Tuesday, December 31, 2013

தேன் மிட்டாய் - டிசம்பர் 2013

திருமண வரவேற்பு

சமீப காலமாக திருமண வரவேற்பு களுக்கு செல்லும் பொழுது ஒரு சோதனை/வேதனை தானாக வந்து சேர்ந்துக் கொள்கிறது.  நாட்டில் இருக்கும் எல்லா மதத் திருமணங்களிலும் இதே நிலை தான். மணப்பெண்ணும் மணப் பையனும் வரக் காத்திருக்கும் மக்கள், அவர்கள் மேடை ஏறியவுடன், வேகமாக மேடையை நோக்கிச் சென்று ஒரு பெரிய வரிசையை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்த வரிசையில் காத்திருந்து, மணமக்களுக்கு பரிசுகளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு பின் உணவருந்தச் செல்கின்றனர். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் வருபவர்கள் இந்த வரிசையில் நிற்காமல் நேராக மேடை ஏறும்போது சற்று ஆத்திரம் வரத்தான் செய்கிறது. 

குடிமகன் 

செந்தில் நகர் அருகே இருக்கும் நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, என் ஸ்பிளன்டரில் மெயின் ரோடை நோக்கி வந்து கொண்டிருந்தேன். திடீரென இருவர் சாலையில் தோன்ற, ஒரு கணம் தடுமாறி பின் வண்டியை வலதுபுறம் திருப்பி, வேகத்தடையில் தள்ளாடி நிறுத்தினேன். இருவரில் ஒருத்தான் '...தா என்ன பார்த்து வரமாட்டியா' என்று  சண்டைக்கு வந்தான்.அவன் பேசிய அந்த வார்த்தை என்னை கோபப்படுத்தியது, என் ரத்தம் கொதித்தது. என் ஹெல்மெட் கண்ணாடியை மேலே உயர்த்தி, முறைத்த படி அவனை நோக்கினேன், என் மூக்கில் இருந்த சளியையும் ஓரங்கட்டியது அவன் மேல் வீசிய சாராய வாசனை. 'யோவ். ரோட பார்த்து கிராஸ் பண்ணத் தெரியாதா' என்று நானும் சண்டைக்குத் தயார் என்று என் குரலை உயர்த்தினேன்.  ஐநூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் காவல் நிலையம், அவன் குடி போதை இவை இரண்டும் என் பக்கம் வலுவை சேர்க்க, அவனுடன் வந்த மற்றொருவன் 'யாருக்கும் எதுவும் ஆகல. நீங்க போங்க சார். வாடா " என்று அவனை இழுத்துக்கொண்டுச் சென்றான்.

நவீன சரஸ்வதி சபதம் 

பல நாட்களுக்கு பிறகு என் நண்பனை சந்திக்கச் சென்ற பொழுது, அவன் படம் பார்க்க போகலாம் என்று கட்டாயப்படுத்தினான். அதுவும் நவீன சரஸ்வதி சபதம் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். வலையில் ஏற்கனவே அந்தப் படத்தின் விமர்சனத்தை படித்திருந்தபடியால் கெஞ்சினேன் கதறினேன், வேண்டாம் என்று. இருந்தும் அவன் கேட்பதாய் இல்லை. பெரம்பூரில் ஸ்பெக்ட்ரம் மாலில் இருக்கும் சத்யமின் S2 திரையரங்கில் நவீன சரஸ்வதி சபதம் காணச் சென்றாம். படம் துவங்கி பத்து நிமிடத்திற்கு மேலாகவே, டிக்கெட் கவுன்டரில் இருக்கும் பெண் டிக்கெட் கொடுக்க தயங்கினாலும், என் நண்பன் விடவில்லை. உள்ளே சென்றால் மொத்த இருக்கைகளும் காலியாக இருந்தன. சென்னையில் இப்படி காலியாக ஒரு திரையரங்கில் படம் பார்த்ததே இல்லை. சுமாரான படமானாலும், தனியாக பெரிய திரையில் படம் பார்த்த அனுபவம் சுகம் தான். 

தமிழ் ஆட்சி மொழி 

வெறும் 54லட்சம் மக்கள் தொகையைக்கொண்ட சிறு தீவான சிங்கையில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதைக்கண்டு பெருமை கொள்வதா, இல்லைத் தாய் தமிழ் நாட்டில் தமிழுக்கு உரிய மரியாதை இல்லாததைக்கண்டு வருந்த்வதா என்று எனக்கு தெரியவில்லை.   

கைபேசி 

என் கிராமத்தில் இருந்து ECR வழியாக அரசுப் பேருந்தில் சென்னை வந்த பொழுது ஓட்டுனருக்கு பின் இருக்கையே எனக்கு கிடைத்தது. கோவலம் தாண்டி மாமல்லபுரம் நோக்கி வண்டி சென்றுகொண்டிருந்த பொழுது, ஓட்டுனர் ஏதோ பேசத் தொடங்க நான் அவரை நோக்க, அவர் ஒரு கையில் கைபேசி இருந்தது என்னுள் திகிலை கிளப்பியது. பேருந்தில் இருக்கும் அறுவது அப்பாவி மக்களின் உயிரை பணய வைத்து பேசும் அந்த உரையாடல் அவசியம்தானா?      
           
