Thursday, October 31, 2013

தேன் மிட்டாய் - அக்டோபர் 2013

T151உம் நானும் 

இம்மாதம் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பொழுது, மூன்று நாள் hat-trick சாதனையாக T151 கிடைத்ததைவிட, மகிழ்ச்சிக்குரிய விசயம் அந்தப் பேருந்தில் இடம் கிடைத்தது தான். அப்படி நான் பேருந்தில் அமர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு லாவகரமான சிந்தனை தோன்றியது. சென்னை மாநகரப் பேருந்துகளில் வலது புறம் ஆண்கள், இடது புறம் மற்றும் இறுதியாக இருக்கும் ஒரு வரிசை பெண்களுக்கு ஒதுக்கப் பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால், குழாய் அடி சண்டை போட ஒரு கூட்டமே உள்ளது, பல முறை நானும் பாதிக்கப் பட்டுள்ளேன். நான் இருந்த பேருந்தில் வலது புறம் ஒன்பது இருக்கைகள் (கை விட்டு எண்ணினேன்) பெண்களால் ஆக்ரமிக்கப் பட்டிருந்தது. பேருந்து முழுக்க ஆண்கள் கூட்டம் நின்று கொண்டிருந்த பொழுதும் ஒருவர் கூட அவர்களை எழுப்ப வில்லை. ஆண்கள் எவளோ சாதுக்கள் !    

T251 - புதிதாய் 

இது என் அலுவலகத்தில் இருந்து என் வீடு வரை செல்லும் புதிய நேர் பேருந்து. இந்த பேருந்து OMRஇல் செல்லாமல், ஊர் வழியே சித்தாலப்பாக்கம், மாடம்பக்கம் வழியாக தாம்பரம் அடைகிறது.ஒன்பது ரூபாய் பயணச்சீட்டில்,சென்னையின் புறநகரில் ஒழிந்து இருக்கும் கிராமங்களைக் காணும் காட்சி இந்த வழியில் செல்லும் பொழுது கிடைத்தது.     

சாவித்திரி படும் பாடு 

என் தோழி ஒருவர் முகநூலில் பகிர்ந்த ஸ்டேடஸ்:

Men identify only two types of women : the Satya savitri and the Slutty savitri ....But what if u were neither? ?? 
Live happily unnoticed 

Toni & Guy 

முன் ஒரு காலத்தில் முடி திருத்தும் தொழிலில் இருப்பவர்கள் தாழ்வாகவே நடத்தப் பட்டனர். புது யுக மாடர்ன் சலூன்களால் இன்றைய நிலையே வேறு. இங்கிலாந்தின் பிரபல முடி திருத்தும் நிலையமான Toni & Guy சென்னையிலும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு முடி திருத்துவதற்கான விலை, நமது முடியை வெட்டுபவரின் அனுபவத்தை பொருத்து உயரும் ஆச்சரியத்தைக் கண்டேன். ஆண்களுக்கு 400 ரூபாய் முடிதிருத்த கட்டணம் என்று Stylistஇல் துவங்கி Senior Stylist, Style Director, Manager என படிப் படியாக உயர்ந்து ஆயிரம் ரூபாயை தொட்டுவிடுகிறது.

IIT - Chennai

சென்னை வந்திருந்த ஆவியின் உதவியால் முதல் முறை IITயினுள் செல்ல முடிந்தது. சென்னையின் மையப் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டுக்கு உள்ளே ஒரு கல்லூரியும் பல ஆயிரம் மக்களும் வாழ்வது கண்டேன். கல்கியின் கதைகளில் மான்கள் மனிதர்களுடன் உலவுவது போல், இங்கு மான்கள் மிகவும் இயல்பாக வீதிகளில் துள்ளி விளையாடுகின்றன.


கைபேசி 

திடீரென்று கைபேசி வேலை செய்யாமல் போன பொழுது, உலகமே இருண்டது போல் ஆனது. அந்தக் கணம் தான் நாம் கைபேசியிடம் எவ்வளவு அடிமைத்தனமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன் கைபேசி இல்லாத பொழுது, சொன்ன இடத்தில சொல்லிய நேரத்தில் நண்பர்களை சந்திப்பது நினைவுக்கு வந்தது, கைபேசி வந்த பின் தான் மனிதர்கள் அசாதாரணமாக நேரம் தவற தொடங்கினரோ என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது.

