Monday, November 16, 2015

வலி (சிறுகதை)

எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அந்த அரியாபாக்கியம் என்றோ அல்லது  துரதிஷ்டம் என்றோ சொல்ல முடியாத ஒரு நிகழ்வு எனக்கு நேர்ந்தது.  அந்தச் செய்தியை கேட்டு, நள்ளிரவில் தனியாக காட்டு வழியில் செல்லும் வண்டியின் இரு சக்கரத்திலும் காற்று போனது போல், எனது வாழ்க்கை அந்த நொடி ஸ்தம்பித்துப் போனது. பலரும் தவமாய் தவமிருந்து பெரும் அந்த வரம் எனக்கு சாபமாகவே வந்தது. எனது பெற்றோர், கணவர் உற்றார் உறவினர் அனைவரின் முன்பு என் இதழ்கள் போலியாக புன்னகை செய்ய உள்ளம் என் நிலையைக் கண்டு குமுற, 'நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்ற பாடல் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தேன். இப்போது நீங்களே அதை யூகித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம், நீங்கள் நினைத்தது சரி தான். நான் கருத்தரித்துள்ளேன். என்னை நீங்கள் திமிரு பிடித்தவள் என்று எண்ணியிருக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு கோவம் இல்லை. உங்கள் கோணம் அது, என் கோணம் வேறு.            

பெண்களை படிதாண்ட விடாத ஒரு சமூகத்தில் பிறந்தாலும், பெற்றோரின் துணையுடன், பள்ளி கல்வியில் எங்கள் ஊர் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். நான் பெற்ற மதிப்பெண்களுக்கு சென்னையில் முன்னிலை கல்லூரிகளில் நுழைய வாய்ப்பு கிட்டியபோதும், எனது சமூகத்தை எதிர்த்து என்னால் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் கல்லூரி வரை தான் செல்ல முடிந்தது. நான் பேருந்து ஏறி தினமும் கல்லூரி செல்வதைக் கண்டு பொறுக்க முடியாத என் உறவெனக் கூறிக் கொள்ளும்  பலர் எனது படிப்பை நிறுத்தும்படி என் தந்தைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். என் பிடிவாதத்தால் மட்டுமே, நான்கு ஆண்டுகள் நீடித்தது என் கல்லூரி வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் பொழுதே ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியும் கிட்டியது. பணியிடம் சென்னை. வீட்டில் ஒரு பிரளயம் வெடித்தது.

சினந்தேன், சினுங்கினேன், உருகினேன், அழுதேன், கெஞ்சினேன், கதறினேன். எது பலித்தது என்று தெரியாது, என் அன்னை எனக்கு துணை நிற்க பெரிய கனவுக் கோட்டைகளுடன் சென்னையை நோக்கி பயணித்தேன். சென்னை என்னை ஏமாற்றவில்லை. என் ஏக்கங்களை தீர்த்தது. பல தரப்பட்ட மக்களை சந்தித்தேன், பல கதைகளை கேட்டேன், நான் இழந்த பருவங்களை எண்ணி வருந்தினேன். கட்டுப்பாடு இல்லாத வாழ்கையில் சகல சந்தோஷங்களுக்கு வாயில் கதவு திறந்தே இருந்தபோதும் ஒரு கணமும் என் நிதானத்தை இழக்கவில்லை நான். அயாரது உழைத்தாலும், பெண்கள் ஆண்களுக்கு கீழ் தான் என்று முகத்தில் அறையாத குறையுடன் அந்த கார்ப்பரேட் சமூகம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.

பல அடிகள் பட்டு, ஒருவழியாக பணியில் முன்னேறும் தருணம் வந்தபொழுது, வீட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சென்னையின் எனது சுதந்திர வாழ்க்கைக்கு முடிவு கட்ட. சில விஷயங்களில் என்னைப் போல் அதிஷ்டக்காரி யாரும் இல்லை. ஏன் தெரியுமா?. சொல்கிறேன். பல மாதங்கள் பல ஆண்டுகளா மாப்பிள்ளைத் தேடியும் வரன் அமையாமல் பலர் தவிக்க, எனக்கு மட்டும் முதல் வரனே கைகூடியது உங்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் தானே.

திருமணத்திற்கு முன்னரே வேலை விட வேண்டி எனது புகுப்போகும் வீட்டார் கட்டளையிட எனது தந்தை அடிபணிந்தார். இது நான் எதிர்பார்த்தது தான், ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. இருப்பினும் ஒரே ஆறுதல் தந்த விசயம் என்னை மணக்கப் போகும் அவர் பணிபுரியும் அயல் நாட்டிற்கு என்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தது தான். கல்யாணம் மற்றும் எல்லாச் சடங்குகளும் என் மாமியாருக்கு பல குறைகளுடன் முடிய, திருமணமாகி இரண்டாம் வாரம் என்னைப் பின் வரச்சொல்லி விட்டு என் கணவர் பறந்து சென்றார்.

சென்னையில் எனக்கு கிடைத்த நடப்புகளைக் கொண்டு எனது வீசா ஏற்பாடுகளை விரைந்து செய்தேன். வீசா நேர்காணலையும் சிக்கலற்று முடித்துவிட்ட மகிழ்ச்சியுடன் மருத்துவ சோதனைக்கு சென்ற பொழுது தான் அந்தச் செய்தி எனக்கு கிடைத்தது. கருவுடன் விமானம் ஏற மருத்துவம் பச்சை கொடி காட்டினாலும், வீசா தர அந்த நாடு மறுத்தது. என்னை தவிர்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், 'கல்யாணம், குழந்தை என்ன வாழ்க்கை இது' என்ற எனது வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு தான் தோன்றியது.                        

கருவுற்று கணவனைப் பிரிந்து தனிமையில் போராடுவதன் வலி எனக்கு புரிந்தது அந்த ஆரம்ப காலங்களில் தான். நீங்கள் மாமியார் கொடுமைகள் பற்றி பல கதைகள் படித்திருபீர், பல தொடர்கள் பார்த்திருப்பீர் ஆனால் அவற்றில் ஒன்றிலும் ஒவ்வாத சம்பவங்கள் தான் எனக்கு அவர் வீட்டில் நடந்தது. எனக்கு பிறக்கப் போவது நிச்சயம் பெயரன் தான் என்று எதோ ஒரு நிமித்தக்காரன் மூலம் முடிவு செய்து கொண்ட என் மாமியார், என்னைக் கையில் வைத்து தாங்கத் தொடங்கினார். இதைப்போய் கொடுமை என்று சொல்லுகிறாயே உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று தானே நினைக்கின்றீர். அளவுக்கு மீறும் போது அன்பும் கொடுமையாகத் தான் மாறியது எனது விஷயத்தில். என்ன புரியலையா?. உங்களுக்கு எல்லாவற்றிற்கும் உதாரணம் சொன்னால் தான் விளங்குகின்றது. உங்களுக்கு மார்கண்டம்  தெரியுமா?. நீங்கள் அசைவ பிரியர் என்றால் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. மூன்று மாதங்களுக்கு முன்னால் இதேக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால் 'எனக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மார்த்தாண்டம் தான் தெரியும்' என்று சொல்லியிருப்பேன்.

