Sunday, March 31, 2013

மாத்தியோசி

திங்கட்கிழமை காலை புதுச்சேரி பேருந்துநிலையத்தில் சென்னை செல்லும் ECR வழி பேருந்தில் ஏறி அமரும்போது, சூப்பர் ஸ்டார் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த மன நிறைவு கிடைக்கும். நான் செல்வது என் நண்பன் குமாரின் குழந்தையைக் காண்பதற்கு. அண்ணா நகரில் உள்ள SMF (சுந்தரம் மெடிக்கல் பௌன்டேஷன் )இல் நேற்று காலைப் பிறந்தான். நான்கு மணிநேரப் பயணம். நின்று கொண்டிருப்பவர்கள் 'நீ எப்ப இறங்குவ' என்ற ஏக்கத்துடன் என்னை பார்க்க, கண்களை மூடி (நான் இறங்கமாட்டேன் என்பதன் சைகை), என் நினைவுகளை மனதில் அசைப்போட ஒரு சரியானத் தருணம்.

ஆறு வருடங்களுக்கு முன்பு…

நானும் எல்லாரையும் போல் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தேன். தற்போது இரண்டாம் ஆண்டு. குமாரை எனக்கு கல்லூரி வந்தபின்தான் தெரியும். கடைசி இருக்கை பழக்கம். சன்னல் ஒர இருக்கை.  வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது பல உலக நடப்புகளைப் பற்றிபேசி ஆராய்வோம். ஆசியா மற்றும் ஐரோப்பா என்னுடையது. அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அவனுடையது.

'போன வாரம் எங்க மாமா கல்யாணத்துக்கு போய் இருந்தேன் இல்ல. மாப்பிளைக்கு இருபது பவுன் நகை , பொண்ணுக்கு நூற்று ஐம்பது சவரன் நகை, ஒரு 'audi' கார் வரதட்சணையா கொடுத்தாங்க.  நான் ஆடிப்போயிட்டேன்.   என்னதான் உழைச்சாலும் நம்ம பெரிய மனிஷன் ஆக ஐம்பது வயசுக்கு மேல ஆயிடும். படத்துல எல்லாம் காட்டற மாதிரி வாழ்கைல சீக்கரம் முன்னேற இதுதான் சுலபமான வழி.'

'நீயே சம்பாதிச்சு கால் வயறு நெரஞ்சாலும், அதுல கெடைக்கற சந்தோஷம் உனக்கு இதுல கிடைக்காது. பகல் கனவு காணாத'  

"நீ காதல் பண்ணற, இப்படித்தான் பேசுவ. எங்களுக்கு எல்லாம் வீட்டுல எதாச்சு ஒன்னு பார்த்து வச்சாதன கல்யாணம்னு ஒன்னு நடக்கும் "

"நான் எப்பவமே இப்படிதான் இருப்பேன். உழைப்பே உயர்வு."

"உன் காதலுக்கு வீட்டுல ஒத்துகுட்டான்களா ?"

"வாய்ப்பே இல்ல "

"அப்பறம் ஓடிப்போய் .......?"

"நீயும் இப்படி பேசர. நான் சொல்றதக்கேளு. பாக்கியராஜ் படம், 'தாவணிக் கனவுகள்' பார்த்திருக்கியா ?"

" பார்த்திருக்கேன். அதுக்கு என்ன "

"அதுல முதல் காட்சி எப்படி ஆரம்பிப்பாரு? அப்படித்தானே இருக்கு நம்ம சமுதாயம் இன்னமும். தெரியாத ஒருத்தி கூட சேர்த்துவைப்பாங்களாம் ஆனா பழகன ஒருத்தி கூட சேர கூடாதாம். கேட்டா, சொந்த பந்தம் என்ன சொல்லும்னு கேக்கறாங்க. நம்ம நல்லா வாழ்ந்தா, பார்த்து பொறாமை படற இந்த சொந்தங்களோட விருப்பம்தான் முக்கியமா? இல்ல வாழப்போறவங்க விருப்பம் முக்கியமா? நீயே சொல்லு."

"நீ ஒரே பையன். ஊர் கூட்டி, சொந்த பந்தம் வாழ்த்த, உன் கல்யாணத்த நடத்தனும்னு அவங்களுக்கு ஆசை இருக்காதா ? "

"ஊர்ல இருக்கரவன எல்லாம் கூப்டு வச்சு கல்யாணம் பண்ணா, கூட்டு சரி இல்ல, சாம்பார்ல உப்பு இல்லன்னு தான் சொல்லுவானுங்க. யாராவது வாழ்த்த வராங்களா. ஒரு கடமைக்காக வரும் சில பேர், தற்பெருமை பீத்திக்க வரும் சில பேர், சாதிக்காக வரும் சில பேர், கூட்டம் சேர்க்க வரும் சில பேர், வெட்டி கதை பேச வரும் சில பேர், சாப்ட வரும் பல பேர் (கல்யாண சமையல் சாதம்......). சாப்பாடு பந்தி தொறந்த உடனே சத்தரம் காலி ஆயிடும். "

குமார் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட, அவன் குரல் ஆசிரியரைத்தாக்க, இருவரும் வகுப்பை விட்டு வெளியேற்றப் பட்டோம்.

'வெளிய வந்ததும் வந்துட்டோம், பசிக்குது போய் எதாச்சு சாப்டுவோம்' என்று நான் அவனை எங்க கல்லூரி சிற்றுண்டியகம் அழைத்து சென்றேன்.

'நம்ம கல்யாணத்துல வீடியோ, போட்டோ எல்லாம் எடுக்கராங்களே, அதை எல்லாம் யாராச்சு வருஷா வருஷம் பார்க்கறதா பார்த்திருக்கியா இல்ல கேள்விதான் பட்டிருக்கியா ?'