நான் ரசித்த வசனம் - மூடர் கூடம் 

நூறு மாம்பழம் இருக்கற ஒரு மாமரத்துக்கு கீழ நூறு பேர்பசியோட நின்னாங்கன்னா, அங்க ஆளுக்கு ஒரு பழம் சேரனும்கிறது இயற்கையோட தர்மம்.

ஆனா அந்த நூறு பேர்ல உங்கள மாதிரி திறமையும் பலமும் அதிகமா இருக்கற அஞ்சு பேர், மத்தவங்களவிட ஆளுக்கு அதிகமா அஞ்சு பழம் எடுத்துட்டாங்கன்னா

இருபது பேர் ஒரு பழம் கூட கிடைக்காம பசியில வாடி   வேற வழியே இல்லாம அதிகமா பழம் வச்சிருக்க  அஞ்சு பேர் கிட்ட  பிட்சை கேட்டு நிப்பாங்க.

இப்ப அந்த அதிகமா பழம் வச்சிருக்கவன், இந்த ஒன்னுமே இல்லாதவங்கள வச்சி அஞ்சி மாமரம் நட்டு, ஒவ்வொரு மரத்துல இருந்தும் நூறு நூறு பழங்கல பறிக்க வச்சி

அவங்களுக்கு சம்பளங்கர பேர்ல அவங்க எடுத்து கொடுத்த நூறு பழத்துல இருந்து ஒரு பழத்தை கூலியா எடுத்து கொடுப்பான்.

இதுதான் இங்க நடக்குறது. ஒருத்தன் கிட்ட இருந்து எடுக்கறது மட்டும் திருட்டு தனம் இல்ல, ஒருத்தன எடுக்க விடாம பண்றதும் திருட்டுத்தனம்.      

காணொளி 
சமீபத்தில் நான் கண்டு ரசித்த இரண்டு குறும்படங்களின் இணைப்பை இங்கு பகிர்கிறேன். 


புதியவன் - comedy drama

சல்வார் கமீஸ் vs சுடிதார் 

பல ஆண்டுகளாக சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் இரண்டுமே ஒன்று என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில் தான் தெளிவு கிடைத்தது. என்னைப் போல் அனைவருக்கும் தெளிவு கிடைக்க அந்தத் தகவல்களை இங்கு பகிர்கிறேன்.


சல்வார் கமீஸ்: துப்பட்டா, கமீஸ்(மேலாடை), லூசான காற்சட்டை (சல்வார்) இந்த கலவை தான் சல்வார் கமீஸ்.        

சுடிதார்: இறுக்கமான காற்சட்டையுடன் அணிவது தான் சுடிதார். நீளமான காற்சட்டை இறுதியில் சுறுண்டு, சுடி(ஹிந்தி - வளையல்) போல் இருப்பதால் இந்தப் பெயராம்.

தெளிவு வேண்டும் 

ஔவையார் சொன்னார்: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கண்ணதாசன் கேட்கிறார்: என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் ?

யாரைத்தான் பின் பற்றுவது ? குழப்புறாங்க!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

உங்களுக்கு யாரேனும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பொழுது 'Thank you. wish you the same' என்று மறுமொழி சொல்லியதுண்டா?. இந்த 29ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று இருவரிடம் நான் அப்படி மறுமொழி சொல்லியது என் வாழ்வில் ஒரு இனிமையான அனுபவம்.  

Monday, October 28, 2013

நித்ரா - 2. கடைக் கண்

முந்தைய பதிவுகளுக்கு 
...................................................................................................................................................................
இதுவரை

'வாட் தி ஹெல் ஸ் யுவர் ப்ராப்லெம்?' என்று தன் காலால் முன் டயரை உதைக்க, அவள் உடல் சற்று குளுங்கியது.

முதல் முறை அவள் அவனை நேராக பார்த்தாள், அவள் மெல்லிய உதடுகள் அசைய அவனை நோக்கி அவள் சொல்லியது அவனுக்கு முதலில் சரி வர உரைக்கவில்லை.

பின், அவன் மூளை அவள் சொல்லியதை மீண்டும் அசைப்போட்டது..... 

'AIDS' 
...................................................................................................................................................................

