Monday, March 31, 2014

தேன் மிட்டாய் - மார்ச் 2014

என் வலைப் பெயரை நீங்கள் கவனித்திருந்தால் அது மாறியிருப்பதை உணரலாம். எனது வலையுலக வாழ்வில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது, புது உற்சாகம் பிறக்க 'கனவு மெய்ப்பட' என இயங்கிவந்த எனது தளம், இனி 'சேம்புலியன்' என்று இயங்கும். பெயர் மாற்றலாம் என்று முடிவு செய்துவிட்டு, யோசனைக்காக ஒரு பிரபல பதிவரை அணுகிய பொழுது, 'சேம்புலிபுரம்' என்னும் எனது கிராமத்தின் பெயரை டிங்கரிங் செய்து அவர் சூட்டிய பெயர் தான் 'சேம்புலியன்'.      

கட்டாயத் தேர்வு 

முந்தைய தேன் மிட்டாயின் தொடர்ச்சி,  மொத்த 64 கேள்விகளில் முற்பத்து ஒன்றாவது கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு 'NEXT' கிளிக் செய்தால், திரை நகர மறுத்தது. 'அவர் சொன்னது போல் நடந்து விட்டதே, தேர்வு கட்டணம் அவ்வளவு தானா?' என்று என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது.

உடனே அந்தத் தேர்வு அறையை விட்டு வெளியேறி, தேர்வு அதிகாரியை அழைத்தேன். அவர் உள்ளே வந்து இரண்டு முறை கிளிக் செய்ய முயன்றும், திரை மந்தமாக எந்த ஒரு மாற்றமும் காட்ட மறுத்தது. என்னிடம் 'எவளோ நேரமா இப்படி இருக்கு' என்று கேட்க, நான் 'ஐந்து நிமிஷமா' என்றேன்.  உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்தார். விண்டோஸ் லோகோ திரையில் உருபெறும் பொழுது எனது இதயம் வழக்கத்தை விட அதிக ரத்தத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது. தேர்வு சாப்ட்வேரை லோட் செய்ய, விட்ட இடத்தில் இருந்து தேர்வு தொடர, செலுத்திய  கட்டணம் வீண் போகாது என்று என் மனமும்  ஆறுதல் அடைந்தது.           

ஓர் பிரபலம் 

பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் த்ரிஷ்யம் திரைப்படத்தை PVR திரையரங்கில் பார்த்துவிட்டு, இரவு பதினோறு மணியளவில் Skywalk மாலை விட்டு, என்னுடன் வந்திருந்த பிரபலத்துடன் வெளியேறினேன். படத்தின் பெருமைகளை பேசிக்கொண்டே நடந்தோம், வாசல் வந்தவுடன் முன்னே சென்ற ஒரு பெண் இடது புறம் திரும்ப அதுதான் வழி என்று நாங்களும் அப்படியே சென்றோம். ஆனால் அந்தக் பக்கம் வழி மூடப் பட்டிருந்தது, எங்களுக்கு முன் சென்ற பெண்ணையும் காணவில்லை. வந்த வழியே திரும்பி சாலையை நோக்கி செல்லும் பொழுது, 'இதுக்குத்தான் பொண்ணுங்க பின்னாடி போகக்கூடாது' என்று சொல்லி, தனது பாணியில் சிரித்தார் அந்த பிரபலம். 

பிரதான சாலையை நாங்கள் அடையும் பொழுது, வெள்ளை நிற சட்டை அணிந்து, நரைத்த முடியுடன் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறினார். என்னுடன் இருந்த பிரபலம் 'அவர்தான் சாருநிவேதிதா' என்று அவர் கேட்கும் படி சொல்ல அவரைக் கடந்து சென்றோம்.              

அழியும் பசுமை

நீங்கள் கீழேக் காணும் படம், பத்து ஆண்டுகளுக்கு முன், எனது கிராமத்தில் முப்போகம் நெல் விளைந்த வயல்வெளி. இன்று பிளாட் போடப்பட்டு பாலை நிலம் போல் காட்சி அளிக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் உணவுக்கு என்ன வழி?   



கல்வெட்டுக்கள் 

பல வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களில் மக்கள் தம் பெயரையோ அல்லது காதல் ஜோடிகளின் பெயரை செதுக்கி வைத்திருப்பதை காணும் பொழுது, அவர்கள் பெயர் வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கவும் அவர்கள் காதல் சரித்திரக் காதலாகவும் மாற அவர்கள் அப்படிச் செய்கின்றனர் என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வதுண்டு. ஆனால் எனது கிராமத்தையும் பக்கத்துக்கு கிராமத்தையும் பிரிக்கும் ஓடையின் மேல் அரசாங்கம் கட்டிய பாலத்தில்,(அந்த ஓடை வற்றிய பின் தான் பாலம் கட்டப் பட்டது என்பதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) தன் பெயரை செதுக்கிய இவரை என்ன செய்வது, நியாயன்மார்களே!   



ஆட்டோ மீட்டர் 

ஒரு மாலை வேளையில் உஸ்மான் ரோட்டில் இருக்கும் போத்திஸ் எதிரில் சாலையைக் கடக்கும் பொழுது, ஆட்டோக்களை காவல் துறையினர் நிறுத்தி பிரயாணிகளிடம், 'ஆட்டோ மீட்டர் ஏறும் பொழுது போட்டாங்களா?' என்று விசாரித்துக்கொண்டிருந்தனர். 

பிரதான சாலையில் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் போட்டு தான் ஓட்டுகின்றனர். எனது தெரு போன்ற உட்புறங்களில் யாருமே மீட்டர் போடுவதில்லை என்பது காவல் துறை அறியுமோ?  அவர்கள் ஏன் எங்கள் தெரு ஆட்டோ ஸ்டாண்டில் சோதனை செய்வதில்லை? இது எல்லாம் வெறும் கண்துடைப்பா?

கூலிங் கட்டணம்

நான் உண்ட கோழி எனது உணவுக் குழாயில் சிக்கித் தவிக்க, அதை அடக்கம் செய்ய ஒரு சோடாக் குடிக்க எனது தெருவில் இருக்கும் கடைக்குச் சென்றேன். சோடா இல்லாத காரணத்தால், ஸ்ப்ரைட் வாங்கினேன். 35 ரூபாய் கேட்டார் அந்தக் கடைக்காரர். பாட்டில் மேல் இருந்த mrpயை பார்த்தேன், 34 ரூபாய் என்றிருந்தது. 'ஏன் கூடுதல் கட்டணம்' என்று நான் கேட்க, 'கூலிங் சார்ஜ்' என்றார் அவர். 'நான் என் வீட்டிலேயே கூல் செய்து கொள்கின்றேன்' என்று சாதாரண பாட்டிலை 34 ரூபாய் கொடுத்து வாங்கினேன். பேருந்து நிறுத்தங்களில் பொதுவாக நடக்கும் இந்தக் 'கூலிங் கொள்ளை' நான் வசிக்கும் தெருவிலும் தொடங்கியிருப்பது வருத்தமே.           
    
இலவச இணைப்பு

அந்தக் கடையில் நிற்கும் பொழுது, ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிக்கையுடன் இலவசமாக ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய் இணைத்திருப்பதைக் கண்டேன். சற்றே ஆச்சரியம் தான். இருப்பினும் இவர்கள் பத்திரிக்கையை படிக்க இலவசம் கொடுக்கும் பொழுது, எனது வலைக்கு பிரதிபலனின்றி வந்துப் படிக்கும் வாசகர்களை எண்ணி பெறுமை பட்டுக்கொண்டேன்.    

துக்க விசாரணை 

ஒரு இரங்கலுக்கு சென்றிருந்த பொழுது, அங்கு இறந்தவரின் உற்றார் உறவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க. ஒருவர் மட்டும் வாய் முழுவதும் பல்லாக  ஒரு மூலையில் சிலரின் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.   துக்க வீட்டில் சிலர் தைரியமாக இருப்பது தேவை தான், ஆனால் சற்று கூட அந்த மரணத்தின் பாதிப்பே இல்லாமல் எப்படி சிலாரல் இப்படி கேலியும் கிண்டலும் செய்ய  முடிகின்றது?  

Beat Officer

நான் மதியம் எனது அலுவலகம் செல்ல பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்லும் பொழுது, திருவள்ளுவர் தெருவில், மெரூன் நிற பல்சரில், பெட்ரோல் டாங்க மீது 'Beat officer' என்று ஆங்கிலத்தில் எழுதிருக்க, அதன் மீது காக்கி நிற சீருடை அணிந்த ஒரு காவல் துறை அதிகாரி, 'Beat officer' என்று ஆங்கிலதில் பதியப்பட்ட ஒரு கருப்பு நிற மேலங்கி அணிந்து கம்பீரமாக இருந்தார். எனது மனதில் பலக் கேள்விகள் தோன்றிய பொழுதும் அவரிடம் சென்று வினவ அந்தச் சமயம் ஏனோ தோன்றவில்லை. இதே போல் ஒரு பீட் ஆபிசரை சோழிங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு வெளியிலும் கண்டேன். 

யார் சாமி இந்த பீட் ஆபீசர்? அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.      

ஸ்கை ப்ளூ துப்பட்டா 

பீட் ஆபிசரை கடந்து சென்று, இளங்கோவன் தெருவில் திரும்பினால், எனக்கு முன் ஒரு பெண் கருப்பு குடை பிடித்து நடந்து செல்வது தெரிந்தது. வெள்ளை நிற சல்வாருடன் நீல நிற துப்பாட்ட அணிந்திருந்த அவள் பின் இருந்து பார்க்க ஒரு தேவதை போலே காட்சியளித்தாள். அவளது முகத்தை காணவேண்டும் என்று ஆவல் என்னுள் தோன்ற, சுட்டெரிக்கும் மதிய வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணின் குளிர்ச்சியில் நனைய, சற்று வேகமாக அடியெடுத்து வைக்க தொடங்கினேன். எனக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவெளி விரைவாக குறைந்து வரும் சமயம், அவள் பிரதான சாலையின் மிக அருகில் சென்றுவிட்டாள். அவளும் பேருந்து நிறுத்தத்தை நோக்கித் தான் செல்கிறாள் என்று என் மனதில் ஒரு இச்சை தோன்ற, அவளை முந்திக்கொண்டு பேருந்து நிலையம் செல்ல எனது வேகத்தை அதிகரித்தேன். அவளுக்கு மிக அருகில் செல்ல, அவளது சுழல் போன்ற கரிய கூந்தலும், அவளது காது ஜிமிக்கியும் அவள் நடைக்கேற்ப நடனமாட...    தொடரும்...              

Monday, March 24, 2014

சிம்லா ஸ்பெஷல்- பனியைத் தேடி

23-12-2012 அன்று நான் பனியைத் தேடி சிம்லா சென்ற பயண அனுபவங்கள் மூன்று பகுதிகளாக கீழே.

சிம்லா ஸ்பெஷல் - நகர்வலம்

அன்று நதியில் துடுப்பு பிடித்ததும், பனியில் விளையாடியதும் உடலுக்கு தந்த சோர்வில் இரவு குளிரையும் பொருட்படுத்தாமல் நான்றாக தூங்கிவிட்டேன். மறுநாள் சிம்லா நகரை சுற்றி சில இடங்களுக்கு எங்கள் ஓட்டுனர் அழைத்துச் சென்றார். 

ஜக்ஹூ கோயில் (Jakhoo temple)

நாங்கள் அன்று காலை முதலில் சென்றது இங்கு தான். சிம்லா மலை மீது மற்றொரு மலை ஏறி எங்களை அழைத்துச் சென்றார். இதுவரை நாங்கள் சென்றதில் இதுதான் மிகவும் குறுகலான பாதை. ஒரு சீருந்து செல்லும் அளவு தான் சாலை இருக்க, மலை மேல் ஏறும் வளைவுகள், '<' இப்படித்தான் இருந்தன. அந்த சாலையில் வண்டி ஓட்ட ஒரு அசாத்திய திறமை வேண்டும். ஒரு வழியாக மேலே சென்றோம். இதுவரை பெரிதும் பேசாத எங்கள் ஓட்டுனர் 'குரங்குகள் இங்கு சேட்டை செய்வது அதிகம். மிகவும் ஜாக்கரதையாக இருங்கள்' என்று எச்சரித்தார். அது ஒரு ஆஞ்சநேயர் கோயில் அங்கு ஒரு மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை இருந்தது. வழக்கம் போல் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டு எங்கள் சீருந்தை நோக்கி இறங்கினோம்.


வரும் வழியில் அங்கு பிரசாதம் விற்பவர்கள் குரங்குகளை கொம்பு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர். சீருந்தின் அருகில் வந்து, உள்ளே ஹீட்டர் இருப்பதால், எனது ஜாக்கெட்டை கழற்றிவிட்டு, சீருந்தினுள் நுழையும் பொழுது, 'ஐயோ குரங்கு' என்று என் நண்பன் அலற அனைவரும் விரைந்து சீருந்தினுள் குதித்தோம். ஓட்டுனர் வண்டியை ஐம்பது அடி நகர்த்துவதற்குள், என் நண்பன் 'ஐயோ' என் கண்ணாடி?' என்று மீண்டும் அலறினான். ஓட்டுனர் வண்டியை நிறுத்தி விட, சம்பவ இடத்திற்கு நாங்கள் சென்று பார்த்தால், மரத்தின் மேல் ரே-பான் கண்ணாடியுடன் சோக்கா போஸ் கொடுத்தது அந்தக் குரங்கு. 

என்ன செய்வது என்றே எங்களுக்கு புரியவில்லை. சிறு வயதில் படித்த குல்லா கதைதான் நினைவுக்கு வந்தது. அதற்குள் எங்கள் ஓட்டுனர் ஒரு பிரசாத பாக்கெட்டை வாங்கி, மேலே வீச, யுவராஜ் சிங் போல அதை தாவிப் பிடித்தது அந்தக் குரங்கு. மனிதர்கள் போல் இல்லாமல், நேர்மையாக வாழும் அந்தக் குரங்கு, பிரசாதம் கைக்கு வந்தவுடன், கண்ணாடியை அழகாக என் நண்பன் கைக்கு வீசியது. 

