Monday, April 15, 2013

ஸ்டாலாக் 17 (Stalag 17) - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய லக சினிமா' என்ற பகுதியில் எழுத உள்ளேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

Donald Bevan மற்றும் Edmund Trzcinski உருவாக்கிய நாடகமாகிய 'ஸ்டாலாக் 17'ஐ திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் Billy Wilder இறங்கினார். ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார். 


நான் போர் பற்றிய  பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள், பீரங்கிகள், விமானங்கள், கப்பல்கள், துப்பாக்கிகள்  கொண்ட  எத்தனையோ படங்கள் பார்த்திருகேன். ஆனால் இந்த படம் சற்று மாறுபட்டு போர்க் கைதிகள் முகாமில் நடந்த சம்பவங்களைக் கூறுவது என்று இயக்குனர் என்னிடம் கதை சொல்லிய போதே எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். இப்படத்தில் Clarence Harvey Cook என்ற என் பெயரை அனைவரும் சுருக்கி 'cookie' என்றே கூப்பிடுவர். என் கதாப்பாத்திரத்தை பற்றி நான் சொல்லப் போவதில்லை, படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

'ஸ்டாலாக்' என்பது ஜெர்மன் மொழியில் 'சிறை முகாம்' என்று பொருள்படும். எண் 17 என்பது 'டனுபெ' என்ற ஊரில் இருக்கும் முகாமை குறிக்கும். இங்கு மொத்தம் அறுநூற்று முப்பது போர்க் கைதிகள், அனைவரும் என்னைப்போல் சார்ஜண்ட்கள், பெரும்பாலும் அமெரிக்கர்கள். கதை தொடங்குவது இரண்டு பேர் அந்த முகாமில் இருந்து தப்பிக்க முயலுவதில் இருந்து. Sefton மட்டும், அவர்கள் நிச்சயம் தப்பிக்க மாட்டார்கள் என்று உறுதியாக கூறினான். அவன் கூறியது போல் அவர்கள் தப்ப வில்லை, சுடப்பட்டனர்.  

இந்த இடத்தில நான் சில முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி சொல்லி விடுகிறேன். Hoffy எங்கள் பாசறை தலைவர், Price பாதுகாப்பு அதிகாரி, Harry மற்றும் Animal எங்களுடன் இருந்த இரு கோமாளிகள். எங்களுக்கு பெண்கள் வாசமே கிடையாது, அவர்களை தனி முகாமில் அடைத்து வைத்திருந்தனர்.  நான் இருப்பது Sefton உடன், நான் கண்ட மனிதர்களிலேயே மிக வினோதமானவன்.    

Sefton ஏதாவது வினோதமாக செய்து கொண்டே இருப்பான். சாராயம் காய்ச்சி விற்றான், குதிரைப் பந்தயம் நடத்தினான் (ஆனால் ஓடியது ஐந்து எலி தான்). Red Cross இல் இருந்து கிடைக்கும் எல்லாப் பொருட்களையும் இவனிடம் அனைவரும் இழந்து விடுவர். இவன் செழிப்பானது  ஒரு தொலைநோக்கியை  கொண்டு. அந்த தொலைநோக்கி மூலம் எதிரில் இருந்த பெண்கள் முகாமை காண, நபர் ஒருவருக்கு இரண்டு சிகரேட்கள் வீதம் வசூல் செய்தான்.  இவற்றின் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து, நல்ல உணவு, ஆடை கிடைக்க ஜெர்மன் வீரர்களிடம் பண்டமாற்று முறைகளை கையாளுவான்.

எப்போதும் எங்கள் கவலையை மறக்க செய்வது Harryஉம் Animalஉம் தான். இக்கதையில் அவர்களுக்கு நகைச்சுவை வேடம். குறையின்றி எங்களை சிரிக்க வைத்தார்கள். ஒரு முறை இருவரும் பெண்கள் முகாமிற்குள் சென்று மாட்டியதை எங்கள் முகாமே கண்டு சிரித்தது. எங்கள் பாசறையில் செய்தி வாசிப்பவர் 'அட் ஈஸ்' என்று சொல்லும் போது Animal அவர் சொல்லிய பின் தன்   பாணியில் 'அட் ஈஸ்' சொல்வது என்னை மிகவும் கவர்ந்தது.