முட்டை வாசனை என்றாலே பக்கத்து தெரு வரை ஓடும் எனக்கு, பெயரன் வளமுடன் பிறக்க வேண்டும் என்று சகல உயிரினங்கள் மற்றும் தாவரங்களை சமைத்து தினமும் விருந்தளித்தார் என் மாமியார். அந்த அப்பாவி ஆட்டின் எந்த பகுதியையும் உண்ணாமல் விடுவதில்லையா நீங்கள்?. முதல் முறை அந்த மார்கண்டத்தை பற்றி உண்ட பின் தான் அறிந்தேன், உடனே வாந்தியும் எடுத்தேன். பேறு கால வாந்தி என்று அவரே முடிவு செய்து மீண்டும் அதை என் வாயில் திணித்தார் என் கணவரின் அன்பு அன்னை. என் நடையில் தப்பு, அமர்வதில் திருத்தம், படுப்பதில் கவனம் என்று ஒன்றல்ல ரெண்டல்ல அடுக்கிக்கொண்டே போகலாம் அவர் தன் பெயரன் பால் செய்த அன்புத் தொல்லைகளை.        

உனக்கு எதிலும் குறைகள் தானா சந்தோஷம் என்பதே கிடையாதா என்று உங்கள் மனதில் ஓடும் எண்ண அலைகளை என்னால் உணரமுடிகின்றது. என் வயற்றில் இருந்த குழந்தையை, கருப்பு வெள்ளை படமாக கணினி திரையில் மெல்ல அசையக் கண்ட போது எனக்கு கிட்டிய இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. பத்து நாள் தவிர்த்து, கைபேசியில் மட்டுமே கண்ட கணவன், கணவன் இல்லாது மாமியார் வீட்டில் சிறை, என சிதைந்து போன எனது கனவுக் கோட்டைகளை எண்ணி கண்ணீர் பெருகிய பொழுது, 'உனக்கு நான் இருக்கிறேன்' என்பது போல, என் செல்வம் என்னை முதன்முறை வயிற்றில் உதைத்து சைகையால் உணர்த்தினான். அதன்பின் எப்பொழுதெல்லாம்  என் மனம் கணக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் அவன் உதைத்தான். இப்படியே இன்பமும் துன்பமும் ஒரு சேர கலந்தோடி ஏழு மாதங்கள் கடந்து, யாரும் எதிர் பாராத ஒரு சிக்கல் உருவானது.      

தலை பிரசவத்திற்கு என்னைத் தாய் வீடு அழைத்துச் செல்ல வந்த என் பெற்றோரை, 'அனுப்ப முடியாது'  என்று விரட்டி அடித்தார் என் மாமியார். அவருக்கு என் மீது அவ்வளவு பாசம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். அவரது பெயரன் நலமுடன் உலகில் அடியெடுக்கும் வரை என்னை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். இரு தரப்பினருக்கும் சண்டை வலுத்து, ஊர் பஞ்சாயத்து வரை சென்று, இறுதியில் நான் பிரசவத்திற்கு தாய் வீடு செல்ல வேண்டும் என்று தீர்ப்பானது. இதில் வேடிக்கை என்னவென்றால், என் தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளிலும் கடைசி வரை யாருமே என் விருப்பத்தை கேட்டதில்லை. என் மாமியாரின் அன்புதொல்லைக்கும் என் பெற்றோரின் சுய மரியாதைப் போருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமானவள் நான்.  

தாய் வீட்டில் சுகந்திரத்துடன் இருந்தாலும், கர்ப காலத்தின் இறுதி சில வாரங்களில் உடல் எடை கூடி உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல், மிக மெதுவாக நாட்கள் சென்று ஒரு வழியாக மருத்துவர் கொடுத்த கெடு நெருங்கியது.  பொதுவாக அனைவருக்கும் குறித்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வலி வரும் என்பர், எனக்கு என் மாமியார் உருவில் சுனாமியே வந்தது. அவர் என் வீட்டிற்கு வந்து எங்களுடன் தங்கி, வீட்டில் யாரும் யாருடனும் பேசாமல் இருந்த அந்த இரண்டு நாட்கள் நரகம். என் அம்மா ஒன்று சொன்னால் வீம்பிற்கு என்றே இவர் அதற்கு முரணாக ஒன்று சொல்வார். இவர்கள் சண்டையில் எனக்கு மனவேதனை வந்ததே ஒழிய, வரவேண்டிய வலி வரவில்லை. குறித்த தேதி இன்று, மாலை வரை வலி வராததால் மருத்துவமனைக்கு சென்று விட்டோம். மருத்துவர் வலி வர சற்று நேரம் காத்திருக்க வைத்த நேரத்தில், 'என்னிடமே இருந்திருந்தால் இந்நேரம் என் பெயரன் அழும் சத்தம் கேட்டிருக்கும்' என்று என் மாமியார் தொடங்கிய வாசகம், என் அன்னைக்கும் அவருக்கும் பெரும் வாக்குவாதத்தை கிளறியது. என்ன கொடுமை இது இறைவா! என் குழந்தை தோன்றும் பொழுதே இந்த உலகின் மீது வெறுப்புடன் பிறக்க வேண்டுமா?. இல்லை, வேண்டாம்.  இந்த வாசகங்கள் கேட்காதபடி உன் கருணையால் என்னைச் சில நாட்கள்  செவிடாக்கி விடு. 

Saturday, November 14, 2015

அவன் (சிறுகதை)

எல்லாக் கதைகளையும் போல், 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை' என்று புணைப் பாத்திரங்களுடன் இந்தக் கதையை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதால் என் வாழ்வில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை நடந்தவாறே உங்களுடன் இங்கு பகிர்கின்றேன்.  

