Thursday, January 30, 2014

தேன் மிட்டாய் - ஜனவரி 2014

குழாய் குடிநீர் 

பள்ளி காலத்தில் எனக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. மற்றவர்களை போல் தண்ணீர் குடிக்க பாட்டில் எடுத்துக் கொண்டு செல்ல மாட்டேன். குடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி, கையில் தேங்கும் நீரை, மிருக  பாணியில் பருகுவது என் வழக்கம்.  அவ்வாறு நீர் குடிக்கும் பொழுது சொல்ல முடியாத ஒரு நிறைவு என் மனதிலும் வயிறிலும் தோன்றும். கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது நாகரீக நடிப்பில் இந்தப் பழக்கத்தை கைவிட வேண்டிய கட்டாயம் தோன்றி, நாளடைவில் நான் அதை அறவே மறந்துப்போனேன். 

சமீபத்தில் Phoenix மால் சென்ற பொழுது, தாகம் மிகுதியாலும் கொள்ளை விலையில் விற்கப் படும் பாட்டில் நீரை தவிர்க்கவும், குடிநீர் குறியீட்டை தேடி அலைந்து, கீழே உள்ள படத்தில் இருக்கும் இடத்தை அடைந்தேன். 



கீழ் இருக்கும் குமிழை அழுத்தினால், மேலே இருக்கும் குழாயில் இருந்து வரும் நீரை, வாய் வழியாக குடிக்கும் படி வடிவமைக்கப் பட்டிருந்ததைக் கண்டு வியந்தேன். நாகரீகத்தின் சின்னமாக பலர் எண்ணும் இத்தகைய மாலில், நான் மறந்த நீர் பருகும் பழக்கத்தை என் மனதில் உதிக்கச் செய்தது மட்டும் இல்லாமல் என் தகாம் அடங்கும் வரை நீரும் வழங்கிய இந்த நவீன குழாய் ஒரு விந்தை தான்.
              
அருவருப்பு ஏற்படுத்திய தொகுப்பாளர்கள் 

கல்லூரியில் இருந்தே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை விட்டிருந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சில சமயம் சில நிகழ்சிகளை பார்க்க நேரிட்டுவிடும். அப்படி ஒரு சமயம் இந்தப் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தொலைகாட்சி சேனல்களை மாற்றிக் கொண்டே சென்றபொழுது ஒரு தனியார் இசை சேனலில் நான் கண்ட காட்சி என்னை  திடுக்கிடச் செய்தது.

திரை முன் இரு பெண்கள் நேயர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல் ஒளிபரப்பும் நிகழ்ச்சி அது. இசை சேனலில் எல்லா நிகழ்சிகளும் அதே தான் என்பது வேறு விஷயம்.

அன்று பண்டிகை என்பதால் நிகழ்சியை தொகுப்பும் அந்தப்  பெண்கள் சேலை அணிந்திருந்ததை எண்ணி மனம் முதலில் குளிர்ந்தாளும். சற்று நேரத்தில் அந்தக் குளிர்ச்சி என் மனதில் அருவருப்பாக மாறியது. அவர்கள் மேல் பாதி உடம்பில் சேலை-ரவிக்கையும், கீழ் பாதி உடலில் ஜீன்ஸ் பாண்டும் அணிந்திருந்த அந்தக் கர்ண கொடூரத்தை நான் ஏன் பார்த்துத் தொலைத்தேன்?           

மினிமெல்ட் ஐஸ் கிரீம் 

இம்மாத புத்தகக் கண்காட்சி சென்றிருந்த பொழுது, கோவை ஆவி வெளியே இருந்த ஐஸ் கிரீம் வண்டியைக் கண்டவுடன் விரைந்து சென்றவர், அது அமெரிக்காவில் 'future ice cream' என்று அவர் உண்டதாகவும் சுவைக்க நன்றாக இருக்கும் என்றும் பரிந்துரை செய்தார். வழக்கமான ஐஸ் கிரீம் போல் இல்லாமல், அவை ஜெவ்வரிசி போன்ற சிறிய வடிவத்தில் இருந்தன. நாவில் வைத்தவுடன் அந்த சிறிய பந்துகள் விரைந்து உருகி சுவை அரும்புகளுக்கு புத்துணர்ச்சி தந்தன.    


போக்குவரத்து நெரிசல் 

சம்பவம் 1
இம்மாதம் ஒரு நாள் என் splendour இல் தியாகராய நகர் சென்று திரும்புகையில், கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் இருந்தது. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத வகையில் சாலையை வாகனங்கள் மறைத்துக்கொண்டிருந்தன. சற்றும் நகர முடியாததால்,வண்டி என்ஜினை அணைத்து விட்டு,வழி கிடைக்க காத்திருந்தேன். 

இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் வருவது இயல்பு தான், பெரும்பாலும் Pheonix  மாலில் இருந்து  வெளிவரும் வாகனங்களே இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் இரு சக்கர வாகனம் செல்ல ஒரு நாளும் இது போல் கடினப் பட்டது கிடையாது, எப்படியாவது சந்துகளில் நுழைந்து செல்லும் வழகத்திற்கு மாறாக இன்ற இந்த கடின நெரிசலுக்கான காரணம் என் என்று என் மனம் சிந்தனை செய்தது. இருபது நிமிட நேரத்திற்கு பின் இரு பேருந்துகளுக்கு இடையில் தோன்றிய இடைவெளியில் என் வாகனத்தை செலுத்தி முந்தத் தொடங்கினேன், அதன் பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டி செல்ல இடம் கிடைத்து முன்னேறினேன்.              

நெரிசலை கடந்த பொழுது தான் அதன் காரணத்தை அறிய முடிந்தது. ஒரு இரங்கல் ஊர்வலம். ஆடம்பரமாக ஜோடிக்கப்பட்ட பாடை, பல நூறு வெடிகள் என சாலையில் ஒரே அமர்க்களம் தான். இறந்தவரை சந்தோஷமாக இடுகாடு கொண்டு செல்வது அவசியம் என்றாலும், இப்படி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதை செய்வது நியாயமா?      

சம்பவம் 2
ஒரு வழியாக அந்த வெடிகளில் சிக்காமல் வேளச்சேரியை கடந்து, பள்ளிக்கரணை வழியாக தாம்பரம் நோக்கி செல்லத் தொடங்கினேன். பள்ளிக்கரணை எல்லை முடிந்து மேடவாக்கத்தை நெருங்க இருந்த இடத்திலல் மீண்டும் போக்குவரத்து தடைபட்டது.

முதல் சம்பவம் நடந்த சாலை எப்பொழுதும் பரபரப்பான சாலை , ஆனால் இந்த மேடவாக்கம் நோக்கி செல்லும் சாலையில் அவ்வளவு பரபரப்பு இருக்காது.போக்குவரத்து அதிகமானாலும் குறைவான வேகத்தில் வாகனங்கள் தடையின்றி செல்லும். அந்த நெரிசலில் வழி கண்டறிந்து முன்னேறி சென்ற பொழுது தான் காரணமும் இன்னதென்று புரிந்தது.

மின் விளக்குகள் ஜொலிக்கும் பல்லக்கின் பின்னால் நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். வேதங்களில் சொல்லப்படும் கடவுள் என்பவர் மக்களின் இன்னல்களை போக்கத்தான் வழி செய்வார் என்று தானே சொல்கிறது, ஆனால் இன்றோ கடவுள் பெயரால் ஏற்படும் இத்தகைய இன்னல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.   

http://vasagarkoodam.blogspot.com

அழியும்  பசுமை

அலுவலகம் சென்று வரும் தாம்பரம்-மேடவாக்கம் சாலை சென்னை மாநகரின் புறநகர் சாலை தானா என்று எனக்கு பலமுறை சந்தேகம் வந்ததுண்டு. காரணம்: இரு புறமும் வளர்ந்துள்ள புசுமையான மரங்கள் கதிரவன் சுட்டெரிக்கும் வேளையில் நிழலும்,சந்திரன் பிரகாசிக்கும் வேளையில் குளிர்ந்த காற்றும் வீசி சாலை பயணிகளுக்கு குதூகலத்தை தந்து வந்ததுதான். அந்த சாலையை தற்பொழுது நாலு வழிப் பாதையாக மாற்றும் வேலைகள் நடப்பதால், சாலையோரம் இருந்த அந்த மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன. இப்படியே சென்றால் நகர் புறங்களில் பசுமையை எங்குதான் காண்பது.    

கலங்கரை விளக்கம் 

என் கிராமத்தின் கடற்கரையின் அருகில் புதிதாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தில், பத்து ரூபாய் கட்டணத்துடன் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப் படுகின்றனர். சென்னை கலங்கரை விளக்கத்தின் அளவு உயரம் இல்லை என்றாலும் அதன் உச்சியில் நிற்கும் பொழுது, ஒரு புறம்: பறந்து விரிந்த வங்கக் கடலும், அதன் மேல் மீன் பிடிக் படகுகளும், மறுபுறம்: பசுமையான தென்னை மரங்களும் அவற்றில் இருந்து வீசும் காற்றும் அடங்கிய காட்சிகள் மனதைக் கொள்ளை கொண்டன.            