இனி 

'ஒ மை கார்ட்' என்று தன்னுள் சொல்லிக் கொண்டான் பாஸ்கர். அவனது கோபம் பரிதாபமாக மாறியது. 

ஆனால் அவள் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை, பல முறை பலரால் காயப்பட்டு அவளின் உணர்சிகள் செயல் இழந்துபோன உச்சக்கட்டம். பொம்மை போல் அமர்ந்திருந்தாள். அவன் தன் பியஸ்டாவில் அவளை அமரவைத்து, அந்த ஆல்டோவை tow செய்து கொண்டு, புறப்பட்டான். அவள் நோயால் பாஸ்கருக்கு ஒரு லாபம் உண்டு என்பது நித்ராவுக்கு தெரியாது. 

'நீங்க சாகனும்னு நினைக்கற அளவுக்கு இது ஒன்னும் கொடிய நோய் இல்ல.' என்று பாஸ்கர் அவளிடம் உரையாடலை தொடங்க முயற்சித்தான்.

அவளிடம் இருந்து வழக்கமான மௌனம்... 

'முழுமையா குனப்படுத்த முடியாட்டியும் உங்க ஆயுளை அதிகரிக்க முடியும்' என்று சொல்லி அவளைப் பார்த்தான், அதே மௌனம். 

'மிஸ் நித்ரா. உங்கள இந்த நிலையில தனியா விட்டுப் போக எனக்கு விருப்பம் இல்ல. உங்களோட பிரச்சனைய நீங்க சொல்லாட்டி, நான் உங்கள போலீஸ் கிட்ட தான் ஹான்ட் ஓவர் பண்ணனும்' என்று சொல்லி வண்டியை நிறுத்தினான். 

'எனக்கு தேவை மரணம்' என்று இயந்திரம் போல கூறினாள். 

வண்டியை பாலத்தில் இருந்து இறக்கி, அம்பத்தூர் நகராட்சிக்கு அருகில் இருக்கும், மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த மகளிர் இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைச் சொல்லி, அந்த RC புக்கை கொடுத்து, நித்ராவையும் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினான். நித்ராவின் உணர்ச்சி அற்ற முகம் அவன் நித்திரையை கெடுத்தது. காலை முதல் வேலையாக காவல் நிலையம் சென்று அவளை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான் பாஸ்கர். 

Image Courtesy - Google

'அந்தம்மா 'நித்ரா enterprises' ராம்நாத்தோட பொண்ணு. அவங்க கம்பெனி மேனேஜர் வந்து அவங்கள அழைசிக்குனு போய்டாங்க..' என்று அவனை கிளம்ப சொல்லாமல் சொன்னாள் அந்த ஏட்டு.

'அவங்க அட்ரெஸ் கிடைக்குமா?' என்று பாஸ்கர் ஏக்கத்துடன் கேட்டான். 'அண்ணா நகர்ல எங்கயோ. அந்த ரெஜிஸ்டர்ல இருக்கும் பாரு' .

அவன் அந்த முகவரியை தன் கை பேசியில் குறித்துக் கொண்டு புறப்பட ' மிஸ்டர் அந்தம்மா hand bag விட்டுட்டு போய்டாங்க.' என்றாள் அந்த பெண் போலீஸ்.

அந்த பச்சை நிற hand bag உடன் வந்து தன் சீருந்தில் அமர்ந்தான். அதை பிரித்து உள்ளே ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று அவனுள் ஒரு இச்சை தோன்றினாலும், அது ஒரு பெண்ணுடையது என்ற தயக்கம் அவனை தடுத்தது. அவனுடைய தேடல் அவன் தயக்கத்தை வெல்ல, அந்த பையை திறந்தான். இட்லியும் பொடியும் கிடைத்தால் போதும் என்று இருந்தவனுக்கு, ஓசியில் சரவணபவன் பூரி மசாலா கிடைத்தது போல், நித்ரா பையினுள் அவள் கைபேசி இருந்தது. ஆனால், அந்த கைபேசி உயிர் இன்றி செத்துக் கிடந்தது. தன் சீருந்தில் இருந்த charger வழியே அதற்கு உயிர் ஊட்டினான். 

