Friday, August 30, 2013

தேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2013

மொய்ப் பணம் 

ஏனோ தெரியவில்லை இந்த மே முதல், மாதம் தவறாமல் போக்குவரத்து காவல் துறைக்கு மொய் வைப்பது வழக்கமாயிற்று. சென்னை புறவழிச் சாலையை நண்பருடன் சீருந்தில் கடந்து அம்பத்தூர் செல்வதற்காக பாலத்தில் இருந்து கீழே இறங்கியபோது, போக்குவரத்துக் காவல் எங்கள் சீருந்தை நிறுத்தியது.


'தம்பி இந்த சன் பிலிம் எல்லாம் எடுத்துடனும்...என்ன' என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

'சார்... இது செமி transparent பிலிம், உள்ள இருப்பது நல்லா தெரியுது பாருங்க'  என்று நான் சொல்ல,

'எங்கப்பா. இந்த தம்பி மொகத்துல தாடி இருக்கா இல்லையானு கூட தெரியல' என்று அண்டப் புளுகு புளுகி நூறு ரூபாய் வாங்கி ரசிதும் தந்தார் அந்த உத்தமர்.  

எவரோ சிலர் செய்யும் தப்புக்கு இந்த சென்னை வெய்யில்ல சன் பிலிம் இல்லாம எல்லாரையும் வண்டி ஓட்டச் சொல்வது நியாயமா, மை லார்ட்?

ID கார்ட் 

ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, கன மழை, அவசரமாக நனைந்த ஷுவை கிழற்றி, என் இடுப்பில் தொங்கிய ID கார்டை எடுத்து கதவுக்கு நேராக காட்டினேன், கதவு திறக்க வில்லை.  இது அலுவலகம் இல்லை  என் வீட்டின் கதவு என்று எனக்கு உறைக்க இருபது வினாடிகள் தேவைப் பட்டது.      

இந்த அக்செஸ்(access) கார்ட் உடன் கூடிய ID கார்ட் பயன்படுத்தும் அலுவலகத்தில் வேலை செய்யும் என்னைப் போன்ற நண்பர்களுக்கு இது போன்ற சில பழக்கங்கள் தொற்றிக் கொள்வதைக் கண்டும் அனுபவித்தும் உள்ளேன்.


சுங்கச் சாவடியில் சீருந்து மெதுவாக ஊர்ந்து, ஐந்து நிமிடங்கள் கழித்து, கட்டணம் செலுத்தும் இடத்தை நெருங்கிய பொழுது, வண்டி ஓட்டுனர் தன் கையில் இருந்த பணத்தை வெளியே நீட்ட, நான் மட்டும் என் ID கார்டை நீட்டினேன். அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தி சோதனை செய்வதால் வந்த பழக்கம்.     

மருத்துவர் அய்யா 

மேடவாக்கம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மஞ்சள் நீராட்டு விழா விளம்பரப் பலகையில் 'மருத்துவர் அய்யா அவர்கள்' என்று இருந்தது. அட யாருடா இந்த மருத்துவர் என்று சிந்திக்கும் வேளையில் தான் அந்தப் பலகையில் அந்த கட்சியின் பெயர் தென்பட்டது.

அவர் MBBS படித்தவரா ,இல்லை  அது 'Doctorate' என்பதின் அவர்களுடைய தமிழாக்கமா என்று குழப்பம் இருந்தது. பின் அவர் MBBS படித்த மருத்துவர் என்பது 'மேடவாக்கம் மாஸ்ட்ரோ' என்று அழைக்கப் படும் ஒரு பிரபல பதிவரிடம் இருந்து தகவல் கிடைத்தது. என் தந்தை வாயிலாக இவர் தன் ஆரம்ப காலத்தில், திண்டிவனத்தில் மருத்துவ கிளினிக் வைத்திருந்த செய்தியும் அறிந்தேன். மருத்துவருக்கும் முனைவருக்கும் எத்தனை வித்யாசங்கள்.
 
எத்தனை பெரியார் வரினும், இந்த 'மஞ்சள் நீராட்டு விழா' ப்ளெக்ஸ் விளம்பரப் பலகை வைப்பதை இந்த மக்கள் விடப் போவதில்லையா? 

லைக் போடாமல் முகநூலில் சுட்டது 




ரசித்த ஆட்டோ வாசகம் :

வறுமையில் வாடாதே!
  வளமையில் ஆடாதே!


நண்பர் செல்வா பகிர்ந்த சிரிப்பு வெடி   

நாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். “ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”


அந்த உறுப்பினர் பின் சொன்னாராம் ”அந்த மூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”

பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது . . "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...??? 

நம்ம ஆட்டோ 


சென்னையில் புதிதாய் மீட்டருடன், GPS பொறுத்தப்பட்டு துவங்கப்பட்டுள்ள ஒரு தனியார் ஆட்டோ நிறுவனம் தான் 'நம்ம ஆட்டோ'. மறந்துபோன 'பிரசவத்திற்கு இலவசம்' என்ற வழக்கத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். 



இவர்களின் தாக்கமோ என்னமோ, தமிழக அரசு அணைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொறுத்த ஆணை பிரப்பித்துள்ளது. அக்டோபர் 15 முதல் 1.8km வரை 25 ரூபாய் மட்டுமே, அதைத் தாண்டினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 12 என்று கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதுநாள் வரை ஆட்டோக்காரர்களின் அட்ராசிட்டியில் சிக்கித் தவித்த என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் செய்தி, கடற்கரையில் குடிநீர் கிடைத்தது போன்றது. 

கலர் மாயை:

சமீபத்தில் தேடித் பிடித்து பார்த்த இரண்டு படங்கள் 'மன்மத லீலை' மற்றும் 'மூன்று முடிச்சு'.

மன்மத லீலை வெளியான தேதி 25 பிப்ரவரி 1976 

மூன்று முடிச்சு வெளியான தேதி 22 அக்டோபர் 1976 

மன்மத லீலை வண்ணப் படமாகவும், மூன்று முடிச்சு கருப்பு வெள்ளைப் படமாகவும் இருந்தது.


 பின் நாளில் வெளியான படம் ஏன் கருப்பு வெள்ளையாக வந்தது என்ற இந்தச் சிறுவனின் அறியாமையை யாரேனும் தீர்த்து வையுங்களேன். 


பதிவுலக தோழமைகளே நம் விழா நடக்க இன்னும் ஒரு நாளே....

Wednesday, August 28, 2013

T151 உம் பதிவர் திருவிழாவும்

நேரமின்மையால் வலைப் பக்கம் சில நாட்களாக வர இயலவில்லை. பதிவர் திருவிழா நெருங்கும் சமயத்தில் ஒரு மாநகரப் பேருந்து எனக்கு கற்றுத் தந்த வாழ்க்கைத் தத்துவத்தை இங்கே பகிர்கிறேன்.

T151
நான் வசிப்பது கிழக்கு தாம்பரம், என் அலுவலகம் இருப்பது சென்னை சிறுசேரி IT பூங்கா (கேளம்பாக்கம் மிக அருகில்). தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்ல, மேடவாக்கம் வழியே சோழிங்கநல்லூர் கடந்து தான் செல்ல வேண்டும். சோழிங்கநல்லூர் - மேடவாக்கத்தில் இருந்து வரும் சாலையும், ECRஇல் இருந்து வரும் சாலையும், OMRஇல் சங்கமிக்கும் நெரிசல் மிகுந்த இடம். 


என் வீட்டில் இருந்து சிறுசேரியில் உள்ள அலுவலகம் செல்ல இரண்டு வழிகள் உண்டு           

1) நேர் பேருந்து T151 பிடித்து செல்வது 

2) C51 அல்லது T51 பிடித்து  சோழிங்கநல்லூர்  சென்று, அங்கிருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வது. 

