Friday, August 9, 2013

சாப்பாட்டு ராமன் - திருவான்மியூர் RTO பார்க் (ரோட்டோர உணவுகள்)

திருவான்மியூர் RTO ஆபீஸுக்கு அருகில் இருக்கும் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ள சாலையில், வித விதமான ரோட்டோர உணவுகள் கிடைக்கும் என்பதை அங்கு தங்கி இருக்கும் நண்பர்கள் மூலம் அறிந்த நாளில் இருந்தே அந்த ரோட்டோரக் கடைகளுக்கு செல்ல வேண்டும் என்பது ராமனின் நெடு நாள் அவா. இந்நிலையில் அங்கு ட்ரீட் தருவதாக ஒரு அழைப்பு வந்ததால், மறுக்க முடியுமா? முடியாது. பல அலுவல்களுக்கும் இடையில் அங்கு சென்றான் நமது ராமன்.

மற்றவர்கள் வரும் முன் அந்த சாலையை அலசி எல்லாக் கடைகளையும் நோட்டம் விட்டு குறிபெடுத்துக் கொண்டான். எட்டு பேர் கொண்ட (அவன் அடங்கிய) அந்த குழு முதலில் சென்ற இடம் 'பிஸ்மில்லா சிக்கன் பகோடா கடை'. நூறு கிராம் சிக்கன் பகோடா 33 ரூபாய், 150 கிராம் 50 ரூபாய், 250 கிராம் 80 ரூபாய் என்று எழுதி இருந்த விலைப் பட்டியலும் எண்ணையில் வறுபடும் சிக்கனும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தன. 

வாழ்வில் முதன் முறையாக முக்கால் கிலோ சிக்கன் பகோடா வாங்கி, அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து, அந்த சிக்கன் சூட்டில் வதங்கிய பச்சை வெங்காயத்துடன், ஆவி பறக்க வாயில் செலுத்தி, அடுத்தவர் கை தட்டிற்கு வரும் முன் வேகமாக சாப்பிட வேண்டிய கட்டாயம். மீண்டும் ஒரு கால் கிலோ வாங்கி, அடித்து பிடித்து உண்டு, மொத்தம் ஒரு கிலோவுக்கு பில் தொகை 320 ரூபாய் செலுத்திவிட்டு அடுத்த கடையைத் தேடிச் சென்றோம்.

சிக்கன் சூட்டை தணிக்க, பாணி பூரி உண்ண சென்றோம். பாக்கு மட்டையில் செய்த தொண்னையில், மசாலா உடன் கலந்த உருளை கிழங்கை, கட்டை விரலால் உடைத்த சிறிய பூரியினுள் வைத்து, தண்ணீர் ஒழுகும் முன், அதனை வாயினுள் விழுங்குவதே ஒரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. 

மற்ற ஊர் உணவுகளை உண்டாலும், கையேந்தி பவன் என்றாலே நம்ம ஊர் உணவுகள் தானே. அதற்கும் அங்கு கடையுண்டு. உருளை, வெங்காயம், மிளகாய், வாழக்காய் பஜ்ஜி வகைகளுடன், சுண்டலும் சூடாக கிடைக்கிறது. இந்த பஜ்ஜி கடை அந்த பூங்காவில் இருந்து தள்ளி, சற்று தூரத்தில் IOB பேங்க் எதிரில் இருந்தது. இங்கு சுண்டல் கொதிக்கும் குழம்பில், போண்டாவையும் வேகவைத்து,சாம்பார் வடை போல் சுண்டல் போண்டா என்று ஒன்று தருகிரார்கள்.

