Showing posts with label movie review. Show all posts
Showing posts with label movie review. Show all posts

Monday, August 5, 2013

After Hours - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

என்னைக் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவரான Martin Scorseseயின் படங்களை தேடித் பிடித்து பார்த்த பொழுது தான் கண்ணில் சிக்கியது இந்த படம். ஏழு முறை சிறந்து இயக்குனருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இவரின் பல படங்களை நீங்கள் பார்த்து இருந்தாலும், பெரிதும் பேசப் படாத இந்த After Hours படத்தை பார்த்திருப்பது சற்று கடினமே.

படத்தின் முன்னோட்டம் : 

(முதலில் play பொத்தானை கிளிக் செய்து பின் pause செய்து மேலே படிக்கவும்)


கதை சுருக்கம் :

பால்(Paul) என்ற ஒரு கணினி நிறுவன ஊழியன், ஒரு மாலை தன் வீடு திரும்பும் பொழுது ஒரு உணவகத்தில் மார்சி(Marcy) என்ற பெண்ணை சந்திக்கிறான். இருவருக்கும் ஒரு புத்தகத்தின் மேல் நாட்டம் இருக்க, அதை பற்றி அவர்கள் பேச, மார்சி விடை பெற்று செல்லும் முன் தன் தொலைபேசி எண்ணை பாலிடம் கூறிச் செல்கிறாள். 


தன் வீடு சென்று அந்த எண்ணுக்கு பால் அழைக்க, மார்சி அவனை அவள் தங்கியிருக்கும் தோழியின் இல்லத்திற்கு வருமாறு அழைக்க, அவனும் இருபது டாலர்களுடன், ஒரு டாக்ஸி பிடிக்க, அந்த டாலர் நோட்டு காற்றில் பறக்க, வேறு பணம் ஏதும் இன்றி அவன் தவிக்க, அன்றைய இரவின் அவன் இன்னல்கள் தொடங்குகின்றன. இப்படி ஒரு இரவு முழுக்க அடுத்து அடுத்து அவன் சந்திக்கும் சிக்கல்களே மீதி கதை.

படத்தில் நான் ரசித்தவை :

ஓர் இரவில் நாயகனுக்கு இன்னல்கள் நடக்கும் வண்ணம் கதை படமாக்கப் பட்டுள்ளது முதல் சிறப்பு. படம் முழுக்க இரவில் எடுக்கப் பட்டக் காட்சிகளே இருக்கும். 

மார்சி வீடு சென்ற பால், சில குறிப்புகள் மூலம், மார்சிக்கு எதோ ஒரு பயங்கரத் தீக்காயம் இருக்குமோ என்று எண்ணும் நிமிடங்கள், அந்த காயங்களைக் கண்டது போல் நம்மையும் ஒரு கணம் கண் மூட வைத்து விடும்.
    
நல்லிரவில் ரயில் கட்டணம் உயர, ஒரு டாலருக்கு குறைவான பணமே அவனிடம் இருக்க, வீடு திரும்ப முடியாமல் ரயில் நிலையத்தில் அவன் தவிக்கும் காட்சிகள் மிகவும்  இயல்பாக இருக்கும்.


அவன் அந்த இரவில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் முதலில் அவனுக்கு உதவினாலும், ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் அவன் எதிரி ஆகிவிடுகிறான். 

படம் தொடங்குவது அவன் அலுவலகத்தில், கடும் போராட்டங்களுக்கு பின், அவனது காலை விடியும் பொழுது, அதே அலுவலகத்தின் வாசலில் அவன் இருப்பபான்.

படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு ஓட்டம் இருக்க, எந்த நிமிடமும் நமக்கு விறு விறுப்பு குறையாது. 

எதார்த்த சினிமா என்ற பட்டியலில் என்றுமே இந்த படத்தை நான் பரிந்துரைப்பேன்.

முக்கிய எச்சரிக்கை: ஆங்கில படத்திற்கே உரிதான சில ஆபாச காட்சிகள், இரண்டு இடங்களில் இந்த படத்தில் வரும். பார்த்துவிட்டு என்னை அடிக்க தேடக் கூடாது.