எங்க காலேஜ் சமோசாவ கடிச்சிகுட்டே ‘தெரியாத்தனமா இவன் வாய கெளரிட்டேன்’,இல்லைனு தலையாட்டினேன்.'எப்படி முடியும். ஒரு மொக்கபடத்த ஒருவாட்டி கூட பார்க்க முடியாது. அந்த வீடியோவ ஒரு வருகைப் பதிவேடா பயன்படுத்தனா அப்படித்தான் இருக்கும்'

'நீ என்னதான் சொன்னாலும், கல்யாணம் வாழ்கைல ஒரு நாள் விழா, செலவு பண்றதுல தப்பில்ல'

'கணக்கு இல்லாம மத்தவுங்களுக்குகாக செலவு பண்ற காச எங்க பேர்ல வங்கிலபோட்டா காலம் பூரா நாங்க சந்தோஷமா இருப்போம்'

'அப்ப உன் கல்யாணம் பதிவாளர் அலுவலகத்துலையா?'

‘இல்ல. இயற்கை எழில் கொஞ்சும் என் கிராமத்துல.'

முதல் முன்காட்சி பதிவு முடிந்தது.

வண்டி கூவத்துர் அருகில் உள்ள 'செந்தூர் ஹோட்டல்'இல் நின்றது. அரசு பேருந்துகள் நிற்கும் அனைத்து உணவகங்களுமே என்னை இதுவரை சாப்பிட தூண்டியது இல்லை. இன்றும் அப்படித்தான். சாலையின் எதிர் புறத்தில் ஆடவர் மணலை நனைத்து கொண்டிருக்க, நடத்துனர் ஆரி போன மொளகா பஜ்ஜியை தன் டீஇல் நனைத்து கொண்டிருக்க, ஓட்டுனர் தன் ஓசி வாட்டர் பாட்டில்ஐ வாங்கி தன் தொண்டையை நனைக்க, அடுத்த பேருந்து வந்து நின்றது. பதினைந்து நிமிட இடைவேளைக்குப்பிறகு, பேருந்து தன் ஓட்டத்தை தொடர, நாமும் என் நினைவுகளை தொடருவோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ....

கல்லூரி முடித்துவிட்டு வேலையில் சேர கார்த்திருந்த சமயம். வீட்டில் சும்மா இருப்பதை சொந்தமும் நட்பும் கேளி பேசும் சமயம். ஒரு நாள் குமாரிடமிருந்து கல்யாண செய்தி வந்தது. அவன் விரும்பிய பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் கைபிடிக்கப் போகிறான் என்று.

அடுத்த ஞாயிறு அவன் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றேன். பேருந்து நிலையத்தில் இருந்து அவன் தம்பி என்னை அழைத்துச் சென்றான்.

'எல்லாரும் வந்தாச்சு.நீங்கதான் கடைசி. காலையிலயே கோவில்ல தாளி கட்டியாச்சு' என்று கூறி எனக்காக அவன் காத்திருந்த வெறுப்பை வெளிப்படுத்தினான்.


அவன் அழைத்துச் சென்றது ஒரு குளக்கரைக்கு. இரண்டு பனை மரங்கள் ஒரு வேப்ப மரத்துக்கு இரு புறமும் காவல் காக்க, வெள்ளை மணல் மேடுகளுக்கு நடுவில் இருந்தது அந்த தாமரைக்குளம். வெள்ளை நிற அல்லி மலர்களும் இருந்தன. குளத்தின் தலை ஊற்றுக்கு அருகில் ஒரு ஆலமரம் மிக உயரமாக வளர்ந்து படர்ந்து இருந்தது. வலுவான விழுதுகள் மரத்தை தாங்கிக் கொண்டிருந்தன. குமாரின் தம்பி இந்த மரம் சுமார் இருநூறு ஆண்டுகளாக இருப்பதாகச் சொன்னான். இருபது அடி தூரத்தில் வெள்ளைத் துணி ஏற்றிய கம்பங்கள் அங்கும் இங்குமாய் மணலில் நடப்பட்டிருந்தன. கம்பத்தின் மேல் இருந்த கொடி காற்றின் திசையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விழுதுகள் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. மர நிழலில் ஒரு புறம் பாய்கள் விரிக்கப்பட்டு அனைவரும் அதில் வட்டமாய் அமர்ந்திருந்தனர், மற்றொரு புறம் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விறகு அடுப்பில்.

மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்பார்கள். அதில் பலரும் நண்பர்கள் தான். பல விதமான வேடிக்கை விளையாட்டுகள் நடத்தபட்டன. எங்கும் மகிழ்ச்சி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் கதிரவன் மறையும் வரை. எல்லா நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யபட்டன. இதைத்தான் மலரும் நினைவுகள் என்பார்களோ. இந்த நாளை என்று நினைத்தாலும் மனதில் இன்பம் பொங்கும். அனைவரும் வரிசையாக வந்து புதுதம்பதியரிடம் தங்களுக்கு பிடித்தது பிடிக்காததை பட்டியலிட்டனர். அவர்கள் என்றும் அன்புடன் வாழ ஆசிகளும் தெரிவித்தனர்.

சந்திரன் கதிரவனை அகற்றியபின், பௌர்ணமி நிலவொளியில் குளத்தங்கரையில், நிலா சோறு உண்டு குமாரின் திருமண வைபோகம் முற்றியது.

இரண்டாம் முன்காட்சி பதிவு முடிந்தது.


பேருந்து கோயம்பேடு வந்து சேர்ந்தது. மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்லலாம் என்று எண்ணி


'சுந்தரம் மருத்துவமனை போகனும்.எவ்வளோ?'

'நூறு ருபாய் சார்.'

'இங்க இருந்து இருபது நிமிஷம் கூட ஆகாது இவ்வளோ சொல்றிங்க'

'ஒன் வே சார், சுத்தி சுத்தி போகனும்'

'இல்லனா மட்டும் கம்மியாவா கேப்பிங்க'

'150ரூபா கொடு சார் நம்ம ஆட்டோல போலாம்'னு இன்னொருத்தன் வந்தான்.

'நான் ஒன்பது ரூபா கொடுத்து பஸ்லயே போறேன்'.