உயிர் பெற்றவுடன் அதன் திரையில் தோன்றியது ஒன்பது புள்ளிகள், மறந்து போன எட்டு புள்ளிக் கோலங்கள், மீதம் இருப்பது ஸ்மார்ட் போனில் தான் என்று எண்ணி புன்னகைத்தான். அந்த புள்ளிகளை சரியான வடிவமாக மாற்றினால் தான் உள்ளே செல்ல முடியும் என்று சொல்லியது. ஒரு நொடி கூட யோசிக்காமல் ஏழு புள்ளிகளை ஆங்கில இசட்(Z) வடிவில் இணைத்தவுடன், அவனுக்கு அனுமதி கிடைத்தது. இருப்பினும் முக்கியமான தகவல்கள் அனைத்திற்கும் கடவுச் சொல் போட்டு பூட்டி வைக்கப் பட்டிருந்தது அவனுக்கு ஏமாற்றமே. அவனால் கால் ஹிஸ்டரி மற்றும் பார்க்க முடிந்தது. 

அதில் நேற்று அதிமாக கால் செய்யப் பட்டது மூன்று எண்களுக்கு.
  1. Hubby
  2. Dad
  3. Swetha
Hubby '44' என தொடங்க, அவள் கணவன் UKவில் இருக்கிறான் என்றும், Dad '49' என தொடங்க அவள் தந்தை ஜெர்மனியில் இருக்கிறார் என்றும் யூகித்தான். ஸ்வேதாவின் எண் சென்னை சேர்ந்தது என்பதால் அதை குறித்துக் கொண்டான். 

அவன் அந்த முகவரிக்கு சென்று, இரண்டாவது மாடியில் இருந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்து காத்திருந்தான். இரண்டாவது முறையும் அடித்தான், எந்த சத்தமும் இல்லை. கதவை தட்டலாம் என்று தொட்டவுடன் அது திறந்துக் கொண்டது. மழை காலத்தில், துணிகளை வீட்டினுள் உலர வைக்கும் பொழுது வருமே அது போல் ஒரு வாடை உள்ளே வீசியது. நடந்தால் கால் அடி தெரிவது போல் தூசி படிந்திருந்தது. 

பல கோடிகளுக்கு சொந்தக் காரி, ஏன் இப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி அவனுள் பலமாக எழுந்தது. படுக்கை அறையில், தரையில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த நித்ரா, இவன் வருவதைக் கண்டும், பொம்பை போலே அமர்ந்து இருந்தாள். 'மிஸ் நித்ரா யுவர் hand bag.' என்று அவள் அருகில் வைத்தான். அவள் அதை பார்க்கக் கூட இல்லை. 

'நித்ரா. நான் உங்களுக்கு எப்படியாவது உதவனும்னு நினைக்கறேன். அதுக்கு நீங்க முதல்ல உங்க மனம் துறந்து பேசணும். இப்ப நீங்க எனக்கு எதுவும் பதில் சொல்ற நிலைமையில இல்லைன்னு எனக்கு தெரியுது. உங்க வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது. உங்களுக்கு எப்ப என் உதவி தேவை பட்டாலும், நீங்க இந்த நம்பர்க்கு அழைக்கலாம்' என்று தான் கார்டை அவள் மடியில் வைத்து, 'வருகிறேன்' என்று புறப்பட்டான்.

அந்தக் கார்டை கடைக் கண்னால் பார்த்தாள், அதில் அவன் பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் என எல்லா விபரங்களும் இருந்தாலும். ஒன்று மட்டும் அவள் புருவத்தை உயர்த்தியது....

Institute for AIDS Eradication, Chennai.

தொடரும்.... 

Monday, October 21, 2013

சாப்பாட்டு ராமன் - அம்மு கௌசோ கடை(தஞ்சை)

சென்னையில் நண்பர் வீட்டில் முதல் முறை (அவர் சித்தி சமைத்த) பர்மா வகை உணவுகளை சென்ற ஆண்டு உண்ட போதே ராமனுக்கு மிகவும் பிடித்து விட்டது. இம்மாதம் தஞ்சை சென்றபோது அவர் கடையிலேயே பர்மா வகை உணவுகளை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.தஞ்சையில் பர்மா காலனியில் பர்மா வகை உணவுக் கடைகள் மிகவும் பிரபலம். இதில் நம் நண்பரின் 'அம்மு கௌசோ கடை' இருப்பது அன்பு நகர், பூக்கார விளார் ரோடு. 