 (இப்பொழுது மேலே pause  செய்த முன்னோட்டத்தை play செய்யவும்)

*******************************************************************************************************
ஆண்டு                        : 1985
மொழி                          : ஆங்கிலம்
என் மதிப்பீடு             : 4.4/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

Thursday, July 25, 2013

The General - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************

என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.

*********************************************************************************************************

சமீபத்தில் 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார், முகநூலில் பகிர்ந்த Buster Keaton வீடியோ என் கண்ணில் சிக்க, என் கல்லூரியில் நான் பார்த்த 'The General' படம் நினைவிற்கு வந்தது. என் நண்பன் ஒரு நாள் என்னிடம் 'கமலோட பேட்டி ஒன்னு ஹிந்துல பார்த்தேன், அவரு யாரோ Buster Keaton மற்றும் Peter Sellers னு ரெண்டு பேர பத்தி ரொம்ப புகழ்ந்து பேசி இருக்காரு' என்று சொன்னான். உடனே IMDB துணையுடன் இருவரையும் அடையாளம் கண்டு கொண்டு, நான் முதலில் பார்த்த படம் தான் இது.



அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையில் போர் நடந்த 1890களில் கதை நடப்பதாக துவங்கும். ஜானி(Buster Keaton) ரயில்வே பொறியாளராக பணி செய்வதால் அவன் சேவை மக்களுக்கு தேவை என்று அவனை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அதிகாரிகள் மறுத்து விடுவர். அவன் ராணுவத்தில் சேரவே முயற்சிக்காமல் பொய் சொல்வது போல் சந்தர்ப்பமும் சூழ்நிலையம் அவனுக்கு எதிராக செயல்பட, அவன் காதலி அவனை விட்டு பிரிந்திடுவாள். 



எதிரிகளின் சதியால் இவன் வேலை செய்யும் ரயிலான 'The General' கடத்தப் படும், ஒற்றை ஆளாக அவர்களை வேறு ஒரு ரயில் என்ஜினில் துரத்திக் கொண்டு எதிரி நாடு வரை சென்ற பிறகுதான் அவன் காதலி மட்டும் அந்த ரயிலில் சிக்கியது அவனுக்கு தெரியவரும்.எதிரிகளின் ரகசியத் திட்டத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் காதலியை மீட்டு, அவன் தாய் நாடு திரும்பி எப்படி எதிரிகளின் சதியை முறியடிக்கிறான் என்பதே கதை. 



படத்தில் நான் ரசித்தவை: 

ஜானி  புகை வண்டி ரயில் என்ஜினுடன் போராடும் காட்சிகள் அசத்தலாக, நகைச்சுவையாக இருக்கும். 


முதல் பாதியில் ஜானி பெரும் படையுடன் ரயிலில் துரத்துவதாகவே எதிரிகள் நினைத்து பயந்து கடத்திய ரயிலில் வேகமாக செல்லும் காட்சிகள் மிகவும் இயல்பாக சித்தரிக்கப் பட்டு இருக்கும்.



இரண்டாம் பாதியில் ஜானி தாய் நாடு திரும்பக் கூடாது என்று, முதல் பாதியில் அவன் துரத்திய அதே கும்பல், இம்முறை அவனை துரத்துவது போல் காட்சி வருவது படத்திற்கு சிறப்பு. 

வசனமே இன்றி அந்த ரயில் ஓட்டத்தில் நம்மை பயணிக்க வைக்கும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். 

திரையில் நடித்தது மட்டுமின்றி, கதை எழுதியதிலும், இயக்கியதிலும் Buster Keatonனுக்கு பங்கு உண்டு. 

வசனம் இல்லாத ஊமைப் படம் என்றால்,முழு நீள நகைச்சுவை படமாகத்தான் இருக்க வேண்டும் என்று என்னுள் இருந்த எண்ணத்தை மாற்றிய இந்த படம் தான், பேசாத ஊமைப் படங்களின் வரிசையில் என்றுமே நான் முதல் இடத்தில வைப்பது. 

