Showing posts with label world cinema. Show all posts
Showing posts with label world cinema. Show all posts

Thursday, September 19, 2013

Casablanca - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************



கிளாசிக் சினிமா மேல் வந்த ஈர்ப்பு, என் தேடலை விரிவு செய்தபோது IMDB மூலம் எனக்கு அறிமுகமான படம் இது. கதை நடக்கும் காலம் இரண்டாம் உலக யுத்த சமயம், ஜேர்மன் ஆதிக்கம் உலகெங்கும் பரவி இருந்த நிலையில், ஜெர்மன் கட்டுப்பாட்டில் இல்லாத ஆப்ரிக்க நகரம் தான் Casablanca. அமேரிக்கா செல்லும் கனவுகளுடன் ஐரோப்பா நாடுகளில் இருந்து வருபவர்களின் இறுதி புகலிடம். இங்கிருந்து வீசா கிடைத்தால் மட்டுமே சுகந்திர அமேரிக்கா செல்ல முடியும். 



இந்த நகரத்தில் ஒரு கிளப் நடத்தி வருபவர் தான் ரிக் என்கிற ரிச்சர்ட், கதையின் நாயகன். அந்த நகரை விட்டு வெளியேற, ஜெர்மன் அதிகாரிகளை கொன்று திருடப்பட்ட இரண்டு வீசாக்கள், யாரும் அறியாமல் ரிக்கின் வசம் வருகின்றது. இந்த வீசாவைத் தேடி ஒரு மறைமுக போராட்டக்கும்பலின் தலைவர் விக்டர்(Victor) தன் மனைவி இல்சா(Ilsa)வுடன் Casablanca வருகிறார். அவரை பிடிக்க ஜெர்மன் அதிகாரிகள் அவரைத் தொடர்ந்து வருகின்றனர். 

Casablanca சுகந்திர நகரம் என்பதால், அவர்களால் அவரை நேரடியாக ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், அந்த நகர காவல்துறை உதவியுடன், அவருக்கு வீசா கிடைக்காதவாரு ஏற்ப்பாடு செய்கின்றனர். லூயிஸ்(Louis)என்ற Casablanca காவல் துறை உயர் அதிகாரியுடன் ரிக் சாவல் விடுகிறார், விக்டர்(Victor) மற்றும் அவர் மனைவி இல்சா(Ilsa) நிச்சயம் அமேரிக்கா செல்வர் என்று.

விக்டர் - இல்சா - ரிக்  

ரிக், எந்த விலை கொடுத்தாலும் அந்த வீசாக்களை விற்க முடியாது என்று விக்டரிடம் மறுத்து,காரணத்தை அவர் மனைவியிடமே கேட்க சொல்லிவிடுகிறார். இல்சா தான் நாயகன் ரிக்கின் முன்னாள் காதலி என்ற உண்மை திரையில் விரிகிறது. ரிக் மற்றும் இல்சா இடையில் பழையக் காதல் மீண்டும் மலர, ஜெர்மன் கடுபடி அதிகரிக்க, ரிக் லூயிசுடன் அவரும் இல்சாவும் அமேரிக்கா செல்ல ரகசிய ஒப்பந்தம் போட, இறுதியில் ரிக் தான் போட்ட சவாலில் வெல்வார இல்லையா என்று படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

படத்தில் நான் ரசித்தவை

படத்தின் பெரிய பலமே திரைக்கதை தான், ஒவ்வொன்றாக உண்மைகள் வெளி வர, நம்மை படத்துடன் ஒன்றச் செய்துவிடுகிறது. 

நாயகனாக வரும் Humphrey Bogartஇன் இயல்பான நடிப்பின் மூலம்  படம் முழுவதும் ரிக் என்ற கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவம் கொடுத்து அசத்தியுள்ளார்.
ரிக் 

அடுத்த முக்கிய கதாபாத்திரம் காவல் துறை உயர் அதிகாரி லூயிஸாக வரும் Claude Rains என்பவர். இறுதிக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தார்.

லூயிஸ் 

இரண்டாம் உலக யுத்தத்தை மைய்யமாக வைத்த கதை என்றாலும், எந்த விதமான துப்பாக்கிச் சுடுதலோ, சண்டைக் காட்சிகளோ இல்லாமல் படத்தை இயக்கிய இயக்குனர் Michael Curtizஐ பாராட்டாமல் இருக்க முடியாது. 

