எனது நண்பன் ஒருவன், தன் வாழ்வில் காண வேண்டிய இடங்கள் என்று ஒரு பட்டியல் வைத்திருந்தான். அதில் 'ஆலம்பரா கோட்டை' என்ற பெயரை பார்த்தவுடன் பயங்கர அதிர்ச்சியுடன் 'டேய்! இது எங்க ஊருடா!' என்று பெருமை கொண்டாலும் அருகில் இருக்கும் ஒன்றின் பெருமையை பற்றி அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று ஆதங்கம் கொண்டேன். கோட்டை முற்றிலும் இடிந்து, வெறும் மதில் சுவர் மட்டும் மிஞ்சி இருக்கும் அந்த கோட்டையின் வரலாற்றை அறிய என் ஊரில் பலரை விசாரித்தேன்.
நவாப் தோஸ்த்(Doste) அலி கான் என்பவரின் ஆளுகைக்கு உட்பட்டு, வர்த்தக துறைமுகமாக இருந்த இந்த கோட்டை பின்னர் பிரெஞ்சு கவர்னர் Dupleix நவாபுக்கு செய்த உதவிக்காக அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு, பிரெஞ்சு ஆங்கிலேயரிடம் தோல்வி அடைந்த பின் ஆங்கிலேயரால் இந்த கோட்டை இடிக்கப் பட்டது என்ற செய்தி தான் எனக்கு கிடைத்தது. இது விக்கிபீடியாவில் இருக்கும் அளவு செய்தியே. நமது வரலாறு சிறந்த முறையில் பாரமரிக்கப் படாததுக்கு, இதுவும் ஒரு உதாரணம்.
இந்த கோட்டையின் மத்தியில் ஒரு சமாதி உண்டு, கடலில் கல்லறைப் பெட்டியில் மிதந்து வந்து இங்கு கரை சேர்ந்த ஒரு பெண்ணின் சடலத்தை இங்கு அடக்கம் செய்ததாக என் தாத்தா என்னிடம் சொல்லியதுண்டு. சமீபத்தில் இங்கு நிறைய சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. 'பிதாமகன்' சுடுகாடு காட்சி, மற்றும் 'தீராத விளையாட்டு பிள்ளை' இடைவேளைக்கு முந்தைய காட்சி போன்ற வரலாறு மட்டுமே, உள்ளூர் வாசிகளான எங்களுக்கு பரிட்சயம்.
கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தை கடந்து ஒரு முப்பது நிமிட பயணத்தில் வரும் கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த கோட்டையை அடைய சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு கடற்கரையை நோக்கி செல்ல வேண்டும். அதே கடப்பாக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் வருவது என் கிராமம், சேம்புலிபுரம். எனது கிராமமான சேம்புலிபுரதில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கோட்டையில் தான், என் சிறுவயதில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு, குடும்பத்துடன் வந்து, கடல் உணவுவகைகளை சமைத்து உண்போம். நாங்கள் அப்படிச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது, இன்றோ மாட்டு வண்டிகளும் இல்லை, கூட்டுக் குடும்பமும் இல்லை.
என் அலுவலக நண்பர்களுடன் ஒரு நாள் பயணமாக ஏன் இங்கு செல்லக் கூடாது என்று என்னுள் எண்ணம் தோன்ற, நாமே அங்கு சென்று சமைக்கலாம் என்று மற்றவர்கள் யோசனை கூற, ஆகஸ்ட் 11 என்று தேதி முடிவானது. கடல் உணவுகள் சமைப்பதை தவிர்த்து, கோழி மட்டும் சமைப்பது என்று முடிவானது. நாட்டுக் கோழி barbeque முறையில் சுட்டு சமைப்பது என்று முடிவு செய்து, முன்தினமே இரண்டு கோழிகளை கொன்று, மஞ்சள் பூசி, தோலுடன் நெருப்பில் சுட்டு, மாசாலா கலவை சேர்த்து, குளிர் சாதனப் பெட்டியில் 10-08-2013 அன்று நள்ளிரவு குடியேறியது.
