Saturday, November 30, 2013

தேன் மிட்டாய் - நவம்பர் 2013

திருநங்கை ?

அழகான ஒரு மாலைப் பொழுதில், பௌர்ணமி நிலவை வங்கக் கரையின் அலைகள் வீச பெசென்ட் நகர் கடற்கரையில், மணலில் வானைப் பார்த்தவாறு  படுத்துக் கொண்டு, இயற்கையை  ரசித்து கொண்டிருந்த சமயம், என் கால் அருகில் யாரோ வந்து நிற்பது போல் உணர எழுந்து அமர்ந்தேன். என் அருகில் நின்றுகொண்டிருந்த அந்த திருநங்கை என்னிடம் இரவல் கேட்பது போல் கையை நீட்டினாள். யாருக்கும் பிட்சை கொடுப்பது எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு விஷயம், இருப்பினும் இந்த திருநங்கைகள் தொட்டு விட்டு ஏற்படும் அருவெறுப்பை தவிர்க்க அவர்களுக்கு மட்டும் உடனே காசு கொடுத்து விடுவேன்.

ரயில் பயணங்கள், சுங்கச் சாவடிகள் என பல இடங்களில் இவர்களால் இம்மாதிரி வழிப்பறி அனுபவித்து உண்டு. கடற்கரையில் இதுவே முதல் முறை. என் பணப்பையை திறந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

'என்ன தம்பி நாலு பேரா வந்துட்டு பத்து ரூபா தர, ஆளுக்கு பத்து சேர்த்து நாற்பது ரூபாயா கொடு' என்றாள் அந்த பெண் உடையில் இருந்த திருநங்கை.

என்னுடன் வந்த மூவர் கடற்கரையில் நீரில் சற்று தள்ளி இருக்க, முப்பது  நிமிடங்களுக்கு மேலாக நான் தனியாகத் தான் இருக்கின்றேன், எப்படி இவள் நாங்கள் ஒன்றாக வந்ததை கவனித்தாள் என்ற ஆச்சரியம் ஒரு புறம் இருக்க, 'கடற்கரைக்கு வர இவளுக்கு இது என்ன நுழைவுக் கட்டணமா' என்று என் மனதில் கோவம் எழ 'சில்லறை இல்லை இதை வாங்கிக்கொண்டு போங்க' என்று மீண்டும் நீட்டினேன்.  

அவள் ஏற்க மறுத்து, நாற்பது ரூபாய் தான் வாங்குவேன் என்று பிடிவாதத்துடன் நின்றாள். ஐந்து நிமிட வாக்கு வாதத்திற்கு பிறகு அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் அந்த பத்து ரூபாய் தாளை மீண்டும் என் பணப்பையினுள் சொருகி விடலாம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றிய சமயம் அந்த பத்து ரூபாயை என்னிடம் வாங்கிக்கொண்டு 'நீ நாசமா போய்டுவ' என்ற சபித்து விட்டு சென்றாள்.

என் உதடுகள் இங்கு எழுத முடியாத ஒரு வார்த்தையை முணுமுணுத்ததை அவள் கவனிக்காமல் அடுத்து அருகில் இருந்த காதல் ஜோடியை ஏமாற்றி பணம் பிடுங்க சென்று விட்டாள்.

எதற்காக தோன்றியது இந்தப் பழக்கம். இந்தத் திருநங்கைகளுக்கு பணம் கொடுத்து அவர்கள் நம்மை வாழ்த்தினால் நாம் நன்றாக இருப்போம் என்ற வதந்தியை எந்த முட்டாள் பரப்பியது என்ற கோபம் என்னுள் கொழுந்து விட்டு எரிந்தது அந்த நிமிடம். அவர்களால் உழைக்க முடியாதா? ஏன் அரசாங்கம் எவ்வளவு சலுகைகளை கொட்டி கொடுக்கிறது. இப்படி சிலர் செய்யும் அடாவடித்தனத்தால்   அந்த பிரிவினை இந்திய மக்கள் சமூகத்தில்  சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.


தீபாவளித் திருநாள் 

தீபாவளிக்கு முன் தினம் அலுவலகத்தின் உள்ளிருக்கும் சரவணபவனில் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனை நடை பெற்றது. பல நாள் ஒருவரும் தீண்டாமல் எலிகளுக்கு இறையான இனிப்புகள் கூட அன்று மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்தன. 12 மணிக்கு தொடங்கிய விற்பனை ஒரு மணிக்கு முடிந்து விட்ட ஏமாற்றத்தில், அடுத்த நான்கு மணி விற்பனையிலாவது வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடம் இருந்தேன். சூப்பர் ஸ்டார் படத்திற்கு முதல் நாள் டிக்கெட் வாங்க நடப்பது போன்ற அடிதடி நடந்தது, நான்கு மணி விற்பனையில். வியாபாரம் பல மடங்கு லாபம் அன்று. இன்று வாங்க ஆள் இல்லாமல் அந்த இனிப்புகளில் ஈ மொய்த்துக்கொண்டிருந்ததைக் கண்ட பொழுது, என்னுள் எழுந்த கேள்வி  'தீபாவளி அன்று உண்டால் தான் அந்தத் தித்திப்புக்கள் இனிக்குமா என்ன?'    

ஆண்டிராய்டும் கர்ப்பமும்

ஒரு வழியாக நானும் இம்மாதம்  ஆண்டிராய்ட் கைபேசிக்கு மாறிவிட்டேன். கைபேசி கையில் வந்தவுடன் சில appகளை தரவிறக்கிக் கொண்டிருந்தேன். யாருக்கும் கைபேசி வாங்கியதை சொல்லவில்லை. அந்த சில appகளின் உள் நுழைந்துடனே அனைவருக்கும் தெரிந்துவிட்டது நான் ஆண்டிராய்ட் கைபேசி பயன்படுத்துவது. அந்த நிமிடம் தான் ஆண்டிராய்டையும் கர்ப்பத்தையும் மறைக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தேன்.

நாட்டின் நிலைமை 

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் நான் எடுத்த புகைப்படம்.

பூட்டப்பட்ட குப்பைத் தொட்டி !


ஹைதராபாத் 

ஹைதராபாத் சென்றிருந்த பொழுது அங்கு சில விசயங்கள் புதியதாக இருந்தது. எந்தப் பொது இடத்திற்க்குச் சென்றாலும், சத்யம் திரையரங்கில் செய்வது போல், உடல் முழுவதும் தடவி சோதித்த பின்னே உள் அனுமதிக்கின்றனர். சமீபத்தில் நடந்த சில குண்டு விபத்துக்களே இந்த சோதனைகளுக்கு கராணம் என்று உள்ளூர் நண்பர் கூற  அறிந்து கொண்டேன். ஒரு உணவகத்தின் உள்ளே செல்லவும் சோதனை செய்த பொழுதுதான், தமிழகத்தில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர முடிந்தது.    

இரண்டாம் உலகம்

புரியாத மொழியில் படம் எடுக்கும் ஒருவன் எதையோ காட்டி உலகம் என்றும், யாரையோ ஒருவரை காட்டி கடவுள் என்றும் அவன் கற்பனையில் சொன்னால், அதை கை தட்டி ரசித்து ஏற்றுக்கொள்ளும் உலகம்; தமிழ் மொழியில் படம் எடுக்கும் ஒருவன் தன் கற்பனை உலகத்தை உருவாக்கினால் அதில் பல ஓட்டைகள் கண்டுபிடித்து கேள்விகள் கேட்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை?. எனக்கு இரண்டாம் உலகம் பிடிக்கத்தான் செய்தது.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள் 

அலுவல்கள் சற்று அதிகரித்து விட்டதால், மற்ற வலைத் தளங்களுக்கு வந்து கருதுரையிட முடிவதில்லை, அங்கொன்று இங்கொன்றுமாக படிப்பது மட்டும் உண்டு. கூடிய விரைவில் எல்லா வலைப்பூக்களுக்கும் நான் வருகை தரும் வரை மன்னித்து பொறுத்தருள வேண்டுகிறேன்.

அக்காமார்களே அண்ணன்மார்களே,மற்றவர்கள் வலைப்பூக்களை கைபேசியயில் படிக்க ஏதுவாக ஆண்டிராய்ட் app ஏதேனும் உள்ளதா ?

