Tuesday, April 30, 2013

களவு - பகுதி மூன்று*******************************************முன் குறிப்பு *********************************************
இப்பகுதியை படிக்கத் தொடங்கும் முன், முதல் இரண்டு பகுதிகளை படித்து விட்டு பின் தொடரவும். நன்றி. 
*********************************************************************************************************

களவு - பகுதி மூன்று 

அன்று - 1983 

இந்த ஆண்டு நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் தந்தாலும், ஆற்காடு கிராம விவசாயிகள் அனைவரும் சோகத்தில் தான் இருந்தனர், காரணம் வீரபாபு. ஒருத்தனுக்கா ஊரே பயப்படுகிறது என்று நினைக்காதிங்க, இருபது பேர் கொண்ட வழிப்பறி கூட்டத்தின் தலைவன் தான் இந்த வீரபாபு. ஊரை விட்டு வெளியில் இருந்த சிவன் மலைக் காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்தான். ஆற்காடு கிராமம் மூன்று புறமும் ஏரி சூழ்ந்து உள்ளமையால், வெளியே வர இந்த காட்டு வழி மட்டும் தான் உள்ளது.

இவன் அட்டகாசம் தாங்க முடியாமல், ஊர் மக்கள் இவனுடன் ஒரு சமரசம் செய்து கொண்டனர், எந்த பொருள் விற்க சென்றாலும் அதில் பாதி அவனுக்கு என்று. ஊருக்குள் இவன் ஒரு உளவாளி வைத்திருந்தது தெரியாமல், சென்ற முறை இவனது பங்கை ஏமாற்ற முயன்ற போது அவன் தகவல் அறிந்து  ஊரையே சூரையாடி விட்டான். 

இவனை எப்படியாவது அடக்க வேண்டும் என்று ஊர் பெரியவர்கள் இருவரும் 'முனீஸ்வரன் கோவில்' பூசாரியும் ஏரிக்கரையில் பௌர்ணமி நிலவொளியில்  ஒரு  ரகசிய கூட்டம் போட்டனர். ஊர் தலைவரை 'பெரியவர்' என்றும் அவர் தம்பியை 'சின்னவர்' என்றே அனைவரும் அழைப்பர், நம் கதைக்கு அவர்கள் பெயர் முக்கியம் இல்லை என்பதால் நாமும் அப்படியே வைத்துக்கொள்ளலாம். பெரியவர் தலை முழுவதும் நரைத்து, சோப்பு நுரை போல் இருந்தது, வயது சுமார் எழுபது இருக்கும். சின்னவரை முதுமை நெருங்கிக்கொண்டு இருப்பதை, உப்பு-மிளகு கலந்த நிறத்தில் இருந்த அவர் தலை முடி காட்டிக்கொடுத்தது.        

சின்னவர்  சோகத்துடன்,  'என்றும் வற்றாத ஏரி, ஏரிப்பாய்ச்சலான நிலம், உற்சாகமா உழைக்கும் மக்கள், எல்லாம் இருந்தும் நாம் பஞ்சத்தில் தான் இருக்கிறோம்.' என்று வருந்தினார்.பாதி விளைச்சலை வீரபாபுவுக்கு கொடுத்து விடுவதால்,  மீதியில் தம்  தினசரி உப்பு-புளி செலவுக்கே சரியாக போகின்றது என்று பெரியவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது,  பூசாரி வருவதைக்கண்டார். முகத்தில் முடி தவிர தெரிந்தது கண்கள் மட்டும் தான், நெஞ்சு வரை வளர்ந்த தாடி, விரிந்த கூந்தல், வெள்ளை வேஷ்டி, நம்மைப் போல் அவரை முன் பின்  காணதவர், இந்த பௌர்ணமி ஒளியில் அவரை கண்டால் ஆவி என்றே எண்ணத்தோன்றும் படியான தோற்றம்.          

பூசாரி 'பெரியவா, சின்னவா ரெண்டு பேரும் இந்த வேளையில வரச் சொல்ல என்ன அவசரம்'என்று கேட்க,சின்னவர் மூன்று நாட்களுக்கு முன்பு சதுரங்கபட்டினம் சென்றதையும், அங்கு இருந்த கம்பத்துக்காரர் உதவியை நாடியதையும், அவர் சொன்ன திட்டத்தையும் விளக்கமா கூறினார். வீரபாபு பற்றி அவர் அறிந்தும் இங்கு உதவ வருவது பூசாரிக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. சின்னவர் ஆவேசத்துடன்,  'இம்முறை நாம் அவனுக்கு எதுவும் கொடுக்க கூடாது' என்று கூறி தன் தோளில் இருந்த துண்டை உதறினார். ' ஈஸ்வரா! நீதான் காப்பாத்தனும்' என்று கோவில் இருந்த திசையை நோக்கி , தன் கைகளை ஏந்தி, வணங்கினார். பெரியவர் குறுநகையுடன்  'அவன் பேசியே வீரபாபுவ விரட்டிடுவான்  பூசாரி, கவலைப்படாதிங்க. ' என்று கூறி முடிக்கும் போது மாட்டு வண்டி வரும் சத்தம் கேட்டது.   

ஒற்றை மாடு பூட்டிய சக்கர வண்டியில் வந்து இறங்கினார்  கம்பத்துக்காரர், கம்பீரமாக. 'என்ன ஆற்காட்டன், இந்த கெழம் இன்னும் சாகலையா? ' என்று மூத்த பெரியவரை பார்த்து நகைத்தார். பெரியவர்  'இது வைரம் பாய்ஞ்ச கட்ட, உன் கட்ட எரியறத பார்க்காம இந்த கட்ட காடு போகாது.'  என்று முறைத்தார். சின்னவர் இடையில் புகுந்து  'உங்க பங்காளி சண்டய கொஞ்சம் நிறுத்துங்க. முதல்ல  வீரபாபு .' என்று தன் கையில் இருந்த பையை  கம்பத்துக்காரரிடம் கொடுத்தார். 

மறுநாள் காலை முனீஸ்வரன் கோவிலில் 'உங்க கஷ்டம் எல்லாம் முடியப்போவுது.இந்த அறுவடை விளைச்சல் எல்லாம் முழுசா உங்களுக்குத்தான், எவன் வந்தாலும் நான் பார்த்துக்கறேன்.' என்று பூசாரி முனி போன்ற ஆக்ரோஷத்துடன் தன் கூந்தலை விரித்து ஆடினார். ஊர் கூடி ஒரு மனதாக மொத்த விளைச்சலையும் விற்க முடிவு செய்தனர்.

அன்று இரவு ஒருத்தன் மட்டும் ஊர் எல்லையைத் தாண்டி மலைப்பகுதியில் நுழைந்தான், தன் பின் ஒருவன் தொடர்வதை அறியாமல். மேலே ஏறி, ஒரு அருவியை கடந்து சென்ற போது தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது, பின் தொடர்ந்தவன் சற்று இடைவெளி விட்டு ஒரு புதரில் ஒழிந்து கொண்டு நடப்பதை கவனித்தான். 

ஆறு அடி உயரம், எருமை போன்ற நிறம், யானை போன்ற உடம்பு, 'வாடா மானங்கெட்டவனே' என்றான் கட்டை குரலில்.

'அண்ணே நீங்களே இப்படி சொல்லலாமா? ' என்று வீரபாபு அருகில் சென்று  பம்மினான் இவன். 

ஊர் மக்கள் போட்ட ரகசியத் திட்டத்தையும், வெளி ஊரில் இருந்து ஆள் வந்திருப்பதையும் அவனிடம் சொல்ல,  'எந்த ஊரா இருந்தா என்ன. இந்த வழியாத்தன வெளிய போகணும். ஹா ஹா ஹா ', P.S. வீரப்பா போன்ற அவன் சிரிப்பு மலை எங்கும் எதிரொலிக்க பின் தொடர்ந்து வந்த எட்டி ஊரை நோக்கி கீழே இறங்கினான். 