அடுத்த ஐடெம் சிக்கன் லாலிபாப். இந்த raw லாலிபாப் நான் முதலில் வாங்கியது புதூர் சுகுனா சிக்கன் கடையில் தான், தாம்பரம் வந்த பின் இந்த லாலிபாப் வாங்க பம்மல் வரை சுமார் பதினான்கு கிலோ மீட்டர் சென்று வருவது வழக்கம். அவர்கள் மசாலாவுடன் தந்தாலும், பச்சையாக வாங்கி அதில் நம் கை பக்குவத்துடன் மசாலா சேர்த்து, சமைத்து உண்ணும் சுகமே தனி. ஆனால் அந்த சுகுனா கடைக்கு இம்முறை சென்ற பொழுது அங்கு பச்சை லாலிபாப் விற்பதை நிறுத்திவிட்டதாகச் கூறினர். ஏமாற்றத்துடன் கேம்ப் ரோட் திரும்பி 'Dove White Proteins' என்ற கடையில் தேவையான அளவு ஆர்டர் செய்தேன், மறு நாள் காலை தருவதாக கூறினர்.
பயண நாள் காலை ஆறு மணிக்கு சென்றால், லாலிபாப்பாக மாறாமல், அது wings ஆகவே இருந்தது. நேரமின்மையால் அப்படியே வாங்கிக்கொண்டு, பத்து பேர் கொண்ட எங்கள் குழுவின் பயணம் துவங்கியது. நேராக என் கிராமத்துக்குச் சென்று காலை உணவை முடித்து விட்டு, தேவையான பாத்திரங்கள், மற்றும் விறகுகளை எடுத்துக் கொண்டு ஆலம்பரை கோட்டையை நோக்கிச் சென்றோம். சீருந்து போகும் தூரம் வரை சென்று, பின்னர் நடந்து கோட்டையை கடந்து, சமைக்க இடம் தேடி, கோட்டையின் தெற்கே சென்றோம்.
சவுக்கு மர நிழல்களுக்கு நடுவில் அருமையான இடம் கிடைக்க, மூன்று அடுப்புகள் அமைத்து, எங்கள் வேலைகளைத் துவங்கினோம். ஒரு அடுப்பில் சாதம் தயாராக, மற்ற அடுப்பில் நாட்டுக் கோழி சுட ஆரம்பித்தோம். வெறும் குச்சிகளை மட்டுமே வைத்து சுடுவதில் சற்று சிரமம் இருக்க, கம்பி போல் இரும்பில் ஏதாவது வாங்க ஊருக்குள் இருவர் மட்டும் சென்றோம். தோட்டத்திற்கு வேலி அமைக்கும் வலைக் கம்பியில் அரை அடி மட்டும் வட இந்திய சேட்டுடன் போராடி வாங்கி, அதை வைத்து அடுப்பை மூடி, அந்த வலையின் மேல் கோழியை வைத்து நெருப்பில் சுட்டு, சுட சுட இரண்டு கோழிகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. கோழியை நெருப்பில் சுட்டு உண்பது இதுவே முதல் முறை என்றாலும் அந்த சுவையை இப்பொழுது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது.
எங்கள் Barbeque அடுப்பு |
ஒருவர் மட்டும் சைவம் என்பதால், முதலில் எலுமிச்சை ரசம் தயாரானது. அதன் பின், அதே கடாயில் மசாலா கலந்த சிக்கன் விங்க்ஸ் எண்ணையில் பொறிக்கப் பட்டது. உணவு சாப்பிடும் போது, இது மட்டுமாவது இருக்க வேண்டும் என்பதனால், இதை நாங்கள் உடனுக்குடன் சாப்பிடவில்லை. மீதம் இருந்த மசாலா மற்றும் ரெண்டு துண்டு நாட்டு கோழி வைத்து ஒரு குழம்பு செய்தோம், அதே கடாயில் முட்டை பொறியில் செய்து, இரண்டு மணிக்கு எங்கள் சமையல் முடிந்தது.
நாட்டுக் கோழி குழம்பு + சிக்கன் விங்க்ஸ் |
வங்கக்கரை ஓரம், உப்பு காற்று வீச, சவுக்கு மர நிழலில், மெத்தை போன்ற சுகம் தரும் கடல் மணலில்,கும்பலாக அமர்ந்து ஒரு பாத்திரத்தில் அனைவரும் உண்டு சுவைத்தோம். நாட்டுக் கோழி குழம்பு,எலுமிச்சை ரசம், முட்டை பொறியல், சிக்கன் விங்க்ஸ், தயிர், வடித்த சாதம் இவைகளுடன் முன்பு காலியான barbeque சிக்கன். எல்லா உணவு வகைகளும் சுவையாக தயாரானதில் எங்களுக்கே ஆச்சரியம் தான். நாட்டுக் கோழி சூட்டைத் தணிக்க, தயிர் உண்டு, மீதம் இருந்த ரசத்தை குடித்து எங்கள் மத்திய உணவு இனிதே முடிந்தது.