இந்த உணவு வகைகளை தயார் செய்ய காலை ஒன்பது மணிக்கு துவங்கினால் கடை திறக்கும் மாலை ஆறு மணி வரை வேலை சரியாக இருக்கும். மைதா மாவு கொண்டு நூடுல்ஸ் பிழிந்து அதை ஆவியில் வேக வைப்பது,தேவையான காய் கறிகளை நறுக்குவது, மசாலா கலவைகளை தயார் செய்வது என்று பல செய்முறைகளை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது.



ராமன் தன் கணக்கை துவங்கியது முதலில் அத்தோவுடன்.மேல் கூறிய வேகவைத்த மைதா மாவு நூடுல்ஸுடன் ( அதன் பர்மா பெயர் கௌசோ), மெலிதாக நறுக்கிய முட்டை கோஸ், பச்சை வெங்காயம், பொன்னிறமாக வருத்த வெங்காயம், பூண்டு எண்ணெய், புளி கரைசல் இறுதியாக அவரவர் விருப்பத்திற்கேற்ப காரம் சேர்த்து பரிமாறும் கலவை தான் அத்தோ. இதில் பொறிக்கப் பட்ட உணவு எதுவுமே இல்லாதது கூடுதல் சிறப்பு.

அத்தோ 
உள்ளூர் வாசிகள் இந்த கௌசோவுடன் பர்மா முறையில் சமைக்கப் படும் வாழைத் தண்டு குழம்பை ஊற்றியும் உண்கின்றனர். மேலும் அந்த வாழைத் தண்டு குழம்பை சூப் போலவும் பருகுகின்றனர். அந்த வாழைத் தண்டு குழம்பில் பொறிக்கப் பட்ட வெங்காயம், வேகவைத்த முட்டை, சிறிது கொத்தமல்லி, மசால் வடை சேர்த்து குடித்தால் கிடைக்கும் சுவையே தனி.வாழைத் தண்டின் மருத்துவ குணங்களை பற்றி சொல்லவே தேவையில்லை.

வறுக்கப் படும் உணவுப் பிரியர்களுக்ககவே செய்யப் படும் உணவு வகை தான் சீஜோ. கெளசோவுடன் முட்டை கோஸ், வெங்காயம்,மசாலா வகைகள் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, கடாயில் வறுத்து, இறக்கியவுடன் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, கொத்தமல்லி தூவி உருவாகுவது சீஜோ. 


இதையெல்லாம் முடித்து இறுதியில் எண்ணெய் முட்டை என்று ஒரு வகை உண்டு. வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி, அதற்கு இடையில் எண்ணெயில் பொறிக்கப் பட்ட வெங்காயம், புளி கரைசல், எலுமிச்சை சாறு, பூண்டு பொறிக்கப் பட்ட எண்ணெய், இவற்றை வைத்து, அப்படியே வாயினுள் (பாணி பூரி போல்) இறக்க வேண்டும். இந்த கலவைகள் முட்டையுடன் இணைந்து, சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவை அனுப்பும், அதை நினைத்தால் இந்த கணமும் நாவில் உமிழ் நீர் சுரக்கிறது. இந்த எண்ணெய் முட்டை மேல் ராமன் தீராக் காதல் கொண்டதால், மீண்டும் சுவை அரும்புகள் நடனமாடும் அந்த நொடியை எதிர் நோக்கி காத்திருக்கிறான். 

இந்த வகை உணவு மத்திய மற்றும் வட சென்னை பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். இத்தனை ஆண்டுகள் சென்னையில் இருந்து இதை தவற விட்டது சிறிது வருத்தமே. மலிவான விலையில் உடல் நலனுக்கு ஏற்ற உணவை நீங்களும் உண்டு மகிழுங்கள். 