முதல் வழி சற்று சுலபம், ஏறி அமர்ந்து அலுப்பின்றி செல்லலாம். இரண்டாவது வழி இடையில் இறங்கி, சற்று நடந்து, வெய்யிலில் காத்திருந்து அடுத்த பேருந்து பிடிக்க வேண்டும்.       

முதல் வழியில் பேருந்துகள் மிக மிகக் குறைவு, ஒரு மணி நேரத்துக்கு ஒன்று தான். இரண்டாம் வழியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து. சென்னை வெய்யிலின் குளுமையால், நான் தேர்ந்தெடுப்பது முதல் வழி தான்.

சம்பவம் ஒன்று 

ஒரு நாள் இப்படித் தான், எப்பொழுதும் 12 10க்கு வரும் T151க்காக,  என் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். பல பேருந்துகள் என்னைக் கடந்தாலும், நான் காத்திருந்த பேருந்து சற்று தொலைவில் வருவது தெரிந்தது. என் பேருந்து நிலையம் நெருங்க, ஏற்கனவே ஒரு T51 அங்கு நின்றிருக்க, அந்த T151 வேகமாக நிற்காமல் கடந்து சென்று என் நம்பிக்கையை உடைத்தது.       

சம்பவம் இரண்டு 

மற்றொரு நாள், பல T51கள் என்னைக் கடந்த போதும் மனம் தளராமல் காத்திருந்தேன். 1 30க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 12 40 ஆகியும் T151 வாராத காரணத்தால், T51 இல் ஏறி,  சோழிங்கநல்லூரில் இறங்கி, இரண்டாவது பேருந்து பிடிக்க  சாலையை கடக்க , என் பின்னே வந்த T151 என்னைக் கடந்தது. 

வாழ்க்கை பல வினோத வழிகளில் பல அறிய பாடங்களை புகட்டுகிறது என்று அந்த இரண்டு சம்பவமும் எனக்கு உணர்த்தின. என் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் அதைக் பகிர எனக்கு ஒரு தளம் இருப்பதும்  அதைத் தவறாமல் படிக்கவும் சில நண்பர்கள் இருக்கின்றனர் என்பதும் இந்த வாழ்க்கைக்கு தெரியாதோ?
            
பதிவர் திருவிழா 

இன்னும் சில தினங்களே உள்ளது, நம் பதிவுலக தோழமைகள் சங்கமிக்க. 

சிறப்பு பேச்சாளர் பாமரன் பற்றி மெட்ராஸ் பவன் வெளியிட்ட செய்தி படிக்க இங்கு சொடுக்கவும்.

புத்தகப் பிரியர்களுக்கு,  வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடக்க இடம் தரும் டிஸ்கவரி புக் பேலஸின் விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நிகழும் அரங்கில் பத்து சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் இயங்கவுள்ளது.வேண்டிய புத்தகங்களை மின்னஞ்சல் செய்து முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.    
மின்னஞ்சல் : discoverybookpalace@gmail.com



சேட்டைக்காரன்,சதீஸ் சங்கவி,மோகன் குமார்,யாமிதாஷா ஆகிய பதிவர்களின் புத்தக வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மட்டும் இன்றி நாட்டியம், இசை, நாடகம் என பதிவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன. 

கோவை ஆவி தானே இயற்றி பாட இருக்கும் பதிவர் கீதம் பற்றி படிக்க/கேட்க இங்கு சொடுக்கவும்.

இதுவரை முகம் காட்டாத, சில முகமுடிப் பதிவர்கள் தம் இயற் பெயரில் வலம் வரப் போவாதாக உளவுத் துறை செய்திகள் வந்துள்ளது. பதிவர்களே உஷார்! முகமுடிகளைக் கிழிக்கும் திறமை உங்களுடையது.
    
வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இந்த செப்டம்பர் ஒன்று அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

இன்னும் மூன்று நாட்களே..... 

Tuesday, August 20, 2013

இரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா (2013) - ஆவலுடன்

முதல் பதிவர் திருவிழா  சிறப்பாக் நடந்த கதைகளை கேள்விபட்டு அந்தப் சமயம் நான் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. இந்த வருடம்  சந்திப்பு நடக்குமா நடக்காத என்ற இழுபறி நிலை இருந்த போது, தமிழ்ப் பதிவுலக தோழமைகள் தந்த உற்சாகத்தில், விழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக உருவாகிக் கொண்டுள்ளது .


இடம் மற்றும் தேதி முடிவாகி வந்த அறிவிப்பில் திருவிழா ஏற்பாடுகளில் முக்கால் வாசி கிணறை தாண்டியாயிற்று. மிதம் உள்ள வேளைகளும் உற்சாகமாக நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

தமிழ் வலைப் பதிவர்களுக்கு என்று ஒரு தளமும் தொடங்கப்பட்டு, பதிவர் திருவிழா பற்றிய செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. 


இருநூறுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் வருதாக எதிர் பார்க்கப் படுகின்றது. எண்ணிக்கை முன்னூறைத் தாண்டினாலும் ஆச்சரியமில்லை. 

சிறுதுளி பெருவெள்ளமாய், பதிவர்களின் நன்கொடைகள் விழா சிறக்க பெரும் உதவியாய் உள்ளது. மேலும் நான்கோடை கொடுக்க விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்கள் கீழே ...இங்கும் சொடுக்கலாம்  ... 

First Name           : Raja (நம்ம அரசனின் இயற்பெயர்)
Last Name           : Sekar
Display Name      : RAJA. S
Account Number : 30694397853
Branch Code        : 006850
CIF No.                : 85462623959
IFS Code             : SBIN0006850
MICR Code         : 600002047
Branch                 : SBI Saligramam Branch
Address               : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact                : 044- 24849775

பணம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்புக்கு: அரசன்(ராஜா)
                                                 கைபேசி எண் - 9952967645

பதிவர் திருவிழாவின் அழைபிதழ் இதோ ...




மேலும் பல புதிய நட்புகள் மலர, செப்டம்பர் ஒன்று வர ஆவலுடன் காத்திருக்கிறேன். 


The Countdown Begins : 11 days to go   

Monday, August 19, 2013

குள்ளன் (சிறுகதை)

*********************************************************************************************************
முக்கிய அறிவிப்பு
*********************************************************************************************************
என் தளத்தில் வெளி வரும் கதைகளில் 'நான்' என்று ஒருமையில் எழுதுவதனால் என்னை இந்தக் கதைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். என் சொந்தக் கதையேனும் லேபெளில் 'அனுபவம்' என்று குறிப்பிடுவேன். 
*********************************************************************************************************

என் பெயர் ராஜா, நானே இதை சொன்னால் தான் உண்டு, என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை அழைக்கும் பெயர் 'குள்ளன்'. சில சமயங்களில் என்னை அறிமுகம் செய்யும் பொழுது 'ஹாய். மை நேம் ஸ் கு...' என்று நா நுனி வரை என் பட்டப் பெயர் வந்து விடும். தாய் தந்தையிடம் இருந்து வந்த ஜீன்கள் விளையாட்டில் என் உயரம் ஐந்து அடிக்கு இரண்டு சென்டி மீட்டர் குறைய 'குள்ளன்' என்ற பட்டம் என்னுடன் ஒட்டிக் கொண்டது. இதுவரை இரண்டு பள்ளிகள், கல்லூரி என்று மாறினாலும், என்னுடைய பட்டப் பெயர் மட்டும் என்றும் மாறியதே இல்லை. 

