Showing posts with label ஊர் சுற்றல். Show all posts
Showing posts with label ஊர் சுற்றல். Show all posts

Wednesday, March 8, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி

****************************************************************************************************************
முந்தைய பகுதிகளை படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்
****************************************************************************************************************

இடுக்கி செல்ல எலப்பாரா-கட்டப்பன்னா வழியை கூகிள் அம்மணி வகுக்க, இடுக்கி பற்றி நான் அறிந்ததை இருவருக்கும் சொல்லிக்கொண்டே வந்தேன். முதலில் எனக்கு இடுக்கி பரிட்சயமானது மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் தான். அந்த படத்தில் வரும் காட்சிகள் முழுக்க முழுக்க இடுக்கியில் நடப்பதாகவும், பெரும்பாலான காட்சிகளின் பின்புறம் இடுக்கி அணை தெரியுமாறு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும்.  எனக்கு இடுக்கி மீது காதல் பிறந்தது, தந்தையின் வசீகரக் குரலை வரமாக வாங்கி வந்த விஜய் யேசுதாஸின் குரலில் 'மலை மேலே திரி வச்சு பெரியாரின் தலையிட்டு' எனத் தொடங்கும் அந்த இடுக்கி பாடல் தான். பாடலின் வரிகளும் அதன் காட்சியமைப்பும் விஜய் யேசுதாஸின் குரலும் யாரையும் ஈர்க்க வல்லது. ஆங்கிலேயர் காலத்தில் குறவன் மற்றும் குறத்தி மலையின் இடையில் பாரபோலா வடிவில் பெரியாரின் குறுக்கே கட்டப் பட்டது தான் இந்த இடுக்கி அணை. நான் சொல்லிய தகவல்கள் இருவருக்கும் ஆர்வத்தை தூண்டியது என்று சொல்ல முடியாது, ஆனால் மூவருக்கும் பசி வயிற்றை கிள்ளத் தொடங்கியது. அடுத்து வந்த எலப்பாராவில் ஒரு கேரள பிரியாணியை உண்டதன் மயக்கத்தில் என்னை அறியாமல் நானே சற்று இளைப்பாறிவிட்டேன். இந்த பயணத்தில் நான் பகலில் தூங்கிய ஒரே கணம் அதுதான்.



கண்விழித்தால், 'இடுக்கி வந்து விட்டதா?' என்று நீங்கள் எண்ணினால் அது தவறு, ஒரு டீ கடை முன் பிகோ ஓரம் ஒதுங்க, ஒரு கட்டனும் சில பழம்பொறிகளையும் கொறித்து விட்டு, மீண்டும் இடுக்கி நோக்கி தொடர்ந்தோம். அப்பொழுதுதான் அலுவலக நண்பர் பிஜூ, இடுக்கி அணை பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை என்று சொல்லியது நினைவிற்கு வந்தது. த்ரிஷா இல்லனா நயன்தாரா என்பது போல், இடுக்கி இல்லாவிட்டால் இரவு அங்கு தங்கிவிட்டு, காலை தளசேரி பக்கம் வண்டியை திருப்பி தளசேரி இட்லியை சுவைத்துவிட்டு பாலக்காடு வழியே தமிழக எல்லையை அடைந்து கோவை  வழியாக சென்னை செல்ல மாற்றுத் திட்டத்தையும் வகுத்துக்கொண்டோம். நாங்கள் இடுக்கி நெருங்க நெருங்க அந்த மனிதன் வடித்த பாரபோலா அழகிற்கு பின்னே கதிரவன் மறையத் தொடங்கிக்கொண்டிருந்தான். சாலையின் ஒரு இடத்தில பல வாகனங்கள் நின்றிருக்க, இடுக்கி அணை பின்புறம் தெரியும்படி மக்கள் கூட்டம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தது. அந்த இடத்தில இறங்கி நாங்கள் இடுக்கி அணை செல்ல வழிகெட்க, 'அது மாலை ஐந்து மணியுடன் மூடப்பட்டிருக்கும் இனி நாளை காலை தான் காண முடியும்' என்ற செய்தி ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாத இடுக்கி அணை இந்த விஜயதசமி விடுமுறை தினத்தில் திறக்கப்பட்டிருந்தது எங்களை கவுரவிப்பதற்காகவே போல் இருந்தது. விடுமுறையில் பயணிப்பதால் பல சிக்கல்கள் இருந்தாலும் இதுபோல் சில சந்தோஷங்களும் எதிர்பாராமல் நடப்பதுண்டு.

மாலை ஐந்து மணியே ஆனாலும், அங்கு பார்ப்பதற்கு வேறு எந்த இடமும் இல்லாததால், விடுதியை தேட தொடங்கினோம். வழியில் சிலர் அந்த வட்டாரத்தில் நல்ல விடுதி என்று சொல்லி அனுப்பிய இடத்தில எங்களுக்கு அறைகள் இல்லாமல் ஏமாற்றம் கிடைத்தாலும் அந்த விடுதி மூலம் வேறு ஒரு இடத்தில இடம் கிடைக்க, அந்த விலாசத்தை தேடி நகர்ந்தோம். அந்த விடுதி மேலாளரின் கைபேசி எண்ணில் அவர் காட்டிய வழியே சென்றாலும் பாரமடா சென்றவுடன் எங்களுக்கு வழி குழம்ப, தொடுபுழா செல்லும் சாலையில் நாங்கள் காத்திருக்க, அவர் எங்களுக்கு வழிகாட்ட ஒருவரை அனுப்புவதாக சொன்னார். இங்கு அனைத்து மலையாள உரையாடல்களின் புகழ் ரெஜித்தையே சாரும். தொடுபுழா செல்லும் வழிப்பலகைகளை கண்டதும் திரிஷ்யம் படம் தான் நினைவிற்கு வந்தது.

வழிகாட்ட வந்தவர் சில நிமிடங்களில் நடந்தே வந்து எங்களைக் கண்டதும் நாங்கள் அந்த விடுதிக்கு எத்தனை அருகில் வந்த பின் தடுமாறினோம் என்பது புரிந்தது. அவரை பின் தொடர்ந்து அந்த இடத்தை அடைந்த பின் தான் அது விடுதி அல்ல சர்ச்சின் அறைகள் என்றும் அவர் விடுதி மேலாளர் அல்ல சர்ச் பாதர் என்பதையும்  உணர்ந்தோம். எனது ஓட்டுநர் உரிமத்தை பணயமாக வைத்து முன்பணத்தை செலுத்தி விட்டு, மூன்றாவது நாளும் குறைந்த கட்டணத்தில் சிறப்பான அறை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தோம். அந்த அறையில் நான்கு கட்டில்கள் மெத்தையுடன் இருக்க, ஏசி மற்றும் மின்விசிறி இல்லாமலேயே இயற்கையின் குளிர் எங்களை சிலுக்கிடச் செய்தது. அந்த குளிருக்கு முக்கிய காரணம் அறைக்கு பின் புறமாக ஓடிய ஒரு கால்வாய் தான் என்பதை மறுநாள் காலை கண்டோம். நாங்கள் கைகால் கழுவிக் கொண்டு இரவு உணவு உண்ண செல்லும் பொழுது மணி ஏழு பத்து தான் என்றாலும், அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. வந்த வழியில் ஒரு உணவகத்தைக் கண்ட நினைவில் பிகோவில் அந்த உணவகத்திற்கு சென்று, அங்கு அடுப்பங்கரையில் தூங்கிக்கொண்டிருந்த பூனையை எழுப்பினோம். எங்களுக்காகவே பிரத்தியேகமாக சிக்கனை வறுத்து பரோட்டாவுடன் தந்தனர். சுமாரான சுவை என்றாலும் வேறு வழியின்று உண்டு, சில ஒம்லெட்டுகளுடன் பசியாற்றினோம்.

ஒரு கட்டனுடன் அங்கு இருந்தவர்களுடன் உரையாடும் பொழுதுதான் இடுக்கியில் சுற்றுலா சரிவர சீர் செய்யாததால் மக்கள் வரத்து குறைந்து இங்கு சுற்றுலாவை நாடி இருக்கும் பலரும் சிரமப்படுவதை அறிந்தோம். இயற்கை எழில் கொஞ்சும் இடுக்கியில் மக்கள் அறியாத பல 'வல்லிய ஸ்தளங்கள்' உண்டு என்று அவர்கள் பெருமிதத்துடன் கூறினர். இரவை குளிரில் போர்வையின்றி கழித்து, காலைப் பனியில் ஐஸ் கட்டி போல் வந்த நீரில் குளித்து விட்டு, வழியில் ஒரு கடையில் புட்டு கிடைக்காவிட்டாலும் பிரபாகருக்கு பரோட்டாவுடன் கடலைக்கறி வாங்கி கொடுத்து, மூன்றாவது பார்க்கிங் வாகனமாக பிகோவை இடுக்கி அணை அருகே நிறுத்தினோம். காலை ஒன்பது மணி தான் என்றபொழுதும் அங்கு வெய்யில் சுளீரென்று தன் பற்களை இளித்துக் கொண்டிருக்க அங்கு இருந்த குடை மற்றும் தொப்பி கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது.

அனுமதி சீட்டு வாங்க ஏற்கனவே ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்த வரிசையில் நாங்களும் சென்று நின்றோம். அணையை நடந்து சுற்றிப்பார்பது அல்லாமல் மின்சார ஊர்தியில் சுற்றிக்காட்டவும் ஒரு கட்டணம் இருந்ததைக் கண்டு, வெய்யிலின் தாக்கத்தை மனதில் கொண்டு, கூடுதல் கட்டணம் கொடுத்து அந்த மின்சார வாகன டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, நுழைவு வாயில் செல்ல வரிசையில் நின்றால் 'கேமெரா மற்றும் கைபேசிகள் உள்ளே அனுமதி இல்லை' என்ற செய்தி வரிசையில் தீ போல பரவ, நானும் பிரபாகரும் பிகோவிற்கு சென்று கைப்பேசிகளை வைத்து விட்டு திரும்புவதற்குள் வரிசை நீண்டிருந்தது. இனி அணையை பார்வையாலேயே மட்டும் தான் புகைப்படம் எடுக்க முடியும் என்ற சோகத்தில், அருகில் நிறுத்தியதனால் ஒரு அலைச்சல் மிச்சமானது என்று மனதை தேற்றிக்கொண்டு செல்ல, கடும் சோதனையை தாண்டி நுழைவு வாயிலினுள் அனுமதிக்கப்பட்டோம்.

அங்கு இருந்த பல காவலர்களுள் ஒருவர் மட்டும் எங்களை ஒரு இடத்தை சுட்டிக்காட்டி வாகனம் வரும்வரை காத்திருக்கச் சொன்னார். அணையின் வாயிலில் நின்றதால் அடித்த குளிர்ந்த கற்று எங்களை அணையை சுற்றி பார்க்கும் ஆசையை மேலும் தூண்ட அப்படியே நடக்கத் தொடங்கினோம். நாங்கள் நுழைந்த இடமும் மலை மீது தான், அணை சென்ற பாதையும் ஒரு மலையை நோக்கி இருக்க இது இரண்டும் தான் குறவன் குறத்தி மலை என்று நினைத்துக்கொண்டு நடந்த எஙகளுக்கு அந்த அணையின் முடிவிற்கு வந்த பின் தான் அது தவறு என்று புரிந்தது. நாங்கள் முதலில் கடந்தது அந்த பாரபோலா அணை இல்லை, இப்பொழுது தான் குறத்தி மலையின் தொடக்கத்தை அடைந்துள்ளோம் அடுத்து தான் அணை பின் குறவன் மலை என்பது விளங்கியது. கூட்டமாக சென்ற மக்களின் பின் அந்த தார் சாலையில் அப்படியே பேசிக்கொண்டே நடந்தோம், நடந்தோம், இருபது நிமிடத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தோம்.