ராமன்ஸ் காம்போ
இந்த தஞ்சை பயணத்தில் ராமனுக்கு அறிமுகமாகிய ஒரு சிறிந்த காம்போ உங்களுக்காக. ஐந்து ரூபாய்க்கு தஞ்சையில் கிடைக்கும் நான் ரொட்டியின் மேல் தேனை நன்கு தடவி, அதை மெத்தை போல் சுருட்டி, வாயில் கடிக்கும் பொழுது, 'ஆஹா... அமிர்தத்தின் சுவை இப்படித் தான் இருக்குமா' என்று எண்ணத் தோன்றியது. உங்கள் வட்டாரத்தில் கிடைக்கும் ரொட்டியை வாங்கி இதேபோல் சுவைத்து பாருங்கள், என்னைப் போன்ற சிறுவர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். 

Monday, October 14, 2013

நித்ரா - 1.புறவழிச் சாலை

மேக மூட்டங்கள் சந்திரனை கடத்திச் செல்ல, பேய் காற்று சென்னை புறவழிச்சாலையின் ஓரத்தில் இருந்த குப்பை கூளங்களை நடனமாடச் செய்து கொண்டிருந்தது. சட்டென்று மழைத்துளிகள் அர்ஜுனன் வில்லில் இருந்து சீறிப் பாய்ந்த அம்பு போல் பூமியைத் தாக்கின. தார் சாலையை துளைக்க முடியாத அந்த நீர் அம்புகள், சாலை எங்கும் பரவின. சில விநாடிகளில், சென்னைப் புறவழிச் சாலை ஒரு நீரோடை போல் மாறியது. விரைந்து பாய்ந்து கொண்டிருந்த வாகனங்கள், மகளிர் கல்லூரியை கடக்கும் வாலிபர் வண்டிகளின் வேகத்தை விடவும் குறைந்து, பார்க்கிங் விளக்குகள் மின்ன, தண்ணீரில் மிதந்து சென்றன.  

மழையின் வேகம் அதிகரிக்க, பல வாகனங்கள் ஓரங்கட்டி நிற்கத் தொடங்கின. ஒரு மாருதி ஆல்டோ மட்டும் கட்டுப்பாடின்றி, சென்னை புறவழிச் சாலையில் இருக்கும்  அடையாறு மேம்பாலத்தின் மேல் உரசி நின்றது. சில நிமிடங்கள் கழித்து, சுமார் முப்பது வயது வாலிபன் ஒருவன், தன் போர்ட் பியஸ்டாவை அந்த ஆல்டோ பின் நிறுத்தினான். அந்த ஆல்டோ கட்டுப் பாடின்றி வந்தது தெரிந்திருந்தால் ஒரு வேளை இவன் தன் சீருந்தை அதன் பின் நிறுத்தாமல் இருப்பானோ என்னமோ. மழையின் சீற்றம் குறைந்தபாடில்லை. மின்னல் மின்னும் சமயம் தான் அவனால் எதிரில் இருந்த அந்த சிவப்பு ஆல்டோவைப் பார்க்கவே முடிந்தது. 'சின்ன சின்ன ஆசை' என்று ரகுமானின் இசை அவன் சீருந்து எங்கும் நிறைய, அவன் இருக்கையில் சாய்ந்து, மழை நிற்க காத்திருந்தான்.                          

அடுத்து மின்னிய மின்னலில் அவன் கண்ட காட்சி, அவன் வயிற்றில் ஒரு கம்புளிப் பூச்சை நெழிய வைத்தது. வண்டியை விட்டு இறங்கலாமா வேண்டாமா என்று யோசிக்க, அடுத்த நொடி அவன் பாதங்கள் நீரில் பதிய, அந்த ஆல்டோவின் அருகில் சென்று, வெள்ளை நிற சல்வாருடன், அந்த பாலத்தின் விளிம்பில் நின்றிருந்த பெண்ணை லாவகரமாக அணைத்து தூக்கி, தன் சீருந்தினுள் அவளை செலுத்தி, கதவை அடைத்தான். ஈரம் சொட்ட சொட்ட ஓட்டுனர் சீட்டின் மேல் அமர்ந்து, சென்ட்ரல் லாக்கை ஆன் செய்தான்.       

அந்தப் பெண் எந்த வித அசைவும் இன்றி சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தலை முடி ஈரத்தில் மிகவும் சிறியதாக தோன்றியது, அவள் ஆடையில் இருந்து சொட்டும் நீர், மிதியடியை நனைத்துக் கொண்டிருந்தது. மழையின் வேகம் படிப் படியாக குறையத் தொடங்கியது.