Thursday, November 28, 2013

நித்ரா - 8. சுபம்


இதுவரை 

வெள்ளை விளக்கு பிரகாசமாக எரிந்த அந்த அறைக்குள் நித்ரா கொண்டுவரப்பட்டாள். ஐந்து பேர் வெள்ளை ஆடையில் முகமூடியுடன் இருக்க, அவர்கள் ஆணா இல்லை பெண்ணா என்று கூட சரியாக சொல்ல முடியவில்லை. நித்ராவிற்கு சுவாச குழாய் பொறுத்த செல்கையில் அவளது கை வேகமாக அதை தட்டி விட்டது. படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த அவள் 'பாஸ்கர், இதற்கு நான் ஒத்துக்கவே இல்லை' என்றாள். 

தன் முகமூடியை கிழற்றிய தலைமை மருத்துவர் ' பாஸ்கர் என்ன நடக்குது. அவங்க சம்மதம் இல்லாம எப்படி இங்க அழைத்து வந்திங்க.' என்று சீறினார்.


இனி


'எனக்கு ஒரு பத்து நிமிடம் அவகாசம் கொடுங்க, நான் இவங்களோட கொஞ்சம் தனியா பேசணும்' என்று பாஸ்கர்  கேட்டவுடன், அறையில் இருந்த ஏனைய மருத்துவர்கள் அனைவரும் வெளியேறினர்.

'நித்ரா நான் உங்கள ஏமாத்தனும்னு இத செய்யல. உங்க உடல் நிலை மோசமாக போகவே எனக்கு வேற வழி தெரியல. நீங்களும் மயக்கதுலையே ரெண்டு நாள் இருந்தீங்க, உங்க கிட்ட பேசவும் முடியல' ,அவனை பேச விடாமல் நித்ரா, 'என் கேள்விக்கு விடை கிடைக்காம நான் வாழறதுல எந்த அர்த்தமும் இல்ல. உங்களுக்கு அத புரிய வைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல' என்று கூறி படுக்கையை விட்டு இறங்கி, கதவை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினாள்.

'அப்ப அந்த காரணத்தை கேட்டுட்டு அப்பறம் கெளம்புங்க' என்று சொல்லி அந்த அறையில் இருந்த ஒரு முக்காலியில் அமர்ந்தான் பாஸ்கர். 

இருந்த இடத்திலேயே அசையாமல் நின்ற நித்ரா, ஆச்சரியத்துடன் பாஸ்கரை திரும்பிப் பார்க்க, பாஸ்கர் தொடர்ந்து பேசியது பின்வருமாறு. 

'உங்கள காப்பி டேல மீட் பண்ண அப்பறம் உங்கள பத்தி முழு விபரங்களை சேகரிக்க தொடங்கினேன். எனக்கு ரொம்பவும் உதவியாய் இருந்தது உங்க பிரன்ட் ஸ்வேதா தான். அவங்க ஆலோசனைப் படி மொதல்ல உங்க குடும்ப மருத்துவர் கிட்ட போனேன். உங்க மெடிக்கல் ஹிஸ்டரி வாங்கி பார்த்தேன், கல்யாணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னும் பின்னும் எந்த ஒரு விபத்தோ இல்ல ரத்தம் தொடர்பான நோயோ உங்களுக்கு வரல என்பது தெரிஞ்சிது. அடுத்து நீங்க யாருடனும் உடல் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்பது நீங்க உறுதி படுத்தின மாதிரியே, ஸ்வேதாவும் உறுதி செய்ய, முக்கியமான இரண்டு ஆங்கிலும் இல்லை என்றானது.

உங்களுக்கு அப்ப நிச்சயம் ஒரு வினோதமான முறையிலத் தான் நோய் பரவி இருக்கணும் என்று முடிவு செய்தேன். அப்படி பல வழிகள் இருக்கு. உதாரணத்திற்கு நீங்க ரோட்ல இருக்கற ஒரு வட நாட்டு பையன் கிட்ட பானி பூரி வாங்கி சாப்பிட போரிங்க. அந்தப் பையன் வலது கை கட்டை விரல்ல சிறு வெட்டுக் காயம் இருக்கு, அதை நிச்சயம் நீங்க கவனிக்க மாட்டிங்க. அவன் அந்த பூரியை உடைக்கும் பொழுது அந்த காயம் பூரி மேல லேசா உரசி, கண்ணுக்குத் தெரியாத சில உயிரணுக்குள் அந்த பூரியோட ஒட்டி உங்க உடம்புக்குள்ள நுழைய வாய்ப்பு இருக்கு. ஒரு வேளை அந்தப் பையனுக்கு AIDS இருந்தா? அதுவும் நோய் பரவ ஒரு சாத்தியக் கூறு தானே.

இப்படி ஏகப்பட்ட வழிகள் நான் உங்களுக்கு சொல்லலாம் ஆனா எதையும் நிரூபிப்பது சுலபம் இல்லை. அந்த இடத்தில் தான் எனக்கு உங்க கேள்விக்கு விடை கண்டுபிடிக்க சிரமம் அதிகமானது. பல நாட்கள் தூக்கத்தில் கூட உங்களுக்கு விடை தேடும் கனவுகள் தான், இணையத்தில் எந்நேரமும் உங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற தேடல் தான். இந்த இரண்டு மாதங்கள் முக்கால் பைத்தியமாகவே மாறி விட்ட என்னை முழு பைத்தியமாக மாற்றாமல் காப்பாற்றியது, ஒரு புகைப்படம் தான். 

ஸ்வேதாவின் வீட்டில் நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ப்ரேம் செய்யப்பட்டு சுவற்றில் இருந்தது. உங்களை முதலில் சந்தித்தது இரவில் என்பதால் உங்கள் முகம் மனதில் சரியாகப் பதியவில்லை. எனவே முதல் முறை ஸ்வேதாவின் வீட்டிற்கு சென்ற பொழுதே நான் அந்தப் புகைப் படத்த  எடுத்து பார்க்க, அது என் மனதில் பதிந்திருந்தது. உங்களை காப்பி டேல சந்தித்த பொழுது தான், உங்களை உன்னிப்பாக கவனித்தேன். அந்த புகைப்படத்தில் இருக்கும் உங்களுக்கும் இப்பொழுது இருக்கும் உங்களுக்கும் நிறைய வேற்றுமைகள் என்னால் உணர முடிந்தது. 

இருப்பினும் முக்கியமான அந்த வேற்றுமை அன்று இரவு என் பாதி தூக்கத்தில் தோன்றிய கனவில் தான் தெரிந்தது. உங்களால் நம்ப முடியாது எனக்கு பல விடைகள் தூக்கத்தில் தான் கிடைத்திருக்கின்றன. உடனே அன்று காலை ஸ்வேதாவை அழைத்து சில கேள்விகள் கேட்டு, அந்தப் புகைப்படம் எடுக்கப் பட்ட இடத்திற்கு விரைந்தேன். அங்குதான் உங்கள் கேள்விக்கு ஆதாரத்துடன் எனக்கு விடை கிடைத்தது.' என்று முடித்து, மெத்தையில் அமர்ந்திருந்த நித்ராவிடம் அவன் கைபேசியில் இருந்த அந்தப் புகைப் படத்தை காட்டினான். 

'ஓ... இதுவா .. எனக்கு நினைவு இருக்கு. இது ஸ்வேதாவோட கிராமம். இங்க என்ன தெரிஞ்சிது' என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

' அங்கத் தெரிந்தது உங்க காதுலையே இருக்கு' என்று இளித்தான்.

'கொஞ்சம் புரியற மாதிரி சொல்றிங்களா?' என்று சீறினாள்.

'கூல் டவ்ன்... நீங்க உங்க காதுல இரண்டாவது ஓட்டை குத்தனது இங்கதான், நினைவிருக்கா?', நித்ரா ஆம் என்று தலையாட்ட, 'அந்த ஓட்டை குத்தற பொழுது தான் நோய் பரவி இருக்கு. அந்த ஆசாரி ரெண்டு மாதத்திற்கு முன் AIDS நோயாள இறந்து போனதா அரசு மருத்துவமனையில கொடுத்த death certificate இது.' என்று அவற்றை அவள் கையில் கொடுத்தான். ' உங்களுக்கு காது குத்தின ஆசாரிக்கு அந்த சமயம் கை விரல்ல ஊசி கீரிக்கிட்டதா ஸ்வேதாவும் சொன்னாங்க. அந்த சமயம் உங்க காது ஓட்டையில அவரோட ரத்தம் கலந்து உங்களுக்கு நோய் பரவ காரணமா இருக்கணும். உங்க கேள்விக்கு விடை இதுதான்' என்று முடித்தான். 