இப்படி ஸ்டார்டர்ஸ்சை முடித்து விட்டு டிபன் கடையை நோக்கி சென்றோம். டிபன் கடை பூங்கா அருகிலேயே இருந்தது. பிளாஸ்டிக் தட்டு என்றாலும், அந்த தட்டில் வட்ட வடிவில் வெட்டப் பட்ட வாழை இலையுடன் உணவை தந்தது சிறப்பு. இடியாப்பத்தில் தொடங்கி, 'நைஸ்' தோசை, முட்டை தோசை, பரோட்டா என பதம் பார்த்து, கலக்கி, ஹாப் பாயிலுடன் முடிந்த எங்கள் உணவு வேட்டையின் பில் தொகையோ வெறும் 267 ரூபாய். நாவிற்கு நல்ல சுவை வயிற்றின் எடையை கூட்டினாலும், பணப் பையின் எடை கம்மியாகவே குறைந்தது.

அடுத்து ஒரு சிக்கன் ப்ரைட் ரைஸ் வாங்கி வயிற்றில் இடம் பாக்கி இருதவர்கள் மட்டும் அதை உண்டு, வயிற்றை நிரப்பினோம். அங்கு அருகில் இருந்த ஆவின் பூத்தில் நன்கு குளிர்ந்த பாதாம் பால் மற்றும் ரோஸ் மில்க் பருகி அன்றைய இரவு உணவு இனிதே நிறைவடைந்தது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு முறை அந்தப் பக்கம் சென்று வாருங்களேன்.  

14 comments:

  1. இப்படி எல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள். நாவூறுது அடுத்த முறை இந்தியா ட்ரிப்பில் ருசிப் பார்த்திடவேண்டும். ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி :)

      Delete
  2. என்னதான் பெரிய பெரிய ஹோட்டல்ல சாப்பிட்டாலும் இதுப்போல கையேந்தி பவன் சாப்பாட்டு ருசியே தனி. சென்னை வந்தால் நான் மிஸ் பண்ணுறதே இல்ல.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சகோ... மன நிறைவு எங்கும் இல்லை

      Delete
  3. சென்னைக்கு வரும்போது கூட்டிட்டு போப்பா..!

    ReplyDelete
    Replies

    1. கண்டிப்பா... முகவரிக்கு ஒரு ட்ரீட் பாக்கி இருக்கு இல்ல, அத அங்க அரங்கேற்றிடுவோம்

      Delete
  4. //இப்படி ஸ்டார்டர்ஸ்சை முடித்து விட்டு டிபன் கடையை நோக்கி சென்றோம்.//

    இன்னும் முடியலையா...

    ReplyDelete
    Replies
    1. தொடங்கன உடன் எப்படி முடியும்

      Delete
  5. //நன்கு குளிர்ந்த பாதாம் பால் மற்றும் ரோஸ் மில்க் பருகி அன்றைய இரவு உணவு இனிதே நிறைவடைந்தது//

    யப்பா அதென்ன வயிறா இல்லை டேங்கர் லாரியா....

    இவ்வளவு ஐட்டம் சாப்பிடணும்னா நாடி நரம்பெல்லாம் சாப்பாடு வெறி பிடிச்ச சாப்பாட்டு ராமன் மட்டும் தான் முடியும்....

    ReplyDelete
    Replies
    1. //இவ்வளவு ஐட்டம் சாப்பிடணும்னா நாடி நரம்பெல்லாம் சாப்பாடு வெறி பிடிச்ச சாப்பாட்டு ராமன் மட்டும் தான் முடியும்....// ஹா ஹா , அது என்னவோ சரி தான்

      Delete
  6. பாண்டிச்சேரியில் இது போல பல கடைகளில் சாப்பிட்ட நினைவுகள்.......

    இதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.....

    சுண்டல் போண்டா..... புதிதாக இருக்கிறது.... ட்ரை செய்யணும்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் வெங்கட் சார் ...பாண்டி தள்ளு வண்டிப் பிரியர்களின் சொர்க்கம்..

      Delete
  7. வணக்கம்
    இன்று உங்கள் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/4_22.html?showComment=1377137237917#c1900917022381054794
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அன்பின் ரூபக் ராம் - இன்றைய வலைச்சர அறிமுகத்தின் மூலமாக வந்து பார்த்து படித்து மகிழ்ந்து மறுமொழி இடுகிறேன்.

    சாப்பாட்டு ராமனின் சாப்பாடு அருமை - அனுபவித்து எழுதிய பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete