்கும். ஜானி(Buster Keaton) ரயில்வே பொறியாளராக பணி செய்வதால் அவன் சேவை மக்களுக்கு தேவை என்று அவனை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அதிகாரிகள் மறுத்து விடுவர். அவன் ராணுவத்தில் சேரவே முயற்சிக்காமல் பொய் சொல்வது போல் சந்தர்ப்பமும் சூழ்நிலையம் அவனுக்கு எதிராக செயல்பட, அவன் காதலி அவனை விட்டு பிரிந்திடுவாள். எதிரிகளின் சதியால் இவன் வேலை செய்யும் ரயிலான 'The General' கடத்தப் படும், ஒற்றை ஆளாக அவர்களை வேறு ஒரு ரயில் என்ஜினில் துரத்திக் கொண்டு எதிரி நாடு வரை சென்ற பிறகுதான் அவன் காதலி மட்டும் அந்த ரயிலில் சிக்கியது அவனுக்கு தெரியவரும்.எதிரிகளின் ரகசியத் திட்டத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் காதலியை மீட்டு, அவன் தாய் நாடு திரும்பி எப்படி எதிரிகளின் சதியை முறியடிக்கிறான் என்பதே கதை. படத்தில் நான் ரசித்தவை: 

ஜானி  புகை வண்டி ரயில் என்ஜினுடன் போராடும் காட்சிகள் அசத்தலாக, நகைச்சுவையாக இருக்கும். 


முதல் பாதியில் ஜானி பெரும் படையுடன் ரயிலில் துரத்துவதாகவே எதிரிகள் நினைத்து பயந்து கடத்திய ரயிலில் வேகமாக செல்லும் காட்சிகள் மிகவும் இயல்பாக சித்தரிக்கப் பட்டு இருக்கும்.இரண்டாம் பாதியில் ஜானி தாய் நாடு திரும்பக் கூடாது என்று, முதல் பாதியில் அவன் துரத்திய அதே கும்பல், இம்முறை அவனை துரத்துவது போல் காட்சி வருவது படத்திற்கு சிறப்பு. 

வசனமே இன்றி அந்த ரயில் ஓட்டத்தில் நம்மை பயணிக்க வைக்கும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். 

திரையில் நடித்தது மட்டுமின்றி, கதை எழுதியதிலும், இயக்கியதிலும் Buster Keatonனுக்கு பங்கு உண்டு. 

வசனம் இல்லாத ஊமைப் படம் என்றால்,முழு நீள நகைச்சுவை படமாகத்தான் இருக்க வேண்டும் என்று என்னுள் இருந்த எண்ணத்தை மாற்றிய இந்த படம் தான், பேசாத ஊமைப் படங்களின் வரிசையில் என்றுமே நான் முதல் இடத்தில வைப்பது. 

*******************************************************************************************************

ஆண்டு              : 1926
மொழி                : ஆங்கிலம் (ஊமைப் படம்) 
என் மதிப்பீடு   : 4.7/5 

மேலும் விபரங்களுக்கு IMDB

*******************************************************************************************************

Monday, July 22, 2013

சாப்பாட்டு ராமன் - பார்டர் பரோட்டா & ருசி பரோட்டா

பார்டர் பரோட்டா 

'குற்றாலம் சென்று குளித்து, பார்டர் பரோட்டா சாப்டா தான் அந்த பயணம் நிறைவடையும்' என்று பலர் சொல்லக் கேட்டு என்னுள் இருக்கும் ராமன், கண்டிப்பாக செங்கோட்டை சென்று அந்த பரோட்டாவை சுவைக்க வேண்டும் என்று அடம் பிடிக்க, என் நெல்லை நண்பனோ' ருசி பரோட்டாவிற்கும் அதற்கும் பெரிதும் வித்யாசம் இல்லை' என்று அடம் பிடித்தான். இறுதியில் ராமனே வென்று, ஐந்தருவியில் குளித்த ஈரத்துடன், செங்கோட்டை 'பார்டர்  ரஹ்மத் பரோட்டா' கடையை நோக்கி சென்றோம். 

இந்த இடம் கேரள-தமிழக பார்டரை ஒட்டி இருப்பதால், இந்தப் பெயர் வந்தது என்று எம் ஓட்டுனர் சொல்லினார், டெம்போ ட்ராவெலரில் பரோட்டா சாப்பிட செல்வது நாங்கள் மட்டும் தான் என்று எண்ணிய எனக்கு அங்கு கடை முன் நின்றுகொண்டிருந்த சீருந்துகளை பார்க்கும் பொழுது என் எண்ணம் மாறியது.

சாதாரண மர டேபிள்-பெஞ்ச் கொண்ட, மின் விசிறி சுற்றும் கடை தான் என்றாலும் உள்ளே ஏக்கக் செக்க கூட்டம். கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்ததும், எல்லார் முன் தலை வாழை இலை விரிக்கப் பட்டு, டம்லரில் தண்ணீர் ஊற்றப் பட்டது. உணவு பரிமாறுபவன் ஒரு சின்ன அன்னக் கூடை நிறைய பரோட்டக்களுடன் வந்து, எல்லா இலையிலும் தலா நான்கு பரோட்டா, நாங்கள் கேட்காமலே வைத்து விட்டுச் சென்றான். அதே போல் நாங்கள் கேட்காமலே, ஒரு தட்டு நிறைய ஆம்லட்டுடன் வந்து, எல்லார் இலையிலும் ஒன்று வைத்தான். பின் ஒரு பெரிய தட்டில் நாட்டுக் கோழி வறுவலுடன் வந்தான், எம் வடக்கு நண்பர்கள் இம்முறை சுதாரித்து வேண்டாம் என்று அவனை நிறுத்திவிட, எங்கள் இலையில் மட்டும் கோழி குடியேறியது. 

