வாலிப வயசு
சக அலுவலர் திருமணத்திற்கு, அலுவலக நண்பர்களுடன் வேப்பேரி சென்றிருந்தோம், பச்சை பசேல் என்று சென்னையில் ஒரு செழிப்பான பகுதி. அந்த பச்சைகளை ரசித்தவாறு நான் சாலையை கடக்க, எதிரில் வந்த வண்டியை கவணிக்கவில்லை, அந்த வண்டியின் சக்கரம் என் காலணி மேல் பதிந்தது. அந்த வண்டியில் கணவன் மனைவி இருவருமே இருந்தனர், கணவன் ஒன்றும் சொல்லவில்லை, மனைவி முறைத்தாள். கணவன் பேசாததுக்கு காரணம் பின்னால் சிரித்துக்கொண்டே வந்த சீனு சொன்ன தகவலில் தான் புரிந்தது.
மனைவி 'எப்படி வராங்க அறிவே இல்லாம, பராக்கு பார்த்துகுட்டு'.
கணவன் 'ஏன்டி திட்டற? பசங்கன்னா பிள்ளைங்கள பார்க்கத்தான் செய்வாங்க', என் இனமடா நீ.
திடீர் மழை
சென்னை புறவழிச் சாலையில், நம்ம ஐயா ஸ்ப்ளென்டரின் அனைத்து பாகங்களையும் திரட்டி எண்பதுகளில் வேகம் பிடித்து பறந்து கொண்டிருக்க , வெய்யில் முடியை பொசுக்க, எதிர்பாராமல் வானிலை மாறி, மேகம்தார் சாலையை குளிப்பாட்டியது. புறவழிச் சாலையை விட்டு தாம்பரம் நோக்கி இறங்கும் போது, முன்னே ஒரு ஆல்டோ ஓரங்கட்ட, நீதானமின்றி நம்ம ஐயா அதை மோதச் செல்ல, என் இதயம் பயந்தாலும், மூளை வேகமாக செயல் பட்டு, கைகளுக்கு சிக்னல் விரைந்து அனுப்ப, நான் வண்டியை வலது புறம் வேகமாக சாய்த்து முன் செல்ல, என் இடது கால் வண்டியின் பின் பம்பரை பதம் பார்த்தது. வண்டியை முன் சென்று நிறுத்தினால் பம்பர் தனியே தெரிய, அய்யோ போச்சே என்று என் மனம் தவிக்க, கார்க்காரன் முதலில் திட்டினாலும், அவன் பம்பர் நான் கைவைத்தவுடன் வண்டியில் எதுவும் நடக்காதது போல் ஒட்டிக்கொள்ள, அந்த ஓட்டுனர் என் நலம் விசாரித்து சென்றான்.
ஓங்கி அடிச்சா
இதே போன்ற நாய்(?) தான் அது. |
அயர்லாண்டில் மேற்படிப்பு முடித்து விட்டு தாயகம் திரும்பிய என் நண்பனை காண அவன் வீடு சென்றிருந்தேன். அவன் வீட்டில் ஒரு செல்ல நாய் உண்டு, எனக்கு நாய் என்றால் பயம் கிடையாது, அன்றுவரை. நான் என் வண்டியை நிறுத்தி விட்டு, தலைகவசத்தை கழட்ட, படுத்து இருந்த அந்த நாய், என்னை நோக்கி வேகமாக பாய, நான் பின் நோக்கி செல்ல, இதயம் படபடக்க அதன் நாக்கு என் மூக்கை தொட, நல்ல வேளை வாட்ச்மேன் அதை பிடித்து நிறுத்தினான். க்ரேட் டேன் இனத்தை சேர்ந்தது அந்த நாய், ஒரு மினி கன்னுக்குட்டி போலத்தான் இருக்கும். உசிர் பயம்னா என்னான்னு காட்டுடிச்சி பரமா...
ரசித்த (?) கம்மல்கள்
இன்றைய மங்கைகளின் காதுகளை கவனிக்கும் பழக்கம் உண்டா? எனக்கு பெண்களின் அணிகலன்களில் மிகவும் பிடித்தது கம்மல் தான். மறைமுகமாக ரசிப்பது உண்டு. இப்போது எல்லாம் கண்டதை காதில் மாட்டிக்கொள்வது பேஷன் ஆகிவிட்டது, அப்படி நான் கண்டு ஆச்சரியப்பட்ட சில கம்மல்கள்
செருப்பு தொங்கும் கம்மல்,
மயில் இறகு வடிவக் கம்மல்,
பொத்தான் வடிவக் கம்மல்,
தோசை கல் வடிவக் கம்மல்,
தட்டு வடிவக் கம்மல் என்று பட்டியல் நீளும்.
