Wednesday, December 17, 2014

The Virgin Husband (சிறுகதை 21+ )

ஒரு வேகத்தில் அந்த விடுதி வரை சென்று விட்டாலும், அறைக்குள் செல்ல விடமால்  ஒரு வித பயம் கலந்த பதற்றம் என்னைத் தடுத்தது. இந்த நொடி என் வாழ்க்கை மாறுவதற்கான வினைகள் நியூட்டனின் விதிப்படி மூன்று மாதங்களுக்கு முன்பு, நான் என் நண்பன் ஒருவனை சந்தித்த பொழுதே தொடங்கிவிட்டது. 

அது ஒரு ஞாயிற்று கிழமையின் மதிய வேளை, சென்னையின் சமீபத்திய அடையாளங்களான மால்களில் ஒன்றான பினிக்ஸ் மாலில் என் நண்பன் மதனை சந்திக்க காத்திருந்தேன். மதன் கல்லூரியில் எனக்கு அறிமுகமாகி, குறைந்த காலத்தில் மிகவும் நெருங்கியவன். கல்லூரி முடிந்த பின் அவன் பெங்களூரு சென்றுவிட, கிட்ட தட்ட ஆறு வருடங்களுக்கு பின் அவனை சந்திக்கப் போகும் மனவெழுச்சியுடன் காத்திருந்தேன்.     

வாழ்வில் மிக சில மனிதர்களை  எத்தனை காலம் கடந்து சந்தித்தாலும், எந்தவித இடைவெளியுமின்றி விட்ட இடத்தில் இருந்து உறவை மீண்டும் அதே பொலிவுடன் தொடரமுடியும். மதனும் எனக்கு அப்படிப் பட்ட ஒரு சூழலை ஏற்படுத்த எங்கள் உரையாடல் பொழுதுபோக்கு, தொழில், அரசியல், சமூகம் என்று தொடங்கி ​ பல அந்தரங்களையும் வெளிக்கொணர்ந்தது.
  
'என்னடா சொல்ற!! கல்யாணமாகி ரெண்டு வருஷமாகியும் உன் பொண்டாட்டி உன்ன நெருங்க விடலையா?' என்று அதிர்ந்து போனான் மதன்.

'அவளுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து, எங்க எப்ப போகவும் முழு சுகந்திரம் கொடுத்து, மொத்த அன்பையும் செலுத்தியும்,  நான் அவள நெருங்கினா, 'நீங்க தாலி  கட்டனதுனால உங்க கூட படுக்கணுமா விபச்சாரியா?' அப்படின்னு ஒரு கேள்வி கேட்பா பாரு, அந்த நிமிஷம் ஊசி வச்சி கூத்தன பலூன் மாதிரி என் நெஞ்சு போசுங்கிடும்' என்று சொல்லும் போதே என் கண்ணில் இருந்து வர யோசித்த நீரை விரலால் துடைத்துக்கொண்டேன்.   

'ஒரு முறை நீயே அவல போர்ஸ் ' என்று மதன் முடிபதற்குள் 'பாலியல் வல்லுறவுல  எனக்கு உடன்பாடு இல்ல. அது ஒரு மென்மையான உணர்வு, ரெண்டு பேருக்கும் அது ஒரு சுகானுபவமா இருக்கணும்னு விரும்பறேன்' என்று கூறி அவனை மேலும் பேச விடாமல் தடுத்தேன்.     

அடுத்த ஐந்து நிமிடம் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. மதனும் ஆழ்ந்த சிந்தனைக்குள் இருப்பவன் போல் தென்பட, எங்கள் மௌனத்தை நானே உடைத்தேன்.

'என்னதான் இப்படி நல்லவன் போல பேசினாலும். எனக்குள் இருக்கற காம மிருகத்த இப்பயெல்லாம்  கட்டுப்படுத்த முடியல. எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும் எனக்குள்ள ஒரு இச்சை உணர்வு ஊருது. ஒரு முறை ஆசை தீர உடலுறவு கொண்டா தான் இந்த நரக வேதனையில் இருந்து என்னால வெளியவரமுடியும்னு தோணுது. காசுகொடுத்து போகலாம்னா எதாவது நோய் வந்துடுமோன்னு பயமா இருக்குடா' என்று என் மனதில் உள்ளதை உள்ளபடி அவனிடம் உடைத்தேன்.

மதனோ சற்றும் தயங்காமல் 'நீ நினைக்கற மாதிரி ஒரு முறைன்னு தான் நான் காமத்தின் உள்ள போனேன், ரெண்டு வருஷங்கள் முடிந்தும் வெளிய வர முடியல. வாரத்துல நாலு நாலாவது காமம் கழிக்கலனா தூக்கம் வராது. அது ஒரு வகையான இன்பம் தரும் இம்சை. அடக்க முடியா அவஸ்தை. என்னால உனக்கு ஒரு வழி செய்ய முடியும். ஆனா இந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி, காமம் உன்னை ஒரு மோக அடிமையா மாத்திடும்ங்கரத மனசுல நிறுத்திக்கோ' என்று என் பதில் வர காத்திருந்தான்.

அந்த நொடி எனது காம அவஸ்தையை அழிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் மனதில் இருந்தது, எதுவானாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று, 'என்ன வழி அது சொல்லு' என்றேன். அதற்கு பின் என்னை அவன் சீருந்தில் அழைத்துக்கொண்டு, ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத முட்டு சந்திற்கு அழைத்துச்சென்று, அந்த தகவல்களை கூறினான். முதலில் ஆச்சரியமாகவும் நம்ப முடியாதபடி இருந்தாலும் அவனது சொந்த அனுபவங்கள் என்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை. எல்லா விதிமுறைகளை சொல்லி அவன் 'சம்மதமா?' என்று கேட்க, நானும் சம்மதித்து விட்டு, முன்பணமும் செலுத்திவிட்டேன்.

அன்று இரவு வழக்கம் போல் என் மனைவி அவள் தாய் இல்லத்திலேயே தங்கி விட்டாள். ஒரு மாதத்தில் சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் அவள் என்னுடன் தங்கினாலே அதிசயம். தனிமையில், மதன் சொல்லிய தகவல்களை என் மனம் அசைபோடத் தொடங்கியது. அந்த அமைப்பின் பெயர் 'ஆனந்த பரவசம்'. அவர்களுக்கு முகம் முகவரி இரண்டுமே கிடையாது. திருமணமாகி கணவனால் இன்பம் கிடைக்காத பெண்களையும், மனைவியால் இன்பம் கிடைக்காத ஆண்களையும் காம இச்சைக்காக இணைப்பது தான் அந்த அமைப்பின் செயல்பாடு. மிகவும் அந்தரங்கமாக, நம்பகமான சில பணம் கொழுத்த உறுபினர்களை மட்டுமே வைத்து அவர்கள் செயல்படுகின்றனர். அனைத்து உறுப்பினர்களின் அடையாளமும் ரகிசயமாக பாதுகாக்கப்படுவது தான் அந்த அமைப்பின் வெற்றி. அதில் உறுப்பினராக, ஏற்கனவே இருக்கும் ஒரு உறுப்பினரின் சிபாரிசுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் தேவை.

மேலும் புதிதாய் சேருபவரின் பூர்வீகம் வரை அனைத்தையும் ஆராய்ந்தே அவரை சேர்த்துக்கொள்கின்றனர். உறுபினர்களாக ஏற்றுக்கொண்டவுடன், போலி ஆவணங்களுடன் வாங்கிய சிம் கார்டுடன் ஒரு ப்ளாக்பெர்ரி கைபேசி கொடுக்கப்படும். எல்லா உறுபினர்களுக்கும் மாதாந்திர மருத்துவ சோதனையும் நடத்தப்படும், ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் அந்த நபரை அமைப்பில் இருந்து நீக்கி விடுவர். ஒவ்வொரு வேளைக்கும் இரு பாலாரிடமும் இருந்து தலா ஐயாயிரம் ரூபாய் வாசூலிக்கப் படும். பெரிய ஸ்டார்  விடுதிகளில் ரூம் புக் செய்யப்பட்டு, அதற்கான தகவல்கள் இரண்டு மணி நேரம் முன்பு குறுந்தகவலாக வரும். பணம் காசோலையாக எந்த இடத்தில செலுத்த வேண்டும் என்ற தகவலும் குறுந்தகவலில் தான். இந்த அமைப்பின் பின் யார் செயல்படுகிறார்கள் என்றும், சக உறுப்பினர் யார் என்ற அடையாளமும் எந்த ஒரு உறுப்பினருக்கும் தெரியாதபடி ரகசியமாக இன்றுவரை உள்ளது. காசு கொடுத்து, மிருகங்கள் போல் காமம் கழித்து வாழ்வதே இவர்களின் அந்தரங்க வாழ்க்கை.

பணம் செலுத்தி, மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, ஒரு மாதத்திற்கு பின் எனக்கு முதல் குறுந்தகவல் வந்தது. சென்னையின் பிரபல ஸ்டார் விடுதியில் அன்று இரவு எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்பொழுதும் போல் அன்றும் என் மனைவி அவள் தாய் வீட்டில் இருக்க, எனக்கு செல்வது எளிமையாகிப் போனது. இருந்தும் மனைவிக்கு துரோகம் செய்யும் குற்ற உணர்ச்சி என்னை அரிக்க வந்த பொழுது, என்னுள் இருக்கும் காம மிருகம் அதைக் கொன்றுவிட்டது. ஒரு வேகத்தில் அந்த விடுதி வரை சென்று விட்டாலும், அறைக்குள் செல்ல விடமால்  ஒரு வித பயம் கலந்த பதற்றம் என்னைத் தடுத்தது.

'இதையும் ஒருமுறை' என்று அறையினுள் நுழைந்தவுடன், எனக்கு முன்னமே அந்தப் பெண் வந்து காத்திருந்ததை உணர்ந்தேன். படுக்கைக்கு அருகில் இருந்த மேசை விளக்கின் மங்கிய ஒளியில் அந்தப் பெண்ணின் உருவம் மட்டும் தெரிந்தது. மதன் சொன்ன, 'அறிமுகம் எதுவும் வேண்டாம். பேசாமல் இருப்பது நலம்' என்ற எச்சரிக்கைகளை எண்ணிக்கொண்டே படுக்கைக்கு அருகில் நகர்ந்தேன். அவளை நெருங்கியவுடன் என்னை கட்டி படுக்கையில் இழுத்தாள், விளக்கின் ஒளி அவள் மேல் பட்ட நிமிடம் எனது உச்சச்ந்தலையில் ஆணி வைத்து அடித்தது போல் இருந்தது.

இரண்டு ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்தாமல் எனக்கு மனைவியாக வாழும் அந்த சனியனின் முகம். என்னை சற்றும் எதிர் பாராத அவள் அதிர்ச்சியில் அசைவின்றி உறைந்துபோனாள். ஒரு ஆணுக்கே உரிய எனது கர்வம் அந்த நிலையில் ஏமாற்றப்பட்டதன் வலி, ஆத்திரமாக உருமாறி, வெறியாக தலைக்கு ஏறி, அருகில் இருந்த விளக்கை எடுத்து  அவள் முகத்தை நோக்கி அடித்தேன். அந்த விளக்கு அவள் கழுத்தை கிழித்ததில், ரத்தம் வேகமாக வடிய, அவள் உயிரற்ற சடலமானாள். ரத்தம் முழுவதும் வடியும் வரை அந்த அறையிலேயே காத்திருந்தேன். ஏமாற்றியது அவள் தவறா இல்லை ஏமார்ந்து போனது என் தவறா?                                                  

கொட்டும் அடை மழையில், சாலையின் விதிகளை புறக்கணித்து, சீருந்தின் வேகத்தை கூட்டி, ஆத்திரம் என் அறிவை மறைக்க, என்னுள் இருக்கும் மிருகம் அந்த உயிரை, என் வாழ்க்கையை நாசம் செய்த அந்த சனியனை, வதைத்தும் அடங்காமல் என்னை செலுத்திக்கொண்டிருக்க, பயங்கர சத்தத்துடன் கண்ணைக் கூசும் சோடியம் வெளிச்சம் என் எதிரில்......

Monday, December 8, 2014

சாப்பாட்டு ராமன் - நாயர் மெஸ் (சேப்பாக்கம்) & சோழிங்கநல்லூர் பானி பூரி

நாயர் மெஸ் (சேப்பாக்கம்)

உயிரின்றி இருபத்து ஏழு நாட்கள் செயல்படமால் இருந்த எனது கணினியை, உயிர்பிக்கும் பொருட்டு சில சாதனங்கள் வாங்க என் நண்பனுடன் ரிட்சி ஸ்ட்ரீட் சென்றிருந்தேன். அன்று தான் என் நண்பன், பல மாதங்கள் செயல்படாமல் இருந்த ராமனை மீண்டும் அவதரிக்கச் செய்தான். 'இங்க நாயர் மெஸ்னு ஒரு கடை இருக்காம், அங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அங்க போய் சாப்பிடுவோமா?' என்று கேட்டவுடன், பல நாள் சுவை மறந்திருந்த நாக்கு துடிக்க, உடனே ராமனும் வழிமொழிந்தான். 

வாலாஜா சாலை வரை சென்று, சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கிற்கு முன், வலது புறம் இருந்த முஹம்மத் அப்துல்லா சாலையில் திரும்பினோம். என் நண்பன் அந்தக் கடைக்கு சென்றதும் கிடையாது, அது எங்கிருக்கும் என்றும் தெரியாது. அவனுக்கு தெரிந்த வாய் வழி ஞானம் அந்தச் சாலை வரை தான். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் வழி கேட்க, ஒரு கார் சென்றால் வேறு வாகனங்கள் செல்ல கூட வழியில்லாத ஒரு சின்ன முட்டுச் சந்தை எங்களுக்கு காட்டினர். சில அடிகள் அந்த சந்தினுள் சென்றவுடனே எங்கள் இரு சக்கர வண்டியை, ஏற்கனவே  ஓரமாக நிறுத்தப் பட்டிருந்த வண்டிகளுடன் நிறுத்திவிட்டு மெல்ல நடந்தோம்.

அந்த சந்தின் இறுதிக்கு வந்த போது, ஒரு சிறிய உணவகம் தென்பட்டடது,  அங்கு எந்த ஒரு விளம்பரப் பலகையும் இல்லாததால் சற்று தயங்கி, எதிரில் வந்த ஒருவரிடம் விசாரிக்க, அவர் உடனே  'இதுதாங்க நாயர் மெஸ்' என்று சிரித்தார். கீழ் உள்ள புகைப்படத்தில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருக்க, மேலே குளிர் சாதன அறைக்கு சென்றோம். உள்ளே நுழைந்தவுடன் பல அரசு அலுவலகத்தில் இருப்பது  போன்ற உணர்வு தானாகவே வந்து விட்டது. காரணம், இஸ்த்ரி போட்டு இன் செய்யப்பட்ட சட்டைகளுடன், நரைக்க தொடங்கியும், நரைத்து விட்ட முடிகளுடனும் அங்கு நிறைந்திருந்த அதிகாரிகள். 'வழக்கமாக அரசு அதிகாரிகளை மதிய உணவு வேளைகளில் அங்கு காண முடியுமாம். பல பெரிய தலைகளும் இங்குதான் உணவு வாங்குவார்கள்' என்ற தனது செவி வழி ஞானத்தை என் நண்பன் என்னுடன் பகிர்ந்து கொண்டான்.

Image courtesy - Google

மேசைப் பணியாளர், தலை வாழை இலையை மேசை மேல் விரித்தவுடனே எனக்கு அந்த இடத்தின் மீது ஒரு மதிப்பு தோன்றியது. பொதுவாக சென்னையில் வாழை இலையில் உணவு பரிமாறும் இடங்கள் மிகக் குறைவு. மிகப் பெரிய சைவ உணவகங்கள் கூட தட்டில் இலையை வெட்டி வைத்து தான் உணவு பரிமாறுகின்றனர்.  என் நண்பன் தனக்கு ஒரு அசைவ சாப்பாடு சொல்ல, நான் எனக்கு ஒரு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தேன். மெனு கார்ட் என்று ஒன்று அங்கு இல்லாதது குறிப்பிடத்தக்கது.