Image Courtesy - Google

'கொஞ்சம் நம்ப கஷ்டமாத்தான் இருக்கு. இத உங்களால கோர்ட்ல, divorce proceedings அப்ப நிரூபிக்க முடியுமா?' என்று கேட்டாள்.

'100% சதவீதம் முடியும். கோர்டுக்கு தேவை ஆதாரம், அது நம்மிடம் இருக்கு.' என்றவுடன் அவள் முகத்தில் முதல் முறையாக புன்னகையைப் பார்த்த பாஸ்கர், இப்பொழுதுதான் அழகாய் இருக்கிறாய் என்று தன் மனதினுள் சொல்ல நினைத்து,  'இப்ப உங்க சிகிச்சைய தொடரலாமா' என்று கேட்டு அவள் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான். 

'அஸ் யு விஷ்' என்று அந்த வெள்ளை மெத்தையில் தன் மீது இருந்த களங்கம் விலகப்போகின்ற மகிழ்ச்சியுடன் சாய்ந்தாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு....       

குளுமையான மாழ்கழி மாதத்தின் காலையில், அண்ணா நகரில் இருக்கும் நித்ராவின் வீடு ஒரு மனோகரமான நறுமணத்தை காற்றில் கலந்துக் கொண்டிருந்த பொழுது, பாஸ்கர் அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றான். திறக்கவில்லை. பூட்டி இருந்தது. அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தான். மூன்று மாதங்கள் புனேவில் தன் ஆராய்ச்சி பணி முடித்து, முதல் முறை நித்ராவை காண சென்னை வந்திருந்தான். கதவு திறந்த அந்த நொடி அவன் ஆச்சரியத்தில் திகைத்தான். அவன் கண் முன் தோன்றிய அந்த அழகுப் பதுமையை வர்ணிக்க வார்த்தையில்லை. வலை போன்ற ஒரு கருப்பு சேலையில் இருந்த நித்ரா, பாஸ்கரின் ஆண் உணர்சிக்களை சோதித்தாள். கனவில்லை என்று அவன் மூளை அவனை அசைக்க, புன்னகையுடன் வரவேற்ற நித்ராவின் பின்னே வீட்டினுள்ளே சென்றான்.

பால்கனியில் காத்திருந்த பாஸ்கருக்கு காபியுடன் வந்த நித்ரா 'என் வாழ்வில் நீங்க செய்த உதவிக்கு நான் இதுவரை உங்களுக்கு ஏன் நன்றி சொல்லவே இல்ல தெரியுமா?' , 'ழே' என பாஸ்கர் முழிக்க, 'எனக்கு நீங்க இன்னும் ஒரு உதவி செய்யணும்' என்று கூறி அவன் பேச காத்திருந்தாள்.  

'என்ன செய்யணும்' என்று பாஸ்கர் கேட்க, 'ரெண்டு பேர் கிட்ட இருந்து பல கோடிக்களை திருட வேண்டும்' என்று தன் காப்பியை பருகினாள்.

அவள் அழகின் போதையில் மயங்கி  இருந்த பாஸ்கரை 'திருட வேண்டும்' என்ற சொல் தட்டி எழுப்பியது.

தொடரும்....

*********************************************************************************************************

முதல் முறை வெற்றிகரமாக ஒரு தொடரை நிறைவு செய்யும் மகிழ்ச்சியுடன், என் தொடருக்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நித்ரா (season 2)  சில மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரும்....      

Tuesday, November 26, 2013

நித்ரா - 7. கூட்டாளி


இதுவரை 
 ஸ்வேதா 'நித்ரா கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்ததா?' என்று ஏக்கத்துடன் கேட்க, அவளை தனியே ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவன் சேகரித்த தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கினான். ஸ்வேதாவின் முகம் அதிர்ந்து இருந்தது. அவன் சொல்லி முடித்தவுடன் தன் கன்னத்தில் கை வைத்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்.  

"Oh my god. Is this possible?"    

இனி 

'இப்ப நீங்க நித்ராவுக்கு சிகிச்சை செய்ய சம்மதிக்கணும்' என்று ஸ்வேதாவிடம் கெஞ்சினான் பாஸ்கர். 

'என்ன சிகிச்சை கொடுக்கப் போறிங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ?' என்று அவள் கேட்டதற்கு பாஸ்கர் விளக்கிய முறை பின்வருமாறு. 

AIDS என்பது ஒரு நோய் இல்லை அது ஒரு    வகையான நோய்க் குறிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். HIV வைரஸ் நம் உடலின் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் WBCக்களை கொன்றுவிட்டு, அது சுரக்கும் Bone marrowவை செயலிழக்கச் செய்து நம் உடலை பலவீனமடையச் செய்கிறது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் இல்லை என்றால், எந்த அந்நிய சக்தியும் எளிதில் ஊடுருவி, நம் நாட்டை சுலபமாக கைப்பற்ற முடியும். அது போலத்தான் நம் உடலின் போராளிகளான WBC இல்லாத நிலையில், மற்ற நோய் பரப்பும் கிருமிகள் அனைத்தும் நம் உடலை பதம் பார்த்து விடுகின்றன. HIV ஒரு மனிதனை இறக்கச் செய்வது இல்லை, மற்ற நோய்கள் மனிதனை கொல்ல உதவுகிறது. In short, HIV is like an accomplice to a cold blooded murder.       

ஆகையால் HIVயால் பாதிக்கப் பட்டு இருப்பவனுக்கு தேவை நோய் எதிர்ப்பு சக்தி. எவ்வளவு தான் மருந்துகள் கொடுத்தாலும், உடலின் இயற்க்கை வலுவின்றி எதுவும் உதவுவதில்லை. எனவே நாங்கள்,  ஆரோக்கியமான மற்றொரு குரங்கின் bone marrowவை பொருத்தி, HIV செயலிழக்கச் செய்த WBCக்களை இந்த குரங்கின் உடலினுள் மீண்டும் சுரக்கச் செய்தோம். WBC சுரந்தவுடன் தேவையான மருந்துகளையும் கொடுத்தோம், பராமரித்தோம். சற்று மெதுவாக சில வாரங்களில் அந்தக் குரங்கின் உடல் நிலை தேறியது. அந்தக் குரங்கு தான் இந்த கூண்டில் நீங்கள் பார்ப்பது. Bone marrow மாற்று உருப்பு பொருத்தி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, இன்று அதன் உடலில் HIV வைரஸ் ஒன்று கூட கிடையாது.        

இந்த முறையில் நித்ராவிற்கு சிகிச்சை கொடுத்து அவர் குனமடைந்தால், அவர் உலகில் AIDS நோயில் இருந்து குனமடைந்தவர் வரிசையில் நான்காவது இடம் பிடிப்பார். இதோ பாருங்கள் (இங்கு பாஸ்கர் காட்டிய பக்கம் கீழே இணைக்கப் பட்டுள்ளது), ஏற்கனவே இந்த மூவருக்கு இந்த முறையில் வெற்றி கிடைத்துள்ளது. நீங்க கேட்கலாம் 'அப்படின்னா என் எல்லாரையும் குணப்படுத்த முடியாது? என்று, அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 

நூற்றில் ஒருவருக்கு மற்றுமே இயற்கை ஒரு பரிசு கொடுத்துள்ளது. HIVயை எதிர்த்து வெல்லும் சக்திதான் அந்தப் பரிசு. அத்தகைய மரபணு கொண்ட ஒரு கொடையாளரின், bone marrow இருந்தால் தான் நோயாளியை காப்பாற்ற முடியும். நித்ராவை முதலில் சந்தித்த உடனே அவருக்கு உதவ முடிவு செய்தேன், அவர் அனுமதி கிடைக்க காத்திருந்தேன். ஆனால் என் வேலைகளை இரண்டாம் சந்திப்பிலேயே துவங்கி விட்டேன்.      

எல்லாவற்றையும் கேட்டு ஒரு வித குழப்பத்தில் இருந்த ஸ்வேதா, 'எப்படி?' என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். 