உபசரிப்பில் அன்பு அறவே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, கூட்டம் அலைமோத அவர்களும் என்ன செய்வர். அடுத்து எதை கேட்டாலும் வர சற்று தாமதமானது, அவன் வரும்போது நம் இலைகளை நிரப்புவது உசிதம் என்று அனுபவித்து உணர்ந்தோம். காடை வறுவலுக்காக என் நண்பன் காத்திருக்க, நாங்கள் உண்ட இலையை நாங்களே அகற்ற, எங்கள் பின் நின்று நாங்கள் சாப்பிடுவதை இதுவரை முறைத்துக் கொண்டிருந்தவர்கள், எங்கள் பெஞ்சை கைப்பற்றினர். 

நாங்கள் ஆறு பேர் (என்றாலும் நன்றாக சாப்பிட்டது மூவர் மட்டுமே) உண்டதற்கு பில் தொகை 531 ரூபாய். அங்கு கிடைத்தது மொத்தமே காடை வறுவல், நாட்டுக் கோழி வறுவல், ஆம்லட், பரோட்டா இவை மட்டும் தான். உணவில் எந்த குறையும் இல்லை என்றாலும் உண்ட திருப்தி இல்லை.

ருசி பரோட்டா

மறுநாள் மதியம் நெல்லையில் ருசி உணவகத்தில் சாப்பிடுவது என்று முடிவானது. நெல்லையில் எத்தனை சாந்தி ஸ்வீட்ஸ் உண்டோ அதை விட அதிகம் 'ருசி' என்ற பெயர் கொண்ட உணவகங்கள். ஓர் இடத்தில நியூ ருசி என்றிருக்கும், ஒரிஜினல் ருசி என்றிருக்கும், ஒரு இடத்தில 'ruci' என்றிருக்கும், வேறு ஒரு இடத்தில 'ruchi' என்று கூட இருந்தது. இப்படி பல ருசிகளுக்கு இடையில் என் நெல்லை நண்பன், பாளை மார்க்கெட் அருகில், செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரில் இருக்கும் ருசி தான் முதலில் தோன்றிய ஒரிஜினல் என்று அங்கு அழைத்துச் சென்றான்.நேராக கடைசி அறைக்கு சென்று அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தோம், இங்கும் தலை வாழை இலைதான். சென்னை உணவகங்களில் காணப் படாத ஒன்று. பரோட்டா, சிக்கன் சாப்பாடு, மட்டன் சாப்பாடு, சைவ சாப்பாடு, மஜீரா, ஹாப் பாயில், ஆம்லட், கலக்கி என நாங்கள் ஆறு பேர் உண்டதற்கு பில் வெறும் 715 ரூபாய். அனைத்தும் சுவையில் பர்ஸ்ட் கிளாஸ். 

மஜீரா என்பது சிக்கனில் தந்தூரி போல் செய்வது. தந்தூரியை கரி சூட்டில் சுடுவர், மஜீரா எண்ணையில் பொறிக்கப்படுவது. மஜீரா சென்ற முறை நெல்லை சென்ற போதே என்னை கவர்ந்த ஒன்று. 


முன்னோட்டம் 

எங்களுக்கு உணவு பரிமாறியவர் மிகவும் பொறுமையாய், அன்பாய், புன்னகையுடன் உணவு கொடுத்தது, உணவிற்கு சுவை கூட்டியது. அவருக்கு டிப்ஸ் வெறும் இருபத்து ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம், அதைக் கண்டு அவர் முகத்தில் எழுந்த சிரிப்பில் எத்தனை ஆனந்தம். காசின் மதிப்பை நன்கு அறிந்த அவரின் சிரிப்பில் இறைவன் அழகாய் தெரிந்தார்.

பார்டரில் கிடைக்காத மன நிறைவு ருசியில் கிடைத்த மகிழ்ச்சியுடன், திருநெல்வேலி அல்வாவை வேட்டையாட புறப்பட்டான் ராமன்.

Friday, July 19, 2013

ஊர் சுற்றல் - திருநெல்வேலி ராமில் சிங்கம் 2

ஞாயிறு மாலை தனுஷ்கோடியில் இருந்து மதுரை வழியாக, ஆனந்தக் குளியலை முடித்து விட்டு நெல்லை திரும்பிய நாங்கள், வண்ணாரப் பேட்டையில் இறங்கி, நெல்லையின் தெருக்களை உலா வரத் தொடங்கினோம். உலாவில் புறாக்கள் கண்ணில் சிக்கா விட்டாலும் நல்ல சாலையோர உணவுகள் சிக்கின. 