நாகரீக கொள்ளை

இப்பொழுது எல்லாம் இந்த மால்களுக்கு செல்ல சற்று பயமாகவே உள்ளது. என்னை கதிகலங்கச் செய்வது அங்கு வசூலிக்கப் படும் பார்க்கிங் கட்டணம் தான். இந்த பார்க்கிங் கட்டணங்களை குறித்து நான் எழுதிய முந்தைய பதிவான வசூல் மன்னர்களுடன் இப்பொழுது இணைய விரும்பும் புது உறுப்பினர் வேளச்சேரியில் தோன்றியுள்ள Phoenix மால். 

சீருந்துகளின் பார்க்கிங் கட்டணம்:
       


இரு சக்கர வாகனங்களின் பார்க்கிங் கட்டணம்: 



உங்களுடைய வாகனம் உள்ளே நுழையும் பொழுதே உங்களுக்கு ஒரு சீட்டில் நேரம் அச்சடித்து கொடுக்கப்படும். அதை வைத்துதான் உங்கள் உள்ளிருப்பு நேரம் கணக்கிடப்படும். ஒரு வேளை அந்த சீட்டை தொலைத்து விட்டால், சுளையாக 350 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். 
  
ஒரு கார் நிற்கும் இடத்தில ஆறு பைக்குகளை நிறுத்தலாமே. எல்லா இடங்களிலும் பைக் பார்க்கிங் கட்டணம் குறைவாக இருக்கும் பொழுது இங்கு மட்டும் கார் பார்க்கிங் கட்டணத்தை விட பைக் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பது  ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.   

Tuesday, January 28, 2014

இன்னிக்கு எனக்கு பொறந்தநாள் !

நான் படித்தது ஆங்கிலப் பள்ளி என்பதால், எனக்கு மிகவும் கடினமான பாடமாக இருந்தது தமிழ் தான். பின்னர் 11 மட்டும் 12ஆம் வகுப்புகளில், சக நண்பர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கத்தில் தமிழை பின் தள்ளி பிரெஞ்சு மொழியை தமது மொழிப்பாடமாக தேர்வு செய்தனர். எனக்கு எதோ அச்சமயம் அதில் உடன்பாடு இல்லை. வெற்றியோ தோல்வியோ அது தமிழுடன் தான் என்று தமிழையே என் மொழிப்பாடமாக தேர்வு செய்துகொண்டேன். எனக்கு உயர்க்கல்வியில் தமிழ் ஆசிரியராக வந்த சேகர் ஐயா அவர்களின் வகுப்பறைகளால் தமிழ் மீது எனக்கு இருந்த பற்று அதிகமாகி என்னை  தன் மீது காதல் கொள்ளச் செய்தது தமிழ். 

 வாலிப வயது முதலே சில (ஆங்கில)நாவல்கள் பட்டிததினால் எனக்குள்ளும் கதை எழுதும் வேட்கை வேரூன்ற, ஏனோ அதற்கான பாதையை நோக்கி நான் பயணிக்கவில்லை. கல்லூரி காலத்தில் நான் படித்த முதல் தமிழ் நாவல் கல்கியின் பார்த்திபன் கனவு, பின்னர் கல்லூரி இறுதி ஆண்டில் என் நண்பன் மூலம் சுஜாதா அறிமுகம் ஆனார். சுஜாதாவின் நாவல்களை படிக்கத் தொடங்கிய பின் ஆங்கில நாவல்கள் படிப்பதை அறவே விட்டு விட்டேன். அவரது தாக்கம் என்னைப் பின்னாளில் தமிழில் எழுதச் செய்யப் போகிறது என்பதை நான் அன்று அறியேன்.  

இப்படி நாட்கள் செல்ல, அலுவலகத்தில் சென்ற ஆண்டு உடன் பணிபுரியும் சீனுவின் அறிமுகம் கிடைத்து. அவர் மூலம், எழுத 'வலை' என்னும் மேடை இருப்பதை அறிந்தேன். சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு சீனுவுடன் முதல் முறை சென்ற பொழுது என் மனதில் தோன்றிய எழுத்து ஆசை 'கனவு மெய்ப்பட' என்ற வடிவம் பெற, ஜனவரி இருபத்து எட்டாம் நாள் தொடங்கியது உங்களுடனான என் வலையுலக வாழ்க்கை.       