Image courtesy - Google

ஒரு பொரியல், கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், மோர் என்று வழக்கமான வகைகளுடன், மீன் குழம்பு அல்லது கோழி குழம்பு அல்லது மட்டன் குழம்பு தேர்வு செய்து கொள்ளலாம். இவைகளுடன் அளவில்லா சாப்பாடு. என் நண்பன் தனக்கு ஒரு வஞ்சரம் மீன் ப்ரை ஆர்டர் செய்திருந்தான். வீட்டு சாப்பாடு போல் அனைத்தும் சுவையாக இருந்தது.

வஞ்சர மீனுடன் சாப்பாடு
நாயர் மெஸ் என்பதால் கேரளா வகை பிரியாணி வந்து விடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் காத்திருந்த பொழுது, தமிழக மட்டன் பிரியாணியாக உள்ளே ஒரு முட்டையுடன் வந்தது. மட்டன் பிரியாணிக்கும் கோழி முட்டைக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியாதபோதும், பல கடைகளில் காரணம் தெரியாத இந்த வழக்கம் தொத்திக்கொண்டு விட்டது. பிரியாணி சுவையும் நன்றாகவே இருந்தது. இங்கு என்னை ஆச்சரியப் படுத்திய விசயம் அந்த பிரியாணியுடன் வந்த ஒரு லெக் பீஸ் தந்தூரி சிக்கன். அங்கு இருந்த கூட்டத்தில் சற்றும் ஒட்டாத இரு வாலிபர்களாக, தந்தூரி சிக்கனைக் கண்டு நான் 'ழே' என்று முழிக்க, 'அது பிரியாணியுடன் வரும் காம்போ' என்று அந்த மேசைப் பணியாளர் விளக்கினர்.        

சிக்கன் தந்தூரியுடன் பிரியாணி 

சுவையான தரமான உணவை உண்ட ஒரு திருப்தி இருந்தபொழுதும், அந்த கம்போ தந்தூரியால் பில் எவ்வளவு வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.  பில் வந்தவுடன் எனக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மட்டன் பிரியாணியின் காம்போ விலை வெறும் நூற்று அறுபது ரூபாய். பொதுவாக எல்லா உணவகங்களிலும் இருக்கும் மட்டன் பிரியாணியின் விலை தான் என்பதால் எனக்கு அந்த தந்தூரி சிக்கென் இலவசமாக வந்தது போல் தோன்றியது. நண்பன் உண்ட அசைவ சாப்பாடு எழுபது ரூபாய். வஞ்சரம் ப்ரை நூற்று என்பது ரூபாய். 

பில் செலுத்தியபோழுது அனைவருக்கும் போல் எங்களுக்கும் ஒரு மலை வாழைப்பழமும் ஒரு பீடாவும் இலவசமாக வழங்கினர். சாப்பாடு மற்றும் பிரியாணி பிரியர்களுக்கு சுவையுடன் கூடிய தரமான மலிவு விலை உணவு இங்கு உண்டு.       

சோழிங்கநல்லூர் பானி பூரி 
பொதுவாக தமிழகத்தில் கிடைக்கும் பானி பூரியில் அசல் வடக்கு சுவை இருப்பது இல்லை என்று பல நாள் குறை பட்டிருந்த ராமனுக்கு, அந்தக் குறையை தீர்க்கும் விதத்தில் பானி பூரி கிடைக்கின்றது என்றால், ராமன் செல்ல மறுப்பானா? 

சோழிங்கநல்லூர் சந்திப்பின் அருகில் கரூர் வைஸ்யா வங்கி செல்லும் சர்விஸ் சாலையில் ஒரு பானி பூரி கூடையுடன் இன் செய்த சட்டையுடன் ஒரு ஆபிசர் போல கம்பிரமாக காட்சி தந்தார் அந்த வடக்கு நண்பர்.  கடை தொடக்க நேரத்திலேயே நாங்கள் சென்றதால், அவர் தயார் செய்துகொண்டிருந்த பொழுது  ஹிந்தியில் பேசியதை என் நண்பர் மொழி பெயர்த்தது: 

சென்னையில் அசல் பானி பூரி சுவையுடன் தினமும் மாலை  நான்கு மணி முதல் இரவு  பத்து மணி வரை வியாபாரம் செய்துவருகிறேன்.  சாலையின் மறுப்பக்கம் accenture கம்பெனி வாசலில் இவருக்கும் அந்தக் கடையும் என்னுடையது தான்.


ஒரே இடத்தில இரண்டு கடைகள் இருக்கும் பொதும், இவர் கடையில் பானி பூரி வாங்க மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்று பெருமையுடன் கூறினார்.   அவரது அந்த பாணி, மிகவும் காரமாக அசல் வடக்கு சுவையுடன் இருப்பது தான் அவரது கைவண்ணம். பத்து ரூபாய்க்கு ஆறு பூரிகள். ராமனால் ஒரு ரவுண்டுடன் நிறுத்த முடியவில்லை. மற்றுமொரு ரவுண்டு சென்றான்.

சுக்கா பூரி தயார் நிலையில் 
வடக்கு ஸ்பெஷல் பானி பூரி என்றாலே கடைசியாக கொடுக்கப் படும் சுக்கா பூரி தான். சுக்கா பூரி என்பது தண்ணி இல்லாமல் வெறும் பூரியின் உள் உருளை மசாலா கலப்பு சேர்ந்து தரப்படுவது. இவர் அந்த சுக்கா பூரியில் உருளை மசாலாவுடன், மேலும் சில மசாலா வகைகளை இணைத்து பினிஷிங் டச்சாக எலுமிச்சை சாரை பிழிந்து தந்து ராமனை தன் வசப்படுத்திவிட்டார். 

Saturday, October 4, 2014

தேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2014 ( தி.நகர் - ஆடி ஸ்பெஷல்)

எனக்கு நினைவு தெரிந்து, நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இருந்தே ஆடித் தள்ளுபடி விற்பனை ஆண்டு தோறும் தமிழகமெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வேலூரில் இருந்த பொழுது ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் இந்த ஆடி விற்பனையின் போது தான் அப்பா 'சர்க்கார் ரெடிமேட்ஸ்' என்ற கடைக்கு அழைத்துச் சென்று புதுத் துணிகள் வாங்கித் தருவார். ஆடி மாதம் வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்த காலம் அது. உடலும் பகுத்தறிவும் வளர, இந்த ஆடி மோகம் என்னை விட்டுச் சென்றது. சென்னையில் கல்லூரி சேர வந்த பொழுது  சென்னையின் ஆடைகள் தலைநகரான தியாகராய நகருக்கு செல்லாமல், அண்ணா நகரிலேயே புதுத் துணிகள் வாங்கினோம். கூட்டமாக இருக்கும் கடைக்கு சென்று, அங்கு நசுங்கி கசங்கி துணிகள் வாங்குவதில் எனக்கு என்றுமே ஈடுபாடு கிடையாது என்பதால் எல்லா ஆண்டும் ஆடி விற்பனை என்பது எனக்கு ஒரு கடந்து செல்லும் மேகமாகவே இருந்து விட்டது. இந்த ஆண்டு, சில தவிற்க முடியாத கட்டாயத்தினால், ஆடி மாதத்தில் பல முறை தி.நகர் செல்ல நேர்ந்த பொழுது எனக்கு கிடைத்த அனுபவங்கள் இந்த பதிவிற்கு வித்திட்டன. 

தாம்பரத்தில் இருந்து தி.நகர் செல்ல ரயில் மற்றும் பேருந்து இரண்டுமே இருந்தாலும், நான் எப்பொழுதும் விரும்புவது ரயில் பயணம் தான். இரு சக்கர வண்டியை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு ரயில் ஏறுவது தான் வழக்கம். தாம்பரம் சானடோரியம் டு தி.நகர் - இருபது நிமிட ரயில் பயணம் அது. நமது வாழ்க்கையில் நாம் தினமும் சராசரியாக செய்து கொண்டிருக்கும் ஒரு விசயம் கூட, நாம் சிறிது காலம் செய்யாமல் விட்டு விட்டு மீண்டும் அதன் பக்கம் சென்றால் மாறிவிடுகிறது என்பதை எனக்கு உணர்த்தியது அம்மை தான். மூன்று வாரங்கள் இயல்பு வாழ்கையை விட்டு ஒதுங்கி, மீண்டும் என் வாழ்க்கைக்கு திரும்பிய பொழுது எத்தனை மாற்றங்கள். அந்த மாற்றங்களில் ஒன்று தான் இந்த பைக் பார்க்கிங் கட்டணம், பத்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாயாக உயர்ந்து இருந்தது. தி.நகர் சென்று வர ரிடர்ன் டிக்கெட்டே பத்து ரூபாய் தான் :). இதைவிட கொடுமை என்னவென்றால் என் வீட்டில் இருந்து ரயில் நிலையம் ஆட்டோவில் வந்தால் நாற்பது ரூபாய். எங்கள் ஏரியா ஆட்டோக்களில் மீட்டர் ஓடியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.                       

ரங்கநாதன் தெரு 

ஆடி மாதத்தில் மொத்த ரயில் பயணிகளும் இறங்குவது மாம்பலம் ரயில் நிலையத்தில் தான். ரயில், மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றவுடன், அந்த கூட்டத்தின் மத்தியில் உங்களை நீங்கள் பொருத்திக்கொண்டால் மட்டும் போதும், அடுத்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் ரங்கநாதன் தெருவில் இருப்பீர்கள்.   பீச் பக்கம் இருந்து வரும் மக்கள் கூட்டமும் தாம்பரம் பக்கம் இருந்து வரும் கூட்டமும் சங்கமமாகுவது ரங்கநாதன் தெருவில். 'அங்காடித் தெரு' படத்தில் வருவது போல் மக்கள் கூட்டத்தின் நடுவில் பல சில்லறை வியாபாரிகள் தத்தம் பொருளை வியாபாரம் செய்யக் கூவிக் கொண்டிருப்பர். இரண்டு பக்கமும் இருக்கும் சிறு கடை வியாபாரிகள் மக்களை உள்ளே இழுக்க அவர்களது வியாபாரக் கூவலை ஒரு பக்கம் இசைத்துக் கொண்டிருப்பர். மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து உஸ்மான் வீதியில் வந்து சேரும் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் உள்ள ரங்கநாதன் தெருவில் ஒரு கடையை மட்டும் பெயர் பலகையில் சில மாற்றங்களுடன் திரும்பத்திரும்ப காண முடியும். இம்முறை அந்தக் கடைகளை மட்டும் நான் விரல் விட்டு எண்ணிய பொழுது 'ரங்கநாதன் தெரு' என்ற பெயரை 'சரவணா வீதி' என்று மாற்றுவது தான் உசிதம் என்றுத் தோன்றியது.      

உஸ்மான் சாலை 

ரங்கநாதன் தெருவில் இருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு உஸ்மான் சாலையை அடைந்து, மேம்பாலத்தின் அடியில் போத்தீஸ் நோக்கி நடந்தேன். இந்த மேம்பாலம் கட்டும் முன் இந்த சாலையில் தானே மொத்த வாகன போக்குவரத்தும் நடந்திருக்கும், ஆனால் இப்போது மக்கள் நடப்பதற்கு கூட இங்கு இடம் இல்லை. உஸ்மான் வீதியில் நடக்கும் போது, ஒவ்வொரு பிரம்மாண்டமான கடையை கடக்கும் பொழுதும், உங்கள் வீட்டு ப்ரிட்சை திறக்கும் போது கிடைக்கும் அந்த குளிர்ந்த காற்றின் சுகத்தை  உணர முடியும். அழகு சேர்க்கும் வண்ண விளக்குகளும் தேவைக்கு அதிகமாக இயங்கும் குளிர் சாதனங்களும் இங்கு இருக்க, தமிழகத்தில் பல வீடுகளும் தொழிற்சாலைகளும் இருளில் மூழ்கி தவிக்கின்றன. இந்த வீதியில் பைக் பார்க்கிங் செய்வதே கடினம், பண்டிகை வேளையில் சீருந்தில் வந்துவிட்டால் நீங்கள் பார்க்கிங் தேடி கண்டுபிடிப்பதற்குள் உங்கள் குடும்பம் ஷாப்பிங் செய்து முடித்து விடும். ஏதோ ஒரு கடையின் பார்க்கிங் இடத்தில இடம் இருந்து நீங்கள் உங்கள் வண்டியை நிறுத்தி விட்டாலும், திரும்பி எடுக்கும் பொழுது அந்தக் கடையின் பொருள் வாங்கிய  ரசீது இல்லை என்றால் உங்களிடம் இருந்து ஒரு தொகையை (பெரும்பாலும் நூறு ரூபாய்) அபராதமாக வாங்கிவிடுவர். போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, இந்த இடத்தில் இருக்கும் கட்டிடங்கள் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கட்டப்படாததுதான் காரணம்.              

போத்தீஸ்

போத்தீஸ் கடையின் பார்க்கிங் இடத்தில், குறைந்த இடத்தில நிறைய சீருந்துகளை நிறுத்த, சமீபத்தில்  நவீன முறையில் வடிவமைத்து உள்ளனர். போத்தீஸ் கடையின் வாசலை அடைந்த பொழுது, டாட்டா ace வெள்ளை நிற ஷேர் ஆட்டோ வகைகள் 'போத்தீஸ் டு போத்தீஸ்' என்ற எழுத்துக்களுடன் இருந்தன. இது உஸ்மான் சாலையில் இருக்கும் போத்தீஸில் இருந்து GN. Chetty சாலையில் இருக்கும் போத்தீஸ் boutique வரை செல்ல வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இயக்கும் இலவச சேவை. போத்தீஸ் உள்ளே சென்றால் பெண்கள் கூட்டம் ஏக்க செக்கம். அங்கு இருக்கும் பத்து சதவீத ஆண்கள் பில் செலுத்தவும், துணிகளை தூக்கவும், குழந்தைகளை கண்காணிக்கவும் மட்டுமே பயன்படுத்தப் பட்ட வேதனை தரும் காட்சிகள் கண்டு என் மனம் எதிர்காலத்தை நினைத்து கனத்தது. இங்கு ஐந்து முதல் ஐம்பது சதவீதம் வரை நீங்கள் வாங்கும் துணியின் MRP விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்படுகிறது.

பாண்டி பஜார்

தி.நகர் என்றாலே ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைக்கு பிறகு ஒரு முக்கிய அங்கம் வகிப்பது பாண்டி பஜார் தான். (இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று அறிந்தவர்கள் சொல்லவும்). பாண்டி பஜாரில் மிகவும் பிரபலமானது நடைபாதையில் இருக்கும் கடைகளும் அங்கு கிடைக்கும் மலிவு விலை பொருள்களும். இதிலும் இருபது கடைகளில் ஒரு கடை மட்டும் தான் ஆண்கள் சம்மந்தமானா பொருட்கள் இருக்கும். அனைத்து கடைகளிலும் பெண்களுக்கு தேவையான உடைகள், காதணிகள், காலணிகள், என குவிந்து கிடக்கும். பனகல் பார்க்கில் நடக்கத் தொடங்கினால் கடைகளை பார்த்துக்கொண்டும் சில அழகுப் பொம்மைகளை ரசித்துக்கொண்டும் சென்றால் நடப்பதின் அலுப்பே தெரியாது. ஆனால் சமீபத்தில் அரசாங்கம் இந்த நடைபாதை கடைகளை அகற்றிவிட்டு, அங்கு இருந்த வியாபாரிகளுக்கு பாண்டி பஜார் பேருந்து நிலையம் அருகில் ஒரு புதிய வணிக வளாகம் கட்டிக்கொடுத்தது. வசந்த காலம் வீசிய பாண்டி பஜார் வீதியை இன்று வெறிச்சோடி காண்பதில் மனம் வலிக்கின்றது.    