வ.உ.சி மைதானம் அருகில் இருக்கும் கையேந்தி பவன்களை நோக்கி படையெடுத்தோம். முதலில் சுவைத்தது பிரட் ப்ரைதான், ஒரு பிரட்டை முக்கோண வடிவில் பாதியாக வெட்டி, அதன் நடுவில் உருளை கிழங்கு கலந்த மசாலாவை வைத்து பொறித்திருந்தனர். சூடாக சுவைக்க அருமையாக இருந்தது. முட்டை காளான் என்று ஒரு ஐடெம் இருப்பதாக கூறினர், நான் இதுவரை சென்னையில் வெறும் காளான் மட்டும் தான் சுவைத்ததுண்டு, இதையும் சுவைக்கலாம் என்று ஆர்டர் கொடுத்தேன். என் நண்பன் முட்டை பூரி ஆர்டர் செய்தான். இரண்டிலும் உப்பும் மசாலாவும் சற்று குறைவுதான் என்றாலும் பசியின் விளைவால் அந்த பிளேட் சில நொடிகளில் மாயமானது. 

என் நண்பன் சூப் குடித்தே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று, ஆட்டுக்கால் சூப் உடன் ஈரலையும் சேர்த்து உள் இறக்கினான். மற்ற நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு குல்பி வாங்கி சூட்டை தனித்து, பன்னீர் போஞ்ச் தேடி பாளையங்கோட்டை நோக்கி சென்றோம். நெல்லை ஜங்ஷனில் இருந்து பாளையங்கோட்டை ஐந்து நிமிட பேருந்து பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு நெல்லை சென்றிருந்த பொழுது தான் முதல் முறை சுவைத்தது இந்த பன்னீர் போஞ்ச். Love at first sip! எளிதாக சொல்லவேண்டுமானால் நீருக்கு பதில் பன்னீர் சேர்த்து உருவாகும் எலுமிச்சை ஜூஸ். ஒன்றுக்கு இரண்டாக நான் அருந்தியதை வட நாட்டு நண்பர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர். பாளை மார்க்கெட் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரூட்ஸ் & ஜூஸ்' என்ற கடை தான் என் நெல்லை நண்பனும் நானும் உங்களுக்கு பரிந்துறைப்பது. 

பயணத்தை தொடங்கும் முன், நம் கோவை ஆவி, ஆவி பறக்க சிங்கம்-2 படத்துக்கு எழுதிய விமர்சனத்தைப் படித்தேன். ஆவியின் சிங்கம்-2 விமர்சனம். மனதில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே பயணத்தை தொடர்ந்தேன். என்னுடன் வந்த சென்னை நண்பனும் என் கருத்தை வழிமொழிய, என் நெல்லை நண்பன் மட்டும், வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தான். முதல் காரணம் அவனுக்கு படத்தின் கதை தெரிந்துவிட்டது, படத்தை திரையரங்கில் பார்க்க எதுவும் இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டிருந்தான். இரண்டாவது காரணம், பொதுவாக முப்பது ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட் மூன்றாவது நாள் என்பதால் 150, 200 என விற்கப்படும் அபாயம். 
              
எங்கள் பிடிவாதத்தால் அவனை வலுக் கட்டாயமாக கடத்திக் கொண்டு சிங்கம்-2 காண ராம் திரையரங்கம் நோக்கி புறப்பட்டோம். ஆட்டோவில் செல்லாம் என்று முடிவு எடுத்து, ஒரு ஆட்டோவை மடக்கினோம். என் நெல்லை நண்பனின் வீடு இருப்பது, பாளை- தெற்கு பஜார்- சிவன் கோவில் தெரு, அங்கிருந்து ராம் திரையரங்கம் சுமார் எட்டு கிலோ மீட்டருக்கு கூடுதலான தொலைவிலேயே தான் இருக்கும்.நாங்கள் மடக்கிய ஆட்டோக்காரன் எங்களிடம் கேட்டது நூறு ரூபாய் மட்டும். சின்ன ஆட்டோ கூட இல்லை, பெரிய மஞ்சள் நிற  ஷேர் ஆட்டோ. நெல்லை ஆட்டோ ஓட்டுனர்களே நீங்கள் சென்னை ஆட்டோ அண்ணாத்தைங்களிடம் டியுஷன் படிக்க வேண்டும். 

முப்பது ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய் கொடுத்து வாங்க வைத்த எங்களைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்திய நண்பனின் வயிற்றை நிரப்ப, உணவகம் தேடி ஜங்ஷன் நோக்கி நடந்தோம். நெல்லையில் இருக்கும் பல 'ருசி' என்ற பெயர் கொண்ட உணவகங்களில் முதலில் வந்த ஒன்றில் உணவு அருந்திவிட்டு, சிங்கத்தை காண திரையரங்கம் திரும்பினோம்.

தமிழ் தெரிந்து, எந்த வித கொடுமையையும் தாங்கும் உறுதி கொண்ட நாங்கள் நால்வர் மட்டும் ராம் திரையரங்கத்தினுள் மற்ற நெல்லை வாசிகளுடன் நுழைய,உள்ளிருந்த கொசுக்கள் எங்கள் காதுகளில் ஒய்யாரமிட்டு வரவேற்றன. முதல் முறையாக ஒரு திரையரங்கினுள் லேசெர் ஷோ கண்டது இங்குதான். விளம்பரங்கள் தொடங்கும் முன் ஐந்து நிமிட லேசெர் ஷோவை கொசுக்களின் கடியுடன் ரசித்தோம். பின் சிங்கம் தொடங்க, திரையில் சூர்யா தோன்றும் காட்சியில், ஒரு பக்கம் விசில் பறந்தாலும், மறு புறம் திரையின் அருகில் சுவரில் இரு புறங்களிலும் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று வண்ணங்கள், டிஸ்கோ போல் மின்னின.