பெங்களுருவில் 'ஷேர்ஆட்டோ' என்பதே கிடையாது. காரணம் மக்கள் செல்லும் வகையில் ஆட்டோ கட்டணம் மலிவாக உள்ளது. நான் 2011இல் பெங்களுரு சென்ற போது, மூன்று கிலோ மீட்டர் வரை பதினேழு ரூபாய் தான் கட்டணம். நான் இருபது ரூபாய் கொடுத்து மூன்று ரூபாய் திரும்ப பெற்றபோது 'சென்னைல ஆட்டோகாரங்க பண்ணற அராஜகம் எப்ப ஒழியுமோ?' என்று என்னுள் எண்ணினேன். சென்னையில ஆட்டோக்காரங்களோட சண்ட போடாதவுங்க யாருமே கிடையாது.

கல்யாணத்துக்கு பின் பலமுறை குமாரிடம் பேசியதுண்டு. அவன் உறவினர்கள் அவனை தள்ளி வைத்தனர், அவன் பெற்றோர் நடுத்தர வர்கம். வசதி இல்லை. குமார் arrear வைத்தமையால் அவனுக்கு ஒரு BPOவில் தான் வேலை கிடைத்தது.  ஆறு ஆயிரத்து முன்னூறு ரூபாய்  சம்பளம், தான் சம்பாதித்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற கர்வம் கொண்டான். இருவரும் நிறைய கஷ்டப்பட்டார்காள். ஆனால் எப்பொழுது பேசினாலும் ஒரு குறையுமின்றி சந்தோஷமாய் இருப்பதாக   கூறுவான்.

(கடுப்பாகாதிங்க .அடுத்ததுதான் கடைசி பத்தி )

ஒரு வழியாக நடந்து வந்து மருத்துவமனையை அடைந்தேன். மழலை முகத்தை பார்த்தால் என்ன ஒரு ஆனந்தம். குமார் எனக்கு இனிப்பு வழங்கினான், குழந்தைக்கு என்று எண்ணி என் வாயில் லட்டுவை வைத்தபோது 'எனக்கு நல்ல வேல கெடச்சிருக்கு. ஒரு ஆண்டிற்கு 4.79 லட்சம்.'

குமார் என்னிடம் 'உனக்கு எப்படா கல்யாணம்?'

'பார்துகுட்டு இருக்காங்க எதுவும் சரியா அமையல'

'எது அமையல? வரதட்சனையா?' என்று குமார் என் முகத்தில் அறைய, கோபத்துடன் நான் அவனை முறக்கை, அவன் முகம் அரண்டு போய் இருக்க, எங்கள் HOD சன்னல் வழியே என்னை முறைக்க, என் பகல் கனவு நிறைவுற்றது.      

Tuesday, March 26, 2013

ஸ்ப்ளென்டரும் நானும்

1999 - நான் வேலூரில் ஆறாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கும் போது எங்க அப்பா வாங்கினார் Hero Honda- Splendor. மிதிவண்டியில் இருந்து இரு சக்கர வண்டிக்கு முன்னேற்றம் என்றால் அனைவருக்கும் சந்தோஷம்தான். ஆனால் என்னை இந்த மாயை அன்று பெரிதும் ஈர்க்கவில்லை. நாட்கள் செல்ல என்னையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு வந்தது. வண்டி சென்டர் ஸ்டான்ட் போட்டு நின்று கொண்டிருக்கும் போது, சாவியை மாட்டி கிக் ஸ்டார்ட் செய்து acceleratorஐ முறுக்கிய போது ஏற்பட்டது என் முதல் மோட்டார் காதல். அன்று முதல், தினமும் ஐந்து நிமிடமாவது முறுக்காமல் தூங்க மாட்டேன். ஆனால் ஒரு போதும் வண்டியை ஓட்ட ஆசை வந்தது இல்லை.

என்னுடன் பள்ளி பயின்ற நண்பன் J.நவீன் (என்னுடன் பல நவீன்கள் படித்துள்ளனர். இங்கு நமக்கு தேவை 'J' என்ற முன்னெழுத்து கொண்டவன்) என் வீட்டுக்கு இரு சக்கர வண்டியில் வருவதுண்டு. எட்டாம் வகுப்பிலே ஆறு அடி, கட்டுக்கோப்பான உடல், ஒரு சோடாபுட்டி கண்ணாடி (எங்க இருந்தாலும் என்ன மன்னிச்சிக்கோ நண்பா. கண்ணாடி இல்லாம உன்ன அடையாளம் காட்ட முடியாது ). பல முறை, ஓட்டுனர் உரிமம் இல்லாததால் போலீஸ்கு மொய் எழுதி உள்ளான். படிப்பை தவிற மற்ற அனைத்திலும் ஆர்வம் அதிகம். ஒரு முறை எளிதில் அவன் தேர்ச்சி பெற அவனுக்கு வழி காட்டினேன், அன்று முதல் எல்லா பரீட்சையின் போதும் என் வீட்டுக்கு வந்திடுவான் 'முக்கியமான கேள்வி எல்லாம்  சொல்லு டா 'னு. என்னை வண்டி ஓட்ட கத்துக்கோ என்று பல முறை சொன்னான். சில முறை, இங்கு எழுத முடியாத வார்த்தையாலும் திட்டியதுண்டு.  அப்படியும் எனக்கு பெரிய ஈர்ப்பு வரவில்லை.

பத்தாம் வகுப்பு பயில புதுவை செல்ல வேண்டிய கட்டாயம். பள்ளி தேடி அலைந்த அந்த கோடையில் ஒரு நாள், என் அப்பா பின் அமர கிழக்கு கடற்கரைக் சாலையில் புதுவையில் இருந்து என் கிராமம் வரை சுமார் நாற்பது கிலோ மீட்டர் ஓட்டிச் சென்றேன். சிறு பிள்ளைகள் சைக்கிள் முன்னாடி அமர்ந்து handle barஐ பிடித்தாலே தாங்கள் தான் ஒட்டுவதாக நினைப்பார்களே, அதே போல் தான் நான் அன்று உணர்ந்தேன். நான்காவது கியர் வரை அப்பா போட்டு விட்டார், நான் வண்டியை நேராக செலுத்தியதோடு சரி.  நெடுஞ்சாலை என்பதால் அதுக்கும்  பெரிதாய் ஆற்றல் தேவைப் படவில்லை. கடைசியாக ஒரு பள்ளியில் சேர அனுமதி கிட்டியது (சிபாரிசு மூலம் தான்). பத்தாம் வகுப்பு என்றால் பள்ளிகளில் உள் எடுப்பே கிடையாது என்பதை அன்றுதான் அறிந்தேன்.

