Monday, June 24, 2013

ராஜ பார்வை - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


தமிழில் எந்த படத்தை பற்றி எழுதுவது என்று சிந்தித்து கொண்டிருந்த போது, சென்ற வாரம் புலவர் ராமானுஜம் ஐயா வீட்டில், சேட்டைக்காரன் உடன் நிகழ்ந்த உரையாடல் நினைவிற்கு வர, அப்பொழுது பேசப்பட்ட படங்களில் ஒன்றான ராஜ பார்வை பற்றி இங்கு என் கருத்துக்களை பகிர்கிறேன்.

இந்த தலைமுறையில் பலருக்கு இப்படி ஒரு படம் இருப்பது தெரியாதது சற்று வருத்தம். பிரபல தெலுங்கு இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தமிழில் இயக்க, கமல்ஹாசன் கதை எழுத, கமலும் மாதவியும் நடித்து, 1981ஆம் ஆண்டு  கமலின் நூறாவது படமாக வெளிவந்தது 'ராஜ பார்வை'.

மாதவி.... 

இளமையில் டைப்பாய்டு நோயின் தாக்கத்தால் கண் பார்வை இழந்து, பணக்கார வாழ்கையை துறந்து, சொந்தக் காலில் ஒரு பின்னணி இசை குழுவில் வயலின் வாசிக்கும் ரகுவிற்கும் (கமல்), கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து, கதை எழுதும் ஆர்வம் கொண்ட நான்சிக்கும்(மாதவி) இடையில் மலரும் அழகிய காதலை சொல்லும் படம் இது.
       
படத்தில் நான் ரசித்தவை:

படத்தின் தொடக்கத்தில் எல்லோரும் தம் முன் இருக்கும் இசைக் குறிப்புகளை பார்த்துக்கொண்டு, தம்  இசைக் கருவிகளை வாசித்து கொண்டிருக்க, படத்தில் தொடர்புடையர்வர்களின் பெயர்கள் திரையில் செல்ல, இறுதியில் கமல் முன் இருக்கும் தாங்கி காலியாக இருப்பதை காட்டி, அவருக்கு பார்வை இல்லை என்பதை அழகாக காட்டியிருப்பார்.     



கண் பார்வை இல்லாதவர்கள் தம் அடியை கணக்கில் வைப்பதை மிக இயல்பாக சொல்லி இருப்பர். கண் பார்வை இல்லாத ரகுவாக கமல் நம் நெஞ்சில் வாழ்வார். எந்த ஒரு காட்சியிலும் கண் இமைக்காமல் நடித்து இருக்கும் கமலுக்கு சல்யூட்.

நான்சி மற்றும் ரகு, ரகுவின் வீட்டில் இருக்கும் பொழுது, மின்சாரம் தடை பட ' அய்யோ இருட்டு' என்று நான்சி பதற, 'எங்களுக்கு எப்பொழுதும் இருட்டு தான்' என்று ரகு நகைத்தாலும், அந்த வசனம் என்னை தாக்கியது.       

நானும் நான்சியை (மாதவியை) காதலித்தேன் என்பது மறுக்க முடியாத உண்மை. 



படத்தின் பெரிய பலம் பின்னணி இசைதான், பல வசனம் இல்லா காட்சிகளுக்கு இளையராஜாவின் இசை அழகு சேர்த்துள்ளது.

திரைக்கதை மற்றும் கேமரா மிகவும் சிறப்பாக கையாளப்பட்டு இருக்கும், ஒரு காட்சியின் முடிவிற்கும் அடுத்த காட்சியின் தொடக்கத்திற்கும் ஒரு இணைப்பு இருப்பது பல இடங்களில் ரசிக்க வைத்தது. குறிப்பாக ஒரு காட்சியில் நான்சி 'You fool' என்று முடிக்க, அடுத்த காட்சி பால் குண்டான் விசிலுடன் அந்த 'fool' ஓசையை ஒத்து தொடங்கும். இது போன்று பல இணைப்புகள் ரசிக்கும் படி இருக்கும்.  

நான்சி தன் தந்தை வீட்டை விட்டு வெளியே செல்ல காத்திருக்கும் காட்சி வசனமே இல்லாமல், பின்னணி இசையால் பல எண்ணங்களை சொல்லும்.



வீட்டை கல்யாணத்துக்காக தயார் செய்யும் காட்சி மிகவும் பிரமாதமாக இருக்கும், அதிலும் வசனம் கிடையாது, திரைகள் இசையுடன் விரைவாக நகரும் காட்சி அது.    

காதல் படம் என்றால் முடிவு சுபமாகவோ அல்லது சோகமாகவோ இருப்பது வழக்கம், ஆனால் இந்த படத்தில் ரெண்டுமே இல்லாமல் பகுதி இரண்டு எடுக்கலாம் என்பது போல் அமைந்து இருக்கும். எப்படி என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

'அந்தி மழை பொழிகிறது' என்று SPB பாடிய பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 'அழகே அழகு' என்ற பாடல், கேட்ட நொடி முதல் மனதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. 