இன்று - 2013 

கம்பதுக்காரர் மாமல்லபுறத்தில் இறங்கி, தன் மனைவியுடன் சாலையைக் கடந்து சென்னை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி, வீடு வந்து அடையும் போது, பவன் சிங் அவருக்காக காத்திருந்தார்.

கம்பதுக்காரர் தன் தோளில் மாட்டியிருந்த பையை கீழே வைக்கும் போது, அவர் சட்டை சற்று விலக, அவர் இடது மார்பில் இருந்த மா இலை போன்ற தழும்பு, வெளியே தெரிந்தது. அதை கண்டு பவன் சிங்  ஆச்சரியத்துடன் வினவ  'அது வீரபாபு கொடுத்த பரிசு' என்று பெருமிதத்துடன் கூறினார்.   

அவர் பேரன் வேலுவைக் கடத்தியது, அவர்  மகன் தன் காரை களவு செய்ய  ஏற்பாடு செய்த 'என்ஜின்' மோகன் என்றும்,  கார் சிக்கவே அந்தக் கடுப்பில் அவர்  மகனை பழிவாங்க இதை செய்துள்ளதாகவும், பவன் சிங் கூறிய அந்த நொடி கம்பதுக்காரர் தன மகனை பார்த்த பார்வை சொல்லியது ஒரே ஒரு அர்த்தம் தான், அவர் மகன் பயந்து உள்ளே சென்றார்.  

கே.கே. உள்ளே நுழைந்தவுடன்  'முதல் கால் பூந்தமல்லியில் இருந்து, இரண்டாவது கால் புழலில் இருந்து, மூன்று மணிநேர இடைவெளியில், இரண்டுமே காயின் போன்ல இருந்து.' என்று தகவல்களை கொட்டினார். தொலைபேசி அடித்தது, அதை ஒலிபெருக்கியில் வைத்து ஆன் செய்தார் கே.கே.    'என்ஜின்' மோகன்  'இருபத்து ஐம்பது லட்சம் நாள கால பத்து மணிக்கு வரணும், எங்க எப்பன்னு காலைல சொல்றேன்.நைனா அதுகாட்டியும் போலீஸ் ஆண்ட போனா உன் புள்ள ஒடம்பு கூட உனக்கு கிடிக்காது' என்றான். 

'என் பையன் தான். எனக்கு முக்கியம். நான் காசு கொடுத்திடுறேன். அவன ஒன்னும் செய்யாதே'என்று   கம்பதுக்காரரின் மகன் சொல்லி முடிப்பதற்குள் தொலைபேசி அமைதியானது.  சோபாவில் அமர்ந்தவர்கள் அசையவில்லை. 

திடீரென்று ஒரு வாலிபன் மூச்சு இறைக்க வீட்டிற்க்குள் ஓடி வந்தான். 

'அ.....ங்...கிள் ........அங்கி....ள். வே...லு....... என்...ன காண்.....டக்ட் ..............பண்....றா......ன்.' அவன் கம்பதுக்காரர் பேரன் வேலுவின் உயிர் தோழன். அவனுக்கு நீர் கொடுத்து, உட்கார வைத்து, அவன் நிதானம் ஆன உடன் மீண்டும் தொடர்ந்தான். 

 'எனக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியல தாத்தா. ஆனா நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு GPS  Locator Watch செய்துகிட்டு இருக்கோம்,  அவன் அந்த வாட்ச கட்டிட்டு இருக்கான், அதுல கொஞ்சம் பிரச்சன இருந்துச்சு, அவன் அத எப்படியோ சரி செய்ஞ்சி இருக்கான், நான் ட்ராக்கர் ஆன் செய்தப்ப அதுல அவனோட transmitter சிக்னல் காண்பிச்சுது.' 

பவன் சிங் வேகமாக, 'அப்ப அது அவன் எங்க இருக்கான்னு சொல்லி இருக்கும் இல்ல?' என்று கேட்க அவன் அந்த கருவி முழுமை அடைய map உடன் அதை  இணைக்க வேண்டிய அவசியத்தை சொன்னான். கே.கே. காவல் துரையின் உதவியுடன் அந்த கருவியை இணைக்க முயன்றார்.    

க.கா: 'தம்பி இது என்னனு எனக்கு சுத்தமா புரியல. கொஞ்சம் தெளிவா சொல்றியா?'

வே.ந : 'சொல்றேன் தாத்தா. வளர்ந்த நாடுகள்ல, அவங்க குழந்தைங்கள கண்காணிக்க பயன் படுத்தறதுதான் இந்த GPS Locator Watch. உங்க வாட்ச்ல இத பொறுத்திட்டா, இந்த உலகத்துல நீங்க எந்த மூலைல இருந்தாலும்  கண்டுபிடிக்க முடியும். வெளி நாடுகள்ல இத வீட்டு செல்ல பிராணிகள கண்காணிக்க கூட யூஸ் பண்றாங்க. நம்ம நாட்டுல இப்போதைக்கு கார்ல மட்டும் தான் பிரபலமா இருக்கு, காரணம் இதோட விலை. இந்திய ரூபா படி ஒரு GPS Locator Watch எட்டு ஆயிரம் ரூபாயில் இருந்து இருக்கு. எல்லா மக்களுக்கும் கிடைக்கற மாதிரியும், ஒரு பொத்தனை அழுத்தினா போலீசுக்கு  தகவல் போற மாதிரியும் இத மலிவு விலைல நானும் வேலுவும் செய்துகொண்டு இருந்தோம்.இப்ப அதுவே அவனுக்கு உதவுது.' என்று முடித்தான்.  


க.கா: 'சபாஷ்!..குழந்தைங்கள கடத்தரவங்களுக்கு இது ஒரு சவாலா இருக்கும்.  விஞ்ஞானம் என்ன பல சமயம் வியப்புல தள்ளிடுது.'

கே.கே. மூன்று மணி நேரம் முயன்று, ராஜேந்திரனின் உதவியுடன் இறுதியாக அதை வேலை செய்ய வைத்து, வேலுவை அடைத்து இருக்கும் இடம் புழல் அருகில் இருக்கும் ஒரு கிடங்கு என்று கண்டறிந்தார். பவன் சிங் அந்த வட்டார காவல் துறைக்கு தகவல் சொல்லி அந்த இடத்தை கண்காணிக்க சொன்னார். கம்பதுக்காரர், பவன் சிங், கே.கே. மூவரும் கே.கே.வின் பிகோவில் சென்னை புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.  

பவன் சிங்  தன் நெற்றி வியர்வையை தொடைத்துக்கொண்டே 'என்னயா ஏ.சி. எபக்டே இல்ல.'  என்று கேட்டார். கே.கே. 'Gas பில் பண்ணனும் சார், மாச கடைசி' என்று அசடு வழிய 'இப்போதைக்கு சன்னல இறக்கி விட்டுடுங்க.' என்றார்.கம்பதுக்காரர் கண்ணாடியை இறக்க முயன்ற போது,அந்த குமிழ்வடிவக் கைப்பிடி அவர் கையுடன் வந்தது.

களவு தொடரும்.....

களவு - பகுதி நான்கு

Friday, April 26, 2013

தொடாமலே தொண்ணூறு - சிறுகதை

'என்னடி ராணி, இது உங்க வீடா? !!' என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் என் உயிர் தோழி தேன்மொழி, வழக்கமாக வாசலில் கலைந்து கிடக்கும் செருப்புகள் இல்லாததால்.

'இதுக்கே ஷாக் ஆனா எப்படி? .உள்ள வந்து பாரு கலை அலங்காரம் எப்படி நடக்குதுன்னு' என்றேன்.

