Monday, September 30, 2013

தேன் மிட்டாய் - செப்டம்பர் 2013

மாறிய செருப்பு

பதிவர் திருவிழாவின் முன்தினம் சென்னைக்கு வந்தப் பதிவர்களை விடுதிகளில் தங்க வைத்து விட்டு, காலை உணவு அருந்தச் செல்லும் பொழுது தான் கவனித்தேன் என் நடையில் எதோ ஒரு மாற்றம் இருப்பதை . உடன் இருந்த சீனுவிடம் காலையில் நான் வீட்டில் இருந்து கிளம்பிய பொழுது இப்படி இல்லை என்று சொல்லிக் கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தோம். யாரிடம் செருப்பு மாறியது, எப்படி கண்டு பிடிப்பது, எல்லோர் காலையுமே பார்க்க வேண்டுமா என்று பல எண்ணங்கள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இதுதான் முதல் அனுபவம் , ஹி ஹி ஹி . கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வருவது போல, எதிரே வந்த பிரபு கிருஷ்ணா என்னை நிறுத்தி, மாறிய எங்கள் செருப்பை மாற்றிக் கொண்டார். கிழிந்த செருப்பனாலும், சொந்த செருப்பில் நடப்பது எத்தனை சுகம். 


விநாயகர் பிறந்தநாள் விழா



நாகரீக மாற்றத்தில் மறைந்த பல பழமைகளில் தேரும் ஒன்று. இந்த விநாயகர் சதுர்த்தியின் பொழுது, விநாயகர் இன்டிகாவின் கூரையில் அமர்ந்தே எங்கள் தெருக்களை வலம் வந்தார். 


விநாயகர் சதுர்த்தியன்று மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் விநாயகர் சதுர்த்திக்காக நடந்தது ,வசூல் இல்லை வழிப்பறி என்றே சொல்ல வேண்டும். சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு வசூல் செய்து கொண்டிருந்தனர். நான் நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டேன். என்னை அடுத்து வந்தவர்கள் வண்டியின் முன் ஒருவனை குதிக்கச் செய்து நிறுத்த தொடங்கினர். கடவுள் பேரில் நம் நாட்டில் இப்படி பல அநீதிகள் நடக்கத்தான் செய்கின்றன. 

இருட்டுக்கடை அல்வா 

இதுவரை என் வாழ்வில் இருட்டுக் கடை அல்வா உண்டதே இல்லை என்ற பெரும் குறை இருந்தது. நெல்லை நண்பர் ஒருவர், அவர் நெல்லையில் இருந்து வரும் பொழுது எனக்கு அல்வா வாங்கி வருவது வழக்கம், இம்முறையும் வாங்கி வந்தார். சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பாக் செய்யும் கவர் மாறி இருந்தது. அவரிடம் என் இருட்டுக் கடை அல்வா ஆசையை சொல்லி மிகவும் குறை பட்ட பொழுது, அவர் சொல்லிய பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வெட்கப் பட வைத்தது.

அவர் கூறியது :' நான் போன வாட்டி உங்களுக்கு கொடுத்தது இருட்டுக் கடை அல்வா தான் !' 

நியூ

தமிழ் சினிமா வரலாற்றில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை சமீபத்தில் தான் பார்க்க முடிந்தது, கிட்ட தட்ட வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து. எனக்குள் இரண்டு கேள்விகள் தோன்றின.


கேள்வி ஒன்று : எப்படி இந்த படத்திற்கு 'A' சான்றிதழ் கொடுக்கவில்லை?

கேள்வி இரண்டு : படம் திரையிடப் பட்டு, மக்கள் இந்தப் படத்தை மறந்த  பல மாதங்கள் கழித்து இந்த படத்தை தடை செய்ததன் நோக்கம் என்ன? இன்றும் Youtubeஇல் பார்க்க முடிகிறதே? 

சுயநலம்


அலுவலகம் முடிந்து, பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். காலியாக இருந்த பேருந்தில், நாவலூரில் பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறினார். அட்டக்கத்தி படத்தில் வருவது போல் பாட்டுக்கு மெட்டுக் கட்டி தாளம் போட்டு, ஒரே அராஜகம் பண்ணிக் கொண்டிருந்தனர். மற்றவர்களை பாதிக்கும் படி நாம் இன்பமாய் இருப்பது சரியில்லை என்று எனக்குள் தோன்றிய கோபத்தை அடக்கிக் கொண்டேன். திடீரென்று பேருந்தின் வேகம் குறைய, இவர்கள் பாட்டும் நிற்க, சாலையில் ஒரு இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாயிருந்தது. எதையும் யோசிக்காமல் அந்த இளைஞர்கள் பேருந்தை விட்டு இறங்கி, பாய்ந்து சென்று உதவினர். பேருந்து அவர்களுக்காக நிற்காததை அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சுயநலமற்ற அவர்களின் செயல் என் மனதில் முதலில் தோன்றிய கோபம் மறைந்து, சுயநலவாதியாக 'என் வாழ்கை' என்னும் சிறைக்குள் அடைபட்டிருக்கும் என் மேல் கோபம் திரும்பியது.