வீட்டில் இருந்து பள்ளி தூரம் இல்லை என்றாலும், சரியான போக்குவரத்து இல்லாததால், சைக்கிளில் செல்ல முடிவு செய்தோம். புது சைக்கிளும் வாங்கித் தந்தார்கள். புதுவை முழுவதும் அந்த சைக்கிள்லதான் சுத்தி இருக்கேன். வேட்டையாடு விளையாடு படத்துக்கு டிக்கெட் கிடைக்காம, கள்ளச் சந்தையில  விக்கறவங்கள தேடி சென்று டிக்கெட் வாங்கனதும் அந்த சைக்கிள்ல தான்.

கல்லூரி சேர, எனக்கு பிடிக்கவே பிடிக்காத மாந(க)ரமான சென்னைக்கு வந்தேன். புதுவையில் இருந்த வரை வெளியூர் செல்ல மட்டுமே பேருந்தில் ஏறியவனை,  சென்னை எங்கு செல்லவும் பேருந்தில் ஏற்றியது. முப்பது ரூபாய் டிக்கெட்(ஒரு நாள் பஸ் பாஸ். இன்று இது ஐம்பது ரூபாய்) எடுத்தா கிழக்கே மெரினா, வடக்கே பழவேற்காடு, மேற்கே திருவள்ளூர், தெற்கே மாமல்லபுரம், எங்க வேண்ணா ஒரு நாள் பூரா சுத்தலாம். எத்தனை பஸ் வேண்ணா மாறலாம். கல்லூரியில் முதலாம் ஆண்டு முடிந்தது. நண்பர்கள் வண்டியில் பின்னிருக்கையில் உட்கார்ந்து செல்வது வழக்கம், அப்போது கூட  வண்டி ஓட்ட கத்துக்க வேண்டிய ஈர்ப்பு வரவில்லை.

இந்த  அழகு எல்லாம் இல்லங்க 
கல்லூரி இரண்டாம் ஆண்டு (2008- 2009) . என் வாழ்வில் நான் நினைக்காத திருப்பம் மிக சாதாரணமாக நடந்த நாள் அது. என் தெருவில் நான் பல நாட்கள் தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்த (எனக்கு பிடித்த) பெண் என் முன்னால் பல்சர் ஓட்டிச் சென்றாள். எனக்கு அப்ப நளதமயந்தி படத்தோட கதாநாயகி அறிமுகம் நினைவில் வந்தது.  துடித்தது மீசை, பொறுத்தது போதும் என்று பொங்கியது ஆண் கர்வம். மறுநாளே பயில்வோர் ஓட்டுனர் உரிமம்  (LLR) வாங்கினேன். அடுத்த நான்கு மாதங்கள் நான் விழாத தெரு கிடையாது. ஐந்தாம் மாதம் 'எட்டு' போட்டு விட்டு உரிமம் பெற்ற ஓட்டுனர் ஆனேன். அன்று முதல் எங்கு சென்றாலும் என் ஸ்ப்ளென்டரில் தான். எவ்வளோ நிகழ்வுகள், எவ்வளோ விபத்துக்கள். அப்பப்பா ! சொல்ல ஒரு கதை போதாது. என் மனதில் நின்ற முக்கியமான நிகழ்வுகளை மட்டும் பட்டியலிடுகிறேன்.

முதல் விபத்து. எல்லாரையும் போல் என்னை மிரட்டிய முதல் தருணம், ஒரு நாய் சாலையை கடக்கும் போதுதான். இந்த நாய்கள் எந்த பக்கம் போகும் என்று googleஆல் கூட  கணிக்க முடியாது. நான் சற்று திணறி, brake பிடிக்க வண்டி சாய்ந்தது. இடது முட்டியில் முதல் விழுப்புண்.

இரண்டாம் விபத்து. வடக்கு உஸ்மான் சாலையைக் கடந்து கல்லூரி சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். மணி எட்டு இருபது, மின் விளக்குகள் பளிச்சிட்டு கொண்டிருந்தன. ஒரு சிறிய மேம்பாலம். திடீரென்று ஒரு கார் ஆட்டோவை முந்தி செல்ல, தடம் மாறி  என்னை நோக்கி வேகமாக வந்தது. நான் வண்டியை ஓரம் தள்ள, சாய்ந்து கீழே விழுந்தோம் (ஸ்ப்ளென்டரும் நானும்). நீங்க கேட்கலாம் 'விபத்துனா எப்பவுமே எதிர்ல வரவனதானே தப்பு சொல்லுவிங்க?'னு. உண்மையாவே விபத்து நடந்ததுக்குக் காரணம் அந்த வீணாப்போன கார் தான்,  நிறுத்த கூட இல்ல. எங்க ரெண்டு பேருக்குமே சேதம் அதிகம், ஆனா வீடு போய்  சேர்ர வரைக்கும் எதையும் வெளிய காட்டல.      

