Monday, July 22, 2013

சாப்பாட்டு ராமன் - பார்டர் பரோட்டா & ருசி பரோட்டா

பார்டர் பரோட்டா 

'குற்றாலம் சென்று குளித்து, பார்டர் பரோட்டா சாப்டா தான் அந்த பயணம் நிறைவடையும்' என்று பலர் சொல்லக் கேட்டு என்னுள் இருக்கும் ராமன், கண்டிப்பாக செங்கோட்டை சென்று அந்த பரோட்டாவை சுவைக்க வேண்டும் என்று அடம் பிடிக்க, என் நெல்லை நண்பனோ' ருசி பரோட்டாவிற்கும் அதற்கும் பெரிதும் வித்யாசம் இல்லை' என்று அடம் பிடித்தான். இறுதியில் ராமனே வென்று, ஐந்தருவியில் குளித்த ஈரத்துடன், செங்கோட்டை 'பார்டர்  ரஹ்மத் பரோட்டா' கடையை நோக்கி சென்றோம். 

இந்த இடம் கேரள-தமிழக பார்டரை ஒட்டி இருப்பதால், இந்தப் பெயர் வந்தது என்று எம் ஓட்டுனர் சொல்லினார், டெம்போ ட்ராவெலரில் பரோட்டா சாப்பிட செல்வது நாங்கள் மட்டும் தான் என்று எண்ணிய எனக்கு அங்கு கடை முன் நின்றுகொண்டிருந்த சீருந்துகளை பார்க்கும் பொழுது என் எண்ணம் மாறியது.

சாதாரண மர டேபிள்-பெஞ்ச் கொண்ட, மின் விசிறி சுற்றும் கடை தான் என்றாலும் உள்ளே ஏக்கக் செக்க கூட்டம். கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்ததும், எல்லார் முன் தலை வாழை இலை விரிக்கப் பட்டு, டம்லரில் தண்ணீர் ஊற்றப் பட்டது. உணவு பரிமாறுபவன் ஒரு சின்ன அன்னக் கூடை நிறைய பரோட்டக்களுடன் வந்து, எல்லா இலையிலும் தலா நான்கு பரோட்டா, நாங்கள் கேட்காமலே வைத்து விட்டுச் சென்றான். அதே போல் நாங்கள் கேட்காமலே, ஒரு தட்டு நிறைய ஆம்லட்டுடன் வந்து, எல்லார் இலையிலும் ஒன்று வைத்தான். பின் ஒரு பெரிய தட்டில் நாட்டுக் கோழி வறுவலுடன் வந்தான், எம் வடக்கு நண்பர்கள் இம்முறை சுதாரித்து வேண்டாம் என்று அவனை நிறுத்திவிட, எங்கள் இலையில் மட்டும் கோழி குடியேறியது. 

உபசரிப்பில் அன்பு அறவே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, கூட்டம் அலைமோத அவர்களும் என்ன செய்வர். அடுத்து எதை கேட்டாலும் வர சற்று தாமதமானது, அவன் வரும்போது நம் இலைகளை நிரப்புவது உசிதம் என்று அனுபவித்து உணர்ந்தோம். காடை வறுவலுக்காக என் நண்பன் காத்திருக்க, நாங்கள் உண்ட இலையை நாங்களே அகற்ற, எங்கள் பின் நின்று நாங்கள் சாப்பிடுவதை இதுவரை முறைத்துக் கொண்டிருந்தவர்கள், எங்கள் பெஞ்சை கைப்பற்றினர். 

நாங்கள் ஆறு பேர் (என்றாலும் நன்றாக சாப்பிட்டது மூவர் மட்டுமே) உண்டதற்கு பில் தொகை 531 ரூபாய். அங்கு கிடைத்தது மொத்தமே காடை வறுவல், நாட்டுக் கோழி வறுவல், ஆம்லட், பரோட்டா இவை மட்டும் தான். உணவில் எந்த குறையும் இல்லை என்றாலும் உண்ட திருப்தி இல்லை.

ருசி பரோட்டா

மறுநாள் மதியம் நெல்லையில் ருசி உணவகத்தில் சாப்பிடுவது என்று முடிவானது. நெல்லையில் எத்தனை சாந்தி ஸ்வீட்ஸ் உண்டோ அதை விட அதிகம் 'ருசி' என்ற பெயர் கொண்ட உணவகங்கள். ஓர் இடத்தில நியூ ருசி என்றிருக்கும், ஒரிஜினல் ருசி என்றிருக்கும், ஒரு இடத்தில 'ruci' என்றிருக்கும், வேறு ஒரு இடத்தில 'ruchi' என்று கூட இருந்தது. இப்படி பல ருசிகளுக்கு இடையில் என் நெல்லை நண்பன், பாளை மார்க்கெட் அருகில், செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரில் இருக்கும் ருசி தான் முதலில் தோன்றிய ஒரிஜினல் என்று அங்கு அழைத்துச் சென்றான்.நேராக கடைசி அறைக்கு சென்று அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தோம், இங்கும் தலை வாழை இலைதான். சென்னை உணவகங்களில் காணப் படாத ஒன்று. பரோட்டா, சிக்கன் சாப்பாடு, மட்டன் சாப்பாடு, சைவ சாப்பாடு, மஜீரா, ஹாப் பாயில், ஆம்லட், கலக்கி என நாங்கள் ஆறு பேர் உண்டதற்கு பில் வெறும் 715 ரூபாய். அனைத்தும் சுவையில் பர்ஸ்ட் கிளாஸ். 