நம்ம பவர் 

அலுவலக நண்பர்கள் வட்டம் ஒன்று, நுங்கம்பாக்கம் அருகே செல்கையில், அவரகளுக்கு அருகில் சென்ற சீருந்தில் பவர் ஸ்டாரை கண்டு, சலாம் வைக்க. அவரும் தன் எவர்க்ரீன் புன்னகையில் பதில் சொல்ல, இவர்கள் புகைப் படம் எடுக்க வேண்டும் என்பது போல சைகை செய்ய, மனுஷன் காரை நிறுத்தி இறங்கிட்டாரு. அவருடன் நண்பர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் கீழே .


நண்பர் விஜய், ராமராஜனுக்கு போட்டியோ என்று எண்ணி பவர் தன் சீருந்தை விட்டு இறங்கியதாக ஒரு வதந்தியும் உண்டு.

ஆட்டோ கட்டணம் 

புதிதாய் திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் என்ற ஆசையில், ரயில் நிலையம் செல்ல என் வீட்டின் அருகில் இருக்கும் ஸ்டான்ட் ஆட்டோவில் ஏறினேன். அந்த ஆட்டோ டிரைவரோ 'அந்த கட்டணம் வர்றதுக்கு எல்லாம் நாள் ஆகும் சார், ரெண்டு லட்சம் மீட்டர் வெய்டிங்ல இருக்கு' என்று சாதித்து என்னிடம் இருந்து, புதிய கட்டணம் படி 25 ரூபாய் வாங்க வேண்டிய இடத்தில 50 ரூபாய் வாங்கிக் கொண்டார். ஏமாற்றப் பட்டேனோ என்ற குழப்பத்தில் இருந்த எனக்கு, பல ஏரியாக்களில் ஸ்டாண்டுகளில் இருக்கும் ஆட்டோக்காரர்கள் இன்னமும் புதிய கட்டணத்திற்கு மாறாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல லோக்கலில் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கொத்து பரோட்டா படித்த பொழுது தான் எனக்கு விளங்கியது. கேட்டால் கிடைக்கும் ASK !

Wednesday, September 25, 2013

சாப்பாட்டு ராமன் - ஆலு டிக்கி

பல நாட்களாக, உணவு வேட்டைக்கு செல்லாமல் அமைதியாக இருந்த ராமனுக்கு தான் சென்ற ஆண்டு டில்லியின் சாலைகளில் உண்ட ஆலு  டிக்கியின் சுவை சில நாட்களாக அவனை தூங்கவிடாமல் தவிக்கச் செய்தது. அவனும் பல இடங்களில் சென்னையில் அதை உண்டு, திருப்தி இல்லாமல் சோர்ந்து போய் இருந்த வேளையில், சௌகார்பேட்டையில் சுவையான ஆலு டிக்கி கிடைக்கும் தகவல் அறிந்து, துள்ளி குதித்து தயாரானான்.    

ப்ராட்வே பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் சௌகார்பேட்டைக்கு செல்ல ராமன் பீச் ரயில் ஏறி 'போர்ட்' (Fort)இல் இறங்கி, பேருந்து நிலையம் வழியே, உயர் நீதி மன்றத்தின் எதிர் திசையில் நடந்து, ஒரு காவல் துறை பூத்தை கடந்தால் அதைத் தொடர்ந்து வரும் வலது பக்க சந்து தான் 'மின்ட் ஸ்ட்ரீட்' (Mint Street). அந்த வீதியில் நுழைந்தவுடன் அவனுக்கு சென்னையில் தான் இருக்கிறோமா என்ற பெரும் சந்தேகம் தோன்றியது. பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல், குஜராத்தி ஆண்களும் பெண்களும் அந்தச் சாலையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர்.                  

தெரு எங்கும் சேலைக் கடைகள் தான், அதன் பின் தான் இந்தச் சாலையோர உணவுகள். இங்கு குஜராத்திய வகை சேலைகளை, ஹிந்தி தெரிந்தால் பேரம் பேசி மலிவு விலையில் வாங்கலாம். இந்தத் தெருவில் உள்ள சீலைக் கடைகளின் சிறப்பு என்ன வென்றால், நம்மைத் தரையில்  மெத்தையின் மேல் அமரவைத்து தான் சேலையை விரித்து காண்பிப்பார்கள். புருஷர்கள், ஸ்திரீகள் (சிவகாமியின் சபதம் படித்துக் கொண்டிருக்கும் தாக்கம்)  சேலை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு குட்டி தூக்கம் போட்டு ஓய்வெடுக்கலாம். ரங்கநாதன் தெரு போல் கால் வலிக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுன்னு ஆரம்பிச்சிட்டு சேலைன்னு போய்ட்டனேன்னு நீங்க திட்டறது எனக்கு கேட்கறது, இதோ வந்துட்டேன்.           