மூன்றாம் விபத்து. அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்த சமயம். ஒரு நாள் வீடு திரும்பும்போது திருமங்கலம் சந்திப்பில், கைபேசி பேசி கொண்டே ஒரு பெண் சாலையை கடக்க, அவள் மீது ஏற்ற கூடாது என்று நான் வண்டியை ஓரம் தள்ள, வந்த வேகத்தில் வண்டி சாய்ந்து சற்று தூரம் இழுத்துக் கொண்டு சென்றது. கடன் வாங்கி பயன் படுத்திய என் நண்பனின் கண்ணாடி நொறுங்கியது. வண்டியை தள்ளி ஓரம் நிறுத்திவிட்டு அந்த பெண்ணை காணச் சென்றேன். வாயெல்லாம் ரத்தம் ,வண்டி சக்கரம் அவள் காலை தட்டியதில் கீழே விழுந்திருப்பாள் போலும். பெண் என்பதால் எப்போதும் போல் கூட்டம் கூடியது. அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றனர். ஒரு  ஆபத்தாண்டவன் (இவர் அடுத்த காட்சியிலும் வருவதாலும் உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதாலும்  இவருக்கு ஆபத்தாண்டவன் என்று பெயர் சூட்டுகிறேன்)  நான் தப்பி செல்லாமல் இருக்க அவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு என் வண்டியில் பின் இருக்கையில் அமர்ந்து வந்தார்.  அவர் நண்பர் எங்களைப் பின் தொடர்ந்து   வந்தார். சிறு தையல் போட்டனர். சில ஊசி, மாத்திரை எழுதி தந்தனர். நான்தான் வாங்கிக் கொடுத்தேன். ஆபத்தாண்டவன் என்னை முழு வீச்சில் கண்காணித்தார். 

விபத்து நடந்த பகுதி (இன்று)
அந்த பெண்ணின் அம்மா அவளின்  நான்கு வயது குழந்தையை  இடுப்பில் தூக்கிய படி  'ஏன்ப்பா இப்படி பண்ணிட்ட? அவ புருஷன் பிரைன் பீவர்ல படுக்கையா கிடக்கிறான். அவன பார்க்கத்தான் இப்ப ஊருக்கு கிளம்புறேன்னு போன் பண்ணினா'

அருகில் இருந்த ஆபத்தாண்டவனின் நண்பர்  'அவங்கதாம்மா பார்க்காம சாலைய கடந்துட்டாங்க' (இவர் உண்மையிலே நல்லவர் போலும்). 

அக்கறையுடன் என்னை போக விடாமல் தடுப்பதாக எண்ணிக் கொண்டு இருந்த ஆபத்தாண்டவன்

'அவங்க அப்பா போலீஸாம். இங்க வந்துட்டு இருக்காரு. எங்கயும் போய்டாத '

'யோவ் ....... உன் வேலையப் போய் பாரு. விட்டுட்டு போகணும்னா அங்கேயே போய் இருப்பேன். அவர் யாரா இருந்தா எனக்கு என்ன?'

போலீஸ் அப்பா வந்தவுடன் அந்த உயர்ந்த உள்ளம் என்னை ஒப்படைத்து விட்டு கெளம்பியது. வாயில் பற்கள் உடைந்ததால் பல் மருத்துவமனை கொண்டு செல்ல சொன்னார்கள். அவங்க அப்பா ஆட்டோ பிடிக்க சென்றார்.

அந்த பெண் வெளியில் வந்து ' I am alright. நீங்க கெளம்புங்க' என்றாள் .கெளம்ப மனசு இல்லாம ஆட்டோ பின் சென்றேன் .(மறுநாள் வீட்டில் திட்டு வாங்கியபோது இந்த தருணம்  கெளம்பியிருக்கலாம் என்று தோணியது)

பல் மருத்துவமனையில் பல்லுடன் சேர்த்து காசும் பிடுங்குவது வழக்கம். மூன்று பற்கள் உடஞ்சதுக்கு பதினெட்டு ஆயிரம் ஆகும்னு சொன்னாங்க. அந்த பெண் மீண்டும் என்னை போக சொல்ல, அவங்க அப்பா 'இருந்தா தான்மா இவனுங்களுக்கு எல்லாம் கஷ்டம் தெரியும்' என்று என்னைப் பார்த்து கருவ. என்ன உலகமடா இது என்று மனதினுள் பொருமிக் கொண்டேன் !. என் மனசாட்சி பொறுக்க வில்லை. அந்த மாத சம்பளத்தில் பாக்கி இருந்த ஏழு ஆயிரம் ரூபாயையும் கொடுத்துவிட்டுதான் சென்றேன். அதற்கு வீட்டில் கச்சேரி கலை கட்டியது. 

கல்லூரியில் ஒரு நாள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இரு சக்கர வண்டிகளில் பழவேற்காடு சென்றோம். நண்பர்கள் எல்லோரும் புது ரக  பவர் வண்டிகள் வைத்திருந்தனர். ஆகையால் சீறிப் பாய்ந்தனர். நம்ம ஆளு கொஞ்சம் மெதுவாத்தான் போவாரு. இப்ப அவருக்கு முதுமை வந்துடுச்சு, பத்து வயசு. தொலைவில் ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது. என் நண்பன் ஒருவன் மறைவில் தன் டேங்க்ஐ காலி செய்துகொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் கை காட்டி நிறுத்தச் சொன்னான். நின்ற பின்பு தான் தெரிந்தது அவன் வண்டி டேங்க்உம் காலி என்று. ஆமை முயலை வென்றதை அன்று நான் கண்டு உணர்ந்தேன். அப்ப அவன் வண்டிக்கு சாப்பாடு போட்டது நம்ம ஸ்ப்ளென்டர்தான். நுறு ரூபாய்க்கு சாப்ட்டா நம்ம ஐயா சென்னை முழுக்க சுத்துவாரு.

என்னங்க, இன்னும் போக்குவரத்து காவல் வரலன்னுதான பார்க்கரிங்க. அவங்க இல்லாம சென்னைல எந்த வண்டி கதையும் ஓடாது. இனிமே பூரா அவங்கதான்.

வடபழனி சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்தது. நமக்குதான் எங்கும் அவசரம் ஆச்சே, எல்லா சந்துலயும் புகுந்து, முன்னாடி வந்து நின்னாச்சு. ஒருத்தர் வந்து அந்த கோயில் வரைக்கும் விட்டுடுங்கன்னு ( நான் எதுவும் சொல்வதுக்குள்) ஏறி, பின் இருக்கையில் அமர்ந்தார். அவர் கை காட்டிய இடத்தில வண்டியை நிறுத்திய உடன், என் முன் வந்து (நன்றி சொல்லுவாருன்னு நினைத்தால்) ஒரு அடையாள அட்டையை நீட்டி, 'நான் போலீஸ். டாகுமென்ட்ஸ் எல்லாம் எடு' என்றார்.

இவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா. நானும் எல்லாத்தையும் சரியா எடுத்து காண்பிச்சேன். எங்க அப்பா பேரில் வண்டி பதிவாகி இருந்தது.
'வண்டி வேர ஒருத்தர் பேர்ல இருக்கே'

'என்னோட அப்பாதான். '

'போன் போடு பேசுவோம்' என்று வண்டியில் இருந்து சாவியை எடுத்துக்கொண்டார். 

'சார், இங்க ஒருத்தர் உங்க வண்டி வச்சிருக்கரே உங்க மகன் தானா'...(நல்ல கேள்வி. அது எங்க அப்பானு உனக்கு நான் சொல்லித்தானே தெரிஞ்சுது)

'இது வேலூர்ல பதிவு செய்த  வண்டி, சென்னைல ஓட்ட கூடாது' அவர்  அப்பாவிடம் பேசியதில் இது மட்டும் தான் எனக்கு கேட்டது. 

என் அப்பா  'காசு எதிர் பார்க்கிறான். எதாச்சு கொடுத்து தொல' என்றார்.

'என்ன தம்பி கோர்ட் போனா அபராதம் ஆயிரம் ரூபாய். இங்கயே கட்டனா இருநூறு தான்'

'என் கிட்ட காசு அவளோ இல்லைங்க'

'எவ்வளோ தான் வச்சி இருக்கே'

'இவ்ளோதான்' என்று என் பணப்பையை எடுத்து நீட்டினேன். நல்ல வேளையாக பெட்ரோல் போட்ட உடன் மீதி பணத்தை பெட்ரோல் டேங்க் மேலுறையில்  வைத்தேன்.

பணப்பையில் ஒரு இருபது ரூபாய் நோட்டும், ஏழு ரூபாய் சில்லறை காசும் இருந்தது.அவை அனைத்தையும் எடுத்துக்கொண்டுதான் என்னை அனுப்பினார். அன்றில் இருந்து தெரியாதவர்களை ஏற்றுவது இல்லை.

அடுத்த சம்பவம். ஒரு நாள் என் இரு நண்பர்களுடன் வில்லிவாக்கத்தில் வண்டியில் மூவருலா சென்று கொண்டிருந்த போது, காவல் துறை முன்னாடி நம்ம ஐயா நின்னுட்டாரு. ஞாயிற்று கிழமை வேற. ஒரு போலீஸ் மட்டும் சாவிய எடுத்து, வண்டி ஸ்டார்ட் பண்ணி 'வண்டி உன்னுதா, ஏறு' என்று தன் பின்னால் அழைத்துக்கொண்டு, காவல் நிலையம் சென்று வழக்கு பதிவு செய்யப் போவதா கூறினார். பேரம் பேசும் தருணம் வர காத்திருந்தேன்.

இதே போல் என் நண்பன் வண்டியில் மூவருலா சென்று நுங்கம்பாக்கத்தில் மாட்டிய போது. 

'எங்கள பார்த்தும் வண்டிய நேர வந்து விட்டுட்ட. உன் தைரியத்த நான் பாராட்டுறேன். அபாயகரமா வண்டி ஓட்டறதுக்கு அபராதம் ஆயிரத்து முப்பது ரூபாய்' என்று சொல்லிக்கொண்டே ஒரு துண்டு சீட்டை காட்டினார். பல முறை மடிக்க பட்ட அதில் அவர் கூறிய தொகை அச்சடிக்க பட்டிருப்பதை சுட்டி காட்டினார், ஏதோ அது ஒரு அரசு ஆணை போல.


'அவளோ காசு இல்ல சார்'


'வண்டிய இங்க விட்டுட்டு ATMல எடுத்துட்டு வாங்க' என்றார்.


 இந்த துணிக்கடையில எல்லாம் இருக்கே பண அட்டைதேய்த்தல்இயந்திரம் அது மாதிரி ஒன்னு இவங்களுக்கும் அரசு கொடுத்தா வசதியா இருக்கும் என்று நான்  எண்ணிக் கொண்டிருக்க என் நண்பன் ஐநூற்று அறுபது ரூபாயில் பேரத்தை முடித்தான்.


இப்ப நம்ம வண்டி போயிட்டே இருக்க, காக்கி சட்டை பனிக்கட்டியை உடைக்க 
'தம்பி வழக்கு பதிவு பண்ணா அதிகம்  அலையனும். இங்கயே எதாச்சு அபராதம் கட்டிட்டு போய்டு'. (இதற்க்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா!)

'சரி சார். இருநூறு ரூபாய் வாங்கிக்கோங்க'

'ரொம்ப கம்மியாச்சே' என்று தன் மேல் அதிகாரியை கைபேசியில் அழைத்து தொகையை சொன்னார். அவர் சம்மதித்துவிட்டார் போலும். (மத்த வில வாசி மாதிரி போலீஸ் கட்டணமும் இடத்துக்கு ஏத்த மாதிரி மாறும் போல. நுங்கம்பாக்கத்துல ஐநூற்று அறுபது, வில்லிவாக்கத்துல இருநூறு.)

'என்னிடம் ஐநூறு ரூபாய் நோட்டு தான் இருக்கிறது. உங்க கிட்ட சில்லறை  இருக்கா?'

ஒரு கடை முன் அவர் நிறுத்த, காக்கி சட்டையை பார்த்தவுடன் அவன் எதுவும் சொல்லாமல் சில்லறை கொடுத்தான்.அவர் பேசியபடி இருநூறுதான் வாங்கினாரு. நேர்மையான மனுஷன்.

தேவி திரையரங்கம் சந்திப்பில் 'U' போன்ற திருப்பம்  எடுத்ததுக்கு ஒரு நூறு, அண்ணா வளைவு கீழே 'signal violation'ல ஒரு ஐம்பது என்று மொய் பட்டியல் நீளும்.

