Friday, June 7, 2013

Duel - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


சீருந்து என்ஜின் ஓசையுடன், வாகனக்கூடத்தில் இருந்து வெளிவர படம் தொடங்குகிறது. படத்தில் தொடர்புடயவர்களின் பெயர்களை திரையில் காட்டியவாறு சிவப்பு சீருந்து தன் பயணத்தை தொடர்ந்து, நகரத்தை கடந்து நெடுஞ்சாலையை அடைய, ரியர் வியுவ் மிர்ரர் வழியாக கேமரா நம் ஹீரோவை முதன் முதலில் கெத்தாக அறிமுகம் செய்கிறது. தனிமையில் வண்டி ஓட்டிச்செல்லும் நம் ஹீரோவுக்கு பேச்சுத் துணையாக இருந்தது அந்த வானொலி தான், அதவாது வில்லனாகிய அவன் காட்சியினுள் வரும் வரை..

நெடுஞ்சாலையில் ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கருப்பு ஆயில் டாங்க் கொண்ட நெடுநீள டிரக் வேகமாக நம் சீருந்து பின் வந்து முந்தி செல்வதற்காக வழி  கேட்க, நம் ஹீரோவும் பெருந்தன்மையுடன் வழிவிட, அந்த நொடி தொடங்கும் இந்த டூயல், நம்ம  பாஷையில சொல்லனும்னா ' ஒண்டிக்கு ஒண்டிசண்டை '. ஆமாங்க அந்த   துரு பிடித்த டிரக் தான் இந்த படத்தின் வில்லன்.


சீருந்து ஓட்டும் ஹீரோ அந்த டிரக்கினால் நெடுஞ்சாலையில் சந்திக்கும் போராட்டங்களை எந்த நொடியிலும் வேகம் குறையாமல் காட்சிகளாக அமைத்து இருப்பார் இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க். எப்படி அந்த டிரக்கிடம் ஹீரோ வசமாக மாட்டி தவிக்கிறார், எப்படி இறுதியில் தப்பிக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   

படத்தில் நான் ரசித்தவை:

ஒரு காருக்கும் டிரக்குக்கும் இடையில் நெடுஞ்சாலையில் நடக்கும் போராட்டத்தை தொண்ணூறு நிமிட படமாக எடுப்பது என்பதே ஒரு சவால். 

படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், ஹீரோ, அவர் சீருந்து மற்றும் நெடுநீள டிரக், இந்த மூன்று மட்டுமே படம் முழுவதும் வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அந்த டிரக் ஓட்டுனர் யார் என்று படம் முடியும் வரையும் நமக்கு தெரியாது. முழுக்க முழுக்க ஒரு டிரக்கை மட்டும் வைத்து மிரட்டியிருப்பார் இயக்குனர். 

படத்தில் வசனங்கள் மிக குறைவு என்றாலும், சீட் நுனிக்கு நம்மை கொண்டு செல்லும் வேகமான திரைக்கதை வசனங்களை மறக்க செய்கிறது.

படத்தின் மிக பெரிய பலம் கேமரா தான், பல கோணங்களில் நெடுஞ்சாலையில் ஓடும் இரு வாகனங்களை படமாக்கி இருப்பர்.   

ஒரு உணவகத்தில் நம் ஹீரோ இருக்கும் போது, அந்த டிரக் உணவகம் வெளியே நிற்பதைக் கண்டு, அதன் ஓட்டுனர் உள்ளே இருப்பவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும், அந்த ஓட்டுனர் யார் என்று அவர் ஆராயும் காட்சிகள் அருமையாக இருக்கும். 

ஹீரோ ஓரு போன் பூத் சென்று காவல் துறைக்கு தகவல் சொல்ல முயற்சிக்கும் போது, அந்த டிரக் வேகமாக வந்து அந்த பூத்தை உடைக்கும் காட்சியின் பொழுது  உங்கள் இதயம் கண்டிப்பாக ரத்தத்தை சற்று வேகமாகவே வெளியேற்றும்.

    
ஸ்டீவென் ஸ்பீல்பெர்கின் தலைசிறந்த இந்த படைப்பை ரோட் மூவீஸ் என்ற பிரிவில் என்றுமே முதல் இடம் தான் என்பது என்னைப் போன்ற பலரின் ஒருமித்த கருத்து. 