சென்னை சில்க்ஸ்

அடுத்து சென்னை சில்க்ஸ் உள்ளே சென்றவுடன் நுழைவு வாயிலில் இருந்த பணியாளர் வரவேற்று 'சார் இங்க புதுசா ஜெவல் செக்ஷன் துறந்திருக்கோம். வந்து பார்கரின்களா' என்று அழைக்க, நான் 'ழே' என்று விழித்ததை கண்ட அவர் 'நீங்க சும்மா பார்த்தா மட்டும் போதும். எதுவும் வாங்கத் தேவையில்லை' என்று புன்னகைத்தார்.  அவர்,  அவரது மேற்பார்வையாளர் காணும் வகையில்  அங்கு இருந்த புதிய வகை நகைகளை எனக்கு விளக்க, நான் அவரை பின் தொடர்ந்தேன். ஒரு இடத்தில இருந்த ஒரு தங்க சங்கிலியும் டாலரும் என்னை நகர விடமால் தடுத்து. எங்கள் வீட்டு நாயை கட்டி வைத்திருக்கும் சங்கிலியை விட அது கனமாக இருந்தது. அந்த டாலரும், ஒரு மூன்று சென்டி மீட்டர் வட்டளவில் தங்கத்தில், நடுவில் ஒரு ஒட்டப்பட்ட படத்துடன் இருந்தது. அந்த படத்திற்கு உரியவர் தமிழக  முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அன்று 'இவ்வளோ காசு கொடுத்து இதயெல்லாம் யாருடா வங்கப் போறாங்க' என்று எண்ணினேன். ஆனால் இன்று மேடையேறிய சில ஒத்திகை பார்க்காத நாடகங்கள் மூலம் இதை வாங்க இங்கு நிறைய கைகள் உண்டு என்பதை உணர்ந்தேன்.  

சென்னை சில்க்ஸில் நடக்கும் தள்ளுபடி சற்று வித்தியாசமாக இருந்தது. உதாரணத்திற்கு இங்கு 15% தள்ளுபடி கொண்ட ஒரு 800 ரூபாய் மதிப்புள்ள துணியை வாங்கினால், உங்களுக்கு    120 ரூபாய் ( 15% of 800) மதிப்புள்ள மூன்று மாத வேலிடிட்டி கொண்ட ஒரு வௌச்சர் கொடுப்பார்கள். அதைக் கொண்டு நீங்கள் அடுத்து சென்னை சில்க்ஸில் வாங்கும் பில்லில் 120 ரூபாயை தள்ளுபடி செய்துகொள்ளலாம்.

புத்தகமும் சிறுமியும்

சென்னை சில்க்சை விட்டு வெளியில் வந்தவுடன், அழுக்கான சட்டையும், அரை பாவடையும், பல நாள் குளிக்காத தலையுடனும் ஒரு எட்டு வயது சிறுமி    தன் கையில் இருந்த கலர் அடிக்கும் புத்தகம் ஒன்றை நீட்டி 'அண்ணா. பத்து ரூபாய் தான். ஒன்னு வாங்கிக்கோங்க' என்றாள். எனது வீட்டில் சிறுவர்கள் குழந்தைகள் யாரும் கிடையாது என்பதால் அந்தப் புத்தகம் வாங்கி எந்தப் பயனும் இல்லை என்று தோன்றவே 'வேண்டாம்' என்று மறுத்து விட்டு. தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். நான் வேண்டாம் என்ற போதும் அந்தப் பெண் விடாமல் என்னையே பின் தொடர்ந்து கெஞ்சத் தொடங்கினாள். அவள் என்னை தொட்டு தொட்டு கெஞ்சியது சற்று அறுவெறுப்பாக இருக்க எனக்கு கோவம் அதிகமாகி, 'வேண்டாம் கூட வராத' என்று சற்று கனத்த குரலில் திட்டினேன். அப்பொழுதும் அவள் சலிக்காமல், என்னைக் கெஞ்சிக்கொண்டே தொடர்ந்தாள். எனது பிடிவாதம் என் மனதை மாற விடமால் செய்தது. இப்படியே என்னைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸில் இருந்து தி.நகர் பேருந்து நிலைய சிக்னல் வரை வந்தவள், சட்டேன்று அவள் கையில் இருந்த புத்தகத்தை என் கையில் வைத்து விட்டு, வேகமாக திரும்பி சென்று விட்டாள். அந்த சம்பவம் என்னுள் எதோ ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டிவிட, அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல மனமின்றி  ரயிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.  

'ஆடி தள்ளுபடி' என்று   ஒரு மோக அலையை மக்கள் மனதில் வீசி, மற்ற 335 நாட்களில் நடக்கும் வியாபாரத்தை இந்த 30 நாட்களிலேயே சம்பாதித்து, ஆண்டிற்கு ஒரு புதிய கிளை திறந்து விடுகின்றனர் இந்த ஆடை உலகின் முதலைகள். விலைகளை உயர்த்தி  பின் தள்ளுபடி என்ற பெயரில் விலைகளை குறைத்து விற்கும் உக்திக்கு இந்த மக்கள் எத்தனை காலம் தான் விழுவர் என்று தெரியவில்லை. 

Wednesday, October 1, 2014

தேன் மிட்டாய் - ஜூன் & ஜூலை 2014

மே மாதத்திற்கு பின் மூன்று மாதங்கள் தேன் மிட்டாய் ஏன் தடை பட்டது என்பதற்கு என்னால் பல காரணங்கள் சொல்ல முடியும். சில சம்பவங்களின் மீது பழி சுமத்தி விட்டு நான் கருணை கோரப் போவதில்லை. எனது பாதையை விட்டு சற்று தடுமாறினேன், மீண்டும் உங்கள் ஆதரவுடன் உற்சாகமாய் எனது எழுத்தை தொடருவேன் என்ற நம்பிக்கையில்....    


தநஉஉஇதசநுகஉ

இது என்ன என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை இந்தப் பதிவின் முடிவில்....


பேருந்து நிழற்குடை 

சென்ற தேன் மிட்டாயில்(மே 2014) நான் OMR சோழிங்கநல்லூரில் பேருந்து நிழற்குடை இல்லாததை பற்றி எழுதியிருந்தேன். அம்மை குணமாகி ஜூன் மாதம் அலுவலகம் செல்லத் தொடங்கிய பொழுது OMR சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் நடப்பதைக் கண்டு வியந்தேன். 'நம்ம தேன் மிட்டாயை யாரோ பெரிய ஆள் படிக்கராங்கப் போல' என்று என்னுள் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. துரைப்பாக்கம் முதல் சிறுசேரி வரை OMR சாலையின் இரு புறமும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரு நிழழ்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் இது வரவேற்கக் கூடிய மாற்றம் என்றாலும், நான்கு கம்பங்களை எழுப்பி நான்கு அடி அகலத்தில் அதன் மேல் தகரத்தை வைத்து விட்டால் மக்களுக்கு நிழல் கிடைக்குமா என்ற கேள்வி வலுக்கிறது. கதிரவன் உச்சியில் இருக்கும் வேளை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த நிழற்குடைகள் தம் பணியை செய்யாதது வருத்தமே.   

டாஸ்மாக் எலைட்       

நாவலூரில் 'கோரமண்டல் பிளாசா' என்று ஒரு மால் உண்டு. ஐந்து மாடிகள் கொண்ட இந்த மாலில் நான்கு ஆண்டுகளாக இயங்கிவருது AGS திரையரங்கம் தான். சில ஆண்டுகளுக்கு முன்  Dominos  மற்றும் சில மாதங்களுக்கு முன் KFC, மற்றும் நான்காவது தளத்தில் உள்ள பூட் கோர்ட்டில் சில பிரபலமாகாத உணவகங்கள் இவை மட்டும் தான் இங்கு இருப்பவை. மீதம் உள்ள கடைகள் அனைத்தும் கட்டுமான வேலை மட்டும் முடிந்த நிலையில் கண்ணாடிக் கதவுகளுடன் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. ஒரு நாள் அலுவலகம் முடித்து விட்டு, படம் பார்க்க அங்கு நுழைவாயிலில் அடி வைத்த பொழுது, நான்கு பெண்கள் ஒரு கடையில் இருந்து வெளியேறுவதைக் கண்டு என் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. அவர்கள் வெளி வந்த வாசலில் 'TASMAC' என்ற எழுத்துக்கள் மின் ஒளியில் ஜொலித்தன. இந்த டாஸ்மாக் தெருமுனையில் இருக்கும் மற்ற டாஸ்மாக்களை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. சூப்பர் மார்க்கெட் போல் பல வெளி நாட்டு இறக்குமதி ரக சரக்குகள் அடிக்கி வைக்கப் பட்டிருந்தன. வரிசையாக பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டு விண்டோ ஷாப்பிங் செய்த பொழுது சில வற்றின் விலைகளையும் கவனித்தேன். சற்று அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுது எனக்கு விளங்கியது இது ஏன் 'டாஸ்மாக் எலைட்' என்று. இதே போல் ஒரு கடையை சமீபத்தில் ஸ்பென்சர் பிளாசாவிலும் கண்டேன். வளர்க குடி ! வாழ்க குடிமக்கள்!                 

களவானிகளும் காவல் துறையும்

நண்பர் ஒருவர் தனது குடும்ப விழாவிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம் அவரது இல்லம் கொள்ளையடிக்கப்பட்டது. சில ஆயிரம் ரொக்கம் மற்றும் சில சவரன் நகைகள் மட்டும் எடுக்கப்பட்டிருந்தன. மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் எதையும் தொட வில்லை. காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சினிமாவில் வருவது போல் அவர்கள் வலை வீசி தேடி கொள்ளையர்களை பிடிப்போம் என்று வசனம் எல்லாம் பேசவில்லை. அடாவடியாக கண்டுபிடிக்க லஞ்சமும் கேட்கவில்லை. 'அவர்கள் பிடிபட்டாலும் உங்கள் பொருள் மற்றும் பணம் கிடைக்காது' என்று நேர்மையாக பதில் சொல்லி விட்டனர். இன்றளவும் அந்த கொல்லையர்கள் பிடிக்கப் படவில்லை. சம்பவம் நடந்த வீடு அந்த வட்டார காவல் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் என்பது குறிப்பிடத்தக்கது.    

உணவு

என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இருக்கும் பண்புகளில் மிகவும் உயர்ந்தது விருந்தோம்பல். மற்றவர்களின் பசியை போக்கும் பொழுது  நமக்கு கிடைக்கும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. எங்கு சென்றாலும் நானாக முன் சென்று பரிமாறும் வேலையை எடுத்துக்கொள்வேன். நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்கு நான் சென்றிருந்த பொழுது அங்கு பந்தியில் பரிமாறும் வாய்ப்பு கிட்டியது. நான் எங்கும் காணாத ஒரு நிகழ்வு அங்கு நடந்தது.   ஒரு 100 பேர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட ஒரு உணவுக் கூடம். வந்தவர்கள் அனைவரும் உணவருந்தி விட, கடைசி பந்தி நடந்து கொண்டிருந்த வேளை. பந்தியின் எல்லையில் இருவர் மட்டும் அந்தக் கூட்டத்துடன் சற்றும் ஒட்டமால் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதுவும் அசுர வேகத்தில். முதலில் அவர்கள் அங்கு திருமணக் கூடத்தில் பணிபுரிபவர்களாக இருக்கும் என்று எண்ணினேன். கடைக் கண்ணால் அவர்களை கவனிக்க தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆட்களிடம் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். ஒரு ஓரமாக நின்றுகொண்டு அவர்களையே கவனித்தேன். அவர்கள் இலைக்கு வந்து உணவில் இரு கை உண்டு விட்டு, மீதம் இருந்த அனைத்தும் அவர்கள் மடியில் இருந்த பழைய டால்டா டின்னிற்குள்  சென்றது. அடுத்து இரண்டு முறை அவர்கள் போதும் என்ற அளவிற்கு நான் பரிமாறினேன். நான் கவினத்ததாக அவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. 

அப்பா ஊட்டு ரோடு 

தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி மார்ஜியானவில் சென்று கொண்டிருந்தேன். பல்லாவரம் கடந்து திருசூலம் அருகில் செல்லும் பொழுது, பழைய ஹீரோ ஹோண்டா CD 100 இல் ஒருவர், வெள்ளை பனியனுடன் அழுக்கான தலை முடியுடன் எனக்கு முன் வந்தார். அவருக்கு முன் ரோட் காலியாக இருந்த பொழுதும் அவர் ஓரம் ஒதுங்காமல் சாலையின் மத்தியிலே சென்றுகொண்டிருக்க, நானும் ஓயாமல் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தேன். வேண்டுமென்றே அந்த ஆசாமி சாலையின் மத்தியில் சென்று கொண்டிருக்க எனக்குள் உஷ்ணம் தலைக்கு ஏறியது. அப்படியே அவனை அடித்து தூக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கோபத்தை அடிக்கி நானும் ஒரு வேஷதாரியாக, சாலை சற்று அகலமான பொழுது அவனை முந்தி சீறிப் பாய்ந்தேன்.

கல்வி      

'நான் அந்த காலத்து SSLC தான், ஆனா அது  இந்த காலத்து B.Scக்கு சமம்' என்று என் தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு. நீங்களும் எங்காவது சில பெரியவர்கள் இப்படி பேசிக் கேட்டிருக்கலாம். இதன் அர்த்தம் எனக்கு விளங்கியதே இல்லை. சமீபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து பார்த்த பொழுது நான் படித்ததற்கும் அதில் தற்போது இருப்பதற்கும் எவ்வளோ மாற்றங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி சற்று எளிமையாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. நான் பள்ளி பயின்ற காலத்திலேயே SSLC முறைக்கும்  CBSE கல்வி முறைக்கும் அத்தனை வித்யாசங்கள் இருக்கும். தற்பொழுது இந்த தரத்தை கொண்டு CBSE மாணவர்களுடன் தமிழக மாணவர்கள் போட்டியிடுவது மிகவும் கடினமாகி விடும். இயற்கையாக இருக்கும் மனித ஆற்றலை வளரவிடாமல், மனப்பாடம் செய்து ஒரு மாணவனின் மூளையை சோம்பேறியாக்கும் இந்த கல்வி முறையை பற்றி என்னவென்று சொல்வது. பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு செய்தி தவறு என்று தெரிந்த போதிலும், அந்த தவறான செய்தியையே பொதுத் தேர்வில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்கள் வற்புறுத்தும் கொடுமைகளும் இங்கு உண்டு.   

        
தநஉஉஇதசநுகஉ

இது நான் அலுவலகம் செல்லும்பொழுது கண்ட ஒரு சுமோ ரக வாகனத்தில் நம்பர் ப்ளேட்டில் எழுதியிருந்தவை. சத்தியமா எனக்கு புரியலைங்க. தமிழ் பற்று தேவைதான். அதற்கென்று  இப்படியா?     

Friday, September 12, 2014

சினங்கொண்ட ஊழியனின் குமுறல் : CAB சிஸ்டம் நடப்பது என்ன?

முன் அறிவிப்பு : இந்தப் பதிவில் வரும் சம்பவங்களோ அல்லது கருத்துக்களோ எந்த ஒரு தனி நபரையோ அல்லது எந்த ஒரு நிறுவனத்தையோ குறிப்பன அல்ல. இவை அனைத்தும் எனது மனக் குமுறல்களின் வெளிப்பாடு .

***********************************************************************************************************

பொதுவாக IT நிறுவனங்களில் பணி புரிபவர்கள் அனைவருமே எனது பார்வையில் போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்தவர்கள். வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே கோபத்தையும் தன்மானத்தையும் கழட்டி வைத்து விட்டு தான் அலுவலகம் நோக்கி புறப்பட வேண்டும். இப்படி பாவம் செய்தவர்களுள் கூடுதல் பாவம் செய்தவர்கள்  யார் என்றால் அது என்னைப் போல் ஒரு 'சப்போர்ட்' ப்ராஜெக்டில் பணி செய்பவர்கள் தான். சப்போர்ட் என்றால் வருடத்தில் 365 நாட்கள், 24x7 அயராது பணி செய்ய போடப்பட்ட ஒப்பந்தக் கிணற்றில் அறிந்தே தற்கொலைக்கு விழுவது. 