இந்த வண்ண மின்னல்கள், படத்தில் குத்து பாடல்கள் வரும் போதும், பஞ்ச் வசனங்கள் வரும் போதும், திரை அருகில் சுவரில் தோன்றி மறைந்து எங்களை ஆச்சரியப் படுத்தியது. படத்தில் இருக்கும் ஒரு சில கவர்ச்சிகளை எனது முன் சீட்டில் இருந்த மாமிச மலை மறைக்க, அவனில் இருந்து வலது புறம் நான்காவது சீட்டில் இருந்த ஒருவர் விட்ட குறட்டை சூர்யாவின் வசனங்களுடன் போட்டியிட்டது. என்னுடன் வந்த ஒரு நண்பன் படம் முடிந்தவுடன், 'சூர்யா ஏன் இவன அர்ரெஸ்ட் பண்ணான்?' என்று கேட்ட பொழுது தான் தெரிந்தது நம்ம பையன் குறட்டை இன்றி தூங்கும் திறமைசாலி என்று.

இரண்டு நாட்கள் தொடர் பயணங்களுக்கு பின், திங்கட் கிழமை மதியம் ஒரு மணிக்கு சூரியனுக்கு குட் மார்னிங் சொல்லி விழித்தோம். நேராக பாளை மார்கெடில் இருக்கம் ஒரிஜினல் ருசிக்கு சென்று, கோழி, ஆடு, காடை முதலிய ஜீவன்களுக்கு சாப விமோட்சனம் கொடுத்து விட்டு, பயணத்தின் முக்கிய காரணமான அல்வாவை தேடி சென்றோம். நெல்லை எக்ஸ்பிரஸ்சை பிடிக்க வேண்டும் என்பதால், இருட்டு கடை செல்ல முடியவில்லை, ஜங்ஷன் அருகில் இருக்கும் பல 'சாந்தி ஸ்வீட்ஸ்' கடைகளில் நெல்லை நண்பன் உதவியுடன் ஒரிஜினலை கண்டு பிடித்து, ஐந்து கிலோ வாங்கி, எதிரில் இருந்த லக்ஷ்மி ஸ்வீட்ஸில் பால்கோவா வாங்கிக் கொண்டோம்.

வழக்கம் போல் பெயர் பட்டியல் தந்த ஏமாற்றத்துடன், சிங்கார சென்னை நோக்கி விரைந்த நெல்லை எக்ஸ்பிரஸில் அல்வாவையும்,ரயிலில் வாங்கிய கோவில்பட்டி கடலை மிட்டாயையும் ருசித்துக் கொண்டே சென்னை திரும்பினோம். அடுத்த பதிவில் பார்டர் பரோட்டவுடன் சேர்ந்து ருசி பரோட்டாவும் உங்கள் நாவிற்கு விருந்தாகும் என்பதை அன்புடன் கூறி விடைபெறுகிறேன்.

*********************************************************************************************************
பதிவர் திருவிழா தேதி மற்றும் இடம் அறிவிப்பு : இங்கு சொடுக்கவும்
*********************************************************************************************************

Wednesday, July 17, 2013

ஊர்சுற்றல் - மெட்ராஸ் டு தனுஷ்கோடி via குற்றாலம்.

இதுவரை அரை ட்ரௌசருடன் பயணம் செய்த நான் (டெல்லி வரை நம்ம ட்ரௌசர் போய் இருக்கு), முதல் முறை முழு கால் சட்டையுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் என் பயணத்தை தொடங்கினேன். எப்பொழுதும் தனிமையில் பயணிக்கும் எனக்கு துணை வரும் சுஜாதாவை இம்முறை நிராகரித்தேன், என்னுடன் என் நண்பன் வருவதால், அவன் எழும்பூரில் ரயில் ஏறி தன்னிடம் அடையாள அட்டை இல்லாததால், என் வருகைக்காக TTEயுடன் ஆவலாக காத்திருந்தான். அந்த ரணகளத்தில் கூட, பெயர் பட்டியலை 'F' 20 டு 25 க்காக ஆராய்ந்த எனக்கு ஏமாற்றம் தான். அது எப்படி சார் படத்துல மட்டும் நல்ல அழகான அக்காங்க எல்லாம் ட்ரைன்ல வர்றாங்க, நிஜத்துல வெறும் ஆன்ட்டிக்களும் பாட்டிக்களும் தான் வராங்க.