குறத்தி மலையை முழுதும் சுற்றி வரும்போது எங்களைக் கடந்து சென்ற அந்த மின்சார வாகனங்களில் இருந்த மக்களைக் கண்டு பொறாமை பட்டுக்கொண்டே நடந்து ஒரு வழியாக அணையை அடைந்தோம். அத்தனை பெரிய ஆற்றின் குறுக்கே இரு மலைகளுக்கு நடுவில் பாரபோலா வடிவில் அந்த அணையை வடித்திருப்பது மனிதனின் ஆற்றலுக்கு சிறந்த சான்று. நான் இதுவரை கண்ட அணைகள் அனைத்துமே நிலப் பரப்பில் இருந்தவை, ஆனால் இந்த அணையின் இரு பக்கங்களும் மலையில் சொருகப்பட்டிருந்தன. இயற்கையையும் செயற்க்கையையும் இணைத்து ஒரு சொட்டு நீர் கூட கசியாதபடி அந்த அணை வடிவமைந்திருந்ததைக்கண்டு வியந்து கொண்டே அங்கு இருந்த ஒரு குகையின் உள்ளே நுழைந்தோம். அப்பொழுது ரெஜித் 'வைஷாலி, என்று ஒரு படம் இங்கு காட்சி செய்யப்பட்டதால் இங்கு இருக்கும் ஒரு குகைக்கு வைஷாலி குகை என்று பெயர் வந்தது. அது இதுதானா என்று தெரியவில்லை' என்று சொல்லிக் கொண்டு செல்ல அந்த குகையின் மறுமுனைக்கே வந்துவிட்டோம்.

அந்த முனையில் அணைக்கு கீழே இருந்து வர மற்றொரு பாதை இருந்தது. அந்த முனைக்கு ஒரு மின்சார ஊர்தி வந்து மக்களை இறக்கி விட, மூவருக்குமே நடந்த அயர்ப்பு இருந்ததால் அந்த ஓட்டுநரிடம் சென்று நாங்கள் பயன்படுத்தாத டிக்கெட்டை காட்டி எங்களை கொண்டு செல்லமுடியுமா என்று கேட்க ரெஜித்தை முன்நிறுத்தினோம். ரெஜித்தின் வசீகர வலையில் விழுந்த ஓட்டுநருடன் அதன்பின் மலையாளத்தில் நடந்த உரையாடல்கள் தமிழில்,

'வண்டில ஏறாமல் காணாமல் போன அந்த மூணு பேரு நீங்கதானா. உங்களுக்காக ரொமப் நேரமா காத்திருந்து வேறு ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்தேன்' என்று சோகத்துடன் அவர் கூறினார்.

'திரும்ப போகும்போது எங்களை கொண்டு செல்ல முடியுமா' என்று ரெஜித் கேட்க, 'அது முடியாது, கொண்டு வந்தவர்களை தான் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும். சேரி ஏறுங்க அப்படியே அந்த முனைல விட்டுட்டு வரேன்' என்று எங்களை ஏற்றிக்கொண்டு, எங்களது விபரங்களை மற்றும் நாங்கள் இந்த மூன்று நாட்கள் செய்த சாகசங்களை கேட்டு அறிந்துக்கொண்டார். மேலும் இந்த அணையில் இருக்கும் ஒவ்வொரு அடி நீரினாலும் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆகின்றது என்றும் இந்த அணை நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டால் எத்தனைக் கோடி ரூபாய் வருவாயை கேரள அரசு இழக்கும் என்ற அரசியலும் பேசினார். பாரபோலா அணையின் மறுமுனைக்கு வந்தவுடன் அந்த வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு, அந்த அணையின் அடியில் இருக்கும் மின்சாரம் உற்பத்தி ஆகும் முறைகளையும் அவர் மின் வாரியத்தில் பணிபுரிந்த பொழுது மின் தூக்கியில் அணைக்கு அடியில் சென்று நீரைக் கண்ட அனுபவங்களையும் சொன்னார்.

'நீங்கள் இடுக்கி போல் ஒரு இடத்தை எங்கும் காண முடியாது. இங்கு பலரும் அறியாத சில அருமையான ஸ்தளங்கள் இருக்கின்றன' என்று தன் கைபேசியில் இருந்த அவரது பழைய புகைப்படங்களை காட்டினார். உண்மையிலே அந்த புகைப்படத்தில் இருந்த இடங்கள் வெளிநாடுகளில் சினிமா பாடல்கள் காட்சி செய்யும் இடம் போல இருந்தது. குறிப்பாக ஒரு மலை மீது இருந்த படத்தில் மேக கூட்டங்கள் அவர் காலுக்கு அடியில் செல்வது போல் இருந்தது. அடுத்த முறை இடுக்கி மட்டுமே மூன்று நாட்கள் வரவேண்டும் என்று தீர்மானித்தோம், எங்களுக்கு வழிகாட்டியாக அவர் வர சம்மதிக்கும் பொழுது அவர் இறக்கி விட்ட பயணிகள் அணையை சுற்றி பார்த்து விட்டு திரும்பியிருந்தனர். எங்களுக்கு வைஷாலி குகைக்கு செல்லும் சரியான வழியை காட்டிவிட்டு, எங்களை அதுவரை அழைத்து செல்ல அந்த பயணிகளிடம் அனுமதியும் வாங்கினார். அவர்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பாமல் நடந்தே செல்ல முடிவு செய்து அவருக்கு நன்றி தெரிவித்து வழி அனுப்பினோம். குறத்தி மலையில் ஒற்றை அடி பாதையில் சென்ற மக்கள் கூட்டத்தை பின் தொடர்ந்து பத்து நிமிட பயணத்திற்கு பின் அந்த வைஷாலி குகையின் ஒரு முனையை அடைந்தோம். ஒரு பெரிய கனரக லாரி சிரமம் இன்றி செல்லக் கூடிய அளவிற்கு அகன்று சுரண்டப் பட்டிருந்த அந்த இருள் சூழ்ந்த குகையின் மறுமுனையில் இருந்த வந்த அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தோம். நீருக்கு பல அடிகளுக்கு மேல் மலையில் முடிந்த அந்த முனையில் இருந்து அணையின் நீரைக் கண்ட காட்சி சொர்கத்தை கண்டது போலே மனதிற்கு ஒரு வித அமைதியை தந்தது.    

அந்த இடத்தில் சில நிமிட அமைதி தியானத்திற்குப் பின், பல உள்ளூர் காதல் ராஜா ராணிக்களின் பெயர்கள் அந்த பாறைகளில் அம்புகளுடன் செதுக்கப்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே வந்த வழியே திரும்பினோம். முதல் அணையின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கடையில் சுட சுட சில பழம்பொறிகளையும் ஆளுக்கு ஒரு லெமன் சோடாவையும் உண்ட பின்தான் மூவருக்கும் இளமை திரும்பியது.  அணையின் வாயிலுக்கு வரும் பொழுது அவர் தனது பயணிகளை இறக்கி விட்டு அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார், அங்கு கைபேசி பயன்படுத்த அனுமதி இல்லை என்பதால் திருட்டுத்தனமாக அவர் ரெஜித் கைபேசிக்கு அழைத்து மிஸ்டு கால் கொடுத்தார். பிகோவை வந்தடையும் பொழுது மணி 12 30. அதன் பின் தான் ரெஜித் தன் கைபேசி உயிரின்றி கிடப்பதையும் அந்த மனிதரின் எண்ணை நாங்கள் தவறவிட்டதையும் எண்ணி சில நொடிகள் வருந்தினோம். அணையில் இருந்து கீழே வந்த பின் அணை பின் தெரியும்படி சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.



கம்பம் செல்ல கூகிள் அம்மணியின் துணையை நாடிச் சென்று, தேனி வந்தவுடன் 'கேரளா சிப்ஸ்' கேட்டவர்களுக்கு, பிரபாகர் தேனியில் சிப்ஸ் வாங்கினார் என்பதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். அவருக்கு கேரளா புட்டு கிடைக்க வில்லை என்ற வருத்தம் இருந்தாலும் ஒரு நல்ல பயணத்தின் திருப்தி இருந்தது. சிறுசேரியில் இருந்த ரெஜித் வீட்டில் மூவரும் பிரிந்து, நான் ரெஜித் வண்டியில் மேடவாக்கம் வந்தடையும் பொழுது மணி 12 20.

மூன்று நாட்கள், மூன்று வாலிபர்கள், 1400 கிலோ மீட்டர்கள், சரக்கு இல்லை, பாட்டு இல்லை ஆனால் அடுத்த தலைமுறைக்கு சொல்லும் அளவிற்கு பல நினைவுகளுடன் இந்த பயணத்தை பதிய வேண்டும் என்ற உறுதியுடன் உறங்கச்சென்றேன்.

Sunday, March 5, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்

****************************************************************************************************************
முந்தைய பகுதிகளை படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா
****************************************************************************************************************
வாகமானில் குளிர்ந்த இரவை தங்கும் அரை இல்லாமல் எப்படி கழிப்பது என்ற குழப்பத்தில் இருந்த எங்களுக்கு அந்த ரிசார்ட் மேலாளர் அருமையான யோசனையைக் கூறி வழிகாட்டினார். அவர் மலையாளத்தில் என் நண்பர்களிடம், 'இங்கு தங்க ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக கட்டணத்தில் அறை கிடைத்தாலும், அது சுத்தமின்றி குப்பை போலத்தான் இருக்கும். இங்கிருந்து ஒரு இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் சிரமம் பாராமல் பயணித்து இரெட்டுபேட்டா சென்றால், இங்கு செலவிடும் காசிற்கு அங்கு குறைந்த கட்டணத்தில் சுத்தமான அறையுடன் சிறப்பான உணவையும் அனுபவித்து விட்டு டீசல் செலவும் அதற்குள் அடங்க சுகமாக காலை திரும்பலாம்' என்று கூறி அனுப்பினார். நாள் முழுக்க மலைப் பாதையில் பிகோவை செலுத்தி பிரபாகர் அயர்ந்திருக்க, அங்கு ஓட்டுநர் பொறுப்பை நான் ஏற்று, அந்த கும் இருட்டில் பிகோவின் சோடியம் துணை கொண்டு இரெட்டுபேட்டா நோக்கி, வழியில் சாலை நடுவே இருந்த பல குழிகளில் பிகோவை செலுத்தி ஒரு வழியாக இலக்கில் கொண்டுசேர்த்தேன். இரெட்டுபேட்டா அந்த கணம், மக்கள் மற்றும் வாகன ஓட்டம் அதிகம் இல்லாத அமைதியான டௌனாக எங்களுக்கு தோன்றியது.    