Hero மற்றும் Hondaவோட நட்பும் முடிஞ்சது, ஸ்ப்ளென்டர்+  போய் சூப்பர் ஸ்ப்ளென்டர் வந்து, இப்ப  ஸ்ப்ளென்டர் ப்ரோவும் வந்தாச்சு, ஆனாலும் தொண்ணூறு ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கும் நம்ம ஐயாவுக்கு ஒரே ஒரு ஆசை தான். என்ஜின் அடங்கரதுக்குள்ள புதுசா ஓடிட்டு இருக்கே இந்த ஸ்கூட்டி மாதிரி வண்டிங்க, அதுல எதயாச்சு ஒன்ன கொஞ்ச தூரம் தள்ளிட்டு போகணும்மா, அட அதுதாங்க  tow பண்ணிடனும்னு. உங்க யார் கிட்டயாச்சு அந்த மாதிரி வண்டி இருந்தா, இவர் ஆசைய நிறைவேத்த, சொல்லி அனுப்புங்க (மகளிர் மட்டும்). 

Tuesday, March 19, 2013

களவு - பகுதி ஒன்று

களவு - பகுதி  ஒன்று :

அன்று - 1983

யற்கை வளம் விரைவாக குன்றி வந்தபோதும், மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட  காலகட்டம். மாரி பொழியா நிலை, நிலத்தடி நீர் மட்டம் வேர்கள் எட்டா தூரம் சென்றுகொண்டிருந்தது. மரங்களைக் காப்பாற்ற அறிவியலை நோக்கி செல்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தார் கம்பத்துக்காரர் (இடைக்கழி நாடு பகுதிகளில் மொத்தமாக ஒருவரின் நில புலன்களை கவனிப்பவருக்கு வழங்கப்பட்டு வரும் பட்ட பெயர் இது).

மெட்ராஸ் சென்று diesel engine உடன் பொருந்திய pump set ஒன்று order செய்தார். தோட்டத்தில் நீர் வளம் பார்க்க பட்டு, bore அமைக்க ஏற்பாடுகள் தொடங்க பட்டன. ஊர் மொத்தமும் அந்த தென்னந் தோப்பில் தான் இருந்தது, பூமியில் இருந்து pipe வழியா நீர் வரப்போகும் அதிசயத்தைக் காண. ஆறு அடி ஆழத்தில் பள்ளம் வெட்ட பட்டது. காலை ஆரம்பித்த, நிலத்தை துளை போடும், பணி மறுநாளும் தொடர, நாற்பது அடியில் வெற்றி கிட்டியது. துளையில் இரும்பு pipe இறக்க பட்டது, நிலத்தின் மேல் அரை அடி நீளம் pipeஐ  urea பையால் மூடிய உடன் அன்றைய நாள் முடிந்தது.


ஜோடியாக வந்து இறங்கியது engine, pump set உடன். Engine - பச்சை நிறம், தலை போன்ற வடிவம் கொண்ட diesel tank, கால்கள் போல் இரண்டு சக்கரங்கள் 

, 750 கிலோ எடை, யானை போன்ற  கம்பீரம். Tractorஇல் இருந்து கீழே இறக்க நான்கு பேர் முயன்றும் முடியவில்லை.

கிட்ட தட்ட பொருந்தும்  engineஇன் படம்  


'இதை இறக்க அவனால தான் முடியும். எட்டிய வரச் சொல்லுங்க' என்றார் கம்பத்துக்காரர்.மாமிச மலை வரும் என்று எண்ணி அனைவரும் காத்திருந்த போது  வந்தது- ஒல்லியான,ஆனால் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, வீரப்பன் மீசை, அரை போதை- எட்டி. மாயமோ மர்மமோ, பத்து நிமிடத்தில் engineஐ bore குழியின் அருகில் கொண்டு சேர்த்தான். இவனை olympics அனுப்பி இருந்தால், பளு தூக்கும் போட்டியில் அனைத்து பிரிவிலும் தங்கம் நமக்கு தான். நம் நாட்டில் பல ஆற்றல்கள் இப்படித்தான் வீணாகின்றன.


Pumpஇன் கீழ் பகுதி பள்ளத்தில் புதைத்திருந்த pipeஇன் மேல் பொருத்தப்பட்டது, மேல் பகுதியில் delivery pipe இணைக்கப்பட்டது. பள்ளத்தின் மேல் engine, பள்ளத்தின் உள் pump set. Engine மற்றும் pumpஇன் shaftஐ ஒரு leather belt இணைத்து, மேல் இருந்து கீழ் சாய்வாக வெட்டப் பட்ட ஒரு கால்வாய் வாயிலாக.

Engineஐ start செய்ய,அதன் ஒரு சக்கரத்தை சுற்றினான் எட்டி, startஆகவில்லை. இன்னொரு முறை முயன்றும் பலனில்லை. திடீரென்று ஒரு அம்மா வந்து அதன் தலையில் குங்குமம் இட,  குபுக்...குபுக்... என்று இரயில் engine போல சத்தம் போட்டு கிளம்பியது. இந்தக் காட்சிகளை ஊரே வட்ட மிட்டு, தெருக்கூத்து காண்பது போல்  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. Delivery pipe முதலில் லேசாக ஆடியது. பின்  கூழாங் கற்கலுடன்  நீர்கலந்த மணலை கக்கியது. சற்று நேரத்தில் மணல் தெளிந்து தண்ணீர் சீறிப் பாய்ந்தது. Pipe அடியில் மணலை ஆராய்ந்து கொண்டிருந்த எட்டி நனைந்தான், போதை தெளிந்தது. நிலத்தடி நீரை பார்த்த ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். கற்பூர தீபாராதனையும்  நடந்தது.

சில நாட்களுக்கு பின். 
அதிகாலை . வழக்கம் போல் கம்பத்துக்காரர் தன் காலை ரோந்து பணிகளை பார்க்க தயாராகினார். கதவை திறக்க முயன்ற போது தாழ்ப்பாள் கையுடன் வந்தது, சகுனம் சரி இல்லை என்று சற்று அமர்ந்து, பின் சென்றார். வாசல் வெளியில் வந்த போது எட்டி (தெளிவாக) வேகமாக அவரை நோக்கி ஓடி வருவதைக் கண்டார். 