'இதோ தெரிகிறதா' என்று ஒரு மிக மிக சிறிய இயந்திர ஊசியை காட்டி, 'உங்களிடம் பேசி விட்டு நித்ராவை சந்திக்கச் சென்ற பொழுது, அவர் hand bagஐ அவர் அருகில் வைக்கும் பொழுது இந்த ஊசி கொண்டு அவரை குத்தி ரத்தம் எடுத்துக் கொண்டேன். அவருக்கு கொசு கடித்தது போல் தான் இருந்திருக்கும். ரத்தம் கிடைத்த உடனே உலகில் உள்ள எங்கள் research labகளுக்கு சாம்பிள் அனுப்பிவைத்து, சரியான donor கிடைக்க காத்திருந்தோம். எங்கள் முயற்சி வெற்றி பெற்றது. புனேவில் இருந்த ஒரு donor கிடைத்தார். அவர் ஒரு அதிசய மனிதர் என்று கூடச் சொல்லலாம். ஒரு விபத்தில் அவருக்கு HIV பாதிக்கப் பட்ட ரத்தம் தவறுதலாக கொடுக்கப் பட்டதாம். அவர் உடலுக்கு வந்த அனைத்து HIV வைரஸ்களையும் அவர் உடலே கொன்று விட்டதாம். அவரின் மரபணு நித்ராவுடன் ஒத்துப்போவது எங்களுக்கு கிடைத்த வரம் என்றே சொல்ல வேண்டும்' என்று அவன் சொல்லி முடித்து, சில காகிதங்களை எடுத்தான். 

'நித்ராவின் நலம் கருதி இந்த சிகிச்சைக்கு அவங்க சம்மதித்தது போல் நானே எழுதி அவரைப் போல் கையொப்பம் செய்து விட்டேன்' என்று அவளிடம் அதைக் கொடுத்தான். 

'எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, ரொம்ப குழப்பமா இருக்கு' என்று அவள் தன் அருகில் இருந்த நீரை அருந்தினாள்.

Image courtesy - Google

'பாஸ்கர் ,எல்லாம் தயாரா? அவங்க சம்மதத்தோட கையெழுத்து வாங்கியாச்சா?' என்று அந்த நிறுவனத்தின் தலைமை மருத்துவர் பாஸ்கரிடம் கேட்டார்.

'பக்கா டாக்டர்' என்று சொல்லி ஸ்வேதா முன் தலை குனிந்தான்.

'அப்ப தொடங்கலாம்' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார். 

வெள்ளை விளக்கு பிரகாசமாக எரிந்த அந்த அறைக்குள் நித்ரா கொண்டுவரப்பட்டாள். ஐந்து பேர் வெள்ளை ஆடையில் முகமூடியுடன் இருக்க, அவர்கள் ஆணா இல்லை பெண்ணா என்று கூட சரியாக சொல்ல முடியவில்லை. நித்ராவிற்கு சுவாச குழாய் பொறுத்த செல்கையில் அவளது கை வேகமாக அதை தட்டி விட்டது. படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த அவள் 'பாஸ்கர், இதற்கு நான் ஒத்துக்கவே இல்லை' என்றாள். 

தன் முகமூடியை கிழற்றிய அந்த தலைமை மருத்துவர் ' பாஸ்கர் என்ன நடக்குது. அவங்க சம்மதம் இல்லாம எப்படி இங்க அழைத்து வந்திங்க.' என்று சீறினார்.  

தொடரும்....    
                       

Monday, November 25, 2013

சாப்பாட்டு ராமன் - Paradise பிரியாணி (ஹைதராபாத்)

இந்த வருடப் பிறந்தநாள் அன்று முதல் முறை ஹைதராபாத் சென்ற ராமனுக்கு, இதுவரை Paradise பிரியாணி பற்றி தன் வாழ்வில் அறியாதது சற்றே வருத்தம் தான்.  உள்ளூர் நண்பர் உதவியுடன் Paradise ஹோட்டல் சென்றடைந்து, இரண்டாவது மாடி செல்லும் வழியில் காத்திருப்பவருக்கு என்றே சுமார் ஐம்பது இருக்கைகள் இருப்பதைக் கண்டு திகைத்தான். அன்பான புன்னகையுடன் வரவேற்று, தனி மேசை நாற்காலியில் அமரவைத்த அந்த மேசைப் பணியாளர்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதில் இருந்து அங்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவது தெரிந்தது.    

பிரியாணி தான் வாங்குவது என்று முடிவான போதும், Paradise special, supreme என   எந்த வகை வாங்குவது என்ற குழப்ப நிலை எங்களிடையில் நிலவ, மேசை பணியாளர் எங்களுக்கு ஆர்டர் செய்ய உதவினார். தனியே மட்டன் மட்டும் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு, பொறுமையின்றி காத்திருக்கும் பொழுது பக்கத்துக்கு மேசைக்கு paradise special  பிரியாணி செல்வதைக் கண்டபொழுது 'நல்ல வேலை அதை ஆர்டர் செய்யவில்லை என்றே எண்ணத் தோன்றியது. சராசரியாக உண்பவர்கள் ஐந்து பேர் நிறைவாக உண்ணும் அளவு இருந்தது அந்த paradise special  பிரியாணி. அப்போ supreme பற்றி யோசிக்கவே தேவையில்லை.     

ஐந்தில் இருந்து பத்து நிமிடத்திற்குள் எங்கள் பிரியாணி வந்தது. தமிழ் நாட்டில் இருப்பது போன்ற பிரியாணி இல்லை அது. அந்த பிரியாணி வெள்ளை  நிற சாதத்தில்   ஆங்காங்கே மஞ்சள் நிறம் எட்டிப் பார்க்க, கிண்ணத்தின் அடியில் சாதம் அதன் மேல் மசாலா கிரேவி அதன் மேல் மீண்டும் சாதம் என்று இருந்தது. மேசைப் பணியாளர் சரியான அளவு சாதத்தையும்  அந்த கிரேவியையும் ஒரு சேர கலந்து தட்டில் பரிமாறினார். இங்கு வெங்காய பச்சடி மற்றும் ஒரு வகை குருமா போன்ற கிரேவி தான் சைடு டிஷ், கத்திரிக்காய் சைடு கிடையாது.  


ஆவி பறக்க, அந்தச் சாதத்துடன் இணைந்த அந்த மசாலாக் கலவையும், வாயினுள் ஒரு சேர கலந்து, பற்கள் அதை அறைக்கும் பொழுது தோன்றும் அந்த சுவை நாவிற்கு குதூகலத்தை கொடுத்தது. அடுத்த வாய் உண்ணும் பொழுது சுவை மேலும் மேலும் கூடிக் கொண்டுதான் சென்றது.         

பணியாளர்களின் அன்பான உபசரிப்பு கூடுதல் சிறப்பு. நான் என் உணவை புகைப்படம் எடுப்பதைக் கண்டு, எங்கள் மேசைப் பணியாளர் அந்த ஹோட்டலின் வரலாறு அடங்கிய அட்டையை என்னிடம் கொடுத்தார். ஒரு திரையரங்கினுள் சிறு கடையாக துவங்கி, பல மாடிகள் என மாறி, மூன்றுக் கிளைகளுடன் ஹைதராபாத்தின் ஒரு முக்கிய சின்னமாக விளங்குகிறது Paradise பிரியாணி.       

இவ்வளவு பெரிய ஹோட்டல்லா அப்போ விலையும் கூட இருக்கும் என்று நினைக்கும் உங்கள் எண்ணம் தவறு. மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பிரியாணி இரண்டுமே விலை ரூபாய் 210. ஒரு சிக்கன் பிரியாணி இருவர் உண்ணும் அளவு இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சாதாரண குளிர்சாதன உணவகங்களிலே விலை 150 ரூபாய் தாண்டி விடுகிறபொழுது, தரமும் அளவும் நிறைந்து கிடைக்கும் இந்த 210 ரூபாய் paradise பிரியாணி விலை குறைவாகத் தான் தோன்றியது. நீங்கள் ஹைதராபாத் சென்றால் இந்த பிரியாணி சுவைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்பது ராமனின் வேண்டுகோள். 