பள்ளியில் நன்றாகவே படித்தேன், இருப்பினும் கலைக் கல்லூரி சென்று என் வாழ்க்கை பாதை மாறி, படிப்பு என்பது அறவே இன்றி, மது, மது, அரியர், மற்றும் மது என்றே இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. இறுதி செமஸ்டர் செல்லும் பொழுது எனக்கு அரியர் மட்டும் பதினான்கு பேப்பர்கள். என்ன மாயம் என்று தெரியவில்லை அரியர் உள்பட எல்லா பாடத்திலும் தேர்ச்சிபெற்று, கல்லூரியின் சாதனைப் பட்டியலில் என் பெயரை பதியச் செய்தேன். 

மது பற்றி சொன்னேனே, 'மாது இல்லையா?' என்று நீங்கள் கேட்கணும், நம்ம கதையே என் வாழ்வில் நான் தேடிச் சென்ற ஒரு மாது பற்றி தான். என் தந்தைக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை அதிகம், நான் பிறந்தவுடன் என் தாய் இறக்கவே, ஒரு ஜோசியனிடம் என் ஜாதகத்துடன் செல்ல, அவனோ ஒரு பெண்ணால் தான் என் வாழ்வில் மிகப் பெரிய சம்பவம் நிகழும் என்று கூறியுள்ளான். ஆதலால் நான் படித்த இரண்டு பள்ளிகளுமே ஆண்கள் அரசு பள்ளி. விபரம் தெரியாத சிறு வயது, நானும் என் அப்பா சொன்னது போல் பெண்களிடம் பேசாமலே இருந்து விட்டேன். மீசை முடி எட்டிப் பார்க்க, பெண்பால் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றியது. கல்லூரியிலாவது பெண்களுடன் படிப்பேன் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே, அப்பாவின் கட்டாயத்தில் மீண்டும் ஒரு ஆண்கள் கலைக் கல்லூரி. 

எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது, என் விடுதி ஓரறைத்தோழன் ரவி மட்டும் கொஞ்சம் நெருக்கும். அவன் எனக்கு பெண்கள் என்றால் ஒரு காமப் பொருள் போலவே போதித்தான். அவன் இரண்டாம் ஆண்டில் மடிக் கணினி வாங்கி சில கவர்ச்சி புகைப் படங்கள் என துவங்கி, பின் நாளில் நீலப் படங்கள் வரை சென்று விட்டோம். ரவி எனக்கு நேர் எதிரானவன், பள்ளியில் அவன் பெண்களிடம் செய்த அட்டகாசம் தாங்க முடியாமல் தான் ஆண்கள் கல்லூரியில் அவனை சேர்த்துள்ளனர். அவன் சொல்லிய கதைகளில் இருந்து, அவன் பெண்களை இனிப்பு பேச்சால் எளிதில் கவர்ந்து, அவர்களை எந்த ஒரு எல்லைக்கும் கொண்டு செல்லும் மாயக்காரன் என்பது தெரிந்தது. என்ன செய்தாலும் இவனுக்கு அரியர் விழுந்ததே கிடையாது, எப்பொழுதும் ஆல் பாஸ் செய்து விடுவான்.

எனக்கு அரியர் வைத்த வரலாறு இருந்ததால், முன்னணி நிறுவனங்கள் என்னை நிராகரித்து விட்டன. ரவி அந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கவே இல்லை, அவன் எண்ணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கு எப்படியோ ஒரு BPO நிறுவனத்தில் வேலை கிட்டியது. மறுநாள் ரவியும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான், ஆச்சரியத்தில் இருந்த என்னிடம் 'நண்பன்டா' என்று சினிமா வசனம் எல்லாம் கூறினாலும், அவன் செயலில் எதோ உள் நோக்கம் இருப்பதை உணர முடிந்தது. 

பயிற்சியின் பொழுது எங்கள் ட்ரைனர், என்னைப் பெண்களிடம் பேச வைக்க எவ்வளோவோ முயற்சி செய்தும் அவருக்கு தோல்வி தான். பெண்கள் அருகில் சென்றாலே இதயம் துடிக்கும் சத்தம் என் காதில் கேட்கும், உள்ளங்கை வேர்க்கும், வாயில் வார்த்தை வராது. எனக்குள் இருக்கும் இந்த இனம் புரியாத உணர்வு, இதுவரை பெண்கள் வாடையே இல்லாத எனக்கு புதிதாகத் தான் இருந்தது. 

பயிற்சி முடிந்து பிரிக்கப் பட்ட பத்து பேர் கொண்ட எங்கள் அணியில், ரவியும் இருந்தான். இந்த அணியில் நான், ரவி மற்றும் திலீப் என்று மற்றொருவனை தவிர்த்து மீதம் அனைவருமே பெண்கள். ரவி ஆனந்தத்தில் பறந்தான், எனக்கோ தலை சுற்றியது. தினமும் ஒன்பது மணி நேரம் இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமா? . நாள் போக்கில் என்னால் பெண்களிடம் இயல்பாக பேச முடியாது என்று அனைவரும் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். என்னுடைய வேலை தொடர்பான கேள்விகள், மற்றும் என்னிடம் வரவேண்டிய வேலை அனைத்திற்கும் ரவியே தூது. இதனால் எங்கள் அணியில் இருக்கும் ஏழு பெண்களிடமும் ரவிக்கு செல்வாக்கு கூடி இருந்தது. 

ஓர் காலை வேளையில் என் கணினிக்கு அருகில் வந்து, 'டேய் குள்ளா. நீ இப்படியே பொண்ணுங்க கிட்ட பேசாம இருந்த, உன் லைப்ல கல்யாணம் எல்லாம் நடந்தா என்ன பண்ணுவ?' என்றான் ரவி.

'அது எல்லாம் அப்ப பார்துக்களாம். மொதல்ல லைப்ல செட்டில் ஆகணும்' என்றேன் நான். 

'நீ வெயிட் பண்ணிட்டே இருந்தா, பின்னாடி ஒரு பொண்ணும் சிக்காது. இப்பவே புடிச்சா தான் உண்டு. நம்ம கூட தான் ஏழு பேர் இருக்காங்களே அதுல ஒருத்திய ஏன் நீ கரெக்ட் பண்ணக் கூடாது' என்று என்னிடம் கேட்டுக் கொண்டே பக்கத்து அணியில் இருந்த ராமாவிடம் கண்களால் பேசினான். 

'எனக்கு இவங்க மேல இண்டரெஸ்ட் இல்ல. ஆனா பக்கத்து டீம்ல ஆனந்தி இருக்காலே அவ மேல எனக்கு ஒரு இஷ்டம். ஆனா அவ ரொம்ப அடக்கமான பொண்ணு, அவ கிட்ட கூட யாரையும் நெருங்க விட மாட்டேன்கிரா. கல்யாணம் பண்ணா அவள மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணனும்' என்று நான் சொல்லி முடிக்கும் பொழுது அவன் முகத்தில் ஒரு நையாண்டித் தனமான சிரிப்பு தோன்றி மறைந்தது, அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு ஒரு வாரம் கழித்தே புரிந்தது. 

அடுத்த திங்கட் கிழமை அன்று நானும் ரவியும் என் அலுவலகத்தின் ஏழாவது மாடியில் இருக்கும் உணவகத்திற்கு, டீ குடிக்க மின் தூக்கியில் சென்றோம். கதவு திறந்து நாங்கள் வெளியே வரும் போது, அங்கு மின் தூக்கி வர கதவின் அருகே காத்திருந்த ஆனந்தி, ரவியை ஓரக் கண்ணால் உதட்டோரம் வெட்கத்துடன் பார்த்து, மின் தூக்கி உள்ளே சென்று நாணி நகைத்தாள்.

