Wednesday, March 8, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி

****************************************************************************************************************
முந்தைய பகுதிகளை படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்
****************************************************************************************************************

இடுக்கி செல்ல எலப்பாரா-கட்டப்பன்னா வழியை கூகிள் அம்மணி வகுக்க, இடுக்கி பற்றி நான் அறிந்ததை இருவருக்கும் சொல்லிக்கொண்டே வந்தேன். முதலில் எனக்கு இடுக்கி பரிட்சயமானது மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் தான். அந்த படத்தில் வரும் காட்சிகள் முழுக்க முழுக்க இடுக்கியில் நடப்பதாகவும், பெரும்பாலான காட்சிகளின் பின்புறம் இடுக்கி அணை தெரியுமாறு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும்.  எனக்கு இடுக்கி மீது காதல் பிறந்தது, தந்தையின் வசீகரக் குரலை வரமாக வாங்கி வந்த விஜய் யேசுதாஸின் குரலில் 'மலை மேலே திரி வச்சு பெரியாரின் தலையிட்டு' எனத் தொடங்கும் அந்த இடுக்கி பாடல் தான். பாடலின் வரிகளும் அதன் காட்சியமைப்பும் விஜய் யேசுதாஸின் குரலும் யாரையும் ஈர்க்க வல்லது. ஆங்கிலேயர் காலத்தில் குறவன் மற்றும் குறத்தி மலையின் இடையில் பாரபோலா வடிவில் பெரியாரின் குறுக்கே கட்டப் பட்டது தான் இந்த இடுக்கி அணை. நான் சொல்லிய தகவல்கள் இருவருக்கும் ஆர்வத்தை தூண்டியது என்று சொல்ல முடியாது, ஆனால் மூவருக்கும் பசி வயிற்றை கிள்ளத் தொடங்கியது. அடுத்து வந்த எலப்பாராவில் ஒரு கேரள பிரியாணியை உண்டதன் மயக்கத்தில் என்னை அறியாமல் நானே சற்று இளைப்பாறிவிட்டேன். இந்த பயணத்தில் நான் பகலில் தூங்கிய ஒரே கணம் அதுதான்.



கண்விழித்தால், 'இடுக்கி வந்து விட்டதா?' என்று நீங்கள் எண்ணினால் அது தவறு, ஒரு டீ கடை முன் பிகோ ஓரம் ஒதுங்க, ஒரு கட்டனும் சில பழம்பொறிகளையும் கொறித்து விட்டு, மீண்டும் இடுக்கி நோக்கி தொடர்ந்தோம். அப்பொழுதுதான் அலுவலக நண்பர் பிஜூ, இடுக்கி அணை பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை என்று சொல்லியது நினைவிற்கு வந்தது. த்ரிஷா இல்லனா நயன்தாரா என்பது போல், இடுக்கி இல்லாவிட்டால் இரவு அங்கு தங்கிவிட்டு, காலை தளசேரி பக்கம் வண்டியை திருப்பி தளசேரி இட்லியை சுவைத்துவிட்டு பாலக்காடு வழியே தமிழக எல்லையை அடைந்து கோவை  வழியாக சென்னை செல்ல மாற்றுத் திட்டத்தையும் வகுத்துக்கொண்டோம். நாங்கள் இடுக்கி நெருங்க நெருங்க அந்த மனிதன் வடித்த பாரபோலா அழகிற்கு பின்னே கதிரவன் மறையத் தொடங்கிக்கொண்டிருந்தான். சாலையின் ஒரு இடத்தில பல வாகனங்கள் நின்றிருக்க, இடுக்கி அணை பின்புறம் தெரியும்படி மக்கள் கூட்டம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தது. அந்த இடத்தில இறங்கி நாங்கள் இடுக்கி அணை செல்ல வழிகெட்க, 'அது மாலை ஐந்து மணியுடன் மூடப்பட்டிருக்கும் இனி நாளை காலை தான் காண முடியும்' என்ற செய்தி ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாத இடுக்கி அணை இந்த விஜயதசமி விடுமுறை தினத்தில் திறக்கப்பட்டிருந்தது எங்களை கவுரவிப்பதற்காகவே போல் இருந்தது. விடுமுறையில் பயணிப்பதால் பல சிக்கல்கள் இருந்தாலும் இதுபோல் சில சந்தோஷங்களும் எதிர்பாராமல் நடப்பதுண்டு.

