Monday, March 17, 2014

சா. மு. கா. வே. உலக சினிமா - த்ரிஷ்யம் (2013)

*********************************************************************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


சமீபத்தில் வெளிவந்து என்னை மிகவும் கவர்ந்த சினிமா த்ரிஷ்யம் என்னும் மலையாள மொழி திரைப்படம். படம் பற்றிய விமர்சனங்கள் வந்து குவிய, இந்தப் படத்தை நிச்சயம் திரையரங்கில் தான் காணவேண்டும் என்று ஜனவரியில் முடிவு செய்தேன். சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் வாரா வாரம் புதுப் படங்களின் வருகையால் காட்சிகள் மாறுவது வழக்கம். அப்படி ஓரம் தள்ளப் பட்டது  த்ரிஷ்யம். சென்னையில், ஸ்கைவாக்  PVR திரையரங்கில் 6 45 மணிக்கும், எஸ்கேப் திரையரங்கில் இரவு பத்து மணிக்கும்  மொத்தம் இரண்டு காட்சிகள் மட்டும் தான் திரையிடப்பட்டன. பல மாத போராட்டங்களுக்கு பிறகு மார்ச் முதல் வாரம் PVR திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவு செய்து, டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டேன். மேலும் ஒரு தடங்கலாக 7 மணி ஆனபோதும் படம் தொடங்கவில்லை. காட்சி தடை செய்யப்பட்டால் என்னுள் ஏற்படும் ஏமாற்றத்தை எப்படி தீர்ப்பது என்று நான் ஐயம் கொள்ள,  7 30 மணிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக படம் தொடங்கியது. 

எனக்கு மலையாளம் தெரியாது என்பதையும், திரையில் சப்-டைட்டில் போடவில்லை என்பதையும் முன்னமே தெரிவித்துக்கொள்கிறேன். என் புரிதலில் பிழை இருந்தால் மலையாளம் அறிந்தவர்கள் மன்னித்து திருத்தவும்.        

ஒரு சிறிய கிராமத்தில் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் கடை வைத்திருப்பவர் ஜார்ஜ் குட்டி (மோகன் லால்). இவரது மனைவியாக மீனா நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு படத்தில் பள்ளி செல்லும் வயதில் இரு மகள்கள். ஜார்ஜ் குட்டி கிராமத்து மக்களிடம் கலகலப்பாக பழகும் ஒரு வெள்ளந்தி மனிதர். முழு நேரமும் சினிமா பார்க்கும் பழக்கம் அவருக்கு உண்டு. பல நாட்கள் வீட்டிற்கு கூடச் செல்லாமல் விடிய விடிய தன் கடையிலேய சினிமா பார்க்கும் (என்னைப் போன்ற) ஒரு உலக சினிமா பைத்தியம் என்றே சொல்லலாம். நான்காம் வகுப்பு வரை மட்டும் படித்து, தனது உழைப்பால், தனது நடுத்தர குடும்பத்தை நம்பிக்கையுடன் நடத்திவருபவர்.


இப்படி அன்பும் கலகலப்பும் நிறைந்து இருக்கும் குடும்பத்தில் ஒரு சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. காவல் துறை உயர் அதிகாரியின் ஒரே மகன் ஜார்ஜ் குட்டியின் வீட்டில், அவனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயல, அவள் அவன் தலையில் அடிக்க, அவன் இறந்துவிடுகிறான். தனது சினிமா அறிவை பயன்படுத்தி ஜார்ஜ் குட்டி கொலைக்கான தடையங்களை மறைக்கிறான்.

இறந்தவனின் கைபேசி கடைசியாக இயங்கியது ஜார்ஜ் குட்டியின் கிராமம் என்பதாலும், மேலும் அந்த காணாமல் போன பையன் ஜார்ஜ் குட்டியின் மூத்த மகளுடன் கேம்ப் சென்றான் என்பதாலும், காவல் துறைக்கு ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் மேல் சந்தேகம் எழுகின்றது.

தனது மகனின் நிலையை அறிய போராடும், தாய்ப் பாசமும் அதிகார கர்வமும் கலந்த காவல் துறை DIG, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் மேல் குற்றம் உறுதி செய்ய போராடுவதும், நான்காம் வகுப்பு வரைப் படித்த ஒரு சாமான்யனான ஜார்ஜ் குட்டி, தனது சினிமா பார்த்த அறிவை மட்டுமே பயன்படுத்தி, தனது குடும்பத்தை கொலைப் பழியில் இருந்து காக்கக் போராடுவதுமே மீதிப் படம்.