ஆரம்பத்தில் சிறுகதை மட்டுமே எழுதிய நான், பின் 'களவு ' என்ற ஒரு தொடர் கதையை எழுதினேன். களவு என்ற தொடரை தக்க வரவேற்பு இல்லாத காரணத்தால், மேலும் தொடர ஊக்கமின்றி இடையிலேயே நிறுத்தி விட்டேன். எனது வழக்கை அனுபவங்களையும், நான் கண்ட ஊர்களைக் பற்றியும் ஊர் சுற்றல் என்ற பகுதியில் எழுதினேன்.  

எனது தளத்தை பிரபலப் படுத்த ஒரே வழி சினிமாதான் என்ற கட்டாயத்தின் பேரில் என்னைக் கவர்ந்த சில உலக சினிமா படங்களை குறித்து எழதத் தொடங்கினேன். அதில் கொஞ்சம் வரவேற்பு கூடியது. (சில மாதங்களாக இந்த பகுதியில் நான் எழுதவில்லை, விரைவில் மீண்டும் தொடருவேன்)  

சமீபத்தில் நான் எழுதி நிறைவு செய்த தொடர் நித்ரா. என் நண்பர்களிடையில் பேசும்படியான வரவேற்பு கிடைத்தது. தொடரை முடித்ததில் எனக்கும் ஆனந்தம். மே மாதத்தில் எனது வாழ்கையில் நடக்கும் சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து தேன் மிட்டாய் என்ற பகுதியில் எழுதி வருகிறேன். இன்றளவும் எந்த மாதமும் தேன் மிட்டாய் தடை படாது வெளிவருவதே என்னளவில் மிகப்பெரிய வெற்றியே.

இந்த நிலையில் எதுவும் யோசிக்காமல் விளையாட்டாக எழுதிய பதிவு மழை சாரலில் பஜ்ஜி அதிக மக்களால் படிக்கப் பட்ட பொழுது, சாப்பாட்டு ராமன் என்ற புதிய அவதாரம் எடுத்தேன். இன்று வரையில் நான் எழுதி அதிகம் வாசிக்கப் படுவது சாப்பாட்டு ராமன் பதிவுகள் தான். சினிமா மற்றும் உணவகங்களுக்கு தான் மக்களிடையே எத்தனை வரவேற்பு !  

சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசையுடன் வந்த என் பாதை எப்படியோ மாறி,தொடர்ந்து எழுத எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு தத்தளித்து இருக்கின்றேன். இன்று வரை பதிவுலகில் எனக்கு வெற்றியா தோல்வியா என்று என்னால் அறியமுடியவில்லை. நான் எதிர் பார்த்ததை விட மிகவும் அதிக நண்பர்களை பதிவுலகில் சம்பாதித்து விட்டேன். புதிய தோழர்கள், சகோதர சகோதரிகள் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி தான்.


சென்ற ஏப்ரல் மாதம் மெட்ராஸ் பவன் சிவா மற்றும் மின்னல் வரிகள் பால கணேஷ் இருவரையும் சந்தித்த பொழுது, வலையில் நீடிப்பது பற்றி நிறைய குறிப்புகள் தந்து எனக்கு என்று ஒரு இலக்கை வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணிக்கச் சொன்னார்கள். அதன் படி அன்று நான் வகுத்த இலக்கு:
  1. ஒரு பதிவிற்கு 300க்கு மேற்ப்பட்ட page views. 
  2. தமிழ்மண ரேங்க் பட்டியலில் ஐம்பதிற்கு மேல். 
  3. ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட Followers.

முதல் இரண்டு இலக்கை என்னால் அடைய முடிந்தது. சீனு, ராம் குமார், ஸ்கூல் பையன், பால கணேஷ், அகிலா, அரசன், கோவை ஆவி போன்ற நண்பர்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தபோது மட்டும் followers எண்ணிக்கை கூடியது. அதன் பின் மந்தமாகத் தான் கூடியது, இன்றளவு 59 followers மட்டுமே உள்ளனர்.       

என்னைப் பார்த்து என் நண்பர்கள் இருவர் தமிழில் எழுதத் தொடங்கியதையே எனது இந்த ஓராண்டுக் கால பதிவுலக வாழ்க்கையின் வெற்றியாக என்னால் பெருமிதத்துடன் கூற முடியும். 