நான் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தாலும் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ எதுவாக இருந்தாலும் விடுமுறை கிடையாது. கிறிஸ்துவனாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது, முஸ்லிமாக இருந்தாலும் ரம்ஜானுக்கும் விடுமுறை கிடையாது, இந்துவாக இருந்தாலும் தீபாவளி-பொங்கல் எதுவானாலும் கணினியுடன் தான். இதுவல்லவா வேற்றுமையில் ஒற்றுமை! இதில் உச்சகட்டம் என்னவென்றால் நாங்கள் பணிபுரியும் அயல்நாட்டு அலுவலகத்தில் அவர்கள் அவர்களது தேசிய விடுமுறைகளை கொண்டாடும் போதும் இங்கு அவர்களது மென்பொருள் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணி எங்களுடையது.

ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் வீதம், இருபத்து நான்கு மணிநேரங்களை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். காலை (06:30 - 15:30), மாலை( 13:30 to 22:30), இரவு ( 22:00 - 07:00) என்று மூன்று ஷிப்டுகளில் எங்கள் பணி. ஷிப்டானது வாரந்தோறும் மாறும்.  

ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருக்கும் இந்த கம்பனிகளுக்கு சரியான நேரத்தில் ஊழியன் உள்ளே வரவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப் பட்டது இந்த cab system.     

பொதுவாக மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் என்றாலே 'வீட்டுக்கு கார் வந்து கூப்டிட்டு போய் திரும்ப கார்லையே வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுர்ராங்க. செம வசதியான வேலைப்பா' என்று நினைப்பவர்கள், தனி நபர் cabஇல் அலுவலகம் சென்றது எல்லாம் நம்ம சிம்ரன் அக்கா 'நிலவைக் கொண்டுவா: கட்டிலில் கட்டிவை'னு ஆணையிட்ட காலத்தோடையே போனது என்பதை உணர வேண்டும். எனது இந்த cab சேவை அனுபவங்கள் முழுக்க முழக்க கசப்பானவையே.  தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து, சமீபத்தில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். 

'எப்படி?' என்ற உங்களது கேள்விக்கான பதில் இந்தப் பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது கிடைக்கும். ஆகவே எனது cab அனுபவங்களை  அந்தக் கொலைக்கு முன் மற்றும் பின் என்று இரு பிரிவுகளாக பிரிக்கின்றேன்.       

கொலைக்கு முன்:

காலை ஏழு மணிக்கு முன்னர் அலுவலகம் வருபவர்களுக்கு cab. ஏழிற்குப் பின் என்றால் அலுவலக பேருந்துகள். மாலை வீடு திரும்புபவர்களுக்கு  கடைசி அலுவலக பேருந்து இரவு பத்து மணி வரை இருக்கும். அதற்கு பிறகு வீடு திரும்புபவர்களுக்கு cab சேவைதான். இது இல்லமால் சொந்த வாகனங்களில் மற்றும் அரசுப் பேருந்துகளில் அலுவலகம் வருபவர்களும் உண்டு. எந்த நேரமும் அலுவலகத்தினுள் வரலாம், போகலாம். இரவு பத்து மணி முதல் அடுத்த நாள் காலை ஏழு மணி, இந்த இடைவெளியில்  அலுவலகம் உள் வருபவர்கள் அல்லது அலுவகத்தில்   இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மட்டுமே cab. பகல் வேளைகளில் cab சேவையை பயன்படுத்தும் ஒரு சில புண்ணிய ஆத்மாக்களைப் பற்றி நாம் பேசப் போவது இல்லை. 

காலை ஷிப்ட் :

தொடங்குவது 06 30 மணிக்கு. எனது கைபேசியில் அலாரம் அடிக்கும் முன் cab டிரைவரிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். நான் வசிப்பது தாம்பரம் என்பதால், எனது வழியில் பெரும்பாலும் நான் தான் முதல் பிக்-அப். புறப்படும் நேரம் குறித்து அந்த அறை தூக்கத்தில் ஒரு வாக்குவாதம் நடத்தி,  தூக்கம் கலையமல் அடித்து பிடித்து, குளித்தும் குளிக்காமலும் தயாராகி cabஇல் ஏறி புறப்பட்டுச் சென்றால், அடுத்த ஆள் ஏறுவதற்காக அடுத்த பாயிண்டில் காத்திருக்க வைத்து விடுவார்கள். முதல் நபரான நான் தாமதம் செய்தால் பிறருக்கு இடையூறு என்று நினைத்து நான் விரைந்து கிளம்பினால் இப்படி என்னைக் காக்க வைக்கும் சிலரை என்ன செய்வது?  

சந்தோஷபுரத்தில் ஒரு பெண்மணி உண்டு, cab டிரைவர் 'பாய்ண்டுக்கு வந்தாச்சு' என்று சொல்லி பதினைந்து நிமிடங்கள் கடந்தால் தான் வீட்டை விட்டு வெளியில் வருவார். எனவே இவரைக் கையாள அனைத்து டிரைவர்களும் ஒரு யுக்தியைக் கையாண்டனர். எனது வீட்டில் இருந்து புறப்படும் பொழுதே 'பாய்ண்டுக்கு வந்தாச்சு' என்று சொல்லிவிடுவர்.

இங்கு அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இந்த cabகள் அனைத்துமே NON-AC, பெரும்பாலும்  indica. இன்டிகாவில் நான்கு பேர் செல்லும் வழக்கத்தில், பின் சீட்டில் நடுவில் அமர்பவர் கதி அதோ கதி தான். முதலில் ஏறி டிரைவர் அருகில் இருக்கும் முன் சீட்டில் சுகமாக அமர்ந்தாலும், நான்கவதாக ஏறும் பெண்மணி 'Excuse me! Can you take the back seat?' என்று நம்மை பின்னாடி தள்ளி விடுவார். இதுவே travera அல்லது sumo என்றால் குறைந்தது ஆறு அல்லது ஏழு நபர்கள். இவர்கள் அனைவரையும் பிக்-அப் செய்து கொண்டு அலுவலகம் செல்வதற்குள் ஒரு வழியாகி விடும். உள்ளே நுழையும் பொழுது அனைவரது அடையாள அட்டை மற்றும் கார் டிக்கியை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிப்பர்.

காதலனுடன் கைபேசியில் கொஞ்சும் பெண்மணிகள், மனைவியுடன் சண்டை பிடிக்கும் கணவன்மார்கள், குறட்டை விட்டு தூங்கும் குண்டோதரன்கள், Micheal Schumacher போல் சீரிப் பாயும் சில டிரைவர்கள்,  என தினம் தினம் ஒரு அனுபவம் தான்.   

மாலை ஷிப்ட்: 

முடிவது 10.30 மணிக்கு. இந்த நேரத்தில் அலுவலக பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தால், சப்போர்ட் ப்ராஜெக்டில் இருப்பவர்களுக்கு வீடு செல்ல cab தான் ஒரே வழி. வட்டாரம் வாரியாக cab கொடுக்கும் கவுன்டர்கள் இருக்கும். அங்கு செல்ல Q வில் நின்று, எனது அலுவலக அடையாள எண்ணை கணினியில் பதிவு செய்தால், நான் இந்த நேரத்திற்கு cab புக் செய்துள்ளேனா இல்லையா என்று காட்டும். 'ஆம்' என்றால் உள்ளே செல்லலாம். 'இல்லை' என்றால் எனக்கு cab தரமாட்டார்கள். அவர்களிடம் மன்றாடுவதை விட்டு வெளியில் சென்று எவனிடமாவது லிப்ட் கேட்டு வீடு செல்வது உசிதம். இங்கு 'நான்' என்று குறிப்பிடுவது ஒரு ஆண் பாலை. இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் இந்த விதி முறைகள் செல்லாது, எந்த நேரமும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை என்று அவர்களை முன்பதிவு இல்லை என்றாலும் அனுமதித்து விடுவர். 
             
'ஆம்' என்று கணினி எனக்கு பச்சை விளக்கு காட்டிய பின், எனது பாதைக்கு இருக்கும் கவுன்டருக்கு சென்று அங்கிருக்கும் cab co-ordinator இடம் எனது இடத்தை சொன்னால் எனக்கு ஒரு cab நோட்டு கொடுப்பார். அதில் என் தகவல்களை நிரப்பி விட்டு, அந்த வண்டியில் சென்று அமர்ந்துகொண்டு இன்டிகாவாக இருந்தால் மேலும் மூவர் வரவும் அல்லது சுமோ போன்ற வண்டியாக இருந்தால் மேலும் ஏழு பேர் வரவும் காத்திருக்க வேண்டும்.      

அனைவரும் ஏறிய பின், மீண்டும் ஒரு சோதனை நடக்கும். அங்கு எங்கள் அடையாள அட்டைகளை ஸ்வைப் செய்த பின் செல்ல அனுமதிப்பர். அதன் பின் கோவிலில் சாமி சிலையை சுற்றுவது போல் அலுவலத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு தொடங்கிய இடத்தின் மிக அருகில் இருக்கும் கேட் வழியாக வெளியே செல்லும் பொழுது மீண்டும் ஒரு சோதனை. இங்கு சீட் பெல்ட் மற்றும் கார் டிக்கியை சோதனை செய்வர். ஒரு வழியாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தால், இந்த இடைப்பட்ட இடங்களில் இறங்குபவர்கள் 'லெப்ட்' 'ரைட்' என்று பல சந்துகளில் சுத்தவிடுவர். இவர்கள் அனைவரையும் இறக்கி விட்டு இறுதியாக நான் வீடு வந்து சேர்வதற்குள் நடுநிசியாகிவிடும்.      

இப்படி சுத்தி சுத்தி, தாம்பரம் வந்த முதல் இரண்டு மாதத்திலேயே, சோழிங்கநல்லூரில் இருந்து தாம்பரம் வரை இருக்கும் அனைத்து சந்து பொந்துகளும் எனக்கு அத்துப்படி. உங்களுடைய வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல உங்களுக்கு எத்தனை வழிகள் தெரியும்? அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து இருக்குமா. ஆனால் என்னால் எனது அலுவலகத்திற்கு பத்து நாட்கள் வெவ்வேறு வழிகளில் செல்ல முடியும்.  புதிதாக ஏதேனும் டிரைவர் வந்தால் நான் வழி சொல்லி அழைத்துச் சென்ற நாட்களும் உண்டு.


இரவு ஷிப்ட்:


இந்த ஷிப்டில் அலுவலகம் செல்பவர்களுக்கு இரு வழியும் cab சேவை உண்டு. உள்ளே செல்வது மார்னிங் ஷிப்ட் பிக்-அப் போலவும், அதிகாலை வீடு திரும்புவது ஈவ்னிங் ஷிப்ட் ட்ராப் போலவும் இருக்கும். ஆனால் அந்த ட்ராப் சற்று கடினமாக இருக்கும். காரணம் நான்கு பேர் வந்தால் தான் வண்டியை நகர்த்த அனுமதி கொடுப்பர். இரவு வேளையில் அலுவலகம் வருபவர்களே மிகக் குறைவு இதில் நமது வழியில் வரும் ஊழியர்கள் மிகவும் சொற்பம். நால்வர் வரக் காத்திருந்து புறப்படுவதற்குள் கதிரவன் தன் UV கதிர்களை பூமியின் மீது ஏவத் தொடங்கி இருப்பான்.

கொலைக்கு பின்:        

காலை மற்றும் இரவு ஷிப்ட்களில் பெரிதாக ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் விதி இந்த மாலை ஷிப்டை மட்டும் அதிகமாக பாதித்தது. காரணம் அந்தக் கொலைக்கு பின்னர் ஊழியர்களைப் பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அலுவலகம் கொண்டு வந்த சில விதிமுறைகள். 'நாங்க மோசமானவங்கல்லையே ரொம்ப மோசமானவங்க' என்ற சினிமா வசனம் போல் அந்த விதிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று பின்வருவது தான்.

இரவு 8:30 மணிக்கு அலுவலக வாசல் வெளியில் செல்பவர்களுக்கு சாத்தப்படும். MTC பேருந்தில் செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு வெளியில் செல்ல அனுமதி கிடையாது. 8:30 மணிக்கு மேல் வெளியில் செல்வது என்றால் சொந்த சீருந்தோ அல்லது அலுவலக cabஇலோ தான் செல்ல முடியும். 

இந்த சட்டம் இரு பாலருக்கும் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. 'பொம்பள புள்ளைங்கள வெளிய தனியா விடலனா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. பைக்ல போகும் பசங்கள எதுக்குலே நிறுத்தனும்?' இப்படி உங்கள் மனதினுள் தோன்றும். அதே எண்ணம் தான் என்னைப் போல் பலருக்கு தோன்றியது. இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால், எந்த நேரமாக இருந்தாலும் எப்படி வந்தாலும் அலுவலகம் உள் செல்ல தடை இல்லை. ஏனெனில் நாங்கள் உள்ளே வருவதில் அவர்களுக்கு லாபம் அல்லவா.

அது போகட்டும். இந்த நேரங்களை மாற்றியதால் பொதுவாக அலுவலகத்தில் இருந்து செல்லும் 10 மணி கடைசி பேருந்து 08:15 மணிக்கே புறப்படும் படி மாற்றப்பட்டது. இதனால் மாலை ஷிப்ட் வடிவத்தில்   பணிபுரியும் பலரும் cab சேவையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 10:30 மணிக்கு cab சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. சராசரியாக நாள் ஒன்றிக்கு குறைந்தது ஆயிரம் ஊழியர்களாவது இந்த நேரத்தில் cab பெற வந்து காத்திருக்க தொடங்கினர். இதனால் புதிதாய் ஒரு விதியும் பிறந்தது. பெண்களுக்கு Q வில் நிற்க விலக்கு அளிக்கப்பட்டது.

அவசர அவசரமாக வேலைகளை முடித்து விட்டு பதினைந்து நிமிடங்கள் முன்பே வந்து வரிசையில் காத்திருந்தாலும், எனக்கு பிறகு எனது ப்ராஜெக்டில் இருந்து கிளம்பிய பெண் தோழி எனக்கு டாட்டா காட்டி விட்டு என்னை முந்திக்கொண்டு cab கவுன்டரினுள் செல்லும் பொழுது என் மனதில் 'என்ன மாதிரி பெண்? ஆதிக்க சமுதாயத்தில் வாழ்கின்றோம் நாம்?' என்ற கேள்வி தோன்றும்.    

எனக்கு பின்னே வந்த அனைத்து மகளிரும் உள்ளே சென்று cab புத்தகத்தில் கையொப்பம் இட்ட பின் ஆண்கள் Q திறக்கப் படும். நான் உள்ளே செல்வதற்குள் எங்கள் தாம்பரம் வட்டாரம் இன்டிகா cab அனைத்தும் முடிந்து விடும். எனக்கு கிடைப்பதோ sumo இன வாகனங்கள். பல்லைக் கடித்துக்கொண்டு மற்றவர்களை போல் மாத சம்பளம் மட்டும் சரியாக வந்தால் போதும் என்று பல மாதங்கள் இப்படியே கடத்தி விட்டேன். ஆனால் இந்த வாரம் முழுவதும் மாலை ஷிப்டில் எனது பொறுமை சோதிக்கப்பட்டு உடைக்கப் பட்டு விட்டடது.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அலுவலகத்தில் இருந்து எனது இல்லம் 25 கிலோ மீட்டர் தூரம். எனது ஸ்ப்ளேன்டரில், என் தந்தை செல்லும் 50 KM/H வேகத்தில் சென்றாலும் முப்பது நிமிடங்களில் எனது இல்லம் சென்றடைந்துவிடுவேன்.