நான் பிகோவில், பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ரௌண்டானாவின் அருகில் நிற்க, அவர்கள் இருவரும் அருகில் இருந்த சந்துகளில் ஏதேனும் விடுதிகள் உண்டா என விசாரிக்கச் சென்றனர். நான்கு சக்கர வாகனங்களின் மற்றொரு பிரதிகூலம் இது. எல்லா சந்துகளிலும் யோசிக்காமல் நுழைந்து விட்டால் பின் திரும்பிவர மிகவும் சிரமப்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் தான் இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களின் மேல் ஓங்கி நிற்கின்றன.  இருவரும் பார்க்கிங் வசதியுடன் கொண்ட ஒரு விடுதியை கண்டு வர, பிகோவை அந்த விடுதி நோக்கி செலுத்தி, அதன் வாயிலில் மூன்று நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவு இருந்த இடத்தின் நடுவே பிகோவை நிறுத்தி விட்டு, மேலே சென்றோம். சுண்ணாம்பின் வாசம் கூட குறையாமல் புதிதாய் நிறுவப்பட்டிருந்த அந்த விடுதியில், தேனியில் தங்கியதை விட குறைந்த கட்டணத்தில், புத்தம் புதியதாய் ஒரு அறை கிட்டும் என்று அந்த குளிரில் நடுங்கியபோது நாங்கள் எண்ணவே இல்லை. நல்லதொரு உறக்கம் தந்த உற்சாகத்துடன், காலை ஆப்பம், நூலாப்பம், பரோட்டா, பக்ரி,  முட்டை கரி, என சகலமும் சுவைத்த பின்பு, கட்டணம் எவ்வளவு என்று நினைக்கறீர்கள்? ஹ்ம்ம், இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கு கூட அங்கு அவசியமில்லாமல் போனது. அனைத்திற்கும் எங்களுக்கு வழிகாட்டிய அந்த பெயர் தெரியாத நல்ல உள்ளத்திற்கு நான் நன்றி சொல்லியபோதும், பிரபாகருக்கு ஒரு மிகப் பெரிய குறை இருந்துகொண்டே இருந்தது. புட்டும் கடலைக்கறியும் கிடைக்காத குறை தான் அது.

மீண்டும் வாகமான் நோக்கி எங்கள் பயணம் தொடர, இரவு இருட்டில் நான் கடந்து வந்தப் பாதையின் ஆபத்தை கதிரவன் தெள்ளந்தெளிவாக ஒருபுறமும் இருந்த மிகப் பெரும் பள்ளத்தாக்கை எங்களுக்கு காட்டியது. மேலும் இங்கு எல்லாப் பாதையுமே குறுகிய ஒற்றை வழிப் பாதைகள் தான், கவனம் தப்பினால் மரணம். வாகமான் செல்லும் வழியில் முதலில் வந்த இடமான கரிக்காடு டாப் வியூ பாயிண்டில் பிகோவை ஓரமாக நிறுத்திவிட்டு, பிரபாகரின் dslr காமிராவிற்கு வேலை கொடுத்தோம்.
கரிக்காடு டாப் வியூ பாயிண்டில் நான் கிளுக்கியது
சில புகைப்படங்களை கிளிக்கி விட்டு கிளம்பும் முன் அங்கு சாலையோரம் இருந்த ஒரு கடையில் லெமன் சோடா இருப்பைதைக் கண்டவுடன் ப்ரேமம் பட 'கஸ்கஸ்' நினைவிற்கு வந்த பின் லெமன் சோடா குடிக்காமல் செல்ல முடியுமா (லெமன் vs லைம் என்று ஆவி அவர்கள் வாதத்திற்கு வர நினைத்தால் இந்தச் சிறுவனின் பிழையை மன்னிக்கவும்). இருவரும் பெரிதும் நாட்டம் காட்டாததால் எனக்கு மட்டும் ஒன்று சொன்னேன். கார் டிக்கியில் ('ட்ரங்க்' என்று குறிப்பிடாததிற்கு மீண்டும் ஆவீ அவர்கள் மன்னிக்கவும்) தேவையான பொருட்களை வைத்துக்கொண்டு, சாலை மேல் ஒரு சிறு மேசையை விரித்து வைத்துக்கொண்டு, அதேன் மேல் பல விதமான ஊறவைத்த காய் மற்றும் கனிகளை அந்த இளைஞன் விற்பனை செய்துகொண்டு இருந்தான். வெள்ளைக் கண்ணாடி டம்ளரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, சர்க்கரை பாகு நீரை லேசாக கலந்து, அரைத்த பச்சை மிளகாய் இஞ்சு பூண்டு ஆகியவற்றையும் சிறிதளவு கலந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, ஒரு சோடா பாட்டிலை உடைந்து, நுரை பொங்க விடமால் அந்த சோடாவை கலந்து, ஒரு தேக்கரண்டி கஸ்கஸ் சேர்த்து, பின் ஒரு வெள்ளி டம்பளரை அந்த கண்ணாடி டம்ளர் மீது மூடி, பார்டெண்டரிடம் ஜேம்ஸ் பாண்ட் 'shaken and not stirred' என்று கூறுதுஎன் நினைவிற்கு வருமளவுக்கு தேர்ந்த  பார்டெண்டர் போல் அதை நன்கு குலுக்கி கொடுத்தான். இதன் மேல் அதன் சுவை பற்றி சொல்லவா வேண்டும், இப்பொழுது அதை நினைத்தாலும் நாவில் உமிழ் நீர் சுரந்து சாப்பாட்டு ராமனை தட்டி எழுப்புகின்றது. பிறகு இரு நண்பர்களும் ஆளுக்கு ஒன்று வாங்கி சுவைத்துவிட்டு, ஒரு நல்ல மாக்டைல் குடித்த திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

அந்த எலுமிச்சை ரச  சோடா  

எங்களது வழிகாட்டி 
அங்கு இருந்த சுற்றுலாத் தளங்களிற்கு என்று அமைக்கப்பட்டிருந்த வரைபடத்தின் உதவி கொண்டு வாகமானை சுற்றத் தொடங்கினோம். முதலில் சென்றது அதில் இருக்கும் 'டீ லேக்', எதோ வித்தியாசமாக இருக்கும் என்று சென்றால், தேநீர் பயிர் செய்யப்பட்டிருந்த இரு குன்றுகளுக்கு நடுவில் இருந்தது அந்த ஏரி. அங்கு சில பெடல் போட்டுகள் மற்றும் சிறுவர்களுக்கான zorbing பலூன் இருந்தது. மூவருக்குமே அந்த இடம் பெரிதும் ஈர்ப்பு தராததால் வீணாக கொடுத்த பார்க்கிங் கட்டணத்தை காந்தி கணக்கில் போட்டுவிட்டு அடுத்த இடத்தை, அந்த வரைபடத்தில் இருந்த அருவியை தேர்வு செய்து விட்டு, அதன் பாதையில் சென்றோம்.


டீ லேக் 


நமக்கும் நீருக்கும் பத்து பொருத்தமும் உண்டு, மலை அருவி நீரில் தொடங்கி குளம், குட்டை, ஏரி, ஆறு, கடல், மழை ஏன் மோட்டார் பம்ப் நீரைக் கூட விடுவது இல்லை. இருமலைகளுக்கு நடுவில் குடைந்து சென்ற அந்த சாலை சினிமா பட கார் சேஸ் லொகேஷன்களை நினைவுபடுத்த, ஒரு தூரத்தில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, சற்று நேரத்தில் மலை மீது இருந்து ஓடும் அந்த அருவியும் கண்ணில் பட்டது. பெயரைப் போலவே அது பாலொழுகும் அருவியாகத்தான்  காட்சியளித்தது. அந்த அருவிக்கு செல்ல சாலை அந்த இடத்துடன் முடிய, 'இந்த அருவியில் குளிக்க அனுமதி இல்லை' என்று ஒரு எச்சரிக்கை பலகையும் இருந்தது. ஆனால் நால்வர் அந்த அருவியின் அடிவாரத்தில் குளிப்பதைக் கண்டவுடன் எங்களுக்கும் நீர் அரிப்பு ஏற்பட, அந்த மலை வழியில் தண்ணீரை நோக்கி இல்லாத பாதையை தேடி நடந்து, ஒரு வீட்டின் முன் சென்றோம். அந்த வீட்டில் இருந்தவர்கள் 'அருவிக்கு போக வழியில்லை இது தனியார் இடம்' என்று எங்களை விரட்ட, ஏமாற்றத்துடன் மீண்டும் பிகோவை நோக்கி மலையேறினோம். அப்பொழுது எங்களுக்கு எதிரில் வந்த தமிழர்கள் எங்கள் எச்சரிக்கையையை நம்பாமல் அந்த அருவியை தேடி நடக்க, சில நிமிடங்களில் நாய்கள் குறைக்கும் சத்தம் எங்களுள் ஒரு நைய்யாண்டியை தூண்டியது.

பாலொழுகும் அருவி 

அருவியில் இருந்து திரும்பும் வழியில் இருந்தது 'மொட்டக்குன்னு', நம் ஊரில் சொல்லும் மொட்டை மலை போல் ஒரு மரம் கூட இல்லாமல் மொத்தம் புல்வெளி படர்ந்து இருந்தது. அந்த இடத்தில மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்க, பிகோவை நிறுத்த இடம் கிடைக்காது என்பது உறுதியாக எங்களுக்கு பட்டது. பல சினிமா பாடல்களில் கண்ட இடம் என்பதால் பெரிதும் வருத்தம் இல்லாமல், அடுத்து பைன் பாரஸ்ட் சென்றோம். கொடைக்கானலில் இருப்பதைப் போல் ஒரு அடர்ந்த பைன் மறக்காடு.

வெற்றிக் கூட்டணி 

நம் நாட்டில் எங்கும் இல்லாத ஒரு வகை மரத்தை, ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டில் இருந்து வரவழைத்து குளிர்ந்த மலைப் பிரதேசங்களில் அவற்றை வளர்த்து, ரயில் தடங்கள் அமைக்க பயன்படுத்திய அந்தப் பைன் மரங்கள் தற்காலத்தில் சுற்றுலா காட்சிப் பொருளாக உள்ளது. வந்ததிற்கு சில பழம்பொறிகளை உண்டுவிட்டு அடுத்து சூசைட் பாயிண்ட் நோக்கி நகர, அங்கு பாரா கிளைடிங் இருப்பதாக சில விளம்பரங்களைக் கண்டு ஆர்வத்துடன் சென்றோம். பிகோவை நிறுத்திவிட்டு, பாராச்சூட் தெரிந்த அந்த மலைக் குன்றின் மேல் வேகமாக ஏறினோம். மேலே ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் வெறிச்சோடி இருக்க, ஏறிய களைப்பில் பேசமுடியாமல் மூவரும் அப்படியே சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறினோம். நீரும் காரிலே இருக்க, வந்த வழியே திரும்பலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கோம் போது, கண்ணில் தென்பட்ட மூன்று வாலிபர்களிடம் நாங்கள் பாரா கிளைடிங் பற்றி விசாரிக்க அவர்கள் அடுத்து இருக்கும் மலையில் தான் அது இருப்பதை எங்களுக்கு சுட்டிக்காட்டினார். மேலும் இந்தப் பயணத்தில் எங்கள் மூவருக்கும் சேர்த்து ஆகும் செலவின் அளவிற்கு அதில் ஒருவரின் கட்டணம் என்று அவர்கள் சொல்லிய பின் அந்த திசை நோக்கி செல்வோமா என்ன.

வாகமானில் அடுத்து எங்கு செல்வதென்று அந்த வரைபடத்தை ஆராய்ந்து வேறு இடங்கள் இல்லாமல் நாங்கள் விழிக்கும் பொழுது மணி ஒன்று. அடுத்து மதிய உணவுதானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மீண்டும் சில பழம்பொறிகளை வாங்கிச் சுவைக்கும் பொழுதுதான் அந்த வரைபடத்தில் 'வாகமான் இடுக்கி மாவட்டம்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வர, 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் வரும் 'இடுக்கி' பாட்டு எனது  மண்டையில் ஒலிக்க 'நாம் ஏன் இடுக்கி செல்லக்கூடாது' என்று நான் கேட்க, பிரபாகர் 'எனக்கு புட்டும் கடலைக்கறியும் கிடைத்தால் போதும் எங்கு வேண்டுமானலும் செல்லலாம்', ரெஜித் 'எனக்கு எங்கனாலும் ஒகே',  என்று அவர்கள் இருவரும் உடனே சம்மதிக்க, இடுக்கி நோக்கி பிகோவை செலுத்தினோம். அந்த வினாடி நாங்கள் எடுத்த அந்த முடிவு தான் இந்த பயணத்தை எங்கள் மூவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பயணமாக மாற்றும் என்பது அந்த நொடி எங்கள் யாருக்கும் தெரியவில்லை.