மூலையில் பல நாள் இருந்த ஒட்டனை, சோபாவுக்கு அடியில் இருந்த குப்பைகள், மின் விசிறியில் இருந்த அழுக்கு, இவை எல்லாம் இன்று காணவில்லை.

எங்களை பார்த்தவுடன் என் அம்மா 'வாம்மா தேனு. எப்படி இருக்கற?. பாத்து ரொம்ப நாள் ஆச்சு.  பையன் நல்லா இருக்கானா ?'

'நடக்க ஆரம்பிச்சுட்டான் ஆன்டி, அவன் பின்னாடி ஓடவே நேரம் சரியா இருக்கு. உங்க ஒடம்பு எப்படி இருக்கு ?'

 'இவ கவலை தான் எங்களுக்கு பெருசா இருக்கு. இருபத்து ஒன்பது ஆயிடுச்சு, இன்னும் ஒரு வழி பொறக்கல. நீ வந்த ராசி இந்த வரன் அமையுதான்னு பாப்போம்.சீக்கரம் போய் ரெடி ஆகுங்க' என்று கூறி விட்டு துவைத்த சன்னல் திரைகளை மாட்டச் சென்றாள்.

'இது எல்லாம் எனக்கு புதுசு இல்ல, வரப்போறது நம்பர் ட்வென்டி செவென். நீ டீ.வி.  பார்த்துட்டு இரு, நான் குளிச்சிட்டு வந்துடறேன்'                   

பள்ளியில் ஏழாம் வகுப்பில் பருவம் அடைந்த பதினாறாம் நாள், என்னுடன் பயின்ற 'ஒல்லி' தினேஷ் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த காதல் மடல்களின் எண்ணிக்கை, இன்று பேருந்தில் ஒருவன் கொடுத்ததை சேர்த்து, இருநூற்று முப்பத்து ஏழு.  பள்ளியிலே நான் மிகப்  பிரபலம், என் வீட்டு முன்பு காற்றுப் போகாத சக்கரமே கிடையாது. பாலியல்   கொடுமைகள் கண்டு நான் என்றுமே பயந்தது இல்லை, எப்பொழுதும் நான்கு பேர் என்னை பஸ் ஸ்டாபில் இருந்து வீடு வரை, பாதுகாப்பாக பின் தொடர்ந்தே வருவர்.

கல்லூரியில், பருவ மாற்றங்கள் இறுதி நிலையை அடைய, என் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. என் வகுப்பு தோழி தான் இந்த தேன்மொழி, இவளுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே திருமணம் முடிந்தது, இன்று வரை அவள் தன் திருமண வாழ்க்கை பற்றி என்னிடம் பேசியதே இல்லை, என் மனம் புண்படக் கூடாது என்று.

என் சேலை மடிப்புகளை சரி செய்து கொண்டு, தேன் என்னிடம் 'உனக்கு அந்த பிரசன்னா நியாபகம் இருக்கா?' என்றாள்.

'அவன எப்படி மறக்க முடியும், நமக்கு சண்ட வர காரணமே அவன் தான'

'கொரங்குக்கு பிறந்தவன். என் பின்னாடி சுத்தறான்னு பார்த்தா, உன் கிட்ட லெட்டெர் கொடுக்க என்ன யூஸ் பண்ணிட்டான்.'

'காலேஜ்ல எனக்காக நம்ம டிபார்ட்மெண்ட் பசங்களும் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்  பசங்களும் சண்ட போட்டது எல்லாம் நினைச்சா இப்பவும் சிரிப்பு தான் வருது.'

'அத சாக்கா வச்சி  அந்த பிரின்சிபால் உன் கிட்ட வழிஞ்சத நினைச்சா எனக்கு எரிச்சல் தான் வருது.'

'வழியாத ஆம்பளை எங்க இருக்கான். என் பின்னாடி அலைஞ்ச  சிலர நானும் ரகசியமா சைட் அடிச்சேன், பேசாம அவங்கள திரும்பி பாத்திருந்தா இன்நேரம் எனக்கு கல்யாணம் முடிஞ்சி  மூனு புள்ள பொறந்து இருக்கும்.'

'அட. தள்ளிப் போறதும் ஒரு நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ.'

'என் இருபத்து ஐந்தாவது வயசுல ஆரம்பிச்சிது இந்த காட்சி பொருள் அலங்காரம் எல்லாம்.  முதல் முற என்ன பெண் பார்க்க வந்தப்போ நானும் பல வேலைகளை செய்ஞ்சன், நீயும் தனடி கூட இருந்த.  மாப்பிள்ளை வரல, அவர் பெற்றோர் மட்டும் வந்து எங்க வீட்டு square feet கணக்கை பாத்துட்டு போனாங்க. உனக்கு கல்யாணம் ஆகி, நீ இந்த ஊர விட்டு போயிட்ட.  அடுத்து அடுத்து வந்தவங்க எல்லாருமே கேட்டது நகை கணக்கு, சொத்து மதிப்பு, குடிக்க கூல் டிரிங்க்ஸ். அப்படி குறைவாக நகை கேட்பவங்க வந்தால், மாப்பிள்ள என்பவன் என் சித்தப்பா போல இல்லனா என் பெரியப்பா போல இருந்தான் .'

'ஏன்டி இப்ப சோகம், ப்ரீயா விடு.'

'நான் ஒன்னும் பேரழகனை எதிர் பாக்கலையே, பொருத்தமான உயரம், மாநிறம்,  முடி இருக்கற தல,  தொப்பை இல்லாத உடம்பு, இது போதும் எனக்கு.
இந்த சந்தையில நான் ஏன் வில போகல, என் அழகு குறைஞ்சி போச்சா?'

தேன் என் தலை முடியில் சிக்கு எடுத்து கொண்டிருக்க,  என் அத்தை உள்ளே வந்து 'எவ்வளோ அழகு! என் கண்ணே பட்டுடும் போல, இன்னைக்கு அந்த மாப்பிள்ள உன் அழகுல மயங்கி, பொண்ண மட்டும் கொடுத்தா போதும்னு  விழப்போறான் பாரு' என்று தன் பாணியில் சிரித்து விட்டு, எஸ்.வி.சேகர் குழு நாடக நடிகர்கள் போல், இருபத்து ஏழாவது முறையும் வசனம் மாறாமல் அதே பாவனையுடன் சொல்லிச் சென்றாள். 

பையன் நான் எதிர் பார்த்த படி இருக்கவே  எனக்கு உடனே  பிடித்துவிட்டது . தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றான்.

'என்னடி! பையன் என்ன சொல்றான்?'

'அவன் ஸ்கூல், காலேஜ்  அப்பறம் இப்போ பெங்களுருல வேலை பாக்கர  கதைகளைச் சொன்னான்.  அவன் கிட்ட ஒரு  கள்ளம் கபடம் இல்லாத குழந்தத்தனமான சிரிப்பு இருக்கு, அதத்தான் ரசிச்சேன்,  அவன் பேசனது  எதுவும் என் காதுல கேட்கல.'

'இப்பவே லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சா. உனக்கு ஒரு ராஜா சிக்கிட்டான்.  நடத்து நடத்து. '

என் அத்தை 'என்ன சொல்லியம்மா அவன மயக்கன?  கல்யாண செலவையும் அவங்களே பாத்துக்கறேன்னு சொல்லிட்டாங்க. உங்க  அம்மாவும் அப்பாவும் வானத்துல பறக்கராங்க.'

வழக்கமான மோதல்கள், நிறை குறைகளுடன் எங்கள் கல்யாணம் இனிதே முடிந்தது. மறுவீடு- மூன்று நாட்கள் என் வீட்டில் தங்க வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். சாந்தி முகூர்த்தத்திற்கு 'வரும் செவ்வாய் தான் நல்ல நாள்'  என்று ஐயர் தேதி குறித்தார்.  