ராமன்ஸ் காம்போ 

ஆட்டுக் கால் சூப்பும் அவித்த  முட்டையும்: 
சாலையோரக் கடைகளில் ஆட்டுக் கால் சூப் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அடுத்த முறை குடிக்கும் பொழுது அந்தக் கடையில் அவித்த முட்டை இருந்தால் அதை அந்த சூப்பில் துண்டாக்கி போடச் சொல்லி சுவைத்து பாருங்கள். அதன் ருசியே தனி. பெரும்பாலான ஆட்டுக் கால் சூப் கடைகளில் இந்தக் காம்போ இருக்கும். இந்தக் குளிர் காலத்தில் அடிக்கடி பிடிக்கும் சளிக்கு மருந்தாகும் உணவு.      

Thursday, November 21, 2013

நித்ரா - 6. ஆச்சரியம்

முந்தைய பதிவுகளுக்கு 

இதுவரை 

சவரம் செய்ய அவன் பயன் படுத்தும் கண்ணாடி முன் சென்று, நின்றான். எடிசன் மின் விளக்கு கண்டு பிடித்த பொழுது அவர் முகம் ஒரு வேளை இப்படித் தான் பிரகாசமாக மின்னியிருக்கும் என்று எண்ணும் அளவுக்கு அவன் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. கண்ணாடியில் தெரியும் அவன் முகத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டு  கீழ் இருக்கும் வரியை, அவன் பிரதிபலிப்பிற்குச் சொன்னான்.

'பாஸ்கரா! you are a genius!' 

இனி
 என்ன தான் பாஸ்கர் நோய் தொற்றிய முறையை கண்டறிந்த போதும், அது அவனுடைய யூகம் மட்டும் தான் என்பது அவனை வருத்தியது. மற்றவர்களை நம்ப வைக்க அவனுக்கு போதிய ஆதாரங்கள் வேண்டும் என்று முடிவு செய்து ஸ்வேதாவிற்கு கால் செய்தான். அந்த உரையாடலின் ஒரு முனை (பாஸ்கர் பேசியது ) பின்வருமாறு.

'ஸ்வேதா நான் பாஸ்கர் ... எனக்கு சில தகவல் தேவைப் படுது. உங்க வீட்டுல நீங்களும் நித்ராவும் இருக்கற அந்தப் படம் எங்க எடுத்தது... அப்படியா . அங்க உங்களுக்கு தெரிஞ்சவுங்க யாரவது இருக்காங்களா... நேர்ல எல்லாம் சொல்றேன் .... நான் இப்பவே அந்த ஊருக்கு கிளம்பறேன்... எனக்கு அந்த போட்டோவ மெயில் அனுப்பிடுங்க... ரெண்டு நாள்ல திரும்பிடுவேன்... வந்து நித்ராவப் பார்கறதா சொல்லிடுங்க' என்று ஸ்வேதாவின் மனதில் புதிரை விட்டுச் சென்றான்.
Image Courtesy - Google
காரில் விரைந்த பாஸ்கர் அன்று இரவே அந்த ஊரைச் சென்றடைந்தான், இரவு வேளை என்பதால் அவனால் அந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  இரவும் தனிமையும் அவன் மனதில் பலக் கேள்விகள் எழுப்ப, அந்தக் கேள்விகளுடனேயே தன் இரவை ஒரு விடுதியில் கழித்தான். சிறிய டவுன் என்பதால் அனைவருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவே காலையில் எளிதாக அந்த வீட்டைக் கண்டு பிடித்தான்.    

அந்த வீட்டில் இருப்பவர்களிடம் எதோ கேள்விகள் கேட்டான், பதில்கள் கிடைக்க அங்கிருந்து புறப்பட்டு அந்த ஊர் அரசு மருத்துவமனைக்கு சென்றான். அங்கு இருந்த தலைமை மருத்துவருடன் பேசி சில ஆவணங்களை வாங்கிப் பார்த்தான். அவன் தேடிச் சென்றது அவனுக்கு கிடைத்தது போல் தோன்றியது. சில ஆவணங்களை நகல் எடுத்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பினான்.

வரும் வழியிலேயே ஸ்வேதாவிற்கு அழைத்து அவளை நித்ரா வீட்டிற்கு இன்னும் முப்பது நிமிடங்களில் வரச் சொன்னவன், நித்ராவையும் தயாராக இருக்கச் சொல்லி தகவல் கொடுத்தான். அவள் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அடித்தான், பதில் இல்லை.  தானே கதவு திறந்து உள்ளேச் சென்றான். முன்பை விட அந்த வீட்டில் அந்த ஈரத் துணி வாடை அதிகம் இருந்ததுடன்,  தரை எங்கும் குப்பைக் கூளங்கள். வீட்டினுள் நிலவிய ஒரு வகை மயான அமைதி பாஸ்கரின் வயிற்றில் புளியைக் கரைத்து.

படுக்கை அறையினுள் நுழைய முற்பட்ட பொழுது திடீரென அழைப்பு மணி அடிக்க, பாஸ்கர் சற்று திடுக்கிட்டான். உள்ளே ஸ்வேதா வர, நித்ராவின் கைபேசிக்கு அழைத்தான், கைபேசி சோபாவின் மேல் இருந்தது. 'நித்ரா' என அலறிய ஸ்வேதாவின் குரல் வந்த திசை கேட்டு பாஸ்கர் பதற்றத்துடன் ஓடினான். குளியல் அறையில் நிதானம் இன்றித் தரையில் விழுந்து கிடந்தாள் நித்ரா.        

அவளை உடனே அவன் ஆராய்ச்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றான். அவளை பரிசோதித்து விட்டு, அவள் நிலை மிகவும் மோசமாக இருக்க, treatment துவங்குவது மட்டுமே ஒரே வழி என்று ஸ்வேதாவிடம் கூறினான். ஸ்வேதா 'நித்ரா கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்ததா?' என்று ஏக்கத்துடன் கேட்க, அவளை தனியே ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவன் சேகரித்த தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கினான். ஸ்வேதாவின் முகம் அதிர்ந்து இருந்தது. அவன் சொல்லி முடித்தவுடன் தன் கன்னத்தில் கை வைத்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்.  

"Oh my god. Is this possible?"    

தொடரும்.... 

Monday, November 18, 2013

நித்ரா - 5.கேள்விக் குறி

முந்தைய பதிவுகளுக்கு 

இதுவரை 


பாஸ்கர் 'இப்பவே என் வேலைய ஆரம்பிக்கறேன். நான் உங்க கிட்ட சில கேள்விகள் கேட்பேன்,நீங்க நல்லா யோசிச்சு பதில் சொல்லணும்.'  தன் காபி கப்பை பார்த்துக் கொண்டே, 'எந்த விதத்திலயாவது யாருடனாவது ஏதேனும் ஒரு வகையில உங்கத் திருமணத்திற்கு பின் உடல் உறவு கொண்டிருக்கிங்களா? ' என்று தயக்கத்துடன் கேட்டான். எதுவும் பதில் வராததால் நிமிர்ந்து பார்த்தான். 

அங்கு அவள் இல்லை.  

இனி
அவன் கேள்வி பிடிக்காமல் கோபத்துடன் சென்றாளா என்ற ஒரு பயம் மனதை சூழ, சற்று நேரம் என்ன செய்வது என்று பாஸ்கருக்கு புரியவில்லை. அவள் நம்பருக்கு அழைக்கலாம் என்று அவன் கைபேசியை எடுத்து திரையைத் தடவினான். மறுமுனையில் அடிக்கும் ஓசை அவனுக்கு மிக அருகில் கேட்பது போல் இருந்தது. சில வினாடிகள் கடந்து கம்ப்யூட்டர் அம்மணியின் கரைத்த குரல் கேட்க, அழைப்பை துண்டித்தான். மீண்டும் அழைத்தான், இம்முறையும் அந்த ஓசை கேட்க, அவன் இருக்கையை விட்டு எழுந்தான். நித்ரா அமர்ந்த இருக்கையில் அவள் hand bagஉம், அதனுள்  கைபேசியும் இருந்தது தெரிந்து. 

இப்போழுது புது குழப்பம் தோன்றியது, 'பையை விட்டு விட்டு எங்கு சென்றாள். பல முறை தற்கொலை முயற்சி செய்தவளாச்சே' என்று ஒரு பக்க மூளை சிந்திக்க, 'அவள் இங்குதான் அருகில் எங்காவது இருக்க வேண்டும்' என்று மூளையின் மறுபுறம் ஆறுதால் சொல்ல, கழிவறையில் இருந்து நித்ரா வருவது தெரிந்தது. தொலைந்து போனது என்று எண்ணிய கடன் அட்டை வீட்டிலேயே  கிடைக்கும் பொழுது தோன்றுவது போன்ற மகிழ்ச்சி அவன் மனதில் தோன்றியது.      