நான் ரவியின் முதுகில் தட்டி 'டேய் ரவி.. என்னடா விஷயம், ஆனந்தி உன்ன பார்த்து வழியரா?' என்று கேட்டேன்.

ரவி தன் மஞ்சள் நிற பற்கள் தெரிய புன்னகைத்து, 'நேத்து ஆனந்தியோட சினிமா போய் இருந்தேன், அங்க பையர் ஆயிடுச்சி அதுதான்' என்று கூறினான்.

ஆச்சரியத்துடன் 'என்னடா சொல்ற, ஆனந்தி நெருப்புனு இல்ல நெனச்சேன்?' என்று சூடான டீயை ஊதிக் கொண்டே கேட்டேன்.

எனது இடது தோள் பட்டையின் மீது அவனது வலது கையை போட்டு 'உஷார் பண்ண ஒரு திறம வேணும் மச்சி. எல்லாப் பொண்ணுங்களுக்கு உள்ளேயும் ஆசை இருக்கும், நம்ம போய் குறிப்பா கேட்கணும். வெளிப்படையா கேட்கறவங்க தான் அடி வாங்கறது. ஓடாது படத்துக்கு கூப்டுட்டு போனேன், அங்க இருந்ததே மொத்தம் நாலு பேரு. அதுவும் ஜோடிங்கதான். கடைசி சீட்ல நாங்க உட்கார்ந்து, நான் என் கைய அவ ...' என்பதற்குள் 'போதும் மேல சொல்லாத' என்று நிறுத்தினேன்.

'இதோ பாருடா, நீ பொண்ணுங்களோட பழகனும்னா மொதல்ல உனக்கு இந்த கூச்சம் போகணும், அதுக்கு ஒரே வழி, அதுதான். இப்ப நான் ஒரு sms அனுப்பறேன் பாரு, அந்த வீட்டுக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபா எடுத்துக் கொண்டு போ, எல்லாம் தெளிஞ்சிடும்' என்று அவன் சொல்லி முடிபப்தற்குள் அந்த குறுந்தகவல் என் கைபேசிக்கு வந்தது.

'அதுக்கு எல்லாம் வேற ஆளப் பாரு' என்று நான் அவனிடம் சொல்லினாலும், என் கை விரல்கள் அந்த குறுந்தகவலை save செய்தன. 

'இப்படியே பெசிட்டு இரு, அந்த ஆனந்தி உன்ன அவ தம்பி மாதிரி இருக்கன்னு சொன்னா...ஹா...ஹா...ஹா...' என்று அவன் கேலி செய்தது, எனக்குள் இருக்கும் வெறியை தூண்டியது. 

அந்த இடத்தில ரவிக்கு கிடைத்த அனுபவம் பற்றி என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறான். 'இப்போதெல்லாம் சிகப்பு விளக்கு பகுதி என்று எதுவும் தனியாக கிடையாது, மக்களோடு மக்களாக யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் தொழில் நடத்துவதே இவர்களின் நவீன யுக்தி. இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டும் தான் இது போன்ற தடையெல்லாம். பல வெளி நாடுகளில் இது சட்டப் படி சுத்தமாக நடக்கும் தொழில், அங்கு பணி புரியும் பெண்கள் மருத்துவ சான்றிதழுடனே வாடிக்கையாளர்களை படுக்கைக்கு அழைத்துச் செல்கின்றனர்' என்பதெல்லாம் ரவி பல முறை எனக்கு போதித்தது. 

நானும் என் கூச்சத்தை துறந்து, அந்த ஆனந்தியை சினிமாவுக்கு அழைத்துச் செல்ல அடுத்த மாத சம்பளம் வர காத்திருந்தேன். சம்பளம் வந்த நாள் மாலை, ரவிக்கு தெரியாமல், அலுவலகம் முடித்து நேராக அந்த விலாசத்தில் இருக்கும் வீட்டை தேடிச் சென்றேன். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஐந்தாவது பேருந்து நிறுத்திற்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கை ஒட்டிய சாலையில் முதல் வலது சந்தில் அந்த வீடு இருந்தது. மூன்று மாடி கொண்ட அந்த குடியிருப்பில், நான் தேடி வந்த வீடு மொட்டை மாடியில் இருந்தது.

படி வழியே ஏறி மேலே சென்ற பொழுது மணி ஒன்பது. வீட்டின் வாசலில் மண் தொட்டிகளில் சில பூச் செடிகள் இருந்தன, கொடியில் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் துணி தொங்கிக் கொண்டிருந்தது. என்னை விட ஒரு அடி உயரம் இருப்பவர்கள் அந்த துணிகளை கலைத்து தான் வாசலுக்கு செல்ல வேண்டும், நானோ கொடிகளுக்கு அடியில் நடந்து வாசலை அடைந்தேன். சன் டீ.வி.யில் 'தென்றல்' சீரியல் ஓடும் சத்தம் கேட்டது, சற்று எக்கி அழைப்பு மணியை அடித்து, காத்திருந்தேன்.

கொலுசு ஒலி கதவை நோக்கி வர, கதவு திறந்து ஒரு பெண் முன்னே நின்றாள். என்னை உடனே உள்ளே வரச் சொன்ன அந்த பெண், நீல நிறத்தில் கருப்பு பார்டர் கொண்ட ஒரு வித ப்ளைன் புடவையுடன் கருப்பு ஜாக்கெட்டும் அணிந்து, அவள் இடுப்பு வரை நீண்ட கூந்தல் பஜாஜ் பேன் காற்றில் பறந்தது. என்னை விட கூடுதல் உயரத்துடன் இருந்தாள். அவள் மேல் ஒரு வித பர்பியும் வாசனை வீசியது. அவள் செய்திருக்கும் ஒப்பனை, அவள் வயதில் சுமார் ஐந்து ஆண்டுகள் குறைத்து, அவளை 27 வயதானவள் போல் காட்டியது.

என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு 'வித்தா வித்தவுட்டா?' என்று கேட்க, ஒன்றும் புரியாமல் நான் 'ழே' என முழிக்க, 'புதுசா' என்று சலிப்புடன் கூறி, படுக்கை அறையை காட்டி 'உள்ளே இரு ரெடி ஆயிட்டு வர்றேன்' என்று தன் கைபேசியுடன் குளியலறையை நோக்கிச் சென்றாள். 'தென்றல்' இறுதிக் காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க, நான் அவள் காட்டிய அறையினுள் சென்று மெத்தையில் அமர்ந்தேன்.

அந்த மெத்தை மேல் ஒரு வித வாடை வீச, முதன் முறை ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கப் போவதை எண்ணி, என் மனம் கனத்தது, உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் உள்ள சுரபிகளில் நீர் தானாக கசிந்தது. தைரியமாக வந்து விட்டாலும், மனதினுள் ஒரு சலனம், 'நோய் ஏதேனும் வந்து விட்டால்?', அந்த நொடியில் தான் என் மனதில் ஆணி அடித்தது போல் உரைத்தது, 'ராஜா நீ அதை வாங்க மறந்துவிட்டாயே' என்று. அவள் குளியலில் நீர் விழும் சத்தம் அந்த அறை வரை கேட்க, 'எப்படியும் அவள் வைத்திருப்பாள்' என்று மனம் சமாதானமானது. 

நீர் விழும் சத்தம் நின்று அவள் கால் கொலுசு என் அறையை நெருங்கும் சத்தம் கேட்க, நான் வாசலையே நோக்கி காத்திருந்தேன். குளித்த ஈரம் வடியாமல், நீளமான ஒரு துண்டை தன் உடலின் மேல் போற்றிய படி வந்தாள். ஊட்டமாக வளர்ந்த புஷ்டியான அவள் உடல் அமைப்பு என்னை ஈர்க்க, அவள் கூந்தலில் இருந்து நீர் தரையில் சொட்ட, என் அருகில் வந்து, என் வயிறு மெத்தையில் படும் படி என்னை படுக்க வைத்து, என் மேல் ஏறி அமர்ந்தவள், என் இரு கைகளையும் பின் நோக்கி இழுத்து கட்டினாள்.