இந்த வாரம் திங்கட்கிழமை, பத்து மணிக்கே என் வேலைகளை முடித்து விட்டு, மன்னன் படத்தில் செயின்-மோதிரம் வாங்க ரஜினியும் கவுண்டமணியும் வரிசையில் முந்திச் செல்வது போல் சென்று, வரிசையில் பத்தாவது ஆளாக நின்று, அனைத்து மகளிரும் உள்ளே சென்ற பின்பு நாங்களும் வழி தொடர்ந்து சென்று, சோதனைகளை கடந்து, எனது வட்டார கவுன்டரை அடைந்தால் ஒரு cab புத்தகமும் இல்லை. காத்திருந்து காத்திருந்து,ஒரு வழியாக ஒரு புத்தகம் வந்தது. எலும்புத் துண்டை கண்ட நாய் போல, கண்கள் ஒளிர அந்த புத்தகத்தை வாங்கினால் அதில் டெம்போ என எழுதி இருந்தது. டெம்போ என்றால் பன்னிரண்டு பேர் செல்லும் வாகனம். அங்கு அருகில் இருந்த ஒரு பெண்மணி 'இது வீடு வரை போகாது. மெயின் ரோட்லையே எறக்கி விட்டுடுவாங்க' என்று சொல்லி எழுத மறுத்து விட்டார்.  பிரதான சாலையில் இருந்து எனது இல்லம் சரியாக 1.5 KM தூரம். 'நடந்து செல்வதா அல்லது காத்திருப்பதா?' என்று என் மனதில் நடந்த விவாதத்தில் நடந்து செல்வதே மேல் என்று முடிவு செய்து விட்டு என் பெயரை அதில் எழுதி விட்டேன்.

என்னைத் தொடர்ந்து பத்து பேர் எங்கள் வழி ஆட்கள் அதில் எழுதிடவே அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாகனத்தை நோக்கிச் சென்றோம். நோட்டை எடுத்துச் செல்லும் பொழுதும் சோதனை செய்யப் பட்டு ஒரு முத்திரை குத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டை, இறுதிக்கட்ட முத்திரைக்காக  ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று அமர்ந்தோம். ஓட்டுனர் வந்து எண்ணிக்கை பார்க்க ஒருவர் குறைகையில், அந்த நபர் வரக் காத்திருந்து, வந்தவுடன் புறப்பட்டு, வெளியில் செல்லும் கேட் அருகில் இறுதிக்கட்ட சோதனையை முடித்து விட்டு வண்டி அலுவலகத்தை விட்டு வெளியேறும் பொழுது மணி 11. அதன் பிறகு 'ரைட்' லெப்ட்' என்று ஒவ்வொருவராக பல சந்துகளுள் சென்று அவரவர் வீடுகளுக்கு அருகில் சென்று இறக்கி விட்டு நான் என் வீடு வந்து சென்றடையும் பொழுது மணி 11 45.

அந்த நிமிடம் அந்த நொடி எனது பொறுமை தகர்க்கப் பட்டது. 10:30 மணிக்கு எனது இரு சக்கர வண்டியில் கிளம்பி இருந்தாலும் 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்திருப்பேன். அயல்நாட்டில் இருந்துகொண்டு குறைந்த ஊதியத்திற்கு நம்மை அடிமைப் படுத்தி வேலை வந்குபவனுக்காக உழைக்க நாம் ஏன் இத்தனை இன்னல்களுக்கும் மன உளைச்சளுக்கும் ஆளாக வேண்டும் என்ற கோபம் தலைக்கு ஏறியது. இத்தனை இன்னல்கள் இருக்கு என்று சொன்ன பொழுதும் அதை பெரிதாக பொருட் படுத்தாத உயர் அதிகாரிகளை ஒரு மாத காலமாவது ஷிப்ட் அடிப்படையில் அலுவலகம் வந்து இந்த cab சேவையை பயன் படுத்த வைக்க வேண்டும் என்ற ஆத்திரம் பிறந்தது. 'இத்தனை ஆயிரம் ஊழியர்களை வைத்து cab சேவையை சரி வர செய்வது எவ்வளவு கடினம் தெரியுமா உனக்கு' என்று இந்தப் பதிவை பார்த்து சம்மந்தப்பட்ட சிலர் கேட்கலாம். அய்யா! உங்களை நான் எனக்காக ஒரு தனி கார் கேட்கவில்லை, என்னை என் போக்கில் என் வசதிற்கு ஏற்ப எனது இரு சக்கர வண்டியில் வந்து செல்ல விடுங்கள் என்று தான் கேட்கின்றேன்.        
             
தனிமனித சுதந்திரம் பறி போவதைக் கண்டு இங்கு நாங்கள் யாரும் பொங்கி எழ மாட்டோம். எத்தனை விதிகள் போட்டாலும் எதிர்த்து பேச மாட்டோம். எங்கள் குறிக்கோள் பணம் சேர்ப்பது அல்லது ஏற்கனவே கடனில் இருக்கும் குடும்பத்தை மீட்பது. அதற்காக எவ்வளவு அடி அடித்தாலும் அசராமல் வாங்கிக்கொண்டே  தான் இருப்போம். தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நின்ற காலமெல்லாம் கப்பல் ஏறிப் போய்விட்டது.
      
      வாழ்க சுதந்திரம்! 

Monday, June 16, 2014

முகண் - சிறுகதை

***************************************** BASED ON A TRUE STORY  *******************************
இந்தக் கதை ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை என்றபோதும், இதில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே.   
*******************************************************************************************************
05-May-2049

வழக்கத்திற்கு மாறாக உற்சாகத்துடனும், தன் கணவன் இன்று அனுமதிச் சீட்டுடன் வருவான் என்ற நம்பிக்கையுடனும் தனது படுக்கை அறையை வாசனை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்துக்கொண்டு இருந்தாள் ஈகா. அவளது சிந்தனை முழுவதுமே அவள் கணவன் மீதும் அவன் கொண்டு வரவிருந்த அனுமதிச்சீட்டின் மீதுமே இருந்தது. அன்று காலை மின்னஞ்சல் வழியே அரசாங்கத்திடம் இருந்து 'குழந்தைப்பேறு அனுமதி விண்ணப்பம்' வந்ததில் இருந்து அவளுக்கு தலைகால் புரியவில்லை, திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் குழந்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்க அனுமதிக்காக காத்திருந்தவள் அல்லவா. 

இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ஜீவா தலைமையிலான சர்வாதிகார அரசு 2030 ஆம் ஆண்டு உத்தரவு ஒன்று பிரப்பித்தது. "அரசு அனுமதி இல்லாமல் யாரேனும் பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது. மீறினால் குடியுரிமை பறிக்கப்பட்டு, அன்டார்டிக்காவிற்கு நாடுகடத்தப் படுவர்" என்ற பயங்கர ஆணையை பிறப்பித்திருந்தது. நாள் ஒன்றிற்கு நூறு குழந்தைகள் மட்டும் பிறக்க அனுமதி கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டு, அதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி, பதினைந்து ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய வல்லரசாக இந்தியா உருப்பெற்றுள்ளது. 

ஈகா தன் கணவன் சிவா வருவதை கண்காணிப்பு திரையில் கண்டவுடன், கதவிற்கு பின் சென்று மறைந்துகொண்டு, அவன் உள்ளே வந்தவுடன் அவனை பின் புறமாக கட்டியணைத்தாள். சிவா சற்றும் உணர்ச்சியின்றி அவளை விளக்கிவிட்டு, சோபாவில் சென்றமர்ந்தான். ஏமாற்றத்துடன் அருகில் சென்ற ஈகாவிடம், எதுவும் பேசாமல், அந்த அனுமதிப் பத்திரத்தை வழங்கினான். அதைப் பார்த்தவுடன் அதிர்ந்து போன ஈகா, அவளது மோதிரத்தின் முத்திரை சிவாவின் கன்னத்தில் பதியும்படி நல்ல பலமாக ஒரு முறை அறைந்தாள். 

சிவா கொண்டுவந்த அனுமதியில் குழந்தைப்பெறுவதற்கு மாறாக குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதற்கான அனுமதி இருந்தது தான் அவளது சினத்தின் காரணம். குழந்தை பெற்றுக்கொள்ளும் அனுமதி கிடைத்தபோதிலும், அனாதை குழைந்தையை தத்தெடுத்து வளர்க்கும் அனுமதியை மாற்றி வாங்கி வந்ததால் அவனை தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினாள். எதையும் பொருட்படுத்தாத சிவா, தன் வீட்டு பரணையில் இருந்து ஒரு சிறிய நாற்பது பக்க நோட்டை கொண்டுவந்து அவளிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னான். அதில் தமிழில் எழுதி இருக்கவே ஈகா நிதானமாக எழுத்துக் கூட்டி படிக்கத் தொடங்கினாள்.

30-April-2014

சீனு, சீனி, ஸ்ரீனி, சீனுவாசன், ஸ்ரீனிவாசன் என்று பலரும் என் பெயரை பலவாறு உச்சரிக்கும் அதிர்ஷ்டம் கொண்ட சீனிவாசன் நான். தென்காசி காற்றை சுவாசித்து வளர்ந்த நான் சென்னையின் உஷ்ணக் காற்றை உட்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறேன். பலரைப்போல் அறிவியலில் இளங்கலை பயின்று, முதுகலையில் கணினி பயன்பாட்டு அறிவியல் பயின்று, சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளான சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் இருக்கும் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், பல்லாயிரகணக்கான மனித மந்தையில் ஒருவனாக வேலை பார்க்கும், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களுக்கு சற்றும் மாறாத ஒருவன். 

என்ன வேலை என்று கேட்கின்றீர்களா? உங்களுக்கு மட்டும் சொல்கின்றேன், யாரிடமும் கூறிவிடாதீர்கள், அது பரம ரகசியம். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின், மென்பொருள் இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணி. அந்த இயந்திரத்திற்கும் ஒரு பெண்ணுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஒரு பெண் எப்பொழுது சிரிப்பால் இல்லை அழுவாள் என்று யாராலும் கணிக்க முடியாதோ, அது போலத்தான் அந்த இயந்திரமும். எந்த நேரத்தில் பழுதாகும் என்று யாராலும் கணிக்க முடியாத ஒரு மாய வஸ்து. எங்கள் நிறுவனம் அந்த அமெரிக்க நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின்படி உடனுக்குடன் பழுது பார்க்க வேண்டும் இல்லையேல் எங்களைப் பதம் பார்ப்பார்கள். இங்கு பழுது பார்க்கும் என்னைப் போன்றவர்கள் தான் இந்த அமைப்பின் அடிமட்டம். எப்படி ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றாலும் தோற்றாலும் காரணம் கங்குலி என்பரோ, அப்படித்தான் இங்கு நாங்கள். எங்களுக்கு பழியிலும் புகழிலும் என்றுமே குறைவில்லை. 

நேற்று (29-April-2014 அன்று) அந்த இயந்திரத்தில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு பயன்பாடு பழுதாகிவிட, அதை நான் மட்டுமே சீர் செய்ய முடியும் என்ற நிலை தோன்றிய கட்டாயத்தின் பேரில், நேற்று காலை பத்து மணிக்கு அலுவலகம் வந்த நான், அலுவலகத்தை விட்டு, எனது இருசக்கர வண்டியில் புறப்படத் தயாரான பொழுது மணி நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட மூன்று, நாள் 30-April-2014. வன்பொருள் இயந்திரத்தை நாள் முழுவதும் பழுது பார்க்கும் அளவிலான சோர்வும், மன உளைச்சலும், மென்பொருள் இயந்திரத்தை ஒரு மணி நேரம் பழுதுபார்த்தாலே அடைந்து விடுவோம். அப்படியென்றால் பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்ததால் நான் பெற்ற சோர்வை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அலுவலக அடித்தள பார்க்கிங் செல்ல வெளியில் வரும் பொழுது தான் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்ததை கவனித்தேன். உள்ளே இருப்பவர்கள் வெளியில் நடக்கும் நிகழ்வுகளால் வேலையில் இருந்து கவனம் சிதறி விடக் கூடாது என்பதற்காக, ஒலி, ஒளி, காற்று இவை எதுவும் உள் நுழையாதபடி வடிவமைக்கப்பட்ட ஒரு நாகரீக கண்ணாடிச் சிறை அது.

மழையில் நான் நனைந்தாலும் பரவாயில்லை எனது ஆண்டிராய்டு கைபேசி நனையக் கூடாது என்று எண்ணிக் கொண்டு எனது கைபேசியை கையில் எடுக்கும் பொழுது தான் கவனித்தேன் அதுவும் என்னைப்போல் உயிரற்று கிடந்ததை. முன்பெல்லாம், எனது பேசிக் மாடல் நோக்கியா கைபேசியில் ஒரு முறை முழு சார்ஜ் ஏற்றி விட்டால் போதும் குறைந்தது மூன்று நாள் வரை உயிருடன் இருக்கும். இந்த ஆண்டிராய்டு கைபேசி வந்ததில் இருந்து, எங்கு சென்றாலும் போனுடன் சேர்த்து சார்ஜரையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இன்று சார்ஜரை மறந்ததால் இந்த நிலை. அதே நிமிடம் தான் நான் மறந்த மற்றொன்று நினைவுக்கு வந்தது. அது என்னுடைய இரவு உணவு. பித்து பிடித்தவன் போல் நீரும் அன்ன ஆகாரம் இன்றி வேலை செய்ததை எண்ணி வருந்துவதா இல்லை பெருமை படுவதா என்று எனக்கு தெரியவில்லை.

அலுவலகத்தை விட்டு வெளியே சென்றால் சிங்கிள் டீ கூட கிடைக்காது அதிகாலை என்பதாலும், எனது கைபேசியை மழையில் இருந்து காக்க ஒரு பிளாஸ்டிக் பை தேவை பட்ட காரணத்தாலும், வேறு வழியின்றி அலுவலகத்தின் உள் இருக்கும் சரவண பவனை நோக்கி நடந்தேன். அங்கு கவுன்டரில் சுகமாய்த் தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி விசாரித்தால் 'தோசை மட்டும் தான் இருக்கு,சாம்பார் இல்ல' என்று சிவந்த கண்களால் கணினித் திரையை பார்த்துக்கொண்டேமேலும் சிவந்தான். வேறு வழியின்றி அந்த தோசையையும், பிளாஸ்டிக் கவருக்காக ஒரு உருளை சிப்ஸும் வாங்கினேன். இவர்கள் கொடுக்கும் தோசையின் மகத்துவம் என்னவென்றால், கல்லில் இருந்து எடுக்கபடும் அந்த பேப்பர் போன்ற தோசை தட்டை அடையும் முன், சூடான கல்லில் இருந்து எடுத்ததற்கான எந்தத் தடையமும் இன்றி நொடியில் ஆறி இருக்கும் என்பது தான். 

கைபேசியை பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு, நான் நனைந்தாலும் பரவாயில்லை, வீடு சென்று படுக்கையில் எந்தச் சலனனும் இன்றி உறங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணத்தை தொடங்கினேன். கன மழை என்பதால் வண்டி ஓட்டக் கடினமாக இருந்தாலும், அந்நேரத்தில் மிக சொற்ப வாகனங்களே OMR சாலையில் சென்றுகொண்டிருந்ததால், முன்னெச்சரிக்கையுடன் இன்டிகேட்டர் போட்டுக்கொண்டு சாலை ஓரமாகவே சென்றுகொண்டிருந்தேன். மழைத்துளிகள் எனது ஹெல்மெட் கண்ணாடியில் பட்டு சாலையை மறைத்தால், கண்ணாடியை மேல் தூக்கி விட்டு இன்னும் மெதுவாக வாகனத்தை செலுத்தினேன். மழை தனது உச்சகட்டத்தை எட்டி இருந்தது. மழை நீர் துளிகள், ஊசி குத்துவதுபோல் எனது முகத்தை துளைத்துக் கொண்டிருந்தன. 

சாலையிலும் நீர் வரத்து சற்று அதிகரித்து இருந்தது. 'இது போன்ற சமயங்களில் டயர் நனைந்து போவதால் , பிரேக் பிடிக்கும் பொழுது வண்டி வழுக்கி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதனால் மிகவும் மெதுவாக சென்றால் தான் வண்டியை நமது கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும்' என்று எனக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்த தந்தையின் குரல் எனக்குள் பிரதிபலித்துக் கொண்டிருந்த சமயம் நான் புனித ஜோசப் பொறியியல் கல்லூரியை கடந்து சத்யபாமா பல்கலைக் கழகத்தின் அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென ஒருவர் நான் வருவதை கவனிக்காமல் சாலையை தனது சைக்கிளில் கடக்க முயல்கிறார் என்பதை நான் கவனித்துவிட்டேன். ஹாரனை அடித்து அவரை எச்சரித்து கொண்டே எனது வண்டியின் பின் பிரேக்கை அழுத்தினேன்.