நித்ரா அருகில் வந்து அவள் இருக்கையில் அமரும் பொழுது அவள் முகம் முன்பை விட இன்னும் சோர்ந்து இருப்பதைக் கண்ட பாஸ்கர் "any problem?' என்று வினவினான். 

Image Courtesy - Google

'No, to answer your previous question. I am straight and I have never had sex with anyone in the past seven months.' என்று அழுத்தமாகக் கூறினாள்.

சற்றும் யோசிக்காமல் பாஸ்கர் ' ஏதாவது விபத்து , blood transfer?' என்றான்.

Tissue பேப்பரால் தன் வாயைத் துடைத்துக் கொண்டு 'No' என்றாள்.

'நீங்க யாருக்காவது ரத்தம் கொடுத்திருக்கிங்களா?' என்ற கேள்விக்கு அவள் இல்லை என்று தலையாட்டினாள். 

சற்றுத் தயங்கி, 'உங்கள் அந்தரங்க ரோமங்களை shave செய்யறப் பழக்கம் உண்டா ?',என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

' No. I just wax' என்றாள். 

'எதாவது திரையரங்க இருக்கைகள் அல்லது பொது இடங்களில், குறிப்பாக பேருந்துகளில், ஊசி குத்துவது போல் உணர்ந்தது உண்டா. AIDS வைரஸ் இப்படி பரவுது அப்படின்னு ஒரு வதந்தியும் உண்டு. நல்லா யோசிச்சு சொல்லுங்க' , என்று தலையில் சொரிந்தான்.

கொஞ்ச நேரம் யோசித்து, ' அப்படி ஒரு அனுபவம் இருக்கற மாதிரி நியாபகம் இல்ல. நான் இதுவரைக்கும் பஸ்ல ஏறினது கிடையாது, என்னோட கார் தான். நான் கடைசியா தேட்டர்ல பார்த்த படம், Titanic' என்று சொல்லி சிரிக்க முயன்றாள், அவள் சிரிப்பு கூட அவளுக்கு வலி தரும் நிலையில் அவள் உடல் சத்தின்றி இருந்ததை பாஸ்கர் கண்டான். 

'நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நான் உங்கள அப்பறம் வந்து சந்திக்கறேன். எதாவது ஒரு ரத்தம் தொடர்பான சம்பவம் நடந்திருக்கும் நல்லா யோசிச்சு பாருங்க' என்று சொல்லி அவளை வழி அனுப்பினான்.    

வீடு திரும்பிய பாஸ்கருக்கு, குழப்பம் தீரவில்லை 'எப்படி?' என்ற கேள்வி அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் அலமாரியில் இருந்த அனைத்துப் புத்தகங்கள் சொல்வதும் அவனுக்கு அத்துப்படி, இருப்பினும் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. கூகுளிடம் பல கேள்விகளைக் கேட்டான் அது பல்லாயிரக் கணக்கான பதில்களை வழங்கிக் கொண்டிருந்தது. எதுவும் அவனுக்கு விடை தராத பொழுதும்  அவன் நம்பிக்கை இழக்கவில்லை. பல கோணங்களில் நித்ராவுக்கு என்று பல கேள்விகள் யோசித்து, தன் கைபேசியில் குறித்துக் கொண்டான்.  அவனையே அறியாமல் தூங்கிவிட்டான்.

பேய்க் கனவு கண்டவன் போல் திடீரென அதிர்ந்து எழுந்தான். சன்னல் வழியே சூரியன் சுட்டெரிக்க, அவன் கைபேசியை தேடினான். நித்ராவுக்கு அழைத்து, அவள் பேசுவதற்கு முன் 'நித்ரா உங்க friend ஸ்வேதா வீட்டுல, நீங்களும் அவங்களும் சேர்ந்து இருக்கற போட்டோ எப்ப எடுத்தது?' என்று கேட்க மறுமுனையில் அவள் 'என் திருமணதிற்கு ஒரு மாதம் முன்பு.ஏன் கேட்கறிங்க?' என்று ஆர்வத்துடன் கேட்டாள், 'நேரில் வந்து சொல்றேன்' என்று அழைப்பை துண்டித்தான். 

சவரம் செய்ய அவன் பயன் படுத்தும் கண்ணாடி முன் சென்று, நின்றான். எடிசன் மின் விளக்கு கண்டு பிடித்த பொழுது அவர் முகம் ஒரு வேளை இப்படித் தான் பிரகாசமாக மின்னியிருக்கும் என்று எண்ணும் அளவுக்கு அவன் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. கண்ணாடியில் தெரியும் அவன் முகத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டு  கீழ் இருக்கும் வரியை, அவன் பிரதிபலிப்பிற்குச் சொன்னான்.

'பாஸ்கரா! you are a genius!' 

தொடரும்...   

Monday, November 11, 2013

நித்ரா - 4.ஒப்பந்தம்


நம்பிக்கை இழந்த பாஸ்கர் , வேலைக்காரன் கொடுத்த காபியை  சோகத்துடன் குடிக்க முயலும் பொழுது, 'மீண்டும் மீண்டும் என்னை வந்து தீண்டும் மன்மதனே' என்று சில்க் ஸ்மிதா அவன் கைபேசியில் பாட, 'புதிய எண்  யாராக இருக்கும்' என்று காதில் வைத்து ' ஹலோ யாரு' என்று இவன் சொல்ல, மறுமுனையில் சில நிமிட மௌனத்திற்குப் பின், ஒரு பெண் குரல் அவள் பெயரை சொல்லியது.

'நித்ரா'.

இனி 

நித்ரா  தன்னை சந்தித்து பேச வேண்டும் என்று சொல்லியவுடன் துள்ளி குதித்து, அண்ணா நகர் நோக்கிப்  புறப்பட்டான் பாஸ்கர். நித்ரா முகப்பேரில் இருக்கும் காபி டேயில் பாஸ்கர் வர காத்திருந்தாள். பாசி பச்சை நிறத்தில் ஒரு மேலாடை அணிந்திருந்த நித்ரா, பாஸ்கரை கண்டவுடன் மெல்லிய புன்னகை செய்தாள் . அந்தப் புன்னகை அவளின் அனைத்து சத்தையும் உறிஞ்சது போல் அவள் முகம் சோர்ந்திருந்தது. 

Image Courtesy  - Google

அவள் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்த பாஸ்கர் அவளை உன்னிப்பாக கவனித்தான் . வகுடு இன்றி சற்றே பின் தள்ளி சீவப்பட்ட குதிரைவால் கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், கம்மல் இன்றி காலியாக இருந்த காது ஓட்டைகள் அவள் மேல் ஒரு சோக வலையை வீசிக்கொண்டிருக்க. ஒரு அழகிய பெண்ணிற்குரிய அனைத்து இலக்கணங்களும் அவளிடம் இருந்ததும் மகிழ்ச்சி இல்லாததால் அவள் அழகு வெளிப்படவில்லை. 

அவள் கண்கள் அவனை நேராக பார்கவில்லை, அவள் கைபேசியையே பார்த்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள். இவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை, 'வர சொல்லிட்டு பேசாம இருக்கிங்க. உங்களுக்கு நான் என்ன செய்யனும் ?' என்று பாஸ்கர் உடைத்தான் .


ஏதோ ஒன்று சொல்ல அவள் மெல்லிய உதடுகள் அசைந்து, ஒரு வித தயக்கத்தில் மீண்டும் மூடிக் கொண்டன . 'நித்ரா, நான் இப்பதான் உங்க ப்ரண்ட் ஸ்வேதாவ பார்த்துட்டு வர்றேன். உங்க வாழ்க்கைல நடந்தது ஒரு அளவுக்கு எனக்கு தெரியும். நீங்க தயங்காம நேரா விஷயத்துக்கு வரலாம் ' என்று கூறி அவன் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.