'என்ன செய்கிறாய்?' என்று நான் கேட்பதற்குள், என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அவள் வசம் சென்றது, என் வெள்ளி மோதிரம் விரலில் இல்லாததை உணர்ந்தேன். என் பான்ட் பாக்கெட்டில் இருக்கும் என் வாலெட் வேகமாக உருவப் பட்டது. என்னால் அவளை தள்ளி விட்டு எழுந்தரிக்க முடியவில்லை, என்னை விட அவள் எடை கூட இருப்பாள் போல். ஒரு தடியன் என் முன்னே தோன்றி 'பின் நம்பர்' சொல்லு என்றான், நான் மெளனமாக இருக்க என் கழுத்தில் அவன் கத்தியால் 'l' என்று எழுதினான். ரத்தம் கசிய, வலித்தது. வேறு வழி இன்றி பின் நம்பரை சொல்லி விட, அவன் என் கைகளை கட்டிலோடு கட்டிவிட்டு வெளியே சென்றான்.

தன் கூந்தலை ட்ரையரில் காய வைத்துக் கொண்டே அந்தப் பெண் 'தம்மாத் தூண்டு இருந்துகுனு உனக்கு இந்த சரோசா கேக்குதா குள்ளா' என்று என் வயிற்றில் அவள் காலால் உதைத்தாள். அந்த தடியன் பணத்துடன் வந்து 'ஒன்பது ஆயிரம் தான் தெரிச்சு' என்று அவளிடம் சொன்னான். என் ஒரு மாத சம்பளம் போச்சு.

'அவன் டிரெஸ்ஸ கழுட்டிட்டு, அவன தொரத்திடு' என்று நைட்டியை பனியன் போல் கழுத்து வழி அணிந்து கொண்டே ஆணையிட்டாள் எட்டாக் கனி சரோசா.

'இந்த சின்ன பான்ட வச்சி நம்ம என்ன செய்றது?' என்று ஏளனம் செய்தான் அந்த தடியன்.

'உன் வண்டி தொடைக்க வச்சிக்கோ' என்று புகையிலை கறை அவள் பற்களில் தெரிய சிரித்து 'இவனுக்கு என் துண்டு போதும்' என்று அந்த ஈரத் துண்டை என் மேல் எறிந்தாள். 

அவளை ஒன்றும் செய்ய முடியாத என் இயலாமையை எண்ணி வருந்தினேன். கட்டை அவிழ்த்தவுடன், என் மேல் அந்த துண்டை கட்டிக் கொண்டு, விரைந்து ஓடி அந்த தெரு முனையில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு வந்து நின்று மூச்சு இறைத்தேன். அடுத்த ரயில் வர காத்திருந்தவர்கள் அனைவரின் பார்வையும் என் மேல் பாய்ந்தது. இப்படியே வீடு சென்றால், ரவி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? இந்நிலையில் உண்மையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இந்த விஷயம் திலீப்புக்கு தெரிந்தால் அலுவலகம் முழுக்க பரவி விடும். ஐயோ! என் ஒரு மாத சம்பள பணத்தை இழந்தது கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை, காசுக்காக தன் உடம்பை விற்பவள் கூட என்னை 'குள்ளன்' என்று கேலி செய்து, மேலாடை இன்றி என்னை துண்டுடன் தெருவில் நாய் போல் ஓட விட்டாளே. மானம் போன பின், உயிர் வாழ்வது எதற்கு என்று என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்கையில், ரயில் வரும் ஓசை கேட்டது. 

                             மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார
 உயிர்நீப்பர் மானம் வரின்.

Friday, August 16, 2013

ஊர் சுற்றல் - ஆலம்பரை கோட்டையில் கூட்டாஞ்சோறு

எனது நண்பன் ஒருவன், தன் வாழ்வில் காண வேண்டிய இடங்கள் என்று ஒரு பட்டியல் வைத்திருந்தான். அதில் 'ஆலம்பரா கோட்டை' என்ற பெயரை பார்த்தவுடன் பயங்கர அதிர்ச்சியுடன் 'டேய்! இது எங்க ஊருடா!' என்று பெருமை கொண்டாலும் அருகில் இருக்கும் ஒன்றின் பெருமையை பற்றி அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று ஆதங்கம் கொண்டேன். கோட்டை முற்றிலும் இடிந்து, வெறும் மதில் சுவர் மட்டும் மிஞ்சி இருக்கும் அந்த கோட்டையின் வரலாற்றை அறிய என் ஊரில் பலரை விசாரித்தேன். 


நவாப் தோஸ்த்(Doste) அலி கான் என்பவரின் ஆளுகைக்கு உட்பட்டு, வர்த்தக துறைமுகமாக இருந்த இந்த கோட்டை பின்னர் பிரெஞ்சு கவர்னர் Dupleix நவாபுக்கு செய்த உதவிக்காக அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு, பிரெஞ்சு ஆங்கிலேயரிடம் தோல்வி அடைந்த பின் ஆங்கிலேயரால் இந்த கோட்டை இடிக்கப் பட்டது என்ற செய்தி தான் எனக்கு கிடைத்தது. இது விக்கிபீடியாவில் இருக்கும் அளவு செய்தியே. நமது வரலாறு சிறந்த முறையில் பாரமரிக்கப் படாததுக்கு, இதுவும் ஒரு உதாரணம். 

இந்த கோட்டையின் மத்தியில் ஒரு சமாதி உண்டு, கடலில் கல்லறைப் பெட்டியில் மிதந்து வந்து இங்கு கரை சேர்ந்த ஒரு பெண்ணின் சடலத்தை இங்கு அடக்கம் செய்ததாக என் தாத்தா என்னிடம் சொல்லியதுண்டு. சமீபத்தில் இங்கு நிறைய சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. 'பிதாமகன்' சுடுகாடு காட்சி, மற்றும் 'தீராத விளையாட்டு பிள்ளை' இடைவேளைக்கு முந்தைய காட்சி போன்ற வரலாறு மட்டுமே, உள்ளூர் வாசிகளான எங்களுக்கு பரிட்சயம். 


கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தை கடந்து ஒரு முப்பது நிமிட பயணத்தில் வரும் கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த கோட்டையை அடைய சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு கடற்கரையை நோக்கி செல்ல வேண்டும். அதே கடப்பாக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் வருவது என் கிராமம், சேம்புலிபுரம். எனது கிராமமான சேம்புலிபுரதில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கோட்டையில் தான், என் சிறுவயதில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு, குடும்பத்துடன் வந்து, கடல் உணவுவகைகளை சமைத்து உண்போம். நாங்கள் அப்படிச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது, இன்றோ மாட்டு வண்டிகளும் இல்லை, கூட்டுக் குடும்பமும் இல்லை. 

என் அலுவலக நண்பர்களுடன் ஒரு நாள் பயணமாக ஏன் இங்கு செல்லக் கூடாது என்று என்னுள் எண்ணம் தோன்ற, நாமே அங்கு சென்று சமைக்கலாம் என்று மற்றவர்கள் யோசனை கூற, ஆகஸ்ட் 11 என்று தேதி முடிவானது. கடல் உணவுகள் சமைப்பதை தவிர்த்து, கோழி மட்டும் சமைப்பது என்று முடிவானது. நாட்டுக் கோழி barbeque முறையில் சுட்டு சமைப்பது என்று முடிவு செய்து, முன்தினமே இரண்டு கோழிகளை கொன்று, மஞ்சள் பூசி, தோலுடன் நெருப்பில் சுட்டு, மாசாலா கலவை சேர்த்து, குளிர் சாதனப் பெட்டியில் 10-08-2013 அன்று நள்ளிரவு குடியேறியது.