*******************************************************************************************************

ஆண்டு              : 1926
மொழி                : ஆங்கிலம் (ஊமைப் படம்) 
என் மதிப்பீடு   : 4.7/5 

மேலும் விபரங்களுக்கு IMDB

*******************************************************************************************************

Monday, July 1, 2013

ஆண்பாவம் - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில், திரைக்கதையை நகைச்சுவைக்காக  கஷ்டப்பட்டு வளர்ப்பதை பார்த்து நொந்து, பிறரை கேளி செய்வதே நகைச்சுவை என்று இருக்கும் இந்த நிலைப்பாட்டை கண்டு வருந்தி, தமிழில் வெளி வந்த உண்மையான முழு நீள நகைச்சுவை படங்களின் பட்டியலை யோசித்தேன், முதலில் மனதில் தோன்றியது இந்தப் படமே.  

பாக்யராஜின் நிழலில் இருந்து பிரிந்த பாண்டியராஜன், கன்னி ராசி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின் தானே இயக்கி நடித்த படம் ஆண்பாவம். இளவட்டம் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவைப்படம். தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றிய ஒரு புது முயற்சி என்றும் சொல்லலாம்.

கிராமத்தில் புதிதாய் திரையரங்கம் நிறுவும் வி.கே. ராமசாமியின் மகன்களான பெரிய பாண்டி, சின்ன பாண்டி இருவரும் திருமண ஆசை கொள்ள, அவர் பெரிய பாண்டியை பெண் பார்க்க அனுப்ப, பெரிய பாண்டி ஊர் மாறி சென்று வேறு பெண்ணை பார்த்து அவள் மேல் காதல் கொள்ள, அதனை தொடர்ந்து நிகழும் சிக்கல்களை நகைச்சுவையாகச் சொல்வதே படம்.

'வந்தனம் வந்தனம்' என்று இளையராஜாவின் இசையில் சினிமாவின் பெருமையை சொல்லும் பாடலும், எப்பொழுது காதலியுடன் சண்டை வந்தாலும் 'காதல் கசக்குதையா' என்று மனம் பாடும் பாடலும், என்னை யாரவது பாடு என்று தொல்லை செய்தால் நான் பாடும் முதல் பாடல் 'என்னைப் பாட சொல்லாதே' என்ற பாடலும்,  மனதில் நின்றவை.

படத்தில் நான் ரசித்தவை:

ஆரம்ப காட்சியில் படப் பெட்டி வருவதற்காக காத்திருக்கும் போது, நிகழும் வசனங்கள், அந்த காலக்கட்டத்தில் சினிமாவின் மேல் மக்களுக்கு இருந்த மோகத்தை சொல்லும்.

'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டிடுச்சி'.... என்று வரும் எவர்கிரீன்   காமெடி சீன் யாருமே மறக்க முடியாது.  


'எங்க அம்மாவ மட்டும் நீ கட்டிகுட்ட, உங்க அம்மாவ நான் கட்றதுல என்ன தப்பு?' என்று பாண்டியராஜன் 'கொல்லங்குடி' கருப்பாயியை வைத்து செய்யும் நையாண்டிகள் அட்டகாசம்.

வி.கே.ராமசாமியின் இயல்பான நடிப்பும், ஜனகராஜின் சைட் காமெடி ட்ராக்கும் படத்திற்கு பலம். 


தாவணியில் வலம் வரும் இரு கதாநாயகிகள், ரேவதி மற்றும் சீதாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சீதாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை இந்த படத்திற்கே சேரும்.

இறுதியில் ஒரு சின்ன திருப்பமும், ஒரு ஓட்டமும் கொண்டதோடு நிறுத்தி விடும், இயக்குனரின் துணிச்சலுக்கு கிடைத்து பரிசு ஒரு பெரிய ஹிட்.

இன்று வரை நான் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று கணக்கே இல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போல் சிரிக்கத்தான் செய்வென், நீங்க எப்படி?
  
*****************************************************************************************
ஆண்டு : 1985
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.8/5
*****************************************************************************************

Monday, June 24, 2013

ராஜ பார்வை - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


தமிழில் எந்த படத்தை பற்றி எழுதுவது என்று சிந்தித்து கொண்டிருந்த போது, சென்ற வாரம் புலவர் ராமானுஜம் ஐயா வீட்டில், சேட்டைக்காரன் உடன் நிகழ்ந்த உரையாடல் நினைவிற்கு வர, அப்பொழுது பேசப்பட்ட படங்களில் ஒன்றான ராஜ பார்வை பற்றி இங்கு என் கருத்துக்களை பகிர்கிறேன்.