                                                                                                                                   - பயணம் தொடரும்!

****************************************************************************************************************
அடுத்த பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி
****************************************************************************************************************

Friday, March 3, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா

****************************************************************************************************************
முந்தைய பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
****************************************************************************************************************
காரில் பயணம் செல்லும் பொழுது பலவித அனுகூலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பிரதிகூலமான பார்க்கிங் பிரச்சனை உண்டு. ஆடவருடன்  தங்கும்பொழுது விடுதியின் தரம் பெரிதும் இல்லாவிட்டாலும் பிகோவை பாதுகாப்பாக இரவு நிறுத்த இடவசதி கொண்ட விடுதியை தேனீ டௌனை நெருங்கியதுமே தேடத்தொடங்கினோம். மூவருக்குமே பரிட்சயம் இல்லாத நகரம், ஒரு விடுதியின் விளம்பரத்தை பின் தொடர்ந்து ஒரு குறுகிய சந்தினுள் பிகோ நுழைந்தது. அந்த விடுதி சற்று சிறியதாக தோன்றவே பார்க்கிங் வசதியை அலச நான் முதலில் சென்று பார்க்க, உளளே பத்து லாரிகளை நிற்கும் அளவு வசதி இருந்தது. எட்டு மணிநேர பயணத்திற்கு பின்பு  பிகோவிற்கு மட்டும் அந்த  ஒய்வு மிக அவசியமானதன்று வண்டியை பத்திரமாக கொண்டு வந்த ஓட்டுநர்களுக்கும் தான். கூகுள் மற்றும் OYO துணையின்றி ஒரு விடுதியில் தங்குவது இதுவே முதல் முறை என்றபொழுதும் சுத்தமான அறை மற்றும் சிக்கனமான கட்டணத்துடன் அன்றைய இரவு இனிதே முடிந்தது.

சூரியோதயத்துடன் விழித்து மூவரும், தேனீ கடந்து வழியில் ஒரு பேக்கரியில் காலை உணவை முடித்து கொண்டு கம்பம் நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோவை சென்றபொழுது கண்டது போலே இங்கும் பேக்கரியில் தேநீர் முதல் உணவு வரை சகலமும் கிடைத்தது. வட தமிழகத்தில் வளர்ந்த எனக்கு பேக்கரி என்றாலே கேக் மற்றும் பப்ஸ் கிடைக்கும் கடை என்றுதான் பரிட்சயம். கம்பத்தை கடந்து கேரள எல்லையை அடையத் தொடங்கியதுமே பசுமை கண்ணை ஈர்த்தது. லோயர் கேம்ப் கடந்ததுமே, தரை வழிப் பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தத மலைப்பாதை, எங்கள் முன் வளைந்து உயர்ந்து இருந்தது. மலை ஏறும் வழியில் தமிழ்நாடு மின் வாரியத்தின் பெரியார் நிலையத்தை கடந்து செல்ல குமுளி வந்த தமிழ்நாட்டுப் பேருந்துகள் வரிசையாக நிற்க, அங்கு இருந்த ஒரு சோதனைச் சாவடியை கடந்தவுடன் குமுளி எங்களை அன்புடன் வரவேற்றது. தமிழகத்தையும் கேரளாவையும் பிரிப்பது அந்த சாவடியின் சிறு கம்பம் தான். பறந்து விரிந்து இயற்கை எழில் கொஞ்சும் உலகில் மனிதன் செய்த அக்மகிரமங்களில் இந்த எல்லைப் பிரிவுகளும் ஒன்று.

கேரளா வந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கட்டனும் பழம்பொறியும் சுவைக்க வேண்டும். கட்டன் பால் இல்லாத தேநீர், பழம்பொறி பதமாக தேர்வு செய்யப்பட்ட நேந்திர வாழைப்பழத்தில் செய்யப்படும் பஜ்ஜி. அங்கு பழம்பொறி சற்று சுமாராகவே இருக்க அடுத்து எங்கு செல்வது என்று கட்டன் குடித்துக்கொண்டே அலசினோம். எத்தனை முறை அடி வாங்கினாலும் கவுண்டமணியிடமே திரும்பி செல்லும் செந்தில் போலவே மீண்டும் கூகிளிடம் சென்றால், அது 'அடேய் முட்டாள் உன் அருகிலேயே தேக்கடி இருக்கின்றது' என்று நகைத்தது. குமுளியில் இருந்து பத்து நிமிட பயணத்தில் தேக்கடியை அடைந்தோம்.

தேக்கடி 


அரசு விடுமுறை நாட்களில் எந்த ஒரு சுற்றுலா தளத்திற்குச் சென்றாலும் மக்கள் கூட்டம் பொங்கி வழிந்து அந்த இடத்தின் அமைதியை கலைக்கும் வழக்கம் தெரிந்தாலும், சொந்த கல்யாணத்திற்கே நாட்களை எண்ணி விடுமுறை கொடுக்கும் இந்த அலுவலக சூழலில், அரசாங்க விடுமுறைகளில் வேறு வழியின்றி பயணிக்கும் கட்டாயம் எங்களையும் தொடர்ந்தது. அங்கும் மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டிருக்க பிகோவை நிறுத்த இடம் கிடைக்க சற்று நேரமானது. படகுத் துறையை அடைந்த பொழுது ஏற்கனேவே ஒரு படகு சென்று விட்டதும் அடுத்த படகு வர இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பது சற்று ஏமாற்றம் தந்தாலும், 'ச்சீ இந்த ஏரில தண்ணியே இல்ல, போன வருஷம் சென்னைல வந்த வெள்ளமே அதிகம்' என்று பிகோவை நோக்கி நடந்தோம். வழியில் சில பயண முகவர்கள் எங்களை சூழ்ந்துகொண்டு, 'உங்கள் கார்களாலும் செல்ல முடியாத இடங்களுக்கு ஜீப்பில் கொண்டு சென்று வன விலங்குகளைக் காட்டுகிறோம்' என்று எப்பொழுதோ டிஸ்கவேரி சானலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி எங்களை அழைத்துச் செல்ல விலை பேசத் தொடங்கினர். சொந்த வாகனம் இருக்கும் போது வேறு வாகனத்தில் செல்ல எங்களுக்கு பெரியதொரு ஈர்ப்பு தோன்றவில்லை. எங்கள் ரெஜித்தின் வசீகர பேச்சில் சிக்கிய அந்த முகவர்கள் சில நிமிடங்களிலேயே உண்மைகளை கக்க, ஜீப் பயணம் தேவையற்றது என்று அவர்களே சொல்லிவிட்டனர்.

அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு எங்களது அடுத்த இலக்கு 'பருந்தும்பாறா'வாக நிர்ணயமானது. முழுவதுமே மலைப்பாதை, வழி கேட்க ஒரு ஆத்மா கூட இல்லாத பாதை என்பதால் அந்த கூகிள் அம்மணி காட்டிய வழியில் சென்றோம். வழியில் ஒரு பாலத்தை கடந்து பொழுது அங்கு பெருகி ஓடிக் கொண்டிருந்த ஆற்று  நீரைக் கண்டதும் பிகோவை ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, மூவரும் நீரை நோக்கி துள்ளி ஓடினோம். ஆடவராகப் பிறக்க நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று அகமகிழ்த்தபடியே அங்கு ஒரு ஆனந்தக் குளியல் அரங்கேறியது. தமிழகத்திற்கு வர மறுக்கும் முல்லைப் பெரியாரின் ஓர் கிளையில் கொண்ட குளியல் தந்த உற்சாகத்துடன் எங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம்.

ஆனந்தக் குளியல் அரங்கேறியது இங்கு தான் 
வழி நெடுவிலும், இருபுறமும் மனிதனின் ஊடுருவல் பெரிதும் இல்லாத அந்த இடங்களின் பசுமையான இயற்கை அழகு தந்த மயக்கத்தில் கூகிள் அம்மணியின் மேப் வழியே அந்த சாலையின் முடிவிற்கே வந்துவிட்டோம். ஆனாலும் அந்த அம்மணி எங்களை இடது புறம் திரும்பி எங்கள் பயணத்தை தொடர சொன்னது. இடதுபுறம் ஒரு வீடு மட்டும் தான் இருந்தது. அந்த அம்மணி பின் சென்று கெடுவது இது ஒன்றும் முதல் முறை அன்று. மீண்டும் வந்த வழியே சென்று அந்த அம்மணி காட்டிய மாற்றுப் பாதையில் செல்ல, சில அடிகளிலேயே அந்தப் பாதை கூழாங்கற்கள் சாலையாக மாறியது. ஒரு வாகனம் மட்டுமே செல்லக் கூடிய அந்த குறுகிய பாதையில், நாங்கள் போவது சரியான பாதைதானா என்ற அச்சத்துடனே பயணித்தோம். சில நிமிடங்களுக்கு பின் எங்களை ஒரு ஜீப் பின் தொடர சற்றே நிம்மதி கொண்டோம். அந்தப் பாதையின் வழியே ஒரு அழகியே குளம் எங்களுக்காகவே வடித்தது போல் தன்னந்தனியே அமைதியாக ஈர்த்தது. பிகோவை நிறுத்திவிட்டு அங்கு சில படங்கள் எடுத்திக்கொண்டிருக்க, ஜீப் மட்டுமே செல்லக் கூடிய பாதையில் பிகோ ஓட்டிவந்த சாகச வீரரர்களைக் காண அந்த ஜீப் ஓட்டுநரும் அங்கு நின்று, எங்களுக்கு பருந்தும்பாறா செல்ல வழியும்  தானும் அங்கு தான் செல்வதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்தக் குளம் 
 இந்த இடத்தில இருந்து நாங்கள் ,மூன்று மணியளவில் புறப்பட, மதிய உணவு உண்ணாத பசியில் காரில் இருந்த கனிகளை புசித்துக் கொண்டே எங்கள் பயணத்தை தொடர்ந்து பருந்தும்பாறாவை அடைந்தோம். எங்களைக் கண்டதுமே, எங்களுக்கு வழிகாட்டிய அந்த ஜீப் ஓட்டுநர் மிகவும் ஆனந்தப்பட்டார். பருந்தின் தலைபோல் ஒரு பாறை மட்டும் மலையின் உச்சியில் தனியே நீண்டு இருக்க இந்த இடத்திற்கு பருந்தும்பாறா என்ற பெயர் வந்ததோ? நமக்கு சாகசங்கள் என்றால் தான் மிக பிடிக்குமே, அந்த பருந்தின் தலைக்கு சென்று அங்கு சில செல்பிக்களை எடுத்க்கொண்டு, உயரத்தை கண்டு பருந்தின் தலைக்கு வர பின் வாங்கிய ரெஜித் எடுத்த புகைப்படங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டு, பருந்தின் தலையில் இருந்து மீண்டும் மேல் ஏறும் பொது தான் உணவு உண்ணாததான் விளைவு நன்றாகவே தெரியத்தொடங்கியது. நேராக அங்கு இருந்த கடைகளை நோக்கி செல்ல, அந்த மாலை நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது வேகவைத்த வள்ளிக்கிழங்கும் மீன் குழம்பும் தான். குளிர்ந்த வானிலையில் லேசான மழை சாரல் அடிக்க அந்த மீன் குழம்பும் கிழங்கும் அமிர்தம் போலவே எங்கள் பசியை ஆற்றியது.