நான் எப்பொழுது வட சென்னை  சென்றாலும், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம். சென்னையின் மக்கள் மற்றும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல்  தென் சென்னையில்   இருந்து வட சென்னைக்கு ரயிலில் சென்று திரும்புவது உசிதமாகவே கருதுவேன். அன்று சனிக்கிழமை என்பதால், வழக்கமாக ரயிலில் செல்பவர் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் வேளை, என்று நினைத்து ரயில் நிலையம் சென்ற எனக்கு அங்கு கடலென தேங்கி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் மிரண்டேபோனேன். பின்பு விசாரிக்கையில் தான், தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செலுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட செய்தி தெரிந்தது. ரயிலில் பெருகி வழிந்த மக்களின் வியர்வை மணத்தில் தான் தொடங்கியது எனக்கான அன்றைய தினம்.

பல வித பொருட்களை பல பாணியில் கூவி விற்போர், திண்பண்டங்கள் விற்போர், பாட்டு பாடி பிச்சை கேட்போர், வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம் ரயில் பயணங்களின் சுவாரசியங்களை.   ரயில் பயணம் தரும் சுகமும் வேறு எந்தப் பயணத்திலும் கிடைப்பதில்லை. அன்று எனது அலுவல்களை முடித்து மீண்டும் ரயிலில் வீடு திரும்பும்போது நடந்த அந்த சம்பவம் தான் இந்த தமிழ் சமூகத்தின் மீது எனது பார்வையை மாற்றியது.  

பர்மா பஜாருக்கு அருகில்  அத்தோ(பர்மா வகை உணவு) சாப்பிட்டு, சென்னை பீச் ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த ரயிலில் வேகமாக ஓடி ஏறினேன். ரயிலில் கூட்டம் சற்று மந்தமாக இருந்த பொழுதும் உட்கார இடம் இல்லாததால், கதவுக்கு அருகில் நின்று கொண்டேன். பார்க் ரயில் நிலையத்தில் சுமாரான கூட்டம் ஏற ரயில் சற்று நிரம்பியது. கூட்டம் அதிகமானபோதும் என்னால் எனது இடத்தை தக்க வைக்க முடிந்ததை எண்ணி நான் கொண்ட பெருமிதம் மாம்பலம் வரையில் தான். வடக்கில் கங்கை வற்றா நதியென்றால், தெற்கில் ரங்கநாதன் தெருவிலும் அதை சார்ந்த அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகளிலும் என்றும் மக்கள் கூட்டம் வற்றுவதில்லை. இவர்கள் நகரின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கினாலும், மண்ணை பிரியா பூர்வக்குடிகள் போல மக்கள் படையெடுப்பு தி.நகருக்கு தான். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறிய மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ரயில் பெட்டியின் மத்தியில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை காற்றில் நிறுத்தி தவம் செய்யும் முனிவர் போல் எனது நிலைமை நொடிப்பொழுதில் மாறியது.

              
இன்னும் இருபது நிமிடம் தம் கட்டினால் குறைந்த சேதாரத்துடன் வீடு திரும்பி விடலாம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு எனது காற்சட்டையில் இருக்கும் பணப்பையின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டேன். சைதையில் ரயில் புறப்படும் போது கதவருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே காண்பது போல தோன்றியது. எனது கண்களை அந்தக் கண்களோடு பொருத்தினேன், அந்தக் கூடலில் நான்கு கண்களும் இமைக்கவில்லை. எனது கண்களை வேறு திசையில் திருப்பி கைபேசியை நோண்டுவதுபோல்  பாசாங்கு செய்து, ஓரக்கண்ணால் அந்த திசையை நோக்கினேன், அந்தக் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டிருந்தன. 

பரங்கிமலை வந்ததும், கூட்டம் சற்று குறைய, அந்தக் கண்கள் என்னை நோக்கி நகரத் தொடங்கின. பெரிதும் கலவரம் இல்லாமல் இயல்பாக அந்தக் கண்களைக் கொண்ட உருவம் நகர, எனது சட்டை கழுத்து சங்கிலியை மறைக்குமாறு அதை மேலே தூக்கி விட்டுக் கொண்டு, கைபேசியை இறுக பிடித்துக் கொண்டேன். எனது ஒற்றைக் கால் தவம் முடிந்து, இரு கால்களை தரையில் ஊன்றி நிற்க, அந்தக் கண்களின் இரண்டு கால்கள் எனது கால்களுக்கு நடுவில் வந்து நின்றன. சுற்றி பல வித மக்களின் எண்ண அலைகள் ஓடினாலும், என்னையும் அந்தக் கண்களையும் சுற்றி ஒரு கவசம் போல காணமுடியா பிம்பம் ஒன்று அமைந்து தனிமை நிலையை உண்டாக்கியது. 

அந்தக் கண்களின் எண்ணம் புரியாமல் நான் தவிக்க அதன் வாய் தமிழில், 'நீங்க இன்போசிஸ் ஆ' என்று கேட்க, நான் 'இல்லை' என்று வார்த்தையால் சொல்லும் முன் வேகாமாக தலையை அசைத்து சைகை செய்தேன். 

'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு' என்றான்,

 நான் 'ழே' என வார்த்தையின்றி விழிப்பதை அவன் கண்டு அடுத்த கேள்வியை 'நீங்க தாம்பரமா?' என்று தொடுத்தான். 

நான் 'ஆம்' என்றேன். 

'எந்த தெரு' என்று  கணை போல் பாய்ந்தது அவனது அடுத்த கேள்வி. இப்பொழுது எனது உடல் நாலாப் பக்கமும் கூட்ட நெரிசலால் அழுத்தப் பட்டிருந்தது, இங்கு குறிப்பிட முடியாத சில அங்கங்களிலும் சற்று அழுத்தம் தோன்ற, எனது முகத்தில் சங்கடம் சலனமானது.     

அவன் எனது முகவரியைக் கேட்டவுடன் எனது நுண்ணறிவு விபரீதத்தை உணர்த்த, 'வால்மீகி தெரு' என்று தப்பான தெருவை சொல்லி தப்பித்து விட்டோம் என்று சற்றே இளகும் பொழுது ரயில் பல்லாவரம் வந்தடைந்தது.     

அவன் கண்ணில் ஆயிரம் வாட் விளக்கொளியுடன் 'நானும் தாம்பரம் தான். வீடு தேடிட்டு இருக்கேன். உங்க தெருவுல வாடகலாம் எவ்வளோ?' என்று வினவினான். 

இன்னும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் என்று உற்சாகத்துடன் 'ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கும்' என்றேன். 

'வீடு காலியா இருந்தா சொல்லுங்க. என்னோட நம்பர் சேவ் பண்ணிகொங்க. உங்க நம்பர் சொல்லுங்க நான் மிஸ்டு கால் தரேன்' என்று எனது இதழ் என் கைபேசி எண்ணை உதிற காத்திருந்தான்.