தனுஷ்கோடி வங்காள வரிகுடா
பயணக் குழு
காலை ஒன்பது மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சந்திப்பில் முதல் பிளாட்பாரத்தில் தரை தட்டியது. நண்பன் வீடு சென்றவுடன் தான் தெரிந்தது நான் அதை மறந்தது. நீங்க எல்லா பயணத்திலும் எதையாவது மறக்கலாம், ஆனால் நான் என்னுடைய எல்லா பயணத்திலும் ஒன்றை மட்டும் தான் மறப்பது வழக்கம். Tooth brush! அங்கிருந்து கிளம்பி நெல்லை ஜங்ஷன் அருகில் இருக்கும் பாரதி பவனில் சிற்றுண்டி முடித்து விட்டு, மணி முத்தாறு அருவி நோக்கி பயணித்தோம். சென்ற ஆண்டு இதே நேரத்தில் மணி முத்தாறு சென்றிருந்த சமயம் எங்க வீட்டு ஷவரில் வருவதை விட குறைவான நீர் அருவியில் வழிந்தது பெரும் ஏமாற்றம், பின் வண்டியை பான தீர்த்த அருவி நோக்கி செலுத்தினோம்.இம்முறை மணி முத்தாறு ஏமாற்றினால் செல்ல பான தீர்த்தமும் இல்லை என்ற அச்சத்துடன் தான் சென்றோம். புலிகளை மனிதர்களிடம் இருந்து காக்க அது மக்கள் பார்வையில் இருந்து மூடப்பட்டதாக கேள்விப்பட்டேன்.


மணி முத்தாறு அருவி - சென்ற ஆண்டு
ஓட்டுனர் அருகில் நான் தான் இருந்தேன், திடீரென்று 'தண்ணி வச்சிருந்தா குடிசிடுங்க தம்பி' ஏன் இவர் இப்படி சொன்னார் என்று யோசிப்பதற்குள் 'செக் போஸ்ட்ல பாட்டில் பார்த்தா வாங்கிட்டு தர மாட்டாங்க' என்றார். நாங்கள் எல்லோரும் அக்மார்க் தங்க கம்பிகள்..சி.. தம்பிகள் என்று புரியவைத்துவிட்டேன். செக் போஸ்டில் எங்கள் பைகளை ஆட்டி ஆட்டி சோதித்த காவலரின் திறமையை கண்டு வியந்தேன்.

மணி முத்தாறு அருவி - இம்முறை
மணி முத்தாறு இம்முறை ஏமாற்ற வில்லை, அருவியில் நீர் நன்றாக கொட்டியது. நாகலாபுரம், கோனே என்று தனிமையில் அருவிகளை ரசித்து குளித்த எனக்கு அந்த கூட்டத்தில் கொஞ்சம் இயல்பாக இருக்கமுடியாதது வருத்தம்.

அங்கிருந்து குற்றாலம் நோக்கி புறப்பட்டோம், பழைய குற்றாலம் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அங்கு சென்றோம், நீர் பெருக்கெடுத்து ஓட, மக்கள் கூட்டமும் அலை மோத, குளிக்க லைன் நிற்பதைக் கண்டு நொந்து, போட்டோவாச்சு எடுக்கலாம் என்று சென்றால், காவல் துறை விரட்டியது.

பழைய குற்றாலம்
எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு லைனில் நின்று குளிக்க சென்ற என் நண்பன், அவன் அருகில் இருந்த குடிமகன் கத்த, காவல் துறை தடியால் இவனை அடிக்க ஓடி வந்துவிட்டான். இப்படி வரிசையில் நின்று, சில நிமிடங்கள் மட்டுமே குளிக்க முடிவதற்கு என்ன காரணம், மக்கள் தொகை பெருக்கமா இல்லை வெளி ஊர்களில் இருந்து குற்றாலத்தின் மேல் என்னைப் போல் மோகம் கொண்டு வரும் மக்களா?

பழைய குற்றாலம்
அங்கிருந்து ஐந்தருவி சென்றோம் , மாலை ஆறு மணி தாண்டியதால் கூட்டம் குறைவு, லைன் இல்லை என்று நிம்மதியாக குளிக்கச் சென்றேன். என்ன ஒரு அடி! அடிச்சது போலீஸ் இல்லைங்க, அந்த அருவி தான், குளிர்ந்த தூய்மையான நீர், 'குளிச்சா குற்றாலம் ' என்று என் நண்பன் பாட்டு பாட, எங்கள் உள்ளாச குளியல் இனிதே அரங்கேறியது.

அங்கிருந்து புறப்பட்டு, அடம் பிடித்து பார்டர் பரோட்டா சாப்பிட செங்கோட்டை சென்றோம். சாப்பாடு பற்றிய கருத்துகள் தனி பதிவாக வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின் நெல்லை திரும்பி, பல குழப்பங்களுக்கு பின் ராமேஸ்வரம் நோக்கி பயணிக்க தொடங்கினோம். மதுரை சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் பேருந்து பிடிப்பதுதான் திட்டம். மூவர் அமரும் சீட்டில், கால் நீட்டி தூங்கி, மூன்று மணி நேரத்தில் மதுரை வந்தோம். மதுரையை ஏன் தூங்காநகரம் என்று சொல்லுகிறர்கள் என்று அன்றுதான் உணர்ந்தேன், நடு ராத்திரி 2:30 மணி, மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சுறுசுறுப்பாக இருந்த பெரியார் பேருந்து நிலையம். கூட்டத்தை கண்டு உடன் வந்த வடக்கு நண்பர்கள் அஞ்ச, வேறு வழி இன்றி டாக்ஸி பிடித்து ராமேஸ்வரம் சென்றோம். அம்மாவசை என்பதால், கோவிலில் கூட்டம் அதிகம் என்று ஓட்டுனர் சொல்ல, நேராக தனுஷ்கோடி தேடி சென்றோம்.