மஜீரா என்பது சிக்கனில் தந்தூரி போல் செய்வது. தந்தூரியை கரி சூட்டில் சுடுவர், மஜீரா எண்ணையில் பொறிக்கப்படுவது. மஜீரா சென்ற முறை நெல்லை சென்ற போதே என்னை கவர்ந்த ஒன்று. 


முன்னோட்டம் 

எங்களுக்கு உணவு பரிமாறியவர் மிகவும் பொறுமையாய், அன்பாய், புன்னகையுடன் உணவு கொடுத்தது, உணவிற்கு சுவை கூட்டியது. அவருக்கு டிப்ஸ் வெறும் இருபத்து ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம், அதைக் கண்டு அவர் முகத்தில் எழுந்த சிரிப்பில் எத்தனை ஆனந்தம். காசின் மதிப்பை நன்கு அறிந்த அவரின் சிரிப்பில் இறைவன் அழகாய் தெரிந்தார்.

பார்டரில் கிடைக்காத மன நிறைவு ருசியில் கிடைத்த மகிழ்ச்சியுடன், திருநெல்வேலி அல்வாவை வேட்டையாட புறப்பட்டான் ராமன்.

22 comments:

 1. ஆகா ! அருமை. அடுத்த முறை நெல்லை ருசிக்குப் போய் விட வேண்டியது தான். இப்பவே நாவூறுகின்றது. :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ... முதல் வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 2. ரசித்தேன் ருசித்தேன்... இறைவனையும் கண்டு கொண்டேன்...!

  ReplyDelete
 3. உபசரிப்பில் அன்பு அறவே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை,//கூட்டம் அதிகமானால் வியாபாரம்தான் முக்கியம்

  ReplyDelete
  Replies
  1. வியாபாரம் மட்டுமே குறிக்கோலாக இருந்தால் 'repeat customers' வருவது கடிது.

   Delete
 4. சாப்பாட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.ரெண்டு இட்லி கிடச்சா போதும் நமக்கு

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ... ராமனுக்கு அப்படி இல்ல சார், சாப்பாடு தான் எல்லாமே...

   Delete
 5. ஆஹா அடுத்தது திருநெல்வேலி அல்வா.... எனக்கும் சேர்த்து வாங்குங்க! ரொம்ப அதிகமா வேணாம் - எனக்கு மட்டும் ரெண்டு கிலோ வாங்கினா போதும்! :)

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே வாங்கி, தீர்ந்தும் விட்டது... திருநெல்வேலி அல்வாவிற்கு எத்தனை தேவை... சென்னையில் ஒரு சாந்தி ஸ்வீட்ஸ் திறக்கலாம் போல...

   Delete
 6. பரோட்டா எந்த ஊருல இருந்தாலும் எந்த பேருல இருந்தாலும் எல்லாரோட பேவரிட் . பல்லுல மாட்டிக்குது, ஜீரணிக்க லேட்டாகுதுன்னு சொன்னாலும் கூட

  ReplyDelete
  Replies
  1. இட்லிக்கு அடுத்து தமிழரின் பாரம்பரிய உணவாகி விட்டது பரோட்டா

   Delete
 7. திருநெல்வேலி அல்வாவை
  >>
  அக்காவுக்கு ஒரு பாக்கட் அல்வா பார்சல். கடையில் பாக்கட்டாக வங்கி தரவும்.., கிண்டி தரக்கூடாது

  ReplyDelete
  Replies
  1. //கிண்டி தரக்கூடாது// அக்கா இம்முறை முதலிலேயே உஷார் ஆகியாச்சு...

   Delete
 8. அடுத்தவாட்டி ஊருக்குப் போகும்போது ஒரு 30 புரொட்டாவாச்சும் சாப்பிடனும்...

  ReplyDelete
  Replies
  1. என்னைப் பற்றி தங்களுக்கு தெரியாது . சாப்பிடும் பொழுது எண்ணக்கூடிய பழக்கம் எனக்கு இல்லை

   Delete
 9. நல்லா இருக்கு சார்

  ReplyDelete
 10. ரசிச்சுச் சாப்பிடுறீங்க!

  ReplyDelete
 11. ரூபக் ராமன் ...! சூப்பரு ...! உமது பதிவ, நண்பர் ஒருத்தரு மெயில்ல அனுப்பீருந்தார் ...! ரெம்பப் பாப்புலராகீட்டிக தம்பு .

  //நேராக கடைசி அறைக்கு சென்று அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தோம்,//

  ஏன்ப்பா அங்க சேர் இல்லையோ ...?

  ReplyDelete
  Replies
  1. //உமது பதிவ, நண்பர் ஒருத்தரு மெயில்ல அனுப்பீருந்தார் // யார் சார் அந்த நண்பர் ?


   //ஏன்ப்பா அங்க சேர் இல்லையோ ...?// ஹா ஹா ... உமக்கு மட்டும் எப்படி இப்படி சிக்குகிறது என்று தெரியல....

   Delete
 12. கூட்டமோ விசேஷ வீட்டுக் கூட்டம்.. வந்தவர்கள் எல்லாம் புரோட்டா கிடைத்தால் போதும் என்று தான் இருந்தனர். ருசியோ அமர்க்களம்.. இப்போது இலையை நாம் எடுக்கத் தேவையில்லை.. எனது அனுபவம் இங்கே http://rayilpayanam.blogspot.in/2017/09/blog-post_2.html

  ReplyDelete