அப்படியே சேலை பொம்மைகளை பார்த்துக் கொண்டு, அந்தக் சாலையில் நடக்கையில், இடது புறம் வரும் 'காக்காடா ராம்பிரசாத்' ஸ்வீட் கடை தான் நம் ராமன் தேடிச் சென்றது. இந்த கடை இனிப்பிற்கு பெயர் போனது என்றாலும், இங்கு கிடைக்கும் ஆலு டிக்கியின் சுவை அருமை என்ற செய்தி ராமனை வந்து சேர்ந்ததால், ஆலு டிக்கியும் பானி பூரியும் மட்டும் ஆர்டர் செய்தான். ஆலு டிக்கி ஐம்பது ரூபாய், பானி பூரி இருபத்து ஐந்து ரூபாய். விலை அதிகம் என்று உங்களைப் போலத்தான் ராமனும் முதலில் ஷாக் ஆனான்.   




ஆலு எண்ணையில் பொறிக்கப் படுகையிலே, பானி பூரி கொடுக்கப் பட்டது. கையில் ஒரு சிறிய தொன்னை கொடுத்து, முதலில் 'புதின்' என்று எழுதி, சிவப்பு துணியால் மூடப் பட்டிருந்த மண் பானையில், பூரியை நனைத்து கொடுத்தான். இரண்டாவது 'ஜல் ஜீரா' (புளி) என்று எழுதியிருந்த பானையில் இருந்தும், 'ஹிங்' (பெருங்காயம் என்று சுவையில் இருந்து யூகித்தேன்)  என்று எழுதியிருந்த பானையில் இருந்தும் இரண்டு இரண்டு பூரி,  மொத்தம் ஆறு பூரி. எப்பொழுதும் புதினா ரசத்திலேயே பானி பூரி சாப்பிட்டு பழகிய நாவிற்கு இது புது சுவையாக இருந்தது. ராமன் ஒரு பூரி சாப்பிட்டு முடித்த பின் தான், கடைக்காரன் அடுத்த பூரி தயார் செய்வதால் எந்த அவசரமும் இன்றி நிதானமாக சுவைக்க முடிகிறது.                   

இதற்கிடையில் பொறிக்கப் பட்ட ஆலு, பிட்சா போல் ஆறு துண்டாக வெட்டப் பட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் தயிர் ஊற்றி, சாட் மசாலா மற்றும் வேறு பெயர் தெரியாத வாசனைப் பொருட்கள் மழைச் சாரல் போல் தூவப் பட்டு, ஓமபொடி மற்றும் துருவிய காரெட், பீட்ரூட், கௌஸ் முதலிய காய்கறிகள் மேலே அலங்கரிக்கப் பட்டு, கிரீடத்தில் பன்னீர் துண்டு ஒன்று வைத்து கைக்கு வந்தது. புகைப்படம் எடுக்கும் வரை ராமனை கட்டுப் படுத்துவது, ஒரு குழந்தையை சாக்லேட் சாப்படாமல் தடுப்பதை விட பெரும் பாடானது.


அந்த ருசி நாவில் உள்ள சுவை அரும்புகளுக்கு, மாமல்லனைக் கண்ட சிவகாமி கொண்டது போல், புத்துணர்ச்சியும் குதூகளமும் கொடுத்தது. தாகம் தீர்க்க பாதாம் பால் என்பது ரூபாய் கொடுத்து வாங்கிய ராமன், பாதாம் பருப்பு சற்று அதிகமாக இருந்தது என்றே இறுதியில் முடிவுக்கு வந்தான். இங்கு கிடைக்கும் பாதாம் பாலும் சற்று பிரபலம் தான். வயிறும் மனமும் நிறைந்தது. விலை கூடுதலேனும், கிடைத்த சுவை திருப்தி அளித்தது. அருகில் ஒருவர் வாங்கிய பிரட் சான்ட்விச் பார்க்க வித்யாசமாக இருந்தது. மாதக் கடைசி என்பதால்,  மேலும் எதுவும் சுவைக்க முடியாமல், அடுத்த மாத முதல் வாரத்திலே மீண்டும் வர வேண்டும் என்ற சபதம் செய்து கொண்டு, சாலையோர பொம்மைகளை ரசித்த படியே வீடு திரும்பினான் ராமன்.

           

Monday, September 23, 2013

ஸ்மார்ட் போன் அவசியமா?

பதிவுலகின் 'காதல் மன்னன்', 'மேடவாக்கம் மாஸ்ட்ரோ', 'கிரைம் பதிவர்' என்றெல்லாம் அழைக்கப் படும் ஒரு பிரபல பதிவர், ஒரு நாள் மதியம் தன் புதிய ஆண்டிராய்ட் போனுக்கு உயிர் ஊட்ட சார்ஜர் தேடி அலைந்து கொண்டு இருந்த போது, என்னுள் தோன்றிய கேள்வி இது. ஸ்மார்ட் போன் அவசியமா? 


பல நாள் தன்னிடம் இருந்த நோக்கியா w101 மாடலை வைத்து கொண்டு மாருதட்டிக்கொண்டிருந்தவர் ஆண்டிராய்ட் போன் வசம் திரும்ப காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

ஆண்டிராய்ட் போன்களுக்கு தேவையான ஆப்ஸ் பற்றி பதிவு போடும் போது அதில் சென்று கிண்டல் செய்து கொண்டிருந்த அவர் இன்று அதே ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்வது ஏன்?