அவர் வீட்டில் இருந்த  படுக்கை அறை அன்று பூக்களால் அலங்கரிக்க பட்டது, அவர் அம்மா (என் மாமியார்) என்னை அலங்கரித்து உள்ளே அனுப்பினார். உள்ளே நுழையும் போது அடி வயற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் ஒரு உணர்வு, விவரம் தெரிந்த வயதில் இருந்து பல நாள் கற்பனையில் ஒத்திகை பார்த்த இரவு, இதோ என் முன்னால். கமல்ஹாசன் படங்களில் பார்த்த விசயங்களை செய்து பார்க்கும் தருணமல்லவா. என் அத்தை, சித்தி, அக்கா முதலியோர் தம் முதலிரவு அனுபவங்களை என் அம்மாவிடம் ரகசியமாக கூறியபோது ஒட்டுகேட்டது எல்லாம்  நினைவில் வர,  எனக்குள் ஒரு லேசான பயமும் கலந்து இருந்தது.

அவர் படுக்கை மேல் அமர்ந்து தன் மடிக்கணினியை  தட்டிக் கொண்டிருந்தார். நான் வெட்க பட்டு அவர் அருகில் நின்றேன், என்னை பக்கத்தில் அமர வைத்து,
'எனக்கு இந்த சம்பரதாயத்துல எல்லாம் பெரிசா இஷ்டம் இல்ல. மொதல்ல நம்ம நல்லா பேசி பழகுவோம். அதுக்கு அப்பறம் இது எல்லாம் பாத்துக்கலாம். நீயும் இதே தன நினைச்ச, எனக்குத் தெரியும்' என்று அவன் ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க, என்  பட்டாம் பூச்சி பறந்தது.

தூக்கத்தில் என்  சேலை கலைந்து இருக்க, அதை அவன் சட்டை பண்ணாமல் தன் மடிக்கணினியையே பார்த்துக்கொண்டிருக்க,  என்னை அறியாமல் மீண்டும் உறங்கினேன்.

காலை என்னைத் தட்டி எழுப்பி, பழைய தமிழ் சினிமாவில் வருவது போல என் பொட்டை அழித்து, கூந்தலை விரித்து, தலையில் இருந்த பூவை சிதைத்து, என் சீலையை சற்று கலைத்து 'என் அம்மா கேட்டா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதுன்னு  சொல்லிடு. அவங்களுக்கு இது எல்லாம் புரியாது.' என்றான்.

நான், அவன் கையால் கலைத்த சேலையை சரி செய்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்தால், அவன் அம்மா எனக்காக காத்துக்கொண்டிருந்தது போல் ஒரு புன்னகை செய்தார். நான் புன்முறுவலோடு லேசாக வெட்கப்பட்டு (நடித்து), குளியலறைக்குள் நுழைந்தேன்.   இந்த நாடகம் பத்து நாட்கள் தொடர்ந்தது, அதன் பின் அவர் அம்மா நான் வெளியே வர காத்திருப்பதில்லை.

தேனுடன் குறுந்தகவல் பரிமாற்றம்:

'என்னடி ராணி... ராஜாவ முந்தானைல முடிஞ்சிட்டயா...'

'கடுப்ப கெளப்பாத தேனு. முந்தான விலகனாலும் அவனுக்கு ஒன்னும் தோணல. எதோ பழகனும்னு சொன்னான், மூனு மாசமா பழகிட்டே தான் இருக்கான்.'

'என்னடி சொல்ற... அவன் உன்ன சந்தோசமா வச்சிக்கலையா?...'

'பகல் முழுவதும் எங்கயாவது வெளிய கூட்டிட்டு போறான், நிறைய துணிகள் வாங்கித் தரான், couple சீட் புக் பண்றான், கென்டில் லைட் டின்னெர்னு அசத்துறான்,ஆனா ராத்திரி வந்தா விளையாடாமலே என்ன அவுட் ஆக்கிடுறான்.'

'எதுவுமே நடக்கலையா?...'

'உம்... இப்ப வரும் தமிழ் படங்கள்ல  கூட முத்த காட்சிகள கட் செய்றதில்ல, ஆனா அவன் விரல் கூட என்ன இன்னும் தொடல.'

'எப்பயும் அத பத்தியே நினைக்காத... நல்லா தன வச்சிருக்கான்... கொஞ்ச நாள் உங்க வீட்டுக்கு போயிட்டு வா.... கொஞ்சம் அலைய விட்டா... அவனா உன்னத் தேடி வருவான்...'

'இடுப்புல ஒன்னு, வயத்துல ஒன்னு வச்சிக்கொண்டு நீ இப்படி தான் பேசுவ.  ஊருல யாருக்கும் இல்லாத ஆசையா எனக்கு, ஒரு சதாரண கணவன்-மனைவி தாம்பத்தியம் கூட இல்லாம என்ன திருமண வழக்கை.'

'இப்படி எல்லாம் பெசிக்கொண்டு இருக்காத... அவன் நீ அலையரன்னு நினைக்க போறான்...'

'இது எல்லாருக்கும் இருக்கற ஆசை தன. பாவம்னு தெரிந்துதன உன் கடவுள் ஆணையும் பெண்ணையும் படைச்சான்? '

தேன் சொல்லியதைப் போல் ஒரு வாரம் என் அம்மா வீடு சென்றேன்.  என்ன எதாவது காதல் தோல்வி, இல்ல தவறான உடல் உறவு எதாச்சு இருக்கும். எதுவாக இருந்தால் என்ன, இந்த காலத்தில் பெண்களே திருமணத்திற்கு முன், தப்பு செய்யும் போது, பெங்களுருவில் ஆறு ஆண்டுகளாக  வேலை செய்து கொண்டிருக்கும் இவன் எந்த லீலையும் செய்யாமல் இருப்பான் என்று நம்புவது முட்டாள்தனம்.  இன்று அவனிடம் எல்லாவற்றையும் தெளிவாக பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டே என்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டே இருந்தன,  டி.வி. தன் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தது, அதை அணைத்தேன்,  படுக்கை அறையில் இருந்து ஒருவிதமான சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க கதவைத் திறந்தேன், நான் கண்டதை என்னாள் நம்ப முடிய வில்லை. அந்த காட்சியை  கண்ட போது, உங்கள் கை கால்களைக் கட்டி விட்டு, இந்த முருங்கை மரத்தில் இருக்குமே கம்பளிப் பூச்சி, அதை  உடல் முழுவதும் ஏற விட்டால் தோன்றுமே ஒரு உணர்வு,  அது போன்ற ஒரு அருவருப்பான உணர்வு தான் என்னுள் தோன்றியது.

என் கணவன் 'டோன்ட் ஸ்டாப்.' என்று முழு போதையில் சொல்ல,

'ஷிட் மென். யுவர் வைப்', அவன் நண்பன் சட் என்று போர்வையை போத்திக் கொண்டான்.

பலர் பேச கேட்டதுண்டு, சினிமாவில் பார்த்ததும் உண்டு, ஆனால் எனக்கு வந்த போதுதான் அதன் கொடுமை புரிகிறது. சோபாவில் அமர்ந்தேன், என் கண்ணில் நீர் தளும்பியது,எல்லாமே இப்பொழுதுதான் எனக்கு புரியத்தொடங்கியது, நங்கள் உடல் உறவு கொள்ள அவன் அம்மா காத்திருந்தது, இவன் விரல் கூட என் மேல் படாதது. இருவரும் ஆடைகளை அணிந்துகொண்டு என் முன் வந்து நின்றனர்.

அவன் என்னை பார்த்து 'ஐ எம் சாரி.' என்றான்.

'ஒரு மயி....... தேவ இல்ல. எப்படி உன்னால என்ன கல்யாணம் பண்ண முடிஞ்சுது?'

'வார்த்தையை அடக்கு டீ.'