அடுத்த ஐடெம் சிக்கன் லாலிபாப். இந்த raw லாலிபாப் நான் முதலில் வாங்கியது புதூர் சுகுனா சிக்கன் கடையில் தான், தாம்பரம் வந்த பின் இந்த லாலிபாப் வாங்க பம்மல் வரை சுமார் பதினான்கு கிலோ மீட்டர் சென்று வருவது வழக்கம். அவர்கள் மசாலாவுடன் தந்தாலும், பச்சையாக வாங்கி அதில் நம் கை பக்குவத்துடன் மசாலா சேர்த்து, சமைத்து உண்ணும் சுகமே தனி. ஆனால் அந்த சுகுனா கடைக்கு இம்முறை சென்ற பொழுது அங்கு பச்சை லாலிபாப் விற்பதை நிறுத்திவிட்டதாகச் கூறினர். ஏமாற்றத்துடன் கேம்ப் ரோட் திரும்பி 'Dove White Proteins' என்ற கடையில் தேவையான அளவு ஆர்டர் செய்தேன், மறு நாள் காலை தருவதாக கூறினர். 

பயண நாள் காலை ஆறு மணிக்கு சென்றால், லாலிபாப்பாக மாறாமல், அது wings ஆகவே இருந்தது. நேரமின்மையால் அப்படியே வாங்கிக்கொண்டு, பத்து பேர் கொண்ட எங்கள் குழுவின் பயணம் துவங்கியது. நேராக என் கிராமத்துக்குச் சென்று காலை உணவை முடித்து விட்டு, தேவையான பாத்திரங்கள், மற்றும் விறகுகளை எடுத்துக் கொண்டு ஆலம்பரை கோட்டையை நோக்கிச் சென்றோம். சீருந்து போகும் தூரம் வரை சென்று, பின்னர் நடந்து கோட்டையை கடந்து, சமைக்க இடம் தேடி, கோட்டையின் தெற்கே சென்றோம்.



சவுக்கு மர நிழல்களுக்கு நடுவில் அருமையான இடம் கிடைக்க, மூன்று அடுப்புகள் அமைத்து, எங்கள் வேலைகளைத் துவங்கினோம். ஒரு அடுப்பில் சாதம் தயாராக, மற்ற அடுப்பில் நாட்டுக் கோழி சுட ஆரம்பித்தோம். வெறும் குச்சிகளை மட்டுமே வைத்து சுடுவதில் சற்று சிரமம் இருக்க, கம்பி போல் இரும்பில் ஏதாவது வாங்க ஊருக்குள் இருவர் மட்டும் சென்றோம். தோட்டத்திற்கு வேலி அமைக்கும் வலைக் கம்பியில் அரை அடி மட்டும் வட இந்திய சேட்டுடன் போராடி வாங்கி, அதை வைத்து அடுப்பை மூடி, அந்த வலையின் மேல் கோழியை வைத்து நெருப்பில் சுட்டு, சுட சுட இரண்டு கோழிகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. கோழியை நெருப்பில் சுட்டு உண்பது இதுவே முதல் முறை என்றாலும் அந்த சுவையை இப்பொழுது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது.

 எங்கள் Barbeque அடுப்பு 
ஒருவர் மட்டும் சைவம் என்பதால், முதலில் எலுமிச்சை ரசம் தயாரானது. அதன் பின், அதே கடாயில் மசாலா கலந்த சிக்கன் விங்க்ஸ் எண்ணையில் பொறிக்கப் பட்டது. உணவு சாப்பிடும் போது, இது மட்டுமாவது இருக்க வேண்டும் என்பதனால், இதை நாங்கள் உடனுக்குடன் சாப்பிடவில்லை. மீதம் இருந்த மசாலா மற்றும் ரெண்டு துண்டு நாட்டு கோழி வைத்து ஒரு குழம்பு செய்தோம், அதே கடாயில் முட்டை பொறியில் செய்து, இரண்டு மணிக்கு எங்கள் சமையல் முடிந்தது.


நாட்டுக் கோழி குழம்பு + சிக்கன் விங்க்ஸ் 
வங்கக்கரை ஓரம், உப்பு காற்று வீச, சவுக்கு மர நிழலில், மெத்தை போன்ற சுகம் தரும் கடல் மணலில்,கும்பலாக அமர்ந்து ஒரு பாத்திரத்தில் அனைவரும் உண்டு சுவைத்தோம். நாட்டுக் கோழி குழம்பு,எலுமிச்சை ரசம், முட்டை பொறியல், சிக்கன் விங்க்ஸ், தயிர், வடித்த சாதம் இவைகளுடன் முன்பு காலியான barbeque சிக்கன். எல்லா உணவு வகைகளும் சுவையாக தயாரானதில் எங்களுக்கே ஆச்சரியம் தான். நாட்டுக் கோழி சூட்டைத் தணிக்க, தயிர் உண்டு, மீதம் இருந்த ரசத்தை குடித்து எங்கள் மத்திய உணவு இனிதே முடிந்தது.

அமைதியான கழிவெளி 
கோட்டைக்கு அருகில் இருக்கும் கழிவெளி (backwaters) அரை அடி ஆழம் மட்டுமே, அந்த நீரில் ஒரு நடைப் போட்டு, ஆழமான பகுதி வரை சென்றோம். அந்த ஆழமான பகுதிக்கும் கடலுக்கும் இடையில் ஒரு சின்னத் தீவு போல் மணல் பரப்பு அமைந்திருக்கும் காட்சி நம் மனதை கொள்ளை கொள்ளும் (பதிவின் முதல் இரண்டு படங்கள் ). அங்கு இருக்கும் மீனவர்களிடம் காசு கொடுத்தால், அவர்கள் படகில் நம்மை அங்கு கொண்டு செல்கின்றனர். பின்னர் வந்த வழியே திரும்பி, பழைய ஊர் வழி சென்று கடற்கரையில் குளித்து, அந்த ஈரத்துடன் வீடு திரும்பினோம். 

அந்த அப்பாவி குட்டிப்  பையன் நான்தானுங்க 

'என்னடா! எதோ கோட்டையை பற்றி எழுதியிருக்கான் ஆனா கோட்டையை ஒரு படத்தில் கூட காணவில்லையே' என்று தேடுபவர்களுக்கு, ஆலம்பரை கோட்டை அனுபவத்தை பற்றி, படங்களுடன், கோவை நேரம் எழுதிய பதிவு : ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம்

Friday, August 9, 2013

சாப்பாட்டு ராமன் - திருவான்மியூர் RTO பார்க் (ரோட்டோர உணவுகள்)

திருவான்மியூர் RTO ஆபீஸுக்கு அருகில் இருக்கும் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ள சாலையில், வித விதமான ரோட்டோர உணவுகள் கிடைக்கும் என்பதை அங்கு தங்கி இருக்கும் நண்பர்கள் மூலம் அறிந்த நாளில் இருந்தே அந்த ரோட்டோரக் கடைகளுக்கு செல்ல வேண்டும் என்பது ராமனின் நெடு நாள் அவா. இந்நிலையில் அங்கு ட்ரீட் தருவதாக ஒரு அழைப்பு வந்ததால், மறுக்க முடியுமா? முடியாது. பல அலுவல்களுக்கும் இடையில் அங்கு சென்றான் நமது ராமன்.