'மிஸ்டர் பாஸ்கர்.உங்க கார்ட பார்த்துட்டுதான் நான் உங்கள வரச்சொன்னேன். உங்களால எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ?' என்று எதிரில்   இருப்பவர் மறுக்காமல் சம்மதிக்கும் தொனியில் கேட்டாள். அந்தத் தொனியில் கேட்டால், நூறு ரூபாய்க்கு சில்லரை தர முகம் சுளிக்கும் நடத்துனர் கூட, ஐநூறு ரூபாய்க்கு புன்னகையுடன் சில்லரை தருவார், பாவம் பாஸ்கரால் எப்படி மறுக்க முடியும் .

'நித்ரா உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ நான் தயார். நேராக விசயத்துக்கு வாங்க ' என்று அழுத்தமாக பேசினான். 

'எனக்கு வந்த நோயால், என் உடம்புக்கு வந்த வேதனையை விட, மனதுக்கு வந்த வலி தான் அதிகம். நான் சாகரத பத்தி கவல படல. சொல்லப் போனா சீக்கரம் சாகனும்னு தான் எனக்கு தோணுது ' அவளை குறிக்கிட வந்த பாஸ்கர் அவள் கை சைகையைக் கண்டு அமைதியாக, நித்ரா மேலும் தொடர்ந்தாள் 'சாகும் போது முழு கௌரவத்தோட சாகனும்னு ஆசைப் படறேன். அதுக்கு நீங்கதான் எனக்கு உதவி செய்யனும். உடல் உறவு மட்டும் தான் இந்த நோய்க்கு காரணம் இல்ல அப்படின்னு என்ன சுத்தி இருக்கறவங்களுக்கு நான் நிரூபிக்கணம். உங்களால என் நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியுமா?' என்று மீண்டும் அதே மனோகரமான தொனியில் கேட்டாள். 

'என்னால உங்களுக்கு நிச்சயம் உதவ முடியும். ஆனா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும். எங்க instituteல நான் செய்த researchல, ஒரு கொரங்குக்கு இருந்த AIDS நோய குணப்படுத்த முடிஞ்சது. இத மனிதர்கள் கிட்டயும் செயல்படுத்தி வெற்றி கிடைக்கனும், அப்பறம்தான் அரசாங்கம் உதவியோட பொது மக்கள் கிட்ட கொண்டு போக முடியும். எனக்கு அதுக்காக ஒரு AIDS  நோயாளி தேவ? நீங்க இந்த டெஸ்ட்கு சம்மதிச்சா நான் உங்களுக்கு உதவறேன். என்னோட முறையால உங்க நோய் குணமாக 99.99% வாய்ப்பு  இருக்கு. என்ன சொல்றிங்க?' என்று அவன் சொல்லி முடிக்கும் பொழுது அவள் முகத்தில் குழப்ப நிலை தெளிவாக தெரிந்தது . 

'கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ ' என்று பாஸ்கர் சிந்திக்கத் தொடங்க , 'Done. என் கேள்விக்கு பதில் கிடைத்த உடனே, நான் உங்க researchக்கு உதவறேன்' என்று சொன்னபோதும் அவள் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தென்படவில்லை.  

பாஸ்கர் 'இப்பவே என் வேலைய ஆரம்பிக்கறேன். நான் உங்க கிட்ட சில கேள்விகள் கேட்பேன்,நீங்க நல்லா யோசிச்சு பதில் சொல்லணும்.'  தன் காபி கப்பை பார்த்துக் கொண்டே, 'எந்த விதத்திலயாவது யாருடனாவது ஏதேனும் ஒரு வகையில உங்கத் திருமணத்திற்கு பின் உடல் உறவு கொண்டிருக்கிங்களா? ' என்று தயக்கத்துடன் கேட்டான். எதுவும் பதில் வராததால் நிமிர்ந்து பார்த்தான். 

அங்கு அவள் இல்லை.  

தொடரும் ...

Friday, November 8, 2013

சாப்பாட்டு ராமன் - முட்டை தோசை (வேளச்சேரி)

ஒரு திங்கட் கிழமை, இரவு மணி பதினொன்று இருக்கும். கையில் இருந்த காசை பார்க்கிங் கட்டணமாக ஒரு மாலில் கொடுத்து விட்டு, பணப் பையில் ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களுடனும், வயிற்றில் பசியுடனும், ராமன் தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். போலீஸ் கெடுபிடியால் பெரும்பாலான கையேந்தி பவன்கள், இரவு பத்தரை மணி முதலே மூடத் தொடங்கிவிடுமையால், அண்ணா சாலையில் அவனுக்கு எந்தக் கடையும் தென்படவில்லை. வயிற்றில் தொடங்கிய பசி இப்பொழுது காதுகளை அடைக்கச் செய்து கொண்டிருந்தது.        

வேளச்சேரி நூறடி சாலையில், முருகன் கல்யாண மண்டப பேருந்து நிறுத்தத்தின் எதிர் புறத்தில் இருந்த தள்ளு வண்டியை ஆடவர் கூடம் சூழ்ந்திருந்ததை ராமன் கண்டான். நம்  வகுப்பிற்கு அழகான பெண் ஒருத்தி இடையில் வந்து சேர்ந்து அவளும் அழகாக இருந்தால், அந்த அழகை முதல் முறை பார்க்கும் பொழுது ஏற்படும் ஒரு திடீர் உற்சாகம். அந்த உற்சாகத்துடன் நம் ராமன், U வடிவில் திரும்பி, கடையின் அருகே சென்று வண்டியை நிறுத்தினான். முருகன் கல்யாண மண்டபத்தின் மிக அருகில் இருந்த அந்தக் கடையில், இட்லி மற்றும் மூன்று  வகை தோசைகள் மட்டும் இருப்பதை  சில குறிப்பால் உணர்ந்தான்.     

கணவன் மனைவி மற்றும் உதவியாளர் மட்டும் இருந்த அந்தக் கடையில், அந்தக் கணவன் தான் தோசை மாஸ்டர். வீடுகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சிறந்த சமையல் கலை வல்லவர்களாய் ஆண்கள் மட்டுமே விளங்குவதில் ராமனுக்கு ஆச்சரியம் தான். செவ்வக வடிவில் இருந்த   அந்த தோசைக் கல்லில், இரண்டு தோசை மட்டுமே ஊற்ற முடிந்த நிலையிலும், காத்திருப்பவர் வரிசை மாறமால், எந்த வித சலிப்புமின்றி அவர்கள்  கூட்டத்தை சமாளிப்பது சிறப்பு.    

கல்லில் நீர் ஊற்றி, 'உஷ்' என்ற ஓசை கிளம்ப,  தென்னந் தொடப்பத்தின் அடியால் அந்தக் கல்லை கழுவிய பின், டபரா கப்பில் மாவு எடுத்து, முட்டை வடிவில் கல்லில் பரப்பி, நன்கு அடிக்கப் பட்ட முட்டையை அந்த தோசையின் மத்தியில் ஊற்றி, தோசை கரண்டியால் அந்த முட்டையை தோசையின் பரப்பளவு  முழுவதும் பரப்பி, அதன் மேல் மிளகு போடி தூவி, தோசை வெந்தவுடன் சிறிதாக கிள்ளப் பட்ட கொத்தமல்லி இலைகள் தூவப்பட்டு தயாரானது ராமன் ஆர்டர் செய்த முட்டை தோசை.      
படம் : கூகுள்


சட்னி சாம்பார் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, சிக்கன் செர்வையுடன் முட்டை தோசையை உண்ட ராமனுக்கு, அந்த பசியில், அது ஒரு வரப் பிரசாதம் போல் இருந்தது. தோசை உண்ட பின் ஒரு ஹால்ப் பாயிலுடன் தன் கணக்கை ராமன் முடித்தான். நாற்பத்து ஐந்து ரூபாய் (மு.தோசை - 35)  செலுத்தி விட்டு பதினைந்து ரூபாய் மீதம் இருக்க, வயிறு மற்றும் மன நிறைவுடன் ராமன் வீடு திரும்பினான்.         

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு ராமனுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. 'ஒரு வேளை பசியில் சாப்பிட்டதால் தான் அந்த முட்டை தோசை சுவையாக இருந்ததோ?' என்று. இந்த சந்தேகத்தை தீர்க்க கோவை ஆவி மற்றும் சீனுவுடன் ராமன் இரண்டாவது முறை அதே கடைக்கு சென்றான். இறுதி முடிவு என்ன என்பதை அவர்களே கருத்துரையில் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.         