'உனக்கு எல்லாம் என்னடா மரியாதை. <*@*#^%^#$% ...&^#$%$&% .>'

'அடிங் ...........என்னடி விட்டா ரொம்ப பேசற. I am and will be GAY. உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ .'

அதை கேட்டவுடன் அவனைக் கொல்லும் அளவிற்கு ஆத்திரம் என் தலைக்கு ஏறியது, அவன் கழுத்தை நெரிக்க நெருங்கினேன், முடியவில்லை- மூன்று மாதக் கணவன் அல்லவா, ஆத்திரம் உடல் வழியே என் காலுக்கு இறங்க, என் வலது கால் அவன் ஆண் உறுப்பை பதம் பார்க்க, அவன் 'அம்மா' என்று கீழே உட்கார,அவன் கட்டிய தாலியை அறுத்து 'இத உன் ஆம்பளை பொண்டாட்டிக்கே கட்டு' என்று அவன் நண்பன்(?) மேல் எறிந்து  விட்டு வெளியேறினேன், கொண்டு வந்த பையுடன்.

Monday, April 22, 2013

என் வாழ்வில் - அனுபவங்கள்

அதிகாலை நான்கு மணி, கனவில் காஜல் வந்து தாலாட்டு பாடற சமயம், தட்டி எழுப்பியது கைபேசி.'சார் cab டிரைவர் பேசறேன். இன்னைக்கு office வரிங்களா?', 'வரேன்.' என்று கூறி கைபேசியின் நாக்கை வெட்டினேன் (அதுதாங்க silent mode). விழிப்பு வந்து, எழுந்து பார்த்தா மணி ஆறு. cab டிரைவர் போன் செய்து பார்த்துட்டு, நான் அழைப்பை எடுக்காததால் கெளம்பிவிட்டார். அவசரமாக தயார் ஆகி என் வண்டியில் கிளம்பினேன். வண்டி நின்ற பொழுது தான் பெட்ரோல் பல நாட்களாக ரிசர்வில் இருப்பது நினைவில் வந்தது. இரண்டு முறை நன்றாக வண்டியை ஆட்டி விட்டு, திரும்ப ஸ்டார்ட் செய்து கிளம்பினேன், இனி ரொம்ப தூரம் செல்லாது என்று தெரிந்தது. கடைசி சொட்டு பெட்ரோலை இஞ்சின் குடித்து முடித்த பொழுது பங்க் வந்திருந்தது, இன்ஜினியரிங் தேர்வில் கண்டிப்பாக பெயில் ஆகி விடுவேனோ என்று நினைத்த பாடத்தில், 36 மதிப்பெண் பெற்று 'just பாஸ்' ஆன பொழுது கிடைத்த அதே சந்தோசம் இத்தருணத்தில் மீண்டும் என் நெஞ்சில் மலர்ந்தது.

'எவளோ போடணும்?' 

'200 ரூபாய்க்கு போடுங்க.'

இப்ப சம்பளம் எல்லாம் நேரா கார்டுக்கு தன போகுது, எங்க போனாலும் கார்ட தேய்க்கரதுனால,கையில் காசு வைத்துக்கொள்வதேயில்லை. இன்றும் அப்படித்தான். 

'இந்தாங்க கார்டு.'

'சார் எட்டு மணியில் இருந்து பத்து மணி வரைதான் கார்டு. நைட்ல எங்க ஆளுங்க தப்பான தொகையை டைப் பண்ணுவதாலே பல பிரச்சனைகள் வருது, அதனால எங்க முதலாளி நைட்ல மெசினை பூட்டிடுறாரு. வண்டியை விட்டு விட்டு, ATMல காசு எடுத்துட்டு வந்துடுங்க.'

அவன் காட்டிய திசையை நோக்கி நடந்தேன். முதலில் ஒரு ATMஐ கண்டேன் 'out of service' என்று பலகை தொங்கியது. BSNL தொலைபேசிக்கு அடுத்து அதிகம் அவுட் ஆகுவது இந்த வங்கி ATM தான். வங்கி பேரைச் சொல்ல மாட்டேன், என் மேல் அவங்க வழக்கு போட வேண்டும்னு உங்களுக்கு ஆசைதானே, நடக்காது. 

அடுத்த ATMஇல் நுழைந்து 500 ரூபாய் எடுக்க முயன்றேன், '334.76 வைப்பு வைத்துக்கொண்டு உனக்கு 500 ரூபா கேக்குதா?' என்று இயந்திரம் திட்டியது. சமாதானம் ஆகி '300 ரூபாய் மட்டும் கொடு' என்றேன். 'எடுத்துகொண்டு ஓடிவிடு. இதோட காசு இல்லாம பந்தா காட்ட இந்த பக்கம் வராதே' என்று அது துப்பியது. 

ஒரு வயதான பாட்டி உள்ளே நுழைந்தாள். 'தம்பி, நல்ல ஜில்லின்னு இருக்கே, இந்த கடை முதலாளி யாரு?' என்று என்னிடம் வினவினாள். எல்லாம் நேரக்கொடுமை என்று எண்ணி, பெட்ரோல் பங்க் சென்று, காசை கொடுத்து விட்டு என் பயணத்தை தொடர்ந்தேன். 

சந்திப்பில் சிகப்பு விளக்கு ஒளி வீச, முன்னால் நின்று கொண்டிருந்த இன்னோவா கார் அருகில் சென்ற போக்குவரத்து காவல் ஒரு கும்பிடு வைத்தது. சற்று முன் நகர்ந்து பார்த்தேன், அந்த வண்டி முன் ஒரு கட்சி கொடி பறந்து கொண்டிருந்தது.இலைன்னு சொன்னா தாத்தா என்னை தமிழ்த்துரோகினு சொல்லிடுவாரு, கருப்புசிவப்புன்னா அம்மா இங்கிலீஷ்ல திட்டுவாங்க, காவின்னு சொன்னா 'அடப் பாவி.நீ பயங்கரவாதி'னு பகுத்தறிவாளர்கள் சொல்லுவாங்க. நமக்கு எதுக்கு வம்பு, இந்தியா கொடி என்றே வைத்துக்கொள்ளுங்க.முன்பு எல்லாம் கம்பத்தில் பறக்க விட்டாங்க, இப்ப கொஞ்சம் பெரிய கார் இருந்தாலே பறக்க விட்டுடறாங்க, எந்த காவல் துறையும் மடக்காது, சுங்க சாவடில காசு கொடுக்காம போய்டலாம் பாருங்க. 

அலுவலகம் செல்வதற்குள் என்னைத்தேடி பல போன் கால்கள், பல சிக்கல்கள். சீக்கரம் வந்தா நம்மல நாயா கூட மதிக்க மாட்டாங்க, ஒரு நாள் தாமதம் ஆனா அவ்வளவுதான். 

வேலை பார்த்துட்டு, முடிக்கும் போது தெரியாமல் 'F12' பொத்தானை அழுத்திவிட, இரண்டு மணி நேரம் டைப் செய்தது எல்லாம் காணாமல் போனது. மீண்டும் அதே வேலையை சலிப்புடன் செய்து முடிக்கும் போது மணி 3 30. இன்று காலை உணவும் இல்லை, மத்திய உணவும் இல்லை. எங்கள் ஐயா காமராசர் மட்டும் இப்பொழுது முதல்வராக இருந்தால், ITயில் வேலை பார்க்கும் அனைவருக்கும் மூன்று வேளை 'கட்டாய உணவு' திட்டம் கொண்டுவந்திருப்பார். 

வண்டி எடுத்து கொண்டு கெளம்பினேன், எல்லா உணவகங்களும் மூடி இருந்தன, எங்குமே உணவு இல்லை. நான்கு மணிக்கு மேல் மத்திய உணவு கிடைப்பது மிகவும் கடிது என்பதை இன்றுதான் அனுபவிக்கிறேன். ஓர் இடத்தில மட்டும் விற்காமல் மீதி இருந்த (ஈ) பிரியாணி கிடைத்தது, ஒரு தூய தமிழனாக ஈக்களை எடுத்து போட்டு விட்டு சாப்பிட்டேன். 