பிரேக் பிடித்தும் அவரது சைக்கிள் நிற்காததால், சற்று பயந்து போன அந்த சைக்கிள்காரர், தனது காலை சாலையில் ஊன்றி அவரது சைக்கிளை நிறுத்தும் சமயம், அவரது முன் சக்கரம் எனது வண்டியின் முன் சக்கரத்தை மிகவும் லேசாக முத்தமிட்டது. இவரும் நிம்மதி பெரு மூச்சு விட, அவர் என்னைப் பார்த்து புன்னகைத்த அடுத்த நொடி அவரும் அவர் சைக்கிளும் வானில் பறக்க, அவரை அடித்த டெம்போ எந்தக் கவலையும் இன்றி அசுர வேகத்தில் மறைந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்த நான் மீள்வதற்குள் மழை நின்று விட்டது. எனது வண்டியை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நான் ஓட, சிதறு தேங்காய் போல அவரது சைக்கிள் சிதறிக்கிடந்தது. அவர் அதைத் தாண்டி சாலை ஓரத்தில் இருந்த மணலில் விழுந்து நினைவின்றி கிடந்தார். அவரது காலில் இருந்து ரத்தம், குழாயில் இருந்து வரும் நீர் போல ஓடி மழை நீருடன் கலந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவர் உடலில் உயிர் இருந்தது. இல்லை இருந்தும் இல்லாமல் இருந்தது. 

எனது பான்ட் பாக்கெட்டைத் தடவினேன் அதில் கைக்குட்டை இல்லை என்பதை அறிந்தவுடன் எனது வண்டியை நோக்கி ஓடினேன். மழையில் நனைந்து ஈரமாயிருந்த வண்டி துடைக்கும் துணியை சாலையில் தேங்கி இருந்த நீரில் அலசி விட்டு அவரது வலது முட்டிக்கு கீழே இறுக்கி கட்டினேன். ஆம்புலன்சை அழைக்க எனது கைபேசியில் உயிர் இல்லை, அந்த இடத்தில மனித நடமாட்டமும் இல்லை. அவரிடம் கைபேசி உள்ளதா என்று தேடத் தொடங்கிய பொழுது அவரது சட்டையில் இருந்த அடையாள அட்டை இருந்தது. அவர் பெயர் கோபால் என்றும் அவர் ஒரு அரசாங்க துப்புரவு தொழிலாளி என்பதையும் வாசித்த சமயம் அவரது சைக்கிளுக்கு அருகில் கைபேசியும் சிதறுகாயாக உடைந்திருப்பதைக் கண்டேன். அந்த சிம்கார்டை மட்டும் எனது பைக்குள் போட்டுக் கொண்டு, சாலையின் மத்தியில் வாகனம் ஏதேனும் வர காத்திருந்தேன்.

சுமார் பத்து நிமிடம் கழித்து சாலையின் எதிர் புறத்தில் வந்த வாகனத்தை ஓடிச் சென்று நிறுத்தி, அதன் ஓட்டுனரிடம் உடனே ஆம்புலன்சை அழைக்கச் சொன்னேன். எப்பொழுதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தின் அருகில் ஒரு அரசு ஆம்புலன்ஸ் இருப்பதை கவனித்ததுண்டு. ஐந்தாவது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றிச் செல்ல, அவரை அப்படியே விட மனமின்றி, நானும் எனது வண்டியில் அவர்களை பின் தொடர்ந்தேன். சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கிய அரசு மருத்துவமனையில் கோபாலுக்கு அவசர முதலுதவி சிகிச்சை தொடங்கும் பொழுது மணி 4:15. அவரது வீட்டிற்கு தகவல் சொல்லலாம் என்று அவரது அடையாள அட்டையை எடுத்து மீண்டும் பார்த்தேன் அதில் அவரது கைபேசி எண் மட்டும் தான் இருந்தது.

ஒரு காவல் துறை அதிகாரி (கான்ஸ்டபில்) என்னை விசாரிக்க, நான் நடந்ததை சொல்லி முடித்த பிறகு 'நம்பர் நோட் பண்ணிங்களா' என்று கேட்க, நான் 'இல்லை' என்று தலையாட்ட, பின் எனது முகவரி மற்றும் கைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டார். அவரிடம் அந்த அடையாள அட்டையைக் கொடுத்தவுடன், அவர் அந்த விலாசத்திற்கு ஆள் அனுப்பி தகவல் சொல்வதாக கூறினார்.

இதற்குள் அந்த மருத்துவர் என்னிடம் வந்து 'அவருக்கு வேண்டிய முதலுதவி கொடுத்தாச்சு, பெரிய ஆபத்து ஒன்னும் இல்லை. ஆனால் அவர் காலில் அடி பலமாக இருக்கு. அறுவை சிகிச்சை செய்யணும். இங்கு அதற்கான வசதி இல்லை. நீங்க ஒரு நல்ல தனியார் ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோயிடுங்க' என்று கூறினார். 'இதற்கு மேல் அவரது குடும்பம் பார்த்துக் கொள்ளட்டும் நான் போய் என் பொழப்பை பார்க்கின்றேன் ' என்று நான் சொல்ல முற்பட்டாலும் எனது மனிதாபிமானம் என்னைத் தடுத்து விட்டது.

உலகில் கஷ்டத்தில் இருக்கும் அனைவரையும் என்னால் காத்து உதவ முடியாத ஒரு சுய நல வாழ்க்கை வாழும் எனக்கு, என் கண் முன் வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதிலாவது ஒரு அல்ப சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பினேன். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நான் முற்பட, அதை தடுக்க முயன்ற அந்த காவல் துறை அதிகாரிக்கு என்னிடம் இருந்த ஒற்றை ஐநூறு ரூபாய்த் தாளை அவர் கையில் வைத்து, நான் செல்லும் தனியார் மருத்துவமனைக்கு கோபாலின் குடும்பத்தை அனுப்ப சொல்லி விட்டு ஆம்புலன்சுடன் சென்றேன். அந்தத் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அழைத்துச் செல்ல, அங்கு வரவேற்பில் இருந்த பெண்ணிடம் எனது கைபேசிக்கு உயிர் ஊட்ட அவள் உதவியை நாடினேன்.

அவளிடம் எனது கைபேசிக்கு பொருந்தும் சார்ஜர் இருக்க, அளவான புன்னைகையுடன் எனது கைபேசியை வாங்கி அவள் இடத்தில இருந்த பிளக் பாயிண்டில் சார்ஜரை சொருகினாள். நான் அங்கிருந்து திரும்பியவுடன் அந்த மருத்துவர் 'அவருக்கு பிளோ ணீ அம்புயுடேஷன்(below knee amputation) பண்ணனும். அவரு வீட்டுக்கு தகவல் சொல்லி சீக்கரம் வரச் சொல்லுங்க. பார்ட்டி தௌசந்(forty thousand) கட்டணும்' என்று அவர் நிதானமாக சொல்லி முடிபதற்குள், வரவேற்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றால் அந்தப் பெண் ஒருவரை கை காட்டி அவர் கோபாலை தேடி வந்ததாக சொன்னாள். இம்முறையும் அதே அளவில் புன்னகை.

உயரம் சற்று கம்மியாக, தலை முடி நரைக்கத் தொடங்கிய நிலையில் இருந்த அந்த ஆசாமி என்னிடம் வந்து 'நான் ராமசாமி. கோபாலோட தோஸ்து. அவனோட பக்கத்துக்கு ஊடு தான். என்ன ஆச்சு?' என்று கேட்டார். சத்யபாமா முதல் இந்த தனியார் மருத்துவமனை வரை முழு கதையையும் சொன்னேன். சற்றே கலங்கிய ராமசாமி சுவரின் ஓரம் வரிசையாக இருந்த இருக்கைகளின் ஒன்றில் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தார். அவரது அருகில் சென்று அமர்ந்து 'அவர் வீட்ல இருந்து யாரும் வரலையா?' என்று கேட்டேன்.

'அவன் சின்ன வயசுலையே அவங்க அப்பா அம்மா செத்துட்டாங்க. என் ஆத்தாதான் அவனையும் வளர்த்துச்சு. அவனுக்கு இருக்குறது அவங்க அப்பா விட்டுட்டு போன ஒரு குடிசையும் அப்பறம் அவன் அடம் பிடுச்சு கட்டிக்கின இந்தப் பொண்ணும் தான்' என்று அவர் சொல்லியவுடன் நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். என்ன நடக்கின்றது என்பது கூடத் தெரியாமல் ஏதோ ஒரு உலகில், என்னவோ, யாரிடமோ பேசிகொண்டிருந்தாள். அவளது முந்தானை விலகி இருப்பதை சரி செய்ய வேண்டிய அவசியத்தை அவள் கைகளுக்கு உணர்த்த முடியாத நிலையில் அவள் மூளை இருப்பதை நான் உணர்ந்த பொழுது, 'கோபால் யு ஆர் கிரேட்' என்று என்னுள் சொல்லிக்கொண்டேன். ராமசாமி 'இந்தப் பொண்ணு மூணு மாசம் முழுவாம வேற இருக்கு. இனி இந்த மூணு உசுர அந்த கருப்பன் தான் காப்பாத்தணும்' என்றார்.

அவர்களுக்கு அது மிகவும் பெரிய தொகை என்பதையும், கருப்பன் வந்து காப்பாத்துவதற்குள் அவர் நிலை மோசமாகி விடும் என்பதையும் நான் உணர்ந்தேன். அவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, வரவேற்பை நோக்கிச் சென்று, எனது கைபேசியை அந்தப் பெண்ணிடம் கேட்டேன். அவளுடைய சிரிப்பின் அளவே உயிர் பெற்றிருந்த எனது கைபேசியை நீட்டினாள். கைபேசியை ஆன் செய்த பொழுது மணி 07:30. அன்று மாதத்தின் கடைசி நாள் என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன். தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் சம்பளம் வந்துவிடும். எனக்கும் அம்மாத சம்பளம் வந்தவுடன், வங்கி இருப்பு 37 ஆயிரம் ரூபாய் என்று குறுந்தகவல் வந்திருந்தது. நீங்கள் என்ன நினைகின்றீர்களோ அதே தான் நானும் செய்தேன். உடனே சென்று 35 ஆயிரம் ரூபாயை செலுத்தி, சிகிச்சையை தொடங்கச் சொல்லிவிட்டு, என் நண்பனுக்கு அழைத்து 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வரச் சொன்னேன். 

ஒரு மணி நேரத்திற்குள் காசுடன் வந்த என் நண்பன், நடந்ததை அறிந்தவுடன் 'அதுதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்ட இல்ல. மூடிட்டு வீட்டுக்கு வர வேண்டியது தான. பேர் தெரியாத யாருக்கோ இப்படி காச தூக்கி கொடுக்கற. உனக்கு அறிவே இல்லயா' என்று என்னை திட்டத் தொடங்கினான். அவனை பொருட்படுத்தாமல் ஐந்தாயிரத்தை செலுத்திவிட்டு, மீதம் இருந்த ஐந்தாயிரத்தை ராமசாமியிடம் 'மருந்துச் செலவுக்கு இத வச்சிக்கோங்க. அவர பார்த்துக்கோங்க. நான் அப்பறம் வர்றேன்' என்றவுடன், ராமசாமியின் கண்ணில் நீர் தானாக ஒழுகத் தொடங்கியது, கைகூப்பி எனக்கு நன்றி சொன்னார். ஒரு உயிரை காப்பாத்திய பெருமையுடன் அன்று பகல் முழுவதும் நிம்மதியாக உறங்கினேன்.

மூன்று நாட்கள் கழித்து கோபாலை சந்திக்க அந்த மருத்துவமனைக்குச் சென்றேன். ஒற்றை காலை இழந்து சுய நினைவுடன் இருந்த கோபால், 'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைங்க. நான் பூட்ருந்தா என் சரோஜா என்ன ஆயிருக்கும். கலைனர் காப்பீட்டு திட்டத்துல இருந்த காசு வந்ததும் உங்களுக்கு கொடுத்துர்றேன்' என்றார். 'காசு பற்றி கவலை வேண்டாம், உடலை பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அவருக்கு ஆதரவு சொல்லி வீடு திரும்பினேன். ஒரு மாத சம்பளம் முழுவதையும் இழந்ததால் அந்த மாசத்தை ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. வீட்டு வாடகையை நண்பர்கள் பார்த்துக்கொண்ட பொழுதும், அந்த மாதத்தின் பல நாட்கள் இரண்டு வேளை மட்டுமே உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இரண்டு வாரம் கழித்து அவரை பார்க்கச் சென்ற பொழுது, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து வந்த இருபது ஆயிரம் ரூபாயை, நான் மறுத்தும், கட்டாயப் படுத்தி என்னிடம் கொடுத்தார். மீதி பணத்தை மூன்று மாதத்தில் திரும்பத் தருவதாக அவர் சொன்னதை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அதில் பத்தாயிரத்தை எனது நண்பனிடம் கொடுத்து விட்டு, மீதம் இருந்த பணத்தில் ஒரு வீல் chair உம், ஒரு பேசிக் மாடல் நோக்கியா போனும் வாங்கினேன். அவரது சிம் கார்டை அதில் போட்டு அவரிடம் இரண்டையும் கொடுத்து விட்டேன்.

நான்கு மாதங்களுக்கு பிறகு அவரது ஓய்வுத் தொகையை வைத்து அவர் தொடங்கிய ஒரு சின்ன ரீசார்ஜ் கடையை திறக்கும் பொழுது என்னையும் அழைந்திருந்தார். என் வாழ்வில் நான் சந்தித்த பல மனிதர்களில், கோபாலைப்போல் தன்னபிக்கை உடையவர்களை நான் கண்டதில்லை. ஊனம் என்பது உடலில் இல்லை ஒருவரின் மனதில் தான் இருக்கின்றது என்பதை எனக்கு புரியவைத்தவர் கோபால். ஒன்பதாவது மாதம் ஒரு அழகான ஆண்பிள்ளையை அவர் மனைவி ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையைக் கண்ட அந்த கணமே 'அவனின் செலவுகளுக்கு நான் பொறுப்பெடுத்துக் கொண்டு அவனுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தேன். இதை கோபாலிடம் கூறியபொழுது அவர் உடன்படவில்லை, தன் மகனைத் தன்னால் ஆளாக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். ராமசாமி எனக்கு துணையாக அவர் மனதை மாற்ற உதவினார். என்னிடமிருந்த ஒரே ஒரு கோரிக்கையை கோபாலிடம் கூறினேன். 'இவன் வளர்ந்து எனக்கு ஒன்றும் செய்யத் தேவையில்லை, ஆனா இவன் ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலே எனக்குப் போதும்' என்று நான் உறுதியாக கூற கோபால் உடன்பட்டார். 

05-May-2049 

அதை முழுவதும் படித்து முடித்து, புல்லரித்து இருந்த ஈகாவின் காது அருகில் சென்று சிவா 'அந்தப் பையன் நான் தான்' என்று சொல்லியவுடன், அவள் கண்களில் இருந்து பெருகிய நீர் கன்னத்தின் வழியாக வடிந்து அவள் கையையும் தாய்மையையும் நனைத்தது.

Friday, June 13, 2014

தேன் மிட்டாய் - மே 2014

Anniversary:

மிக முக்கியமான தேன் மிட்டாய் எனது உடல் நலக் குறைவால் தாமதமாக வெளியிடுகின்றேன். சென்ற ஆண்டு இதே மே மாதம் தொடங்கியது எனது தேன் மிட்டாய் பகுதி, இந்தப் பதிவுடன் ஓர் ஆண்டுகால சாதனையை நிறைவு செய்கிறது. எனது பார்வையில் எனது வாழ்க்கை அனுபவங்கள் வாசகர்களை எந்த அளவுக் கவரும் என்ற ஒரு சந்தேகத்துடன் தான் 'தேன் மிட்டாயை' தொடங்கினேன். எனக்கு மிகவும் நெருங்கிய தோழி ஒருவர் சென்ற மாத பதிவை படித்து விட்டு, 'தேன் மிட்டாய் நல்லா இருக்கு நீ எழுதற மத்ததை விட. தேன் மிட்டாய் மட்டுமே நீ எழுதலாம்' என்று கூறியதில் எனக்கும் தேன் மிட்டாய்க்கும் பெரும் வெற்றியே. மற்ற பகுதிகள் அவள் பார்வையில் மொக்கையாக உள்ளன என்ற உள் குத்தையும் அந்த வாசகத்தின் மூலம் நான் அறிவேன். 