பாம்பன் பாலம்
சென்ற ஆண்டு சீனு எழுதிய பதிவுகளை படித்து எழுந்த ஆர்வம், தனுஷ்கோடி பற்றி அவர் எழுதியதை படியுங்களேன் நாடோடி எக்ஸ்பிரஸ் - தனுஷ்கோடி .அழகாக எழுதி இருப்பார், அதை விட நன்றாக தனுஷ்கோடி பற்றி எழுத முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.அந்த வண்டியை மறைத்த நாங்கள்
ஒரு மீன் பாடி வண்டியை மாற்றி அமைத்த லாரி போன்ற வாகனத்தில், இருபத்து ஐந்து பேர் தொற்றிக்கொள்ள, நாங்கள் பின்னால் அமர்ந்து, மணலிலும் கடல் நீரிலும் மாறி மாறி சென்ற பயண அனுபவத்தை என்றும் மறக்க முடியாது. ஒரு ரோலர் கோஸ்டரில் கூட அத்தனை த்ரில் கண்டதில்லை. அந்த வண்டி பாதி வழியில் நிற்க, அந்த நேரத்தில் ஒரு நாடகம் அரங்கேற்றி(படங்கள் கீழே), பின் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்து, ஒரே குஷி தாங்க.
பழுதாகி நின்ற வண்டி
தீவிரவாதிகளாக மாறிய எம் நண்பர்கள்
கடல் உப்பு காற்றும், வெய்யிலும் உடலை அறிக்க, குளிக்க நல்ல நீர் தேடி அலைந்தோம். முன்னாள் குற்றாலத்தில் உள்ளாசக் குளியல் நினைவிற்கு வர, இன்றோ நல்ல தண்ணீர் கிடைக்க தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் வரை வந்துவிட்டோம். எங்கள் விடா முயற்சியால் ஒரு கண்மாயை கண்டு பிடித்தோம், அங்கு தான் சார் தனிமை கிட்டியது. புதுப்பிக்க பட்டு, ஆற்று மணல் மெத்து மெத்து என இருக்க, நீர் சில்லென்று இருக்க, ஒரு ஆனந்த குளியல் போட்டதில் ஆனந்தம், பரமானந்தம், பேரானந்தம். அட, ஆனந்த குளியல் தெரியாதா உங்களுக்கு?

ஆனந்தக் குளியல் ! இங்குதான்.
மீண்டும் மதுரை வழியே நெல்லை திரும்பினோம். நெல்லையை அடுத்த பதிவில் சுற்றுவோம். டாட்டா...

பின் குறிப்பு:
நான் எழுதிய சென்ற பதிவு dash boardஇல் தெரியாத காரணத்தால் அதன் இணைப்பை இங்கே பகிர்கிறேன்.காதலிக்கு எழுத நினைத்த காதல்கடிதம்

Monday, July 15, 2013

காதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்

இனியவளே,

உன்னை நம் கல்லூரியில் முதல் நாள் சந்தித்த போதே உன் மேல் எனக்கு ஒரு இனம் புரியாத உணர்வு பிறந்தது, பின் நம் நட்பு வளர என் உணர்வு நேசமாக மாறியது. நீ என்னுடைய தோழியாக இருப்பதனாலோ என்னவோ என்னால் மனம் திறந்து உன்னிடம் இந்த நேசத்தை பற்றி பேச முடியவில்லை, நம் நட்பில் விரிசல் வந்து விடுமோ என்ற பயம் மறுபுறம். இந்த வேதனையை நம்ம சீனுவின் தோளில் கொட்டியபோது, அவர் 'உன் உணர்ச்சிகள ஒரு லெட்டர்ல கொட்டி அவ கிட்ட கொடுத்திடு, பொதச்சா தென்னமரம் ஒடச்சா சட்டினி' என்று சொன்னார். எனக்கும் இந்த முயற்சியில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் என் எண்ணங்களை இங்கு கிறுக்குகிறேன்.

எனக்கு கவிதை நடையில் எழுதும் ஆற்றல் இல்லை என்பது என் வீட்டு குப்பைத்தொட்டி நான் கசக்கிய காகிதங்களால் நிரம்பிய பின் தான் புரிந்தது. கவிதை வந்தால் தான் காதலா என்ன? என்னால் உன்னை மானே, தேனே என்றெல்லாம் கூப்பிட முடியவில்லை, என்றுமே நீ என் செல்லமான 'லூசு' தான். நீ என்னிடம் பல முறை 'தமிழ் எழுத்தில் தான் உணர்சிகளை சரியாக காட்ட முடியும்' என்று சொல்லி இருக்கிறாய், ஆகையால் நான்கு ஆண்டுகள் கழித்து, தமிழில் எழுத நான் எடுக்கும் விபரீத முயற்சி இது, வழக்கம் போல் பிழைகளை மட்டும் காணாமல், என் எண்ணத்தையும் படி