ராஷ்ட்ரபதி நிவாஸ்

அடுத்து நாங்கள் சென்றது வெள்ளையர்களின் கோடைக்கால தலைமையகமாக விளங்கிய     ராஷ்ட்ரபதி நிவாஸ் மாளிகைக்கு. இது Indian Institute of Advanced Study நிறுவனத்தின் தற்காலிக கட்டிடமாக இருந்தாலும், வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த இடத்தின் சில பகுதிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர்.



ஆங்கிலேயர்கள் ஹைட்ரோ-எலக்ட்ரிக் முறை மூலம் அந்நாளில் அந்த கட்டிடத்துக்காக தயார் செய்யப் பயன்படுத்திய மின் சாதனங்கள், இன்றளவும் அங்கு மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதை கண்டு வியந்தேன். 

ஜின்னாவின் கோரிக்கையின் படி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை தனி நாடாக பிரிக்க முடிவு செய்த வரலாற்று புகழ் பெற்ற, மவுண்ட் பாட்டன் தலைமையிலான 'சிம்லா கான்பிரன்ஸ்'  நடந்த அறையினுள் அந்த இருக்கைகைளையும் பராமரித்து வருகின்றனர். மாணவர்களின் ப்ராஜெக்ட் காட்சியளிப்பிற்காக இன்று அந்த அறை பயன்படுத்தப் படுகிறதாம். 

அங்கு விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில ஆங்கிலப் பிரபுகளின் படங்கள் இருந்தன. அதில் என்னை மிகவும் கவர்ந்தது மவுண்ட் பாட்டன் பிரபு அவர்களின் மனைவியின் புகைப்படம் தான். அந்த அம்முணி எம்புட்டு அழகு தெரியுமா. அந்த நிமிடமே அவருடன் என் மனதில் ஒரு மதராசபட்டின கனவு அரங்கேறியது.      

Lady Mount Batten

ஸ்ரீ சங்கட் மோச்சன் கோவில் (Shri Sankat Mochan Temple)

மீண்டும் எங்கள் ஓட்டுனர் ஒரு கோவிலுக்கு தான் எங்களை அழைத்துச் சென்றார். அந்தக் கோவில் மலை சரிவில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. முதலில் ஹனுமான் கோவிலாக உருவாகி, பின்னர் அனைத்து தெய்வங்களும் அங்கு ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

எனக்கும் கடவுளுக்கும் மிகவும் தூரம் என்பதால், என் நண்பர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு அவர்களை உள்ளே தரிசனம் காண அனுப்பிவிட்டு, வெளியில் இருந்த இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து, எனது நண்பனிடம் இருந்து உள்ளே வரச் சொல்லி கைபேசியில் அவசர அழைப்பு வரவே, காலணிகளை ஹனுமான் பொறுப்பில் விட்டு விட்டு உள்ளே சென்றேன். உள்ளே படி வழியாக இறங்கி சென்றால், ஒரு பெரிய மண்டபம் போல் இருந்தது. அங்கு வரிசையாக மக்கள் அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 'நண்பேன் டா!' என்று அவனுக்கு ஒரு சலாம் போட்டு விட்டு, நானும் அமர்ந்தேன். 

வெள்ளை நிறத்தில், பொங்கிய வடிக்கப்பட்ட அரிசி என் இலையில் பார்த்தவுடனே எனது மனம் தமிழகத்தை நோக்கிச் சென்றது. ராஜ்மா குழம்பு, பட்டாணி குழம்பு, மற்றும் ஒரு இனிப்பு என்று அசத்தலாக இருந்தது அந்த அன்னதானம். அந்த ஏழு நாட்களில் நாங்க உண்ட உணவில் மிகவும் சுவையானது அதுதான். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அன்றோ.                                                   
மால் ஸ்ட்ரீட் (Mall Street)

சென்னைக்கு எப்படி பாண்டி பஜார் மற்றும் ரங்கநாதன் தெருவோ அப்படித்தான் சிம்லாவிற்கு இந்த மால் ஸ்ட்ரீட். இங்கு அனைத்து அரசாங்க அலுவலங்களும் உள்ளன. அந்த அலுவலகங்களை தாண்டிச் சென்றால் வரும் பிரதான சாலையில் அனைத்து ரக பிரான்டட் கடைகளும் இருக்கும். அந்த பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் சற்று கீழே இறங்கினால் மலிவு விலைக் கடைகள் அனைத்தும் இருக்கும். 

அப்படி ஒரு சந்தினுள் ஒரே சாப்பாட்டுக் கடைகளாக இருக்க, ஒரு கடையின்  உள்ளே சென்று அமர்ந்தோம். அங்கு சுடச் சுட கிடைத்த சென்னா படுறா(சோலாபூரி) வின் சுவை இன்றும் என் நாவில் உமிழ் நீர் சுரக்ச் செய்கின்றது. 

மால் ஸ்ட்ரீடில் தென்பட்ட பொம்மைகளை ரசித்தபடி இனிதே எங்கள் சிம்லா பயணம் முடிவடைய, மறுநாள் விடியற்காலை கல்கா நோக்கி சென்றோம். ஆறு மணிக்கு கல்காவில் ரயில் என்பதால், நான்கு மணிக்கு சிம்லாவை விட்டு கிளம்பினோம். நான்கு மணிக்கு அந்தக் குளிரில் குளிக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல. சிம்லாவில் இருந்து மலை இறங்கும் அந்தப் பயணம் சந்திர ஒளியில் அழகா இருந்ததை நான் ரசித்துக் கொண்டே வர, என் நண்பர்கள் தூங்கி கொண்டே வந்தனர். சில நேரம் கடந்து தான் எங்களது சீருந்தின் என்ஜின் ஓடாததை உணர்ந்தேன், neutral கியரில் வண்டியை எங்கள் ஓட்டுனர் மலையில் இருந்து கீழு உருட்டிக்கொண்டு வந்தார் என்பதை அறிந்தவுடன் எனக்கு 'குபீர்' என்றானது. அவருக்கு என்னமோ அப்படி ஓட்டிப் பழக்கம் இருந்தாலும், மலையில் இருந்து கீழ் இறங்கும் வரை ஒவ்வொரு முறை அவர் பிரேக் அழுத்தும் பொழுதும் எனது உயிர் சந்திரனை தொட்டு விட்டு பூமி திரும்பியது.                
  
நிசாமுத்தின் ரயில் நிலையத்தில், 3 3௦ மணிக்கு வழக்கமாக வரும் சென்னை செல்லும் MAS-Durronto எக்ஸ்பிரஸ் அன்று மணி ஏழாகியும் வரவில்லை.  

சிம்லா ஸ்பெஷல் - கண்டனன் பனியை

புது டில்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த சமயம், எனது நண்பனின் அண்ணன், எங்களைப்போல் அங்கு ரயிலுக்காக காத்திருந்த ஒரு குடும்பத்துடன் சிநேகம் பிடித்துக்கொண்டார். அந்த சிநேகம் எங்களுக்கு பின் பேருதவி செய்ய காத்திருக்கும் என்பதை நாங்கள் அப்பொழுது அறியவில்லை. மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின் ஒரு வழியாக ரயில் வந்து சேர்ந்தது. மெட்ரோ ரயிலைக் கண்டு வியந்தது போலவே, ஷடாப்தி ரயிலின் உட்புறத்தைக் கண்டு வியந்தேன். மிகவும் சுத்தமாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. 

"'டாய் ரயிலுக்கு இந்த ரயிலுடன் கனெக்சன் இருக்கும். நமக்காக அது காத்திருக்கும்' என்று என் நண்பன் சொல்லிய மொழி சற்று ஆறுதல் தர எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். டிக்கெட் முன்பதிவுடன் காலை உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்தது எனக்கு ரயில் ஏறிய பின் தான் தெரியவந்தது. ரயிலில் ஏறியவுடன் எல்லா இருக்கைகளுக்கும் ஒரு தண்ணீர் பாட்டில், மற்றும் இரு மொழி ( ஹிந்தி & ஆங்கிலம்)   செய்தித்தாள் வழங்கினர். சற்று நேரம் கழித்து, காலை உணவு பரிமாறத் தொடங்கினர். பணியாளர்கள் அனைவரும் சுத்தமான சீருடைகளுடன் ராஜஸ்தான் மாநில சிப்பாய்கள் போல் காட்சியளித்தனர். 

இங்கும் பிரட் ஆம்லெட் மற்றும் வடை பொங்கல் தான். வட இந்திய பொங்கலை உண்ண விருப்பமின்றி, பிரட் ஆம்லெட் வாங்கிக்கொண்டேன். ஒரு ட்ரேயில் இரண்டு துண்டு கோதுமை ரொட்டி, ஒரு ஆம்லெட், அமுல் வெண்ணை, ஒரு பாக்கெட் ஜாம், கத்தி  மற்றும் முள் கரண்டியுடன் (fork) பரிமாறினார். அருகில் அமர்ந்திருந்தவர் ஸ்பூன் வைத்து பொறுமையாக அந்த ஒரு கரண்டி பொங்கலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டே உண்டார். எனக்கு கையில் உண்டுதான் பழக்கம் என்பதால், அந்த உணவை விரைந்து உண்டேன். இந்த இரண்டு துண்டு ரொட்டிகள் காலை உணவா, இதை உண்டு எப்படி உயிர் வாழ்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தபொழுது, நான் புது டில்லி நடைமேடையில் உண்ட பூரி எனது ஏப்பமாக வெளிவந்தது.

சற்று நேரம் கழித்து, அனைவருக்கும் ஒரு பிளாஸ்கில் வெண்ணீர் கொடுத்து, உடன் காப்பி தூள், டீத் தூள், அமுல் பால் பவுடர், சர்க்கரை முதலியவை வழங்கினர். எனக்கு காப்பி டீ குடிக்கும் பழக்கம் இல்லாததால், எனது நண்பனுக்கு டபுள் ஸ்ட்ராங் காப்பி கலந்து கொடுத்தேன். என் வாழ்வில் நான் முதல் முறை தயார் செய்த காப்பியும் அதுவே (ஹி ஹி ஹி ...). சற்றும் பயண அலுப்பே தராத அந்த ஷடாப்தி ரயில் பயணம் கல்கா வந்த பொது முடிந்தது. 

கல்கா ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது, அங்கு டாய் ரயில் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். ஆனால் எங்கள் ஆனந்தம் தொடர வில்லை. டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுது, அனைத்து டிக்கெட்களும் புல் என்று எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். அங்கிருந்து சிம்லா செல்ல வாடகை டாக்ஸி தான் ஒரே வழி என்று வெளியே வந்தால், அங்கு பெருங் கூட்டம் இருந்தது. நண்பனின் அண்ணன் விசாரித்ததில் அங்கு சின்ன கார்கள் அனைத்தும் புக் ஆகி விட்டன என்றும், டெம்போ மட்டும் தான் உள்ளது என்றும் தெரியவந்தது. நால்வர் மட்டும் செல்ல டெம்போ எடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்று நாங்கள் தயங்கி, சிம்லா எப்படி செல்வது என்று விழித்தோம். அடுத்து டாய் ரயில் மறுநாள் காலை புறப்படும் வரை ரயில் நிலையத்தில் தங்குவதுதான் ஒரே வழி என்று நாங்கள் முடிவு செய்யும் சமயம், ஒரு வழி பிறந்தது. 

புது டில்லி ரயில் நிலையத்தில் என் நண்பனின் அண்ணன் சிநேகம் செய்த குடும்பம் எங்களுடன் டெம்போவில் வர சம்மதிக்க, எங்கள் டாக்ஸி செலவு பாதியாக குறைந்து, சிம்லா நோக்கிய எங்கள் டெம்போ பயணம் தொடங்கியது. டாய் ரயிலில் செல்வதை விட டெம்போ விரைந்து சிம்லா சென்றுவிடும் என்று எங்கள் ஏமாற்றத்தை நாங்களே சமாதானம் செய்துகொண்டோம். ரயில் நிலையத்தில் இருந்து, ஊருக்குள் வந்தவுடன், டெம்போ ஒரு கடைக்கு அருகில் நின்றது. டிரைவர் மொழியை அண்ணன் மொழி பெயர்த்து 'சிம்லாவில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் வேண்டும் என்றால் இங்கே வாங்கிக்கொள்ளுங்கள்' என்றான். 

எனது ஏழாம் வகுப்பு ஆசிரியர் சாம், அடிக்கடி சொல்லும் 'If you can't break the rules, bend them' என்ற வாக்கியம் தான் என் நினைவிற்கு வந்தது. 'நீங்க எல்லாம் நல்லா வருவிங்க சாமி' என்று நான் அந்த டிரைவரை பார்த்து பல் இளிக்க, தமிழ் தெரியாத அவன்,  நான் எதோ அவனைப் புகழ்வது போல் எண்ணிக்கொண்டு பதிலுக்கு அவனும் இளித்தான். டெம்போவில் அந்தக் குடும்பம் பின் இருக்கைகளில் அமர, மலை சாலைகளில் வாகனம் செல்வதை எனக்குப் பார்க்கக் பிடிக்கும் என்பதால் நான் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன்.  

பொதுவாக வகானம் ஓட்டுபவர்கள் கைபேசியில் பேசுவது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இவனோ மலைப் பாதையில் ஓட்டும் பொழுது பேசிக்கொண்டே வந்தான். பேச்சு பின் சண்டையாகவும் மாறியது, சண்டையில் வண்டியின் வேகம் அதிகரித்தது, எனக்கோ 'பக் பக்' என்று இதயம் துடித்தது. சிம்லா மண்ணில் கால் வைத்து, வாத்தியார் போல் 'புதிய வானம் புதிய பூமி' என்று பாட வேண்டும் என்ற ஆசை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க, ஒரு வழியாக எந்த வித சேதமும் இன்றி எங்களை மலை மீது கொண்டுவந்து சேர்த்தான். சிம்லா நகரில் எங்கும் உறை பனி இல்லாதது கண்டு நான் அஞ்சியபோழுது, பனியைத் தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டினர்.   