எவ்வளவு மழை வந்தாலும் அசராது தன் ஸ்பிளென்டரில் சிங்கம் போல் சீறிப் பாய்ந்தவர், இன்று தன் போனை காக்க மழைக்கு ஒதுங்குவது ஏன்?

எத்தனையோ ஆயிரம் ரூபாய் காசு கொடுத்து கைபேசி வாங்கினாலும் அதில் ஒரு பொத்தான் கூட இல்லையே.

முன்பெல்லாம் ஆடை தான் மரியாதை சின்னம்மாக இருந்தது, ஆனால் இன்றோ நம் கையில் இருக்கும் கைபேசி எவ்வளோ மதிப்போ அதுதான் நம் மதிப்பு என்று காலம் மாறிவிட்டது.

சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றிக்கு வரும் குறுந்தகவலை உரியவரிடம் காட்டும் பொழுது என்னை மேலும் கீழும் பார்க்கின்றனர். நான் தட்டிய குறுந்தகவல்களால் கீபேட் சேதமானது என் தவறா? 

பலரும் என் கைபேசியைக் கண்டு, துப்பாத குறையாக, திட்டிவிட்டனர். ஊரோடு ஒத்து வாழாமல் நான் மட்டும் எதிர்த்து தனியாக கொடிபிடிக்க முடியாமல், நானும் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளேன், என்று சோகத்துடன் இங்கு சொல்லிக் கொள்கிறேன். 

பல மாதங்களுக்கு முன்னரே ஸ்மார்ட் போன் வாங்கி, அசத்திக் கொண்டிருக்கும் அண்ணன்மார்களே! அக்காமார்களே! , இந்தச் சிறுவனுக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட் போனை பரிந்துரை செய்யுங்களேன்.

பின் குறிப்பு: iPhone 5S மற்றும் 5C வெளியாக உள்ள நிலையில், iPhone 4Sஇன் விலை குறைய வாய்ப்புகள் இருப்பதால், மனதில் ஒரு சின்ன மூலையில் iPhone மீது ஆசை தோன்றியுள்ளது.     

Thursday, September 19, 2013

Casablanca - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************



கிளாசிக் சினிமா மேல் வந்த ஈர்ப்பு, என் தேடலை விரிவு செய்தபோது IMDB மூலம் எனக்கு அறிமுகமான படம் இது. கதை நடக்கும் காலம் இரண்டாம் உலக யுத்த சமயம், ஜேர்மன் ஆதிக்கம் உலகெங்கும் பரவி இருந்த நிலையில், ஜெர்மன் கட்டுப்பாட்டில் இல்லாத ஆப்ரிக்க நகரம் தான் Casablanca. அமேரிக்கா செல்லும் கனவுகளுடன் ஐரோப்பா நாடுகளில் இருந்து வருபவர்களின் இறுதி புகலிடம். இங்கிருந்து வீசா கிடைத்தால் மட்டுமே சுகந்திர அமேரிக்கா செல்ல முடியும். 



இந்த நகரத்தில் ஒரு கிளப் நடத்தி வருபவர் தான் ரிக் என்கிற ரிச்சர்ட், கதையின் நாயகன். அந்த நகரை விட்டு வெளியேற, ஜெர்மன் அதிகாரிகளை கொன்று திருடப்பட்ட இரண்டு வீசாக்கள், யாரும் அறியாமல் ரிக்கின் வசம் வருகின்றது. இந்த வீசாவைத் தேடி ஒரு மறைமுக போராட்டக்கும்பலின் தலைவர் விக்டர்(Victor) தன் மனைவி இல்சா(Ilsa)வுடன் Casablanca வருகிறார். அவரை பிடிக்க ஜெர்மன் அதிகாரிகள் அவரைத் தொடர்ந்து வருகின்றனர். 

Casablanca சுகந்திர நகரம் என்பதால், அவர்களால் அவரை நேரடியாக ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், அந்த நகர காவல்துறை உதவியுடன், அவருக்கு வீசா கிடைக்காதவாரு ஏற்ப்பாடு செய்கின்றனர். லூயிஸ்(Louis)என்ற Casablanca காவல் துறை உயர் அதிகாரியுடன் ரிக் சாவல் விடுகிறார், விக்டர்(Victor) மற்றும் அவர் மனைவி இல்சா(Ilsa) நிச்சயம் அமேரிக்கா செல்வர் என்று.

விக்டர் - இல்சா - ரிக்  

ரிக், எந்த விலை கொடுத்தாலும் அந்த வீசாக்களை விற்க முடியாது என்று விக்டரிடம் மறுத்து,காரணத்தை அவர் மனைவியிடமே கேட்க சொல்லிவிடுகிறார். இல்சா தான் நாயகன் ரிக்கின் முன்னாள் காதலி என்ற உண்மை திரையில் விரிகிறது. ரிக் மற்றும் இல்சா இடையில் பழையக் காதல் மீண்டும் மலர, ஜெர்மன் கடுபடி அதிகரிக்க, ரிக் லூயிசுடன் அவரும் இல்சாவும் அமேரிக்கா செல்ல ரகசிய ஒப்பந்தம் போட, இறுதியில் ரிக் தான் போட்ட சவாலில் வெல்வார இல்லையா என்று படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

படத்தில் நான் ரசித்தவை

படத்தின் பெரிய பலமே திரைக்கதை தான், ஒவ்வொன்றாக உண்மைகள் வெளி வர, நம்மை படத்துடன் ஒன்றச் செய்துவிடுகிறது. 

