Sunday, February 26, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்

பல நாட்களாக பிரபாகர், 'எங்காவது ஒரு நீண்ட பயணம் செல்ல வேண்டும்' என்று கேட்டுக்கொண்டிருக்க, ஆயுத பூஜை திங்கட் கிழமையில் அமைய, அந்த மூன்று நாட்கள் எங்காவது செல்வது என்று புதன் அன்று முடிவு செய்தோம். காரில் செல்வதால், மேலும் இருவர் வந்தால் செலவுச் சுமை சற்று குறையும் என்று நெருங்கிய நட்பு வட்டத்தில் ஆள் தேடினோம். பொறுப்பான குடும்பஸ்தர்கள் அழைப்பை மறுத்து விட, பிரபாகர் அவரது தம்பியும், எங்கள் அலுவலக நண்பரான ரெஜித்தும் வருவதாக சொன்னார். நன்கு பரிட்சயம் ஆகாதவர்களுடன் பயணம் செய்து ஏற்பட்ட சில கசப்பு அனுபவங்களை அவரிடம் சொல்லி சற்று தயக்கம் காட்டினேன். பிரபாகர்  எனக்கு அளித்த உறுதியில் தயக்கத்துடனே சம்மதித்தேன். 

பயணத்தின் மிக முக்கிய கேள்வி, எங்கு செல்வது? காவிரி பிரச்னை உச்சக்கட்டத்தில் இருக்க, கர்நாடகம் தமிழர் புக முடியாத அந்நிய பூமியாக இருந்த சமயம் அது. ஆந்திரா செல்ல இருவருக்குமே பெரிய நாட்டம் இல்லை.  நீங்கள் பதிவின் தலைப்பைக் கொண்டே இந்நேரம் இடத்தை யூகித்து இருப்பீர். ஆம், கேரளம் தான் நாங்கள் தேர்வு செய்த இலக்கு. சாலை மார்கமாக வெள்ளி மாலை சென்னையில் இருந்து தொடங்கி கேரளம் சென்று திங்கள் இரவு சென்னை திரும்பவேண்டும் என்பதை மட்டும் தான் தீர்மானித்தோம். அங்கு எங்கு செல்வது, எங்கு தங்குவது என்ற எந்த விதமான திட்டமும் வகுக்காமல் கார் போன போக்கில் முடிவு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். எந்த வித திட்டமும் வகுக்காமல் நான் சென்ற முதல் பயணம் இது என்பதனாலேயே இதை பதிவு செய்வதும் எனக்கு மிக அவசியமாக தோன்றியது.

எல்லாப் பயணங்களிலும் கணக்கு பார்த்து செலவு செய்யும் பொறுப்பு எனது என்பதால், நான் கண்ட மிகப் பெரும் செலவு குடி நீராக இருந்தது. முந்தைய ஒரு பயணத்தில் 25 லிட்டர்  குவளை தண்ணீர் சென்னையிலேயே வாங்கிச் சென்றதால் தண்ணீர் செலவு பெருமளவில் மிச்சமானது. இம்முறை சொந்தமாகவே ஒரு பத்து லிட்டர் மில்டன் குவளை ஒன்றை வாங்கிக் கொண்டேன். வெள்ளி மாலை அலுவலகத்தில் இருந்தே புறப்பட தீர்மானித்தோம். எந்த ஒரு பயணமானாலும் எவரேனும் கடைசி நிமிடத்தில் சுதப்பும் வழக்கம் இம்முறையும் நடந்தது. நால்வர் பயணம் மூவர் (நான், பிரபாகர் மற்றும் ரெஜித்)  பயணமாக மாறியது. வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணியளவில், புதிய பத்து லிட்டர் குவளையில் அலுவலக குளிர்ந்த நீரை நிரப்பிக் கொண்டு, பலவித கனிகள் மற்றும் நொறுக்குத் தீணிகளுடன், சிறுசேரியில் இருந்து கேரள தேசம் நோக்கி பிரபாகரின் பிகோ வில் எங்கள் பயணம் தொடங்கியது. 