முதலில் அந்தக் குடும்பத்தை அவர்கள் தங்கவிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டு பின் நாங்கள் செல்வது என்று முடிவு செய்தோம். அவர்களை இறக்கிவிட்டு நாங்கள் திரும்புகையில் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர்களின் ஒரு பை மட்டும் வண்டியிலேயே தவறவிட்டார்கள் என்று. சிம்லாவில் இருக்கும் சாலைகள் மிக மிக குறுகியவை, அங்கு வாகனத்தை நிறுத்தினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகம். மற்றவர்களுக்கு உதவும் பெரும் குணம் கொண்ட அண்ணன், ஓடும் வண்டியில் இருந்து எதையும் யோசிக்காமல் அவர்கள் பையுடன் இறங்கினார். 

எங்கள் விடுதிக்கு அருகில் இருக்கும் டன்னலில் (tunnel), இடம் தெரியாத அந்த புதிய ஊரில், அவர் வழி தவறாமல் சரியான பாதையில் வர, மொழி தெரியாத நாங்கள் பீதியுடன் காத்திருந்தோம்.      

அண்ணன் வர டன்னலின் அடியில் காத்திருக்கும் பொழுது தான், அங்கு நிலவிய குளிர் என் ஆடைக்குள் ஊடுருவத் தொடங்குவது தெரிந்தது. என் மாமா, அவர் அமெரிக்காவில் இருந்தபொழுது பயன்படுத்திய விண்டர் ஜாக்கெட் மற்றும் க்லவ்ஸ் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அதுதான் எனக்கு அந்தக் குளிருக்கு கவசமாக நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னைக் காத்தது. எங்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல எங்களுடன் சாலைக்கு வந்து காத்திருந்த விடுதிப் பணியாளர் வழி சொல்ல, ஒரு வழியாக அண்ணன் நாங்கள் காத்திருந்த டன்னலை வந்தடைந்தார். 

எங்களிடம் இருந்த மூன்று பளுவான பைகளை, அந்த விடுதிப் பணியாளர் தன் முதுகில் ஒன்றும், இரு கைகளில் ஒன்றுமாக யேந்திக்கொண்டு, ஒற்றையடிப் பாதைப் போல் இருந்த, சிமெண்ட் படிகள் மீது ஏறத் தொடங்கினார். பளு சுமந்த பொழுதும் மலை ஏறிப் பழக்கமான அவர் வேகமாக ஏற, நாங்கள் சற்று பின் தங்கியே தொடர்ந்தோம். மலை மீது ஒரு குட்டி மலையே ஏறி, அதன் பின் ஒரு சரிவில் இறங்கி எங்களது விடுதி முன் வந்து சேர்ந்தோம். இதற்குள் மணி ஏழாகி விட்டது. அன்றைய இரவு அறையில் தான் என்றானது.  'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வீடு போல், மலை உச்சியில் மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட அந்த அறைக்குள் சென்ற பொழுது, இதயம் சற்று 'பக் பக்' என்றே துடித்தது. இரண்டு முறை குதித்து உறுதியை சோதித்து பார்த்த பின்னே அடுத்த அறைக்குள் சென்றேன். 

எங்கள் அறை
குளிர் காலத்தில் சிம்லா சென்றால், குளிரின் உச்சகட்டத்தை உணரலாம் என்பது என் திட்டம். ஆனால் நான் அங்கு உணர்ந்ததோ நான் எதிர் பார்த்ததை விட மிகவும் கடுமையான குளிர். அந்த இரவை கடக்க நிச்சயம் நெருப்பின் துணை தேவை என்று தோன்ற, 'ரூம் ஹீட்டர்'  ஆர்டர் செய்யலாம் என்று நான் முனைய, என் நண்பன் என்னைத் தடுத்து, அலமாரியின் உள் இருந்து பஞ்சு மெத்தையில் பாதி கணம் இருக்கும் ஒரு வெள்ளை நிற ரஜாய் (ஆங்கிலத்தில் comforter என்றும் quilt என்றும் கூறுவார்கள்) எடுத்து கொடுத்தான். இதையா போர்த்திக் கொள்வது என்று முதலில் நான் யோசித்தாலும், வேறு வழியின்றி மெத்தை மேல் அதை விரித்து அதற்கு அடியில் சென்றேன். சற்று நேரமாக, அது எனது உடலின் உஷ்ணத்தை பாதுகாத்து, நல்ல கத கதப்பை தந்தது. அருமையான ஒரு கண்டுபிடிப்பு அது. 

காலையில் குளித்து முடிப்பதற்குள் நான் பட்ட பாட்டை சொல்லி மாளாது.  ஹீட்டர் குழாயில் இருந்து வரும் சூடான நீர், வாளியை அடையும் முன், தன் சூட்டை இழந்து விட்டது. ஒரு வழியாக குளித்து முடித்து, தயாராகி, பனியைத் தேடும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். செல்லும் வழியில் ஒரு கோல்ப் மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி, அங்கு சென்று சுற்றிப்பார்க்கும்படி எங்களது ஓட்டுனர் சொல்லினார். முடியவே முடியாது எங்களுக்கு பனிதான் வேண்டும் என்று நாங்கள் மறுத்துவிடவே, எங்களை குப்ரி அழைத்துச் சென்றார். குப்ரி சிம்லாவில் இருக்கும் ஒரு சிகரம். அதன் அடியில் இருந்து உச்சிக்கு செல்வதற்கு குதிரை சவாரி செய்ய வேண்டும். அதில் நிஜ குதிரைகளும் சில போலி குதிரைகளும் உங்கள் அதிர்ஷ்டம் போல் கிடைக்கும். (குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்தது இந்த போலிக் குதிரை. இதை ஆங்கிலத்தில் mule என்பர்)

எனக்கு குதிரை ஏறிப் பழக்கம் இல்லாததால் சற்று பயத்துடன் நான் இருக்க, எனக்கு போலிக் குதிரையே வழங்கினர். எங்கள் நால்வரின் குதிரையையும் ஒரு சேர அழைத்துக்கொண்டு, அதன் பாகன் எங்களுடன் நடந்து வந்தான். அவன் முன்னே வழி காட்டிக்கொண்டு  செல்ல, எனது குதிரை கடைசியில் வந்தது. ஒற்றையடிப் பாதையாக மலை மேல் செல்லவும் இறங்கவும் ஒரே வழிதான். மேலிருந்து குதிரைகள் இறங்கும் பொழுது, எனது குதிரை சற்று பயந்து ஓரமாக ஒதுங்கிக் கொள்ளும்பொழுது, எனக்கோ 'எங்கே, குதிரை கால் இடறி  சரிந்து விடுமோ' என்ற பயம் தோன்றும். ஒரு முப்பது நிமிட 'திக் திக்' குதிரை சவாரிக்கு பின் குப்ரி சிகரத்தை அடைந்தோம். சிம்லாவில் இருக்கும் உயர்ந்த சிகரத்தில் நிச்சயம் பனி இருக்கும் என்ற எனது ஆசையில் மண் தான் விழுந்தது. அங்கு சில மேகி(maggi) கடைகளும் ஒரு தீம்(theme) பார்க்கும் தான் இருந்தன. 

தீம் பார்க்கில் சில மொக்கை ரைடுகளை தவிர்த்து ஒரு ரைடு மட்டும் எங்களைக் கவர்ந்தது, நானும் என் நண்பனும் மட்டும் அதில் ஏறினோம். மத்தியில் ஒரு கம்பம், அந்தக் கம்பம் தாங்கும் ஒரு வளைவான சக்கரம், அந்தச் சக்கரத்தில் வட்டமாக ஒருவர் மட்டும் அமரும் ஊஞ்சல். பார்க்க சாதாரண ஊஞ்சல் போல் இருந்தால், அது இருந்தது மலை உச்சியில் என்பதாலும், அது சுற்றிய வேகத்தாலும், ஆகாயத்தில் தூக்கி வீசப் படுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. எனது உணவுக் குழாயில் இருந்து வயிறு வரை அனைத்தும் ஒரு சக்சன்(suction) பம்ப் வைத்து உரியப்படுவது போல் ஒரு உணர்வு. ஒரு வழியாக சுற்றி நிற்க, நான் இறங்கலாம் என்று நிதானிக்கும் பொழுது, என் நண்பன் 'ஒன்ஸ் மோர் ப்ளீஸ்' என்று கேட்க, எனது உயிர் மீண்டும் ஊஞ்சல் ஆடியது. 

அங்கு அருகில் ஆப்பிள் தோட்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைக்க, இதுவரை வாழ்வில் காணாத ஆப்பிள் மரங்களைத் தேடிச் சென்றோம். சரிவாக செல்லும் பாதையில் நெடுந்தூரம் சென்றும் அங்கு ஆப்பில் மரங்கள் ஏதும் தென்படவில்லை. வழிதவறிவிட்டோம் என்று நாங்கள் உணரும் பொழுது, நாங்கள் மிகவும் எதிர் பார்த்திருந்த தருணம் வந்தது. சாலையில் உறைப்பனி தென்படத் தொடங்கியது. நாங்கள் எதிர்பார்த்து போல் இல்லை. வெள்ளை நிற சோப்பு நுரையை மணலில் கலந்தால் எப்படி இருக்கும், அது போலத் தான் அந்தப் பனி அழுக்காக இருந்தது. கிடைத்த வரை லாபம் என்று அதனுடன் விளையாடத் தொடங்கினோம்.

எனது கையில் பனி!

அந்தப் பனியை கையில் ஏந்தும் பொழுது, பல நாட்களாக டீப் ப்ரீஸ் (deep freeze) ஆகி உறைத்திருக்கும் உங்கள் பிரிட்ஜ் ப்ரீசர் பாக்சில் கை வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருந்தது. ஒருவர் மீது ஒருவர் அடிக்கும் பொழுது, எப்படியாவது சட்டையினுள் ஊடுருவும் பொழுது அந்தப் பனி உண்டாக்கும் சிலிர்ப்பை சொல்ல வார்த்தை இல்லை. பனியைக் கண்ட ஆனந்தத்தில் சற்று நேரம் கூடுதலாகவே செலவழித்துவிட்டோம். 

இறங்கும் பொழுது மிகவும் எளிதாக இருந்தப் பாதை, ஏறும் பொழுது சற்று கடினமாக மாறியது. அதிக இடங்களில் அமர்ந்து அமர்ந்து செல்லத் தொடங்கினோம். இந்த குளிர் செய்யும் தந்திரம், நமது தாகத்தை அடக்கி, உடலுக்கு தேவையான நீரை நம்மை அருந்தவிடாமல் செய்வதுதான். காலை டிபனும் நான்-ரொட்டி என்பதால் சற்று குறைவாக உண்ண, எனது உடலில் வலு வேகமாக குறைந்தது. எனது நண்பர்களை விட மிகவும் பின் தங்கத் தொடங்கினேன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது, அந்த குளிரிலும் நெற்றி வியர்த்தது. இனி ஒரு அடியும் நகர முடியாத நிலையில், எனது கால்களை பூமியில் என்னால் உணர முடியவில்லை.    

உணர்விழந்து நான் கீழே அமர, சில நொடிகள் என்ன நடந்தது என்ற நினைவு எனக்கு இல்லை. என் நண்பன் மேல் இருந்து கொண்டுவந்த நீரைப் பருகியதும் தான் உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கொஞ்சம் வலு பெற்று மெதுவாக ஒரு கடைக்கு முன் சென்று அங்கு நாற்காலியில் அமர்ந்தேன். ஆளுக்கு ஒரு ப்ளேட் மேகி (maggi) ஆர்டர் செய்தோம். அந்தத் தருணம், அந்தக் குளிருக்கு இதமாக சூடாக சுவைத்த மேகி எனது வாழ்நாளில் வேறு எந்தத் தருணத்திலும் அவ்வளவு சுவையாக இருந்தது இல்லை.

உணவு உண்டபின் கிடைத்த வலுவுடன், மீண்டும் தடைபட்ட எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். என் போலிக் குதிரையின் மேல் ஏறி மலை இறங்கத் தொடங்கினோம். இறங்குவது சற்று பயமின்றி சுலபமாகவே இருந்தது. அங்கிருந்து எங்கள் ஓட்டுனர் எங்களை அடுத்த இலக்கு நோக்கி அழைத்துச் சென்றார். அப்பொழுது சீருந்தில் இருந்த டிஸ்ப்ளே காட்டிய வெப்பம் 4 டிகிரி செல்சியஸ்.     

எங்களை தட்டா பாணி(Tata Paani) என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது சிந்து நதியின் ஒரு பிரிவான சட்லஜ் நதி பாயும் இடம்.  அண்ணன் பேரம் பேச அந்த நதியில் நாங்கள் ராப்டிங்(rafting) செல்ல தயாரானோம். எங்களது காலணிகளை சீருந்திலேயே விட்டு விட்டோம். எங்களது பணப் பை, கேமரா, கைபேசி அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டு கட்டி அந்த பலூன் படகின் ஒரு மூலையில் போட்டார் அந்தப் படகுக் காரர். எங்கள் படகில் படகுக் காரருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர், நதியில் மிதக்கத் தொடங்கினோம். 

என் வாழ்வில் தண்ணீரே பாயாத பாலரைக் கண்டு வளர்ந்த எனக்கு வற்றாத நதிகளைக் கண்டால் கொஞ்சம் போறாமையாகத் தான் இருக்கும். நமது தென்னகத்து நதிகளுக்கு நேர் மாறாக கோடைக் காலத்தில், இமய மலையில் பனி உருகி, அந்த நதிகளில் வெள்ளம் இன்னும் அதிகமாக இருக்குமாம். அந்த நதியின் கரையில் காலை வைக்கும் பொழுதே அந்த நீரின் குளிர்ச்சி புலப் பட்டது. நீங்கள் ஐஸ் கட்டியில் கரைந்து வரும் நீரில் காலை வைத்து பார்த்ததுண்டா? அப்படித்தான் இருந்தது அந்த நீரின் குளுமை. 