நாயகனாக வரும் Humphrey Bogartஇன் இயல்பான நடிப்பின் மூலம்  படம் முழுவதும் ரிக் என்ற கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவம் கொடுத்து அசத்தியுள்ளார்.
ரிக் 

அடுத்த முக்கிய கதாபாத்திரம் காவல் துறை உயர் அதிகாரி லூயிஸாக வரும் Claude Rains என்பவர். இறுதிக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தார்.

லூயிஸ் 

இரண்டாம் உலக யுத்தத்தை மைய்யமாக வைத்த கதை என்றாலும், எந்த விதமான துப்பாக்கிச் சுடுதலோ, சண்டைக் காட்சிகளோ இல்லாமல் படத்தை இயக்கிய இயக்குனர் Michael Curtizஐ பாராட்டாமல் இருக்க முடியாது. 

வசதி இல்லாத ஒரு இளம் மனைவி தன் கணவனுடன் அமேரிக்கா செல்ல வீசா கேட்க லூயிஸிடம் செல்ல, பணம் இல்லையேல் உடல் உறவு என்று லூயிஸ் நிபந்தனை வைக்க, அதை அறிந்த ரிக் அந்த மனைவியின் கணவனை தன் கிளப்பில் நடக்கும் சூதாட்டம் மூலம் போதிய பணம் ஜெயிக்க வைக்கும் காட்சி, நம்மை நெகிழச் செய்யும்.

இந்த விஷயத்தை அறிந்தவுடன் அந்த கிளப்பில் பணிபுரியும் ஒரு ரஸ்சிய சர்வர், மகிழ்ச்சியில் ரிக்கை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பான். இந்த காட்சியை இன்று பார்த்த பொழுது, தன் மனம் கவர்ந்த பதிவுகளை எழுதிய பதிவர்களை 'கட்டி அணைத்து' பாராட்ட வேண்டும் என்று கருத்துரையிடும் ஜீவன் சுப்பு தான் நினைவிற்கு வந்தார். 

படத்தில் நான் ரசித்த வசனங்கள்:

வசனம் 1:
தன் முன்னாள் காதலியைக் கண்ட ரிக், அவன் கிளப் பியானோ பிளேயர் சாமிடம்(Sam) சொல்லும் வசனம்

"Of all the gin joints in all the towns in all the world, she walks into mine."

(இதை பல modulationஇல் பல சினிமாக்களில் கேட்டது போல் இல்லை? )


வசனம் 2:

இறுதிக் காட்சியில் என்னை விசில் அடிக்க தூண்டிய வசனம்

"Louis, I think this is the beginning of a beautiful friendship." 


படம் பார்க்கையில், இந்த வசனம் பேசும் காட்சி வரும் போது உங்களுக்கும் நிச்சயம் விசில் அடிக்கத் தூண்டும். 


'ரொமாண்டிக் டிராமா' என்ற பிரிவில், என்றுமே நான் முதலில் பரிந்துரை செய்யும் படம் Casablanca.

*******************************************************************************************************
ஆண்டு : 1942
மொழி : ஆங்கிலம்
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

Monday, September 9, 2013

சேட்டைக்காரனும் பிரெஞ்சுகாரியும்

பதிவர் திருவிழா முடிந்த மறுதினம் என் கிராமத்திற்கு சென்று வரவேண்டிய கட்டாயம். என்னிடம் இருப்பது அதி நவீன கைபேசி என்பதால், எப்பொழுதும் எனக்கு சுஜாதா புத்தகங்களே பயணத் துணை. ஆனால் ஒரு வித்தியாசத்திற்காக இம்முறை பதிவர் திருவிழாவில் வெளியிடப் பட்ட சேட்டைக்காரனின் 'மொட்டைத் தலையும் முழங்காலும்' புத்தகம் என்னுடன் பயணிக்கத் தொடங்கியது.


கோயம்பேடு சென்று PRTCஇல் புஷ் பேக் வசதி கொண்ட புதுச்சேரி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், பேருந்தை ஒரு முறை ஸ்கேன் செய்தேன், நம் கண்ணுக்கு ஏதேனும் விருந்து கிடைக்குமா என்று. வழக்கம் போல் பாட்டிகளும் ஆண்டிகளும் மட்டுமே இருந்தனர். ஒரு பிரெஞ்சு தம்பதியர் மட்டும் அந்தக் கூட்டத்தோடு பொருந்தாமல் தனியே இருந்தனர். அந்த அம்மணி வெள்ளாவி வைத்து வெளுத்து, சரவண பவன் காரக் குழம்பு நிற தலை முடியுடன் இருந்தது என்னைப் பெரிதும் கவராததால், சேட்டையுடன் பேங்க் ஆப் டுபாக்கூரினுள் நுழைந்தேன். பேருந்து புதுவையை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. 