வசதி இல்லாத ஒரு இளம் மனைவி தன் கணவனுடன் அமேரிக்கா செல்ல வீசா கேட்க லூயிஸிடம் செல்ல, பணம் இல்லையேல் உடல் உறவு என்று லூயிஸ் நிபந்தனை வைக்க, அதை அறிந்த ரிக் அந்த மனைவியின் கணவனை தன் கிளப்பில் நடக்கும் சூதாட்டம் மூலம் போதிய பணம் ஜெயிக்க வைக்கும் காட்சி, நம்மை நெகிழச் செய்யும்.

இந்த விஷயத்தை அறிந்தவுடன் அந்த கிளப்பில் பணிபுரியும் ஒரு ரஸ்சிய சர்வர், மகிழ்ச்சியில் ரிக்கை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பான். இந்த காட்சியை இன்று பார்த்த பொழுது, தன் மனம் கவர்ந்த பதிவுகளை எழுதிய பதிவர்களை 'கட்டி அணைத்து' பாராட்ட வேண்டும் என்று கருத்துரையிடும் ஜீவன் சுப்பு தான் நினைவிற்கு வந்தார். 

படத்தில் நான் ரசித்த வசனங்கள்:

வசனம் 1:
தன் முன்னாள் காதலியைக் கண்ட ரிக், அவன் கிளப் பியானோ பிளேயர் சாமிடம்(Sam) சொல்லும் வசனம்

"Of all the gin joints in all the towns in all the world, she walks into mine."

(இதை பல modulationஇல் பல சினிமாக்களில் கேட்டது போல் இல்லை? )


வசனம் 2:

இறுதிக் காட்சியில் என்னை விசில் அடிக்க தூண்டிய வசனம்

"Louis, I think this is the beginning of a beautiful friendship." 


படம் பார்க்கையில், இந்த வசனம் பேசும் காட்சி வரும் போது உங்களுக்கும் நிச்சயம் விசில் அடிக்கத் தூண்டும். 


'ரொமாண்டிக் டிராமா' என்ற பிரிவில், என்றுமே நான் முதலில் பரிந்துரை செய்யும் படம் Casablanca.

*******************************************************************************************************
ஆண்டு : 1942
மொழி : ஆங்கிலம்
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

Monday, July 1, 2013

ஆண்பாவம் - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில், திரைக்கதையை நகைச்சுவைக்காக  கஷ்டப்பட்டு வளர்ப்பதை பார்த்து நொந்து, பிறரை கேளி செய்வதே நகைச்சுவை என்று இருக்கும் இந்த நிலைப்பாட்டை கண்டு வருந்தி, தமிழில் வெளி வந்த உண்மையான முழு நீள நகைச்சுவை படங்களின் பட்டியலை யோசித்தேன், முதலில் மனதில் தோன்றியது இந்தப் படமே.  

பாக்யராஜின் நிழலில் இருந்து பிரிந்த பாண்டியராஜன், கன்னி ராசி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின் தானே இயக்கி நடித்த படம் ஆண்பாவம். இளவட்டம் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவைப்படம். தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றிய ஒரு புது முயற்சி என்றும் சொல்லலாம்.

கிராமத்தில் புதிதாய் திரையரங்கம் நிறுவும் வி.கே. ராமசாமியின் மகன்களான பெரிய பாண்டி, சின்ன பாண்டி இருவரும் திருமண ஆசை கொள்ள, அவர் பெரிய பாண்டியை பெண் பார்க்க அனுப்ப, பெரிய பாண்டி ஊர் மாறி சென்று வேறு பெண்ணை பார்த்து அவள் மேல் காதல் கொள்ள, அதனை தொடர்ந்து நிகழும் சிக்கல்களை நகைச்சுவையாகச் சொல்வதே படம்.

'வந்தனம் வந்தனம்' என்று இளையராஜாவின் இசையில் சினிமாவின் பெருமையை சொல்லும் பாடலும், எப்பொழுது காதலியுடன் சண்டை வந்தாலும் 'காதல் கசக்குதையா' என்று மனம் பாடும் பாடலும், என்னை யாரவது பாடு என்று தொல்லை செய்தால் நான் பாடும் முதல் பாடல் 'என்னைப் பாட சொல்லாதே' என்ற பாடலும்,  மனதில் நின்றவை.