படகுக்காரர் சொல்லும் கட்டளைகளை கேட்டு நாங்கள் துடுப்பு விட்டு மறுமுனை செல்ல வேண்டும். துடுப்பு விட பெண்களுக்கு மட்டும் விடுப்பு, அவர்கள் அழகாக மத்தியில் அமர்ந்து படகுச் சவாரியை ரசித்தனர். அந்த நதியில் படகு சீறிப் பாய்ந்து சென்றது. நதியின் சுழல்களுக்கு ஏற்ப அவர் திறமையாக எங்களை துடுப்பு பிடிக்கச் செய்து நதியில் படகை விரைவாக செலுத்திக்கொண்டிருந்தார். நான் மட்டும் நீருக்கு வலிக்காத வண்ணம் சற்று மெதுவாகவே துடுப்பை வலித்துக் கொண்டிருக்க. எனது பாசாங்கை அறிந்து நக்கலாக அவர் ஹிந்தியில் எதோ சொல்ல, அந்தப் பெண்கள் குபீர் என்று சிரித்தனர்.

Rafting in Sutlej
ஒரு வழியாக நதியின் மறுமுனைக்கு திறமையாக வந்து சேர்ந்தோம். படகு செலுத்தும் சுவாரசியத்தில், எனது கால்களை கவனிக்க மறந்தே போனேன். எனது கால், படகினுள் புகுந்த குளிர்ந்த நீரின் சதியால், ரத்தம் செல்லாத வண்ணம் மறத்துப் போயிருந்தது. படகை விட்டு இறங்கி நொண்டிக்கொண்டு கரையை அடையும் பொழுது மற்றொரு அதிசயம் எங்களுக்காக காத்திருந்தது.

கரையின் ஓரங்களில், மணலில் இருந்து சூடான ஆவி கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த ஆவி கிளம்பும் இடங்களில் நீர் வெதவெதவென்று குளிருக்கு இதமாக இருந்தது. எனது கால், மற்றும் நீரில் நனைந்த மற்ற பாகங்களை அந்த சூட்டில் காட்டி இயல்பு நிலைக்கு கொண்டுவந்தேன். இப்படி இயற்கையாக உஷ்ணம் தோன்றும் இடங்களை ஆங்கிலத்தில் 'Sulfur Springs' என்று சொல்லுவார்கள். இயற்கையில் தான் எத்தனை விந்தைகள் அடங்கியுள்ளன?. அந்த குளிரில் அந்த சூடான மணலில் அமரும் பொழுது எத்தனை சுகமாக இருந்தது தெரியுமா? ஆனந்தம்! பிரியா விடைபெற்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.        

Sulfur Springs @ Tata Paani

எங்கள் பயணத்தில் நாங்கள் எதிர் பார்த்து வந்த ஆசை நிறைவேறாத வருத்தமும், எதிர்பாராத பல சுவாரசியமான அனுபவங்கள் நிகழ்ந்த சந்தோஷமும், எங்கள் மனதை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு சென்றது. மலைகளை கடந்து, வளைந்து வளைந்து, மலையை ஒட்டி செல்லும் அழகான சாலைகள் எங்கள் மனதிற்கு குதூகலத்தை தந்தது. ஒரு இடத்தில மரங்களுக்கு நடுவில் சென்று சீருந்தை நிறுத்தி, எங்களை ஒரு மணல் பாதையில் அழைத்துச் சென்றார். பசுவின் பின் செல்லும் கன்றைப் போல அவரை பின் தொடர்ந்து சென்றோம். அந்தப் பாதை சற்று சரிவின் மேல் ஏறியது, எங்கள் உள்ள மகிழ்ச்சியும் இமயத்தின் மேல் ஏறியது. எங்கள் பயண இலட்சியத்தை நாங்கள் அடைந்தது அங்கேதான். எங்கள் கனவு நினைவானது அங்கேதான். அதுதான் நார்க்கண்டா (Narkanda) என்னும் இடம்.

Narkanda
எங்கள் கண் முன் தோன்றிய காட்சி வெள்ளைப் பனி சூழ்ந்த பனி மலை. அங்கு மக்கள் கூட்டம் எறும்புகள் போல் தெரிந்தது. படங்களில் காண்பது போன்ற பனி, என் முட்டி வரை அந்தப் பனியில் புதைந்தது. மீண்டும் மழலைகள் ஆகி, பனிப் பந்தெறிந்து விளையாடினோம். சற்று வளர்ந்து வாலிப வயதை எட்டி, ஜேம்ஸ் பான்ட் படங்களில் வருவது போல் பனி சறுக்கும் செய்தோம். எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். 'மீண்டும் அப்படி ஒரு நாள் வருமா?' என்று மனம் இன்றும் ஏங்குகிறது.        

Myself ice skating 


தொடரும்.... 

சிம்லா ஸ்பெஷல் - ரயில் பயணம்

சில ஆங்கிலப் படங்களிலும், தமிழ் சினிமா பாடல்களிலும் காட்டப்பட்டப் பனிப் பிரதேசங்களைப் பார்த்து, சிறுவயது முதலே உறைப்பனியை கையில் எடுத்து விளையாட வேண்டும் என்ற ஆசை மனதில் வளர்ந்து கொண்டு இருந்தது. பொருளாதார சிக்கல்களால் அலுவலகம் சேரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அலுவலகம் சேர்ந்து கல்லூரி நண்பர்களுடன் கலந்து பேசி, ஏழு பேர் கொண்ட குழு உருவாகி, டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் வேளையில் மனாலி செல்வது என்று முடிவானது.    

டிசம்பர் மாதம் என்பதால் அங்கு குளிர் உச்சக்கட்டத்தை அடைந்து, பனி உருவாகும் என்பது எங்கள் எண்ணம். அதே வானிலை மோசமான நிலையை அடைந்தால், சாலையில் பனிச் சரிவுகள் உண்டாகி, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு, அங்கேயே சில நாட்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகலாம் என்ற ஒரு செய்தியும் எங்களை கலக்கியது. பல குழப்பங்களுக்கு நடுவே எங்கள் இலக்கு சற்று மேற்கு திரும்பி, சிம்லா செல்வது என்று முடிவானது.       
   ​
ஏழு பேர் என்பதால், நால்வர்  மற்றும் மூவராக பிரித்து ரயில் சீட்டு முன்பதிவு செய்துகொண்டோம். வெய்டிங் லிஸ்ட் தான் என்றாலும் நிச்சயம் கன்பார்ம் ஆகி விடும் என்ற நம்பிக்கை முன்பதிவு செய்த என் நண்பனுக்கு அதிகமாகவே இருந்தது. சில நாட்கள் கழித்து நண்பர்கள் மூவர் பின்வாங்க, என்னுடன் சேர்த்து நால்வர் மட்டுமே செல்வது என்று இறுதியானது. நான், எனது நண்பன், எனது நண்பனின் பள்ளி நண்பன், மற்றும் அவனின் அண்ணன், இதுவே எங்கள் பயணக் கூழு.  மூவருக்கு என முன் பதிவு செய்த சீட்டில் என்னைத் தவிர மற்ற இருவரும் பின்வாங்க, தனிமையான ரயில் பயணம் எனக்காக காத்திருந்ததை அப்பொழுது நான் அறியேன். 

எனக்கும் எனது  நண்பனுக்கும்(பின் வாங்கியவர்களில் ஒருவன்) கல்லூரி முதலே ஒரு ஆசை உண்டு. முக்கால் காற்சட்டை அணிந்து, தோளில் பையுடன், கலர்க் கண்ணாடி அணித்து ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி போல் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான். என் நண்பன் என்னுடன் வராவிடினும், முக்கால் காற்சட்டையுடன் 2012, டிசம்பர் 21 ஆம் நாள் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, பனியைத் தேடிய  என் பயணம் ஆரம்பமாகியது.  

எனது நண்பனின் எண்ணம் போலே முன்பதிவு செய்த டிக்கெட்கள் கன்பார்ம்  ஆகின. மூவர் S3 யிலும் நான் மட்டும் S8 யிலும் என்று கணினி முடிவு செய்திருந்தது. சென்ட்ரலில் இறங்கியவுடன் ஹிக்கின் பாதம்ஸ் சென்று, மூன்று சுஜாதாவின் நாவல்களை வாங்கிக்கொண்டேன்.     

பயணிகள் பெயர் பட்டியல் வழக்கம் போல் தந்த ஏமாற்றத்துடன், எனது பெட்டியில் நான் அடியெடுத்து வைக்கும் பொழுது எதிரே ஒரு பூட்டு-சங்கிலி வியாபாரி வந்து என்னை தடுத்தார். பூட்டுடன் வலுவான சங்கிலி எனது உடமைகளை ரயிலில் பாதுகாக்க உதவும் என்று சொல்லி,  அறுபது ரூபாய்க்கு என்னிடம் விற்றார். இன்றளவும் எனது அனைத்து ரயில் பயணங்களிலும் அந்த பூட்டு சங்கிலி எனது உடமைகளுக்கு ஒரு அரணாக உள்ளது.  

எனது அனைத்து ரயில் பயணங்களுக்கும் மூன்று ஒற்றுமைகள் உண்டு:

1) கட்டாயமாக டூத் பிரஷ் எடுத்துச் செல்ல மறந்திடுவேன்.

2) எனது இருக்கை கழிவறைக்கு மிக அருகில் அமைவது வழக்கம்.

3) எனது வயதில் இருந்து +/- மூன்று வயது பெண்பால் பயணிகள் எனது பெட்டியில் பயணிக்கும் பாக்கியம் இதுவரை எனக்கு கிட்டவில்லை. (எல்லாம் ஆண்டிகளும் பாட்டிகளும் தான்)


இந்தப் பயணமும் இந்த ஒற்றுமைகளுக்கு விதிவிலக்கு அல்ல. ரயில் தொடங்கும் முன் என் மற்ற நண்பர்களை சந்தித்தேன், என்னிடம் இருந்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டுச் சென்றனர். எல்லாப் பெட்டிகளும் இணைக்கப் பட்டவை தானே இடையில் அவர்களை சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். வாங்கிய சங்கிலியுடன் எனது பையை கீழே பூட்டி விட்டு, சைடு அப்பர் பெர்த்தில்  நான்  ஏறி அமர, MAS - Durronto எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து தனது புது தில்லி நோக்கிய பயணத்தை தொடங்கியது.
பயணக் குழு

இரவு உணவு வீட்டில் இருந்து கொண்டுவந்த புளியோதரை மட்டும் அவித்த முட்டையுடன் முடித்த பொழுது, தமிழக உணவின் சுவையை அடுத்த எட்டு நாட்களுக்கு நான் இழக்கப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை. இரவு ரயில் ஆந்திராவை கடக்கும் பொழுது, காலை அலுவலகம் சென்று வந்த களைப்பில் நன்கு உறங்கி விட்டேன். காலை உணவாக பிரட் ஒம்லெட் ஆர்டர் செய்துகொண்டேன். அருகில் இருந்தவர் உண்ட பொங்கல் வடையைக் கண்ட பொழுதே எனது   பிரட் ஒம்லெட் பன் மடங்கு மேல் எனத் தோன்றியது.

ஆந்திராவை முழுவதும் கடந்து வடக்கு நோக்கி செல்ல, ரயில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நிற்கத் தொடங்கியது. அந்த ஊர்களில் ஏறுபவர் ஓபன் டிக்கெட் வாங்கினாலும், ஸ்லீப்பர் பெட்டிக்குள் ஏறி காலியாக இருக்கும் இடங்களை தங்கள் வசமாக்கி, அந்த சீட்டுக்கு உரியவரை ஓரம் ஒதுக்கி விட்டனர். எனக்கு சைடு அப்பர்  என்பதால் எனது அருகில் யாரும் வரவில்லை. எனது இருக்கையை காலியாக விட்டு நான் அசையமுடியாத, எனது மற்ற நண்பர்களையும் காணசெல்ல  முடியவில்லை. இருப்பினும் என் நண்பன் தன் இருக்கைக்கு ஒரு தமிழரரை காவல் வைத்து விட்டு, என்னைக் காண வந்தான். அவன் பெட்டியிலும் இதே நிலை தான் என்று புலம்பினான். ரயில் ஊர்களை நெருங்கும் பொழுது கழிவறைக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டேன்.         

மதியமும் இரவும், முட்டை பிரியாணியுடனும்  (சுவை தக்காளி சாதம் போலத் தான் இருந்தது), எனக்கு வழித்துணையாக பயணித்த  சுஜாததாவுடனும் சென்றது. தனிமையில் இரவு வருவதற்குள் அந்த ஒரு பகல் பல யுகங்கள் போல் தோன்றியது. அதிகாலை வேளையில் குளிர்ந்த வானிலை என்னை எழுப்ப, ரயில்  பனி மூட்டம் காரணமாக சற்று மெதுவாக செல்வதை உணர்ந்தேன். சீட்டை விட்டு இறங்கிய போது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த பலரும் எனது முக்கால் காற்சட்டையை பார்த்து வியந்தனர். ரயில் ஆக்ராவை அடையும் பொழுது, என்னால் குளிரை பொறுக்க முடியாமல், ஜீனுடன் சூவையும் மாற்றிக்கொண்டேன். குளிரில் மதுபானங்கள் பருகுவது எதற்கு என்பதை அந்த நிமிடம் என் அருகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் என்னிடம் சொல்லி, நக்கலாக சிரித்தார்.      

ஏழு மணிநேர தாமதமத்துடன் ரயில், நிஷாமுத்தின் ரயில் நிலையத்தை அடைய, பல வித எதிர்பார்க்புகளுடன், என் நண்பர்கள் மூவர் படை சூழ டிசம்பர் 23 அதிகாலை தலை நகரில், எனது வலது காலை எடுத்து வைத்தேன்.