எனக்கு சன்னல் சீட்டு கிடைக்காமல், இரண்டு சீட் வரிசையில் நான் அமர்ந்திருக்க, எனது வலது புற இரண்டு சீட் வரிசையில் அந்த பிரெஞ்ச் அம்மணி அவள் கணவனுடன்(அப்படித்தான் இருக்கணும்) அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பேருந்தில் திடீர் என்று ஒரு சலசலப்பு, ஒரு சில ஆண்கள் அங்கும் இங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். அந்த பிரெஞ்சு அம்மணியும் கூந்தல் காற்றில் பறக்க, ஒரு கையால் அவள் முடியை முடிந்துக் கொண்டு, பொதுத் தேர்வில் ஹால் டிக்கெட் துளைத்த மாணவி போல் பரிதாபமுடன் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். நம்ம சேட்டையின் " 'கம்'னு கெட' கதையில் நாற்காலிக்கு அடியில் இருக்கும் சூவிங் கம்மை ஜிம்மி தேடிக் கலைப்பாயிறுந்தது. 

என் காலில் ஏதோ தடுக்க, அதை என் கையில் நான் எடுத்து பார்த்து, கண்ணில் இருக்கும் காட்சி மூளைக்கு சென்று 'அந்த பொருள் ஹேர் கிளிப்' என்று பதில் வரும் சில நொடிகளில், என் கையில் இருந்து அதைப் பிடிங்கிய ஒரு சொட்டைத் தலையன் அதை அந்த பிரெஞ்ச் அம்மணியிடம் கொடுத்தான். அவனுக்கு வாயால் நன்றி கூறி, எனக்கு மனமார அவள் கண்களால் நன்றி சொன்னாள். பேருந்து கூவத்தூரில் இருக்கும் அரசு பேருந்துகள் இலைப்பாரும் உணவகத்தில்(?) நிற்க, அந்த அம்மணியின் கணவன் ஊதுகுழல் வாசிக்க செல்ல, அவள் என்னுடன் வந்து ஆங்கிலத்தில் உரையாடியது மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் கீழே. 

'வணக்கம். என் பெயர் ஜூலி. நான் இந்தப் பேருந்தில் வெகு நேரமாய் உங்களையே கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் புத்தகத்தை படித்து சிரித்துக் கொண்டே இருக்கறீர்கள். என்ன என்று கேட்கலாம் என்றால் என் கணவன் அது நாகரீகம் இல்லை என்று என்னை தடுத்தார். அதனால் அவர் சென்றவுடன் கேட்கிறேன். இது என்ன புத்தகம்?' என்று அவள் சேட்டைக்காரனின் புத்தகத்தின் அட்டையை பார்த்தாள். (அவள் பேசியது தூய ஆங்கிலம் என்பதால் இங்கு தூய தமிழ்... அவ்வவ்). 

' சேட்டைக்காரன் என்பவர் தான் இணையத்தில் எழுதிய நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்' என்று நான் கூறுகையில் அந்தப் புத்தகத்தை வாங்கி, 'இவர்தான் சேட்டைக்காரனா?' என்று நாகேஷ் படத்தை காட்டி கேட்டாள்.

'இல்லை இவர் அவருக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். இவர் தான் சேட்டைக்காரன்' என்று பின் பக்க அட்டையை காட்டினேன்.

'மிகவும் முதியவராக இருக்காரே இவர் நகைச்சுவையா உங்களை சிரிக்க வைக்கிறது?' என்று ஆச்சரியத்துடன் கேட்டு, காற்றில் நெற்றியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அவள் காரக்குழம்பு நிற முடியை காதுக்கு பின் தள்ளினால்.

'அவர் பார்கத்தான் முதியவர். ஆனால் எண்ணத்திலும் குசும்பிலும் இளையவர். அவர் சொல்லும் உவமைகள் பிரமாதமாக இருக்கும்.'

'எங்க அவர் சொன்ன உவமைகள் சில வற்றை எனக்கு சொல்லுங்களேன்' என்று மிட்டாய் வாங்க அடம் பிடிக்கும் சிறு குழந்தை போல் என்னிடம் கெஞ்சினாள். நானும் அவரின் சில உவமைகளை பட்டியலிட்டேன்.  

மெட்டி' வடிவுக்கரசி மாதிரி மென்மையாக இருந்த அந்த அம்மணி 'அருணாச்சலம்' வடிவுக்கரசி மாதிரி ஆக்ரோஷமாக முறைத்தார்.

பீர்க்கங்கரணை தண்ணித் தொட்டிக்கு பீட்டர் இங்கிலாண்டு சட்டை போட்டுவிட்டது போல.

'கொண்டலேறுபள்ளி  கோபாலராம ரெட்டி !'

'என்ன சார் , உங்க பேரைக் கேட்டா  காந்தாராவ் நடிச்ச பழைய தெலுங்குப் படப் பெயரைச் சொல்றீங்க?'  