படத்தில் நான் ரசித்தவை:

ஆரம்ப காட்சியில் படப் பெட்டி வருவதற்காக காத்திருக்கும் போது, நிகழும் வசனங்கள், அந்த காலக்கட்டத்தில் சினிமாவின் மேல் மக்களுக்கு இருந்த மோகத்தை சொல்லும்.

'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டிடுச்சி'.... என்று வரும் எவர்கிரீன்   காமெடி சீன் யாருமே மறக்க முடியாது.  


'எங்க அம்மாவ மட்டும் நீ கட்டிகுட்ட, உங்க அம்மாவ நான் கட்றதுல என்ன தப்பு?' என்று பாண்டியராஜன் 'கொல்லங்குடி' கருப்பாயியை வைத்து செய்யும் நையாண்டிகள் அட்டகாசம்.

வி.கே.ராமசாமியின் இயல்பான நடிப்பும், ஜனகராஜின் சைட் காமெடி ட்ராக்கும் படத்திற்கு பலம். 


தாவணியில் வலம் வரும் இரு கதாநாயகிகள், ரேவதி மற்றும் சீதாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சீதாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை இந்த படத்திற்கே சேரும்.

இறுதியில் ஒரு சின்ன திருப்பமும், ஒரு ஓட்டமும் கொண்டதோடு நிறுத்தி விடும், இயக்குனரின் துணிச்சலுக்கு கிடைத்து பரிசு ஒரு பெரிய ஹிட்.

இன்று வரை நான் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று கணக்கே இல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போல் சிரிக்கத்தான் செய்வென், நீங்க எப்படி?
  
*****************************************************************************************
ஆண்டு : 1985
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.8/5
*****************************************************************************************

Friday, June 7, 2013

Duel - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


சீருந்து என்ஜின் ஓசையுடன், வாகனக்கூடத்தில் இருந்து வெளிவர படம் தொடங்குகிறது. படத்தில் தொடர்புடயவர்களின் பெயர்களை திரையில் காட்டியவாறு சிவப்பு சீருந்து தன் பயணத்தை தொடர்ந்து, நகரத்தை கடந்து நெடுஞ்சாலையை அடைய, ரியர் வியுவ் மிர்ரர் வழியாக கேமரா நம் ஹீரோவை முதன் முதலில் கெத்தாக அறிமுகம் செய்கிறது. தனிமையில் வண்டி ஓட்டிச்செல்லும் நம் ஹீரோவுக்கு பேச்சுத் துணையாக இருந்தது அந்த வானொலி தான், அதவாது வில்லனாகிய அவன் காட்சியினுள் வரும் வரை..

நெடுஞ்சாலையில் ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கருப்பு ஆயில் டாங்க் கொண்ட நெடுநீள டிரக் வேகமாக நம் சீருந்து பின் வந்து முந்தி செல்வதற்காக வழி  கேட்க, நம் ஹீரோவும் பெருந்தன்மையுடன் வழிவிட, அந்த நொடி தொடங்கும் இந்த டூயல், நம்ம  பாஷையில சொல்லனும்னா ' ஒண்டிக்கு ஒண்டிசண்டை '. ஆமாங்க அந்த   துரு பிடித்த டிரக் தான் இந்த படத்தின் வில்லன்.


சீருந்து ஓட்டும் ஹீரோ அந்த டிரக்கினால் நெடுஞ்சாலையில் சந்திக்கும் போராட்டங்களை எந்த நொடியிலும் வேகம் குறையாமல் காட்சிகளாக அமைத்து இருப்பார் இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க். எப்படி அந்த டிரக்கிடம் ஹீரோ வசமாக மாட்டி தவிக்கிறார், எப்படி இறுதியில் தப்பிக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   

படத்தில் நான் ரசித்தவை:

ஒரு காருக்கும் டிரக்குக்கும் இடையில் நெடுஞ்சாலையில் நடக்கும் போராட்டத்தை தொண்ணூறு நிமிட படமாக எடுப்பது என்பதே ஒரு சவால். 

படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், ஹீரோ, அவர் சீருந்து மற்றும் நெடுநீள டிரக், இந்த மூன்று மட்டுமே படம் முழுவதும் வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அந்த டிரக் ஓட்டுனர் யார் என்று படம் முடியும் வரையும் நமக்கு தெரியாது. முழுக்க முழுக்க ஒரு டிரக்கை மட்டும் வைத்து மிரட்டியிருப்பார் இயக்குனர். 

படத்தில் வசனங்கள் மிக குறைவு என்றாலும், சீட் நுனிக்கு நம்மை கொண்டு செல்லும் வேகமான திரைக்கதை வசனங்களை மறக்க செய்கிறது.

படத்தின் மிக பெரிய பலம் கேமரா தான், பல கோணங்களில் நெடுஞ்சாலையில் ஓடும் இரு வாகனங்களை படமாக்கி இருப்பர்.   

ஒரு உணவகத்தில் நம் ஹீரோ இருக்கும் போது, அந்த டிரக் உணவகம் வெளியே நிற்பதைக் கண்டு, அதன் ஓட்டுனர் உள்ளே இருப்பவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும், அந்த ஓட்டுனர் யார் என்று அவர் ஆராயும் காட்சிகள் அருமையாக இருக்கும். 

ஹீரோ ஓரு போன் பூத் சென்று காவல் துறைக்கு தகவல் சொல்ல முயற்சிக்கும் போது, அந்த டிரக் வேகமாக வந்து அந்த பூத்தை உடைக்கும் காட்சியின் பொழுது  உங்கள் இதயம் கண்டிப்பாக ரத்தத்தை சற்று வேகமாகவே வெளியேற்றும்.

    
ஸ்டீவென் ஸ்பீல்பெர்கின் தலைசிறந்த இந்த படைப்பை ரோட் மூவீஸ் என்ற பிரிவில் என்றுமே முதல் இடம் தான் என்பது என்னைப் போன்ற பலரின் ஒருமித்த கருத்து. 

*****************************************************************************************
ஆண்டு : 1971
மொழி   : ஆங்கிலம் 
என் மதிப்பீடு : 4.7/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

Thursday, May 30, 2013

Rashamon - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

ஆங்கிலம் மற்றும் தமிழ் படங்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு  பிற மொழி படங்களின் மீது ஈர்ப்பு வர முக்கிய காரணம் இந்த படம். ராஷோமோன் என்பது ஜப்பானிய மொழியில் ஒரு நகரின் வாயிலை குறிக்கும். படம் தொடங்குவதும் முடிவதும் அங்கு தான், மழைக்காக ஒதுங்கும் ஒருவன் அங்கு இருந்த சாமியார் மற்றும் மர வெட்டி இருவரிடம் பேச்சு கொடுக்க கதை ஆரம்பிக்கிறது.

ஒரு கொலையின் முக்கிய சாட்சி தான் இந்த மர வெட்டி, அவன் வழக்கு விசாரணையில் நடந்த ஆச்சரியங்களை சொல்ல, மழைக்கு ஒதுங்கியவன் முழு கதையை கேட்பான். அந்த பிணத்தை முதலில் கண்ட மர வெட்டி காவல் ஆட்களுக்கு தகவல் சொல்லியவுடன், விசாரணைகள் தொடங்கும். 

ஒரு கணவன் மனைவி இருவரும் காட்டு வழியில் செல்ல, அதைக் கண்ட ஒரு கள்ளன் அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு அந்த கணவனை கொன்றான் என்பதே கதை. ஆனால், எப்படி அந்த கொலை நடந்தது, அதை சுற்றிய நிகழ்வுகள் என்ன என்பதை நான்கு பேர் நான்கு கதையாக விசாரணையில் சொல்வர். ஒரு கதைக்கு நான்கு கோணங்கள், இதுவே இந்த படத்தின் சிறப்பு அம்சம்.    