இனி வரப் போகும் காலங்களில் சற்றும் சோர்வு இல்லாமல் உற்சாகத்துடன், சுஜாதா சொல்லியது போல், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். காலமும் நேரமும் உதவும் என்ற நம்பிக்கையுடன் என் பதிவுலக பயணத்தை தொடர இருக்கின்றேன்
       

Sunday, January 19, 2014

ஆனந்தக் குளியல் @ Monkey Falls

ஆனை மலையின் அடிவாரத்தில் இருக்கும் அருவியான மங்கி பால்ஸ் சென்ற பொழுது என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அனுபவம் மலர்ந்தது. உங்கள் கற்பனைக் குதிரைகளை எட்டு திசைகளிலும் ஓடவிடாமல், நடந்ததை அறிய மேலும் வாசியுங்கள்.    


பொள்ளாச்சி-வால்பாறை சாலையில், ஆனை மலையில் இருக்கும் இந்த அருவி குரங்கின் முகத் தோற்றத்துடன் அமைந்திருப்பதால் தோன்றிய காரணப் பெயர் மங்கி பால்ஸ். குற்றாலம் போல் பெரிய அருவி ஒன்றும் கிடையாது, சற்று சிறிய அருவி தான். கார்த்திகை மாதத்தில் மழைச் சாரலில் என் நண்பன் குடும்பத்துடன் சென்றிருந்தோம்.       

நண்பர்களுடன் தோழிகளும் உடன் வந்தமையால் எப்படியும் குளிக்க முடியாது என்று எண்ணிக்கொண்டு மாற்று உடை எதுவுமின்றிதான் சென்றிருந்தோம். என்னுடன் வந்த நண்பர்கள் அங்கு சென்று அருவியைக் கண்டவுடன், நீர் விழுவதைக் கண்டு காதல் கொண்டு, மாற்று உடையைப் பற்றியும் கவலைப் படாமல், ஜீனுடன் அருவியில் குளித்தனர்.       

அவர்கள் குளிபப்தைக் கண்டபொழுது என்னுள்ளும் குளிக்க வேண்டும் என்ற ஆசை பொங்கியது. இருப்பினும் மாற்று துணி இல்லாதது, மாரி இடைவெளி விட்டு மழை பொழிந்தது என்னுள் குளிக்கத் தடை போட்டது. ஜீனுடன் குளித்தால் அதன் ஈரம் காயச் சிறிதளவு கதிரவன் கூட இல்லை, அடுத்து செல்லும் இடங்களில் குளிர் காற்று அடித்தால் அந்த நொடி படும் அவஸ்தையை எண்ணி, என் ஆசைக்கு அணைப் போட்டுக்கொண்டு ஒதுங்கி நின்றேன்.      

கூட்டத்துடன் வெளியில் சென்று இதுபோல கலந்து கொள்ளாமல் தள்ளி நிற்பவர்களுக்கு என்றே ஒரு பதவி எங்கும் கிடைப்பதுண்டு. சுமைதாங்கி. நண்பர்களின் உடமைகளை பாதுகாக்கும் சுமைதாங்கியாக அவர்களது உள்ளாசக் குளியலை வெறுப்புடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின் எனக்கு கூடுதல் பதவி கிடைத்தது. நிழற்பட பதிவாளராக வேண்டிய கட்டயாம். இந்த முகநூல் பரவி உச்சத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் கொடுக்கும் பல போஸ்களை முகத்தில் புன்னகையுடன் மனதில் சோகத்துடன் கமெராவில் பதிவு செய்தேன்.       

அனைவரும் குளியலை முடித்து விட்டு புறப்படத் தயாராகும் பொழுது, மழை பொழியத் தொடங்கியது. மணி ஒன்றை கடந்துவிட அங்கு அருகில் இருக்கும் பூங்காவில் வீட்டில் இருந்து கொண்டுவந்த கட்டுச்சோறை உண்டபின் அடுத்த இடம் செல்லலாம் என்று முடிவாகி, அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மழை நிற்க காத்திருந்தோம். திடீரென என் மூளையினுள் யோசனை மணி அடித்தது.


உடன் வந்த என் நண்பனை அழைத்துக்கொண்டு, மீண்டும் அருவியை நோக்கிச் சென்றேன். அருகில் இருந்த ஒரு பாறை மறைவில் என் ஆடைகளை அவிழ்த்து அவனிடம் கொடுத்துவிட்டு, இடுப்பில் துண்டுடன் மழைச் சாரலில் நனைந்தபடி அருவியை நோக்கி  நடந்தேன். அங்குக் குளித்துக்கொண்டிருந்த ஒரு சிலரும் மழையின் வேகம் அதிகரிக்க, தங்கள் குளியலை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பத் தொடங்கியிருந்தார்கள்.