சாவி தொலையாமல் இருக்க.. |
உங்களுக்கு மீனாட்சி கம்மல் தெரியுமா? விஜய் டிவியில் வெளியாகும் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடிக்கும் அக்கா போடும் வகையான கம்மல்களுக்கு அவர் பெயரே வைத்து மார்க்கெட்டிங் பண்ணுகின்றனர். ஒரு காலத்தில் குஷ்பூ இட்லி போல.
எங்கே போகணும்?
வெள்ளிக்கிழமை மாலை ஆறுமணி, மக்கள் வெள்ளம் எனத் திரண்டு இருந்த சிறுசேரி பேருந்து நிலையம், சண்டை இட்டு ஒரு ஷேர் ஆட்டோவில் ஏற, அவனோ சோளிங்கநல்லூர் நெருங்க சட் என்று ஒரு சந்தினுள் நுழைய, எதிரில் இருந்த பெண் பயப்பட, பெண்களின் பாதுகாவலன் ரூபக் அந்த பெண்மணிக்கு ஆறுதல் சொல்லினாலும், என் மனதில் ' எங்கே போகணும்' என்று நான் பார்த்த ஒரு குறும்படம் நினைவில் வந்தது. அந்த குறும்படம் OMR சாலையில் IT மக்களை ஒரு சந்தினுள் கடத்தி பண அட்டைகளை பிடுங்கி, காசு எடுத்துக்கொண்டு பின் அவர்களை ஓட விடும் உண்மை சம்பவத்தை தழுவிய படம். நண்பர்கள் காண இங்கு சொடுக்கவும், எங்கே போகணும்.
ஆடு மேயிது
கான்கிரீட் காடாக மாறிய சென்னை மாநகரில், மாருதிக்கு நன்றி சொல்லிய ஆடுகள்.
copyright @ கனவு மெய்ப்பட 2013 |
L போர்டு
இந்த L போர்டை பார்த்தவுடன் என் நினைவிற்கு வருவது நான் சாலையில் சமீபத்தில் ஒரு ஆல்டோவின் பின் எழுதி இருந்த ஒரு வாசகம். தான் பயிற்சி ஓட்டுனர் என்பதை நாசூக்காக சொல்லிய அந்த ஞானி யாரோ? இதோ அந்த வாசகம்.
' Don't follow me
'coz I am not
Mahatma '
சமீபத்திய க்ரஷ்
தில்லு முல்லு படம் பல முறை பார்த்ததுண்டு, ஆனால் ஒரு முறையும் மாதவியை ரசித்தது இல்லை. ராஜ பார்வை படத்தை ஒரு முறை தான் பார்த்தேன், ஏனோ ஒரு காதல் மயக்கம் மாதவியின் மேல் தோன்றி விட்டது. பின் அவர் வரலாறை ஆராய்ந்தால், தென்னிந்திய மொழிகளில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து,தமிழில் பெரும்பாலும் ரஜினி-கமல் இருவருடன், தில்லு முல்லு, ராஜ பார்வை, டிக் டிக் டிக், சட்டம், தம்பிக்கு எந்த ஊரு, காக்கி சட்டை, அதிசய பிறவி என்று பல வெற்றி படங்களில் நடித்து இருந்தாலும் இணையத்தில் இவரின் நல்ல படங்கள் இல்லாதது வருத்தமே. மாதவி ரசிகர் மன்றத்தில் யாரேனும் உறுப்பினராக இணைய விரும்பினால் தயங்காமல் என்னை அணுகவும்.
எவ்வளோ அழகு ! |
பதிவர் சந்திப்பு
புலவர் இராமாநுசம் ஐயா வீட்டில், மஞ்சுவின் வருகையை ஒட்டி நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன். கவியாழி, கோவை ஆவி, தென்றல் சசி கலா, இராமாநுசம் ஐயா, ஸ்கூல் பையன், மதுமதி, சேட்டைக்காரன் ஐயா உள்ளிட்ட எனக்கு முன் அறிமுகம் இல்லாதவர்களுடனும், இரண்டாம் முறை சந்திக்கும் மின்னல் வரிகள் (Remo) கணேஷ் மற்றும் நண்பர் சீனுவுடன் அந்த சந்திப்பு இருந்தது. பதிவுலகிற்கு புதியவன் என்றோ, அவர்களிடம் அறிமுகம் இல்லாதவன் என்றோ நான் அன்று அந்த சபையில் ஒரு போதும் உணரவில்லை. பதிவர்கள் தமிழால் வந்த உறவுகளோ என்ற கேள்வியுடன், அன்றும் இரவு(அடிமை)ப் பணி இருக்க, பிரியா விடை பெற்று பாதியில் சென்றேன்.
தமிழ்10 திரட்டி
தமிழ்10 திரட்டியில் சேர முடியாமல் தடுமாறியபோது, அவர்களை தொடர்பு கொண்டு பதிவுகளை இணைக்க கிடைத்த தகவலை இங்கு பகிர்கிறேன், அறியாதவர்கள் பயன்படுத்திக்கொள்ள.
Tweet | ||