Monday, August 19, 2013

குள்ளன் (சிறுகதை)

*********************************************************************************************************
முக்கிய அறிவிப்பு
*********************************************************************************************************
என் தளத்தில் வெளி வரும் கதைகளில் 'நான்' என்று ஒருமையில் எழுதுவதனால் என்னை இந்தக் கதைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். என் சொந்தக் கதையேனும் லேபெளில் 'அனுபவம்' என்று குறிப்பிடுவேன். 
*********************************************************************************************************

என் பெயர் ராஜா, நானே இதை சொன்னால் தான் உண்டு, என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை அழைக்கும் பெயர் 'குள்ளன்'. சில சமயங்களில் என்னை அறிமுகம் செய்யும் பொழுது 'ஹாய். மை நேம் ஸ் கு...' என்று நா நுனி வரை என் பட்டப் பெயர் வந்து விடும். தாய் தந்தையிடம் இருந்து வந்த ஜீன்கள் விளையாட்டில் என் உயரம் ஐந்து அடிக்கு இரண்டு சென்டி மீட்டர் குறைய 'குள்ளன்' என்ற பட்டம் என்னுடன் ஒட்டிக் கொண்டது. இதுவரை இரண்டு பள்ளிகள், கல்லூரி என்று மாறினாலும், என்னுடைய பட்டப் பெயர் மட்டும் என்றும் மாறியதே இல்லை. 

பள்ளியில் நன்றாகவே படித்தேன், இருப்பினும் கலைக் கல்லூரி சென்று என் வாழ்க்கை பாதை மாறி, படிப்பு என்பது அறவே இன்றி, மது, மது, அரியர், மற்றும் மது என்றே இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. இறுதி செமஸ்டர் செல்லும் பொழுது எனக்கு அரியர் மட்டும் பதினான்கு பேப்பர்கள். என்ன மாயம் என்று தெரியவில்லை அரியர் உள்பட எல்லா பாடத்திலும் தேர்ச்சிபெற்று, கல்லூரியின் சாதனைப் பட்டியலில் என் பெயரை பதியச் செய்தேன். 

மது பற்றி சொன்னேனே, 'மாது இல்லையா?' என்று நீங்கள் கேட்கணும், நம்ம கதையே என் வாழ்வில் நான் தேடிச் சென்ற ஒரு மாது பற்றி தான். என் தந்தைக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை அதிகம், நான் பிறந்தவுடன் என் தாய் இறக்கவே, ஒரு ஜோசியனிடம் என் ஜாதகத்துடன் செல்ல, அவனோ ஒரு பெண்ணால் தான் என் வாழ்வில் மிகப் பெரிய சம்பவம் நிகழும் என்று கூறியுள்ளான். ஆதலால் நான் படித்த இரண்டு பள்ளிகளுமே ஆண்கள் அரசு பள்ளி. விபரம் தெரியாத சிறு வயது, நானும் என் அப்பா சொன்னது போல் பெண்களிடம் பேசாமலே இருந்து விட்டேன். மீசை முடி எட்டிப் பார்க்க, பெண்பால் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றியது. கல்லூரியிலாவது பெண்களுடன் படிப்பேன் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே, அப்பாவின் கட்டாயத்தில் மீண்டும் ஒரு ஆண்கள் கலைக் கல்லூரி. 

எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது, என் விடுதி ஓரறைத்தோழன் ரவி மட்டும் கொஞ்சம் நெருக்கும். அவன் எனக்கு பெண்கள் என்றால் ஒரு காமப் பொருள் போலவே போதித்தான். அவன் இரண்டாம் ஆண்டில் மடிக் கணினி வாங்கி சில கவர்ச்சி புகைப் படங்கள் என துவங்கி, பின் நாளில் நீலப் படங்கள் வரை சென்று விட்டோம். ரவி எனக்கு நேர் எதிரானவன், பள்ளியில் அவன் பெண்களிடம் செய்த அட்டகாசம் தாங்க முடியாமல் தான் ஆண்கள் கல்லூரியில் அவனை சேர்த்துள்ளனர். அவன் சொல்லிய கதைகளில் இருந்து, அவன் பெண்களை இனிப்பு பேச்சால் எளிதில் கவர்ந்து, அவர்களை எந்த ஒரு எல்லைக்கும் கொண்டு செல்லும் மாயக்காரன் என்பது தெரிந்தது. என்ன செய்தாலும் இவனுக்கு அரியர் விழுந்ததே கிடையாது, எப்பொழுதும் ஆல் பாஸ் செய்து விடுவான்.