நிசாமுதினில் இருந்து முதலில் நாங்கள் சென்ற இடம் புது டில்லி ரயில் நிலையம். நிசாமுதின் மற்றும் புது டில்லி ரயில் நிலையம், நமது எக்மோர் மற்றும் சென்ட்ரல் போல் என்று நானே யூகித்துக்கொண்டேன். வளர்ச்சியின் உச்சகட்டத்தில் நம் தலை நகரம் இருக்கும் என்ற எண்ணத்துடன், ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கோ ஏழ்மை தலை விரித்தாடும் கோலத்தை கண்டேன். சென்னை சென்ட்ரலை விடவும் அதிக அளவில் தங்க இடம் இல்லாமல் நடைமேடையில் மக்கள் வசிப்பதைக் கண்டேன். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல் சென்னையில் நான் கண்டிராத மனித ரிக்சாக்களை அங்குக் கண்டு மனம் நொந்தேன். பல எதிர்பார்ப்புக்களுடன் தலை நகரில் வந்து இறங்கிய எனக்கு பெருத்த ஏமாற்றம் தான்.   

இந்திய ரயில்களுக்கும் நேரம் தவருவதுக்கும் ஒரு இனம் புரியா பந்தம் இருப்பதாலும், சென்னையில் இருந்து புது டில்லி  செல்லும் ரயில்கள் என்றுமே சரியான நேரத்திற்கு செல்வதில்லை என்பதாலும், டில்லியில் இருந்து எங்களது சிம்லா பயணத்திற்கு டிசம்பர் 24 அன்றே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். தினமும் காலை ஆறு மணிக்கு ஒரு முறை  மட்டும் கல்கா செல்லும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் அது.  என் நண்பனின் முன் யோசனைப் படி செயல் படாமல், அன்றே முன்பதிவு செய்திருந்தால் நிச்சயம் அந்த ரயிலை தவற விட்டிருப்போம். ஒரு நாள் பொழுது டில்லியில் என்றானது. 

புது டில்லி ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் MEM இன்டர்நேஷனல் ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொண்டு, டில்லியை சுற்றக் கிளம்பினோம். தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற்று மொழி எதுவும் கற்காதது அவமானமாக உள்ளது. குறிப்பாக ஹிந்தி தெரியாமல் வட தேசம் நோக்கி சென்றோமானால் ஒரு எலியைக் கூட யானை என்று ஏமாற்றி நம் தலையில் கட்டுபவர்கள் அதிகம். எங்களுக்கு மிக அருகில் அதிருஷ்ட தேவதை இருந்ததால், எங்கள் குழுவில் இருந்த நண்பனின் அண்ணனுக்கு  ஹிந்தி சரளமாக பேசவும் படிக்கவும் தெரியும். அவரது ஹிந்தி பேச்சினால் எங்கள் பயணத்தில் 4000 ரூபாய் வரை சேமித்தோம் என்பது இன்றளவும் நம்ப முடியாத உண்மை. மேலும் அவர் உயற்கல்வி பயின்றது டில்லியில் என்பதால், அவரது தலைமையில் எங்கள் தலை நகர் உலா தொடங்கியது. 

டில்லியில் அதிக பிரபலமான சில அங்காடித் தெருக்களுக்கு செல்வது என்று முடிவு செய்துகொண்டு, அங்கு பயணிக்க மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். மெட்ரோவில் எங்கு செல்லவேண்டுமானாலும் டோக்கன் தான். நமது இலக்கை சொல்லி காசு கொடுத்தால் அதற்கு ஒரு டோக்கன் தருகின்றனர், அதை பயன்படுத்தி தான் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முடியும். அதே போல் நம் இலக்கை அடைந்த உடன் அதை பயன் படுத்தினால் தான் ரயில் நிலையத்தை விட்டு வெளிய வர முடியும். இங்கு வழக்கமாக பயணிப்பவர்கள் பாஸ் வைத்துள்ளனர், பயண தூரத்தை நுழைவு மற்றும் வெளியேறும் ஸ்டேஷன் மூலம் கணினி கணித்துக் கொண்டு அதற்கேற்ப காசு கழித்துக்கொள்கிறது. 

அந்த ரயில் நிலையத்தில் வழக்கமாக காணப்படும் பாண் பராக் மற்றும் எச்சில் கரைகள் சுவரில் இல்லாததை கண்டு வியந்தேன். மெட்ரோ ரயில் வந்தவுடன் தானியங்கிக் கதவு திறந்து எங்களை வரவேற்தது. அந்த ரயிலின் உள்ளே சென்றவுடன், 'அம்மம்மா நாம் இந்தியாவில் தான் உள்ளோமா?' என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். மேல்நாட்டு சினிமாவில் காண்பது போன்ற மிகவும் சுத்தமாக, தட்ப வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதியுடன் நவீனமாக இருந்தது. ஒரு நாளைக்கு பல லட்சம் மக்கள் டில்லியில் மெட்ரோவை பயன்படுத்தினாலும்  இவ்வளவு சுத்தமாக வைத்திருப்பது பெரிய விஷயம் தான்.
மெட்ரோ ரயிலினுள்
டில்லியில் ரோட்டோரக் கடைகளுக்கு பஞ்சமே கிடையாது. எத்தனை வகைகள். எத்தனை கடைகள். இங்கு சாப்பாட்டு ராமன் அவதாரம் எடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் சற்று சுருக்கமாக கையேந்தி பவன்களை பற்றி சொல்லி விடுகிறேன். எமது நண்பரின் அண்ணன் டில்லியில் படித்தால் அவருக்கு பரிட்சயமான கடைகளுக்கு அழைத்துச் சென்றார். முதலில் குல்ச்சா வாங்கித் தந்தார், பின் பன்னீர் பிரட் பஜ்ஜி, ஆலு டிக்கி, ரசகுல்லா, பாணி பூரி, சிக்கன் மோமோ என அனைத்து வகைக்கடைகளிலும் ஒரு வேட்டை தான். எல்லாமே ரோட்டோரக் கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி வந்து விட்டு டில்லி அப்பளத்தை தவற விடுவோமா, அதையும் கொறித்து விட்டோம். இரவு ஒரு கோழிக்கு மோட்சம் கொடுத்துவிட்டு எங்கள் தலை நகர உலாவை முடித்து விட்டு அறைக்கு திரும்பினோம். 

மறு நாள் காலை, டில்லியில் வரலாறு காணாத பனி பொழிந்த அந்த வேளையில் கல்கா நோக்கி செல்லும் ரயில் பிடிக்க புது டில்லி ரயில் நிலையம் நோக்கி சென்றோம். ரயிலுக்காக காத்திருந்த வேளையில் அங்கு நடைமேடையில் ஒரு தள்ளு வண்டியை சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்க அங்கு சென்று பார்த்தோம். அங்கு பூரி விற்றுகொண்டிருன்தனர். பத்து ரூபாய்க்கு எட்டு பூரிக்கள் சப்ஜியுடன் தந்தனர். பூரிக்கு உருளை மசாலா மட்டுமே உண்டு பழக்கப் பட்ட நாக்கு அங்கு பசியின் பிடியில் அந்த நீர் போன்ற சப்ஜியுடன் வயிற்றை நிரப்பியது. 

ஆறு மணிக்கு இந்த ரயிலை பிடித்து கல்கா சென்று, அங்கிருந்து மலை வழியாக சிம்லா செல்லும் டாய் ரயிலில் செல்வதுதான் எங்கள் திட்டம். அந்த டாய் ரயில் நமது ஊட்டி ரயில் போல, அதில் சென்றால் தான் சிம்லா மலைகளின் இயற்கை எழிலை நன்கு அனுபவிக்க முடியுமாம். மணி ஏழானது, பின் எட்டானது, பின் ஒன்பது மணியையும் கடந்தது. தனது சேவை நாட்களில் ஷதாப்தி ரயில் என்றுமே நேரம் தவறியதில்லையாம். எங்கள் அதிஷ்டம் அதையும் தொத்திக்கொண்டது. ஷதாப்தி ரயில் வருமா, டாய் ரயிலை பிடித்து விடுவோமா?        

தொடரும்.... 

Monday, March 17, 2014

சா. மு. கா. வே. உலக சினிமா - த்ரிஷ்யம் (2013)

*********************************************************************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


சமீபத்தில் வெளிவந்து என்னை மிகவும் கவர்ந்த சினிமா த்ரிஷ்யம் என்னும் மலையாள மொழி திரைப்படம். படம் பற்றிய விமர்சனங்கள் வந்து குவிய, இந்தப் படத்தை நிச்சயம் திரையரங்கில் தான் காணவேண்டும் என்று ஜனவரியில் முடிவு செய்தேன். சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் வாரா வாரம் புதுப் படங்களின் வருகையால் காட்சிகள் மாறுவது வழக்கம். அப்படி ஓரம் தள்ளப் பட்டது  த்ரிஷ்யம். சென்னையில், ஸ்கைவாக்  PVR திரையரங்கில் 6 45 மணிக்கும், எஸ்கேப் திரையரங்கில் இரவு பத்து மணிக்கும்  மொத்தம் இரண்டு காட்சிகள் மட்டும் தான் திரையிடப்பட்டன. பல மாத போராட்டங்களுக்கு பிறகு மார்ச் முதல் வாரம் PVR திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவு செய்து, டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டேன். மேலும் ஒரு தடங்கலாக 7 மணி ஆனபோதும் படம் தொடங்கவில்லை. காட்சி தடை செய்யப்பட்டால் என்னுள் ஏற்படும் ஏமாற்றத்தை எப்படி தீர்ப்பது என்று நான் ஐயம் கொள்ள,  7 30 மணிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக படம் தொடங்கியது. 

எனக்கு மலையாளம் தெரியாது என்பதையும், திரையில் சப்-டைட்டில் போடவில்லை என்பதையும் முன்னமே தெரிவித்துக்கொள்கிறேன். என் புரிதலில் பிழை இருந்தால் மலையாளம் அறிந்தவர்கள் மன்னித்து திருத்தவும்.        

ஒரு சிறிய கிராமத்தில் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் கடை வைத்திருப்பவர் ஜார்ஜ் குட்டி (மோகன் லால்). இவரது மனைவியாக மீனா நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு படத்தில் பள்ளி செல்லும் வயதில் இரு மகள்கள். ஜார்ஜ் குட்டி கிராமத்து மக்களிடம் கலகலப்பாக பழகும் ஒரு வெள்ளந்தி மனிதர். முழு நேரமும் சினிமா பார்க்கும் பழக்கம் அவருக்கு உண்டு. பல நாட்கள் வீட்டிற்கு கூடச் செல்லாமல் விடிய விடிய தன் கடையிலேய சினிமா பார்க்கும் (என்னைப் போன்ற) ஒரு உலக சினிமா பைத்தியம் என்றே சொல்லலாம். நான்காம் வகுப்பு வரை மட்டும் படித்து, தனது உழைப்பால், தனது நடுத்தர குடும்பத்தை நம்பிக்கையுடன் நடத்திவருபவர்.


இப்படி அன்பும் கலகலப்பும் நிறைந்து இருக்கும் குடும்பத்தில் ஒரு சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. காவல் துறை உயர் அதிகாரியின் ஒரே மகன் ஜார்ஜ் குட்டியின் வீட்டில், அவனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயல, அவள் அவன் தலையில் அடிக்க, அவன் இறந்துவிடுகிறான். தனது சினிமா அறிவை பயன்படுத்தி ஜார்ஜ் குட்டி கொலைக்கான தடையங்களை மறைக்கிறான்.

இறந்தவனின் கைபேசி கடைசியாக இயங்கியது ஜார்ஜ் குட்டியின் கிராமம் என்பதாலும், மேலும் அந்த காணாமல் போன பையன் ஜார்ஜ் குட்டியின் மூத்த மகளுடன் கேம்ப் சென்றான் என்பதாலும், காவல் துறைக்கு ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் மேல் சந்தேகம் எழுகின்றது.

தனது மகனின் நிலையை அறிய போராடும், தாய்ப் பாசமும் அதிகார கர்வமும் கலந்த காவல் துறை DIG, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் மேல் குற்றம் உறுதி செய்ய போராடுவதும், நான்காம் வகுப்பு வரைப் படித்த ஒரு சாமான்யனான ஜார்ஜ் குட்டி, தனது சினிமா பார்த்த அறிவை மட்டுமே பயன்படுத்தி, தனது குடும்பத்தை கொலைப் பழியில் இருந்து காக்கக் போராடுவதுமே மீதிப் படம்.

படத்தில் நான் ரசித்தவை:

ஜார்ஜ் குட்டியாக படம் முழுவதும் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும்   மோகன் லால்.


ஒரு குடும்பத் தலைவியாக ராணி கதாப்பாத்திரத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மீனா.

காவல் துறை அதிகாரியாகவும்  மகனை பறிகொடுத்த  தாயாகவும் நம்மை மிரட்டியுள்ளார் ஆஷா.


படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை என்றாலும், கான்ஸ்டபிள் சஹாதேவன் மீது நமக்கு வெறுப்பை உண்டாக்கி அவரையே வில்லன் போல் பாவிக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

சகாதேவன் 

தேவையின்றி எரியும் மின் விளக்கை அணைக்கும் காட்சி, தேவையற்ற பாடல்கள் படத்தில் இல்லாதது, சண்டைக் காட்சிகள் போன்ற மசாலாக் கலவைகள் இல்லாதது, படத்தின் இயல்பான திரைக்கதைக்கு பலம் சேர்க்கின்றன. 

ஒரு மனிதனின் சினிமா அறிவு அவனை எந்த அளவு சாதிக்கச் செய்யும் என்பதை   ஜார்ஜ் குட்டியின் மூலம் பிரதிபலித்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

படம் முடியும் பொழுது திரையில் தோன்றும் எதிர்பாராத திருப்பம், உங்களை அறியாமலே உங்களை விசில் அடிக்கச் செய்துவிடும்.

மொத்தத்தில் யாரும் தவற விடக்ககூடாத ஒரு அழகான சினிமா.      