வீட்டை அடைந்தவுடன், அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது, நான் என் பென்டிரைவை மறந்து வைத்துவிட்டேன் என்று. அதில் நாளை நடக்க போகும் 'client presentation'னுக்கான slides இருக்கிறது, அவற்றில் சில மாற்றங்கள் செய்ய என் மேலாளர் சொல்லி இருந்தார். சட்டென்று ஒரு வியூகம் அமைத்தேன், என் நண்பனை அழைத்து அவனை அதை வாங்கி வரச் சொன்னேன், அவன் வரும் அலுவலகப் பேருந்து என் ஸ்டாப் வழியாகத்தான் செல்லும் என்பதால்.

'நண்பா என் ஸ்டாப்ல ஒரு நிமிஷம் இறங்கி பென்டிரைவை கொடுத்துட்டு போய்டு.'

'இல்ல நண்பா , இந்த டிரைவர் கொஞ்சம் சிடு மூஞ்சி, ஒத்துக்க மாட்டான்.'

'எல்லா பஸ்சும் எங்க ஸ்டாப் கிட்ட இருக்கற ஸ்பீட் breakerல வேகம் குறையும், நீ சன்னல் ஓரம் ஒட்கர்ந்திரு, நான் ரோட் ஓரம் நிக்கறேன், தூக்கி போட்டு விடு' என்று சிங்கம் படம் சூர்யா போல் ஒரு திட்டம் போட்டேன்.

'எங்க பஸ் வருது ? '........'நான் leftல இருக்கேன் பாரு' .......'அட முட்டா பயலே இந்த பக்கம் ஒட்கார மாட்டியா'...........'சீக்கரம்'.

அவன் பேருந்து அந்த வேகத்தடை மேல் ஏற, அவன் பென்டிரைவை எறிய, நான் யுவராஜ் போல் தாவி பிடிக்க, பேருந்து நிறுத்தத்தில் இருந்த அனனவரும் கை தட்டினர். அந்த ஐந்து நிமிடம் நானும் ஹீரோன்னு நினைத்தேன், நான் ஹீரோ ஆகும் தருணம் இன்றைக்கு இல்லை என்பது பிற்பாடு தான் புரிந்தது. வேகத் தடையில் அவன் பேருந்தின் வேகம் குறைய, மற்றொரு பேருந்து அதன் அருகில் வர, அவன் எனக்கு டாட்டா மட்டும் காட்டினான். என் மேலாளர் வாயில் நாளை நான் நாறப்போகிறேன் என்பதை எண்ணி, நேற்று காலை விளக்கிய என் பற்களை 'ஈ....ஈ...' என்று அவனை பார்த்து இளித்தேன்.

Monday, April 15, 2013

ஸ்டாலாக் 17 (Stalag 17) - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய லக சினிமா' என்ற பகுதியில் எழுத உள்ளேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

Donald Bevan மற்றும் Edmund Trzcinski உருவாக்கிய நாடகமாகிய 'ஸ்டாலாக் 17'ஐ திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் Billy Wilder இறங்கினார். ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார். 


நான் போர் பற்றிய  பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள், பீரங்கிகள், விமானங்கள், கப்பல்கள், துப்பாக்கிகள்  கொண்ட  எத்தனையோ படங்கள் பார்த்திருகேன். ஆனால் இந்த படம் சற்று மாறுபட்டு போர்க் கைதிகள் முகாமில் நடந்த சம்பவங்களைக் கூறுவது என்று இயக்குனர் என்னிடம் கதை சொல்லிய போதே எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். இப்படத்தில் Clarence Harvey Cook என்ற என் பெயரை அனைவரும் சுருக்கி 'cookie' என்றே கூப்பிடுவர். என் கதாப்பாத்திரத்தை பற்றி நான் சொல்லப் போவதில்லை, படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

'ஸ்டாலாக்' என்பது ஜெர்மன் மொழியில் 'சிறை முகாம்' என்று பொருள்படும். எண் 17 என்பது 'டனுபெ' என்ற ஊரில் இருக்கும் முகாமை குறிக்கும். இங்கு மொத்தம் அறுநூற்று முப்பது போர்க் கைதிகள், அனைவரும் என்னைப்போல் சார்ஜண்ட்கள், பெரும்பாலும் அமெரிக்கர்கள். கதை தொடங்குவது இரண்டு பேர் அந்த முகாமில் இருந்து தப்பிக்க முயலுவதில் இருந்து. Sefton மட்டும், அவர்கள் நிச்சயம் தப்பிக்க மாட்டார்கள் என்று உறுதியாக கூறினான். அவன் கூறியது போல் அவர்கள் தப்ப வில்லை, சுடப்பட்டனர்.  

இந்த இடத்தில நான் சில முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி சொல்லி விடுகிறேன். Hoffy எங்கள் பாசறை தலைவர், Price பாதுகாப்பு அதிகாரி, Harry மற்றும் Animal எங்களுடன் இருந்த இரு கோமாளிகள். எங்களுக்கு பெண்கள் வாசமே கிடையாது, அவர்களை தனி முகாமில் அடைத்து வைத்திருந்தனர்.  நான் இருப்பது Sefton உடன், நான் கண்ட மனிதர்களிலேயே மிக வினோதமானவன்.    

Sefton ஏதாவது வினோதமாக செய்து கொண்டே இருப்பான். சாராயம் காய்ச்சி விற்றான், குதிரைப் பந்தயம் நடத்தினான் (ஆனால் ஓடியது ஐந்து எலி தான்). Red Cross இல் இருந்து கிடைக்கும் எல்லாப் பொருட்களையும் இவனிடம் அனைவரும் இழந்து விடுவர். இவன் செழிப்பானது  ஒரு தொலைநோக்கியை  கொண்டு. அந்த தொலைநோக்கி மூலம் எதிரில் இருந்த பெண்கள் முகாமை காண, நபர் ஒருவருக்கு இரண்டு சிகரேட்கள் வீதம் வசூல் செய்தான்.  இவற்றின் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து, நல்ல உணவு, ஆடை கிடைக்க ஜெர்மன் வீரர்களிடம் பண்டமாற்று முறைகளை கையாளுவான்.

எப்போதும் எங்கள் கவலையை மறக்க செய்வது Harryஉம் Animalஉம் தான். இக்கதையில் அவர்களுக்கு நகைச்சுவை வேடம். குறையின்றி எங்களை சிரிக்க வைத்தார்கள். ஒரு முறை இருவரும் பெண்கள் முகாமிற்குள் சென்று மாட்டியதை எங்கள் முகாமே கண்டு சிரித்தது. எங்கள் பாசறையில் செய்தி வாசிப்பவர் 'அட் ஈஸ்' என்று சொல்லும் போது Animal அவர் சொல்லிய பின் தன்   பாணியில் 'அட் ஈஸ்' சொல்வது என்னை மிகவும் கவர்ந்தது.

எங்கள் முகாமில் புழங்கி கொண்டிருந்த ரேடியோவை ஜெர்மன் வீரர்கள் கண்டுபிடிக்க, ஒரு ஜெர்மன் கைக்கூலி எங்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் கிளம்பியது. சிறை முகாமில் செழிப்பாக இருக்கும் Sefton மீது அனைவரின் சந்தேகமும் திரும்ப, இந்நிலையில் அவன் பெண்கள் முகாமிற்கு சென்று ஓர் இரவை உல்லாசமாக கழிக்க, அனைவரின் சந்தேகமும் உறுதியானது. Sefton எவ்வளோ சொல்லியும் யாரும் அவனை நம்பவில்லை, அன்று இரவு அவனுக்கு செம அடி தான். 