எனக்கு அரியர் வைத்த வரலாறு இருந்ததால், முன்னணி நிறுவனங்கள் என்னை நிராகரித்து விட்டன. ரவி அந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கவே இல்லை, அவன் எண்ணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கு எப்படியோ ஒரு BPO நிறுவனத்தில் வேலை கிட்டியது. மறுநாள் ரவியும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான், ஆச்சரியத்தில் இருந்த என்னிடம் 'நண்பன்டா' என்று சினிமா வசனம் எல்லாம் கூறினாலும், அவன் செயலில் எதோ உள் நோக்கம் இருப்பதை உணர முடிந்தது. 

பயிற்சியின் பொழுது எங்கள் ட்ரைனர், என்னைப் பெண்களிடம் பேச வைக்க எவ்வளோவோ முயற்சி செய்தும் அவருக்கு தோல்வி தான். பெண்கள் அருகில் சென்றாலே இதயம் துடிக்கும் சத்தம் என் காதில் கேட்கும், உள்ளங்கை வேர்க்கும், வாயில் வார்த்தை வராது. எனக்குள் இருக்கும் இந்த இனம் புரியாத உணர்வு, இதுவரை பெண்கள் வாடையே இல்லாத எனக்கு புதிதாகத் தான் இருந்தது. 

பயிற்சி முடிந்து பிரிக்கப் பட்ட பத்து பேர் கொண்ட எங்கள் அணியில், ரவியும் இருந்தான். இந்த அணியில் நான், ரவி மற்றும் திலீப் என்று மற்றொருவனை தவிர்த்து மீதம் அனைவருமே பெண்கள். ரவி ஆனந்தத்தில் பறந்தான், எனக்கோ தலை சுற்றியது. தினமும் ஒன்பது மணி நேரம் இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமா? . நாள் போக்கில் என்னால் பெண்களிடம் இயல்பாக பேச முடியாது என்று அனைவரும் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். என்னுடைய வேலை தொடர்பான கேள்விகள், மற்றும் என்னிடம் வரவேண்டிய வேலை அனைத்திற்கும் ரவியே தூது. இதனால் எங்கள் அணியில் இருக்கும் ஏழு பெண்களிடமும் ரவிக்கு செல்வாக்கு கூடி இருந்தது. 

ஓர் காலை வேளையில் என் கணினிக்கு அருகில் வந்து, 'டேய் குள்ளா. நீ இப்படியே பொண்ணுங்க கிட்ட பேசாம இருந்த, உன் லைப்ல கல்யாணம் எல்லாம் நடந்தா என்ன பண்ணுவ?' என்றான் ரவி.

'அது எல்லாம் அப்ப பார்துக்களாம். மொதல்ல லைப்ல செட்டில் ஆகணும்' என்றேன் நான். 

'நீ வெயிட் பண்ணிட்டே இருந்தா, பின்னாடி ஒரு பொண்ணும் சிக்காது. இப்பவே புடிச்சா தான் உண்டு. நம்ம கூட தான் ஏழு பேர் இருக்காங்களே அதுல ஒருத்திய ஏன் நீ கரெக்ட் பண்ணக் கூடாது' என்று என்னிடம் கேட்டுக் கொண்டே பக்கத்து அணியில் இருந்த ராமாவிடம் கண்களால் பேசினான். 