மாலை ஐந்து மணியே ஆனாலும், அங்கு பார்ப்பதற்கு வேறு எந்த இடமும் இல்லாததால், விடுதியை தேட தொடங்கினோம். வழியில் சிலர் அந்த வட்டாரத்தில் நல்ல விடுதி என்று சொல்லி அனுப்பிய இடத்தில எங்களுக்கு அறைகள் இல்லாமல் ஏமாற்றம் கிடைத்தாலும் அந்த விடுதி மூலம் வேறு ஒரு இடத்தில இடம் கிடைக்க, அந்த விலாசத்தை தேடி நகர்ந்தோம். அந்த விடுதி மேலாளரின் கைபேசி எண்ணில் அவர் காட்டிய வழியே சென்றாலும் பாரமடா சென்றவுடன் எங்களுக்கு வழி குழம்ப, தொடுபுழா செல்லும் சாலையில் நாங்கள் காத்திருக்க, அவர் எங்களுக்கு வழிகாட்ட ஒருவரை அனுப்புவதாக சொன்னார். இங்கு அனைத்து மலையாள உரையாடல்களின் புகழ் ரெஜித்தையே சாரும். தொடுபுழா செல்லும் வழிப்பலகைகளை கண்டதும் திரிஷ்யம் படம் தான் நினைவிற்கு வந்தது.

வழிகாட்ட வந்தவர் சில நிமிடங்களில் நடந்தே வந்து எங்களைக் கண்டதும் நாங்கள் அந்த விடுதிக்கு எத்தனை அருகில் வந்த பின் தடுமாறினோம் என்பது புரிந்தது. அவரை பின் தொடர்ந்து அந்த இடத்தை அடைந்த பின் தான் அது விடுதி அல்ல சர்ச்சின் அறைகள் என்றும் அவர் விடுதி மேலாளர் அல்ல சர்ச் பாதர் என்பதையும்  உணர்ந்தோம். எனது ஓட்டுநர் உரிமத்தை பணயமாக வைத்து முன்பணத்தை செலுத்தி விட்டு, மூன்றாவது நாளும் குறைந்த கட்டணத்தில் சிறப்பான அறை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தோம். அந்த அறையில் நான்கு கட்டில்கள் மெத்தையுடன் இருக்க, ஏசி மற்றும் மின்விசிறி இல்லாமலேயே இயற்கையின் குளிர் எங்களை சிலுக்கிடச் செய்தது. அந்த குளிருக்கு முக்கிய காரணம் அறைக்கு பின் புறமாக ஓடிய ஒரு கால்வாய் தான் என்பதை மறுநாள் காலை கண்டோம். நாங்கள் கைகால் கழுவிக் கொண்டு இரவு உணவு உண்ண செல்லும் பொழுது மணி ஏழு பத்து தான் என்றாலும், அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. வந்த வழியில் ஒரு உணவகத்தைக் கண்ட நினைவில் பிகோவில் அந்த உணவகத்திற்கு சென்று, அங்கு அடுப்பங்கரையில் தூங்கிக்கொண்டிருந்த பூனையை எழுப்பினோம். எங்களுக்காகவே பிரத்தியேகமாக சிக்கனை வறுத்து பரோட்டாவுடன் தந்தனர். சுமாரான சுவை என்றாலும் வேறு வழியின்று உண்டு, சில ஒம்லெட்டுகளுடன் பசியாற்றினோம்.