இப்படி பத்து இருபது ஆண்டுகள் பின் வர வேண்டிய கதையையும் தொழில்நுட்பத்தையும்  கொடுத்தனாளோ என்னவோ படம் பெரும் அளவில் வெற்றி பெற வில்லை என்றாலும், இது எல்லா காலத்திற்கும் பொருந்தும், அனைவரும் காணவேண்டிய ஒரு காதல் காவியம்.      

*****************************************************************************************
ஆண்டு : 1981
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.5/5
*****************************************************************************************

18 comments:

  1. ம்... சேட்டை சொன்னதை வச்சு ஒரு பதிவா.... உண்மையிலேயே இது ஒரு உலக சினிமாதான்... போட்டோ "எடுத்ததா"?

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி... ஆம் போட்டோ எல்லாம் screen shot எடுத்தது. மாதவியின் நல்ல படங்கள் இணையத்தில் ஏனோ இல்லை.

      Delete
  2. இந்தப்படம் பார்த்த நியாபகம் இல்லை, அந்தி மழை பாடல் என்றதும் தான் ஓ இந்தப் படமா என்று நியாபகம் வந்தது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் pen driveக்காக காத்திருக்கிறேன், இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் தான் பதிவுலகின் காதல் மன்னன் ஆச்சே !

      Delete
  3. //நானும் நான்சியை (மாதவியை) காதலித்தேன் //

    ம்ம்.. ஆகட்டும்..ஆகட்டும்.. பிரகாஷ் மட்டும் ஊருக்கு போகட்டும்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா . முதல் முறை கருத்துரையிட்ட தங்களுக்கு என் நன்றி

      Delete
  4. எப்பவுமே அந்தந்த காலகட்டத்துக்கு அட்வான்ஸ்டா படங்கள் தர்றது கமலோட வழக்கம். ‘ஹேராம்’ கூட இப்ப வந்திருக்க வேண்டிய படம்தான்! அந்த வகையில் இந்த ராஜபார்வை படத்தை இதோட டெக்னிகல் நேர்த்தி எல்லாம் ஆழ்ந்து கவனிக்கற பக்குவம் இல்லாத வயசுல பார்த்தது. பின்னாட்கள்ல பாக்கறப்ப ஒவ்வொரு அம்சத்துலயும் இருக்கற நேர்த்தி, கலையம்சம் எல்லாத்தையும் கண்டு வியந்தவன் நான்! ‘அந்திமழை’ பாட்டுல நான்ஸி வரையற ரகுவோட ஓவியத்திலருந்து ரியலுக்கு மார்ற சீன் இருக்கு பாருங்க... இப்பவும் கண்லயே நிக்கும்...!

    ReplyDelete
    Replies
    1. ஆம் சார், அந்த குடை அழகாக இருக்கும்.... இன்னும் பல காட்சிகள் உள்ளன, படம் பார்ப்பவர்களுக்காக விட்டு விட்டேன். கமலோட ப்ளாப் படங்கள் என்று லிஸ்ட் எடுத்து பார்த்தா 'இந்த படம் எப்படி ப்ளாப் ஆச்சு ?' என்ற கேள்வி நிச்சயம் எழும்

      Delete
  5. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்... உங்கள் நுணுக்கமான ரசனைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் D.D.

      Delete
  6. செமையா எழுதி இருக்கீங்க பாஸ். கமலோட 100வது படம் என்பது மட்டும் தான் தெரியும், அப்புறம் அந்தி மலை பட்டை பல நுறு தடவை கேட்டு இருக்கேன். படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. யு டியூபில் இருக்கும் கண்டிப்பாய் பார்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றி ராஜ். கட்டாயம் பாருங்கள்...

      Delete
  7. கலை இயக்குனராக இப்படத்தில்தான் திரு.தோட்டா தரணியை அறிமுகப்படுத்தினார் கமல்.
    ஹிந்திப்படத்தில் பிரபலமான இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான திரு.பரூண்முகர்ஜியை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.

    விசாலமான பார்வையில் ‘ராஜ பார்வையை’ பார்த்து எழுதி இருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் தகவல்களை தந்து பாராட்டிய உலக சினிமா ரசிகனுக்கு என் நன்றிகள்.

      Delete
  8. 'அந்தி மழை பொழிகிறது' என்று SPB பாடிய பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
    ரசிக்கவைத்த படம்..

    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கல்..

    ReplyDelete
    Replies
    1. கருத்துரையிட்டு பாராட்டிய ராஜேஸ்வரி சகோதரிக்கு நன்றிகள் கோடி.

      Delete
  9. சூப்பர் விமர்சனம்.. உங்களை சென்னை நகர மாதவி ரசிகர் மன்ற தலைவராக நியமிக்கிறேன்.. - இவண், அகில உலக மாதவி ரசிகர் மன்றத்தலைவர்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே. ஹா ஹா. மகிழ்ச்சியுடன் பொறுப்பை ஏற்கிறேன், தீயாக உழைத்து ஆள் சேர்க்கிறேன் தலைவரே...

      Delete