நம் கல்லூரி புழல் அருகில் இருக்கும் இரண்டாம் சிறை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆண்-பெண் பேசக் கூடாது என்ற சட்டம் நம்மை சில நாள் பேச விடாமல் பிரித்து வைத்ததாலும், நம்மை இணைத்தது செய்முறை வகுப்புகள் தான். வேதியியல் செய்முறை வகுப்பில் தான் நாம் முதன் முறை பேசியது, என் குறிப்பேட்டை என்னிடம் இருந்து பெற்றுச் சென்றாய், அதை திரும்ப பெற நான் உன்னிடம் பேசினேன். பெயர் வரிசையில் என் பெயருக்கு பின்னால் உன் பெயர் வருவதால், மற்ற செய்முறை வகுப்புகளில் விதி நம்மை ஒரே பாட்சில் போட்டது. அதற்குப் பின் என் எதிரில் வரும் போது உன் அழகிய புன்னகையால் என் நலம் விசாரித்து செல்வாயே அப்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

நம் நட்பை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது Gmail தான், உனக்கு நினைவு இருக்கிறதா, நீ கல்லூரி விடுதி சென்று, மீண்டும் கல்லூரி இணைய மையம் வரும் முன், நான் என் வீடு சென்று லாகின் செய்து உனக்காக காத்திருப்பேன். பல நாள் லாகின் செய்ய நான் என் அண்ணனுடன் சண்டை போட்டதும் உண்டு. ஒரு நாள் என் வீட்டில் இணையம் வேலை செய்யாததால், அவசரமாக துணி கூட மாற்றாமல் ப்ரௌசிங் சென்டர் சென்று உனக்காக காத்துக்கொண்டு இருந்தேன், ஆனால் நீ அன்று ஆன்லைன் வரவே இல்லை. ஏமாற்றத்துடன் வீடு சென்ற எனக்குஅன்று இரவு உன்னிடம் இருந்து வந்த மன்னிப்பு மின்னஞ்சல், என்னை மிகவும் கவர்ந்தபொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

இவ்வளவு பேசியும் உன் கைபேசி எண்ணை வாங்கவேண்டும் என்று எனக்கு  தோணியதில்லை. இரண்டாம் ஆண்டு, நாங்கள் சுற்றுலா சென்று திரும்பும் போது, நம் வகுப்பு குமார் உன் மீது இருந்த கோபத்தில், உன் கைபேசி எண்ணை என்னிடம் தந்து உன்னை வம்பிழுக்க சொன்னான். நண்பன் குமாருக்கு நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன், ஒரு வேளை அவன் இதை செய்யாமல் இருந்தால், நாம் இந்த அளவு நெருக்கமாக ஆகி இருக்க முடியாது. பக்கத்துக்கு வகுப்பு, வேறு ஆண்டு என்று பல பேர் நம் வகுப்பு நோக்கி உன்னை பார்க்க (சைட் அடிக்க) வருவதுண்டு, அப்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

நீ கல்லூரி விடுதியில் இருந்ததால் உன் கைபேசியை சித்தி வீட்டிலேய விட்டுச் செல்வாய். வெள்ளிக்கிழமை வந்தால் போதும், பல நாள் கழித்து ரஜினி படம் அன்று இரவு வெளியாகப் போவது போன்ற உற்சாகம் எனக்கு பிறந்துவிடும். வீடு வந்து நீ எனக்கு அனுப்பும் குறுந்தகவல் வரும் வரை, எலும்பை பாதுகாக்கும் நாய் போல, என் கைபேசியை என் பார்வையிலேயே வைத்து காத்திருப்பேன். அளவே இல்லாமல் இரண்டு நாட்கள் வெறும் குறுந்தகவலுடன் நாம் கழித்தாலும், அந்த திங்கட் கிழமை காலை வந்தவுடன், இந்தியா பாகிஸ்தானுடன் படு தோல்வி அடைந்தால் வருவது போன்ற சோகமும் வெறுப்பும் என்னை தாக்கும். அடுத்த வெள்ளி வர மனம் ஏங்கும்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

நம் நட்பு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருந்து கைபேசி மூலம் பேசத் தொடங்கினோம். பேசுவோம் பேசுவோம், சார்ஜ் காலியானால் சார்ஜ் போட்டு பேசுவோம், விடியும் வரை பாலன்சு தீரும் வரை பேசிக் கொண்டே இருப்போம். நம் கைபேசிகளுக்கு வாய் இருந்தால் கண்டிப்பா அழுதிருக்கும்! அவ்வளவு நேரம் பேசி விட்டாலும் அழைப்பை யார் துண்டிப்பது என்று நமக்குள் சண்டை வரும், அதில் எப்பொழுதும் நீ தான் வெல்வாய்.அழைப்பை துண்டித்த அடுத்த நொடியில் 'இந்த விசயத்தை சொல்லலையே' என்று என் மனம் துடிக்கும் போது தான்

உலகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் 
பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே!!" 

என்ற பாடல் வரிகளின் அர்த்தம் புரிந்த பொழுதில் கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை.

திங்கள் முதல் வெள்ளி வரை கல்லூரியில் தினமும் சந்தித்தாலும்  நம்மால் பேச முடியாது, இருப்பினும் என்னுடன் பேசுவதற்காக நாணய தொலைபேசியில் இருந்து  என்னை அழைப்பாய்எல்லா முறையும் விடுதியை விட்டு  வீட்டுக்கு வா என்றுதான் நான் சண்டையிடுவேன். இறுதியாக கல்லூரி நான்காம் ஆண்டு விடுதியை நிரந்தரமா துறந்து வீட்டுக்கு வந்தாய், எங்கள் வீட்டில் புதிதாய் தொலைக்காட்சி வாங்கிய போது கூட எனக்கு அந்த அளவு  சந்தோஷம் வந்தது இல்லை.