வேறு வழியின்று எனது கைபேசி எண்ணை நான் சொல்ல, அவன் எனது கைபேசிக்கு அழைத்து 'பிரகஷ்ணு சேவ் பண்ணிகொங்க. உங்க பேர்?' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால்? என்ற அபாய எண்ணமும் தோன்றியது. என் மனம் குழம்பி நிற்க ரயிலும் சானடோரியத்தில் நிற்க, விரைந்து வெளியேறினேன். அந்த ரயிலில் நடந்ததை நினைத்த பொழுது உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தது. சொல்ல முடியாத சோகம் மனதை சூழ்ந்தது.         


வீடு சென்று தூங்கும் முன் பல முறை யோசித்தேன். ஏன் ஒருவரை தவறாக எண்ண வேண்டும். கூட்டம் அதிகம், இயல்பாக பட்டிருக்கலாம். உண்மையாகவே அவன் வீடு தேடிக் கொண்டிருக்கலாம். பல படங்கள் பார்த்தும் பல கதைகள்  கேட்டும் இந்த மனம் குறுகலாகவே எண்ணங்களை ஓட விடுகின்றது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தைதையே மறந்து போய் எனது இயல்பு வாழ்க்கையில் இருந்த ஒரு நாள், ஒரு பெயர் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

மறுமுனையில் 'ஹலோ நான் பிரகாஷ். அன்னைக்கு ட்ரைன் ல மீட் பண்ணோமே', 

நான் 'ஹும்ம்',  

அவன் 'வீடு எதாவது இருக்கா?'      

நான் 'இல்ல. கொஞ்சம் பிஸியாக இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்று மறுமுனையில் பேசும் முன் அழைப்பை துண்டித்து, அந்த எண்ணை 'DNA'(Do Not Attend), என்று சேவ் செய்துவிட்டேன்.

தினமும் அந்த எண்ணில் இருந்து தவறாமல் அழைப்பு வரும். நான் எடுக்காமல் நிராகரித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அவனே வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்தான். 

'என்ன ரொம்ப பிஸியா. போன எடுக்கறதே இல்ல' என்று கேட்டான்.

'வோர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு' என்று சலித்தேன்.

'வீட்ல யாரும் இல்ல. பசங்க எல்லாம் பார்ட்டி பண்றோம், நைட் வரீங்களா?  என்றவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

'இல்ல வேல இருக்கு. இதோ வரேன் சார்' என்று பாசாங்கு செய்து அழைப்பை துண்டித்தேன்.

இம்முறை அவனது எண்ணங்களும் அன்று ரயிலில் நடந்ததும் சுதி சேர்ந்தது. சென்னையிலும் இந்த நாகரீகம் வந்து விட்டதை முதலில் மனம் ஏற்கவில்லை என்றாலும், மாறி வரும் சூழல் அதை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தது. பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கு ஆண்களுக்கும் பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?            

Friday, March 27, 2015

தேன் மிட்டாய் - மார்ச் 2015

விளம்பரப் பலகைகள் 
மார்ச் மாதம் சில பரபலங்களின் அவதாரத் திருநாள் கொண்டாட்டங்களால் சென்னையின் சிங்காரம், பல அரசியல் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகளால் மெருகேறியிருந்தது. முக்கிய சாலைகளில் தொடங்கி, அந்தத் தெருவில் வசிக்கும் மக்கள் தவிர்த்து மற்றவர்கள் செல்லாத முட்டுச் சந்துகள் வரை விளம்பரப் பலகைகள் நிரம்பி வழிந்தன. தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டி மக்கள் முன்னேற்றத்தில் அன்றி விளம்பரப் பலகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவில் காணப்பட்டது. சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் சுமார் இருநூறு மீட்டர் தூரத்திற்கு நீண்ட விளம்பரப் பலகை ஒன்று என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.  இவற்றை அகற்ற டிராபிக் ராமசாமி என்று ஒரு முதியவர் போராடி, சிறை சென்று திரும்பியது எத்தனை பேருக்கு தெரியும் ? 

இலவசப் பயணம் 

ஒரு சனிக்கிழமை, அலுவலகம் முடித்து விட்டு, என் கிராமத்திற்குச்  செல்ல, அலுவலக வாசலில் பேருந்து வரக் காத்திருந்தேன். பங்குனி வெய்யிலில் இனி தாங்காது என்று, இரு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்க தொடங்கினேன். யமஹா fz இல், ஆஜானுபாகமான உடலுடன் ஒருத்தன் என் விண்ணப்ப சைகைக்கு இசைந்து வண்டியை நிறுத்த நானும் அவன் வண்டியில் ஏறிக் கொண்டேன். OMR  சாலையை அடைந்தவுடன் நான் செல்லுமிடம் சோழிங்கநல்லூர் என்று அறிந்தவுடன் அங்கேயே என்னை விடுவதாக அவன் கூற, பேருந்தை முந்தி விரைவாக சென்று விடலாம் என்று நானும் அவனுடனே பயணித்தேன். 

ஐந்து நிமிட பயணத்திற்கு பின் அவன் கைபேசி ஒலிக்க, தன் இடக் கையால் அதை எடுத்து பேச முயன்றான். சரியாக கேட்காததால் அழைப்பை துண்டித்தான். மீண்டும் ஒலிக்க, இடக்கையில் கைபேசியை காதின் மேல் சாய்த்துக் கொண்டு, ஒற்றைக் கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே பேசினான். சீருந்தில் ஓட்டுனர்  கைபேசி  பயன்படுத்தினாலே ஆபத்து, இவனோ இரு சக்கர வண்டியில் ஒற்றைக் கையில் மிகவும் சாதரணமாக கைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை செலுத்த என்னுள் திகில் கிளம்பியது. 'வண்டியை நிறுத்தி விட்டு பேசுங்க'  என்று நான் சொல்லிய பொழுது அவன் யானைக் கண்கள் வீசிய அனல் பார்வை அவன் தோற்றத்தை மேலும் கொடூரமாக்கியது. சோழிங்கநல்லூர் வந்தவுடன் வேகமாக இறங்கி சாலையைக் கடந்து ECR  நோக்கி நடந்தேன், இல்லை ஓடினேன் என்றே சொல்லலாம்.        