இங்கு மூவருமே கார் ஒட்டத் தெரிந்தவர்கள் (நானும் டிரைவர் தான் :)) என்பதால் மாறிமாறி ஓட்டும் பொறுப்பை ஏற்று பயண அலுப்பை குறைக்க திட்டமிட்டுக்கொண்டு, GST சாலையை செங்கல்பட்டு சுங்கச் சாவடி தாண்டி பிடிக்க, திருப்போரூர் வழியே சென்று, நெடுஞ்சாலையை அடைந்த பின் எங்கள் காரின் ஓட்டம் ஒரே சீராக அமைந்தது. சில பல குடும்ப சிக்கல்கள் காரணமாக இங்கு வண்டி சென்ற வேகத்தின் அளவு பதிவு செய்யப்பட மாட்டாது. திருச்சி, திண்டுக்கல், தேனீ வழியாக கம்பம் சென்று, கம்பத்தில் இரவு தங்கி மறுநாள் காலை கேரளா எல்லையை கடப்பது எங்கள்  திட்டமாக இருந்தது. காரில் எறியதுமே பாட்டு போட்டுக்கொண்டு ,பாட்டுகளை மாற்றிக் கொண்டு போகும் வழக்கமான சாலை பயணமாக எங்களது பயணம் அமைய வில்லை. அலுவலக விஷயங்களில் பேசத் தொடங்கி அரசியல், சினிமா, விளையாட்டு, காதல் என பல கோணங்களில் எங்கள் உரையாடல் சுவாரசியமாக செல்ல, அந்த பாட்டுப் பெட்டியை சென்னை திரும்பும் வரை மூன்று நாட்களும் நாங்கள் பயன்படுத்தவே இல்லை என்பது எனக்கு இன்று நினைக்கும் பொழுது கூட  ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்ல கூகுள் அம்மணியின் துணையை நாடினோம். திருச்சியில் ஓட்டுநர் பொறுப்பு என்னிடம் மாற, அந்த அம்மணி காட்டிய குறுக்கு வழி, காமராஜர் ஆட்சியில் போடப் பட்டு அதன் பிறகு காணாமல் போன அந்த சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையை பிடிப்பதற்குள் பெரும்பாடானது. 'பெண்பிள்ளைப் பின் செல்லாதே' என்று பெரியவர்கள் சொல்லியது எங்களுக்கு அங்கே உரைத்திருந்தால், மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கி இருக்கமாட்டோம். திண்டுக்கல் புறவழிக் சாலையை அடையும் பொழுது மணி பத்து. வழியில் இருந்த திண்டுக்கல் தலப்பாகட்டியில் இரவு உணவை முடித்து, மீண்டும் பிரபாகர் ஓட்டுநர் பொறுப்பேற்க, தேனீ நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இரவு வேளை மற்றும் பரிட்சயம் ஆகாத சாலை என்பதால் கூகுள் அம்மணியின் துணையை மீண்டும் நாட, சாலை நேரே விசாலமாக இருக்க, அவள் எங்களை மாற்றுப் பாதையில் திசை திருப்பி, தலையை சுற்றி மீண்டும் தேனீ சாலையில் எங்களைச் சேர்த்தாள்.  நடுச்சாமம் நெருங்கிக்கொண்டிருக்க, அன்று இரவு தேனீயிலேயே ஒய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் காலை கம்பம் நோக்கி தொடரலாம் என்று முடிவு செய்துகொண்டிருக்க, எதிரில் ஒரு பேருந்து சற்று வேகம் குறைக்க, எங்கள் பிகோவும் அதன் பின் நிற்க, அந்த காவல் சோதனைச் சாவடியில் இருந்த காவலர் எங்கள் வண்டியை ஓரம் நிறுத்த சைகை செய்தார்.