இந்த தலைமுறையில் பலருக்கு இப்படி ஒரு படம் இருப்பது தெரியாதது சற்று வருத்தம். பிரபல தெலுங்கு இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தமிழில் இயக்க, கமல்ஹாசன் கதை எழுத, கமலும் மாதவியும் நடித்து, 1981ஆம் ஆண்டு  கமலின் நூறாவது படமாக வெளிவந்தது 'ராஜ பார்வை'.

மாதவி.... 

இளமையில் டைப்பாய்டு நோயின் தாக்கத்தால் கண் பார்வை இழந்து, பணக்கார வாழ்கையை துறந்து, சொந்தக் காலில் ஒரு பின்னணி இசை குழுவில் வயலின் வாசிக்கும் ரகுவிற்கும் (கமல்), கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து, கதை எழுதும் ஆர்வம் கொண்ட நான்சிக்கும்(மாதவி) இடையில் மலரும் அழகிய காதலை சொல்லும் படம் இது.
       
படத்தில் நான் ரசித்தவை:

படத்தின் தொடக்கத்தில் எல்லோரும் தம் முன் இருக்கும் இசைக் குறிப்புகளை பார்த்துக்கொண்டு, தம்  இசைக் கருவிகளை வாசித்து கொண்டிருக்க, படத்தில் தொடர்புடையர்வர்களின் பெயர்கள் திரையில் செல்ல, இறுதியில் கமல் முன் இருக்கும் தாங்கி காலியாக இருப்பதை காட்டி, அவருக்கு பார்வை இல்லை என்பதை அழகாக காட்டியிருப்பார்.     



கண் பார்வை இல்லாதவர்கள் தம் அடியை கணக்கில் வைப்பதை மிக இயல்பாக சொல்லி இருப்பர். கண் பார்வை இல்லாத ரகுவாக கமல் நம் நெஞ்சில் வாழ்வார். எந்த ஒரு காட்சியிலும் கண் இமைக்காமல் நடித்து இருக்கும் கமலுக்கு சல்யூட்.

நான்சி மற்றும் ரகு, ரகுவின் வீட்டில் இருக்கும் பொழுது, மின்சாரம் தடை பட ' அய்யோ இருட்டு' என்று நான்சி பதற, 'எங்களுக்கு எப்பொழுதும் இருட்டு தான்' என்று ரகு நகைத்தாலும், அந்த வசனம் என்னை தாக்கியது.       

நானும் நான்சியை (மாதவியை) காதலித்தேன் என்பது மறுக்க முடியாத உண்மை. 



படத்தின் பெரிய பலம் பின்னணி இசைதான், பல வசனம் இல்லா காட்சிகளுக்கு இளையராஜாவின் இசை அழகு சேர்த்துள்ளது.

திரைக்கதை மற்றும் கேமரா மிகவும் சிறப்பாக கையாளப்பட்டு இருக்கும், ஒரு காட்சியின் முடிவிற்கும் அடுத்த காட்சியின் தொடக்கத்திற்கும் ஒரு இணைப்பு இருப்பது பல இடங்களில் ரசிக்க வைத்தது. குறிப்பாக ஒரு காட்சியில் நான்சி 'You fool' என்று முடிக்க, அடுத்த காட்சி பால் குண்டான் விசிலுடன் அந்த 'fool' ஓசையை ஒத்து தொடங்கும். இது போன்று பல இணைப்புகள் ரசிக்கும் படி இருக்கும்.  

நான்சி தன் தந்தை வீட்டை விட்டு வெளியே செல்ல காத்திருக்கும் காட்சி வசனமே இல்லாமல், பின்னணி இசையால் பல எண்ணங்களை சொல்லும்.



வீட்டை கல்யாணத்துக்காக தயார் செய்யும் காட்சி மிகவும் பிரமாதமாக இருக்கும், அதிலும் வசனம் கிடையாது, திரைகள் இசையுடன் விரைவாக நகரும் காட்சி அது.    