அந்த கள்ளன் ஒரு கதை சொல்லுவான், அந்த இளம் மனைவி ஒரு கதை சொல்லுவாள், இறந்தவன் ஆவியாக வந்து ஒரு கதை சொல்லுவான். எதுதான் உண்மை என்று நாம் குழம்பி இருக்கும் நிலையில், நான்காவதாக ஒரு கதையும் வரும். யார் அந்த கதை சொல்கிறார்கள் என்பதை நான் சொன்னால் உங்களுக்கு சுவாரசியம் கிட்டாது. நான்கில் எது உண்மை கதை என்று படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் நான் ரசித்தவை:

ஒரே காட்சியை திரும்பத் திரும்ப காட்டினாலும்,சலிக்காத விதத்தில் திரைக்கதை அமைத்து இருப்பதே படத்தின் பலம்.


கேமரா ஆட்களின் பின் அவர்களை வேகமாக தொடர்ந்து செல்வது போல் இருப்பதும், பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை  கூட்டும் விதம் இருப்பதும் கதைக்கு வலிமை சேர்க்கின்றன.    
  
அந்த இளம் மனைவியின் நடிப்பு, நான்கு முறையும் மூன்று விதமாக இருப்பது நமக்குள் ஏற்படும் குழப்பத்திற்கு மூல காரணம்.
மனைவி 

அந்த கள்ளனின் கதாபாத்திரம் மிகவும் எதார்த்தமாக சித்தரித்து இருப்பார் இயக்குனர் அகிரா. அவன் உடல் மொழிகள், பேச்சு, நடை எல்லா வற்றிலும் கள்ளனுக்கு ஏற்ற ஒரு திமிர் இயல்பாக அமைந்து இருப்பது அருமை. இந்த கள்ளன் கதாப்பாத்திரத்தில் நடித்தவரை மற்ற அகிரா படங்களிலும் நான் கண்டு ரசித்ததுண்டு. 
   
கள்ளன் 

படத்தில் மொத்தம் ஆறு பேர் தான், முக்கிய கதாபாத்திரங்கள் மூன்று மட்டுமே, மூவரை மட்டும் வைத்து கதையை நகர்த்துவது இயக்குனரின் தனித்திறமை. 

விசாரணை காட்சிகளின் போது கதாபாத்திரங்கள் நம்மை பார்த்து, நம் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது போல் படமாக்கப்பட்டு இருப்பது நம்மை கதையுடன் இணைக்கும்.

உண்மைக்கு என்றுமே பல கோணங்கள் உண்டு என்பதே இந்த படத்தின் மூலம் நான் புரிந்தது. 

நீங்க கேட்களாம் 'ஒரு கதையை பல கோணத்தில் சொல்லும் விதத்தில் ஆயுத எழுத்து, Vantage Point போன்ற  எத்தனையோ படங்கள் வந்து விட்டன, இதில் என்ன சிறப்பு இருக்க போகுது?' என்று.

என் பதில், நகல் எத்தனை வந்தாலும் அசல் என்றுமே ஒசத்தி தான், இந்த பாணியில் கதையை நகர்த்த முதன் முதலில் 1950களிலேயே   விதை போட்டவர் அகிரா.
அகிரா குரோசோவா 
*****************************************************************************************
ஆண்டு : 1950
மொழி   :  ஜப்பானிய மொழி
என் மதிப்பீடு : 4.4/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

Saturday, May 4, 2013

12 Angry Men - உலக சினிமா


****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************



ஆங்கில கருப்பு வெள்ளைப் படங்களின் மேல் எனக்கு ஈர்ப்பு வர முதல் காரணம் '12 ஆங்ரி மென்' என்கிற படம், அதன் பின் தான் எனக்கு எல்லா கிளாசிக் படங்களின் மேல் ஒரு காதல் வந்தது. இந்த படத்தை விமர்சிக்கும் முன்னோ அல்லது காணும் முன்னோ அமெரிக்க நீதித்துறை பற்றி அறிந்துகொள்வது அவசியம் என்பதால், சில முக்கிய நடை முறைகளை முதலில் கண்டு, பின் படத்தை பற்றி காணலாம். (பின் வரும் தவல்களும் எனக்கு உலக சினிமா கற்பித்தவையே.)