உரித்த பனங்கிழங்குக்கு உடுப்பு மாட்டி விட்டது போல் ஒரு இளைஞன் கேட்டான்

சூடாமணி சூடாகி ஏடாகூடமணியாவதற்குள், வெங்கடசாமி லிஸ்டுடன் வெளியேறினார்

'சர்க்கரை அஞ்சு கிலோ'

'ஒரே பாக்கெட்டா தரட்டுமா? ரெண்டு ரெண்டு கிலோ பாக்கெட்ட ஒரு ஒரு கிலோ பாக்கெட்டா தரட்டுமா' 

'என்னாலே அஞ்சு கிலோ பாக்கெட்தைத் தூக்க முடியாது. நீங்க சொல்ற மாதிரி மூணு பாக்கெட்டா கொடுத்திடுங்க'

References: இடுப்பொடியூர் வரலாறு" பேராசிரியர் அடுப்பங்கரையூர் அடங்காவாயர் 

குக்கரில் வேகவைத்த குருணை அரிசி போல்க் குழைந்தான் பன்னீர் செல்வம்

'என்ன மாமா இப்பயெல்லாம் உங்களைப் பார்க்கவே முடியலை?'

'அவளோ அசிங்கமாவா இருக்கேன் ?' 

இதைக் கேட்டவுடன் அவள் சிரித்த வேகத்தில் அவள் எச்சில் என் முகத்தில் சீறிப் பாய்ந்தது. 

'மன்னிக்கவும்' என்று அவள் கைகுட்டையால் என் முகத்தை துடைத்து விட்டு, 'மேலும் சொல்லுங்கள்' என்றாள். 

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கிட்டாமணியின் முகம் ஆயுதபூஜையன்று வண்டி டயரின் கீழே வைத்து நசுக்கப் பட்ட எலுமிச்சம்பழம் போலக் காணப்பட்டது

"அட நாராயணா! நோக்கு எப்படி என் பேரு தெரியும் ? " மாமி திடுக்கிட்டு கேட்டாள்.

"ஆமா, திருவல்லிக்கேணியிலே பின்னே என்ன ஆஞ்சலினா ஜோலின்னா பேரு வைச்சிருப்பாங்க?" 

'துண்டுக்கடி' ராஜாமணி என்ற இடுகுறிப்பெயர், 'முட்டுச்சந்து' ராஜாமணி என்ற என்ற காரணப்பெயர், 'மூக்குறிஞ்சி' ராஜாமணி என்ற வினையாலணையும் பெயர். அண்மைக்காலமாக அவரை எல்லோரும் 'எலிமினேட்டர்' ராஜாமணி என்றுதான் அன்போடு அழிக்கிறார்கள்.

'நரம்படி நாராயணன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா ?'

'ஐயையோ  இல்லை சார் !' என்று கையெடுத்துக் கும்பிட்டான் வைத்தி.

'அபப்டின்னா  இனிமே அது நான் தான்!' என்று உறுமினார் செக்யூரிட்டி ஆபிசர்.      
      

'இந்தப் படங்கள் எல்லாம் நல்லா இருக்கே. அவரே வரைஞ்சதா?' என்று என்னைப் பார்த்து கேட்டாள், 'இல்லை, கணேஷ் சார் அவர் ஓவியர் நண்பர் மூலம் வரைந்தது' என்று நான் சொல்லி முடிக்கும் பொழுது அவள் கணவன் பேருந்தை நோக்கி நடந்து வருவதை நாங்கள் இருவருமே கண்டோம்.

'எனக்கு இந்த புத்தகம் வேண்டும்?' என்றாள்.

கர்நாடகம் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டது போன்ற அதிர்ச்சியுடன் 'தமிழ் புத்தகத்தை வைத்து நீ என்னப் பண்ணுவாய்?' என்று கேட்டேன்.

'ஒரு தமிழ் நாட்டை சேர்ந்த தோழி என் வீட்டருகில் இருக்கிறாள். அவளை எனக்கு மொழி பெயர்க்க சொல்லுவேன்' என்று கூறி என் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

'சரி. இந்தப் புத்தகத்தை எடுத்துக்கோ' என்று அவளிடம் நான் கொடுக்க, வாங்கலாமா வேணாமா என்ற தயக்கத்துடன் 'அப்ப உங்களுக்கு?' என்று கேட்டாள்.

'நான் கணேஷ் சார் கிட்ட சொல்லி வேற புத்தகம் வாங்கிக்கறேன்' என்று அவிளிடம் கொடுத்துவிட்டேன்.

புத்தகம் கையில் கிடைத்தவுடன், மிட்டாய் கிடைத்த குழந்தை போல் அவள் முகம் பிரகாசமானது. பேருந்து தன் ஓட்டத்தை மீண்டும் தொடர, 'இவர மாதிரி எழுத்தாற்றல் நமக்கும் இருந்திருந்தா இந்த மாதிரி நிறைய பெண்பால் விசிறிகள் கிடைத்திருப்பார்களே' என்று என்னுள் ஏங்கிக் கொண்டேன்.

Thursday, September 5, 2013

என் முதல் பதிவர் சந்திப்பு

பல தயக்கங்களுக்கு மத்தியில், பதிவர் திருவிழா நடத்தலாம் என்று முடிவாகி, அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கின. கே.கே. நகர் சிவன் பூங்காவில் நடந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தை என்னால் மறக்க முடியாது.