மற்றவர்கள் வரும் முன் அந்த சாலையை அலசி எல்லாக் கடைகளையும் நோட்டம் விட்டு குறிபெடுத்துக் கொண்டான். எட்டு பேர் கொண்ட (அவன் அடங்கிய) அந்த குழு முதலில் சென்ற இடம் 'பிஸ்மில்லா சிக்கன் பகோடா கடை'. நூறு கிராம் சிக்கன் பகோடா 33 ரூபாய், 150 கிராம் 50 ரூபாய், 250 கிராம் 80 ரூபாய் என்று எழுதி இருந்த விலைப் பட்டியலும் எண்ணையில் வறுபடும் சிக்கனும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தன. 

வாழ்வில் முதன் முறையாக முக்கால் கிலோ சிக்கன் பகோடா வாங்கி, அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து, அந்த சிக்கன் சூட்டில் வதங்கிய பச்சை வெங்காயத்துடன், ஆவி பறக்க வாயில் செலுத்தி, அடுத்தவர் கை தட்டிற்கு வரும் முன் வேகமாக சாப்பிட வேண்டிய கட்டாயம். மீண்டும் ஒரு கால் கிலோ வாங்கி, அடித்து பிடித்து உண்டு, மொத்தம் ஒரு கிலோவுக்கு பில் தொகை 320 ரூபாய் செலுத்திவிட்டு அடுத்த கடையைத் தேடிச் சென்றோம்.

சிக்கன் சூட்டை தணிக்க, பாணி பூரி உண்ண சென்றோம். பாக்கு மட்டையில் செய்த தொண்னையில், மசாலா உடன் கலந்த உருளை கிழங்கை, கட்டை விரலால் உடைத்த சிறிய பூரியினுள் வைத்து, தண்ணீர் ஒழுகும் முன், அதனை வாயினுள் விழுங்குவதே ஒரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. 

மற்ற ஊர் உணவுகளை உண்டாலும், கையேந்தி பவன் என்றாலே நம்ம ஊர் உணவுகள் தானே. அதற்கும் அங்கு கடையுண்டு. உருளை, வெங்காயம், மிளகாய், வாழக்காய் பஜ்ஜி வகைகளுடன், சுண்டலும் சூடாக கிடைக்கிறது. இந்த பஜ்ஜி கடை அந்த பூங்காவில் இருந்து தள்ளி, சற்று தூரத்தில் IOB பேங்க் எதிரில் இருந்தது. இங்கு சுண்டல் கொதிக்கும் குழம்பில், போண்டாவையும் வேகவைத்து,சாம்பார் வடை போல் சுண்டல் போண்டா என்று ஒன்று தருகிரார்கள்.

இப்படி ஸ்டார்டர்ஸ்சை முடித்து விட்டு டிபன் கடையை நோக்கி சென்றோம். டிபன் கடை பூங்கா அருகிலேயே இருந்தது. பிளாஸ்டிக் தட்டு என்றாலும், அந்த தட்டில் வட்ட வடிவில் வெட்டப் பட்ட வாழை இலையுடன் உணவை தந்தது சிறப்பு. இடியாப்பத்தில் தொடங்கி, 'நைஸ்' தோசை, முட்டை தோசை, பரோட்டா என பதம் பார்த்து, கலக்கி, ஹாப் பாயிலுடன் முடிந்த எங்கள் உணவு வேட்டையின் பில் தொகையோ வெறும் 267 ரூபாய். நாவிற்கு நல்ல சுவை வயிற்றின் எடையை கூட்டினாலும், பணப் பையின் எடை கம்மியாகவே குறைந்தது.

அடுத்து ஒரு சிக்கன் ப்ரைட் ரைஸ் வாங்கி வயிற்றில் இடம் பாக்கி இருதவர்கள் மட்டும் அதை உண்டு, வயிற்றை நிரப்பினோம். அங்கு அருகில் இருந்த ஆவின் பூத்தில் நன்கு குளிர்ந்த பாதாம் பால் மற்றும் ரோஸ் மில்க் பருகி அன்றைய இரவு உணவு இனிதே நிறைவடைந்தது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு முறை அந்தப் பக்கம் சென்று வாருங்களேன்.  

Monday, August 5, 2013

After Hours - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

என்னைக் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவரான Martin Scorseseயின் படங்களை தேடித் பிடித்து பார்த்த பொழுது தான் கண்ணில் சிக்கியது இந்த படம். ஏழு முறை சிறந்து இயக்குனருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இவரின் பல படங்களை நீங்கள் பார்த்து இருந்தாலும், பெரிதும் பேசப் படாத இந்த After Hours படத்தை பார்த்திருப்பது சற்று கடினமே.

படத்தின் முன்னோட்டம் : 

(முதலில் play பொத்தானை கிளிக் செய்து பின் pause செய்து மேலே படிக்கவும்)


கதை சுருக்கம் :

பால்(Paul) என்ற ஒரு கணினி நிறுவன ஊழியன், ஒரு மாலை தன் வீடு திரும்பும் பொழுது ஒரு உணவகத்தில் மார்சி(Marcy) என்ற பெண்ணை சந்திக்கிறான். இருவருக்கும் ஒரு புத்தகத்தின் மேல் நாட்டம் இருக்க, அதை பற்றி அவர்கள் பேச, மார்சி விடை பெற்று செல்லும் முன் தன் தொலைபேசி எண்ணை பாலிடம் கூறிச் செல்கிறாள். 


தன் வீடு சென்று அந்த எண்ணுக்கு பால் அழைக்க, மார்சி அவனை அவள் தங்கியிருக்கும் தோழியின் இல்லத்திற்கு வருமாறு அழைக்க, அவனும் இருபது டாலர்களுடன், ஒரு டாக்ஸி பிடிக்க, அந்த டாலர் நோட்டு காற்றில் பறக்க, வேறு பணம் ஏதும் இன்றி அவன் தவிக்க, அன்றைய இரவின் அவன் இன்னல்கள் தொடங்குகின்றன. இப்படி ஒரு இரவு முழுக்க அடுத்து அடுத்து அவன் சந்திக்கும் சிக்கல்களே மீதி கதை.

படத்தில் நான் ரசித்தவை :

ஓர் இரவில் நாயகனுக்கு இன்னல்கள் நடக்கும் வண்ணம் கதை படமாக்கப் பட்டுள்ளது முதல் சிறப்பு. படம் முழுக்க இரவில் எடுக்கப் பட்டக் காட்சிகளே இருக்கும். 

மார்சி வீடு சென்ற பால், சில குறிப்புகள் மூலம், மார்சிக்கு எதோ ஒரு பயங்கரத் தீக்காயம் இருக்குமோ என்று எண்ணும் நிமிடங்கள், அந்த காயங்களைக் கண்டது போல் நம்மையும் ஒரு கணம் கண் மூட வைத்து விடும்.
    
நல்லிரவில் ரயில் கட்டணம் உயர, ஒரு டாலருக்கு குறைவான பணமே அவனிடம் இருக்க, வீடு திரும்ப முடியாமல் ரயில் நிலையத்தில் அவன் தவிக்கும் காட்சிகள் மிகவும்  இயல்பாக இருக்கும்.


அவன் அந்த இரவில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் முதலில் அவனுக்கு உதவினாலும், ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் அவன் எதிரி ஆகிவிடுகிறான். 

படம் தொடங்குவது அவன் அலுவலகத்தில், கடும் போராட்டங்களுக்கு பின், அவனது காலை விடியும் பொழுது, அதே அலுவலகத்தின் வாசலில் அவன் இருப்பபான்.

படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு ஓட்டம் இருக்க, எந்த நிமிடமும் நமக்கு விறு விறுப்பு குறையாது. 