காதல் படம் என்றால் முடிவு சுபமாகவோ அல்லது சோகமாகவோ இருப்பது வழக்கம், ஆனால் இந்த படத்தில் ரெண்டுமே இல்லாமல் பகுதி இரண்டு எடுக்கலாம் என்பது போல் அமைந்து இருக்கும். எப்படி என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

'அந்தி மழை பொழிகிறது' என்று SPB பாடிய பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 'அழகே அழகு' என்ற பாடல், கேட்ட நொடி முதல் மனதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. 

இப்படி பத்து இருபது ஆண்டுகள் பின் வர வேண்டிய கதையையும் தொழில்நுட்பத்தையும்  கொடுத்தனாளோ என்னவோ படம் பெரும் அளவில் வெற்றி பெற வில்லை என்றாலும், இது எல்லா காலத்திற்கும் பொருந்தும், அனைவரும் காணவேண்டிய ஒரு காதல் காவியம்.      

*****************************************************************************************
ஆண்டு : 1981
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.5/5
*****************************************************************************************

Friday, June 7, 2013

Duel - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


சீருந்து என்ஜின் ஓசையுடன், வாகனக்கூடத்தில் இருந்து வெளிவர படம் தொடங்குகிறது. படத்தில் தொடர்புடயவர்களின் பெயர்களை திரையில் காட்டியவாறு சிவப்பு சீருந்து தன் பயணத்தை தொடர்ந்து, நகரத்தை கடந்து நெடுஞ்சாலையை அடைய, ரியர் வியுவ் மிர்ரர் வழியாக கேமரா நம் ஹீரோவை முதன் முதலில் கெத்தாக அறிமுகம் செய்கிறது. தனிமையில் வண்டி ஓட்டிச்செல்லும் நம் ஹீரோவுக்கு பேச்சுத் துணையாக இருந்தது அந்த வானொலி தான், அதவாது வில்லனாகிய அவன் காட்சியினுள் வரும் வரை..

நெடுஞ்சாலையில் ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கருப்பு ஆயில் டாங்க் கொண்ட நெடுநீள டிரக் வேகமாக நம் சீருந்து பின் வந்து முந்தி செல்வதற்காக வழி  கேட்க, நம் ஹீரோவும் பெருந்தன்மையுடன் வழிவிட, அந்த நொடி தொடங்கும் இந்த டூயல், நம்ம  பாஷையில சொல்லனும்னா ' ஒண்டிக்கு ஒண்டிசண்டை '. ஆமாங்க அந்த   துரு பிடித்த டிரக் தான் இந்த படத்தின் வில்லன்.


சீருந்து ஓட்டும் ஹீரோ அந்த டிரக்கினால் நெடுஞ்சாலையில் சந்திக்கும் போராட்டங்களை எந்த நொடியிலும் வேகம் குறையாமல் காட்சிகளாக அமைத்து இருப்பார் இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க். எப்படி அந்த டிரக்கிடம் ஹீரோ வசமாக மாட்டி தவிக்கிறார், எப்படி இறுதியில் தப்பிக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   

படத்தில் நான் ரசித்தவை:

ஒரு காருக்கும் டிரக்குக்கும் இடையில் நெடுஞ்சாலையில் நடக்கும் போராட்டத்தை தொண்ணூறு நிமிட படமாக எடுப்பது என்பதே ஒரு சவால். 

படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், ஹீரோ, அவர் சீருந்து மற்றும் நெடுநீள டிரக், இந்த மூன்று மட்டுமே படம் முழுவதும் வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அந்த டிரக் ஓட்டுனர் யார் என்று படம் முடியும் வரையும் நமக்கு தெரியாது. முழுக்க முழுக்க ஒரு டிரக்கை மட்டும் வைத்து மிரட்டியிருப்பார் இயக்குனர். 

படத்தில் வசனங்கள் மிக குறைவு என்றாலும், சீட் நுனிக்கு நம்மை கொண்டு செல்லும் வேகமான திரைக்கதை வசனங்களை மறக்க செய்கிறது.

படத்தின் மிக பெரிய பலம் கேமரா தான், பல கோணங்களில் நெடுஞ்சாலையில் ஓடும் இரு வாகனங்களை படமாக்கி இருப்பர்.   