'எனக்கு இவங்க மேல இண்டரெஸ்ட் இல்ல. ஆனா பக்கத்து டீம்ல ஆனந்தி இருக்காலே அவ மேல எனக்கு ஒரு இஷ்டம். ஆனா அவ ரொம்ப அடக்கமான பொண்ணு, அவ கிட்ட கூட யாரையும் நெருங்க விட மாட்டேன்கிரா. கல்யாணம் பண்ணா அவள மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணனும்' என்று நான் சொல்லி முடிக்கும் பொழுது அவன் முகத்தில் ஒரு நையாண்டித் தனமான சிரிப்பு தோன்றி மறைந்தது, அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு ஒரு வாரம் கழித்தே புரிந்தது. 

அடுத்த திங்கட் கிழமை அன்று நானும் ரவியும் என் அலுவலகத்தின் ஏழாவது மாடியில் இருக்கும் உணவகத்திற்கு, டீ குடிக்க மின் தூக்கியில் சென்றோம். கதவு திறந்து நாங்கள் வெளியே வரும் போது, அங்கு மின் தூக்கி வர கதவின் அருகே காத்திருந்த ஆனந்தி, ரவியை ஓரக் கண்ணால் உதட்டோரம் வெட்கத்துடன் பார்த்து, மின் தூக்கி உள்ளே சென்று நாணி நகைத்தாள்.

நான் ரவியின் முதுகில் தட்டி 'டேய் ரவி.. என்னடா விஷயம், ஆனந்தி உன்ன பார்த்து வழியரா?' என்று கேட்டேன்.

ரவி தன் மஞ்சள் நிற பற்கள் தெரிய புன்னகைத்து, 'நேத்து ஆனந்தியோட சினிமா போய் இருந்தேன், அங்க பையர் ஆயிடுச்சி அதுதான்' என்று கூறினான்.

ஆச்சரியத்துடன் 'என்னடா சொல்ற, ஆனந்தி நெருப்புனு இல்ல நெனச்சேன்?' என்று சூடான டீயை ஊதிக் கொண்டே கேட்டேன்.

எனது இடது தோள் பட்டையின் மீது அவனது வலது கையை போட்டு 'உஷார் பண்ண ஒரு திறம வேணும் மச்சி. எல்லாப் பொண்ணுங்களுக்கு உள்ளேயும் ஆசை இருக்கும், நம்ம போய் குறிப்பா கேட்கணும். வெளிப்படையா கேட்கறவங்க தான் அடி வாங்கறது. ஓடாது படத்துக்கு கூப்டுட்டு போனேன், அங்க இருந்ததே மொத்தம் நாலு பேரு. அதுவும் ஜோடிங்கதான். கடைசி சீட்ல நாங்க உட்கார்ந்து, நான் என் கைய அவ ...' என்பதற்குள் 'போதும் மேல சொல்லாத' என்று நிறுத்தினேன்.

'இதோ பாருடா, நீ பொண்ணுங்களோட பழகனும்னா மொதல்ல உனக்கு இந்த கூச்சம் போகணும், அதுக்கு ஒரே வழி, அதுதான். இப்ப நான் ஒரு sms அனுப்பறேன் பாரு, அந்த வீட்டுக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபா எடுத்துக் கொண்டு போ, எல்லாம் தெளிஞ்சிடும்' என்று அவன் சொல்லி முடிபப்தற்குள் அந்த குறுந்தகவல் என் கைபேசிக்கு வந்தது.

'அதுக்கு எல்லாம் வேற ஆளப் பாரு' என்று நான் அவனிடம் சொல்லினாலும், என் கை விரல்கள் அந்த குறுந்தகவலை save செய்தன. 

'இப்படியே பெசிட்டு இரு, அந்த ஆனந்தி உன்ன அவ தம்பி மாதிரி இருக்கன்னு சொன்னா...ஹா...ஹா...ஹா...' என்று அவன் கேலி செய்தது, எனக்குள் இருக்கும் வெறியை தூண்டியது. 