பருந்தும்பாரா 


பிரபாகரின் கைவண்ணம் 

பருந்தும்பாறாவில் இருந்து வாகமான் சென்று இரவு தங்கி மறுநாள் வாகமன் சுற்றி பார்ப்பது என்று முடிவு செய்தோம். கதிரவன் மறைந்தபின் அந்த இருண்ட மலைவழிப் பாதை சற்று திகில் உணர்வையே கொடுக்கத்தொடங்கியது. வாகமான் வந்ததுமே இரவு தங்க எந்த விடுதிக்குச் சென்றாலும் 'அறைகள் இல்லை' என்றதே பதிலாக இருக்க, அரசாங்க விடுமுறை தினத்தில் மக்கள் படையெடுப்பால், அந்த குளிரில்  எங்கள்  இரவின் நிலை கேள்விக்குறியானது. குளிர் அதிகரித்துக் கொண்டிருக்க  இறுதியாக ஒரு ரிசார்ட்இல் விசாரிக்க அவர்கள் இருவரும் செல்ல நான் பிகோவில் காத்திருந்தேன். இங்கும் அறை கிடைக்கவில்லை என்றால் அந்த இரவு பிகோவில் அந்தக் குளிரில் தான் என்று நான் எண்ணிக்கொண்டிருக்க, தோல்வியுடனே அவர்கள் இருவரும் வந்தாலும், அவர்களிடம் இருந்த தீர்வு தந்த நம்பிக்கையில், அந்த இரவின் எங்கள் நிலை தெரிய பிகோவின் ஓட்டம் மலையின்  இருளில் தொடர்ந்தது.
                                                                                                                    - பயணம் தொடரும்!

****************************************************************************************************************
அடுத்த பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்
****************************************************************************************************************

Sunday, February 26, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்

பல நாட்களாக பிரபாகர், 'எங்காவது ஒரு நீண்ட பயணம் செல்ல வேண்டும்' என்று கேட்டுக்கொண்டிருக்க, ஆயுத பூஜை திங்கட் கிழமையில் அமைய, அந்த மூன்று நாட்கள் எங்காவது செல்வது என்று புதன் அன்று முடிவு செய்தோம். காரில் செல்வதால், மேலும் இருவர் வந்தால் செலவுச் சுமை சற்று குறையும் என்று நெருங்கிய நட்பு வட்டத்தில் ஆள் தேடினோம். பொறுப்பான குடும்பஸ்தர்கள் அழைப்பை மறுத்து விட, பிரபாகர் அவரது தம்பியும், எங்கள் அலுவலக நண்பரான ரெஜித்தும் வருவதாக சொன்னார். நன்கு பரிட்சயம் ஆகாதவர்களுடன் பயணம் செய்து ஏற்பட்ட சில கசப்பு அனுபவங்களை அவரிடம் சொல்லி சற்று தயக்கம் காட்டினேன். பிரபாகர்  எனக்கு அளித்த உறுதியில் தயக்கத்துடனே சம்மதித்தேன். 

பயணத்தின் மிக முக்கிய கேள்வி, எங்கு செல்வது? காவிரி பிரச்னை உச்சக்கட்டத்தில் இருக்க, கர்நாடகம் தமிழர் புக முடியாத அந்நிய பூமியாக இருந்த சமயம் அது. ஆந்திரா செல்ல இருவருக்குமே பெரிய நாட்டம் இல்லை.  நீங்கள் பதிவின் தலைப்பைக் கொண்டே இந்நேரம் இடத்தை யூகித்து இருப்பீர். ஆம், கேரளம் தான் நாங்கள் தேர்வு செய்த இலக்கு. சாலை மார்கமாக வெள்ளி மாலை சென்னையில் இருந்து தொடங்கி கேரளம் சென்று திங்கள் இரவு சென்னை திரும்பவேண்டும் என்பதை மட்டும் தான் தீர்மானித்தோம். அங்கு எங்கு செல்வது, எங்கு தங்குவது என்ற எந்த விதமான திட்டமும் வகுக்காமல் கார் போன போக்கில் முடிவு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். எந்த வித திட்டமும் வகுக்காமல் நான் சென்ற முதல் பயணம் இது என்பதனாலேயே இதை பதிவு செய்வதும் எனக்கு மிக அவசியமாக தோன்றியது.

எல்லாப் பயணங்களிலும் கணக்கு பார்த்து செலவு செய்யும் பொறுப்பு எனது என்பதால், நான் கண்ட மிகப் பெரும் செலவு குடி நீராக இருந்தது. முந்தைய ஒரு பயணத்தில் 25 லிட்டர்  குவளை தண்ணீர் சென்னையிலேயே வாங்கிச் சென்றதால் தண்ணீர் செலவு பெருமளவில் மிச்சமானது. இம்முறை சொந்தமாகவே ஒரு பத்து லிட்டர் மில்டன் குவளை ஒன்றை வாங்கிக் கொண்டேன். வெள்ளி மாலை அலுவலகத்தில் இருந்தே புறப்பட தீர்மானித்தோம். எந்த ஒரு பயணமானாலும் எவரேனும் கடைசி நிமிடத்தில் சுதப்பும் வழக்கம் இம்முறையும் நடந்தது. நால்வர் பயணம் மூவர் (நான், பிரபாகர் மற்றும் ரெஜித்)  பயணமாக மாறியது. வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணியளவில், புதிய பத்து லிட்டர் குவளையில் அலுவலக குளிர்ந்த நீரை நிரப்பிக் கொண்டு, பலவித கனிகள் மற்றும் நொறுக்குத் தீணிகளுடன், சிறுசேரியில் இருந்து கேரள தேசம் நோக்கி பிரபாகரின் பிகோ வில் எங்கள் பயணம் தொடங்கியது. 

இங்கு மூவருமே கார் ஒட்டத் தெரிந்தவர்கள் (நானும் டிரைவர் தான் :)) என்பதால் மாறிமாறி ஓட்டும் பொறுப்பை ஏற்று பயண அலுப்பை குறைக்க திட்டமிட்டுக்கொண்டு, GST சாலையை செங்கல்பட்டு சுங்கச் சாவடி தாண்டி பிடிக்க, திருப்போரூர் வழியே சென்று, நெடுஞ்சாலையை அடைந்த பின் எங்கள் காரின் ஓட்டம் ஒரே சீராக அமைந்தது. சில பல குடும்ப சிக்கல்கள் காரணமாக இங்கு வண்டி சென்ற வேகத்தின் அளவு பதிவு செய்யப்பட மாட்டாது. திருச்சி, திண்டுக்கல், தேனீ வழியாக கம்பம் சென்று, கம்பத்தில் இரவு தங்கி மறுநாள் காலை கேரளா எல்லையை கடப்பது எங்கள்  திட்டமாக இருந்தது. காரில் எறியதுமே பாட்டு போட்டுக்கொண்டு ,பாட்டுகளை மாற்றிக் கொண்டு போகும் வழக்கமான சாலை பயணமாக எங்களது பயணம் அமைய வில்லை. அலுவலக விஷயங்களில் பேசத் தொடங்கி அரசியல், சினிமா, விளையாட்டு, காதல் என பல கோணங்களில் எங்கள் உரையாடல் சுவாரசியமாக செல்ல, அந்த பாட்டுப் பெட்டியை சென்னை திரும்பும் வரை மூன்று நாட்களும் நாங்கள் பயன்படுத்தவே இல்லை என்பது எனக்கு இன்று நினைக்கும் பொழுது கூட  ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்ல கூகுள் அம்மணியின் துணையை நாடினோம். திருச்சியில் ஓட்டுநர் பொறுப்பு என்னிடம் மாற, அந்த அம்மணி காட்டிய குறுக்கு வழி, காமராஜர் ஆட்சியில் போடப் பட்டு அதன் பிறகு காணாமல் போன அந்த சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையை பிடிப்பதற்குள் பெரும்பாடானது. 'பெண்பிள்ளைப் பின் செல்லாதே' என்று பெரியவர்கள் சொல்லியது எங்களுக்கு அங்கே உரைத்திருந்தால், மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கி இருக்கமாட்டோம். திண்டுக்கல் புறவழிக் சாலையை அடையும் பொழுது மணி பத்து. வழியில் இருந்த திண்டுக்கல் தலப்பாகட்டியில் இரவு உணவை முடித்து, மீண்டும் பிரபாகர் ஓட்டுநர் பொறுப்பேற்க, தேனீ நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இரவு வேளை மற்றும் பரிட்சயம் ஆகாத சாலை என்பதால் கூகுள் அம்மணியின் துணையை மீண்டும் நாட, சாலை நேரே விசாலமாக இருக்க, அவள் எங்களை மாற்றுப் பாதையில் திசை திருப்பி, தலையை சுற்றி மீண்டும் தேனீ சாலையில் எங்களைச் சேர்த்தாள்.  நடுச்சாமம் நெருங்கிக்கொண்டிருக்க, அன்று இரவு தேனீயிலேயே ஒய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் காலை கம்பம் நோக்கி தொடரலாம் என்று முடிவு செய்துகொண்டிருக்க, எதிரில் ஒரு பேருந்து சற்று வேகம் குறைக்க, எங்கள் பிகோவும் அதன் பின் நிற்க, அந்த காவல் சோதனைச் சாவடியில் இருந்த காவலர் எங்கள் வண்டியை ஓரம் நிறுத்த சைகை செய்தார்.

எங்களிடம் முறுக்கு மட்டுமே இருக்க, பயமின்றி காரை நிறுத்தினோம். அந்த அதிகாரி ஆவணங்களை கேட்க, எங்கள் முதல் சோதனை தொடங்கியது. வழக்கமாக இருக்கும் RC போல் இல்லாமல் தன்னிடம் ஸ்மார்ட் கார்ட் இருப்பதாக என்னிடம் பிரபாகர் முன் சொல்லிய நியாபகம், ஆனால் நான் அதைப் பார்த்தது இல்லை. டேஷ் போர்ட், அட்சய பாத்திரம் போல், கார் வாங்கிய முதல் மாதத்தில் இருந்து பல ரசீதுகளை எடுக்க எடுக்க சுரந்துக் கொண்டே இருந்தது. இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து ரசீதுகளையும் அலசிக் கொண்டு அந்த RC கார்டைத் தேட அந்த காவலர் சற்று பொறுமை இழக்கத் தொடங்கினார். பிரபாகர் எப்பொழுதும் காவலரிடம் எதற்கும் மாற்றுவதில்லை, இதுநாள் வரை அவர் அரசியல் பிரமுகர்கள் போல் கறுப்புத் திரையுடன் தான் தன் பிகோவை ஒட்டிக்கொண்டிருக்கின்றார் என்பது பொறாமைக்குரியது. நேரம் கடக்க கடக்க ரசீதுகள் குறைந்த பாடில்லாததால், எனக்கு அந்த கார்ட் காரில் இருக்கும் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கி, காவலரை எப்படி சமாளிப்பது என்ற எண்ண அலைகள் ஒடத் தொடங்கிய பொழுது,   'வெற்றி வெற்றி' என்று ஒரு வழியாக அந்தக் கார்டை அவர் கண்டெடுக்க,  இருவரும் காரை விட்டு இறங்க, ரெஜித் காரில் இருந்த ஆரஞ்சு பழத் தோலை வெளியே எறிந்தபடி இறங்கினார். 

ஸ்மார்ட் கார்டுக்கு கேள்வி எழும் என்று நான் நினைத்தேன், ஆனால் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி கொண்டு 'வண்டில சரக்கு இருக்கு தன' என்று வினவினார் அந்த சோதனைச் சாவடியின் உயர் காவல் அதிகாரி. மூவரும் உடனே மறுத்தோம். 