எங்களிடம் முறுக்கு மட்டுமே இருக்க, பயமின்றி காரை நிறுத்தினோம். அந்த அதிகாரி ஆவணங்களை கேட்க, எங்கள் முதல் சோதனை தொடங்கியது. வழக்கமாக இருக்கும் RC போல் இல்லாமல் தன்னிடம் ஸ்மார்ட் கார்ட் இருப்பதாக என்னிடம் பிரபாகர் முன் சொல்லிய நியாபகம், ஆனால் நான் அதைப் பார்த்தது இல்லை. டேஷ் போர்ட், அட்சய பாத்திரம் போல், கார் வாங்கிய முதல் மாதத்தில் இருந்து பல ரசீதுகளை எடுக்க எடுக்க சுரந்துக் கொண்டே இருந்தது. இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து ரசீதுகளையும் அலசிக் கொண்டு அந்த RC கார்டைத் தேட அந்த காவலர் சற்று பொறுமை இழக்கத் தொடங்கினார். பிரபாகர் எப்பொழுதும் காவலரிடம் எதற்கும் மாற்றுவதில்லை, இதுநாள் வரை அவர் அரசியல் பிரமுகர்கள் போல் கறுப்புத் திரையுடன் தான் தன் பிகோவை ஒட்டிக்கொண்டிருக்கின்றார் என்பது பொறாமைக்குரியது. நேரம் கடக்க கடக்க ரசீதுகள் குறைந்த பாடில்லாததால், எனக்கு அந்த கார்ட் காரில் இருக்கும் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கி, காவலரை எப்படி சமாளிப்பது என்ற எண்ண அலைகள் ஒடத் தொடங்கிய பொழுது,   'வெற்றி வெற்றி' என்று ஒரு வழியாக அந்தக் கார்டை அவர் கண்டெடுக்க,  இருவரும் காரை விட்டு இறங்க, ரெஜித் காரில் இருந்த ஆரஞ்சு பழத் தோலை வெளியே எறிந்தபடி இறங்கினார். 

ஸ்மார்ட் கார்டுக்கு கேள்வி எழும் என்று நான் நினைத்தேன், ஆனால் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி கொண்டு 'வண்டில சரக்கு இருக்கு தன' என்று வினவினார் அந்த சோதனைச் சாவடியின் உயர் காவல் அதிகாரி. மூவரும் உடனே மறுத்தோம். 

'நீங்களா சொல்லிட்டா நல்லது, நாங்க எடுத்தா பிரெச்சனை. உண்மையா சொல்லுங்க' என்று சற்று அதிகாரத்துடன் வினவினார்.

'எங்க யாருக்கும் அந்த பழக்கமே இல்ல. நீங்க தாராளமா செக் பண்ணுங்க' என்றதும் ஒரு காவலர் கையில் டார்ச் உடன் காரை நோக்கி விரைந்தார். கதவை திறந்தவுடன் வந்த வாசனை அவர் மூளைக்கு தீணி போட, 'நல்லா வாசனை வருது, உண்மையா சொல்லிடுங்க, வண்டிய ஸ்டேஷன்கு கொண்டுபோன நீங்க தான் மாட்டுவீங்க'  என்று கடுகடுத்த முகத்துடன் கூறினார் அந்தக் காவலர். 

எங்கள் மடியில் கனமில்லை அதனால் பயமுமில்லை, சிரித்துக் கொண்டே ' அது ஆரஞ்சு பழம் வாசனை' என்றேன். 

அவர் அதை நம்பும் மனநிலையில் இல்லாததால் தன் சோதனையை தொடர்ந்தார். மூளை முடுக்குகள், சீட் அடி என எல்லா இடத்திலும் அலசியும் எதுவும் சிக்காத கோவத்தில், எங்கள் தண்ணீர் குவளையையும் திறந்து குடித்து பார்த்தார். மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த அவர், 'இந்த ஆளு இறங்கறப்பவே பாட்டிலை வெளியே போட்டார் சார்' என்று ரெஜித் மீது குற்றம் சாற்றி விட்டு, சாலையின் ஓரம் இருந்த குப்பைகளை டார்ச் அடித்து ஆராய்ந்தார். நாங்கள் உயர் அதிகாரியிடம் அப்படி ஒன்றும் நடக்க வில்லை என்று விளக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் அந்த போலீஸ்க்கார்  வேறு எதாவது பாட்டிலை கொண்டுவந்து எங்கள் மீது திணிப்பாரோ என்ற பயமும் உறுத்திக்கொண்டே இருந்தது.

சாலையில் எதுவும் சிக்காமல் மீண்டும் கார் டிக்கியை நோக்கி வந்து, எங்கள் துணிப்பையினுள் கையை விட்டு துராவிய அவருக்கு எங்கள் உள்ளாடைகள் தான் சிக்கியது. 