அந்த இடத்தில ரவிக்கு கிடைத்த அனுபவம் பற்றி என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறான். 'இப்போதெல்லாம் சிகப்பு விளக்கு பகுதி என்று எதுவும் தனியாக கிடையாது, மக்களோடு மக்களாக யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் தொழில் நடத்துவதே இவர்களின் நவீன யுக்தி. இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டும் தான் இது போன்ற தடையெல்லாம். பல வெளி நாடுகளில் இது சட்டப் படி சுத்தமாக நடக்கும் தொழில், அங்கு பணி புரியும் பெண்கள் மருத்துவ சான்றிதழுடனே வாடிக்கையாளர்களை படுக்கைக்கு அழைத்துச் செல்கின்றனர்' என்பதெல்லாம் ரவி பல முறை எனக்கு போதித்தது. 

நானும் என் கூச்சத்தை துறந்து, அந்த ஆனந்தியை சினிமாவுக்கு அழைத்துச் செல்ல அடுத்த மாத சம்பளம் வர காத்திருந்தேன். சம்பளம் வந்த நாள் மாலை, ரவிக்கு தெரியாமல், அலுவலகம் முடித்து நேராக அந்த விலாசத்தில் இருக்கும் வீட்டை தேடிச் சென்றேன். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஐந்தாவது பேருந்து நிறுத்திற்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கை ஒட்டிய சாலையில் முதல் வலது சந்தில் அந்த வீடு இருந்தது. மூன்று மாடி கொண்ட அந்த குடியிருப்பில், நான் தேடி வந்த வீடு மொட்டை மாடியில் இருந்தது.

படி வழியே ஏறி மேலே சென்ற பொழுது மணி ஒன்பது. வீட்டின் வாசலில் மண் தொட்டிகளில் சில பூச் செடிகள் இருந்தன, கொடியில் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் துணி தொங்கிக் கொண்டிருந்தது. என்னை விட ஒரு அடி உயரம் இருப்பவர்கள் அந்த துணிகளை கலைத்து தான் வாசலுக்கு செல்ல வேண்டும், நானோ கொடிகளுக்கு அடியில் நடந்து வாசலை அடைந்தேன். சன் டீ.வி.யில் 'தென்றல்' சீரியல் ஓடும் சத்தம் கேட்டது, சற்று எக்கி அழைப்பு மணியை அடித்து, காத்திருந்தேன்.

கொலுசு ஒலி கதவை நோக்கி வர, கதவு திறந்து ஒரு பெண் முன்னே நின்றாள். என்னை உடனே உள்ளே வரச் சொன்ன அந்த பெண், நீல நிறத்தில் கருப்பு பார்டர் கொண்ட ஒரு வித ப்ளைன் புடவையுடன் கருப்பு ஜாக்கெட்டும் அணிந்து, அவள் இடுப்பு வரை நீண்ட கூந்தல் பஜாஜ் பேன் காற்றில் பறந்தது. என்னை விட கூடுதல் உயரத்துடன் இருந்தாள். அவள் மேல் ஒரு வித பர்பியும் வாசனை வீசியது. அவள் செய்திருக்கும் ஒப்பனை, அவள் வயதில் சுமார் ஐந்து ஆண்டுகள் குறைத்து, அவளை 27 வயதானவள் போல் காட்டியது.

என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு 'வித்தா வித்தவுட்டா?' என்று கேட்க, ஒன்றும் புரியாமல் நான் 'ழே' என முழிக்க, 'புதுசா' என்று சலிப்புடன் கூறி, படுக்கை அறையை காட்டி 'உள்ளே இரு ரெடி ஆயிட்டு வர்றேன்' என்று தன் கைபேசியுடன் குளியலறையை நோக்கிச் சென்றாள். 'தென்றல்' இறுதிக் காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க, நான் அவள் காட்டிய அறையினுள் சென்று மெத்தையில் அமர்ந்தேன்.