இப்பொழுது அந்த இடத்தில இருந்தது நான், மற்றும் நான் தான். ஒருவரும் இல்லாத தனிமையில் அருவியின் அடிவாரத்தில் நான் மட்டும் இருந்தேன். தனிமை என்றாலே ஆனந்தக் குளியல் தான். எனக்கு மட்டும் சொந்தமான அருவி போல் அடுத்த அரை மணி நேரமும், மலை நீருடன் மழை நீர் கலந்து வந்த அந்த அற்புத நீரில் ஆனந்தக் குளியல் தான். அந்த முப்பது நிமிடமும் சொர்கலோகத்தில் இருப்பது போன்ற ஒரு கனவாகவே இந்தக் கணமும் எனக்கு தோன்றிகிறது. ஆனந்தம்! பேரானந்தம்!               

Sunday, January 12, 2014

வீரத்துடன் ஜில்லா பார்த்த கதை

அஜித் மற்றும் விஜய் படம் ஒரே நாளில் வெளி வருகின்றது என்றால் இரு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பும் மற்றவர்கள் மத்தியில் சற்று பயமும் தோன்றத்தான் செய்கிறது. என் வீட்டில் நிச்சயம் முதல் நாள் படம் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனையும் தோன்றியது. காரணம் இரு தரப்பிற்கும் இருக்கும் பழைய மோதல் வரலாறுகள் தான். 

மேலும் தொடரும் முன் எனக்கு என்று எந்த ஒரு தலைவனும் இல்லை நான் ஒரு சினிமா ரசிகன் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன். 

ஒரு சினிமா ரசிகனுக்கு என்ன வேண்டும், மக்கள் வெள்ளத்தில் விசில் பறக்க முதல் நாள் மாஸ் படம் பார்ப்பது தானே அவனது ஆசை. எனக்கும் அதே ஆசை தான். ரஜினி கமல் படம் முதல் நாள் பார்க்கும் அட்டகாசத்தை விட இந்நாளில் அஜித் விஜய் படங்களுக்கு இளவட்டங்கள் இடையே மௌஸ் கூடித் தான் இருக்கின்றது. அலுவலகத்தில் விடுப்பு வாங்கி வீட்டின் எதிர்ப்பை மீறி முதல் நாள், ஜனவரி பத்து, 'வீரம்' மற்றும் 'ஜில்லா' பார்ப்பது என்று முடிவானது.     
   
வீரம் 
மார்கழியின் காலை குளிர் என்னை சற்று நேரம் அலாரம் ஓசையையும் தாண்டி உறங்கச் செய்யவே, எனது body  sprayவை பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாற்பத்து ஐந்து நிமிடங்களில் முதல் படம் வீரம் துவங்க இருக்க எனது splendor என் வீட்டு வாசலை விட்டு வெளியேறியது.      

என் வீட்டில் இருந்து நாவலூர் செல்ல இரு வழிகள் உண்டு. ஒன்று நகர்புற மேடவாக்கம் - omr வழி . இரண்டாவது கிராமப்புற சித்தாலப்பாக்கம் - தாழம்பூர் வழி. காலை வேளை  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க   சித்தாலபாக்கம் - தாழம்பூர் வழியில் பலத்த எதிர்பார்ப்புடன் வழக்கத்தை விட அதிக வேகத்தில் விரைந்தேன். சாலையில் வாகன  கூட்டம் சற்று குறைவாக  இருந்தமையால் என் வேகம் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.  

தாழம்பூர் கூட் ரோட்டில் இடது புறம் திரும்பி ஐந்து நிமிடப் பயணத்தில் நாவலூர் வந்துவிடும். முதல் நாள் படம் பார்க்கும் ஆர்வத்துடன் நான் விரைந்துகொண்டிருக்க, ஒருவன் சாலையை இடமிருந்து வலது பக்கம் கடக்க முயன்றான். அவன் தனது இடதுபுறம் மட்டுமே பார்த்துக் கொண்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தான். அவனது வலதுபுறமிருந்து வந்து கொண்டிருந்த நான் எழுப்பிய ஹோர்ன் சத்தம் அவனுக்கு கேட்கவில்லை. அவனைத் தாண்டி சென்றுவிடலாம் என்று என் மனதில் கணக்கு போட்டு வண்டியை வலது புறம் நகர்த்தவும் அவன் எனக்கு நேர் எதிரே வரவும்,  சடக்கென brake போட்டு வண்டியை நான் நிறுத்த, என் வண்டி சக்கரத்தின் அழுக்கு அவன் காற்சட்டையில் கரையை உண்டாக்கியது.         