இதற்கிடையில் Lt.Dunbar என்பவர் தற்காலிக கைதியாக எங்கள் முகாமிற்கு வந்தார். அவர் வெடிமருந்து கொண்டு சென்ற ஜெர்மன் சரக்கு ரயிலை வெடிக்க செய்ததை எங்கள் மத்தியில் சொல்ல, உளவாளி வழியாக அது முகாம் துணைத்தலைவர்  காதிற்கு செல்ல, பின் குற்றத்தை ஒத்துக்கொள்ள சித்தரவதை நடந்தது. என்ன சித்ரவதைன்னா, அவர தூங்கவே விட மாட்டாங்க. இதே முறையத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளி வந்த 'போக்கிரி' படத்துல பயன் படுத்தியதா கேள்வி பட்டேன். Lt.Dunbarஐ நாங்கள் காப்பாற்றினோம், பின் Harry அவரை முகாமில் எங்கோ மறைத்துவைத்தார், யாரிடமும் சொல்ல வில்லை. ஜெர்மன் வீரர்கள் முகாம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் கிடைக்கவில்லை.

Sefton உளவாளி யார் என்பதையும், அவன் தகவல் சொல்லும் முறையையும் கண்டுபிடித்ததை என்னிடம் சொன்னான். உளவாளி யார் என்பதை கண்டறிந்தது ஜெர்மன் வீரர்கள் காதுகளுக்கு சென்றால் அந்த உளவாளியை வேறு முகாமிற்கு உளவு பார்க்க அனுப்பி விடுவார்கள், இல்லையெனில் அந்த உளவாளியை கொன்றால் எங்கள் அனைவரையும் கொன்றுவிடுவார்கள். உளவாளியை என்ன செய்வது என்பது கேள்விக்குறியானது.

Lt.Dunbar பெரிய பணக்காரர் என்பதால், அவரை முகாமை விட்டு வெளியே கொண்டு செல்ல Sefton முன்வந்தான், அவர் தாயிடம் இருந்து  பரிசு பணம் கிடைக்கும் என்ற ஆசையுடன். Sefton உளவாளியை எப்படி கொல்கிறான்,  Lt.Dunbarஐ எப்படி காப்பாற்றுகிறான் என்பதை அறிய படத்தை பாருங்கள், படத்தை பார்த்துவிட்டு மறக்காமல் கருத்துரையிட்டு செல்லுங்கள்.  

*****************************************************************************************
ஆண்டு            : 1953
மொழி              : ஆங்கிலம்                   
என் மதிப்பீடு : 4/5
*****************************************************************************************

Monday, April 8, 2013

களவு - பகுதி இரண்டு

*முன் குறிப்பு : இக்கதையை படிக்கும் முன், முதல் பகுதியை படித்து பின் தொடரவும். களவு - பகுதி ஒன்று *

களவு - பகுதி இரண்டு : 

எல்லாப் பொருள்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினார்கள் கம்பத்துக்க்காரரும், அவரது குடும்பத்தினரும். அந்த வீட்டில் நான்கு சக்கர வண்டிகள் நிறுத்த இடம் இல்லாததால் வண்டியை தெருவில் நிறுத்துவது வழக்கம். அவர் மகன் வண்டியை நிறுத்திய இடத்திற்கு சென்ற பொழுது, அங்கு 'J' என்று சுண்ணக் கோலால் எழுதி இருந்தது. வண்டியை காணவில்லை, கம்பத்துக்காரரின் மகன் தெரு முழுக்க தேடினார், அவரது இஸ்திரி போட்ட சட்டை, வியர்வையால் நனைந்தது. 'வண்டியை வாங்கி ஆறு மாதம் கூட ஆக வில்லை' என்பதை எண்ணி அவர் மகன் சோர்ந்து போனார். அந்த வட்டார காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துவிட்டு பின் பேருந்தில் மருத்துவமனை சென்றனர். 

சம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆகியும், எந்த தகவலும் இல்லை. கம்பத்துக்காரரின் மகன் காப்புறுதிப் பணம் கோரல் முறைகளை ஆராயந்துகொண்டிருந்தார். நம் கம்பத்துக்காரருக்கு எதுவுமே சரியாகப்படவில்லை, தன் மகனை கட்டாயப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச்சென்றார். அங்கு சென்றால் 'குற்ற்றவாளி யாருன்னு தெரியும். அவனை தேடிக்கொண்டு தான் இருக்கோம். மேலும் தகவல் கிடைத்தால் கால் பண்ணுவோம்' என்று அவர்கள் கூறிய பதில் இவரை பெரிதும் சமாதனப்படுத்தவில்லை. ஏமாற்றத்துடன் வெளியேறியபோது ஒரு இன்ப அதிர்ச்சி. 

பவன் சிங்க் endeavour காரில் வந்து இறங்கினார். கம்பத்துக்காரரை பார்த்தவுடன் விரைந்து வந்து அவரை வணங்கினார். அவர் மகன் உற்பட அங்கு இருந்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி தான், ஏனெனில் பவன் சிங் இப்போது சென்னை மாநகர காவல் துறை ஆணையர். 

'நீங்க எங்கையா இங்க? சென்னை வந்தவுடன் எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாமே' என்று கம்பத்துக்காரரிடம் கேட்டார். (வாசகர் விருப்பத்திற்கு ஏற்ப பவன் சிங் இந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் புலமை பெற்றார்.) 

'மருத்துவம் பார்க்க சென்னை வந்தேன், மகன் கார் களவு போனதற்கு புகார் பதிவு செய்திருந்தோம் , அதை பற்றி விசாரிக்க தான் இங்கு வந்தோம்.' 

'வாங்க உள்ள, நான் என்ன நிலவரம்னு கேட்கிறேன்.' மூவரும் உள்ளே சென்றனர். 

பவன் இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்து 'என்னய்யா இவங்க கேஸ் என்ன நிலைமைல இருக்கு' 

இன்ஸ்பெக்டர், 'சார் இதுவும் அந்த ஜானியோட கைவரிசைதான். எங்களால ஒன்றும் செய்ய முடியல.' 

பவன் கம்பத்துக்காரரை நோக்கி 'இந்த ஜானி எங்களுக்கு பெரிய சவாலா இருக்கான். இவன பத்தி எங்க கிட்ட இருக்கறது இவனோட இருபது வருசத்துக்கு முன்னால் எடுத்த போட்டோ தான். இவன் எந்த கார் திருடினாலும், அது இருந்த இடத்துல 'J'னு ஒரு அடையாளம் விட்டுடுவான். இது வரைக்கும் உங்க காரோட சேர்த்து நாற்பத்து மூன்று கார திருடி இருக்கான். ஐயா, சைக்கிள் திருடிக்கொண்டு  இருந்த மண்ணாங்கட்டிய சூனம்பேடு காவல் நிலையத்துல புடித்து கொடுத்திங்களே நியாபகம் இருக்கா?' 

' ஆமாம், நல்லா நியாபகம் இருக்கு. நீங்க எங்க ஊர்ல பார்த்த கடைசி வழக்கு.' 

'அந்த மண்ணாங்கட்டியோட இரண்டாவது சம்சாரம் மகன்தான் இந்த ஜானி. இவனோட மண்ணாங்கட்டியும் கூட்டுன்னு ஒரு சந்தேகமும் இருக்கு. நாளையோட நான் பணியில் இருந்து ஓய்வுபெறப்போறேன். நீங்க நாளை மறுநாள் ஞாயிறு அன்று என் வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு உதவ சரியான ஆள் ஒருத்தர அறிமுகம் செய்றேன்'. 