'என் பெயர் பாஸ்கர்'..... மௌனம்.... 'உங்களை நான் எந்தக் கேள்வியும் இப்போ கேட்கக் போறதில்லை... எங்க போகணும்னு சொல்லுங்க. நான் ட்ராப் பண்றேன்' என்று சொல்லி முடித்து அவள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

'நரகம்' என்று அழுத்தமாக சொன்னாள். அவள் குரலில் இருந்த இனிமையை அந்த சூழ் நிலையில் பாஸ்கரால் ரசிக்க முடியவில்லை. அவளின் பதில் அவனுக்கு கோபத்தை தூண்டியது. டாஷ் போர்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். சிகரெட் புகை அவள் சுவாசத்திற்கு இடையூறு செய்ய, அதை வெளியே வீசினான்.

'அந்த ஆல்டோ உங்களுதா ?' என்று அவளை பார்த்து கேட்டான். அவளிடம் எந்த அசைவும் இல்லை, தன் பியஸ்டாவை அந்த ஆல்டோ முன் சென்று நிறுத்தினான். ஆல்டோவின் கதவு திறந்திருந்தது, உள்  சென்று பார்த்தான், டாஷ் போர்டில், RC புக் நகல் இருந்தது. அதில் அந்தப் பெண்ணின் சற்று பழைய புகைப் படம் போல் தெரிந்தது, பெயர் நித்ராதேவி என்று இருந்தது.

இயல்பாக கிடைத்த அனுபவம் என்றால்,  'நித்ரா' என்பது ஸ்லோவாகியா நதியின் பெயரா அல்லது தூக்கம் தரும் தேவியின் பெயரா என்று அவன் மனதில் ஒரு பட்டி மன்றம் கூட நடந்திருக்கும்.   அதற்குள் அவள் அந்த காரில் இருந்து வெளி வந்து ஆல்டோவில் ஏறினாள். பாஸ்கர் 'கேன் யு டிரைவ்' என்று கேட்கும் பொழுது அவள் வண்டியை ஸ்டார்ட் செய்தாள். வண்டி வேகமாக அமபத்தூர் நோக்கி பாய்ந்தது.

ஆல்டோ சென்றவுடன் தான் பாஸ்கர், தன் கையிலேயே அந்த RC புக் இருப்பதை உணர்ந்தான். நாளை முகவரி விசாரித்து அவள் வீட்டிற்கே சென்று கொடுத்து விடலாம். அவள் கதையை தெரிந்து கொள்ள இது நல்ல சாக்காக இருக்கும் என்று எண்ணி அவன் பியஸ்டாவை ஸ்டார்ட் செய்தான்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை மேல் செல்லும் பாலம், பாஸ்கருக்கு மிகவும் பிடிக்கும்.  அம்பத்தூரின் போக்குவரத்து நெரிசலுக்கு டாட்டா சொல்லி நேராக செல்வது அந்த பாலம்.

அதே ஆல்டோ அங்கு நின்றிருப்பதைக் கண்டு அவன் வண்டியை நிறுத்தினான். அதற்குள் அந்தப் பெண் வண்டியை விட்டு இறங்க, இவன் விரைந்து சென்று அவள் பாலத்தின் விளிம்பில் ஏற முயற்சிக்கும் பொழுது நிறுத்தினான். 

Image Courtesy - Google
அவள் முகத்தில் ஒரு எரிச்சல் தெரிந்தது. அவளை ஆல்டோவினுள் தள்ளினான். இம்முறை அவனால் அவன் கோபத்தை அடக்க முடியவில்லை.

'வாட் தி ஹெல் ஸ் யுவர் ப்ராப்லெம்?' என்று தன் காலால் முன் டயரை உதைக்க, அவள் உடல் சற்று குளுங்கியது.

முதல் முறை அவள் அவனை நேராக பார்த்தாள், அவள் மெல்லிய உதடுகள் அசைய அவனை நோக்கி அவள் சொல்லியது, அவனுக்கு நன்கு பழக்கமான வார்தையென்றாலும், அது முதலில் சரி வர அவனுக்கு உரைக்கவில்லை.

 பின், அவன் மூளை அவள் சொல்லியதை மீண்டும் அசைப்போட்டது.....

'A......I.......D.......S............ AIDS !'                       
           
தொடரும்.........