ஒரு வழக்கு நீதி மன்றத்தில் நடுக்கும் போது பன்னிரண்டு பேர் கொண்ட 'jury' நீதிபதிக்கு வலதுபுறம் அமர்ந்து எல்லா விசாரணை நிகழ்வுகளையும் கவனித்துக்கொண்டு இருப்பர். இவர்களை தேர்வு செய்வதே ஒரு பெரிய முறை தான், குற்றவாளிக்கு எந்த வித சம்மந்தமும் இல்லாத, சாதாரண மக்களையே தேர்வு செய்வர். வழக்கு விசாரணை நடக்கும் சமயம் அவர்களுக்கு எந்த வித வெளி உலக தொடர்பும் இருக்காது. விசாரணை முடிந்த பிறகு, அவர்களை ஒரு அறையில் அடைத்து பூட்டி விடுவர். குற்றம் சாட்ட பட்டவர் 'குற்றம் செய்தவர்' என்றோ அல்லது 'குற்றம் அற்றவர்' என்றோ அவர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும், அவர்கள் செய்யும் அந்த தேர்வே நீதிபதியின் தீர்ப்பாக அமையும். 

இப்போது உங்களுக்கு இந்த படத்தின் தலைப்பு சற்று விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். முதல் இரண்டு நிமிடங்கள் நீதிபதி அந்த வழக்கில் தந்தையைக் கொன்றதாக மகன் மீது சாற்றிய குற்றங்களை சுருக்கமாக கூறுவார், பின் அந்த பன்னிரண்டு jury உறுப்பினர்களும் ஓர் அறைக்குள் அடைக்க படுவர். படம் நடப்பது முற்றிலும் அந்த அறையில் தான். ஒரு அறைக்குள் பன்னிரண்டு பேருக்கு இடையில் நூற்று இருபது நிமிடங்கள் நடக்கும் வசனங்கள் தான் இந்த படம்.



நான் படத்தில் ரசித்தவற்றை பட்டியலிடுகிறேன் :

ஒரு அறைக்குள் படமாக்கப்பட்ட கதை என்றாலும், எந்த ஒரு நொடியிலும் விருவிருப்பு குறையாதபடி வசனங்கள் அமைந்திருக்கும்.

ஒருத்தரை மட்டும் சில இடங்களில் 'Mr. Foreman' என்று அழைப்பர், படத்தில் மற்ற எந்த கதாபாத்திரத்திற்கும் பெயர் வைக்காமலே கதை முடிந்து விடும்.          

கருப்பு வெள்ளை படம் என்றாலும், வெளியில் மழை பொழியும் போது உள்ளே விளக்குகளை ஆன் செய்வதும், அந்த சுவிட்சில் மின்விசிறியும் இணைந்து ஓடும் போது தான், வியர்வையால் சட்டை நனைந்தவர்களுக்கு மின்விசிறி முதலில் ஓடாத காரணம் விளங்குவதும் ரசிக்க வைத்த சிறு விஷயங்கள்.                       

அறைக்குள் அனைவருக்கும் வியர்வை வரும், ஒருத்தரை தவிர. ஆனால் அந்த ஒருத்தருக்கு வியர்வை வரும் தருணம் உங்கள் வாய் தானாக விசில் அடிக்கும்.



பன்னிரெண்டில் பதினொன்று பேர் மட்டும் உடனே அவன் குற்ற்றவாளி என்று முடிவு செய்துவிடுவர், ஆனால் ஒருவர் மட்டும் அவன் குற்றவாளியாக இல்லாமல், சந்தர்ப்பமும் சாட்சியங்களும் அவனுக்கு எதிராக இருந்தால்?, என்று தனித்து நின்று வாதாட தொடங்குவார்.

ஓர் இடத்தில 'He don't know how  to speak English.' என்று ஒருவர் சொல்லும் போது, மற்றொருவர் 'He doesn't know how to speak English.' என்று சொல்லி மிக அழகாக அவர் பிழையை சுட்டிக்காட்டுவார்.

முதல் வாக்கு பதிவு 11/1 'குற்றவாளி' என்று பதிவாகும், வாதங்கள் தொடரும், பின் 9/2 என மாறும். வாதங்கள் சூடு பிடிக்கும், சமன் நிலையை அடையும் 6/6. அதன் பின் சக்கரம் திசை மாறி சுற்ற 2/9 என்று மாறும், இறுதியில் 1/11 'குற்றவாளி இல்லை' என்றே மாறும். 