'நீங்களா சொல்லிட்டா நல்லது, நாங்க எடுத்தா பிரெச்சனை. உண்மையா சொல்லுங்க' என்று சற்று அதிகாரத்துடன் வினவினார்.

'எங்க யாருக்கும் அந்த பழக்கமே இல்ல. நீங்க தாராளமா செக் பண்ணுங்க' என்றதும் ஒரு காவலர் கையில் டார்ச் உடன் காரை நோக்கி விரைந்தார். கதவை திறந்தவுடன் வந்த வாசனை அவர் மூளைக்கு தீணி போட, 'நல்லா வாசனை வருது, உண்மையா சொல்லிடுங்க, வண்டிய ஸ்டேஷன்கு கொண்டுபோன நீங்க தான் மாட்டுவீங்க'  என்று கடுகடுத்த முகத்துடன் கூறினார் அந்தக் காவலர். 

எங்கள் மடியில் கனமில்லை அதனால் பயமுமில்லை, சிரித்துக் கொண்டே ' அது ஆரஞ்சு பழம் வாசனை' என்றேன். 

அவர் அதை நம்பும் மனநிலையில் இல்லாததால் தன் சோதனையை தொடர்ந்தார். மூளை முடுக்குகள், சீட் அடி என எல்லா இடத்திலும் அலசியும் எதுவும் சிக்காத கோவத்தில், எங்கள் தண்ணீர் குவளையையும் திறந்து குடித்து பார்த்தார். மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த அவர், 'இந்த ஆளு இறங்கறப்பவே பாட்டிலை வெளியே போட்டார் சார்' என்று ரெஜித் மீது குற்றம் சாற்றி விட்டு, சாலையின் ஓரம் இருந்த குப்பைகளை டார்ச் அடித்து ஆராய்ந்தார். நாங்கள் உயர் அதிகாரியிடம் அப்படி ஒன்றும் நடக்க வில்லை என்று விளக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் அந்த போலீஸ்க்கார்  வேறு எதாவது பாட்டிலை கொண்டுவந்து எங்கள் மீது திணிப்பாரோ என்ற பயமும் உறுத்திக்கொண்டே இருந்தது.

சாலையில் எதுவும் சிக்காமல் மீண்டும் கார் டிக்கியை நோக்கி வந்து, எங்கள் துணிப்பையினுள் கையை விட்டு துராவிய அவருக்கு எங்கள் உள்ளாடைகள் தான் சிக்கியது. 

'வண்டியை ஸ்டேஷன் கொண்டு போயிடலாம் சார்' என்று கோவமாக சொல்லிவிட்டு அடுத்த காரை மடக்கச் சென்றார்.   

இப்பொழுது அந்த உயர் அதிகாரி எங்களை விசாரிக்கக் தொடங்கினார். 'கார் யாருடையது ?' , 'எங்க வேலை பார்க்கறீங்க ?' ' எங்க இருந்து வரீங்க' 'எங்க போறீங்க', இப்படியே 'இன்சூரன்ஸ், RC , லைசென்ஸ்' என்று அவர் கேட்டது எல்லாம் நாங்கள் சரியாக கொடுக்க மண்டைடை சற்று சொறிந்துவிட்டு, அவர் 'பொல்லுஷன் ' என்றவுடன் நாங்கள் 'ழே' என முழித்ததைக் கண்டு அவர் முகம் பிரகாசமானது. சாமி படத்தில் விவேக் நடித்த நகைச்சுவை காட்சி தான் நினைவிற்கு வந்தது.     

'இதற்குத் தானே ஆசை பட்டிங்க போலீஸ்க்கார் ' என்று என்னுள் எண்ணிப் புன்னைகைத்தேன்.

'வெய்யில் பணில வேல பார்க்குறோம் நைட் டியூட்டி வேற, சுற்றுலா போறீங்க , ஏதாவது கொடுத்துட்டு போங்க' என்று இளகிய குரலில், 'டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் சார், ஏதாச்சு பார்த்து கொடுங்க' என்ற உள்ளதை அள்ளித்தா படத்தின் வசனம் தோனியில் கேட்டார்.     

உலகில் நான் கண்ட பல விசித்திர மனிதர்களுள் ஒருவர் தான் ரெஜித். இவரிடம் ஒரு நிமிடத்திற்கு மேல் யார் பேசினாலும் , அவர்களை தன் புன்னகை கலந்த சர்க்கரை பேச்சில் வசீகரித்து, நட்பு வலையில் சிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர். எங்கள் பயணத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக, ஒரு மலையாளம் அறிந்த லோக்கல் கையாக அவர் செய்த செயல்கள் அடுத்த பதிவுகளில் ஏறாளம்.

எங்கள் மூவரில் மூத்தவராக அவர் விளங்க, அந்த உயர் அதிகாரியிடம் கை கொடுப்பது போல் சில காந்தி நோட்டுகளை கை மாற்றினார். ஆவணங்களை திரும்ப பெற்றுக் கொண்டு காரை நோக்கி வந்த பொழுது, தாண்ணீர் குவளையின் குழாய் சரியாக மூடாததால் தண்ணீர் பின் சீட் முழுவதும் சிந்தி இருந்தது. 

எங்கள் பயணம் சிறப்பாக அமைய காவல் தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்தி விட்டு, தேனீயை நோக்கி நாங்கள் தொடரும் பொழுது மணி 12:45.  

          பயணம் தொடரும்!   

******************************************************************************************************************
அடுத்த தொடர் பகுதியை படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா

******************************************************************************************************************
    

Friday, August 16, 2013

ஊர் சுற்றல் - ஆலம்பரை கோட்டையில் கூட்டாஞ்சோறு

எனது நண்பன் ஒருவன், தன் வாழ்வில் காண வேண்டிய இடங்கள் என்று ஒரு பட்டியல் வைத்திருந்தான். அதில் 'ஆலம்பரா கோட்டை' என்ற பெயரை பார்த்தவுடன் பயங்கர அதிர்ச்சியுடன் 'டேய்! இது எங்க ஊருடா!' என்று பெருமை கொண்டாலும் அருகில் இருக்கும் ஒன்றின் பெருமையை பற்றி அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று ஆதங்கம் கொண்டேன். கோட்டை முற்றிலும் இடிந்து, வெறும் மதில் சுவர் மட்டும் மிஞ்சி இருக்கும் அந்த கோட்டையின் வரலாற்றை அறிய என் ஊரில் பலரை விசாரித்தேன். 


நவாப் தோஸ்த்(Doste) அலி கான் என்பவரின் ஆளுகைக்கு உட்பட்டு, வர்த்தக துறைமுகமாக இருந்த இந்த கோட்டை பின்னர் பிரெஞ்சு கவர்னர் Dupleix நவாபுக்கு செய்த உதவிக்காக அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு, பிரெஞ்சு ஆங்கிலேயரிடம் தோல்வி அடைந்த பின் ஆங்கிலேயரால் இந்த கோட்டை இடிக்கப் பட்டது என்ற செய்தி தான் எனக்கு கிடைத்தது. இது விக்கிபீடியாவில் இருக்கும் அளவு செய்தியே. நமது வரலாறு சிறந்த முறையில் பாரமரிக்கப் படாததுக்கு, இதுவும் ஒரு உதாரணம். 

இந்த கோட்டையின் மத்தியில் ஒரு சமாதி உண்டு, கடலில் கல்லறைப் பெட்டியில் மிதந்து வந்து இங்கு கரை சேர்ந்த ஒரு பெண்ணின் சடலத்தை இங்கு அடக்கம் செய்ததாக என் தாத்தா என்னிடம் சொல்லியதுண்டு. சமீபத்தில் இங்கு நிறைய சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. 'பிதாமகன்' சுடுகாடு காட்சி, மற்றும் 'தீராத விளையாட்டு பிள்ளை' இடைவேளைக்கு முந்தைய காட்சி போன்ற வரலாறு மட்டுமே, உள்ளூர் வாசிகளான எங்களுக்கு பரிட்சயம். 


கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தை கடந்து ஒரு முப்பது நிமிட பயணத்தில் வரும் கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த கோட்டையை அடைய சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு கடற்கரையை நோக்கி செல்ல வேண்டும். அதே கடப்பாக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் வருவது என் கிராமம், சேம்புலிபுரம். எனது கிராமமான சேம்புலிபுரதில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கோட்டையில் தான், என் சிறுவயதில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு, குடும்பத்துடன் வந்து, கடல் உணவுவகைகளை சமைத்து உண்போம். நாங்கள் அப்படிச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது, இன்றோ மாட்டு வண்டிகளும் இல்லை, கூட்டுக் குடும்பமும் இல்லை. 

என் அலுவலக நண்பர்களுடன் ஒரு நாள் பயணமாக ஏன் இங்கு செல்லக் கூடாது என்று என்னுள் எண்ணம் தோன்ற, நாமே அங்கு சென்று சமைக்கலாம் என்று மற்றவர்கள் யோசனை கூற, ஆகஸ்ட் 11 என்று தேதி முடிவானது. கடல் உணவுகள் சமைப்பதை தவிர்த்து, கோழி மட்டும் சமைப்பது என்று முடிவானது. நாட்டுக் கோழி barbeque முறையில் சுட்டு சமைப்பது என்று முடிவு செய்து, முன்தினமே இரண்டு கோழிகளை கொன்று, மஞ்சள் பூசி, தோலுடன் நெருப்பில் சுட்டு, மாசாலா கலவை சேர்த்து, குளிர் சாதனப் பெட்டியில் 10-08-2013 அன்று நள்ளிரவு குடியேறியது.

அடுத்த ஐடெம் சிக்கன் லாலிபாப். இந்த raw லாலிபாப் நான் முதலில் வாங்கியது புதூர் சுகுனா சிக்கன் கடையில் தான், தாம்பரம் வந்த பின் இந்த லாலிபாப் வாங்க பம்மல் வரை சுமார் பதினான்கு கிலோ மீட்டர் சென்று வருவது வழக்கம். அவர்கள் மசாலாவுடன் தந்தாலும், பச்சையாக வாங்கி அதில் நம் கை பக்குவத்துடன் மசாலா சேர்த்து, சமைத்து உண்ணும் சுகமே தனி. ஆனால் அந்த சுகுனா கடைக்கு இம்முறை சென்ற பொழுது அங்கு பச்சை லாலிபாப் விற்பதை நிறுத்திவிட்டதாகச் கூறினர். ஏமாற்றத்துடன் கேம்ப் ரோட் திரும்பி 'Dove White Proteins' என்ற கடையில் தேவையான அளவு ஆர்டர் செய்தேன், மறு நாள் காலை தருவதாக கூறினர். 

பயண நாள் காலை ஆறு மணிக்கு சென்றால், லாலிபாப்பாக மாறாமல், அது wings ஆகவே இருந்தது. நேரமின்மையால் அப்படியே வாங்கிக்கொண்டு, பத்து பேர் கொண்ட எங்கள் குழுவின் பயணம் துவங்கியது. நேராக என் கிராமத்துக்குச் சென்று காலை உணவை முடித்து விட்டு, தேவையான பாத்திரங்கள், மற்றும் விறகுகளை எடுத்துக் கொண்டு ஆலம்பரை கோட்டையை நோக்கிச் சென்றோம். சீருந்து போகும் தூரம் வரை சென்று, பின்னர் நடந்து கோட்டையை கடந்து, சமைக்க இடம் தேடி, கோட்டையின் தெற்கே சென்றோம்.