ஒரு உணவகத்தில் நம் ஹீரோ இருக்கும் போது, அந்த டிரக் உணவகம் வெளியே நிற்பதைக் கண்டு, அதன் ஓட்டுனர் உள்ளே இருப்பவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும், அந்த ஓட்டுனர் யார் என்று அவர் ஆராயும் காட்சிகள் அருமையாக இருக்கும். 

ஹீரோ ஓரு போன் பூத் சென்று காவல் துறைக்கு தகவல் சொல்ல முயற்சிக்கும் போது, அந்த டிரக் வேகமாக வந்து அந்த பூத்தை உடைக்கும் காட்சியின் பொழுது  உங்கள் இதயம் கண்டிப்பாக ரத்தத்தை சற்று வேகமாகவே வெளியேற்றும்.

    
ஸ்டீவென் ஸ்பீல்பெர்கின் தலைசிறந்த இந்த படைப்பை ரோட் மூவீஸ் என்ற பிரிவில் என்றுமே முதல் இடம் தான் என்பது என்னைப் போன்ற பலரின் ஒருமித்த கருத்து. 

*****************************************************************************************
ஆண்டு : 1971
மொழி   : ஆங்கிலம் 
என் மதிப்பீடு : 4.7/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

Thursday, May 30, 2013

Rashamon - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

ஆங்கிலம் மற்றும் தமிழ் படங்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு  பிற மொழி படங்களின் மீது ஈர்ப்பு வர முக்கிய காரணம் இந்த படம். ராஷோமோன் என்பது ஜப்பானிய மொழியில் ஒரு நகரின் வாயிலை குறிக்கும். படம் தொடங்குவதும் முடிவதும் அங்கு தான், மழைக்காக ஒதுங்கும் ஒருவன் அங்கு இருந்த சாமியார் மற்றும் மர வெட்டி இருவரிடம் பேச்சு கொடுக்க கதை ஆரம்பிக்கிறது.

ஒரு கொலையின் முக்கிய சாட்சி தான் இந்த மர வெட்டி, அவன் வழக்கு விசாரணையில் நடந்த ஆச்சரியங்களை சொல்ல, மழைக்கு ஒதுங்கியவன் முழு கதையை கேட்பான். அந்த பிணத்தை முதலில் கண்ட மர வெட்டி காவல் ஆட்களுக்கு தகவல் சொல்லியவுடன், விசாரணைகள் தொடங்கும். 

ஒரு கணவன் மனைவி இருவரும் காட்டு வழியில் செல்ல, அதைக் கண்ட ஒரு கள்ளன் அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு அந்த கணவனை கொன்றான் என்பதே கதை. ஆனால், எப்படி அந்த கொலை நடந்தது, அதை சுற்றிய நிகழ்வுகள் என்ன என்பதை நான்கு பேர் நான்கு கதையாக விசாரணையில் சொல்வர். ஒரு கதைக்கு நான்கு கோணங்கள், இதுவே இந்த படத்தின் சிறப்பு அம்சம்.    

அந்த கள்ளன் ஒரு கதை சொல்லுவான், அந்த இளம் மனைவி ஒரு கதை சொல்லுவாள், இறந்தவன் ஆவியாக வந்து ஒரு கதை சொல்லுவான். எதுதான் உண்மை என்று நாம் குழம்பி இருக்கும் நிலையில், நான்காவதாக ஒரு கதையும் வரும். யார் அந்த கதை சொல்கிறார்கள் என்பதை நான் சொன்னால் உங்களுக்கு சுவாரசியம் கிட்டாது. நான்கில் எது உண்மை கதை என்று படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் நான் ரசித்தவை:

ஒரே காட்சியை திரும்பத் திரும்ப காட்டினாலும்,சலிக்காத விதத்தில் திரைக்கதை அமைத்து இருப்பதே படத்தின் பலம்.


கேமரா ஆட்களின் பின் அவர்களை வேகமாக தொடர்ந்து செல்வது போல் இருப்பதும், பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை  கூட்டும் விதம் இருப்பதும் கதைக்கு வலிமை சேர்க்கின்றன.    
  