அந்த ஞாயிறு பவன் சிங் வீட்டில் கம்பத்துக்காரர், அவர் மகன், பவன் சிங் மூவரும்  காத்திருந்தனர். அந்த ஒருத்தர்- ஆறு ஆடி உயரம், மாநிறம், படர்ந்த நெற்றி, வடுகு இன்றி தூக்கி வாரிய முடி, வரிசை ஒழுங்கு செய்யப்பட்ட மீசை, சுத்தமாக சவரம் செய்த முகம், கை மடிக்க பட்ட வெள்ளை சட்டை, நீல நிற ஜீன்ஸ் காற்சட்டை, கருப்பு  தோலினால் ஆன கச்சை. 'இவர் பெயர் கே.கே. . B.A. வரலாறு படித்து வெள்ளி பதக்கம் பெற்றவர். இந்திய தொல்பொருள் துறையில் பணி புரிந்தவர். இப்போது எங்களுக்குகாக உளவறியும் ஒற்றர். துப்பறிவதில் திறமைசாலி என்றும் சொல்லலாம். உங்களுக்கு உதவ இவரின் உதவியை மறைமுகமாக நாடியுள்ளேன் .' 

கே.கே. உடன் கம்பத்துக்காரர் தனியே பேசினார், சந்திப்பு முடிந்து, கம்பத்துக்காரரும் அவர் மகனும் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அரசு பள்ளியின் வாசலில் நிறைய வண்டிகள் நிறுத்தபட்டிருந்தன. கம்பத்துக்காரர் தன் மகனிடம் 'எதுக்கு இந்த கூட்டம், இன்று ஞாயியிற்று கிழமைதானே? ' என்று கேட்டார். 

'ஆதார்னு ஒரு அடையாள அட்டை கொடுத்துக்கொண்டு இருக்காங்க. அமேரிக்கால இருக்கற மாதிரி, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்படும். அந்த எண்ணோட, கை ரேகை, விழித்திரை மற்றும் அந்த நபரின் வங்கி கணக்கு இணைக்க படும். அரசு வழங்கும் மாணியங்கள் பணமாக எல்லா குடிமகனையும் சென்றடையும். ' 

'அப்ப எல்லா நியாய விலை கடைகளும் மூடப்படும்னு சொல்லு. ஐந்து வருடம் கழித்து அரசாங்க அரிசி விலை கிலோ ரூபாய் இருபதுன்னு வச்சிக்கோ. அப்ப ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு முப்பது கிலோன்னு, அறநூறு ரூபாய் அரசு தரும். கடையில் அந்த காச கொடுத்து பதினைந்து கிலோ அரிசி கூட வாங்க முடியாது. தனி மனித சுகந்திரத்துக்கு பூட்டுன்னும் சொல்லலாம். உன் கை ரேகை அவங்க கிட்ட இருந்தா, நீ ஒரு பேருந்துல ஏறினாலும் அவங்களுக்கு தெரிந்து விடும். '

'இது  ஒன்றும் எல்லாருக்கும் கட்டாயம் இல்லையே.' 

'அப்படித்தான் சொல்றாங்க, ஆனா வங்கி கடன் வாங்கரதுல இருந்து எல்லா ஆவணங்களுக்கும் அத கேட்பாங்க, அப்ப வேற வழி இல்லாம பதிய வேண்டிய கட்டாயம் வந்து விடும்.' 

ஒரு வாரம் கழித்து, ஒரு செவ்வாய் அன்று, பவன் சிங் வீட்டில் இருந்து கார் வந்தது, கம்பத்துக்காரரை அழைத்து செல்ல. அவர் மனைவியை வீட்டில் விட்டு விட்டு அவர் மட்டும்  சென்றார். மாலை  ஆறு மணிக்கு திரும்பி வந்தவர்  முகம் சற்று தோய்ந்து இருந்தது. அவர் மனைவியிடம் உடனடியாக புறப்பட சொன்னார். 'இது பாவம் நிறைந்த ஊர். நாம நம்ம ஊருக்கே திரும்பிபோகலாம்.' என்று அவர் மனைவியிடம் எல்லோருக்கும் கேட்பது போல் கூறி விட்டு வெளியேறினார். 

பேருந்தில் செல்லும் பொழுது அவர் மனைவி அவரிடம் 'என்ன ஆச்சுங்க?' என்று கேட்க, அவர் கூறிய நிகழ்வுகள் பின் வருமாறு.

நான் அன்று பவன் சிங்கின் வீட்டிற்கு சென்ற போது, கே.கே.வும் எனக்காக காத்திருந்தார்.

கே.கே. : நீங்க சொன்னது போல அந்த 'J' எழுதியிருந்தது Calcium sulfate நிறைந்த சுண்ணக் கோலால் என்று ஆய்வக அறிக்கை வந்திருக்கு. ஆனா நம்ம ஜானி எப்பவுமே, Calcium carbonate நிறைந்த இயற்கையா கிடைக்கற, கோலக் கல்லத்தான் பயன் படுத்துவான். சம்பவம் நடந்த எடத்துல எப்பவும் போல் பீடி துண்டு இல்லன்னு போலீஸ் அறிக்கை சொல்லுது. நீங்க சந்தேகப்பட்ட மாதிரியே இது ஜானி வேல இல்ல. வேற ஒருத்தன் திருடிட்டு,  ஜானி மேல பழி விழ வச்சிட்டு, அழகா தப்பிக்க நடந்த முயற்சி. திருட்டு போன கார் உதிரி பாகங்கள் விக்கற கடைங்கள சோதனை செய்தோம். உங்க வண்டியோட  என்ஜின் எண் எங்களுக்கு தடம்பார்க்க, வித்தவன் சிக்கினான்.

க.கா  : இதுக்கு மேல நானே சொல்றேன். நீங்க பிடிச்ச ஆள், வேற ஒருத்தன கை காட்ட, அவன் என் மகன கை கட்டினான் இல்லையா ?

கே.கே. : பக்கா. எப்படி சரியா சொன்னீங்க?

க.கா  : என் மகன இந்த திருட்டு பெரிசா பாதிக்கல. எப்பவும் தேள் கொட்டின மாதிரி தான் என் கிட்ட இத பத்தி பேசினான். அவன் மேல எனக்கு சந்தேகம் வலுவானது அவன் காப்பீட்டு வேலைகள்ல இறங்கிய போதுதான் .

ப.சி :  உங்க ஆற்றல் கொஞ்சம்கூட குறையல.

க.கா  : எனக்காக நீங்க இதை எல்லாம் மறைக்க வேண்டும்  கே.கே. .

ப.சி :  கவலைப் படாதிங்க  இது உங்களுக்காக நடத்தப்பட்ட விசாரணை.

கே.கே. : நம்ம மூன்று பேர தவற யாருக்கும் தெரியாது.

சோகத்துடன் வீடு திரும்பினேன். அந்த ஏமாற்றத்தை பொறுக்கமுடியாமல், என் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், ஊர் திரும்ப முடிவுசெய்தேன்.

கம்பத்துக்காரர் தன் மனைவியிடம் பேருந்தில் மேலும் தொடர 'இவன் என் ரத்தமே கிடையாது. தப்பி பொறந்துட்டான். காசுக்காக அலையுற ஒரு பேய். என் வம்ச பெருமையை காப்பாத்த போறவன் என் பேரன் மட்டும் தான்'.  மழை சாரல் தூவ, பேருந்தின் சன்னலை மூட முயன்றார் கம்பத்துக்காரர். தாழ்ப்பாள் கையுடன் வந்தது. (இந்த இடத்தில பின்னணி இசை உங்கள் மனதில் ஒலிக்க) அவர் மனைவியின் கை பேசி ஒலித்தது. கைபேசி அவர் காதில் கூறிய இரகசியத்தை கேட்ட பின், அவர் மனைவி பதற்றத்துடன் "ஐயோ முருகா!........................ஏங்க ..நம்ம பேரன காணமாம்ங்க".

களவு தொடரும்.........

களவு - பகுதி மூன்று