படத்தில் நான் ரசித்தவை:

ஜார்ஜ் குட்டியாக படம் முழுவதும் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும்   மோகன் லால்.


ஒரு குடும்பத் தலைவியாக ராணி கதாப்பாத்திரத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மீனா.

காவல் துறை அதிகாரியாகவும்  மகனை பறிகொடுத்த  தாயாகவும் நம்மை மிரட்டியுள்ளார் ஆஷா.


படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை என்றாலும், கான்ஸ்டபிள் சஹாதேவன் மீது நமக்கு வெறுப்பை உண்டாக்கி அவரையே வில்லன் போல் பாவிக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

சகாதேவன் 

தேவையின்றி எரியும் மின் விளக்கை அணைக்கும் காட்சி, தேவையற்ற பாடல்கள் படத்தில் இல்லாதது, சண்டைக் காட்சிகள் போன்ற மசாலாக் கலவைகள் இல்லாதது, படத்தின் இயல்பான திரைக்கதைக்கு பலம் சேர்க்கின்றன. 

ஒரு மனிதனின் சினிமா அறிவு அவனை எந்த அளவு சாதிக்கச் செய்யும் என்பதை   ஜார்ஜ் குட்டியின் மூலம் பிரதிபலித்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

படம் முடியும் பொழுது திரையில் தோன்றும் எதிர்பாராத திருப்பம், உங்களை அறியாமலே உங்களை விசில் அடிக்கச் செய்துவிடும்.

மொத்தத்தில் யாரும் தவற விடக்ககூடாத ஒரு அழகான சினிமா.      

*******************************************************************************************************
ஆண்டு : 2013
மொழி : மலையாளம்
என் மதிப்பீடு : 4.8/5
*******************************************************************************************************  

இன்று வலைச்சரத்தில் நான் எழுதிய பதிவு : 'எனது வலையுலகப் பயணம்'  

7 comments:

 1. வித்தியாசம் + சுவாரஸ்யம் என்றால் மலையாளப் படங்கள் தானோ...? மொழி (சிலவற்றை எளிதாக புரிந்து கொள்ளலாம்) தெரியா விட்டாலும் விமர்சனம் ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 2. அழகாக ஆரம்பித்து ரொம்பவே சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.. இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம்.. முடிச்சை அவிழ்க்காமலே.. உண்மையை வரவழைக்க போலிஸ் கெடுபிடி செய்தும், கொலை நடந்த நாளில் தான் வேறோர் இடத்தில் இருந்ததாக ஒரு "காட்சிப்பிழை"யை உருவாக்கும் நான்காம் வகுப்பே படித்த சாமான்யனை பற்றிய கதை.. குழந்தைகளை பற்றி ஓரிரு வரிகள் சொல்லியிருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த ஒரு படமான இது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி!!

  ReplyDelete
 3. லாலேட்டனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்தப் படம் திரையில் பார்க்க வாய்ப்பு அமையாமலே போய்டிச்சு எனக்கு. சரி. குறுவட்டில் கிடைக்கும் போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். நிச்சயம் பார்த்துடுவேன். நல்ல விமர்சனமப்பா...! (படங்கள்லாம் தெளிவாவே இருக்கு... எங்கய்யா புடிச்ச-?)

  ReplyDelete
 4. சுருக்கமான விமர்சனம். இதுபோன்றையல்பான் அ கதையில் மோகன்லாலின் நடிப்பு அருமையாக இருக்கும், மற்றபடி அவரது ஆக்ஷன் படஙள் எனக்குப் பிடிக்காது. இந்தப்படத்தைத் தவற விட்டுவிட்டேன், வாத்தியார் சொன்னதுபோல் குறுவட்டு கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன்...

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம். நானும் பார்க்க நினைத்திருக்கும் படம்.

  நம்ம வாத்யார் மாதிரி நானும் குறுவட்டில் தான் பார்க்கமுடியும் போல!

  ReplyDelete
 6. தியேட்டர் பிரிண்ட்-ல் காண http://www.movshare.net/video/ff6ccb1ac61c3

  ReplyDelete
 7. மிக மிக அருமையான ஒரு படம்! தமிழில் இப்படி ஒரு படம் வராதா என்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்திய படம் என்றும் சொல்லலாம்! பெரும்பான்மையான மலையாளப் படங்கள் யதார்த்தமாக, யதார்த்தத்தின் மிக அருகில, மசாலா கலக்காமல் மிக அருமையாக இருக்கும்! நிறைய சொல்லலாம்!

  இரு மொழியும் தெரியும் என்பதால்!

  தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது!

  துளசிதரன், கீதா

  ReplyDelete