அமைதியான கழிவெளி |
கோட்டைக்கு அருகில் இருக்கும் கழிவெளி (backwaters) அரை அடி ஆழம் மட்டுமே, அந்த நீரில் ஒரு நடைப் போட்டு, ஆழமான பகுதி வரை சென்றோம். அந்த ஆழமான பகுதிக்கும் கடலுக்கும் இடையில் ஒரு சின்னத் தீவு போல் மணல் பரப்பு அமைந்திருக்கும் காட்சி நம் மனதை கொள்ளை கொள்ளும் (பதிவின் முதல் இரண்டு படங்கள் ). அங்கு இருக்கும் மீனவர்களிடம் காசு கொடுத்தால், அவர்கள் படகில் நம்மை அங்கு கொண்டு செல்கின்றனர். பின்னர் வந்த வழியே திரும்பி, பழைய ஊர் வழி சென்று கடற்கரையில் குளித்து, அந்த ஈரத்துடன் வீடு திரும்பினோம்.
அந்த அப்பாவி குட்டிப் பையன் நான்தானுங்க |
'என்னடா! எதோ கோட்டையை பற்றி எழுதியிருக்கான் ஆனா கோட்டையை ஒரு படத்தில் கூட காணவில்லையே' என்று தேடுபவர்களுக்கு, ஆலம்பரை கோட்டை அனுபவத்தை பற்றி, படங்களுடன், கோவை நேரம் எழுதிய பதிவு : ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம்
Tweet | ||
படங்களும் பகிர்வுகளும் அருமை. அதிக காசு செலவழித்து உயர்தர விடுதியில் தங்கி அலுப்பதை விட, அருகருகே உள்ள இது போன்ற அருமையான இடங்களுக்கு தனியே போவாது, கூட்டாக போய் உண்டு களித்து விளையாடி மகிழ்ந்து வருதலே, ஆனந்தம் பேரானந்தம். அதே சமயம், அமைதியான் இடங்களுக்கு போகும் போது அவ் இடங்களை அசுத்தம் செய்யாமல், நெகிழி (பிளாஸ்றிக்) போத்தில்கள் குப்பைகளை மறவாது எடுத்து வந்து முறையான இடங்களில் இடுவதும் அம் மண்ணுக்கும் மக்களுக்கும் மிக நல்லதாம்.
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருது பகிர்வுக்கும் நன்றி. எங்களால் இயன்றவரை அசுத்தம் செய்வதை தவிர்த்தோம்
Deleteசொந்த ஊர் பதிவுன்னாலே தனி உற்சாகம்தான். அது உங்க பதிவுல நல்லாவே தெரியுது. ஜீவா போட்டா பதிவுலாம் இங்க செல்லாது. அடுத்த விடுமுறையில கோட்டைக்கு போய் பதிவு போட்டாதான் உங்களை விடுவோம்!!
ReplyDeleteமீண்டும் கோட்டை பதிவா, படங்களுடன் தயார் செய்திடுவோம்
Deleteஅப்பு கமல் மாதிரியே இருக்கப்பா.. அது சரி நைட் ஷிப்ட் முடிஞ்சு வந்து பதிவு எழுதியாச்சா.. என்ன சின்சியர்.. நீயெல்லாம் நல்லா வருவே தம்பி!
ReplyDeleteஎல்லாம் உங்க ஆசீர்வாதம் ஆவி அண்ணே
Deleteஇனிய பயணம்.....
ReplyDeleteபயணம் செய்வதில் ஒரு அலாதியான இன்பம் இருக்கத்தான் செய்கிறது..
கருத்துரைக்கு மிக்க நன்றி வெங்கட்
Deletesuper ji... naanum note pannikkiraen porathukku..
ReplyDeleteவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி
Deleteஅந்த BBQ சிக்கன் செம டேஸ்டா இருக்கும் பாஸ்.... நல்ல சுவாரஸ்யமா இருக்கிறது.
ReplyDeleteவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி
Delete