   
மகளிர் மட்டும் 

ஐந்து நிமிடம் தான் ECR சாலையில் காத்திருந்தேன் என்றாலும், சோழிங்கநல்லூர் சந்திப்பில் அக்கரைபேருந்து நிறுத்தத்தில் நிழழ்குடை இல்லாததாலும் நிழல் தர ஒரு மரமும் இல்லாததாலும், சில வினாடிகளில் சூரியக் கதிர்கள் என் உடலில் ஊடுருவி என்னை வியர்வையில் குளிக்கச் செய்தன. பேருந்து வந்தவுடன் அடித்து பிடித்து முதல் ஆளாக ஏறி, கண்ணில் முதலில் பட்ட ஒரு காலி இருக்கையை நோக்கிச் சென்று, என் மூட்டை முடிச்சிகளை மேலே வைத்து விட்டு அந்த இடத்தில அமர ஆயத்தமானேன். அந்த காலி இருக்கை சாளரத்தின் அருகில் இருக்கவே, அதற்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியை சற்று நகர்ந்து வழி விடச் சொன்னேன். ஆனால் அவரோ, சிறிதும் அசையாமல்  'லேடீஸ் வராங்க அவங்க ஒட்காருவாங்க' என்றார் . கோபம் என் தலைக்கேறி 'இங்க லேடீஸ் சீட்னு எங்கயும் எழுதி இல்லையே' என்று கடிந்தேன். சற்றும் தன் நிலையில் இருந்து மாறாமல் 'லேடீஸ் இருந்தா லேடீஸ் தான் பக்கத்துல உட்காருவாங்க' என்றார். சூரியக் கதிர்களின் உஷ்னத்தை விட பல மடங்கு எனக்குள் கோப ஜுவாலை எரிந்தாலும், சண்டைப் பிடித்து அந்தப் பெண் அருகில் அமர்ந்து எனது பயணத்தை சங்கடத்துடன் தொடர உடன்பாடு இன்றி, அமைதியாக பின்னே வந்த பெண்மணிக்கு வழி விட்டு நகர்ந்தேன். இந்த சம்பாஷனைகள் நடந்து முடிவதற்குள் மீதம் இருந்த காலி இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்துவிட, டிக்கெட் கொடுக்கும் பொழுது நடத்துனர் என்னிடம் மாமல்லபுரத்தில் இடம் காலியாகும் என்று ஆறுதல் அளித்தார். 

அந்த பெண்மணியின் வயது எப்படியும் அறுபதிற்கு அருகில் இருக்கும். அவரது பெயரன் போல் இருக்கும் என்னை அவர் அருகில் அமர விடாமல் தடுத்தது எது. பெண்களுக்கே உண்டான பண்புகளா அல்லது இந்த சமுதாயமா? இந்த ஒன்று மட்டும் எப்பொழுதும் எனக்கு விளங்குவது இல்லை. மாநகரப் பேருந்தில் பெண்கள் எந்த இருக்கையில் அமர்ந்தாலும் அமைதியாகப் போகும் ஆண்கள் ஒரு புறம் இருக்க. பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடது புற வரிசையில் எப்பொழுதும் பெண்களே அமர்ந்தாலும், பேருந்தின் பின் புறம் இருக்கும்  ஒற்றை வரிசையில் ஒரு ஆண் மகன் உட்கார்ந்தாலே சண்டை பிடிக்கும் சில பெண்களும் உண்டு. அப்படி அவர்கள் சண்டை பிடிக்கும் அதே நேரத்தில் ஆண்கள் வரிசையில் சில பெண்களும் அமர்ந்திருப்பதை ஒரு பொருட்டாக மதியாதது தான் விந்தையிலும் விந்தை. அதை என்றுமே எந்த ஆணும் சட்டை செய்வதில்லை. ஆண்கள் இந்த விஷயத்தில் நிச்சயம் தியாகச் செம்மல்கள் தான்.      

பொதுக்கூட்டம் 

கிராமத்திற்கு போகும்போது தான் இப்படி ஒரு கசப்பான அனுபவம் என்றால், சென்னை திரும்புகையில் அதுக்கும் மேல் ஒரு அனுபவம் கிடைத்தது. பொதுவாக, சோழிங்கநல்லூர் ECR இல் இறங்கி, பழைய எண் 'C 51'/ புதிய எண் '99'  கொண்ட வழித்தடப் பேருந்தில் பயணம் செய்தால் நாற்பது நிமிடங்களில் தாம்பரம் சென்றடையலாம். க்ளோபல் ஹாஸ்பிடல் வரை தடையின்றி வந்தப் பேருந்து அதன் பின் ஆமை வேகத்தில் சாலையில் ஊரத் தொடங்கியது. எந்த நேரத்திலும் போக்குவரத்து பெரிதும் தடைப்படாமல், வாகனங்கள் ஒரே சீராக செல்லும் இந்தச் சாலையில், இந்த எதிர்பாரத நெரிசலின் காரணம், மேடவாக்கத்தில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு அரசியல் கூட்டம் என்ற செய்தி காற்றில் வேகமாக பரவியது. பத்து நிமிடங்களில் கடக்க வேண்டிய மேடவாக்கத்தை கடக்க அன்று எழுபத்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகின. பேருந்தில் அமர இடமும் இன்றி, ஜன சமுத்திரத்தில் பலரின் வியர்வையில் முக்க, அது ஒரு துக்க அனுபவமாகவே மாறியது. அந்த அரசியல் கட்சியின் மீது இங்கு எழுத முடியாத பல தகாத வார்த்தை அம்புகளை எய்தும் என் கோபம் தணியவில்லை. 




பேருந்து சாலையில் அந்தப் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தை கடந்த பொழுது, அந்த மேடையில் ஏறி 'கூட்டம் போட பல காலி இடங்கள் இருக்க, இப்படி நடு ரோட்ல....' என்று அவர்கள் சட்டையை பிடித்து பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அப்படி கேட்டால் ஏற்படும் பின் விளைவுகளை உன்னால் சம்மாளிக்க முடியுமா  என்று என் மூளை என்னைக் கேட்க, ஆத்திரத்தை அடிமைத் தனம் வென்றது. பணம் கொடுத்து கூட்டம் கூட்டி பேசினாலும், அன்று அந்த போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் மட்டும் தான் சம்பாதித்தோம் என்பதை அந்தக் கட்சி உணருவதெப்போது?                 

Saturday, March 21, 2015

Sunrise at Broken Bridge, Besant nagar

பல நாட்களுக்கு முன்,  'சென்னையில் செய்ய வேண்டிய நூறு விஷயங்கள்' என்று இணைப்பில் வந்த ஒரு பட்டியல், நான் செய்த பலவற்றின் நினைவுகளைத்  தூண்டினாலும், செய்யாத சில வற்றின் மீது என் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பட்டியலில் நான் செய்யாதவற்றில் ஒன்றான, பெசன்ட் நகரில் இருக்கும் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் சூரியோதயத்தை ரசிப்பது. இந்த எண்ணம் பல நாட்களாக ஆழ் மனதில் பதிந்துகிடக்க, மிக சமீபத்தில் அரங்கேறியது.