என் இதயம் அந்த நொடி அதன் துடிப்பின் உச்சத்திற்கு சென்று திரும்பியது.   ஜிவ்வென ஏறிய கோபத்துடன் 'யோவ் ரெண்டு பக்கம் பார்த்து ரோட கிராஸ் பண்ண மாட்டியா?' என்று நான் கேட்பதற்குள் என்னைச் சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்தது. அந்த கூட்டத்தில்  ஒருவன் 'இந்த IT  கம்பனிங்க வந்த அப்பறம் இந்த ரோட்ல எல்லாம் கண்ண மூடிகிட்டு பறக்கறாங்க' என்று குறை கூற ஆரம்பித்தான். எல்லாம் அந்த வட்டது ஆட்கள் போலத் தெரிந்தது, தனியாக சிக்கிக் கொண்டோமே என்று மனதினுள் பீதி கிளம்பினாலும், முகத்தை சற்று முறைப்பாகவே வைத்துக் கொண்டேன்.

கூட்டத்தை விளக்கிக் கொண்டு ஆறு அடி உயரத்தில் வேஷ்டி சட்டையுடன் ஒருவன் உள்ளே நுழைந்தான். வசமாக சிக்கிக் கொண்டோம் என்று என் மனம் துடிக்க, அருகிலே வசிக்கும் நண்பர்கள் யார் என்ற கணக்கை என் மூளை போடத் தொடங்கியது. எனது நண்பனின் போலீஸ் தந்தை என் வரிசையில் முன் நின்றார். உள்ளே வந்தவன் 'என்ன பிரச்சனை. தம்பி எங்க அவசரமா போகுது?' என்று கேட்டான். 

இது வேறு ஒரு சூழ்நிலை என்றால் 'என் அலுவலகம்' என்று சொல்லி இருப்பேன், ஏற்கனவே அந்தக் கூட்டத்தில்  ஒருவன் IT துறை  மீது தன் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்க, சற்று தயக்கத்துடன் 'வீரம் படம் பார்க்க போயிட்டு இருக்கேன் ஷோக்கு டைம் ஆகுது' என்றேன். அவன் முகத்தில் ஒரு பொலிவுடன் 'தல படத்திற்கு போறிங்களா. நான் காலையிலேயே பார்த்துட்டு இப்பதான் வர்றேன். படம் செம மாஸ். தல பட்டய கிளப்பி இருக்காரு. இந்த முட்டாப் பையனுக்கு ரோடு கிராஸ் பண்ணவே தெரியாது' என்று அவன் தலையில் கொட்டி, 'நீ போ தம்பி தல இன்ட்ரோ மிஸ் பண்ணாத' என்று கூட்டத்தை விலக்கினான்.

 'தல படமும்   மலமாடுகளும்' என்று நண்பர் ராம் குமார் எழுதிய அவருடைய அனுபவம் போலவே என் வாழ்விலும் நடந்ததை எண்ணி வியந்து திரையரங்கை அடைந்தேன். 9 20க்கு துவங்க வேண்டிய படம் 9 15 தொடங்க எழுத்து பார்க்க முடியாமல் போனாலும் திரையில் அஜித் தோன்றும் காட்சியில் படி ஏறி திரை அருகே சென்றேன். என்னை போல் தாமதமாக உள்ளே வந்து கொண்டிருந்தவர்களும் இருந்த இடத்தில அப்படியே நின்று ஐந்து நிமிட ஆரவாரதிற்குப் பின்னரே தம் இருக்கையை நோக்கிச் சென்றனர்.                        

ஜில்லா 
அடையாரில் இருக்கும் 'கணபதி ராம்' திரையரங்கில்  நான் பார்க்கும் முதல் மற்றும் இறுதிப் படம் ஜில்லா என்று வரலாற்றில் பதிக்கிறேன். 2 30 மணிக்கு தொடங்கும் படத்திற்கு ஒரு மணிக்கே கிளம்பி திரையரங்கை  1 45 மணிக்கு சென்றடைந்தோம். 60 மற்றும் 80 ரூபாய் டிக்கெட் விலை கொண்ட அந்த திரையரங்கம்  முதல் நாள் ரசிகர்களுடன் காண்பதற்கு உகந்த திரையரங்கம் எனபது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டததில் நன்கு தெரிந்தது. காவல் துறை உதவி கொண்டு கூட்டத்தை வரிசை படுத்தி சீரமைக்க முயன்றும் அந்த முயற்சி பெரும் தோல்வி தான்.