அந்த இளம் மனைவியின் நடிப்பு, நான்கு முறையும் மூன்று விதமாக இருப்பது நமக்குள் ஏற்படும் குழப்பத்திற்கு மூல காரணம்.
மனைவி 

அந்த கள்ளனின் கதாபாத்திரம் மிகவும் எதார்த்தமாக சித்தரித்து இருப்பார் இயக்குனர் அகிரா. அவன் உடல் மொழிகள், பேச்சு, நடை எல்லா வற்றிலும் கள்ளனுக்கு ஏற்ற ஒரு திமிர் இயல்பாக அமைந்து இருப்பது அருமை. இந்த கள்ளன் கதாப்பாத்திரத்தில் நடித்தவரை மற்ற அகிரா படங்களிலும் நான் கண்டு ரசித்ததுண்டு. 
   
கள்ளன் 

படத்தில் மொத்தம் ஆறு பேர் தான், முக்கிய கதாபாத்திரங்கள் மூன்று மட்டுமே, மூவரை மட்டும் வைத்து கதையை நகர்த்துவது இயக்குனரின் தனித்திறமை. 

விசாரணை காட்சிகளின் போது கதாபாத்திரங்கள் நம்மை பார்த்து, நம் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது போல் படமாக்கப்பட்டு இருப்பது நம்மை கதையுடன் இணைக்கும்.

உண்மைக்கு என்றுமே பல கோணங்கள் உண்டு என்பதே இந்த படத்தின் மூலம் நான் புரிந்தது. 

நீங்க கேட்களாம் 'ஒரு கதையை பல கோணத்தில் சொல்லும் விதத்தில் ஆயுத எழுத்து, Vantage Point போன்ற  எத்தனையோ படங்கள் வந்து விட்டன, இதில் என்ன சிறப்பு இருக்க போகுது?' என்று.

என் பதில், நகல் எத்தனை வந்தாலும் அசல் என்றுமே ஒசத்தி தான், இந்த பாணியில் கதையை நகர்த்த முதன் முதலில் 1950களிலேயே   விதை போட்டவர் அகிரா.
அகிரா குரோசோவா 
*****************************************************************************************
ஆண்டு : 1950
மொழி   :  ஜப்பானிய மொழி
என் மதிப்பீடு : 4.4/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

Saturday, May 4, 2013

12 Angry Men - உலக சினிமா


****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************



ஆங்கில கருப்பு வெள்ளைப் படங்களின் மேல் எனக்கு ஈர்ப்பு வர முதல் காரணம் '12 ஆங்ரி மென்' என்கிற படம், அதன் பின் தான் எனக்கு எல்லா கிளாசிக் படங்களின் மேல் ஒரு காதல் வந்தது. இந்த படத்தை விமர்சிக்கும் முன்னோ அல்லது காணும் முன்னோ அமெரிக்க நீதித்துறை பற்றி அறிந்துகொள்வது அவசியம் என்பதால், சில முக்கிய நடை முறைகளை முதலில் கண்டு, பின் படத்தை பற்றி காணலாம். (பின் வரும் தவல்களும் எனக்கு உலக சினிமா கற்பித்தவையே.)

ஒரு வழக்கு நீதி மன்றத்தில் நடுக்கும் போது பன்னிரண்டு பேர் கொண்ட 'jury' நீதிபதிக்கு வலதுபுறம் அமர்ந்து எல்லா விசாரணை நிகழ்வுகளையும் கவனித்துக்கொண்டு இருப்பர். இவர்களை தேர்வு செய்வதே ஒரு பெரிய முறை தான், குற்றவாளிக்கு எந்த வித சம்மந்தமும் இல்லாத, சாதாரண மக்களையே தேர்வு செய்வர். வழக்கு விசாரணை நடக்கும் சமயம் அவர்களுக்கு எந்த வித வெளி உலக தொடர்பும் இருக்காது. விசாரணை முடிந்த பிறகு, அவர்களை ஒரு அறையில் அடைத்து பூட்டி விடுவர். குற்றம் சாட்ட பட்டவர் 'குற்றம் செய்தவர்' என்றோ அல்லது 'குற்றம் அற்றவர்' என்றோ அவர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும், அவர்கள் செய்யும் அந்த தேர்வே நீதிபதியின் தீர்ப்பாக அமையும். 