என்னடா கதையை சொல்லிவிட்டானே என்று  மனதிற்குள் கேக்கறிங்களா, அந்த வசனங்களில் தான்  சுவாரஸ்யமே இருக்கு. உறுதி செய்யப்பட்ட சாட்சிகள் வாதத் திறமையால எப்படி உடைக்க படுகின்றது என்பதை நீங்க படம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

'கோர்ட் ரூம் சினிமா' என்று ஒரு பிரிவு உண்டு, என் பார்வையில், அந்தப் பிரிவில்  '12 ஆங்ரி மென்' படத்திற்கே முதலிடம். 

*****************************************************************************************
ஆண்டு : 1957
மொழி : ஆங்கிலம் 
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் IMDB
*****************************************************************************************

Monday, April 15, 2013

ஸ்டாலாக் 17 (Stalag 17) - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய லக சினிமா' என்ற பகுதியில் எழுத உள்ளேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

Donald Bevan மற்றும் Edmund Trzcinski உருவாக்கிய நாடகமாகிய 'ஸ்டாலாக் 17'ஐ திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் Billy Wilder இறங்கினார். ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார். 


நான் போர் பற்றிய  பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள், பீரங்கிகள், விமானங்கள், கப்பல்கள், துப்பாக்கிகள்  கொண்ட  எத்தனையோ படங்கள் பார்த்திருகேன். ஆனால் இந்த படம் சற்று மாறுபட்டு போர்க் கைதிகள் முகாமில் நடந்த சம்பவங்களைக் கூறுவது என்று இயக்குனர் என்னிடம் கதை சொல்லிய போதே எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். இப்படத்தில் Clarence Harvey Cook என்ற என் பெயரை அனைவரும் சுருக்கி 'cookie' என்றே கூப்பிடுவர். என் கதாப்பாத்திரத்தை பற்றி நான் சொல்லப் போவதில்லை, படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

'ஸ்டாலாக்' என்பது ஜெர்மன் மொழியில் 'சிறை முகாம்' என்று பொருள்படும். எண் 17 என்பது 'டனுபெ' என்ற ஊரில் இருக்கும் முகாமை குறிக்கும். இங்கு மொத்தம் அறுநூற்று முப்பது போர்க் கைதிகள், அனைவரும் என்னைப்போல் சார்ஜண்ட்கள், பெரும்பாலும் அமெரிக்கர்கள். கதை தொடங்குவது இரண்டு பேர் அந்த முகாமில் இருந்து தப்பிக்க முயலுவதில் இருந்து. Sefton மட்டும், அவர்கள் நிச்சயம் தப்பிக்க மாட்டார்கள் என்று உறுதியாக கூறினான். அவன் கூறியது போல் அவர்கள் தப்ப வில்லை, சுடப்பட்டனர்.  

இந்த இடத்தில நான் சில முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி சொல்லி விடுகிறேன். Hoffy எங்கள் பாசறை தலைவர், Price பாதுகாப்பு அதிகாரி, Harry மற்றும் Animal எங்களுடன் இருந்த இரு கோமாளிகள். எங்களுக்கு பெண்கள் வாசமே கிடையாது, அவர்களை தனி முகாமில் அடைத்து வைத்திருந்தனர்.  நான் இருப்பது Sefton உடன், நான் கண்ட மனிதர்களிலேயே மிக வினோதமானவன்.    

Sefton ஏதாவது வினோதமாக செய்து கொண்டே இருப்பான். சாராயம் காய்ச்சி விற்றான், குதிரைப் பந்தயம் நடத்தினான் (ஆனால் ஓடியது ஐந்து எலி தான்). Red Cross இல் இருந்து கிடைக்கும் எல்லாப் பொருட்களையும் இவனிடம் அனைவரும் இழந்து விடுவர். இவன் செழிப்பானது  ஒரு தொலைநோக்கியை  கொண்டு. அந்த தொலைநோக்கி மூலம் எதிரில் இருந்த பெண்கள் முகாமை காண, நபர் ஒருவருக்கு இரண்டு சிகரேட்கள் வீதம் வசூல் செய்தான்.  இவற்றின் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து, நல்ல உணவு, ஆடை கிடைக்க ஜெர்மன் வீரர்களிடம் பண்டமாற்று முறைகளை கையாளுவான்.