முந்தைய காட்சி முடிவடைய வெளியே காத்துக்கொண்டிருந்தோம். டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட நேரம் 2 30, ஆனால் முந்தைய காட்சி முடியவே 2 45 ஆகிவிட்டது.  நுழைவு வாயிலை ஒருவர் செல்லும் அளவிற்கு திறந்து வைத்துக்கொண்டு, அந்தக் காவல் துறை அதிகாரி டிக்கெட்டுக்களை சரி பார்த்து ரசிகர்களை உள்ளே விடத் தொடங்கினார்.    

 வாயில் கதவின் படிகளுக்கு அருகிலேயே நாங்கள் இருந்தாலும் வாயிலை நெருங்க பெரும் போராட்டமாக மாறியது. ரசிகர் கூட்டம் எல்லாத் திசைகளில் இருந்தும் வாயிலை நோக்கி நகர, கூட்டத்தில் நசுங்கத் தொடங்கினேன். மன்னன் படத்தில் கொடுப்பது போல் இங்கு தங்க சங்கிலியும் மோதிரமும் கொடுக்கவில்லை என்றாலும் யார் முதலில் செல்வது என்ற போட்டியில் அந்தக் கூட்டத்தில் ஒழுங்கின்றி பலரும் முந்தத் தொடங்க, மைதா மாவு போல் என்னை பிசைந்தனர். கூட்டத்தில் எந்தப் பக்கமும் விழ வாய்ப்பில்லை என்ற மனதில் உறுதியுடன் வாயிலை நோக்கி முன்னேறினேன்.  

 நாவில் தாகம் தவிக்க, இன்னும் பத்து அடி சென்றால் ஆபத்து விலகிடும் என்று மனம் சொல்ல, உடலை மூலை முன் நோக்கி செயல் படுத்தியது. பெரும் போராட்த்ததிற்குப் பின் ஒரு வழியாக உள்ளே நுழைந்த பொழுது, சட்டை கசங்கி தலை, கலைந்து, செருப்பு கிழிந்து, ஒரு சண்டையில் இருந்து வெளிவந்த 'கைப்புள்ள' போலவே நான் காட்சியளித்தேன். நிதானித்துக் கொண்டு திரையரங்கினுள் நுழைந்து, முந்தைய காட்சிகளில் வான் நோக்கி பறந்து, தற்போது தரையில் குவிந்து கிடக்கும் பேப்பர் குப்பைகளின் மேல் நடந்து சென்று, என் இருக்கையில் அமர்ந்தேன். 

அந்த நெரிசலை சமாளித்து அனைவரும் உள்ளே வர காத்திருந்த அந்த அரை மணி நேரத்தில் மூன்று படங்களின் முன்னோட்டம் போட்டப் பிறகே படம் திரையிடப்பட்டது.  படம் தொடங்கி ஒரு பத்து நிமிடங்கள் சென்றவுடன் எங்களுக்கு முன் மூன்றாவது வரிசையில் ஒரு சலசலப்பு கேட்க எங்கள் கவனம் அங்கு திரும்பியது. 

'நான் நகர மாட்டேன். ...தா ரெண்டு மன்நேரம் இங்கதான் நிப்பேன் என்ன செய்வ?' என்று இருக்கையில் இருந்த ஒருவனைப் பார்த்து நின்று கொண்டிருந்த ஒருவன் சண்டை பிடித்தான். அவன் நண்பன் அவனை சமாதானப் படுத்தியும் 'என்ன திமிரா பேசறான் இவன். என்னால நகர முடியாது. என்னடா பண்ணுவ ...லு' என்று வம்புடன் நின்றான். அமர்ந்திருந்தவன் அமைதி காக்க, இவனது நண்பர்கள் அவனை சமாதனம் செய்து அவனை இருக்கையில் அமர வைக்க ஐந்து நிமிடங்கள் ஆனது. இது போன்ற செயல்களால் தான் முதல் நாள் படம் பார்ப்பது என்பது ஒரு தடை செய்யப்பட்ட செயலாகவே உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. 

இரு படங்களின் விமர்சனத்தை எதிர் பார்த்து வந்தவர்களுக்கு என்னிடம் சொல்ல ஒன்றும் இல்லை. இரு தரப்பு ரசிகர்களுக்கும் விருந்து என்றாலும்,   இரண்டு படங்களுமே வழக்கமான சண்டை, காதல், குடும்பம், பாட்டு, நகைச்சுவை கலந்த மசாலா படங்கள். முந்தைய flopஆன அஜித்-விஜய் படங்களுடன்  ஒப்பிடுகையில் இவை எவ்வளவோ பரவாயில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.  இதுபோல மசாலா இல்லாமல் வரும்  இயல்பான படங்களின் மீதே எனக்கு நாட்டம் அதிகமாக உள்ளது.