ஒரு கட்டனுடன் அங்கு இருந்தவர்களுடன் உரையாடும் பொழுதுதான் இடுக்கியில் சுற்றுலா சரிவர சீர் செய்யாததால் மக்கள் வரத்து குறைந்து இங்கு சுற்றுலாவை நாடி இருக்கும் பலரும் சிரமப்படுவதை அறிந்தோம். இயற்கை எழில் கொஞ்சும் இடுக்கியில் மக்கள் அறியாத பல 'வல்லிய ஸ்தளங்கள்' உண்டு என்று அவர்கள் பெருமிதத்துடன் கூறினர். இரவை குளிரில் போர்வையின்றி கழித்து, காலைப் பனியில் ஐஸ் கட்டி போல் வந்த நீரில் குளித்து விட்டு, வழியில் ஒரு கடையில் புட்டு கிடைக்காவிட்டாலும் பிரபாகருக்கு பரோட்டாவுடன் கடலைக்கறி வாங்கி கொடுத்து, மூன்றாவது பார்க்கிங் வாகனமாக பிகோவை இடுக்கி அணை அருகே நிறுத்தினோம். காலை ஒன்பது மணி தான் என்றபொழுதும் அங்கு வெய்யில் சுளீரென்று தன் பற்களை இளித்துக் கொண்டிருக்க அங்கு இருந்த குடை மற்றும் தொப்பி கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது.

அனுமதி சீட்டு வாங்க ஏற்கனவே ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்த வரிசையில் நாங்களும் சென்று நின்றோம். அணையை நடந்து சுற்றிப்பார்பது அல்லாமல் மின்சார ஊர்தியில் சுற்றிக்காட்டவும் ஒரு கட்டணம் இருந்ததைக் கண்டு, வெய்யிலின் தாக்கத்தை மனதில் கொண்டு, கூடுதல் கட்டணம் கொடுத்து அந்த மின்சார வாகன டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, நுழைவு வாயில் செல்ல வரிசையில் நின்றால் 'கேமெரா மற்றும் கைபேசிகள் உள்ளே அனுமதி இல்லை' என்ற செய்தி வரிசையில் தீ போல பரவ, நானும் பிரபாகரும் பிகோவிற்கு சென்று கைப்பேசிகளை வைத்து விட்டு திரும்புவதற்குள் வரிசை நீண்டிருந்தது. இனி அணையை பார்வையாலேயே மட்டும் தான் புகைப்படம் எடுக்க முடியும் என்ற சோகத்தில், அருகில் நிறுத்தியதனால் ஒரு அலைச்சல் மிச்சமானது என்று மனதை தேற்றிக்கொண்டு செல்ல, கடும் சோதனையை தாண்டி நுழைவு வாயிலினுள் அனுமதிக்கப்பட்டோம்.

அங்கு இருந்த பல காவலர்களுள் ஒருவர் மட்டும் எங்களை ஒரு இடத்தை சுட்டிக்காட்டி வாகனம் வரும்வரை காத்திருக்கச் சொன்னார். அணையின் வாயிலில் நின்றதால் அடித்த குளிர்ந்த கற்று எங்களை அணையை சுற்றி பார்க்கும் ஆசையை மேலும் தூண்ட அப்படியே நடக்கத் தொடங்கினோம். நாங்கள் நுழைந்த இடமும் மலை மீது தான், அணை சென்ற பாதையும் ஒரு மலையை நோக்கி இருக்க இது இரண்டும் தான் குறவன் குறத்தி மலை என்று நினைத்துக்கொண்டு நடந்த எஙகளுக்கு அந்த அணையின் முடிவிற்கு வந்த பின் தான் அது தவறு என்று புரிந்தது. நாங்கள் முதலில் கடந்தது அந்த பாரபோலா அணை இல்லை, இப்பொழுது தான் குறத்தி மலையின் தொடக்கத்தை அடைந்துள்ளோம் அடுத்து தான் அணை பின் குறவன் மலை என்பது விளங்கியது. கூட்டமாக சென்ற மக்களின் பின் அந்த தார் சாலையில் அப்படியே பேசிக்கொண்டே நடந்தோம், நடந்தோம், இருபது நிமிடத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தோம்.