சவுக்கு மர நிழல்களுக்கு நடுவில் அருமையான இடம் கிடைக்க, மூன்று அடுப்புகள் அமைத்து, எங்கள் வேலைகளைத் துவங்கினோம். ஒரு அடுப்பில் சாதம் தயாராக, மற்ற அடுப்பில் நாட்டுக் கோழி சுட ஆரம்பித்தோம். வெறும் குச்சிகளை மட்டுமே வைத்து சுடுவதில் சற்று சிரமம் இருக்க, கம்பி போல் இரும்பில் ஏதாவது வாங்க ஊருக்குள் இருவர் மட்டும் சென்றோம். தோட்டத்திற்கு வேலி அமைக்கும் வலைக் கம்பியில் அரை அடி மட்டும் வட இந்திய சேட்டுடன் போராடி வாங்கி, அதை வைத்து அடுப்பை மூடி, அந்த வலையின் மேல் கோழியை வைத்து நெருப்பில் சுட்டு, சுட சுட இரண்டு கோழிகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. கோழியை நெருப்பில் சுட்டு உண்பது இதுவே முதல் முறை என்றாலும் அந்த சுவையை இப்பொழுது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது.

 எங்கள் Barbeque அடுப்பு 
ஒருவர் மட்டும் சைவம் என்பதால், முதலில் எலுமிச்சை ரசம் தயாரானது. அதன் பின், அதே கடாயில் மசாலா கலந்த சிக்கன் விங்க்ஸ் எண்ணையில் பொறிக்கப் பட்டது. உணவு சாப்பிடும் போது, இது மட்டுமாவது இருக்க வேண்டும் என்பதனால், இதை நாங்கள் உடனுக்குடன் சாப்பிடவில்லை. மீதம் இருந்த மசாலா மற்றும் ரெண்டு துண்டு நாட்டு கோழி வைத்து ஒரு குழம்பு செய்தோம், அதே கடாயில் முட்டை பொறியில் செய்து, இரண்டு மணிக்கு எங்கள் சமையல் முடிந்தது.


நாட்டுக் கோழி குழம்பு + சிக்கன் விங்க்ஸ் 
வங்கக்கரை ஓரம், உப்பு காற்று வீச, சவுக்கு மர நிழலில், மெத்தை போன்ற சுகம் தரும் கடல் மணலில்,கும்பலாக அமர்ந்து ஒரு பாத்திரத்தில் அனைவரும் உண்டு சுவைத்தோம். நாட்டுக் கோழி குழம்பு,எலுமிச்சை ரசம், முட்டை பொறியல், சிக்கன் விங்க்ஸ், தயிர், வடித்த சாதம் இவைகளுடன் முன்பு காலியான barbeque சிக்கன். எல்லா உணவு வகைகளும் சுவையாக தயாரானதில் எங்களுக்கே ஆச்சரியம் தான். நாட்டுக் கோழி சூட்டைத் தணிக்க, தயிர் உண்டு, மீதம் இருந்த ரசத்தை குடித்து எங்கள் மத்திய உணவு இனிதே முடிந்தது.

அமைதியான கழிவெளி 
கோட்டைக்கு அருகில் இருக்கும் கழிவெளி (backwaters) அரை அடி ஆழம் மட்டுமே, அந்த நீரில் ஒரு நடைப் போட்டு, ஆழமான பகுதி வரை சென்றோம். அந்த ஆழமான பகுதிக்கும் கடலுக்கும் இடையில் ஒரு சின்னத் தீவு போல் மணல் பரப்பு அமைந்திருக்கும் காட்சி நம் மனதை கொள்ளை கொள்ளும் (பதிவின் முதல் இரண்டு படங்கள் ). அங்கு இருக்கும் மீனவர்களிடம் காசு கொடுத்தால், அவர்கள் படகில் நம்மை அங்கு கொண்டு செல்கின்றனர். பின்னர் வந்த வழியே திரும்பி, பழைய ஊர் வழி சென்று கடற்கரையில் குளித்து, அந்த ஈரத்துடன் வீடு திரும்பினோம். 

அந்த அப்பாவி குட்டிப்  பையன் நான்தானுங்க 

'என்னடா! எதோ கோட்டையை பற்றி எழுதியிருக்கான் ஆனா கோட்டையை ஒரு படத்தில் கூட காணவில்லையே' என்று தேடுபவர்களுக்கு, ஆலம்பரை கோட்டை அனுபவத்தை பற்றி, படங்களுடன், கோவை நேரம் எழுதிய பதிவு : ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம்

Friday, July 19, 2013

ஊர் சுற்றல் - திருநெல்வேலி ராமில் சிங்கம் 2

ஞாயிறு மாலை தனுஷ்கோடியில் இருந்து மதுரை வழியாக, ஆனந்தக் குளியலை முடித்து விட்டு நெல்லை திரும்பிய நாங்கள், வண்ணாரப் பேட்டையில் இறங்கி, நெல்லையின் தெருக்களை உலா வரத் தொடங்கினோம். உலாவில் புறாக்கள் கண்ணில் சிக்கா விட்டாலும் நல்ல சாலையோர உணவுகள் சிக்கின. 

வ.உ.சி மைதானம் அருகில் இருக்கும் கையேந்தி பவன்களை நோக்கி படையெடுத்தோம். முதலில் சுவைத்தது பிரட் ப்ரைதான், ஒரு பிரட்டை முக்கோண வடிவில் பாதியாக வெட்டி, அதன் நடுவில் உருளை கிழங்கு கலந்த மசாலாவை வைத்து பொறித்திருந்தனர். சூடாக சுவைக்க அருமையாக இருந்தது. முட்டை காளான் என்று ஒரு ஐடெம் இருப்பதாக கூறினர், நான் இதுவரை சென்னையில் வெறும் காளான் மட்டும் தான் சுவைத்ததுண்டு, இதையும் சுவைக்கலாம் என்று ஆர்டர் கொடுத்தேன். என் நண்பன் முட்டை பூரி ஆர்டர் செய்தான். இரண்டிலும் உப்பும் மசாலாவும் சற்று குறைவுதான் என்றாலும் பசியின் விளைவால் அந்த பிளேட் சில நொடிகளில் மாயமானது. 

என் நண்பன் சூப் குடித்தே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று, ஆட்டுக்கால் சூப் உடன் ஈரலையும் சேர்த்து உள் இறக்கினான். மற்ற நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு குல்பி வாங்கி சூட்டை தனித்து, பன்னீர் போஞ்ச் தேடி பாளையங்கோட்டை நோக்கி சென்றோம். நெல்லை ஜங்ஷனில் இருந்து பாளையங்கோட்டை ஐந்து நிமிட பேருந்து பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு நெல்லை சென்றிருந்த பொழுது தான் முதல் முறை சுவைத்தது இந்த பன்னீர் போஞ்ச். Love at first sip! எளிதாக சொல்லவேண்டுமானால் நீருக்கு பதில் பன்னீர் சேர்த்து உருவாகும் எலுமிச்சை ஜூஸ். ஒன்றுக்கு இரண்டாக நான் அருந்தியதை வட நாட்டு நண்பர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர். பாளை மார்க்கெட் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரூட்ஸ் & ஜூஸ்' என்ற கடை தான் என் நெல்லை நண்பனும் நானும் உங்களுக்கு பரிந்துறைப்பது. 

பயணத்தை தொடங்கும் முன், நம் கோவை ஆவி, ஆவி பறக்க சிங்கம்-2 படத்துக்கு எழுதிய விமர்சனத்தைப் படித்தேன். ஆவியின் சிங்கம்-2 விமர்சனம். மனதில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே பயணத்தை தொடர்ந்தேன். என்னுடன் வந்த சென்னை நண்பனும் என் கருத்தை வழிமொழிய, என் நெல்லை நண்பன் மட்டும், வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தான். முதல் காரணம் அவனுக்கு படத்தின் கதை தெரிந்துவிட்டது, படத்தை திரையரங்கில் பார்க்க எதுவும் இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டிருந்தான். இரண்டாவது காரணம், பொதுவாக முப்பது ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட் மூன்றாவது நாள் என்பதால் 150, 200 என விற்கப்படும் அபாயம். 
              
எங்கள் பிடிவாதத்தால் அவனை வலுக் கட்டாயமாக கடத்திக் கொண்டு சிங்கம்-2 காண ராம் திரையரங்கம் நோக்கி புறப்பட்டோம். ஆட்டோவில் செல்லாம் என்று முடிவு எடுத்து, ஒரு ஆட்டோவை மடக்கினோம். என் நெல்லை நண்பனின் வீடு இருப்பது, பாளை- தெற்கு பஜார்- சிவன் கோவில் தெரு, அங்கிருந்து ராம் திரையரங்கம் சுமார் எட்டு கிலோ மீட்டருக்கு கூடுதலான தொலைவிலேயே தான் இருக்கும்.நாங்கள் மடக்கிய ஆட்டோக்காரன் எங்களிடம் கேட்டது நூறு ரூபாய் மட்டும். சின்ன ஆட்டோ கூட இல்லை, பெரிய மஞ்சள் நிற  ஷேர் ஆட்டோ. நெல்லை ஆட்டோ ஓட்டுனர்களே நீங்கள் சென்னை ஆட்டோ அண்ணாத்தைங்களிடம் டியுஷன் படிக்க வேண்டும். 

முப்பது ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய் கொடுத்து வாங்க வைத்த எங்களைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்திய நண்பனின் வயிற்றை நிரப்ப, உணவகம் தேடி ஜங்ஷன் நோக்கி நடந்தோம். நெல்லையில் இருக்கும் பல 'ருசி' என்ற பெயர் கொண்ட உணவகங்களில் முதலில் வந்த ஒன்றில் உணவு அருந்திவிட்டு, சிங்கத்தை காண திரையரங்கம் திரும்பினோம்.

தமிழ் தெரிந்து, எந்த வித கொடுமையையும் தாங்கும் உறுதி கொண்ட நாங்கள் நால்வர் மட்டும் ராம் திரையரங்கத்தினுள் மற்ற நெல்லை வாசிகளுடன் நுழைய,உள்ளிருந்த கொசுக்கள் எங்கள் காதுகளில் ஒய்யாரமிட்டு வரவேற்றன. முதல் முறையாக ஒரு திரையரங்கினுள் லேசெர் ஷோ கண்டது இங்குதான். விளம்பரங்கள் தொடங்கும் முன் ஐந்து நிமிட லேசெர் ஷோவை கொசுக்களின் கடியுடன் ரசித்தோம். பின் சிங்கம் தொடங்க, திரையில் சூர்யா தோன்றும் காட்சியில், ஒரு பக்கம் விசில் பறந்தாலும், மறு புறம் திரையின் அருகில் சுவரில் இரு புறங்களிலும் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று வண்ணங்கள், டிஸ்கோ போல் மின்னின.

இந்த வண்ண மின்னல்கள், படத்தில் குத்து பாடல்கள் வரும் போதும், பஞ்ச் வசனங்கள் வரும் போதும், திரை அருகில் சுவரில் தோன்றி மறைந்து எங்களை ஆச்சரியப் படுத்தியது. படத்தில் இருக்கும் ஒரு சில கவர்ச்சிகளை எனது முன் சீட்டில் இருந்த மாமிச மலை மறைக்க, அவனில் இருந்து வலது புறம் நான்காவது சீட்டில் இருந்த ஒருவர் விட்ட குறட்டை சூர்யாவின் வசனங்களுடன் போட்டியிட்டது. என்னுடன் வந்த ஒரு நண்பன் படம் முடிந்தவுடன், 'சூர்யா ஏன் இவன அர்ரெஸ்ட் பண்ணான்?' என்று கேட்ட பொழுது தான் தெரிந்தது நம்ம பையன் குறட்டை இன்றி தூங்கும் திறமைசாலி என்று.