சீட் பெல்ட் 

சோழிங்கநல்லூரில் இறங்கி, C51 வரக் காத்திருந்தேன். ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவு சாலையைத் தடுத்து விட்டு, அனைத்து சீருந்துகளையும் போக்குவரத்துக் காவல்துறை 'சீட் பெல்டுக்காக' சோதனை செய்துகொண்டிருந்தது. பல வாகனங்கள் ஓரங்கட்ட்டப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. நானும் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது ஒரு விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தேன். எந்தெந்த சீருந்துகளை காவல் துறை நிறுத்தப் போகிறது என்று என்னை வாகனங்கள் கடக்கும் பொழுதே கணிதுக்கொண்டிருந்தேன். என் கணிப்பும் சரியாகவே இருந்தது. எதிரில் ஒரு வெள்ளை நிற இன்னோவா, ஏதோ ஒரு கட்சிக் கொடி பறக்க வந்தது. ஓட்டுனர் சீட் பெல்ட் போடவில்லை. அந்த வண்டியை போக்குவரத்துக் காவல் துறை நிறுத்துமா ?          

அன்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Thursday, December 26, 2013

சாப்பாட்டு ராமன் - முட்டை காளான் பிரை

பல நாட்கள் அலுவல் மிகுதியால் பட்டினியாக இருந்த ராமனுக்கு அவன் நண்பன் மூலம் இந்த மாதம் ஒரு கையேந்தி பவன் அறிமுகமானது. 

பாடியில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் சாலையில், செந்தில் நகர் பேருந்து நிறுத்ததிற்கு அருகில் இருக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை ஒட்டியது போல் செல்லும் விவேகானந்தா நகர் மெயின் ரோட்டில் இருப்பது தான் யெகோவா பாஸ்ட்புட். நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், மற்றும் சில சிக்கென் சைடுகள் கிடைப்பது விலைப்பட்டியலுடன், வண்டியில் ஜொலித்தது.     



 ராமன் அவன் நண்பனுடன் ஆர்டர் செய்தது, சிக்கன்  ப்ரைட் ரைஸ், பெப்பர் சிக்கென், சிக்கென் லாலிபாப் மற்றும் முட்டை காளான். ஆர்டர் தயாராகும் நேரத்தில் கடையை சற்று நோட்டமிட நேரம் கிடைத்தது. உள் பக்கம் மிகவும் சுத்தமாக இருந்தது. பொதுவாக மக்கள் தள்ளு வண்டிக் கடைகளை  விரும்பாதது சுத்தம் இல்லை என்று தான். ஆனால் இந்தக் கடை ஒரு விதி விளக்கு தான். பார்சல் வாங்குபவர்களுக்கு கூட அலுமுனியம் பாயில் கொண்டு, தரமான உணவகங்களில் தருவது போலவே உணவு கொடுக்கப் பட்டது கூடுதல் சிறப்பு. 



முதலில்   ப்ரைட் ரைஸுடன், ஆறு துண்டுகளுடன் சிக்கென் லாலிபாப் வந்தது.  இரண்டும் திடமான சூட்டுடன் சுவைக்க நன்றாக இருந்தது. அடுத்து வந்த முட்டை காளான் பிரை, எழுதும் பொழுதும் சுவை நினைவில் தோன்றி நாவை ஊறச் செய்கின்றது. 

சிக்கென் லாலிபாப் + முட்டை காளான் ப்ரை

முன்பே வேக வைத்த சிறிய காளான் துண்டுகளை, வெங்காயம், உப்பு, காரம், சில மசாலாக்கள், சேர்த்து ஒரு கடாயில் முட்டை உடைத்து ஊற்றி செய்த அந்த உணவு வகை, ஒரு மாறுபட்ட முட்டை பொடிமாஸ் போலவே இருந்தது. முட்டை, காளான், வெங்காயம் இவற்றின் கலவை நாவிற்கு புத்துணர்ச்சி தந்தது.இதை பார்சல் வாங்கிக்கொண்டு சப்பாத்தி,தோசை போன்ற டிபன்களுக்கு சைடாகவும் சுவைக்கலாம்.        
        
பெப்பர் சிக்கென் 

இறுதியாக வந்த பெப்பர் சிக்கென் மீது தான் இம்முறை ராமன் கொண்ட தீராக் காதல். காளான் போலவே சிறிதாக வெட்டப்பட்ட சிக்கென் துண்டுகள், மசாலாக் கலவையுடன், பெப்பர் சேர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மெதுவாக இருந்த எலும்பு இல்லாத அந்த சிக்கென், மேலே இருந்த மிளகுத் தூள் கலவை மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட கருவேப்பிலை, இவை மூன்றும் சேர்ந்து சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவையை அளித்தன. 



விலை விவரங்கள் படத்திலேயே இருக்கும். அந்தப் பக்கம் சென்றால்,   யெகோவா பாஸ்ட்புடில் சுவைத்துவிட்டு ராமனிடம் சொல்லுங்கள்.

ராமன்ஸ் காம்போ

நீங்கள் பெருமாள் கோயில் புளியோதரை உண்டதுண்டா! அதன் சுவையே தனி. என்னதான் நாஸ்திகம் பேசினாலும் நம் ராமன் பிரசாதங்களை விடுவதில்லை! பயணங்களின் சிறந்த உணவான புளியோதரையுடன் அவித்த முட்டை சேர்த்து உண்டு பாருங்கள். அவித்த முட்டையும் புளியோதரையும் ஒரு விசேஷமான கூட்டணி.