எதார்த்த சினிமா என்ற பட்டியலில் என்றுமே இந்த படத்தை நான் பரிந்துரைப்பேன்.

முக்கிய எச்சரிக்கை: ஆங்கில படத்திற்கே உரிதான சில ஆபாச காட்சிகள், இரண்டு இடங்களில் இந்த படத்தில் வரும். பார்த்துவிட்டு என்னை அடிக்க தேடக் கூடாது.

 (இப்பொழுது மேலே pause  செய்த முன்னோட்டத்தை play செய்யவும்)

*******************************************************************************************************
ஆண்டு                        : 1985
மொழி                          : ஆங்கிலம்
என் மதிப்பீடு             : 4.4/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

Friday, August 2, 2013

முதல் பதிவின் சந்தோசம் - தொடர் பதிவு

முன்னுரை 

சமீபத்தில் 'எனது முதல் கணினி அனுபவம்' என்று ராஜி அக்கா தொடங்கிய தொடர் அலையில் திண்டுக்கல் தனபாலன் மூழ்கிய பின், அவரிடம் இருந்து 'முதல் பதிவின் சந்தோசம்' என்று பெயர் மாறி, அந்த அலை ராஜி அக்காவை தாக்கி, அவர் அந்த அலையை என் மீது திருப்ப, நான் எழுதும் பதிவு இது.

பொருளுரை 

அலுவலகத்தில் அறிமுகமான சீனு, தமிழில் எழுதுவது அறிந்து, முகநூலில் அவர் தோழமை பெற்றேன், முகநூல் வழியாக 'திடங்கொண்டு போராடு' அறிமுகம் கிடைத்தது, அவர் எழுதிய  தனுஷ்கோடி அழிந்தும் அழியாமலும் என்னை மிகவும் கவர்ந்தது. எப்படி தமிழில் டைப் செய்வது என்று கேட்டு அறிந்தேன். அன்று தான், தட்டச்சு இருந்தால் மட்டுமே எழுத முடியும் என்ற என் எண்ணம் மாறியது.

ஜனவரியில் ஒரு நாள் புத்தகக் கண்காட்சிக்கு சீனு என்னை அழைத்துச் செல்ல, அங்கு விகடன் 'வட்டியும் முதலும்' புகழ் ராஜீவ் முருகன் சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார். அவர் 'கதைக்கு எங்கும் தேடிச் செல்ல வேண்டாம், சுற்றி உள்ள மக்களைப் படித்தால் போதும்' என்று சொன்னார். அது என் மனதில் எதோ செய்தது. ஏன் நம்மளும் ஒரு கதை எழுதக் கூடாது என்று யோசித்து, கூகுள் தந்த விலையில்லா தளத்தில் 'கனவு மெய்ப்பட' என்று பெயர் சூட்டி உருவானது என் தளம். என்ன கதை எழுதலாம் என்று யோசித்த பொழுது தான், உடன் பணி புரிந்த லலிதா அக்கா சொல்லிய அவர் தம்பியின் கதை நினைவில் வர, அதை பட்டி பார்த்து, 'தொ(ல்)லைபேசி' என்ற தலைப்புடன் என் முதல் கதையாக ஜனவரி 28-2013 அன்று வெளியானது. 

என் முகநூலில் 'நான் எழுதும் முதல் கதை' என்று அந்த லிங்கை பகிர்ந்து பொழுது,எனக்குள் எதோ ஒன்று பெரிதாய் சாதித்த மகிழ்ச்சி தோன்றியது. எனக்கு தெரிந்த அனைவரையும் படிக்கச் சொல்லி தொல்லை  செய்தேன், ஒரு சிலர் லைக் கொடுத்தனர். திடீரென்று அடுத்த நாள் நிறைய கருத்துரைகள் வந்து என் moderationனுக்காக காத்திருந்தன. அதுவரை என் வாழ்வில் அறியாத பெயர்கள், யார் இவர்கள் என்று ஒரே குழப்பம். 

(நண்பர்) ஹாரி என்பவரிடம் இருந்து 'please add follower widget in your blog ' என்பது தான் எனக்கு கிடைத்த முதல் கருத்துரை. பின் பழனி கந்தசாமி, பால கணேஷ், ஞானம் சேகர், ரஞ்சனி நாராயணன், சசிகலா, உஷா அன்பரசு, ரூபன், ராஜராஜேஸ்வரி இவர்கள் அனைவரும் 31ஆம் தேதி கருத்துரையிட்டவர்கள். சுரேஷ் மற்றும் வெங்கட் நாகராஜ் பிப்ரவரி ஒன்றாம் தேதி கருத்துரையிட்டனர். இவர்களுக்கு நான் எழுதியது எப்படி தெரியும் என்று என்னுள் தோன்றிய கேள்விக்கு ஒரு பின்னூட்டில் விடை இருந்தது.
  
'Comment moderation, word verification' அவற்றை பற்றி திண்டுக்கல் தனபாலன் சில கருத்துக்கள் சொல்லி இருந்தார்.

 பிழைகளை திருத்த சொல்லியும் கருத்துரையிட்டிருந்தனர். நாம் எழுதுவதில் இருக்கும் பிழை ஏனோ நம் கண்ணில் தெரிவதில்லை. லலிதா அக்கா தான் அவற்றை திருத்த எனக்கு உதவினார். ஏழு ஆண்டுகள் கழித்து தமிழில் எழுத நான் எடுத்த முயற்சி, நிறையவே பிழைகள் இருந்தன. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன, கொட்டு வாங்கியே திருத்தி வருகிறேன்.  

பலர் நல்ல தொடக்கம் தொடருங்கள் என்று வாழ்த்தி இருந்தனர். என்னை மிகவும் கவர்ந்த பின்னூட்டு என்றால், அது ரஞ்சனி அம்மா எழுதியது தான். அவர்களின் பின்னூட்டு அடங்கிய படம் கீழே. 

   

புகழ் போதையில் 'வலைச்சரம்' என்ற வார்த்தை என் கண்ணுக்கு தெரியவில்லை. முதல் முறை என் முயற்சியை பலரும் பாராட்டியதில், பர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் போது கிடைத்த சந்தோசம் எனக்கு மீண்டும் கிடைத்தது.

எப்படி இவர்கள் வந்தார்கள் என்று சொல்லலாமலே மொக்கை போடுகிறான் என்று திட்டரிங்களா? (நோ நோ! ரூபக் பாவம்.) மீண்டும் மறுநாள் படிக்கும் பொழுது தான், ராஜராஜேஸ்வரி அவர்கள்  'வலைச்சர அறிமுகத்திற்கும் அருமையான கதைக்கும் வாழ்த்துகள்.'என்று எழுதியது மனதை உறுத்தியது. என்னய்யா இது வலைச்சரம் ? ஒன்றும் புரியவில்லை.

எனக்கு தெரிந்து, பதிவுலகில் அனுபவம் உள்ள  சீனுவை அழைத்தேன், பின்பு தான் உண்மை விளங்கியது. அந்த வாரம் அவர் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தமையால் என்னை அறிமுகம் செய்துள்ளார் என்று. 

முடிவுரை 

இந்த அனுபவத்தை பகிர அழைத்த ராஜி அக்காவிற்கு நன்றி சொல்லி, மேலும் இந்த அலையில் இருந்து என்னை மீட்டு, ஐந்து திசைகளில் அலைகளை திருப்ப நான் அழைக்கும் ஐவர்,  

ஹாரி  -  IDEAS OF ஹாரி
அரசன் -  கரைசேரா அலை
ஜீவன்சுப்பு - வண்ணத்துப்பூச்சி
ஸ்கூல் பையன் - ஸ்கூல் பையன்