'வண்டியை ஸ்டேஷன் கொண்டு போயிடலாம் சார்' என்று கோவமாக சொல்லிவிட்டு அடுத்த காரை மடக்கச் சென்றார்.   

இப்பொழுது அந்த உயர் அதிகாரி எங்களை விசாரிக்கக் தொடங்கினார். 'கார் யாருடையது ?' , 'எங்க வேலை பார்க்கறீங்க ?' ' எங்க இருந்து வரீங்க' 'எங்க போறீங்க', இப்படியே 'இன்சூரன்ஸ், RC , லைசென்ஸ்' என்று அவர் கேட்டது எல்லாம் நாங்கள் சரியாக கொடுக்க மண்டைடை சற்று சொறிந்துவிட்டு, அவர் 'பொல்லுஷன் ' என்றவுடன் நாங்கள் 'ழே' என முழித்ததைக் கண்டு அவர் முகம் பிரகாசமானது. சாமி படத்தில் விவேக் நடித்த நகைச்சுவை காட்சி தான் நினைவிற்கு வந்தது.     

'இதற்குத் தானே ஆசை பட்டிங்க போலீஸ்க்கார் ' என்று என்னுள் எண்ணிப் புன்னைகைத்தேன்.

'வெய்யில் பணில வேல பார்க்குறோம் நைட் டியூட்டி வேற, சுற்றுலா போறீங்க , ஏதாவது கொடுத்துட்டு போங்க' என்று இளகிய குரலில், 'டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் சார், ஏதாச்சு பார்த்து கொடுங்க' என்ற உள்ளதை அள்ளித்தா படத்தின் வசனம் தோனியில் கேட்டார்.     

உலகில் நான் கண்ட பல விசித்திர மனிதர்களுள் ஒருவர் தான் ரெஜித். இவரிடம் ஒரு நிமிடத்திற்கு மேல் யார் பேசினாலும் , அவர்களை தன் புன்னகை கலந்த சர்க்கரை பேச்சில் வசீகரித்து, நட்பு வலையில் சிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர். எங்கள் பயணத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக, ஒரு மலையாளம் அறிந்த லோக்கல் கையாக அவர் செய்த செயல்கள் அடுத்த பதிவுகளில் ஏறாளம்.

எங்கள் மூவரில் மூத்தவராக அவர் விளங்க, அந்த உயர் அதிகாரியிடம் கை கொடுப்பது போல் சில காந்தி நோட்டுகளை கை மாற்றினார். ஆவணங்களை திரும்ப பெற்றுக் கொண்டு காரை நோக்கி வந்த பொழுது, தாண்ணீர் குவளையின் குழாய் சரியாக மூடாததால் தண்ணீர் பின் சீட் முழுவதும் சிந்தி இருந்தது. 

எங்கள் பயணம் சிறப்பாக அமைய காவல் தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்தி விட்டு, தேனீயை நோக்கி நாங்கள் தொடரும் பொழுது மணி 12:45.  

          பயணம் தொடரும்!   

******************************************************************************************************************
அடுத்த தொடர் பகுதியை படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா

******************************************************************************************************************
    

4 comments:

  1. "இவர்களிடம்" மாட்டி சேதாரமில்லாமல் மீள்வது கடினம்தான்! சுவாரஸ்யம். தொடர்கிறேன். கதை என்னதான் ஆச்சு ரூபக்?

    ReplyDelete
  2. அருமையான காட்சி அமைப்பு.. சிறப்பு..
    ஆனா பாகுபலி படம் (1st part) மாதிரி பாதியியிலே முடித்து போல இருக்குறது..Waiting for remaining story..

    ReplyDelete
  3. அவர்கள் தமிழ்நாடு போலீசா? கேரளா போலீசா? கேரளா போலீஸ் இவ்வளவு கீழ்த்தரமா இறங்கமாட்டார்கள்...

    ReplyDelete
  4. வெளியிட்ட அன்றே படித்து விட்டேன் என்றாலும் இப்போது தான் பின்னூட்டம்!

    ஸ்வாரஸ்யமான துவக்கம். அடுத்த பகுதிகளும் வெளியிட்டு இருப்பது தெரிகிறது. இதோ படிக்கிறேன்.

    ReplyDelete