*******************************************************************************************************
ஆண்டு : 2013
மொழி : மலையாளம்
என் மதிப்பீடு : 4.8/5
*******************************************************************************************************  

இன்று வலைச்சரத்தில் நான் எழுதிய பதிவு : 'எனது வலையுலகப் பயணம்'  

Wednesday, March 12, 2014

ஒரு மார்கழியில் கொலை (சிறுகதை)

மார்கழி 1

அம்பத்தூர் காவல் நிலையத்தில் அபசுரமாக ஒலித்த தொலைபேசியின் சுப்ரபாதம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பாராவின் தூக்கத்தை கலைக்க, களைப்பு நீங்காத அலுப்பில் மெல்ல தன் தலையை சுற்றி இருந்த சால்வையை விளக்க்கி பதில் கூறுவதற்கு முன் 'உனக்கேன் சிரமம்' என்பது போல நின்றுவிட்டது.'இனி தூக்கம் வந்த மாதிரிதான்'எள்ற முனங்களுடன் கழிவறையை நோக்கி சுப்பாராவ் நடக்கத் தொடங்கியபோது, தொலைபேசி மீண்டும் தன் கானக்குரலில் கதறத் தொடங்கியது. அந்த தொலைபேசியை எடுத்த வேகத்தில் ஏதோ ஒரு விலாசத்தை அவசரமாக குறித்து,அதே அவசரத்துடன் பெஞ்சில் தூங்கிக்கொண்டிருந்த ஹெட்கான்ஸ்டபிள் கண்ணனை தட்டி எழுப்பினார் சுப்பாராவ். ஒரு நிமிடம் கூட தாமதியாமல் தன் சுந்தரம் அய்யாங்கார் காலத்து டிவிஎஸ் பிப்டியை மிதித்து சம்பவ இடத்திற்கு கிளம்பிய போது மணி ஆறு, மார்கழி ஒன்று.

எவரேனும் போர்வையை உருவினால் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு திரும்ப போர்த்திக் கொண்டு தூங்கும் அளவு குளிர் நிலவும் அந்தக் காலை வேளையில் கைபேசி நம் தூக்கத்தை கலைத்தால் எவ்வளவு ஆத்திரம் வரும். ஆனால் ராகவனால் கோபப் பட முடியவில்லை, அவனை அழைத்தது அவன் காதலி பிரியா என்பதால். அவள் கூறிய விலாசத்தைக் குறித்துக் கொண்டு கதிரவன் தன் தூக்கத்தை தொடர நினைக்கும் காலை வேளையில் தன் இரு சக்கர வாகனத்தில் சீறிப் பாய்ந்தான். வாகன ஓட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன் தன் காதலியுடன் நடந்த சந்திப்பை மனதில் அசைப்போட்டன்.

காந்திப் பூங்காவில் ராகவனுக்காக காத்திருந்த பிரியா, அவனைக் கண்டவுடன் 'எப்பவும் பசங்கதான் வெயிட் பண்ணுவாங்க. இங்க எல்லாமே தல கீழ நடக்குது' என்று சலித்துக் கொண்டாள்.

ராகவன் அவள் கையை பிடித்து, அவளை தன் மார்பினுள் அணைத்து, போப் ஆண்டவர் முத்தம் ஒன்று அவள் உள்ளங்கையில் கொடுத்து அவள் சினத்தை குறைத்துவிட்டு, 'அப்பா என்ன சொன்னார்?' என்று கேட்டான்.

'அப்பா ஒ.கே. சொல்லிடாரு' என்று சொல்லி 1000 வோல்ட் பல்ப் போல் பிரகாசித்த பிரியாவின் முகம், திடீர் மின் வெட்டு வந்தது போல் 'அதுல ஒரு கண்டிஷன் இருக்கு' என்று அணைந்தது.

'அப்பா நீ கொஞ்சம் பிரபலம் ஆகணும்னு நினைக்கராறு' என்று சொல்லி அவள் தயங்க, 'என்ன மேடம் சிட்டில நான்தான் நம்பர் ஒன் மாட்ரிமோனியல் டீடெக்டிவ்னு உங்க அப்பா கிட்ட சொல்லலியா?' என்று சினுங்கினான்.

'சொன்னேன். ஆனா அப்பாவுக்கு அது பிடிக்கல. தனிமனித வாழ்கைய நீ ரகசியமா நோட்டம் விட்டு தகவல் சேகரிக்கறது ஒழுக்கம் இல்லைன்னு அவர் நினைக்கிறார்.', அவன் எதோ சொல்ல வர, அவனை தடுத்து விட்டு பிரியா தொடர்ந்தாள், 'அவர் கிட்ட நான் சண்டை போட்டேன். கடைசியா அவர் கொஞ்சம் எறங்கி வந்தாரு. ஒரே ஒரு கேஸ்லயாவது நீ வெளிப்படையா துப்பு துலக்கி பிரபலம் ஆகிட்டா நம்ம கல்யாணத்தை அவரே செய்து வைக்கரன்னு சொல்லி இருக்காரு. எனக்காக இது கூட செய்யமாட்டியா ராகவ்?' என்று மனதை வசீகரிக்கும் தோனியில் அவனை கெஞ்சினாள்.

'இதுதான் எறங்கி வர்ரதா' என்று தன்னுள் நினைத்துக் கொண்டான். முடியாது என்று சொல்லி வெடிக்கும் ரணகளத்தை விட அந்த ரத்த களமே மேல் என்று முடிவு செய்து 'உனக்காக கண்டிப்பா செய்றேன் என்று' ராகவன் சொல்லி முடிப்பதற்குள் பிரியா அவனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

பழனியப்பா நகரில் இருந்த ஒன்பதாம் நம்பர் வீட்டின் வாசலுக்கு சுப்பாராவ், கண்ணனுடன் வந்து சேர்ந்தார்.வீட்டின் வாசலில் கூடியிருந்த அக்கம் பக்கத்துக்கு வீட்டார், போலீஸ் வருவதைக் கண்டு விளகினர். 'யாரும்மா போன் பண்ணது' என்று சுப்பாராவ் கேட்க, 'நான்தாங்க. இந்த வீட்டு வேலைக்காரி காலை நாலு மணியில இருந்து  கதவ தட்டினேன். யாரும் தொறக்கல. போன் பண்ணா உள்ளயே  அடிக்கற சத்தம் கேட்குது.அதுதான் சந்தேகத்துல உங்களுக்கு போன் பண்ணேன்' என்று கூறினாள்.

'கண்ணா போய் கதவ ஓட' என்று சுப்பாராவ் ஆணையிட, கண்ணனன் தன் வாலிப வலிமைகளையும் கடப்பாரையும் கொண்டு கதவை உடைப்பதை கூடியிருந்த அனைவருடனும் சேர்ந்து ராகவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருக்கும் படி கண்ணனை வாசலில் காவல் நிறுத்திவிட்டு சுப்பாராவ் உள்ளே சென்றார். அவர் சென்ற பதினைத்து நிமிடங்களில் போலீஸ் வாகனமும், மருத்துவ ஊர்தியும் வந்ததையும், அடுத்த இருபது நிமிடங்களில் வீட்டினுள்  இருந்து இரு உடல்கள் கொண்டு வரப்பட்டதையும் ராகவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த உடல்களின் பின் வெளியே வந்த சுப்பாராவ், 'மிஸ்டர் ராகவன் இங்க  என்ன பண்றீங்க?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

'இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன் கூட்டத்தைப் பார்த்து அப்படியே நின்னுட்டேன்' என்று சமாளித்தான்.

'மாட்ரிமோனியல்ல இருந்து கிரைம்கு மாறியாச்சா?' என்று ஏளனம் செய்தார்.

'அது எல்லாம் ஒரு கட்டாயக் கதை, அப்பறம் விவரமா சொல்றேன். என்ன கேஸ் சார்?' என்று ராகவன் கேட்க 'வாங்க டீ சாப்டுடே பேசலாம்' என்று கடையை நோக்கி அழைத்துச் சென்றார்.

டீக்கடையில் சுப்பாராவ் கொடுத்த தகவல்களை ராகவன் தன் கைபேசியில் குறித்துக்கொண்டான்.

  • வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள் பக்கமாக பூட்டி இருந்தன.
  • கணவன் மனைவி இருவரும் படுக்கையில் இறந்து கிடந்தனர்.
  • பணம் மற்றும் நகைகள் திருடு போன தடயங்கள் எதுவும் இல்லை.
  • அவர்கள் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகத் தெரியாவில்லை, உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்த பின்பு தான் இறந்ததன் காரணம் தெரியும்.
  • கடைசியாக நேற்று மாலை ஆறு மணிக்கு அவர்களை உயிருடன் கண்டது அந்து வீட்டு வேலைக்காரி.
  • அக்கம் பக்கம் விசாரித்ததில் அன்பாக வாழ்ந்த இளம் தம்பதியர் எனத் தெரிகின்றது.
  • இருவர் தவிர்த்து அந்த வீட்டிற்கு வேறு யாரும் வந்தது கிடையாது என்று அந்த வேலைக்காரி உறுதியாக சொல்கிறாள்.

மார்கழி 2

'என்ன ராகவன் ஸ்டேஷன்கு வந்திருக்கிங்க. அந்தக் கணவன் மனைவி கேஸ்ஆ' என்று காவல் நிலையத்தினுள் நுழைந்த ராகவனை பார்த்துக் கேட்க, அவன் 'ஆம்' என்று தலையாட்ட, மேலும் தொடர்ந்தார் 'அந்த கேஸ்ல எங்களுக்கே வேலை இல்லைன்னு ஆயிடுச்சு. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் புட் பாய்சன்னு வந்திருக்கு. நீங்க ஏன் இன்னமும் அதுல ஆர்வமா இருக்கீங்க? ' என்று சுப்பாராவ் கேட்க, 'என் உள் மனசு எதோ தப்பு நடந்திருக்குன்னு சொல்லுது' என்றான் ராகவன்.

'போய் உங்க பொழப்ப பாருங்க ராகவன், உங்க காதலை வாழவைக்க வேற கேஸ் ஏதாவது வந்தா நானே சொல்லி அனுப்புறேன்.' என்று அவனை திட்டி அனுப்பினார்.

மார்கழி 6

சில நாட்கள் கடந்து சென்றாலும், ராகவனின் மனம் சமாதானம் அடையவில்லை. எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று அவன் மனது அவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டிருந்தது. 'அந்த வீட்டிற்க்குச் சென்று ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்' என்று முடிவு செய்தான்.

அன்று இரவு யாருக்கும் தெரியாமல் ராகவன் அந்த வீட்டிற்குள் திருட்டுத்தனமாக பின் வாசல் பால்கனி  வழியே நுழைந்தான். மரணம் நடந்த அந்த வீட்டில் ஒரு இடுகாட்டின் அமைதி நிலவியது. ஒவ்வொரு அறையாக ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று தடயங்களைத் தேடத் தொடங்கினான். முதலில் சமையல் அறையின் குப்பைத் தொட்டியை ஆராய்ந்தான், அதில் ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பையில் இரண்டு காளான் துண்டுகள் கிருமிகள் சூழ கருநிறத்தில் இருந்தன. 'ஒரு குடும்பத்தை நீயா கொன்றாய். நிச்சயம் இருக்காது' என்று அந்த காளானுடன் பேசுகையில் பிரிட்ஜின் அருகில் ஒரு அறை மட்டும் பூட்டி இருந்ததைக் கண்டான்.

அங்கு இருந்த சுத்தியை வைத்து அந்த அறைக்  கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். பல நாள் துவைக்கப்படாத ஒரு காலணியில் இருந்து வருவது போன்ற வாசனை அந்த அறை எங்கும் பரவி இருந்தது. ஜன்னல் ஏதும் இல்லை, சூரிய ஒளி  வர எந்த ஒரு துவாரமும் இல்லை. அந்த அறையினுள் இருந்த சவுண்ட் ப்ரூப் டோர், ப்ரொஜெக்டர், டிஸ்கோ லைட்ஸ்  அவனுள் பல கேள்விகளை எழுப்பியது. இருவர் மட்டும் வாழும் வீட்டில் இவை எதற்கு?

குளியல் அறையில் தான் அவனுக்கு சில தடயங்கள் கிடைக்கத் தொடங்கின. அதுவரை அந்தக் கொலையின் மேல் இருந்த அவனது பார்வை திரும்பத் தொடங்கியது. அந்த தடயம் கிடைத்த பின், புதிய தெளிவான கோணத்தில் வீட்டை மீண்டும் அலசத் தொடங்கினான். சில தடயங்கள் சிக்கின. கதவை உடைத்தது வீண் போகவில்லை என்று தன்னுள் நினைத்துக் கொண்டு பால்கனி கிரில் கதவை தான் கொண்டுவந்த பூட்டால் பூட்டி விட்டு வெளியே வந்தான்.

மார்கழி 7

பிரியாவுக்கு அழைத்து, 'தாலி கட்ட கழுத்த  தயாரா வைச்சிக்கோ. இந்த கேஸ்ல பெரிய தடையம் கிடைத்திருக்கு. இந்த கொலைய  வெளிச்சத்திற்கு கொண்டுவந்துட்டு உன்ன மீட் பண்றேன்' என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

மார்கழி 28

காந்திப் பூங்காவில் பிரியா வர ராகவன் காத்திருந்தான். ராகவனைக் கண்டவுடன் பிரியா ஆர்வத்துடன் 'ஹை. கேஸ் என்ன ஆச்சு?'  என்று உற்சாகத்துடன் கேட்டாள்.

'இந்த கேஸ் வேண்டாம், வேற கேஸ் கிடைக்கும்' என்று சோகத்துடன் கூறினான்.

சினங்கொண்ட பிரியா, சூடனா எண்ணையில் போட்ட கடுகு போல் வெடிக்கத் தொடங்கினாள். உண்மையை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், முள்ளின் மேல் நிற்பது போல் ராகவன் தவித்தான். பிரியா அவளது ஆத்திரம் தீர வெடித்தவுடன்,அவள் பிரம்மாயுதத்தை பயன்படுத்த துவங்கினாள். அணை உடைத்துக்கொண்டு கண்ணீர் கடல் பெருக, ராகவன் தன் மனப் பூட்டை உடைத்தான்.