முதல் காரணம் கணேஷ் சார், சிவா, ஸ்கூல் பையன், அஞ்சா சிங்கம், அரசன், கவியாழி, KRP செந்தில், மதுமதி, புலவர் அய்யா, ஜெய், அரசன் போன்ற பெரும்பாலான பதிவர்களை நான் முதலில்  சந்தித்தது இங்குதான்.

இரண்டாவது காரணம் திருவிழாவிற்கு பிள்ளையார் சுழி போட்டு பணிகள் தொடங்கியதும் இங்குதான்.அதன்  பிறகு பெரும்பாலான ஆலோசனைக் கூடங்கள் நடந்தது டிஸ்கவரி புக் பேலஸில் தான். அழகாக திட்டங்கள் தீட்டப் பட்டு, குழுக்களாக பிரிந்து, விழாப் பணிகள் சிறப்பாக நடந்தன. 

ஆகஸ்ட் 31அன்று அலுவலகத்தில் விடுப்பு எடுத்து விட்டு, பதிவுலக தோழமைகளை காண அன்று அதிகாலையே வடபழனி வந்து விட்டேன். பதிவர்கள் தங்க வைக்கப் பட்ட விடுதிக்கு நான் வந்தவுடன் முதலில் நான் சந்தித்த பதிவர் ராஜபாட்டை என்ற பெயரில் பதிவு எழுதி வரும் ராஜா அவர்கள்.

சதீஷ் சங்கவி, உணவுலகம் சங்கரலிங்கம், கற்போம் பிரபு கிருஷ்ணா, இரவின் புன்னகை வெற்றிவேல், பிளாசபி பிரபாகரன் இவர்களின் முதல் அறிமுகம் கிடைத்தது. கோகுல், நக்கீரன், திண்டுக்கல் தனபாலன், குடந்தையூர் சரவணன், வீடு சுரேஷ் குமார், வெளங்காதவன் ஆகியாரையும் சனியன்றே சந்தித்தேன்.

பின்னர் தன் மனைவி  மகனுடன் வந்த 'தம்பி' சதீஷ் செல்லதுரை அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. தனக்கு  எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத சந்திற்பிக்கு கணவனுக்காக வந்து கலந்து கொண்ட ரேவதி சதீஷ் அக்காவின் காதலும் அன்பும் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

மாலை தமிழ் வாசி பிரகாஷ், கோவை நேரம் ஜீவா, அகிலா, எழில் மற்றும் கோவை ஆவி ஆகியோரை சந்தித்தேன்.  விழா அன்று காலை அடையாள அட்டை கொடுக்கும் பணியில் இருந்த பொழுது  தந்த அனைத்து பதிவர்களும் என்னைக் கடந்து சென்ற பொழுதும் என்னால் அவர்களுடன் பேசி புகைப் படம் எடுக்க முடியாமல் போனது வருத்தமே. 

நண்பர் ராம் குமார், பாசித், ராஜி அக்கா, ரஞ்சனி அம்மா, வெங்கட் நாகராஜ், சேட்டைக்காரன், கே.ஜி. கௌதமன், உண்மைத்தமிழன், ரமணி அய்யா, என்ற குறிப்பிட்ட சிலருடனே அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது.( நான் அறிமுகம் செய்து கொண்ட யாரேனும் பெயர் விடு பட்டிருந்தால், இந்தச் சிறுவனின் நியாபகத் திறனை மன்னியுங்கள்).

இந்தப் பதிவில், விழாவில் வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி சொல்கிறேன். மேலும் இந்த விழாவை சிறப்புற நடத்த தம் சொந்தப் பணிகளுக்கு மத்தியில் அயராது உழைத்த விழாக் குழுவினர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பல  வருடங்கள் கழித்து மேடையில், கண்மணி குணசேகரனிடம் இருந்து அந்த நினைவுப் பரிசை வாங்கிய அந்த நொடி மனம் கிங்பிஷர் ப்ளைட் ஏறி வானில் பறந்தது.

எந்த விழாவானாலும் குறைகளும் நிறைகளும் இருக்கத் தான் செய்யும். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்  உலகம் தானே இது. அம்மா செய்த சமையல் சுவையாக இல்லாவிடில் 'அம்மா நல்லா சமைக்கற, உப்பு மட்டும் கொஞ்சம் சேர்த்துக்கோ' என்பது போல் அன்புடன் ஆலோசனைகள் கூறினால் அம்மா அன்புடன் சமைக்க  ருசி கூடும்.

எத்தனையோ விஷயங்கள் மற்றும் அனுபவங்கள் எழுத இருப்பினும், எங்கும் பதிவர் திருவிழா பற்றிய பதிவுகளே இருப்பதால், என் பதிவை சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். எனது பதிவுலக நட்புக்களைக் கூட்டிய இந்த தமிழ் வலைப் பதிவர் திருவிழா அடுத்த ஆண்டும் சிறப்புடன் பூக்கும் என்ற ஆவலுடன்.