நம் நட்பும் அடுத்த கட்டம் நோக்கி செல்லநான் தினமும் உன்னை வீடு வரை வந்து விடுவது வழக்கமானது. புழலில் இருந்து அசோக் பில்லர் வரை, நீ பேசுவதை கேட்டுக்கொண்டே மனம் செல்லும், வழக்கமாக எரிச்சலை உண்டாக்கும் போக்குவரத்து நெரிசலும் உன்னுடன் இருக்கையில் ஆனந்தமானது, எல்லா சந்திப்பிலும் சிகப்பு விளக்கு எறியாத என்று மனம் ஏங்கும். சன்னல் ஓரத்தில் நான் தான் உட்காருவேன் என்று அடம் பிடிப்பாயே, அந்த குழந்தைத் தனத்தில் கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

உன்னுடன் ரசித்த அதே பயணத்தை தொடர்ந்து, நான் தனிமையில் வீடு திரும்பும் பொழுது தான் உன் சிறப்பை உணர்ந்தேன். நீயே என் வாழ்க்கை துணையாக இருந்தால் என் வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணத் தொடங்கினேன்.

கல்லூரி பேருந்து கட்டணம் செலுத்தியும் நீ என்னுடன் மாநகரப் பேருந்தில் வருவாய், அப்படி ஒரு நாள்உனக்கு ஜுரம் என்று நினைக்கிறேன், நீ என் தோள் மீது சாய்ந்து உறங்கி விட்டாய் - அந்த தருணம் வந்தது!! உலகின் பேரழிகியாக நீ எனக்கு தெரிந்தாய்!! அத்தருணம் என் மேல் நீ வைத்த நம்பிக்கை அழகாகத் தெரிந்தது, நம் நட்பு அழகாகத் தெரிந்தது, உன் மேல் காதல் கொண்டு, உன்னுடன் வாழ ஆசை கொண்டேன்

அடுத்த நாள், வழக்கம் போல் நான் இறுதி பெஞ்சில் அமர்ந்திருந்தேன், நீ உள்ளே நுழைந்தாய், சாம்பல் நிற சல்வார், மடிக்க பட்ட துப்பட்டா, சடை பின்னிய நீள கூந்தல், இதே போல் உன்னை முன் பல முறைக் கண்டதுண்டு, ஆனால் அன்றுதான் என்னுள் எதோ நிகழ்ந்தது, சொல்லத் தெரியவில்லை, என்னை சுண்டி இழுத்து விட்டது உன் அழகு, இந்த நொடியும் அந்த காட்சி என் மனத்தில் தோன்றி மறைகிறது.இருந்தாலும் உன்னுள் இருக்கும் எண்ணங்களை அறியாமல் இதை உன்னிடம் சொல்ல ஒரு தயக்கம், நீ என்னுடைய தோழியாக இருப்பதனாலோ என்னவோ என்னால் என் மனம் திறந்து உன்னிடம்  இந்த நேசத்தை பற்றி பேச முடியவில்லை, நம் நட்பில் விரிசல் வந்து விடுமோ என்ற பயம் மறுபுறம்.

வகுப்பில் உன் பின்னால் அமர்ந்து நான் பல நாள் ரசித்த உன் கூந்தலை, திடீரென்று ஒரு நாள் பாதியாக வெட்டி விட்டாய். நான் ரசித்ததை சொல்லி இருந்தால் ஒரு வேளை வெட்டியிருக்க மாட்டாயோ  என்று என் மனம் தவித்தது.இதே போல் என் காதலை சொல்லா விட்டால் என்ன நடக்குமோ என்ற பயம் வந்து விட்டது. 'ஒரு வேளை சொல்லி இருந்தால் அவள் சரி என்று சம்மதித்து இருப்பாளோ?'என்ற கேள்வியுடன் என் மொத்த வாழ்வையும் தொடர எனக்கு விருப்பம் இல்லாததால், இதோ  தைரியமாக என்  எழுத்தில் சொல்கிறேன்,

"நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன்

சினிமாவில் சொல்வது போல், 'நம் வாழ்வு சிறப்பாக இருக்கும்' என்று நான் பொய் சொல்ல மாட்டேன்,'என்னுடன் வா வாழ்வது எப்படி என்று காட்டுகிறேன்' என்று ஏத்தியும் கூற மாட்டேன். என்னை புரிந்தவள் நீ, உன்னை நன்கு புரிந்தவன் நான், பல சண்டைகள் இருப்பினும், நீ இல்லாமல்  பேருந்தில் கூட பயணம் செய்யமுடியாத எனக்குநீ இல்லாத வாழ்க்கை பயணத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உனக்கும் என் மேல் ஒரு பிரியம் உண்டு என்பது எனக்கு தெரியும், இல்லை என்று மறுக்க மாட்டாய் என்ற நம்பிக்கையுடன்...  
என்றும் அன்புடன் 
ரூபக்