இரண்டு நாட்கள் தொடர் பயணங்களுக்கு பின், திங்கட் கிழமை மதியம் ஒரு மணிக்கு சூரியனுக்கு குட் மார்னிங் சொல்லி விழித்தோம். நேராக பாளை மார்கெடில் இருக்கம் ஒரிஜினல் ருசிக்கு சென்று, கோழி, ஆடு, காடை முதலிய ஜீவன்களுக்கு சாப விமோட்சனம் கொடுத்து விட்டு, பயணத்தின் முக்கிய காரணமான அல்வாவை தேடி சென்றோம். நெல்லை எக்ஸ்பிரஸ்சை பிடிக்க வேண்டும் என்பதால், இருட்டு கடை செல்ல முடியவில்லை, ஜங்ஷன் அருகில் இருக்கும் பல 'சாந்தி ஸ்வீட்ஸ்' கடைகளில் நெல்லை நண்பன் உதவியுடன் ஒரிஜினலை கண்டு பிடித்து, ஐந்து கிலோ வாங்கி, எதிரில் இருந்த லக்ஷ்மி ஸ்வீட்ஸில் பால்கோவா வாங்கிக் கொண்டோம்.

வழக்கம் போல் பெயர் பட்டியல் தந்த ஏமாற்றத்துடன், சிங்கார சென்னை நோக்கி விரைந்த நெல்லை எக்ஸ்பிரஸில் அல்வாவையும்,ரயிலில் வாங்கிய கோவில்பட்டி கடலை மிட்டாயையும் ருசித்துக் கொண்டே சென்னை திரும்பினோம். அடுத்த பதிவில் பார்டர் பரோட்டவுடன் சேர்ந்து ருசி பரோட்டாவும் உங்கள் நாவிற்கு விருந்தாகும் என்பதை அன்புடன் கூறி விடைபெறுகிறேன்.

*********************************************************************************************************
பதிவர் திருவிழா தேதி மற்றும் இடம் அறிவிப்பு : இங்கு சொடுக்கவும்
*********************************************************************************************************

Wednesday, July 17, 2013

ஊர்சுற்றல் - மெட்ராஸ் டு தனுஷ்கோடி via குற்றாலம்.

இதுவரை அரை ட்ரௌசருடன் பயணம் செய்த நான் (டெல்லி வரை நம்ம ட்ரௌசர் போய் இருக்கு), முதல் முறை முழு கால் சட்டையுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் என் பயணத்தை தொடங்கினேன். எப்பொழுதும் தனிமையில் பயணிக்கும் எனக்கு துணை வரும் சுஜாதாவை இம்முறை நிராகரித்தேன், என்னுடன் என் நண்பன் வருவதால், அவன் எழும்பூரில் ரயில் ஏறி தன்னிடம் அடையாள அட்டை இல்லாததால், என் வருகைக்காக TTEயுடன் ஆவலாக காத்திருந்தான். அந்த ரணகளத்தில் கூட, பெயர் பட்டியலை 'F' 20 டு 25 க்காக ஆராய்ந்த எனக்கு ஏமாற்றம் தான். அது எப்படி சார் படத்துல மட்டும் நல்ல அழகான அக்காங்க எல்லாம் ட்ரைன்ல வர்றாங்க, நிஜத்துல வெறும் ஆன்ட்டிக்களும் பாட்டிக்களும் தான் வராங்க.

தனுஷ்கோடி வங்காள வரிகுடா
பயணக் குழு
காலை ஒன்பது மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சந்திப்பில் முதல் பிளாட்பாரத்தில் தரை தட்டியது. நண்பன் வீடு சென்றவுடன் தான் தெரிந்தது நான் அதை மறந்தது. நீங்க எல்லா பயணத்திலும் எதையாவது மறக்கலாம், ஆனால் நான் என்னுடைய எல்லா பயணத்திலும் ஒன்றை மட்டும் தான் மறப்பது வழக்கம். Tooth brush! அங்கிருந்து கிளம்பி நெல்லை ஜங்ஷன் அருகில் இருக்கும் பாரதி பவனில் சிற்றுண்டி முடித்து விட்டு, மணி முத்தாறு அருவி நோக்கி பயணித்தோம். சென்ற ஆண்டு இதே நேரத்தில் மணி முத்தாறு சென்றிருந்த சமயம் எங்க வீட்டு ஷவரில் வருவதை விட குறைவான நீர் அருவியில் வழிந்தது பெரும் ஏமாற்றம், பின் வண்டியை பான தீர்த்த அருவி நோக்கி செலுத்தினோம்.இம்முறை மணி முத்தாறு ஏமாற்றினால் செல்ல பான தீர்த்தமும் இல்லை என்ற அச்சத்துடன் தான் சென்றோம். புலிகளை மனிதர்களிடம் இருந்து காக்க அது மக்கள் பார்வையில் இருந்து மூடப்பட்டதாக கேள்விப்பட்டேன்.


மணி முத்தாறு அருவி - சென்ற ஆண்டு
ஓட்டுனர் அருகில் நான் தான் இருந்தேன், திடீரென்று 'தண்ணி வச்சிருந்தா குடிசிடுங்க தம்பி' ஏன் இவர் இப்படி சொன்னார் என்று யோசிப்பதற்குள் 'செக் போஸ்ட்ல பாட்டில் பார்த்தா வாங்கிட்டு தர மாட்டாங்க' என்றார். நாங்கள் எல்லோரும் அக்மார்க் தங்க கம்பிகள்..சி.. தம்பிகள் என்று புரியவைத்துவிட்டேன். செக் போஸ்டில் எங்கள் பைகளை ஆட்டி ஆட்டி சோதித்த காவலரின் திறமையை கண்டு வியந்தேன்.

மணி முத்தாறு அருவி - இம்முறை
மணி முத்தாறு இம்முறை ஏமாற்ற வில்லை, அருவியில் நீர் நன்றாக கொட்டியது. நாகலாபுரம், கோனே என்று தனிமையில் அருவிகளை ரசித்து குளித்த எனக்கு அந்த கூட்டத்தில் கொஞ்சம் இயல்பாக இருக்கமுடியாதது வருத்தம்.

அங்கிருந்து குற்றாலம் நோக்கி புறப்பட்டோம், பழைய குற்றாலம் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அங்கு சென்றோம், நீர் பெருக்கெடுத்து ஓட, மக்கள் கூட்டமும் அலை மோத, குளிக்க லைன் நிற்பதைக் கண்டு நொந்து, போட்டோவாச்சு எடுக்கலாம் என்று சென்றால், காவல் துறை விரட்டியது.

பழைய குற்றாலம்
எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு லைனில் நின்று குளிக்க சென்ற என் நண்பன், அவன் அருகில் இருந்த குடிமகன் கத்த, காவல் துறை தடியால் இவனை அடிக்க ஓடி வந்துவிட்டான். இப்படி வரிசையில் நின்று, சில நிமிடங்கள் மட்டுமே குளிக்க முடிவதற்கு என்ன காரணம், மக்கள் தொகை பெருக்கமா இல்லை வெளி ஊர்களில் இருந்து குற்றாலத்தின் மேல் என்னைப் போல் மோகம் கொண்டு வரும் மக்களா?

பழைய குற்றாலம்
அங்கிருந்து ஐந்தருவி சென்றோம் , மாலை ஆறு மணி தாண்டியதால் கூட்டம் குறைவு, லைன் இல்லை என்று நிம்மதியாக குளிக்கச் சென்றேன். என்ன ஒரு அடி! அடிச்சது போலீஸ் இல்லைங்க, அந்த அருவி தான், குளிர்ந்த தூய்மையான நீர், 'குளிச்சா குற்றாலம் ' என்று என் நண்பன் பாட்டு பாட, எங்கள் உள்ளாச குளியல் இனிதே அரங்கேறியது.

அங்கிருந்து புறப்பட்டு, அடம் பிடித்து பார்டர் பரோட்டா சாப்பிட செங்கோட்டை சென்றோம். சாப்பாடு பற்றிய கருத்துகள் தனி பதிவாக வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின் நெல்லை திரும்பி, பல குழப்பங்களுக்கு பின் ராமேஸ்வரம் நோக்கி பயணிக்க தொடங்கினோம். மதுரை சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் பேருந்து பிடிப்பதுதான் திட்டம். மூவர் அமரும் சீட்டில், கால் நீட்டி தூங்கி, மூன்று மணி நேரத்தில் மதுரை வந்தோம். மதுரையை ஏன் தூங்காநகரம் என்று சொல்லுகிறர்கள் என்று அன்றுதான் உணர்ந்தேன், நடு ராத்திரி 2:30 மணி, மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சுறுசுறுப்பாக இருந்த பெரியார் பேருந்து நிலையம். கூட்டத்தை கண்டு உடன் வந்த வடக்கு நண்பர்கள் அஞ்ச, வேறு வழி இன்றி டாக்ஸி பிடித்து ராமேஸ்வரம் சென்றோம். அம்மாவசை என்பதால், கோவிலில் கூட்டம் அதிகம் என்று ஓட்டுனர் சொல்ல, நேராக தனுஷ்கோடி தேடி சென்றோம்.

பாம்பன் பாலம்
சென்ற ஆண்டு சீனு எழுதிய பதிவுகளை படித்து எழுந்த ஆர்வம், தனுஷ்கோடி பற்றி அவர் எழுதியதை படியுங்களேன் நாடோடி எக்ஸ்பிரஸ் - தனுஷ்கோடி .அழகாக எழுதி இருப்பார், அதை விட நன்றாக தனுஷ்கோடி பற்றி எழுத முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.



அந்த வண்டியை மறைத்த நாங்கள்
ஒரு மீன் பாடி வண்டியை மாற்றி அமைத்த லாரி போன்ற வாகனத்தில், இருபத்து ஐந்து பேர் தொற்றிக்கொள்ள, நாங்கள் பின்னால் அமர்ந்து, மணலிலும் கடல் நீரிலும் மாறி மாறி சென்ற பயண அனுபவத்தை என்றும் மறக்க முடியாது. ஒரு ரோலர் கோஸ்டரில் கூட அத்தனை த்ரில் கண்டதில்லை. அந்த வண்டி பாதி வழியில் நிற்க, அந்த நேரத்தில் ஒரு நாடகம் அரங்கேற்றி(படங்கள் கீழே), பின் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்து, ஒரே குஷி தாங்க.
பழுதாகி நின்ற வண்டி
தீவிரவாதிகளாக மாறிய எம் நண்பர்கள்
கடல் உப்பு காற்றும், வெய்யிலும் உடலை அறிக்க, குளிக்க நல்ல நீர் தேடி அலைந்தோம். முன்னாள் குற்றாலத்தில் உள்ளாசக் குளியல் நினைவிற்கு வர, இன்றோ நல்ல தண்ணீர் கிடைக்க தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் வரை வந்துவிட்டோம். எங்கள் விடா முயற்சியால் ஒரு கண்மாயை கண்டு பிடித்தோம், அங்கு தான் சார் தனிமை கிட்டியது. புதுப்பிக்க பட்டு, ஆற்று மணல் மெத்து மெத்து என இருக்க, நீர் சில்லென்று இருக்க, ஒரு ஆனந்த குளியல் போட்டதில் ஆனந்தம், பரமானந்தம், பேரானந்தம். அட, ஆனந்த குளியல் தெரியாதா உங்களுக்கு?

ஆனந்தக் குளியல் ! இங்குதான்.
மீண்டும் மதுரை வழியே நெல்லை திரும்பினோம். நெல்லையை அடுத்த பதிவில் சுற்றுவோம். டாட்டா...

பின் குறிப்பு:
நான் எழுதிய சென்ற பதிவு dash boardஇல் தெரியாத காரணத்தால் அதன் இணைப்பை இங்கே பகிர்கிறேன்.காதலிக்கு எழுத நினைத்த காதல்கடிதம்