குறத்தி மலையை முழுதும் சுற்றி வரும்போது எங்களைக் கடந்து சென்ற அந்த மின்சார வாகனங்களில் இருந்த மக்களைக் கண்டு பொறாமை பட்டுக்கொண்டே நடந்து ஒரு வழியாக அணையை அடைந்தோம். அத்தனை பெரிய ஆற்றின் குறுக்கே இரு மலைகளுக்கு நடுவில் பாரபோலா வடிவில் அந்த அணையை வடித்திருப்பது மனிதனின் ஆற்றலுக்கு சிறந்த சான்று. நான் இதுவரை கண்ட அணைகள் அனைத்துமே நிலப் பரப்பில் இருந்தவை, ஆனால் இந்த அணையின் இரு பக்கங்களும் மலையில் சொருகப்பட்டிருந்தன. இயற்கையையும் செயற்க்கையையும் இணைத்து ஒரு சொட்டு நீர் கூட கசியாதபடி அந்த அணை வடிவமைந்திருந்ததைக்கண்டு வியந்து கொண்டே அங்கு இருந்த ஒரு குகையின் உள்ளே நுழைந்தோம். அப்பொழுது ரெஜித் 'வைஷாலி, என்று ஒரு படம் இங்கு காட்சி செய்யப்பட்டதால் இங்கு இருக்கும் ஒரு குகைக்கு வைஷாலி குகை என்று பெயர் வந்தது. அது இதுதானா என்று தெரியவில்லை' என்று சொல்லிக் கொண்டு செல்ல அந்த குகையின் மறுமுனைக்கே வந்துவிட்டோம்.

அந்த முனையில் அணைக்கு கீழே இருந்து வர மற்றொரு பாதை இருந்தது. அந்த முனைக்கு ஒரு மின்சார ஊர்தி வந்து மக்களை இறக்கி விட, மூவருக்குமே நடந்த அயர்ப்பு இருந்ததால் அந்த ஓட்டுநரிடம் சென்று நாங்கள் பயன்படுத்தாத டிக்கெட்டை காட்டி எங்களை கொண்டு செல்லமுடியுமா என்று கேட்க ரெஜித்தை முன்நிறுத்தினோம். ரெஜித்தின் வசீகர வலையில் விழுந்த ஓட்டுநருடன் அதன்பின் மலையாளத்தில் நடந்த உரையாடல்கள் தமிழில்,

'வண்டில ஏறாமல் காணாமல் போன அந்த மூணு பேரு நீங்கதானா. உங்களுக்காக ரொமப் நேரமா காத்திருந்து வேறு ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்தேன்' என்று சோகத்துடன் அவர் கூறினார்.

'திரும்ப போகும்போது எங்களை கொண்டு செல்ல முடியுமா' என்று ரெஜித் கேட்க, 'அது முடியாது, கொண்டு வந்தவர்களை தான் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும். சேரி ஏறுங்க அப்படியே அந்த முனைல விட்டுட்டு வரேன்' என்று எங்களை ஏற்றிக்கொண்டு, எங்களது விபரங்களை மற்றும் நாங்கள் இந்த மூன்று நாட்கள் செய்த சாகசங்களை கேட்டு அறிந்துக்கொண்டார். மேலும் இந்த அணையில் இருக்கும் ஒவ்வொரு அடி நீரினாலும் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆகின்றது என்றும் இந்த அணை நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டால் எத்தனைக் கோடி ரூபாய் வருவாயை கேரள அரசு இழக்கும் என்ற அரசியலும் பேசினார். பாரபோலா அணையின் மறுமுனைக்கு வந்தவுடன் அந்த வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு, அந்த அணையின் அடியில் இருக்கும் மின்சாரம் உற்பத்தி ஆகும் முறைகளையும் அவர் மின் வாரியத்தில் பணிபுரிந்த பொழுது மின் தூக்கியில் அணைக்கு அடியில் சென்று நீரைக் கண்ட அனுபவங்களையும் சொன்னார்.