அந்த மெத்தை மேல் ஒரு வித வாடை வீச, முதன் முறை ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கப் போவதை எண்ணி, என் மனம் கனத்தது, உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் உள்ள சுரபிகளில் நீர் தானாக கசிந்தது. தைரியமாக வந்து விட்டாலும், மனதினுள் ஒரு சலனம், 'நோய் ஏதேனும் வந்து விட்டால்?', அந்த நொடியில் தான் என் மனதில் ஆணி அடித்தது போல் உரைத்தது, 'ராஜா நீ அதை வாங்க மறந்துவிட்டாயே' என்று. அவள் குளியலில் நீர் விழும் சத்தம் அந்த அறை வரை கேட்க, 'எப்படியும் அவள் வைத்திருப்பாள்' என்று மனம் சமாதானமானது. 

நீர் விழும் சத்தம் நின்று அவள் கால் கொலுசு என் அறையை நெருங்கும் சத்தம் கேட்க, நான் வாசலையே நோக்கி காத்திருந்தேன். குளித்த ஈரம் வடியாமல், நீளமான ஒரு துண்டை தன் உடலின் மேல் போற்றிய படி வந்தாள். ஊட்டமாக வளர்ந்த புஷ்டியான அவள் உடல் அமைப்பு என்னை ஈர்க்க, அவள் கூந்தலில் இருந்து நீர் தரையில் சொட்ட, என் அருகில் வந்து, என் வயிறு மெத்தையில் படும் படி என்னை படுக்க வைத்து, என் மேல் ஏறி அமர்ந்தவள், என் இரு கைகளையும் பின் நோக்கி இழுத்து கட்டினாள்.

'என்ன செய்கிறாய்?' என்று நான் கேட்பதற்குள், என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அவள் வசம் சென்றது, என் வெள்ளி மோதிரம் விரலில் இல்லாததை உணர்ந்தேன். என் பான்ட் பாக்கெட்டில் இருக்கும் என் வாலெட் வேகமாக உருவப் பட்டது. என்னால் அவளை தள்ளி விட்டு எழுந்தரிக்க முடியவில்லை, என்னை விட அவள் எடை கூட இருப்பாள் போல். ஒரு தடியன் என் முன்னே தோன்றி 'பின் நம்பர்' சொல்லு என்றான், நான் மெளனமாக இருக்க என் கழுத்தில் அவன் கத்தியால் 'l' என்று எழுதினான். ரத்தம் கசிய, வலித்தது. வேறு வழி இன்றி பின் நம்பரை சொல்லி விட, அவன் என் கைகளை கட்டிலோடு கட்டிவிட்டு வெளியே சென்றான்.

தன் கூந்தலை ட்ரையரில் காய வைத்துக் கொண்டே அந்தப் பெண் 'தம்மாத் தூண்டு இருந்துகுனு உனக்கு இந்த சரோசா கேக்குதா குள்ளா' என்று என் வயிற்றில் அவள் காலால் உதைத்தாள். அந்த தடியன் பணத்துடன் வந்து 'ஒன்பது ஆயிரம் தான் தெரிச்சு' என்று அவளிடம் சொன்னான். என் ஒரு மாத சம்பளம் போச்சு.

'அவன் டிரெஸ்ஸ கழுட்டிட்டு, அவன தொரத்திடு' என்று நைட்டியை பனியன் போல் கழுத்து வழி அணிந்து கொண்டே ஆணையிட்டாள் எட்டாக் கனி சரோசா.

'இந்த சின்ன பான்ட வச்சி நம்ம என்ன செய்றது?' என்று ஏளனம் செய்தான் அந்த தடியன்.

'உன் வண்டி தொடைக்க வச்சிக்கோ' என்று புகையிலை கறை அவள் பற்களில் தெரிய சிரித்து 'இவனுக்கு என் துண்டு போதும்' என்று அந்த ஈரத் துண்டை என் மேல் எறிந்தாள். 