ஒரு நாள் நடுநிசியில் அலுவல் முடிந்து வீடு திரும்பும் பொழுது, மறுநாள் விடியல் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் என்ற தீர்மானத்துடன்  நித்ரா தேவியை அடைந்தேன். வேலை நேர ஒழுங்கற்ற  IT துறையில், தாமதமாக படுத்து அதிகாலையில் எழும் பழக்கம் இருக்கவே, அடுத்த நாள் ஐந்து மணிக்கெல்லாம் என் ஸ்ப்ளென்டரில் பெசன்ட் நகர் நோக்கிய பயணத்தை தொடங்கினேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் நண்பன், கன்யா குமரியில் நடுக்கடலில் இருந்து சூரியன் உதிக்கும் இயற்கையின் விந்தையைக் காண ஆவலுடன் அழைத்துச் சென்றதும், மேகக் கூட்டங்கள் வில்லன் போல் வந்து, நடுவானம் வரும் வரை சூரியனை மறைத்து வைத்து எங்களுடன் விளையாடிய கண்ணாம் பூச்சி ஆட்டத்தின் நினைவுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே, பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையை அடைந்தேன்.  

கடற்கரை மணலை அடைந்தும், மேலும் செல்லுமாறு கூகுள் அம்மணி வழி காட்ட, அங்கு மணல் தவிர சாலை ஏதும் கண்ணில் படாததால், அருகில் தன் வழக்கமான அதிகாலை நடை  பயிற்சிகளை மேற்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடையவரை வழி கேட்டேன். அவர் என்னை அழைத்துக்கொண்டு கூகுள் அம்மணி காட்டிய வழியை  நோக்கி நடக்க, 'இவரும் என்னுடன் வருவாரோ?'  என்ற எனது சந்தேகம் அடுத்த வினாடி அவர் செல்லும் பாதையை சுட்டி காட்டி விட்டு, தன் நடை பயிற்சியை தொடர திரும்பிய பொழுது தீர்ந்தது. மேலும் அங்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் தன் பெயரை சொல்லும்படி கூறிவிட்டு, பெருமிதத்துடன் விடைபெற்றார். 'என்ன பிரச்சனை வந்து விடும்' என்று எண்ணிக் கொண்டே அவர் சொல்லிய அந்தப் பாதையை தொடர்ந்தேன். தெருவிளக்குகள் இல்லாத ஒரு மணல் சாலையில் எனது ஸ்ப்ளென்டரின் மங்கிய ஒளி வழிகாட்ட, சாலையின் நடுவே கடலை நோக்கி ஓடிய கழிவு நீர் கால்வாய்களை பற்றி அந்த வழி காட்டியவர் எச்சரித்தால், கழிவு நீர் மேலே அடிக்காமல்  நிதானமாக வண்டியை செலுத்திக்கொண்டு இலக்கை நோக்கிச் சென்றேன்.     

அந்த கும் இருட்டில் இரு புறமும் புதர்கள் இருக்க, எதிரே ஒரு சின்ன கான்க்ரீட் பாலம் தென்பட, நான் வண்டியை நிறுத்தவும் கூகுள் அம்மணி 'You have reached your destination' என்று உறைக்கவும் சரியாக இருந்தது. வண்டியை பூட்டி விட்டு, மணலில் இருந்து இரண்டு அடி மேலே இருந்த அந்த பாலத்தில் ஏறி நடக்கத் தொடங்கினேன். மை இருட்டு நிலவிய அந்த அதிகாலை வேளையில், என்னைத் தவிர வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதது, எனக்குள் கிலியை கிளப்பினாலும், மன உறுதியுடன் நடந்தேன். இரண்டு நிமிட நடையில் அந்த பாலம் உடைந்து கிடந்த இடத்தை அடைந்தேன். இயற்கையாகவே, சில நிமிடங்கள் இருட்டில் இருந்தால் பார்க்கும் சக்தி பெரும் மனிதக் கண்களுக்கு, அங்கு இருந்த  நிலவொளியும் உதவ,  அடுத்த முனைக்கும் இந்த முனைக்கும் இடையில் தண்ணீர் ஓடுவதை காண முடிந்தது. அப்பொழுது மணி 5 35. அருகில் இருந்த அடுக்கு மாடிகளின் பிம்பத்தை சந்திரன் அடையாறு நதியில் பிரதிபலித்த அந்த அற்புதக் காட்சியை அந்த வீடுகளில் உறங்கிக் கொண்டிருப்பவர் அறிவரோ?  


நேரம் கடந்தபோதும் சூரியன் உதயமாவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாததால்,  அன்று கதிரவன் உதயமாகும் நேரத்தை கைபேசியில் இணையத்தின் உதவியுடன்  ஆராய்ந்த சமயம் இந்த ப்ரோக்கன் ப்ரிட்ஜின் வரலாற்றையும் ஆராயத் தொடங்கினேன். அச்சமயம் எனக்கு கிடைத்த சில தகவல்கள் தனிமையில் இருளில் இருந்த எனக்கு மேலும் பீதியை கிளப்பியது. 1960களில், எலியட்ஸ் கடற்கரை முதல் சாந்தோம் வரை செல்லும் மீனவர்கள் போக்குவரத்திற்கு அனுகூலமாக, அடையாறு முகத்துவாரத்தின் மேல் கட்டப்பட்ட இந்த பாலத்தின் ஒரு பகுதி  1977 இல் அடையாறு நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சேதமடைந்து, பழுது பார்க்கப்படமால் போகவே இந்த 'ப்ரோக்கன் பிரிட்ஜ்' உருவானது.  காலப்போக்கில், ஆதவனின் பார்வை இருக்கும் போதும் சினிமா படம் பிடிக்கும் இடமாகவும், அவன் பார்வை மறைந்த பின் பல சட்டத்துக்குமாறான செயல்களின் மையமாகவும் செயல்படுவதான தகவல்கள் இருந்தன. வழிகாட்டியின் எச்சரிக்கைக்கான காரணம் விளங்கும் வேளையில், அந்த இடத்தில அமானுஷ்ய சக்திகள் இயங்குவாதாக அந்த வட்டார மக்கள் சொல்வதுண்டு என்ற செய்தி என்னுள் திகில் உண்டாக்க,  இப்படிப்பட்ட இடத்தில் எனது ஸ்பளென்டர்  நிறுத்திய இடத்தில் இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுந்தது.      