'நீங்கள் இடுக்கி போல் ஒரு இடத்தை எங்கும் காண முடியாது. இங்கு பலரும் அறியாத சில அருமையான ஸ்தளங்கள் இருக்கின்றன' என்று தன் கைபேசியில் இருந்த அவரது பழைய புகைப்படங்களை காட்டினார். உண்மையிலே அந்த புகைப்படத்தில் இருந்த இடங்கள் வெளிநாடுகளில் சினிமா பாடல்கள் காட்சி செய்யும் இடம் போல இருந்தது. குறிப்பாக ஒரு மலை மீது இருந்த படத்தில் மேக கூட்டங்கள் அவர் காலுக்கு அடியில் செல்வது போல் இருந்தது. அடுத்த முறை இடுக்கி மட்டுமே மூன்று நாட்கள் வரவேண்டும் என்று தீர்மானித்தோம், எங்களுக்கு வழிகாட்டியாக அவர் வர சம்மதிக்கும் பொழுது அவர் இறக்கி விட்ட பயணிகள் அணையை சுற்றி பார்த்து விட்டு திரும்பியிருந்தனர். எங்களுக்கு வைஷாலி குகைக்கு செல்லும் சரியான வழியை காட்டிவிட்டு, எங்களை அதுவரை அழைத்து செல்ல அந்த பயணிகளிடம் அனுமதியும் வாங்கினார். அவர்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பாமல் நடந்தே செல்ல முடிவு செய்து அவருக்கு நன்றி தெரிவித்து வழி அனுப்பினோம். குறத்தி மலையில் ஒற்றை அடி பாதையில் சென்ற மக்கள் கூட்டத்தை பின் தொடர்ந்து பத்து நிமிட பயணத்திற்கு பின் அந்த வைஷாலி குகையின் ஒரு முனையை அடைந்தோம். ஒரு பெரிய கனரக லாரி சிரமம் இன்றி செல்லக் கூடிய அளவிற்கு அகன்று சுரண்டப் பட்டிருந்த அந்த இருள் சூழ்ந்த குகையின் மறுமுனையில் இருந்த வந்த அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தோம். நீருக்கு பல அடிகளுக்கு மேல் மலையில் முடிந்த அந்த முனையில் இருந்து அணையின் நீரைக் கண்ட காட்சி சொர்கத்தை கண்டது போலே மனதிற்கு ஒரு வித அமைதியை தந்தது.    

அந்த இடத்தில் சில நிமிட அமைதி தியானத்திற்குப் பின், பல உள்ளூர் காதல் ராஜா ராணிக்களின் பெயர்கள் அந்த பாறைகளில் அம்புகளுடன் செதுக்கப்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே வந்த வழியே திரும்பினோம். முதல் அணையின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கடையில் சுட சுட சில பழம்பொறிகளையும் ஆளுக்கு ஒரு லெமன் சோடாவையும் உண்ட பின்தான் மூவருக்கும் இளமை திரும்பியது.  அணையின் வாயிலுக்கு வரும் பொழுது அவர் தனது பயணிகளை இறக்கி விட்டு அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார், அங்கு கைபேசி பயன்படுத்த அனுமதி இல்லை என்பதால் திருட்டுத்தனமாக அவர் ரெஜித் கைபேசிக்கு அழைத்து மிஸ்டு கால் கொடுத்தார். பிகோவை வந்தடையும் பொழுது மணி 12 30. அதன் பின் தான் ரெஜித் தன் கைபேசி உயிரின்றி கிடப்பதையும் அந்த மனிதரின் எண்ணை நாங்கள் தவறவிட்டதையும் எண்ணி சில நொடிகள் வருந்தினோம். அணையில் இருந்து கீழே வந்த பின் அணை பின் தெரியும்படி சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.



கம்பம் செல்ல கூகிள் அம்மணியின் துணையை நாடிச் சென்று, தேனி வந்தவுடன் 'கேரளா சிப்ஸ்' கேட்டவர்களுக்கு, பிரபாகர் தேனியில் சிப்ஸ் வாங்கினார் என்பதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். அவருக்கு கேரளா புட்டு கிடைக்க வில்லை என்ற வருத்தம் இருந்தாலும் ஒரு நல்ல பயணத்தின் திருப்தி இருந்தது. சிறுசேரியில் இருந்த ரெஜித் வீட்டில் மூவரும் பிரிந்து, நான் ரெஜித் வண்டியில் மேடவாக்கம் வந்தடையும் பொழுது மணி 12 20.

மூன்று நாட்கள், மூன்று வாலிபர்கள், 1400 கிலோ மீட்டர்கள், சரக்கு இல்லை, பாட்டு இல்லை ஆனால் அடுத்த தலைமுறைக்கு சொல்லும் அளவிற்கு பல நினைவுகளுடன் இந்த பயணத்தை பதிய வேண்டும் என்ற உறுதியுடன் உறங்கச்சென்றேன்.