ராமன்ஸ் காம்போ :

நீங்கள் மெலிதாக வலை போல் இருக்கும் இடியாப்பம் உண்டதுண்டா?. சூடான அந்த இடியாப்பத்துடன், தள்ளு வண்டிகளில் கிடைக்கும் சிக்கன் பகோடாவுடன் இணைத்து உண்டு பாருங்கள். ராமன் முதலில் இது போல் உண்டது வேலூர் 'சில்க் மில்' அருகில் இருந்த தள்ளு வண்டிக் கடையில் தான்.  ஆவியில் வெந்த இடியாப்பமும், எண்ணெயில் பொறிக்கப் பட்ட சிக்கனும் உங்கள் நாவில் இணையும் பொழுது அருமையான சுவை தோன்றும்.     

Monday, November 4, 2013

நித்ரா - 3.தேடல் ஆரம்பம்

முந்தைய பதிவுகளுக்கு 

இதுவரை 

'நித்ரா. நான் உங்களுக்கு எப்படியாவது உதவனும்னு நினைக்கறேன். அதுக்கு நீங்க முதல்ல உங்க மனம் துறந்து பேசணும். இப்ப நீங்க எனக்கு எதுவும் பதில் சொல்ற நிலைமையில இல்லைன்னு எனக்கு தெரியுது. உங்க வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது. உங்களுக்கு எப்ப என் உதவி தேவை பட்டாலும், நீங்க இந்த நம்பர்க்கு அழைக்கலாம்' என்று தான் கார்டை அவள் மடியில் வைத்து, 'வருகிறேன்' என்று புறப்பட்டான்.

அந்தக் கார்டை கடைக் கண்னால் பார்த்தாள், அதில் அவன் பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் என எல்லா விபரங்களும் இருந்தாலும். ஒன்று மட்டும் அவள் புருவத்தை உயர்த்தியது....

Institute for AIDS Eradication, Chennai.

இனி 

பாஸ்கர், நித்ரா கைபேசியில் இருந்து கிடைத்த ஸ்வேதாவின் எண்னுக்கான முகவரியை, BPOவில் பணி புரியும் அவன் நண்பன் உதவியுடன் சேகரித்து, அன்று மாலையே பெசன்ட் நகர் சென்றான்.  விசாலமான பங்களா வீடுகளுக்கு இடையில் ஸ்வேதாவின் வீட்டைக் கண்டுபிடிப்பது சற்று எளிமையாகவே இருந்தது. அழைப்பு மணிக்கு கதவை திறந்த வீட்டு வேலைக்காரன், அவனை அமர வைத்து விட்டு ஸ்வேதாவை அழைக்க படி வழியே மாடிக்குச் சென்றான்.

ஸ்வேதா, பெசன்ட் நகர் பெண்களுக்கே உரிதான அனைத்து நடை உடை பாவனைகளுடன் வந்து அமர்ந்தாள். பாஸ்கர் நடந்தவற்றை சுருக்கமாக அவளிடம் சொல்லி முடிக்க "மிஸ்டர் பாஸ்கர், சில பேர் அவள ரொம்ப hurt பண்ணிட்டாங்க, முக்கியமா அவளோட husband. இப்ப அவளுக்கு வாழ்க்கையில இருக்கற நம்பிக்கையே சுத்தமா போயிடுச்சு. அவ உங்க கிட்ட பேசறது ரொம்ப கஷ்டம்" என்று நெற்றியில் வந்த அவள் முடியை ஐந்து கம்மல்கள் குத்திய காதிற்கு பின்னால்  செலுத்தினாள்.

Image Courtesy  - Google
"என்னால் அவங்கள கண்டிப்பா குணப்படுத்த முடியும். நாங்க புதுசா ஒரு மருத்துவ முறை கண்டு பிடிச்சிருக்கோம். ஆனா அத இன்னும் முழுமையா டெஸ்ட் பண்ணல. நித்ரா மட்டும் முழு மனசோட சம்ம்மதிச்சா, அவங்களுக்கு என்னால உதவ முடியும். அதுக்கு நான் அவங்க கிட்ட பேசணும், அவங்க பிரச்சனை என்னன்னு நீங்க சொன்னா, எனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்' என்று ஆர்வத்துடன் அவள் பதிலை எதிர் பார்த்தான்.

"Alright" என்று ஸ்வேதா சொல்லிய தகவல்கள் பின்வருமாறு. 

அவள் பிறந்து ஒரு வருடத்தில், அவள் தந்தையும் தாயும் விவாகரத்து பெற்று, அவள் தந்தை ஜெர்மனி சென்று வேறு ஒரு திருமணம் செய்து, மாமனார் வழி வந்த பணத்தில் தொழில் தொடங்கி பெரும் செல்வந்தர் ஆனார். நித்ரா தன் தாயுடன் சென்னையில் இருந்தாள், தந்தை ஜெர்மனியில் இருந்து அனுப்பும் பணம் தான் அவர்களுக்கு வருமானம். அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவள் தாய் மார்பக புற்று நோயால் பாதிக்க பட்டு, சில மாதங்கள் போராடி, பின் இறந்து விட்டாள். அதற்கு பின் நித்ராவுக்கு சென்னையில் ஆதரவு என்று யாரும் இல்லை. தந்தை அனுப்பும் பணத்தில் செல்வச் செழிப்பில், வேலைக்காரர்களுடன் தனிமையில் வாழ்ந்தாள். சிறந்த பள்ளி, சிறந்த கல்லூரி என்று எல்லாமே அவள் வாழ்வில் சிறந்தது தான். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் HR ஆக பணிபுரிந்தவள், அங்கு வேலை செய்யும் வினோத்தை காதலித்து, திருமணமும் செய்து கொண்டாள். திருமணமாகி இரண்டே வாரத்தில் அவன் லண்டன் செல்ல நேர்ந்தது. ஓர் ஆண்டு கழித்து அவன் திரும்பி வருவான் என்று காத்திருந்தவளுக்கு, ஒரு வாரம் முன் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. தொடர் நோயால் பாதிக்கப் பட்டு, உடல் மெலிந்து வந்தவளுக்கு AIDS இருப்பது உறுதி செய்யப் பட்டது.      

அவளுக்கு இந்த செய்தி தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அவள் தந்தையை தொடர்பு கொண்டு இந்த தகவலை சொல்லியபோது  'நான் எக்ஸ்ட்ரா அமௌண்ட் அனுப்பறேன் நல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ. உன்ன இங்க கூப்பிட்டு வரமுடியாது, உனக்கே தெரியும் இல்ல சித்திக்கு டிசீஸ்னா அல்லேர்ஜினு. Call me if you need anything. take care' அவள் மறுமொழி கூறும் முன் அழைப்பை துண்டித்தார்.

அவள் கணவனை தொடர்பு கொண்டு இந்த தகவலை கூறியபோது ' நான் இங்க வந்து எட்டு மாசம் ஆகப் போகிறது. நான் நல்லாதன இருக்கேன். நான் இல்லாதப்ப நீ எவன் கூட படுத்த? இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல. இப்பவே divorce பண்ணிடறேன்' என்று அவன் சொல்லியது, அவள் மனதை ஒரு கத்தி வைத்து குத்துவது போல் இருக்கவே, அவளால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் சொல்லியது போல் ஒரு வாரத்தில் விவாகரத்து கேட்டு வக்கீலிடம் இருந்து அறிவிப்பு வந்தது. அதன் பிறகுதான் அவள் எடுத்து தற்கொலை முடிவு, நீங்கள் அவளை சந்தித்தது எல்லாம். இந்த நிலையில் உங்களால் அவளிடம் இருந்து எந்த ஒத்தழைப்பையும் எதிர்பார்க்க முடியாது என்று சொல்லி முடித்தாள்.
                          
நம்பிக்கை இழந்த பாஸ்கர் , வேலைக்காரன் கொடுத்த காபியை  சோகத்துடன் குடிக்க முயலும் பொழுது, 'மீண்டும் மீண்டும் என்னை வந்து தீண்டும் மன்மதனே' என்று சில்க் ஸ்மிதா அவன் கைபேசியில் பாட, 'புதிய எண்  யாராக இருக்கும்' என்று காதில் வைத்து ' ஹலோ யாரு' என்று இவன் சொல்ல, மறுமுனையில் சில நிமிட மௌனத்திற்குப் பின், ஒரு பெண் குரல் அவள் பெயரை சொல்லியது.

'நித்ரா'.


தொடரும்.....