அவளை ஒன்றும் செய்ய முடியாத என் இயலாமையை எண்ணி வருந்தினேன். கட்டை அவிழ்த்தவுடன், என் மேல் அந்த துண்டை கட்டிக் கொண்டு, விரைந்து ஓடி அந்த தெரு முனையில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு வந்து நின்று மூச்சு இறைத்தேன். அடுத்த ரயில் வர காத்திருந்தவர்கள் அனைவரின் பார்வையும் என் மேல் பாய்ந்தது. இப்படியே வீடு சென்றால், ரவி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? இந்நிலையில் உண்மையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இந்த விஷயம் திலீப்புக்கு தெரிந்தால் அலுவலகம் முழுக்க பரவி விடும். ஐயோ! என் ஒரு மாத சம்பள பணத்தை இழந்தது கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை, காசுக்காக தன் உடம்பை விற்பவள் கூட என்னை 'குள்ளன்' என்று கேலி செய்து, மேலாடை இன்றி என்னை துண்டுடன் தெருவில் நாய் போல் ஓட விட்டாளே. மானம் போன பின், உயிர் வாழ்வது எதற்கு என்று என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்கையில், ரயில் வரும் ஓசை கேட்டது. 

                             மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார
 உயிர்நீப்பர் மானம் வரின்.

17 comments:

  1. ராஜா போல் இருக்க வேண்டியது... தீய நட்பால்...

    முடிவில் குறள் மூலம் புரிகிறது... அநியாயமாக ஒரு உயிர்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் தங்கள் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி

      Delete
  2. அட போப்பா.. செல்வராகவன் படம் மாதிரி ஆரம்பிச்சு கடைசில பாலா படம் மாதிரி முடிச்சுட்டே..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... அந்த நிமிடம் தோன்றிய கற்பனை நான் என்ன செய்வேன்

      Delete
  3. சேர்வார் சேர்க்கை சரியா இருக்கனும்ன்னு இதுக்குதான் சொல்றது!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  4. நல்ல தேர்ந்த முதிர்ந்த எழுத்து நடை ரூபக்... வித்தியாசமான களங்களில் சிறுகதைகளை முயன்று பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனு... எந்த அளவு இது போன்ற கதைகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படும் என்ற சிறு பயமும் உண்டு...

      Delete
  5. எந்த தொய்வும் இல்லாமல் இறுதி வரை கொண்டு வந்து முடித்த விதம் சிறப்பு .. சிறுகதையின் வெற்றி முடிவில் தான் உள்ளது, வித்தியாசமாக குறளின் வாயிலாக முடிவு ...
    நல்லா இருக்கிறது ரூபக் தொடருங்கள் ....

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற ஊக்கம் கிடைப்பின், மகிழ்ச்சியுடன் தொடருவேன்

      Delete
  6. மிக மிக அருமையான கதை & எழுத்து நடை.. // எட்டாக் கனி சரோசா.// ஹா ஹா மிக ரசித்த வார்த்தை.. குள்ளன் என்பதற்கான வலியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.. அவன் தற்கொலை செய்ய விழைந்ததற்கு நீங்கள் சொன்ன காரணத்தை இன்னும் சொல்லியிருக்கலாமோ என்பது என் கருத்து.. ஆனாலும் என்ன, உங்கள் எழுத்து நடையும், மிகவும் ஃப்ரெஷ்ஷான கதையும் அவ்வளவு அருமை.. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. சிறு கதை சற்று நீண்டு விடுமோ என்ற அச்சம் தான்.

      தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  7. Replies
    1. மிக்க நன்றி ஜீவன்சுப்பு

      Delete
  8. வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்http://blogintamil.blogspot.com/2013/09/2.html?showComment=1379461793265#c1036978093212335884

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. வலைச்சர அறிமுக கதை அருமை.

    ReplyDelete
  10. மின் தூக்கியா...அது ஆள் தூக்கி யா....

    ReplyDelete