*****************************************************************************************
ஆண்டு : 1971
மொழி   : ஆங்கிலம் 
என் மதிப்பீடு : 4.7/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

12 comments:

  1. உன் ரசனைக்கு ஒரு சபாஷ்டா பாண்டியா! என் வரையிலும் கூட மிகச் சிறந்த ரோட் மூவி என்றால் இதைத்தான் சொல்லுவேன். வித்தியாசமான சிந்தனையுடன், விறுவிறு ட்ரீட்மெண்ட்டில் ஸ்பீல் பெர்க் நடத்தி இருப்பது... மற்ற இயக்குனகளுக்கு ஒரு பாடம்!

    ReplyDelete
    Replies


    1. காலையிலே நான் வெளியிட்டவுடன், உங்கள் கருத்துரையை கண்டு மகிழ்ந்த போதிலும், அலுவலகம் செல்லும் அவசரத்தில் என்னால் மறுமொழியிட இயலவில்லை.


      முதலில் வருகை தந்து 'பாண்டியா' என்ற செல்லப் பெயருடன் வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  2. ரூபக் எழுத்து நடையில் படம் பார்த்தது போன்ற உணர்வு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என் நடையை ரசித்து பாராட்டிய தங்களுக்கு என் நன்றிகள்

      Delete
  3. உங்கள் ரசனையும் சுவாரஸ்யமாக உள்ளது... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  4. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பிரபலம் ஆவதற்கு முன் அதாவது ஜாஸ் என்ற படத்திற்கு முன் எடுத்த இரண்டாவது படம் இது. இதை நிறைய பேர் கேள்விகூடப்பட்டிருக்க மாட்டார்கள். நேர்த்தியான படம். படத்தில் மிக முக்கிய அம்சமான பின்னணி இசையைப் பற்றி குறிப்பிட மறந்துவிட்டீர்களே நண்பரே. நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் தகவலை பகிர்ந்தமைக்கு என் நன்றி.
      பின்னணி இசையை பற்றி எழுதிய நியாபகம், சுட்டிக்காட்டி விடுபட்ட தகவலை சேர்த்து, என் பதிவை பாராட்டியமைக்கு நன்றி காரிகன்.

      Delete
  5. ரூபக் நீ எழுதி வரும் அத்தனை உலக சினிமாக்களையும் உடனே பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது. மிக முக்கியமான காரணம் உனது எழுத்தும் அதில் நீ குறிப்பிடும் உலக சினிமாத் தரமும் ...

    அட சீக்கிரம் கொடப்பா.. ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனு, உங்களுக்குள் இந்த தாக்கம் ஏற்பட்டதில் எனக்கு பெருமிதம்.

      ஒரு (வைரஸ் இல்லாத) பென் டிரைவ் மட்டும் உஷார் செய்யுங்கள், அடுத்த நாளே படங்கள் உங்கள் வசம்.

      Delete
  6. இந்தப்படத்தை பற்றி 5ஆண்டுகளுக்கு முன் ஒரு பதிவர் எழுதியிருந்தார்.. அப்போதிருந்து பார்க்க வேண்டும் என காத்திருந்து, கடந்த ஆண்டு தான் பார்த்தேன்.. வில்லன் யார் என்றே தெரியாமல், அவன் மேல் பயமும் கோபமும் வெறுப்பும் வர வைத்த படம்.. ஹீரோவுக்கு வியர்க்க ஆரம்பித்த அந்த நொடியில் இருந்து நமக்கும் வியர்த்து விடும்.. எனக்கு இந்த படத்தில் அல்லையை தெறிக்க வைத்த விசயம், அந்த ட்ரக்கின் ஹார்ன் சத்தம் தான்.. மிரட்டலாக இருக்கும்.. நல்ல படம்.. நல்ல விமர்சனம்.. இன்னொரு முறை பார்க்கும் ஆவலை உண்டு பண்ணி விட்டீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஹார்ன் சற்று மிரட்டலாகத் தான் இருக்கும். விமர்சனத்தை ரசித்து பாராட்டிய ராம் குமாருக்கு என் நன்றிகள்

      Delete