ப்ரோக்கன் பிரிட்ஜ்
பாலம் உடைந்த இடத்தில இருந்த நான், பாலத்தின் தொடக்கத்தை நோக்கி அந்த இருளில் விரைந்தேன். பாலத்தை நோக்கி வந்த ஒரு இருசக்கர வண்டி, சட்டென்று கடற்கரை பக்கம் திரும்ப எனது பயம் அதிகரித்தது. சந்திர ஒளியில் என் வண்டியின் கண்ணாடி மின்ன நிம்மதிப் பெருமூச்சு விட்டு, இவ்வளவு தூரம் வந்ததிற்கு சூரியோதயம் காணமல் திரும்புவதில்லை என்று மனதை உறுதி படுத்திக்கொண்டு, வண்டி என் கண்பார்வையில் இருக்கும் இடத்தில பாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு கிழக்கு வானத்தை நோக்கினேன்.
     ​

முதலில் இருளாக இருந்த வானில், ஒரு கருப்பு அட்டையின் நுனியில் காவியை சிறு கோடுகளாக தடவியது போல், கதிரவனின் கதிர்கள் மெல்ல படறத் தொடங்கின. நேரம் செல்லச் செல்ல என்னைச் சுற்றி நல்ல வெளிச்சம் தோண்றியபொழுதும், வானில் செந்நிறக் கதிர்களை அன்றி கதிரவனை காண முடியவில்லை. கன்னியாகுமரியில் நடந்த ஏமாற்றம் இங்கும் ஏற்படுமோ என்று நான் நம்பிக்கை இழக்கும் தருவாயில், அசத்தலாக திரையில் முதல் காட்சியில் தோன்றும் ஒரு மாஸ் நாயகன் போல, கடல் நீர் பரப்புக்கு அருகில் தோன்றிய ஒரு மேக கூட்டத்தைப் பிளந்து கொண்டு எழுந்த ஆதவன் தன் மென்மையான காலைக் கதிர்களை வீசி, நீல நிறக் கடல் நீரை செந்நிறமாக காட்சியளிக்கச் செய்தான். 










சூரியன் முழுமையாக உதயமான பின்பு, அடையாறு வங்கக் கடலில் சங்கமமாகும் இடத்தில தான் அந்த பாலம் உடைந்திருப்பதை கண்டேன். ஆற்றின் நீர் கடலில் சென்று கலக்கும் பொழுதும், கடல் நீர் தன்  எல்லையத் தாண்டாமல் நிற்பது இயற்கையின் விந்தை தான். ஒரு புறம் வேகமாக ஓடி வரும் அடையாறு நீர், மறு புறம் அலைகளுடன் சீறிக் கொண்டிருக்கும் வங்கக் கடல் நீர், இவை இரண்டும் சங்கமமாகும் இடத்தில நிலவும் ஒரு வகை அமைதி. இவற்றைக் கண்டவுடன், பாலத்தின் நுனியில் இருந்து அருகில் இருந்த மணற்பரப்பின் மேல் தாவி குதித்து, கடற்கரையை நோக்கிச் சென்றேன். அங்கு எனக்கு கிடைத்த பேரமைதியை ரசித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கு நடைப் பயிற்சி செய்து கொண்டு வந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் 'தம்பி இந்த இடத்துல தனியா எல்லாம் இருக்கக் கூடாது. ஆள் நடமாட்டம் இருக்கற இடத்துக்கு போய்டு' என்று அதிகாரம் கலந்த அக்கறையுடன் கூறினார். மை இருட்டில் அந்தப் பாலத்தின் மேல் தனியாக நான் அமர்ந்திருந்ததை பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோ என்று என் மனதினுள் நினைக்க, இதழில் தோன்றிய புன்முறுவலுடன் அந்த இடத்தை விட்டு நகர தொடங்கினேன். 


ஆறும் கடலும் கூடும் இடம் 

சங்கமத்திற்கு அருகில் நான் 
கடற்கரையை விட்டு விலகும்  முன், அந்த உடைந்த பாலத்தை ஒரு முறை பார்த்தேன். ஏழு எட்டு பேர் கொண்ட ஒரு இளைஞர் பட்டாளம், சூரியோதயத்துடன் தமது காலை டாஸ்மாக் பஜனையையும்  தொடங்கியிருந்தனர். பெண்களோ அல்லது தனியாகவோ செல்ல முடியாத இந்த இடத்தில, வாழ்க்கையில் கிடைக்கும் மாபெரும் சந்தோஷங்கள் அனைத்தும்  இலவசம் தான் என்பதை செயற்கையாக தோன்றியுள்ள இந்த இயற்கை உணர்த்தியது.              


கடற்கரையில் இருந்து தெரியும் பாலத்தின் காட்சி 

Thursday, March 12, 2015

சாப்பாட்டு ராமன் - சீனா பாய் டிபன் சென்டர்

ஹோலி பண்டிகை கொண்டாட ஆசைப் பட்ட ரூபக், சரியான துணை மற்றும் இடம் கிட்டாத காரணத்தால், சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் புழங்கும் சௌகார்பேட்டைக்கு ஹோலி அன்று மாலை சென்றான். யாரேனும் ஒருவராவது தன் மீது வண்ணம் அடிக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் மின்ட் ஸ்ட்ரீட்டினுள்  நுழையும் போதே, காவல் துறை போக்குவரத்தை தடுத்து, நடந்து செல்பவர்களை மட்டும் அந்த தெருவினுள் அனுமதிப்பதைக் கண்டு, தன் எண்ணம் ஈடேறும் என்று ரூபக்கிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

அந்தச் சாலையில் என்றும் இயங்கும் கடைகள் அன்று அடைக்கப்படிருந்தன. ஹோலி விளையாடியதற்கு சாட்சியாக, கரும்பலகையில்  பல வண்ணங்கள் கொண்டு வரைந்தது போல், அந்த  தார் சாலை தனது சுய நிறத்தை இழந்து வானவில்லாக ஜொலித்தது. அந்த சாலையில் சற்று தூரம் சென்றவுடன் எதிரில் வந்த புலியாட்டம், தாரை, தப்பட்டை, மற்றும் ஆண்டாள் ஊர்வலம் ஆகியவற்றைக் கண்டவுடன் தான் ரூபக்கிற்கு போக்குவரத்து மாறுதலுக்கான உண்மை காரணம் புரிந்தது. ஹோலி அன்று வடக்கர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆண்டாள் எந்த வித இடையூறும் இன்றி ஊர்வலம் வருவது நம் நாட்டின் ஒற்றுமையை ஓங்கச் செய்தாலும், ஹோலி கொண்டாட முடியாமல் போனது ரூபக்கிற்கு பெரும் ஏமாற்றமே.                