இப்போது உங்களுக்கு இந்த படத்தின் தலைப்பு சற்று விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். முதல் இரண்டு நிமிடங்கள் நீதிபதி அந்த வழக்கில் தந்தையைக் கொன்றதாக மகன் மீது சாற்றிய குற்றங்களை சுருக்கமாக கூறுவார், பின் அந்த பன்னிரண்டு jury உறுப்பினர்களும் ஓர் அறைக்குள் அடைக்க படுவர். படம் நடப்பது முற்றிலும் அந்த அறையில் தான். ஒரு அறைக்குள் பன்னிரண்டு பேருக்கு இடையில் நூற்று இருபது நிமிடங்கள் நடக்கும் வசனங்கள் தான் இந்த படம்.



நான் படத்தில் ரசித்தவற்றை பட்டியலிடுகிறேன் :

ஒரு அறைக்குள் படமாக்கப்பட்ட கதை என்றாலும், எந்த ஒரு நொடியிலும் விருவிருப்பு குறையாதபடி வசனங்கள் அமைந்திருக்கும்.

ஒருத்தரை மட்டும் சில இடங்களில் 'Mr. Foreman' என்று அழைப்பர், படத்தில் மற்ற எந்த கதாபாத்திரத்திற்கும் பெயர் வைக்காமலே கதை முடிந்து விடும்.          

கருப்பு வெள்ளை படம் என்றாலும், வெளியில் மழை பொழியும் போது உள்ளே விளக்குகளை ஆன் செய்வதும், அந்த சுவிட்சில் மின்விசிறியும் இணைந்து ஓடும் போது தான், வியர்வையால் சட்டை நனைந்தவர்களுக்கு மின்விசிறி முதலில் ஓடாத காரணம் விளங்குவதும் ரசிக்க வைத்த சிறு விஷயங்கள்.                       

அறைக்குள் அனைவருக்கும் வியர்வை வரும், ஒருத்தரை தவிர. ஆனால் அந்த ஒருத்தருக்கு வியர்வை வரும் தருணம் உங்கள் வாய் தானாக விசில் அடிக்கும்.



பன்னிரெண்டில் பதினொன்று பேர் மட்டும் உடனே அவன் குற்ற்றவாளி என்று முடிவு செய்துவிடுவர், ஆனால் ஒருவர் மட்டும் அவன் குற்றவாளியாக இல்லாமல், சந்தர்ப்பமும் சாட்சியங்களும் அவனுக்கு எதிராக இருந்தால்?, என்று தனித்து நின்று வாதாட தொடங்குவார்.

ஓர் இடத்தில 'He don't know how  to speak English.' என்று ஒருவர் சொல்லும் போது, மற்றொருவர் 'He doesn't know how to speak English.' என்று சொல்லி மிக அழகாக அவர் பிழையை சுட்டிக்காட்டுவார்.

முதல் வாக்கு பதிவு 11/1 'குற்றவாளி' என்று பதிவாகும், வாதங்கள் தொடரும், பின் 9/2 என மாறும். வாதங்கள் சூடு பிடிக்கும், சமன் நிலையை அடையும் 6/6. அதன் பின் சக்கரம் திசை மாறி சுற்ற 2/9 என்று மாறும், இறுதியில் 1/11 'குற்றவாளி இல்லை' என்றே மாறும். 

என்னடா கதையை சொல்லிவிட்டானே என்று  மனதிற்குள் கேக்கறிங்களா, அந்த வசனங்களில் தான்  சுவாரஸ்யமே இருக்கு. உறுதி செய்யப்பட்ட சாட்சிகள் வாதத் திறமையால எப்படி உடைக்க படுகின்றது என்பதை நீங்க படம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

'கோர்ட் ரூம் சினிமா' என்று ஒரு பிரிவு உண்டு, என் பார்வையில், அந்தப் பிரிவில்  '12 ஆங்ரி மென்' படத்திற்கே முதலிடம். 

*****************************************************************************************
ஆண்டு : 1957
மொழி : ஆங்கிலம் 
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் IMDB
*****************************************************************************************