ஆயிரத்தில் ஒருவன்:

சமீபத்தில் வாத்தியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வடிவில் மீண்டும் திரையில் தோன்றியதை நான் திரையரங்கம் சென்று கண்ட அனுபவத்தை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். அதற்கான நேரம் இது வரை வராததால், இங்கு சிறு குறிப்பாக பதிகின்றேன். வரலாறு மிக முக்கியம் அல்லவா. சத்தியம் திரையரங்கில் Studio-5 திரையில், MGR வெறுக்கும் எனது தோழனுடன் படத்தை காணச் சென்றேன்.

என் நண்பனோ சிவாஜியை போற்றி MGRயை பழிக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன். நானோ என்றும் MGR பக்கம் நிற்கும் குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவன். என்னை  அவன் பல ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்க்கச் செய்த கொடுமைக்கு அவனை பழிவாங்க எனக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பம் இது என்று எண்ணி அகமகிழ்ந்தேன். அவனால் இருக்கையில் அமர முடியவில்லை, MGR திரையில் தோன்றி வீர வசனங்கள் பேசும் பொழுதெல்லாம் நெளிந்து கதறினான்.

எங்களைத் தவிர்த்து உள்ளே இருந்தவர்கள் அனைவரும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். ஒவ்வொரு பாடல் திரையில் வரும் பொழுதும் எனது அருகில் இருந்தவர்,  பாடத் தொடங்கி விடுவார். 'அதோ அந்த பறவை போல...' என்று TMS குரல் ஒலிக்க, என்னை அறியாமல் எனது உதடுகளும் பாடத் தொடங்கின. ஒரே ஒரு குறை தான். சத்யம் என்பதால் அனைவரும் சற்று அமைதியாகத் தான் படம் பார்த்தார்கள். அடுத்து MGR படம் திரையில் வரும் பொழுது MGR ரசிகர்களுடன் விசில் சத்தம் காதுகளை பிளக்க ஒரு லோக்கல் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறேன்.      

பேருந்து நிழற்குடை

சுட்டெரிக்கும் மதிய வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் சமயம், கருப்பு  லெதர் சூவை லென்ஸ் வைத்து எரிப்பது போல் சூரியன் சுடும் சமயம் பலரை எனது வாய் பழிச் சொல்லால் சபிக்கும். 'அவுங்க நாடு குளிர் நாடு, அவன் சூ, கோட்டு எல்லாம் போட்டு வேல பார்ப்பான். இங்க வெய்யில். எங்களால முடியல சாமி'. கணினி முன் செய்யும் வேலைக்கு முழுக்கை சட்டையும் சூவும் எதற்கு என்று பலமுறை நான் சிந்தித்ததுண்டு. இவை அனைத்தும் பொருளாதார அடிமைத்தனத்தின் உச்சகட்டம். அந்த வட்டத்திற்குள் சென்றால் பல சிக்கல்கள் வரும், நாம் திரும்பிவிடுவோம். 

சோழிங்கநல்லூர் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக வேகமாக மாறிவருகின்றது. அங்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் பேருந்துகளை உபயோகிக்கின்றனர். அப்படி இருக்க அங்கு நிழல் தரும் ஒரு மரமும் இல்லை, பேருந்து நிலையமும் இல்லை.   மதிய வேளைகளில் முடியல.

ஒரு பக்கம் பேருந்து நிலையம் இல்லை என்றால், இருக்கும் இடங்களில் 'மாண்புமிகு .............. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில்' என்று ஆரம்பித்து அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பெயர் வரை எழுதிவிடுகின்றனர். ஆனால் அந்தப் பேருந்து நிறுத்தத்தின் பெயர் மட்டும் எங்கு தேடியும் கிடைப்பதில்லை. ஊருக்கு புதிதாய் வருபவர்களின் கதி அதோ கதி தான்.     

Vending Machine
அலுவலகத்தில் புதிதாய் மூன்று Vending Machine களை நிறுவியுள்ளனர். இதில் 5,10,20 ரூபாய் தாள்களை செலுத்தி, item-codeஐ என்டர் செய்தால், நமக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். அதனுள் பெரும்பாலும் இந்த டின் கோக்,பெப்சி வகையறா, lays, haldiraams தின்பண்டங்கள், மற்றும் சாக்லேட்கள் இருக்கும்.   

இதற்கு முன் இந்த இயந்திரங்களை பயன்படுத்திய அனுபவம் எனக்கு கிடையாது என்பதால் எனது தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு அதில் ஏதேனும் வாங்க வேண்டும் என்று சென்றேன்.  முதலில் நாங்கள் செலுத்திய பத்து ரூபாய் தாளை, 'கசங்கிய தாள்' என்று  அது துப்பிவிட்டது. அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு மேலும் நான்கு புதிய பத்து ரூபாய் தாள்களை செலுத்தினோம். தோழி 25 ரூபாய் டின் கோக் வாங்க, நான் 12 ரூபாய் ப்ரூட்டி வாங்கினேன். எனது மனதினுள் '25+12=37. 40-37=3', அப்ப அந்த மூன்று ரூபாய் வராதா என்று ஏங்கிய பொழுது ஒரு அம்மணி அவரசமாக வந்து பத்து ரூபாய் தாளை உள்ளே செலுத்தினார். 'நம்ம மூனு ரூபா போச்சு'  என்று நான் நம்பிக்கை இழக்கும் சமயம், அவர் 10 ரூபாய் lays மட்டும் வாங்க, அடுத்த பத்து நொடிகளில் அந்த இயந்திரம் எனது சில்லறையை துப்பியது. 

வாழைத் தோட்டம்

வழக்கம் போல் அலுவலகம் செல்லும் ஷேர் ஆட்டோ... சி... கேபில் செல்லும் பொழுது மேடவாக்கம் அருகே ஒரு பெண்மணியை பிக் அப் செய்ய சென்ற வழியில், ஒரு பெரிய கிணறுடன் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு வாழைத் தோட்டம் ஒன்றைக் கண்டேன். கான்கிரிட் காடுகளுக்கு மத்தியில் ஒரு வாழைத் தோட்டத்தைக் கண்டது என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. அடுத்த முறை அந்தப்பக்கம் சென்றால் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்.           
Unibrom 

இது எனது பாட்டிக்கு அவரது கண் டாக்டர் புதுவையில் எழுதிக் கொடுத்த சொட்டு மருந்து. அது தீர்ந்து விடவே, சென்னை வந்தப்பொழுது என்னை வாங்கித் தரச் சொன்னார். நானும் பல மருந்துக் கடைகளில் கேட்டு, எங்கும் கிடைக்காததால், எங்கள் வட்டாரத்தில் சற்று பெரிய மருந்துக் கடைக்குச் சென்றேன். அங்கும் கிடைக்கவில்லை. அந்தக் கடை உரிமையாளரிடம் 'இது எங்கு தான் கிடைக்கும்?' என்று வெறுப்புடன் கேட்டேன். அவர் 'இது யார் எழுதியது?' என்று பொறுமையாக கேட்டார். நான் 'புதுவையில் ஒரு டாக்டர்' என்றேன். அவர் சிரித்துக்கொண்டே 'அங்கு மட்டும் தான் கிடைக்கும்' என்றார். 

தனது கிளினிக் உடன் இருக்கும் தனது சொந்த மருந்துக் கடையில் மட்டும் கிடைக்கும் மருந்துகளை மக்களுக்கு எழுதிக் கொடுத்து நல்ல வியாபாரம் பார்க்கும் மருத்துவச் சமுதாயம் பெருகிக் கொண்டுள்ளது.

ஆபாச விளம்பரம் 

IPL விளையாட்டுகள் பார்த்த பொழுது என்னை மிகவும் கோபப்படுத்தியது சில விளம்பரங்கள். மிகவும் குறிப்பாக சில ஆணுறை மற்றும் பாடி ஸ்ப்ரே விளம்பரங்கள் சற்று அதிக அளவில் ஆபாசத்தை தொலைகாட்சித் திரையில் தெளிக்கின்றன. தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு என்று இயங்கும் சென்சார் போர்டின் அளவுகோல் தான் என்ன?   
                 
 கனவில் யார் தெரியுமா?                 

மே மாதம் 23 ஆம் நாள், நோய் வாய்ப்பட்டு குணமான எனது தாத்தாவை எங்களது கிராமத்தில் சென்று விட்டு சென்னை திரும்பிய அந்த வெள்ளி இரவு கடும் ஜுரம். மறு நாளும் ஜுரம் தொடர, எனக்கு சில சூட்டுக் கட்டிகளும் உடன் தோன்றின. எங்கள் வீட்டில் அம்மை வந்த அனுபவம் உள்ள எனது அம்மா மட்டும் 'இது அம்மை' தான் என்று உறுதியாக சொன்ன பொழுதும், சில கட்டிகள் முதுகில் மட்டும் இருக்கவே என்னால் அதை ஏற்க முடியவில்லை. மாலை டாக்டரிடம் சென்றால் அவர் ஒரு கட்டியை பார்த்தவுடனே இது அம்மை தான் என்றார். அம்மைக்கு மருந்து எதுவும் இல்லாததால், ஜுரத்திற்கு மட்டும் மருந்து கொடுத்து அனுப்பினார். 

அம்மை என்றவுடன் 'அம்மன்.சாமி' என்று பல அலப்பறைகள் செய்யத் தொடங்கினர். அது அந்தச் சிறுக்கி varicellaவின் வேலை என்றால் யாரும் கேட்கவில்லை. இவர்கள் பண்ண அலப்பறையுடன் உறங்கிய எனது கனவில், அம்மன் வடிவில் நம்ம ரோஜா ஆண்டி எனது வீட்டிற்கு வந்து என் நெற்றியில் கை வைக்கின்றார்,  சூட்டை குறைக்க.               

Thursday, May 15, 2014

தேன் மிட்டாய் - ஏப்ரல் 2014

சில அலுவல்கள் காரணமாக எழுத்துக்கு நெடுநாள் இடைவெளி விட்டிருந்தேன். மீண்டும் உங்களை உற்சாகத்துடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

சென்ற மாதத்தின் தொடர்ச்சி

பெண்களின் பின் சென்றால் அது எப்போழுதும் ஏமாற்றம் தான் என்பது  பெண்களின் பின்னழகை ரசித்து பின் தொடர்ந்து, முன்னழகைக் கண்டு மனம் புண்ணான பல ஆண்கள் அறிந்த உண்மை என்பதால் அந்த சம்பவத்தை பற்றி மேலும் பேசப் போவதில்லை. 

கல்யாண சீசன்

என்னமோ எதோ தெரியவில்லை, இந்த மாதம் எதிர்பாராத பல கல்யாண சேதிகள் என் காதுக்கு வந்து சேர்ந்தன. ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், மறுபுறம் மனதை ஒரு இனம் தெரியாத சோகம் வந்து சூழ்ந்து கொண்டது. சில திருமணங்கள் முன்பே திட்டமிட்ட பொழுதும் நாட்கள் நெருங்கும் பொழுது தான் பிரிவின் வலி மேலும் அதிகமாகின்றது. 

இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிகின்றது.

1.எத்தனை தமிழ் சினிமாவில் கேலி செய்த பொழுதும், தமிழ் நாட்டில் இன்னும் அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு மௌசு குறையவில்லை.

2.ஆண்-பெண் நட்பு என்பது அந்தப் பெண்ணின் திருமணம் வரையில் தான். எவ்வளவு தான் மனிதர்கள் தாங்கள் நாகரிகமாகவும் மிகவும் 'பிராக்டிகலாகவும்' மாறிவிட்டதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருக்கும் மிருக குணமான சந்தேகம் இன்னும் மாறவில்லை.

மாங்காய் லஞ்சம்

சிப்காட் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு மாமரம் உண்டு என்பதை கவனிக்கும் அளவு கூட நேரம் இல்லாத சாபம் பெற்றவர்கள் சக மென்பொருள் தோழர்கள். ஒரு நாள் பேருந்து வரக் காத்திருக்கும் பொழுது 'தொப்' என்ற சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்த பொழுது மூன்று சிறுவர்கள் தேர்ந்த கல் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு மாங்கனி ஏற்கனவே இருந்தது. நான் எறிய பேருந்தில் அவர்களும் ஏற, நாங்கள் நால்வரும் ஓட்டுனரின் இடது பக்கம் இருக்கும் சீட்டில் அமர்ந்தோம்.

மூவரில் சற்று உயரமாக இருந்தவன் ' அண்ணா இந்தப் பையன் கிட்ட பாஸ் இல்ல. செக் பண்ணுங்க' என்று சற்று குள்ளமாக இருந்த சிறுவனை ஓட்டுனரிடம் மாட்டிவிட்டான்.

டோல் கேட்டில் வண்டியை நகர்த்திக்  கொண்டே ஓட்டுனர் ' உன் வீடு எங்கடா' என்று கேட்க, அந்தச் சிறுவன் ஒரு வினாடியும் தாமதிக்காமல் 'துபாய்ல', என்று சொல்ல சற்று சத்தமாகவே நான் சிரிக்க, ஓட்டுனர் முகம் காற்று போன சைக்கிள் டுயுப் போல சுருங்கியது.

நாவலூர் - சத்யபாமா பேருந்து நிருந்தங்களுக்கு இடையில் ஒரு மாந்தோப்பு சாலை ஓரமாக உண்டு. அதைக் கடக்கும் பொழுது அந்த சிறுவர்கள் ' பார்ரா எவ்வளோ மாங்கா' என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டு, 'அண்ணா அந்தத் தோப்பு பக்கத்துல ஓரமா நிறுத்துங்க' என்று பணிந்தான்.

ஓட்டுனரோ 'இங்க ஸ்டாப் எல்லாம் இல்ல, அடுத்த ஸ்டாப்ல இறங்கி நடந்து வாங்க' என்று மறுக்க, அந்தச் சிறுவனோ 'நீங்க திரும்பி வரப்ப மாங்கா தர்றேன்' என்று வியாபாரம் பேசத் தொடங்கினான்.

மாங்காய்த் திருட சிறுவர்கள் லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு சமுதாயம் மேலோங்கியுள்ளதைக் கண்டு அகமகிழ்ந்தேன்.

எங்கும் தமிழ்

இந்த மாதம் அதிக நேரம் மருத்துவமணையில் செலவழிக்கும் பொழுது என்னைச் சிந்திக்க வைத்தது ஒரு பெயர் பலகை.
Out-Patients - புறநோயாளிகள்
In-Patients - உள் நோயாளிகள்

புறம் என்பதிற்கு எதிர் அகம் தானே. அப்படியென்றால் அகநோயளிகள் என்றுதானே இருக்க வேண்டும். அல்லது உள் என்பதிற்கு எதிர்மறையாக 'வெளி நோயாளிகள்' என்றல்லவா இருக்க வேண்டும். இது என்னையா குழப்பம்?


சேவை மையம்

இரவு தூங்கப் போகும் பொழுது என் கைபேசியை சார்ஜில் போட்டு விட்டு பத்து மணி நேரம் கடந்த பின்பும் 75% மட்டுமே சார்ஜ் ஏறி இருந்தது. 100% சார்ஜ் பூர்த்தி ஆனாலே ஆறு மணி நேரம் தான் தாங்கும், இப்படி பொறுமையாக சார்ஜ் ஏறினால் என் பாடு அதோ கதிதான் என்பதால் இணையத்தில் தாம்பரத்தில் இருக்கும் சாம்சங் சேவை மையத்தை தேடித் பிடித்து அங்கு சென்றடையும் பொழுது மாலை ஆறு மணி பத்து நிமிடம். சேவை மைய வரவேற்பில் இருந்த அம்மையார் ஆறு மணியுடன் அவர்கள் சேவை முடிந்ததால் நாளை வரச் சொன்னார். நானோ எனக்கு இரவுப் பணி இருப்பதால் சற்று தாமதமாகி விட்டது, நாளை மீண்டும் வருவது கடினம், இன்றே எடுத்துக் கொள்ளுங்கள் என்று போராடினேன். மேலும் பத்து நாட்கள் கடந்தால் எனது வார்ரன்ட்டி காலம் முடிவடையும் என்ற காலக் கெடு வேறு.