எப்போதும் எங்கள் கவலையை மறக்க செய்வது Harryஉம் Animalஉம் தான். இக்கதையில் அவர்களுக்கு நகைச்சுவை வேடம். குறையின்றி எங்களை சிரிக்க வைத்தார்கள். ஒரு முறை இருவரும் பெண்கள் முகாமிற்குள் சென்று மாட்டியதை எங்கள் முகாமே கண்டு சிரித்தது. எங்கள் பாசறையில் செய்தி வாசிப்பவர் 'அட் ஈஸ்' என்று சொல்லும் போது Animal அவர் சொல்லிய பின் தன்   பாணியில் 'அட் ஈஸ்' சொல்வது என்னை மிகவும் கவர்ந்தது.

எங்கள் முகாமில் புழங்கி கொண்டிருந்த ரேடியோவை ஜெர்மன் வீரர்கள் கண்டுபிடிக்க, ஒரு ஜெர்மன் கைக்கூலி எங்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் கிளம்பியது. சிறை முகாமில் செழிப்பாக இருக்கும் Sefton மீது அனைவரின் சந்தேகமும் திரும்ப, இந்நிலையில் அவன் பெண்கள் முகாமிற்கு சென்று ஓர் இரவை உல்லாசமாக கழிக்க, அனைவரின் சந்தேகமும் உறுதியானது. Sefton எவ்வளோ சொல்லியும் யாரும் அவனை நம்பவில்லை, அன்று இரவு அவனுக்கு செம அடி தான். 

இதற்கிடையில் Lt.Dunbar என்பவர் தற்காலிக கைதியாக எங்கள் முகாமிற்கு வந்தார். அவர் வெடிமருந்து கொண்டு சென்ற ஜெர்மன் சரக்கு ரயிலை வெடிக்க செய்ததை எங்கள் மத்தியில் சொல்ல, உளவாளி வழியாக அது முகாம் துணைத்தலைவர்  காதிற்கு செல்ல, பின் குற்றத்தை ஒத்துக்கொள்ள சித்தரவதை நடந்தது. என்ன சித்ரவதைன்னா, அவர தூங்கவே விட மாட்டாங்க. இதே முறையத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளி வந்த 'போக்கிரி' படத்துல பயன் படுத்தியதா கேள்வி பட்டேன். Lt.Dunbarஐ நாங்கள் காப்பாற்றினோம், பின் Harry அவரை முகாமில் எங்கோ மறைத்துவைத்தார், யாரிடமும் சொல்ல வில்லை. ஜெர்மன் வீரர்கள் முகாம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் கிடைக்கவில்லை.

Sefton உளவாளி யார் என்பதையும், அவன் தகவல் சொல்லும் முறையையும் கண்டுபிடித்ததை என்னிடம் சொன்னான். உளவாளி யார் என்பதை கண்டறிந்தது ஜெர்மன் வீரர்கள் காதுகளுக்கு சென்றால் அந்த உளவாளியை வேறு முகாமிற்கு உளவு பார்க்க அனுப்பி விடுவார்கள், இல்லையெனில் அந்த உளவாளியை கொன்றால் எங்கள் அனைவரையும் கொன்றுவிடுவார்கள். உளவாளியை என்ன செய்வது என்பது கேள்விக்குறியானது.

Lt.Dunbar பெரிய பணக்காரர் என்பதால், அவரை முகாமை விட்டு வெளியே கொண்டு செல்ல Sefton முன்வந்தான், அவர் தாயிடம் இருந்து  பரிசு பணம் கிடைக்கும் என்ற ஆசையுடன். Sefton உளவாளியை எப்படி கொல்கிறான்,  Lt.Dunbarஐ எப்படி காப்பாற்றுகிறான் என்பதை அறிய படத்தை பாருங்கள், படத்தை பார்த்துவிட்டு மறக்காமல் கருத்துரையிட்டு செல்லுங்கள்.  

*****************************************************************************************
ஆண்டு            : 1953
மொழி              : ஆங்கிலம்                   
என் மதிப்பீடு : 4/5
*****************************************************************************************