Showing posts with label ஆண்பாவம். Show all posts
Showing posts with label ஆண்பாவம். Show all posts

Monday, July 1, 2013

ஆண்பாவம் - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில், திரைக்கதையை நகைச்சுவைக்காக  கஷ்டப்பட்டு வளர்ப்பதை பார்த்து நொந்து, பிறரை கேளி செய்வதே நகைச்சுவை என்று இருக்கும் இந்த நிலைப்பாட்டை கண்டு வருந்தி, தமிழில் வெளி வந்த உண்மையான முழு நீள நகைச்சுவை படங்களின் பட்டியலை யோசித்தேன், முதலில் மனதில் தோன்றியது இந்தப் படமே.  

பாக்யராஜின் நிழலில் இருந்து பிரிந்த பாண்டியராஜன், கன்னி ராசி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின் தானே இயக்கி நடித்த படம் ஆண்பாவம். இளவட்டம் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவைப்படம். தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றிய ஒரு புது முயற்சி என்றும் சொல்லலாம்.

கிராமத்தில் புதிதாய் திரையரங்கம் நிறுவும் வி.கே. ராமசாமியின் மகன்களான பெரிய பாண்டி, சின்ன பாண்டி இருவரும் திருமண ஆசை கொள்ள, அவர் பெரிய பாண்டியை பெண் பார்க்க அனுப்ப, பெரிய பாண்டி ஊர் மாறி சென்று வேறு பெண்ணை பார்த்து அவள் மேல் காதல் கொள்ள, அதனை தொடர்ந்து நிகழும் சிக்கல்களை நகைச்சுவையாகச் சொல்வதே படம்.

'வந்தனம் வந்தனம்' என்று இளையராஜாவின் இசையில் சினிமாவின் பெருமையை சொல்லும் பாடலும், எப்பொழுது காதலியுடன் சண்டை வந்தாலும் 'காதல் கசக்குதையா' என்று மனம் பாடும் பாடலும், என்னை யாரவது பாடு என்று தொல்லை செய்தால் நான் பாடும் முதல் பாடல் 'என்னைப் பாட சொல்லாதே' என்ற பாடலும்,  மனதில் நின்றவை.

படத்தில் நான் ரசித்தவை:

ஆரம்ப காட்சியில் படப் பெட்டி வருவதற்காக காத்திருக்கும் போது, நிகழும் வசனங்கள், அந்த காலக்கட்டத்தில் சினிமாவின் மேல் மக்களுக்கு இருந்த மோகத்தை சொல்லும்.

'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டிடுச்சி'.... என்று வரும் எவர்கிரீன்   காமெடி சீன் யாருமே மறக்க முடியாது.  


'எங்க அம்மாவ மட்டும் நீ கட்டிகுட்ட, உங்க அம்மாவ நான் கட்றதுல என்ன தப்பு?' என்று பாண்டியராஜன் 'கொல்லங்குடி' கருப்பாயியை வைத்து செய்யும் நையாண்டிகள் அட்டகாசம்.

வி.கே.ராமசாமியின் இயல்பான நடிப்பும், ஜனகராஜின் சைட் காமெடி ட்ராக்கும் படத்திற்கு பலம். 


தாவணியில் வலம் வரும் இரு கதாநாயகிகள், ரேவதி மற்றும் சீதாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சீதாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை இந்த படத்திற்கே சேரும்.

இறுதியில் ஒரு சின்ன திருப்பமும், ஒரு ஓட்டமும் கொண்டதோடு நிறுத்தி விடும், இயக்குனரின் துணிச்சலுக்கு கிடைத்து பரிசு ஒரு பெரிய ஹிட்.

இன்று வரை நான் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று கணக்கே இல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போல் சிரிக்கத்தான் செய்வென், நீங்க எப்படி?
  
*****************************************************************************************
ஆண்டு : 1985
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.8/5
*****************************************************************************************