அந்த அம்மையார் 'செக் பண்ணி என்ட்ரி போடணும். ஒரு மணி நேரம் ஆகும். நாளைக்கு வாங்க' என்று என் வேண்டுகோளுக்கு இணங்காமல், சக அலுவலரிடம் 'ஆறு மணிக்கு கதவ சாத்த சொன்னன்தான உன்ன' என்றவுடன், எனக்கு மேலும் அங்கு கெஞ்ச பிடிக்காமல் வீடு திரும்பினேன்.

மறுநாள் இரவுப் பணி முடித்து, என் உறக்கத்தை பாதியில் தடைபோட்டு விட்டு, கதிரவன் சுட்டெரிக்கும் நடுப்பகலில் அந்தச் சேவை மையம் சென்றடைந்தேன். அதே அம்மையார். இம்முறை என்னுடைய பெயர் மற்றும் கைபேசி எண்ணை, ஒரு கோடு போட்ட சிறு நோட்டில் குறித்துக் கொண்டு 'பத்து நாள் கழித்து புதுசு வந்தவுடன் கால் பண்ணுவோம்' என்றார் . 'நேத்து என்னமோ செக் பண்ணனும், ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னது' என்று எனக்குள் ஒரு கோவம் எழுந்த போதும், எனது சுபாவம் அதை விழுங்கி விட அமைதியாக வீடு திரும்பினேன்.

பத்து நாட்கள் கழித்து அழைப்பு வர, எனது பழுதடைந்த சார்ஜர், மற்றும் ரசீதின் நகலுடன் சென்றேன். அன்றும் அதே அம்மையார். ஒரு வழியாக எனது சார்ஜரை  திரும்ப வாங்கிக்கொண்டு புதுசு கொடுத்தார். இறுதிவரை அதை அவர் முதல் நாள் சொல்லியது போல் செக் செய்யவே இல்லை. ஆனால் இம்முறை 'ரூபக் சார்! ரூபக் சார்' என்று ஒரே மரியாதைதான். நான் வலையில் எழுதிவிடுவேன் என்ற பயமோ?

கவனம் தேவை

OMR சாலையில் செல்லும் கல்லூரி வாகனங்களில் எழுதி இருக்கும் வாசகம் 'கல்லூரி வாகனம் கவனம் தேவை' . இதற்கு பல நாட்களாக தவறான அர்த்தம் புரிந்து கொண்டிருந்தேன். சமீபத்தில் அந்த கல்லூரி வாகனம் ஒன்று என்னை சாலையில் கடந்த பொழுதுதான் அந்த வாசகத்தின் உண்மையான அர்த்தம் எனக்கு புரிந்தது. கல்லூரி வாகனம் வந்தால் நாம் கவனமாக ஒதுங்கி செல்ல வேண்டும் போல. OMR சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வாசகத்தின் அர்த்தம் புரியாமல் இருக்க முடியாது.

மாத்தி பேசு

சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் C51 ஏறி காலை ஏழு மணிக்கு தாம்பரம் சென்றுகொண்டிருக்கையில், சுங்கச் சாவடிக்கு முன் குடும்பமாக நால்வர் பேருந்தில் ஏறி, ஸ்டேஜ் க்ளோஸ் செய்துகொண்டிருந்த நடத்துனரிடம் அவர்கள் 'தாம்பரம்' என்று சொல்ல, அவர்களை இருக்கையில் அமரும்படி நடத்துனர் சைகை செய்துவிட்டு தன் பணியை தொடர்ந்தார்.

தம் பணியை முடித்து அவர்களிடம் டிக்கெட் கொடுக்க அணுகும் பொழுது நால்வரிடமும் ஏற்கனவே ஒரு நாள் பாஸ் இருந்தது. அவர்கள் நால்வருக்கும் சேர்த்து ஸ்டேஜ் கிளோஸ் செய்த நடத்துனர் சற்றே கோபமுற்று சண்டைப் பிடிக்கத் தொடங்கினார். சண்டை வலுக்க அவர்கள் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்டனர்.

புலம்பிக் கொண்டே நடத்துனர் மற்றவர்களிடம் டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார். ஒருவர் 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்க, நடத்துனரின் முகம் சிவக்க, 'காலையில நோட்டு நோட்டா நீட்டனா. நான் எங்க போறது' என்று அவர் தன் வாயில் வயலின் வாசிக்க தொடங்கும் பொழுது, அந்த 500 ரூபாய் தாளை நீட்டியவர் 'அவங்க அந்த ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஏறிய உடனே காட்டியிருக்கணும்' என்றவுடன் நடத்துனரின் கோபம் மீண்டும் அவர்கள் மேல் திரும்ப, இவருக்கு சில்லரையும் கிடைத்தது.

Octopus
ஒரு தனியார் தொலைகாட்சியில், சமையல் நிகழ்ச்சி ஒன்றில் octopus சீன முறையில் சமையல் செய்யும் காட்சியை பார்த்தது முதல் அந்த உணவை உண்ண வேண்டும் என்று எண்ணும் பொழுதெல்லாம் நாவில் உமிழ் நீர் சுரக்கின்றது. நான் எப்பொழுது சீனா சென்று அதை உண்பது? அது போகட்டும். இந்த octopus என்றால் தமிழில் என்ன? ​

இன்று வாசகர் கூடத்தில் நான் எழுதிய பதிவு - சொர்க்கத் தீவு

Monday, March 31, 2014

தேன் மிட்டாய் - மார்ச் 2014

என் வலைப் பெயரை நீங்கள் கவனித்திருந்தால் அது மாறியிருப்பதை உணரலாம். எனது வலையுலக வாழ்வில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது, புது உற்சாகம் பிறக்க 'கனவு மெய்ப்பட' என இயங்கிவந்த எனது தளம், இனி 'சேம்புலியன்' என்று இயங்கும். பெயர் மாற்றலாம் என்று முடிவு செய்துவிட்டு, யோசனைக்காக ஒரு பிரபல பதிவரை அணுகிய பொழுது, 'சேம்புலிபுரம்' என்னும் எனது கிராமத்தின் பெயரை டிங்கரிங் செய்து அவர் சூட்டிய பெயர் தான் 'சேம்புலியன்'.      

கட்டாயத் தேர்வு 

முந்தைய தேன் மிட்டாயின் தொடர்ச்சி,  மொத்த 64 கேள்விகளில் முற்பத்து ஒன்றாவது கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு 'NEXT' கிளிக் செய்தால், திரை நகர மறுத்தது. 'அவர் சொன்னது போல் நடந்து விட்டதே, தேர்வு கட்டணம் அவ்வளவு தானா?' என்று என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது.

உடனே அந்தத் தேர்வு அறையை விட்டு வெளியேறி, தேர்வு அதிகாரியை அழைத்தேன். அவர் உள்ளே வந்து இரண்டு முறை கிளிக் செய்ய முயன்றும், திரை மந்தமாக எந்த ஒரு மாற்றமும் காட்ட மறுத்தது. என்னிடம் 'எவளோ நேரமா இப்படி இருக்கு' என்று கேட்க, நான் 'ஐந்து நிமிஷமா' என்றேன்.  உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்தார். விண்டோஸ் லோகோ திரையில் உருபெறும் பொழுது எனது இதயம் வழக்கத்தை விட அதிக ரத்தத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது. தேர்வு சாப்ட்வேரை லோட் செய்ய, விட்ட இடத்தில் இருந்து தேர்வு தொடர, செலுத்திய  கட்டணம் வீண் போகாது என்று என் மனமும்  ஆறுதல் அடைந்தது.           

ஓர் பிரபலம் 

பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் த்ரிஷ்யம் திரைப்படத்தை PVR திரையரங்கில் பார்த்துவிட்டு, இரவு பதினோறு மணியளவில் Skywalk மாலை விட்டு, என்னுடன் வந்திருந்த பிரபலத்துடன் வெளியேறினேன். படத்தின் பெருமைகளை பேசிக்கொண்டே நடந்தோம், வாசல் வந்தவுடன் முன்னே சென்ற ஒரு பெண் இடது புறம் திரும்ப அதுதான் வழி என்று நாங்களும் அப்படியே சென்றோம். ஆனால் அந்தக் பக்கம் வழி மூடப் பட்டிருந்தது, எங்களுக்கு முன் சென்ற பெண்ணையும் காணவில்லை. வந்த வழியே திரும்பி சாலையை நோக்கி செல்லும் பொழுது, 'இதுக்குத்தான் பொண்ணுங்க பின்னாடி போகக்கூடாது' என்று சொல்லி, தனது பாணியில் சிரித்தார் அந்த பிரபலம். 

பிரதான சாலையை நாங்கள் அடையும் பொழுது, வெள்ளை நிற சட்டை அணிந்து, நரைத்த முடியுடன் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறினார். என்னுடன் இருந்த பிரபலம் 'அவர்தான் சாருநிவேதிதா' என்று அவர் கேட்கும் படி சொல்ல அவரைக் கடந்து சென்றோம்.              

அழியும் பசுமை

நீங்கள் கீழேக் காணும் படம், பத்து ஆண்டுகளுக்கு முன், எனது கிராமத்தில் முப்போகம் நெல் விளைந்த வயல்வெளி. இன்று பிளாட் போடப்பட்டு பாலை நிலம் போல் காட்சி அளிக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் உணவுக்கு என்ன வழி?   



கல்வெட்டுக்கள் 

பல வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களில் மக்கள் தம் பெயரையோ அல்லது காதல் ஜோடிகளின் பெயரை செதுக்கி வைத்திருப்பதை காணும் பொழுது, அவர்கள் பெயர் வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கவும் அவர்கள் காதல் சரித்திரக் காதலாகவும் மாற அவர்கள் அப்படிச் செய்கின்றனர் என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வதுண்டு. ஆனால் எனது கிராமத்தையும் பக்கத்துக்கு கிராமத்தையும் பிரிக்கும் ஓடையின் மேல் அரசாங்கம் கட்டிய பாலத்தில்,(அந்த ஓடை வற்றிய பின் தான் பாலம் கட்டப் பட்டது என்பதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) தன் பெயரை செதுக்கிய இவரை என்ன செய்வது, நியாயன்மார்களே!   



ஆட்டோ மீட்டர் 

ஒரு மாலை வேளையில் உஸ்மான் ரோட்டில் இருக்கும் போத்திஸ் எதிரில் சாலையைக் கடக்கும் பொழுது, ஆட்டோக்களை காவல் துறையினர் நிறுத்தி பிரயாணிகளிடம், 'ஆட்டோ மீட்டர் ஏறும் பொழுது போட்டாங்களா?' என்று விசாரித்துக்கொண்டிருந்தனர். 

பிரதான சாலையில் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் போட்டு தான் ஓட்டுகின்றனர். எனது தெரு போன்ற உட்புறங்களில் யாருமே மீட்டர் போடுவதில்லை என்பது காவல் துறை அறியுமோ?  அவர்கள் ஏன் எங்கள் தெரு ஆட்டோ ஸ்டாண்டில் சோதனை செய்வதில்லை? இது எல்லாம் வெறும் கண்துடைப்பா?

கூலிங் கட்டணம்

நான் உண்ட கோழி எனது உணவுக் குழாயில் சிக்கித் தவிக்க, அதை அடக்கம் செய்ய ஒரு சோடாக் குடிக்க எனது தெருவில் இருக்கும் கடைக்குச் சென்றேன். சோடா இல்லாத காரணத்தால், ஸ்ப்ரைட் வாங்கினேன். 35 ரூபாய் கேட்டார் அந்தக் கடைக்காரர். பாட்டில் மேல் இருந்த mrpயை பார்த்தேன், 34 ரூபாய் என்றிருந்தது. 'ஏன் கூடுதல் கட்டணம்' என்று நான் கேட்க, 'கூலிங் சார்ஜ்' என்றார் அவர். 'நான் என் வீட்டிலேயே கூல் செய்து கொள்கின்றேன்' என்று சாதாரண பாட்டிலை 34 ரூபாய் கொடுத்து வாங்கினேன். பேருந்து நிறுத்தங்களில் பொதுவாக நடக்கும் இந்தக் 'கூலிங் கொள்ளை' நான் வசிக்கும் தெருவிலும் தொடங்கியிருப்பது வருத்தமே.           
    
இலவச இணைப்பு

அந்தக் கடையில் நிற்கும் பொழுது, ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிக்கையுடன் இலவசமாக ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய் இணைத்திருப்பதைக் கண்டேன். சற்றே ஆச்சரியம் தான். இருப்பினும் இவர்கள் பத்திரிக்கையை படிக்க இலவசம் கொடுக்கும் பொழுது, எனது வலைக்கு பிரதிபலனின்றி வந்துப் படிக்கும் வாசகர்களை எண்ணி பெறுமை பட்டுக்கொண்டேன்.    

துக்க விசாரணை 

ஒரு இரங்கலுக்கு சென்றிருந்த பொழுது, அங்கு இறந்தவரின் உற்றார் உறவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க. ஒருவர் மட்டும் வாய் முழுவதும் பல்லாக  ஒரு மூலையில் சிலரின் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.   துக்க வீட்டில் சிலர் தைரியமாக இருப்பது தேவை தான், ஆனால் சற்று கூட அந்த மரணத்தின் பாதிப்பே இல்லாமல் எப்படி சிலாரல் இப்படி கேலியும் கிண்டலும் செய்ய  முடிகின்றது?  

Beat Officer

நான் மதியம் எனது அலுவலகம் செல்ல பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்லும் பொழுது, திருவள்ளுவர் தெருவில், மெரூன் நிற பல்சரில், பெட்ரோல் டாங்க மீது 'Beat officer' என்று ஆங்கிலத்தில் எழுதிருக்க, அதன் மீது காக்கி நிற சீருடை அணிந்த ஒரு காவல் துறை அதிகாரி, 'Beat officer' என்று ஆங்கிலதில் பதியப்பட்ட ஒரு கருப்பு நிற மேலங்கி அணிந்து கம்பீரமாக இருந்தார். எனது மனதில் பலக் கேள்விகள் தோன்றிய பொழுதும் அவரிடம் சென்று வினவ அந்தச் சமயம் ஏனோ தோன்றவில்லை. இதே போல் ஒரு பீட் ஆபிசரை சோழிங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு வெளியிலும் கண்டேன். 

யார் சாமி இந்த பீட் ஆபீசர்? அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.      

ஸ்கை ப்ளூ துப்பட்டா 

பீட் ஆபிசரை கடந்து சென்று, இளங்கோவன் தெருவில் திரும்பினால், எனக்கு முன் ஒரு பெண் கருப்பு குடை பிடித்து நடந்து செல்வது தெரிந்தது. வெள்ளை நிற சல்வாருடன் நீல நிற துப்பாட்ட அணிந்திருந்த அவள் பின் இருந்து பார்க்க ஒரு தேவதை போலே காட்சியளித்தாள். அவளது முகத்தை காணவேண்டும் என்று ஆவல் என்னுள் தோன்ற, சுட்டெரிக்கும் மதிய வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணின் குளிர்ச்சியில் நனைய, சற்று வேகமாக அடியெடுத்து வைக்க தொடங்கினேன். எனக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவெளி விரைவாக குறைந்து வரும் சமயம், அவள் பிரதான சாலையின் மிக அருகில் சென்றுவிட்டாள். அவளும் பேருந்து நிறுத்தத்தை நோக்கித் தான் செல்கிறாள் என்று என் மனதில் ஒரு இச்சை தோன்ற, அவளை முந்திக்கொண்டு பேருந்து நிலையம் செல்ல எனது வேகத்தை அதிகரித்தேன். அவளுக்கு மிக அருகில் செல்ல, அவளது சுழல் போன்ற கரிய கூந்தலும், அவளது காது ஜிமிக்கியும் அவள் நடைக்கேற்ப நடனமாட...    தொடரும்...