ரூபக் ஏமாந்தாலும், ராமனையாவது குஷிப்படுத்தலாம் என்று பர்மா வகை உணவுகள் கிடைக்கும் பீச் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தோம். சமீப காலத்தில் அவதாரம் எடுக்காமல் அடங்கியே வாழும் ராமனை அந்த வழியில் கண்ட ஒரு கடை விலாசத்தில் இருந்த 'George Town' என்ற வார்த்தை தட்டி எழுப்பியது. சுமார் ஓர் ஆண்டுக்காலமாக  George Town பகுதியில் இருக்கும் சீனா பாய் டிபன் சென்டரில் ஊத்தாப்பம் உண்ணவேண்டும் என்பது அவன் ஆழ் மனதில் பதிந்து இன்றுவரை நிறைவேறாத  எண்ணம். உடனே கூகுள் மேப் துணையுடன் அந்தக் கடை இருக்கும் இடம் அருகில் தான் என்பதை அறிந்து, கூகுள் அம்மணி வழி காட்ட தன் இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கினான். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அந்த வழி தான் பயணம் தொடங்கிய மின்ட் ஸ்ட்ரீட்டின் தொடக்கத்தை தாண்டி செல்ல வேண்டி இருந்தது. சதுரமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து தொடங்கிய இடத்தை கடந்து தன் இலக்கை நோக்கி நடந்தான். உணவு என்று வந்துவிட்டால் ராமனுக்கு தூரம் ஒரு பெரிய விஷயம் அன்று என்பதை வாசகர்கள் நன்கு அறிந்திருப்பீர்.

இலக்கை நோக்கி செல்லும் போது, இடதுபுறம் ஒரு சீனா பாய் டிபன் சென்டர் வந்தபோதும், கூகுள் அம்மணி இலக்கை அடைய இன்னும் முன்னூறு மீட்டர் என்று சொல்ல, நம் ஊரில் தான் ஒரு பிரபலமான கடையின் பெயரிலேயே பல போலிக்கள் உருவாகுவது வழக்கமாயிற்றே என்று தொடர்ந்து நடந்தான் ராமன்.  முன்பு கண்ட ஆண்டாள் ஊர்வலம், அந்த கோவிலை நோக்கி சென்று கொண்டிருக்க, அந்த கூட்ட நெரிசலை பிளந்துகொண்டு ராமன் முந்தி சென்று பார்த்தால், கூகுள் அம்மணி காட்டிய இலக்கு 'சீனா பாய் ஜூஸ் கடை'. எப்பொழுதும் அந்த அம்மணியை முழுதாய் நம்பவே கூடாது என்று சபதம் கொண்டு, மீண்டும் அந்த ஊர்வலத்தை கடந்து முன்னமே கண்ட சரியான கடைக்கு ராமன் விஜயம் செய்தான்.

கடையின் முன்புறம்
சீனா பாய் டிபன் சென்டர் பொடி வெங்காய ஊத்தாப்பத்திற்கு மிகவும் பெயர் போன கையேந்தி பவன். இரண்டாம் தலைமுறையாக தொடர்ந்து இயங்கி வரும் அந்தக் கடையில் ஊத்தாப்பம் மற்றும் நெய் பொடி இட்லி ஆகிய இரண்டு உணவு வகைகள் தான் உண்டு. 

ஒரே கல்லில், இருபத்து நான்கு தோசைகளை முறுக செய்து கொண்டே, பல மொழிகளில்(நான் இருந்தவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி) சரளமாக புன்முறுவலுடன்  வாடிக்கையாளர்களிடம் பேசி அவர்களுக்கு காத்திருக்கும் அலுப்பு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் உரிமையாளர் சந்தானம். உதவிக்கு மூன்று வடக்கு வாலிபர்கள் இருந்தாலும், ஊத்தாப்பம் இவர் கைவண்ணம் தான். 'வீட்டில் ஏதேனும் விழா நாட்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் கடை 6 30 மணி முதல் இரவு 11 30 வரை இயங்கும்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சந்தானம்.

தோசைகளை தயார் செய்யும் சந்தானம்

இருபத்து நான்கு தோசைகளுக்கு கல்லில் ஒட்டி ஒட்டி மாவு ஊற்றி, அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை தூவி, இட்லி பொடியை அள்ளி வீசி, தோசை நனையும் அளவு எண்ணெய் ஊற்றி, பின் ஒட்டி இருக்கும் தோசைகளை ஜோடி ஜோடியாக வெட்டி, அவற்றை திருப்பி போட்டு, அவர் தாயார் செய்யும் அந்த இருபத்து நான்கு ஊத்தாப்பங்களும், கல்லில் இருந்து எடுக்கப் பட்ட அடுத்த பத்து நொடிகளில் காணாமல் போய் விடுகின்றன.


தக்காளி , புதினா என இரண்டு வகை சட்னிகளுடன், பிளாஸ்டிக் தட்டில் வாழை இலை மேல் ராமனின் கைக்கு வந்த இரண்டு ஊத்தாப்பங்கள் நல்ல மொறுகளாக, சுவையுடன் இருந்தன. தரமும் சுவையும் சேர்ந்து கிடைக்கும் இந்த பொடி ஊத்தாப்பம் ஒன்றின் விலை ரூபாய் இருபது தான். சிலர் இந்த ஊத்தாப்பத்தின் மேல் உளுந்த வடையை உடைத்து தூவியும் உண்கின்றனர். 

ஊத்தாப்பத்தின் பின்புறம்
சரவண பவன் மினி இட்லி அளவில் இருக்கும் இட்லிக்களில், பத்து நெய்யில் குளிப்பாட்டப்பட்டு அவற்றின் மீது மழை சாரல்கள் போல் பொடி தூவப்பட்டு, சூடாக அதே போல் வாழை இலையில் பரிமாறப் படுகின்றன.  இந்த இட்லியுடனும் சிலர் உளுந்த வடையை தூள் செய்து கலந்து உண்கின்றனர். இந்த பொடி இட்லியின் விலை ஐம்பது ரூபாய்.

உளுந்த வடையுடன் நெய் போடி இட்லி

என்றுமே கையேந்தி பவனில் தான் அசல் சுவை உண்டு என்ற ராமனின் கூற்றை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தது சீனா பாய் டிபன் சென்டர். ப்ராட்வே பேருந்து நிலையித்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில், பூக்கடை காவல் நிலையத்தை கடந்து, N.S.C. போஸ் சாலையில் கிடைக்கும்   இந்த சுவை மிகுந்த ஊத்தாப்பங்களை அனைவரும் ராமனைப் போல் சுவைத்து மகிழுங்கள்.