மார்கழி 6

அன்று இரவு அந்த வீட்டை முதலில் அடைந்த பொழுது நானும் காவல் துறையின் கண்ணோட்டத்தில் தான் அலசினேன். ஒரு மர்ம அறையைத் தவிர வேறு ஒரு பெரியத் தடயமும் கிடைக்க வில்லை. சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்ற பொழுது, அங்கு இருந்த ஒரு துவாரத்தில் விஸ்பர் மற்றும் ஸ்டேப்ரீ கவர்கள் இருப்பதைக்கண்டேன். என் மூளையில் ஒரு கேள்வி தோன்றியது. ஆம் இந்த வீட்டில் இன்னொரு பெண் இருந்திருக்க சாத்தியங்கள் இருக்கு என்று, ஆடைகளை அலசத் தொடங்கினேன். சில ஆடைகளின் அளவுகள் வேறு பட்டிருந்தன. துணி அலமாரியின் அடுக்குகளின் மேல் போடப் பட்டிருந்த செய்தித்தாளின் அடியில் ஒரு கன்னிகாஸ்த்ரியின் புகைப்படம் கிடைத்தது.

மார்கழி 9

தேர்தல் ஆணையத்தில் பணி புரியும் என் நண்பன் ஒருவன் உதவியுடன், வாக்காளர் அடையாள அட்டை தகவல் கிடங்கிலிருந்து அந்த கன்னிகாஸ்த்ரியின்  விவரங்கள் கிடைத்தது. அவரைத் தேடி வேலூர் சென்றேன். அவர் இருந்த அந்த அனாதை இல்லத்தில் அவரைச் சந்தித்தேன்.

'நான் உங்களோட உதவி நாடி இங்க வந்திருக்கேன். நீங்க உண்மையை மட்டும் பேசுவிங்க என்ற நம்பிக்கையில்' என்றேன்.

'என்ன உதவி வேணும் சொல்லுங்க. அந்த ஏசுவின் கிருபையால் என்னால் முடிந்ததை செய்றேன்' என்றார் அந்த கன்னிகாஸ்த்ரி.

'சமீபத்தில் உங்கள சந்திக்க, உங்களுக்கு தெரிந்த பெண் யாராவது உங்களைத் தேடி வந்தாங்களா?' என்று கேட்டு அவர் பதிலை எதிர் பார்த்து காத்திருந்தேன்.  அவர் முகத்தில் ஒரு வித குழப்பம் தோன்றி மறைந்தது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 'நான் போலீஸ் இல்ல, நான் ஒரு பிரைவேட் டீடெக்டிவ். அவங்களுக்கு உதவி பண்ணத்தான் இங்க வந்திருக்கேன்' என்று ஒரு பொய் சொன்னேன்.

'அந்தப் பெண் செய்த கொலைக்கு பாவ மன்னிப்பு வாங்கி அவ கர்த்தர் கிட்ட தன் பாவத்தை இறக்கி வைச்சுட்டா. அவள பத்தி நீங்க அவ கிட்டயே கேட்டுக்கோங்க' என்று என்னை அந்தப் பெண் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவளது கதையையும் சொன்னார்.

சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து, இந்த இல்லத்திலேயே வளர்ந்து வந்த பைரவி, ஏசுவின் உதவியால் கலைக்கல்லூரியில் படித்து பட்டப்படிப்பு படித்து திருச்சபையிலேயே சில பணிகளை செய்து வந்திருக்கிறாள். ஏழு மாதங்களுக்கு முன்பு காமேஸ்வரன் என்ற ஒரு வாலிபன் தாமாக இவளை மனம் முடிக்க முன்வந்து, இவளை திருமணம் செய்துகொண்டு சென்னை அழைத்துச் சென்றான் என்றும், அதன் பின் இப்பொழுதுதான் அவளை இந்த நிலையில் கண்டதாகவும் அவர் சொல்லி வருத்தப்பட்டார்.      
       
ஒரு சாயம் போன வெந்தைய நிற சல்வாரில் வந்த பைரவி, அழகான உடலமைப்பு கொண்டிருந்தாலும், சரியான தூக்கமின்றி கண்களுக்கு கீழ் கரு வளையத்துடன் பொலிவிழந்து காணப்பட்டாள். அவளிடம் ''எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரியலை. ஏன் இப்படி செய்திங்க?" என்று கேட்டேன்.

புன்முறுவலுடன் பைரவி, "வாழத் தகுதியற்றவர்கள் அவர்கள்" என்று அந்நியன் விக்ரம் போல கூறித் தன் கதையை கூறினாள்.

அனாதை இல்லத்தில் இருந்து திருமணம் செய்துகொண்டு அன்று இரவு அவளை சென்னை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். சென்னை வந்த பின் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த வீட்டில் அவன் மனைவி இருப்பது அவளுக்கு தெரிந்தவுடன், அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பைரவியை அந்த ஜன்னல் இல்லாத மர்ம அறையில் தள்ளி பூட்டி விட்டான். சவுண்ட் ப்ரூப் என்பதால் அவள் கூச்சல் வெளியே கேட்பதில்லை. பகல் முழுவதும் அவள் அறையினுள்ளே பூட்டி வைக்கப் பட்டிருந்தாள்.

அன்று இரவு அவளுக்கு உணவு கொடுத்து, பின் அவளை கட்டாயப்படுத்தி, இருவருடன் உடலுறவு கொண்டிருக்கான் அந்த காமேஸ்வரன். சில நாட்கள் இதுவே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. சில வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு, அவளை தன் முதல் மனைவியோடு ஓரினச்சேர்க்கைல ஈடுபட கட்டாயப்படுத்தி இருக்கான். பைரவி அதற்கு மறுத்தவுடன், அவளை பெண் என்றுகூட பாராமல் தன் ஆத்திரம் அடங்கும் வரை, பாக்சிங் பையை அடிப்பது போல் அவள் வயிற்றை அடித்திருக்கிறான் அந்தக் காமக்கொடூரன். ஒரு கட்டத்தில் சித்தரவதை தாங்க முடியாமல் அவர்களின் ஆசைக்கு இயந்திரம் போல இணங்கியிருக்காள் பைரவி. தினமும் பைரவி முதல் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது, அதைக் கண்டு அந்தக் காமக்கொடூரன் சுயயின்பம் கொள்வது வழக்கமாயிற்று.  

'பாஸ்டர்ட்ஸ்' என்று பிரியா முணுமுணுத்தது ராகவன் காதில் விழாதது போல் அவன் மேலும் தொடர்ந்தான்.

இப்படி ஒரு கொத்தடிமையாக அவள் வாழக்கை செல்ல, ஒரு நாள் இரவு கழிவரையில் இருக்கும் பொழுது அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டாள்.

'காமா எனக்கு இவ ரொம்ப போர் அடிச்சு போயிட்டா.' என்று அவன் முதல் மனைவி சொல்ல 'இன்னும் ரெண்டு வாரம் தான். கோவைல இருக்கற ஒரு ஆஷ்ரமத்துல ஒரு பெண் பார்த்திருக்கேன். இவ சாப்பாட்டுல வழக்கம் போல அர்செனிக் கலக்க வேண்டியதுதான்' என்று அவர்கள் பேசிக்கொண்டது இவளை திடுக்கிட செய்தது. தன்னைப் போல் பல பெண்களுக்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளதா என்று நொறுங்கிப்போனாள். இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று தன்னுள் முடிவு செய்தாள்.

அன்று இரவு அந்த அர்செனிக் இருக்கும் ஜாடியை கண்டுபிடித்து, அவர்கள் சற்று அசந்த நேரத்தில் அவர்கள் உணவில் கலந்து விட்டாள். அவர்கள் உறக்கத்தில் இறந்தது போல் ஏற்பாடு செய்துவிட்டு, பால்கனி கிரில் கதவு வழியே இரண்டாவது சாவி கொண்டு வெளியே வந்து, பின் உள் பக்கமாக பூட்டி விட்டு, அந்த அனாதை இல்லத்திற்கே மீண்டும் திரும்பி விட்டதாக சொல்லி முடித்துவிட்டு, 'நீங்க இத போலீஸ் கிட்ட சொன்னாலும் எனக்கு கவல இல்ல. பல முகம் தெரியாத பெண்கள காப்பாத்தன சந்தோஷத்திலேயே நான் தூக்குல தொங்கத் தயார். ஒரு தடவ மதர பார்த்து அவங்க மடியில எல்லாம் சொல்லி அழனம்னு தான் இங்கே வந்தேன்' என்று அவள் முடிக்கும் பொழுது அவள் கண்ணில் நீர் ததும்பியது.

'நீங்க செய்தது சட்டப்படி குற்றமா இருக்கலாம். ஆனா தர்மப்படி அது தப்பு இல்ல. நான் தர்மத்தின் பக்கம். உங்க ரகசியம் என்னோட மறையும்' என்று நான் சொல்லியவுடன், எனக்கு நன்றி சொல்லி மேலும் ஒரு உதவி கேட்டாள்.          

மார்கழி 28 

ஆச்சரியத்தில் இருந்த பிரியா,  "அது எப்படி சாப்பாட்டுல அர்செனிக் கலந்தா, சாப்படும் பொழுது தெரியும் இல்ல? அப்பறம் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல எப்படி மிஸ் ஆச்சு" என்று ராகவனை விசாரித்தாள்.

"பிரெஞ்சு மனனர் நெப்போலியன் சாவுல இருக்கறதா சந்தேகபட்படர அர்செனிக், இந்தக் கொலையிளையும் சம்மந்தப்பட்டு இருக்குறது வினோதம்தான்.  அர்செனிக் ஒரு பழங்கால விஷம்.அர்செனிக்கோட பியுட்டியே அதுக்கு வாசனை, நிறம், சுவை எதுவுமே கிடையாது தான். நீர்ல, இல்ல சாப்பாட்டுல கலந்தா கண்டே பிடிக்க முடியாது. அதோட விஷம் கொடுக்கற எபக்ட் எல்லாமே புட் பாய்சன் போலத்தான் இருக்கும். அதனால சாப்புட்ரவங்களுக்கும் தெரியாது,பிரேதப்பரிசோதனையிலும் தெரியாது" என்று பெருமையுடன் கூறி, 'இதையெல்லாம் நீ போய் போலிஸ்ல சொல்ல மாட்டதன?" என்று சந்தேகத்துடன் கேட்டான்.

"நீ என்னப் புரிந்துக்கொண்டது அவளதானா.நானே அவங்கள கொன்னிருப்பேன். இந்த பைரவி ரொம்ப பாவம். நம்ம கல்யாணத்துக்கு வேற கேஸ் கிடக்கும்" என்று அவன் தோள் மீது சாய்ந்தவள் சட்டென்று எழுந்து 'அவ என்ன உதவி கேட்டா சொல்லவே இல்லையே?' என்று வினவினாள்.

"எல்லாத்தையும் நானே சொல்லிட்டா என்ன சஸ்பென்ஸ் இருக்கும். நாளை காலை தினசரில செய்தி வரும் " என்று  சொல்லி, தன் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, " ரெண்டு புது மாட்ரிமோனியல் ப்ரோபைல் வந்திருக்கு நான் கிளம்பறேன்" என்று கேள்விகளுடன் இருந்த பிரியாவின் கன்னத்தில் முத்தமிட்டு ராகவன் புறப்பட்டான்.                              
   
மார்கழி 29

காலையில் எழுந்தவுடன் தன் தந்தை கையில் இருந்த தினசரியை பிடுங்கி, பக்கங்களை ஆராயத் தொடங்கினாள். மூன்றாவது பக்கத்தில்:

சமீபத்தில் கணவன் மனைவி புட் பாய்சனால் இறந்து கிடந்த வீடு நேற்று இரவு திடீரென காஸ் சிலின்டர் வெடித்து தீ பிடித்தது. அந்தப் பகுதி மக்கள் அமானுஷ்ய பயத்தில்....

Thursday, March 6, 2014

சாப்பாட்டு ராமன் - புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில் விழுங்கியதும் : சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்ததும்

புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்

இம்மாதம் அரசன் வீட்டு கல்யாணதிற்காக அரியலூர் செல்கையில், அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சரித்திர கோவில்களை பார்த்துவிட்டு செல்வது என்று முடிவுசெய்தோம். காலையில் குடுமியான் மலை குடவரைக் கோவிலில் குடுமியானுடன் துவார பாலகர்களை தரிசித்து விட்டு, பின் சித்தன்ன வாசல் சிற்பங்களின் வர்ண ரகசியங்களை அலசிவிட்டு, உச்சி வெய்யில் வேளையில் நார்தாமாலை சோழ கோவிலை கண்ட பின் மலையில் இருந்து கீழே  இறங்கும் பொழுது ராமனின் வயிர் சத்தம் போடத் தொடங்கிவிட்டது. 

நார்த்தாமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் போது, கைபேசியில் அழைத்த நண்பர் 'சிவகாசிக்காரன்' ராம் குமார், புதுக்கோட்டை வந்து உண்ணும் படி பணித்தார். (சில அலுவல்களால் அவர் வரமுடியாமல் போனது ). புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பழநியப்பா மெஸ் தான் அவர்  எங்களுக்கு பரிந்துரை செய்தது.


உணவகத்தின் பார்கிங் இடம் ஒரு நூறு மீட்டர் முன்பே இருக்க, வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு, 'பழநியப்பா மெஸ்' என்று தெரிந்த பெயர் பலகையை நோக்கி நடந்தோம். பிரதான சாலையில் சற்று சிறிய வாசலுடனே இருக்க, சின்ன உணவகம் என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே  உணவகம் எதிர்பார்த்ததை விசாலமாக இருக்க, கூட்டமாக இருந்த மேசைகளைக் கடந்து உள்ளே இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே, குளிர் சாதன அறைக்கு அருகில் சென்றுவிட்டோம்.

இரண்டு குளிர் சாதன அறைகளுக்கு நடுவில் இருள் சூழ்ந்த குகை போன்று வடிவமைக்கப்பட்ட அறை ஒன்று இருந்தது. உள்ளே அனுமதிப்பார்களா என்று நாங்கள் சற்று தயங்க, எங்களை மேசைப்பணியாளர் உள்ளே அழைத்து அமர வைத்தார். அந்த செயற்கை குகையினுள் அவர் மின் விளக்கை உயிர்பிக்கும் பொழுது மணி நான்கு.         

பொதுவாக இந்த நேரத்தில் பெரும்பாலான உணவகங்கள் மதிய உணவை நிறுத்தும் நேரத்தில் கடைசி ஆட்களாக உள்ளே சென்று விட்டோம். சாப்பாடு மற்றும் பரோட்டா மட்டும் தான் உள்ளது மற்ற அனைத்தும் முடிந்து விட்டது என்று தெளிவாக சொல்லிய பின்னே ஆர்டர் எடுக்கத் தொடங்கினர். பிரியாணி இல்லாதது ராமனுக்கு ஏமாற்றம் என்றாலும் பரோட்டா இருந்தது அவனுக்கு மனம் ஆறுதல் தந்தது.

பரோட்டா வர காத்திருந்த சமயம் சீனுவின் இலையில் இருந்து சுவைத்த மீன் குழம்பின் சுவையானது,  பரோட்டா வேண்டாம் என்று சொல்லிவிட்டு  சாப்பாடு வாங்க ஆவியைத் தூண்டியது. .பரோட்டா  வர காத்திருக்க பொறுக்காமல், சைட் டிஷ் ஆர்டர் செய்யலாம் என்று அழைத்த பொழுது மேசைப்பணியாளர் சட்டென்று வெளியே சென்று விட்டார். ஒரு வேலை என்னென்ன வகைகள் காலியாகாமல் இருக்கின்றன என்று பார்க்கச் சென்றாரோ என்று தன்னுள் எண்ணிக்கொண்டு காத்திருந்தான்  ராமன்.



குகைக்குள் திரும்ப வந்த மேசைப்பணியாளர், தன கையில் ஒரு பெரிய செவ்வக வடிவ தட்டை ஏந்தி ராமனின் அருகில் வந்தார். அந்தத் தட்டில் பல வகை உயிரினங்கள் மசாலாக் கலைவையுடன் நாவில் உமிழ் நீர் சுரக்கச் செய்தன. இரால், மீன், கோழி, காடை என     எந்த ஒரு ஜீவனுக்கும் பங்கம் வராத விதத்தில், அனைத்து​ வகைகளிலும் ஒவ்வொரு சைட் டிஷ் ஆர்டர் செய்தான்.


பரோட்டா சாதாரணமாக இருந்தாலும், அந்த பசியில் அது கிடைத்தால் போதும் என்று உண்டுகொண்டிருந்த ராமனுக்கு ஜீவன் தந்தது முதலில் வந்த துண்டு மீன் வறுவல். அந்தச் சிறிய துண்டு மீன் வறுவல் ராமன் வீட்டில் சமைப்பது போன்ற சுவையை தந்ததால் அவன் அதை மேலும் ஒரு ப்ளேட் வாங்கிக்கொண்டான். அடுத்து வந்த கோழியும் காடையும் செட்டிநாடு பாணியில் சுவையாக இருந்தன.       

அங்கு சுவையில் முதல் இடத்தை பிடித்தது இரால் வறுவல் தான். மோறுமொறுவென சரியான மசாலாக் கலவையுடன் சுவை அரும்புகளுக்கு விருந்தாக அமைந்தது. வழக்கம் போல் ஒரு ஹால்ப் பாயிலை அப்படியே முழுசாகத் தன் உணவுக் குழாய் வழியாக வயிரினுள் இறக்கி தன் மத்திய உணவை ராமன் முடித்துக்கொண்டான். ஐவர் மனதார உண்டதற்கு பில் தொகை 834 ரூபாய் தான்.  

சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்தது

அஞ்சப்பர் உணவகம் எனக்கு முதன் முறை அறிமுகமானது பாண்டி பஜார் சென்றபொழுதுதான். அங்கு அவர்களின் சேவையும் உணவின் சுவையும் செட்டிநாடு பாணியில் அருமையாக இருக்க என் மனதில் நன் மதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் அசோக் நகரில் ஒரு நிகழிச்சியில் பங்குபெற்று வீடு திரும்பும் பொழுது உணவு உண்ண உணவகம் தேடினோம்.  அசோக் நகர் வட்டாரத்தில் இருக்கும் பிரதான உணவகங்கள் சரவண பவன், கே.எப்.சி. , மெக்.டொனால்ட்ஸ், அஞ்சப்பர், திண்டுக்கல் தலப்பாகட்டி.           

அஞ்சப்பரில் உன்பது என்று ஒரு மனதாக முடிவு செய்து அந்த உணவாக வாசலை அடையும் பொழுது மணி 9:35. கீழ் தளத்தில் கூட்டம் மிகுதியாக இருந்ததால், முதல் மாடிக்கு சென்று அமர்ந்தோம். மேசைப் பணியாளர் மற்ற மேசைகளை கவனித்துக் கொண்டிருக்க, என்ன உணவு ஆர்டர்  செய்வது என்று முடிவு செய்துகொண்டோம். எங்கள் மேசைக்கு அவர் வரும் பொழுது மணி 9 : 45. இருவர் மட்டும் தவிர்த்து மற்றவர் அனைவரும் பிரியாணியும்தந்தூரியும் ஆர்டர் செய்தோம். இருவர் தோசை மற்றும் நான் ஆர்டர் செய்தனர்.   

9:52க்கு மேசைப் பணியாளர் மீண்டும் திரும்பி வந்து பிரியாணி தீர்ந்து விட்டதாகவும், ப்ரைட் ரைஸ் மட்டும் தான் இருப்பதாக கூறினார். நண்பர் ஒருவர்  கோபம் கொண்டு 'ஆர்டர் எடுக்கும் முன்னாடி எது இருக்கு இல்லை என்று பார்க்க மாட்டிங்களா?' என்று சினங்கொள்ள , மேசைப் பணியாளர் 'நான் ஆர்டர் எடுக்கும் போது இருந்தது, அதற்குள்ளேயும் வேறு டேபிள்கு போயிடுச்சு' என்றார். வேறு வழியின்றி மீண்டும் ஆர்டர் கொடுத்தோம்.        

மணி 10:01. மீண்டும் அவர் திரும்பி வந்து 'பரோட்டா, இடியாப்பம், நான் மட்டும் தான் இருக்கிறது' என்றார். மெனு கார்டில் இருக்கும் ஒரு உணவு வகை ஆர்டர் கொடுத்த பின் இல்லை என்று மறுமொழி சொல்லியதில் அவருக்கு துளியும் வருத்தம் இல்லை. ஒரு மக்கள் சேவை வேலையில் இருப்பவருக்கு, மக்கள் நோகாமல் பணிவாக பதில் சொல்லவும் தெரியவில்லை. 'அது இல்ல. இதுதான் இருக்கு. என்ன வேணும்?' இது போலத் தான் இருந்தது அவர் கொடுத்த பதில்கள். எங்கள் கோபம் பசியுடன் போட்டியிட்டு,  இந்நேரத்தில் வேறு உணவகம் தேடிச் செல்ல முடியாததால் இறுதியில் பசியே வென்று,  பரோட்டா, இடியாப்பம், நான் வகைகளை மீண்டும் ஆர்டர் செய்தோம். 

முதலில் ஆர்டர் செய்த தோசையும், ஒரு நானும்,  இரு தந்தூரிகளில்  ஒன்று மட்டும் முதலில் 10 15க்கு வந்தது. அடுத்து இடியாப்பமும் பரோட்டாவும் 10:20 க்கு வந்தது. இருவர் மட்டும் இடியாப்பம் பரோட்டா ஆர்டர் செய்தோம், மற்றவர்கள் நான் தான் ஆர்டர் செய்தனர். அனைவரின் பசியும் அடங்கத் தொடங்கிய 10:27 க்கு நான் வந்தது. நான் வந்து பத்து நிமிடங்கள் கடந்தே இரண்டாவது    தந்தூரி வந்தது. 

உணவு தாமதமாக வந்தாலும், அதன் சுவை படு கேவலமாக இருந்தது. அந்த நான்கள் சைக்கிள் சக்கரம் செய்யும் ரப்பரின் பதத்தில் இருந்தன. அஞ்சப்பரில் நான் இதவரை இவ்வளவு மோசமான சுவையும் சேவையும் கண்டதில்லை.   அசோக் நகரில் இருக்கும் அஞ்சப்பர் செல்லும் நண்பர்கள் தங்கள் பொறுமையை சோதனை செய்ய நல்ல உணவகமாக இருக்கும் என்பது ராமனின் எண்ணம்.         ​

---------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் வாசகர் கூடத்தில் எழுதிய பதிவை வாசிக்க இங்கு சொடுக்கவும் :

முகில் கண்ணா அசத்திட்டடா நீ!


Tuesday, March 4, 2014

சா. மு. கா. வே. உலக சினிமா - Old Boy (2003)

**********************************************************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
ஒரு தனியார் தொலைக்காட்சி சானலில் எதற்சையாக சில காட்சிகள் பார்த்து, மிகவும் பிடித்து போய், பின் நான் தரவிறக்கி பார்த்த கொரிய மொழி திரைப்படம் தான் இந்த ஓல்ட் பாய்'.



கதையின் நாயகன் மது அருந்திவிட்டு சாலையில் கலாட்டா செய்ய, அவன் காவல் துறையால் கைது செய்யப்படுகிறான். அவனது நண்பன் அவனை விடுதலை செய்துகொண்டு, இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறான். செல்லும் வழியில் நாயகன் தன் நான்கு வயது மகளை பொது தொலைபேசியில் அழைத்து, அவளுக்கு பிறந்தநாள் பரிசுடன் வருவதாக சொல்லி முடிக்க, அவன் நண்பன் தொலைபேசியில் இவன் மனைவியிடம் எல்லா விபரத்தையும் சொல்லி முடித்து பூத்தில் இருந்து வெளியே வரும் பொழுது நாயகன் காணாமல் போகிறான்.        

கண் விழித்துக் பார்க்கும் நாயகன், தான் ஒரு புதிய அறையில் இருப்பதை உணர்கிறான். தொலைக்காட்சி மெத்தையுடன் அந்த அறையில் அவனை சிறை படுத்தி வைத்திருப்பதை எண்ணி வியக்கிறான். யார்? எதற்காக? என்று பல கேள்விகள் அவனுள் தோன்றுகிறது. அறையினுள் மயக்க மருந்து செலுத்தி இவன் மயங்கிய பின் தினமும் அவனுக்கு உணவு கொடுக்கப்படும். அந்த தனிமையில் அவனுக்கு உலகமே அந்தத் தொலைக்காட்சிதான். அந்தத் தொலைக்காட்சியில் ஒரு நாள் அவன் மனைவி கொல்லப்பட்டதாகவும் அதற்குக்காரணம் இவன்தான் என்பது போன்ற தடயங்கள் சிக்கி இருப்பதாகவும் செய்தி வெளியாகிறது. தன்னை சிறை செய்து வைத்திருப்பவர்கள் தான் இதற்குக்காரணம் என்ற முடிவுக்கு வருகிறான். அவன் இது வரை யாருக்கெல்லாம் தீங்கு செய்துள்ளானோ அவர்களின் நீண்ட பட்டியலை தயார் செய்து வெளியில் சென்றவுடன் அவர்களை கண்டறிந்து பழி தீர்க்க எண்ணுகிறான். 


தொலைக்காட்சியை தன் குருவாகக்கொண்டு  தன் உடலை வலிமை படுத்தி தற்காப்புக் கலைகளையும் தானே கற்கிறான்.இப்படியே அந்த அறையின் தனிமையில் 15 வருடங்கள் செல்ல அவன் தன் மனித குணங்களை இழந்து மிருகமாக இருக்கும் நிலையில் ஒரு நாள் விடுதலை செய்யப்படுகிறான். அதன் பின் தன்னை சிறை படுத்தியவர்களை தேடி அவன் பழிவாங்கும் படலமே இந்தப் படம். இதுவரை சொன்ன கதை சுருக்கம் வெறும் பதினைந்து நிமிடம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

'யார்? யார்?' என்ற கேள்வியை நோக்கி தன் தேடலை தொடரும் நாயகன் இறுதியில் தான் தன் கேள்வி தவறு என்பதை உணருகின்றான். அவன் கேட்க வேண்டிய கேள்வி என்ன, யார் அவனை தண்டித்தார்கள் என்பதை அறிய படத்தை பாருங்கள்.        


படத்தில் நான் ரசித்தவை :

தனிமை சிறைச்சாலையில் பதினைந்து ஆண்டுகள் அடைப்பட்டு இருந்து வெளிவரும் மனிதன் எவ்வளவு மிருக குணங்களுடன் செயல்படுவான் என்பதை கதாநாயகன் தத்ரூபமாக நடித்திருப்பார்.


ஒரு காட்சியில் எதிரிகளை அடிக்க நாயகன் சுத்தியை ஓங்க, திரை freeze ஆகி, அந்த சுத்தியின் நுனியில் இருந்து அவர் அடிக்கப் போகும் ஆளின் நெற்றி வரை ஒரு வெள்ளை நிற கொடு வரைவது ரசிக்கும் படி இருந்தது.

இடைவேளைக்கு முன்னமே யார் வில்லன் என்று தெரிந்து விட்டாலும், இரண்டாம் பாதியில் வேறு ஒரு முக்கிய கேள்வியுடன் விறு விறுப்பு குறையாமல் திரைகதை நகர்வது நம்மை படத்துடன் ஒன்றச் செய்துவிடும். 

ஒரு மனிதனை பழிவாங்க இவ்வளவு மோசமான எல்லைக்கு ஒருவனால் செல்ல முடியுமா? என்ற கேள்வி படம் முடியும் பொழுது நம் மனதில் தோன்றும்.




பழிவாங்கும் படலத்தை கருவாக கொண்ட படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ஓல்ட் பாய் தான். நீங்களும் தவறாமல் பாருங்கள், கேட்கவேண்டிய சரியான கேள்வியும் அதன் பதிலும் தெரியவேண்டும் அல்லவா. ​

*******************************************************************************************************
ஆண்டு : 2003
மொழி : கொரியா
என் மதிப்பீடு : 4.5/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************