****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
ஆங்கிலம் மற்றும் தமிழ் படங்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு பிற மொழி படங்களின் மீது ஈர்ப்பு வர முக்கிய காரணம் இந்த படம். ராஷோமோன் என்பது ஜப்பானிய மொழியில் ஒரு நகரின் வாயிலை குறிக்கும். படம் தொடங்குவதும் முடிவதும் அங்கு தான், மழைக்காக ஒதுங்கும் ஒருவன் அங்கு இருந்த சாமியார் மற்றும் மர வெட்டி இருவரிடம் பேச்சு கொடுக்க கதை ஆரம்பிக்கிறது.
ஒரு கொலையின் முக்கிய சாட்சி தான் இந்த மர வெட்டி, அவன் வழக்கு விசாரணையில் நடந்த ஆச்சரியங்களை சொல்ல, மழைக்கு ஒதுங்கியவன் முழு கதையை கேட்பான். அந்த பிணத்தை முதலில் கண்ட மர வெட்டி காவல் ஆட்களுக்கு தகவல் சொல்லியவுடன், விசாரணைகள் தொடங்கும்.
ஒரு கணவன் மனைவி இருவரும் காட்டு வழியில் செல்ல, அதைக் கண்ட ஒரு கள்ளன் அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு அந்த கணவனை கொன்றான் என்பதே கதை. ஆனால், எப்படி அந்த கொலை நடந்தது, அதை சுற்றிய நிகழ்வுகள் என்ன என்பதை நான்கு பேர் நான்கு கதையாக விசாரணையில் சொல்வர். ஒரு கதைக்கு நான்கு கோணங்கள், இதுவே இந்த படத்தின் சிறப்பு அம்சம்.
அந்த கள்ளன் ஒரு கதை சொல்லுவான், அந்த இளம் மனைவி ஒரு கதை சொல்லுவாள், இறந்தவன் ஆவியாக வந்து ஒரு கதை சொல்லுவான். எதுதான் உண்மை என்று நாம் குழம்பி இருக்கும் நிலையில், நான்காவதாக ஒரு கதையும் வரும். யார் அந்த கதை சொல்கிறார்கள் என்பதை நான் சொன்னால் உங்களுக்கு சுவாரசியம் கிட்டாது. நான்கில் எது உண்மை கதை என்று படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தில் நான் ரசித்தவை:
ஒரே காட்சியை திரும்பத் திரும்ப காட்டினாலும்,சலிக்காத விதத்தில் திரைக்கதை அமைத்து இருப்பதே படத்தின் பலம்.
கேமரா ஆட்களின் பின் அவர்களை வேகமாக தொடர்ந்து செல்வது போல் இருப்பதும், பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டும் விதம் இருப்பதும் கதைக்கு வலிமை சேர்க்கின்றன.
அந்த இளம் மனைவியின் நடிப்பு, நான்கு முறையும் மூன்று விதமாக இருப்பது நமக்குள் ஏற்படும் குழப்பத்திற்கு மூல காரணம்.
மனைவி |
அந்த கள்ளனின் கதாபாத்திரம் மிகவும் எதார்த்தமாக சித்தரித்து இருப்பார் இயக்குனர் அகிரா. அவன் உடல் மொழிகள், பேச்சு, நடை எல்லா வற்றிலும் கள்ளனுக்கு ஏற்ற ஒரு திமிர் இயல்பாக அமைந்து இருப்பது அருமை. இந்த கள்ளன் கதாப்பாத்திரத்தில் நடித்தவரை மற்ற அகிரா படங்களிலும் நான் கண்டு ரசித்ததுண்டு.
கள்ளன் |
படத்தில் மொத்தம் ஆறு பேர் தான், முக்கிய கதாபாத்திரங்கள் மூன்று மட்டுமே, மூவரை மட்டும் வைத்து கதையை நகர்த்துவது இயக்குனரின் தனித்திறமை.
விசாரணை காட்சிகளின் போது கதாபாத்திரங்கள் நம்மை பார்த்து, நம் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது போல் படமாக்கப்பட்டு இருப்பது நம்மை கதையுடன் இணைக்கும்.
உண்மைக்கு என்றுமே பல கோணங்கள் உண்டு என்பதே இந்த படத்தின் மூலம் நான் புரிந்தது.
நீங்க கேட்களாம் 'ஒரு கதையை பல கோணத்தில் சொல்லும் விதத்தில் ஆயுத எழுத்து, Vantage Point போன்ற எத்தனையோ படங்கள் வந்து விட்டன, இதில் என்ன சிறப்பு இருக்க போகுது?' என்று.
என் பதில், நகல் எத்தனை வந்தாலும் அசல் என்றுமே ஒசத்தி தான், இந்த பாணியில் கதையை நகர்த்த முதன் முதலில் 1950களிலேயே விதை போட்டவர் அகிரா.
அகிரா குரோசோவா |
*****************************************************************************************
ஆண்டு : 1950
மொழி : ஜப்பானிய மொழி
என் மதிப்பீடு : 4.4/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************
Tweet | ||