'எசமான் ,சீக்கரம் வாங்க '

'எங்கடா வர சொல்ற '


' Engine கொட்டாக்கு'


'என்ன ஆச்சு'

'வாங்க தெரியும்'

சென்று பார்த்தால், ஓர் நல்லிரவு களவு. Engineஐ திருட வந்து, அதை தூக்க முடியாமல், pump set  மற்றும் leather belt இரண்டையும்  திருடிச் சென்றுள்ளனர். இந்தச் செய்தி ஊர் எங்கும் பரவியது. 

ன்று மாலை கம்பத்துக்காரர் வீட்டுக்கு போலீஸ் வந்தது. புதிதாக பவன் சிங் inspectorஆக பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. அவர் ஆங்கிலத்தில் பேசியதை குமாஸ்தா மொழி பெயர்க்க பின் வருமாறு,

'சமீபமா இந்த ஊர்ல நெறைய திருட்டு நடக்குது. ஆனா யாரும் complaint கொடுக்கறது இல்ல. உங்களுக்கு உதவத்தான் அரசாங்கம் எங்கள அனுப்பி  இருக்கு. நீங்க எல்லாரும் எங்களுக்கு இந்த திருட்ட கண்டுபிடிக்க ஒத்துழைக்க வேண்டும்.'

போலீஸ் jeepஐ  கண்டு வீட்டு வாசலில் கூட்டம் கூடியது.

'ஹா ...ஹா.. நீங்க கண்டுபிக்க போறிங்களா ...ஹா ...ஹா. இது என் ஊர், என்ன மீறி இங்க எதுவும் நடக்காது. நான் பார்த்துகரேன். அவர போக சொல்லுங்க ஐயரே '

'You crazy village folks' என்று சிங் கூற, அதைக் கேட்டு கம்பத்துக்காரர் பொங்கி

'Mind your  words mister. Do not lose your  way here. Do not middle in our ways, just sign the register daily and get your pay. We will catch the thief in seven days.'

அதிர்ந்து போனார் குமாஸ்தா. 

Jeep சென்றவுடன் ,எட்டி 'எப்படி எசமான் கண்டுபிடிக்கறது?' 

'Engine கொட்டாய்ல ஒரு கால் அடி மண் எடுத்து கொடுத்த இல்ல. அவன்தான் திருடன். அவன் கால் அடி மண்ண வச்சி முட்டை மந்திரம் வச்சிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல அவன் வாயால இல்ல  வயத்தால கண்டிப்பா இரத்தம் கக்கிடுவான். அப்ப தெரிஞ்சுடும் அவன் யாருன்னு.'

கூட்டம் கலைந்தது .


முட்டை மந்திரத்துக்கு பின் நான்கு  நாட்கள் கழிந்தன. ஐந்தாம் நாள் காலை, கம்பத்துக்காரர் வீட்டு வாசலில் இருந்தது காணாமல் போன beltஉம் pumpஉம்.

எட்டி ஒருவன் கையை முதுகின் பின் மடக்கி இழுத்துகுட்டு வந்தான்.


'எசமான் நீங்க சொன்ன மாதிரி ராத்திரி பூரா மரத்து மேலே இருந்தேன், இவன்தான்  வந்து pumpஅ போட்டுட்டு ஓடிட்டான்.'


'என்னடா அம்மாவாசை, ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி, கடைசில என் கிட்டயே உன் வேலைய காட்டறியா. இவன அந்த தென்ன மரத்துல கட்டி போடு, policeகு சொல்லி அனுப்பு jailல இருந்தாதான் இவனுக்கு எல்லாம் புத்தி வரும்'


Inspector சிங் ' How did you know it was him ? '

'திருடு போன ராத்திரியே கொட்டாய சுத்தி தேடுனோம். எல்லா காலடி தடத்தையும் தெறமையா கலைச்சி இருந்தான். ஆனா, இருட்டுல ஒரு கல்லுல இடிச்சி ரத்தம் கொஞ்சம் செதறி இருந்துச்சி, மறுநாள் எல்லாரையும் நீங்க வந்தப்ப நோட்டம்  விட்டுட்டு இருந்தேன். இவன் முழியே சரி இல்ல. கால கொஞ்சம் ஊனி நடந்தான். அவன் காதுல கேட்கற மாதிரி  முட்ட மந்திரத்த பத்தி சொன்னேன். அவன் இல்லாதப்ப அவன் குடிசைக்கு  போய் பார்த்தேன், எதுவும் இல்ல- மீன் கொழம்பு வாசம்  தவிர. பணமும் இல்ல, இவன் உன்னம் பொருள விக்கலன்னு தெரிஞ்சுது. கொஞ்சம் முடி எடுத்து, பொடியாக் கிள்ளி அதுல கலந்தேன். ரெண்டு நாளா அவனுக்கு வயிறு முடியாம போச்சு. பய மந்திரம்னு பயந்துட்டான் .Pump வெளிய வந்துடுச்சி. Mister Pawan , this is how we deal thefts here. '

குமாஸ்தா மொழி பெயர்க்க, சிங் 'Sorry about earlier. You are a GENIUS!'

இன்று 2013

ம்பதுக்காரருக்கு இப்போது வயது 68. உடல் நலம் குன்றி, இருதயம் பாதித்ததால், தன் மகன் இல்லத்தில் தங்கி மருத்துவ ஆலோசனை பெறவேண்டிய கட்டாயம். தன் கிராமம்தான் சொர்க்கம் என்று எண்ணுபவர்.  அவர் மகன் அலுவலகம் செல்லும் போது அவரையும், அவர் மனைவியையும் மருத்துவமனையில் carஇல் அழைத்து சென்று விட்டுச் செல்வான், பிறகு இருவரும் பேருந்தில் வீடு திரும்புவர். இது தினமும் வழக்கம். இன்றும் அனைவரும்  புறப்பட தயாராக இருந்தனர், கம்பத்துக்காரர் கதவை திறக்க முயலும் போது, தாழ்ப்பாள் கையுடன் வந்தது. அவர் மனதில் அசரிரீ ஒலித்தது.  

களவு தொடரும்.......... 

களவு - பகுதி இரண்டு