எங்கள் முகாமில் புழங்கி கொண்டிருந்த ரேடியோவை ஜெர்மன் வீரர்கள் கண்டுபிடிக்க, ஒரு ஜெர்மன் கைக்கூலி எங்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் கிளம்பியது. சிறை முகாமில் செழிப்பாக இருக்கும் Sefton மீது அனைவரின் சந்தேகமும் திரும்ப, இந்நிலையில் அவன் பெண்கள் முகாமிற்கு சென்று ஓர் இரவை உல்லாசமாக கழிக்க, அனைவரின் சந்தேகமும் உறுதியானது. Sefton எவ்வளோ சொல்லியும் யாரும் அவனை நம்பவில்லை, அன்று இரவு அவனுக்கு செம அடி தான். 

இதற்கிடையில் Lt.Dunbar என்பவர் தற்காலிக கைதியாக எங்கள் முகாமிற்கு வந்தார். அவர் வெடிமருந்து கொண்டு சென்ற ஜெர்மன் சரக்கு ரயிலை வெடிக்க செய்ததை எங்கள் மத்தியில் சொல்ல, உளவாளி வழியாக அது முகாம் துணைத்தலைவர்  காதிற்கு செல்ல, பின் குற்றத்தை ஒத்துக்கொள்ள சித்தரவதை நடந்தது. என்ன சித்ரவதைன்னா, அவர தூங்கவே விட மாட்டாங்க. இதே முறையத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளி வந்த 'போக்கிரி' படத்துல பயன் படுத்தியதா கேள்வி பட்டேன். Lt.Dunbarஐ நாங்கள் காப்பாற்றினோம், பின் Harry அவரை முகாமில் எங்கோ மறைத்துவைத்தார், யாரிடமும் சொல்ல வில்லை. ஜெர்மன் வீரர்கள் முகாம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் கிடைக்கவில்லை.

Sefton உளவாளி யார் என்பதையும், அவன் தகவல் சொல்லும் முறையையும் கண்டுபிடித்ததை என்னிடம் சொன்னான். உளவாளி யார் என்பதை கண்டறிந்தது ஜெர்மன் வீரர்கள் காதுகளுக்கு சென்றால் அந்த உளவாளியை வேறு முகாமிற்கு உளவு பார்க்க அனுப்பி விடுவார்கள், இல்லையெனில் அந்த உளவாளியை கொன்றால் எங்கள் அனைவரையும் கொன்றுவிடுவார்கள். உளவாளியை என்ன செய்வது என்பது கேள்விக்குறியானது.

Lt.Dunbar பெரிய பணக்காரர் என்பதால், அவரை முகாமை விட்டு வெளியே கொண்டு செல்ல Sefton முன்வந்தான், அவர் தாயிடம் இருந்து  பரிசு பணம் கிடைக்கும் என்ற ஆசையுடன். Sefton உளவாளியை எப்படி கொல்கிறான்,  Lt.Dunbarஐ எப்படி காப்பாற்றுகிறான் என்பதை அறிய படத்தை பாருங்கள், படத்தை பார்த்துவிட்டு மறக்காமல் கருத்துரையிட்டு செல்லுங்கள்.  

*****************************************************************************************
ஆண்டு            : 1953
மொழி              : ஆங்கிலம்                   
என் மதிப்பீடு : 4/5
*****************************************************************************************

4 comments:

  1. இது போன்ற உலக சினிமாக்களை எல்லாம் நான் பார்த்தது இல்லை ரூபக்... தவற விட்ட சினிமாக்கள் மிக அதிகம்... சாகும் முன் பார்க்க முயற்சிக்கிறேன் :-)

    வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட ஒரு சினிமா விமர்சனம். ஹீரோவே சினிமாவை விமர்சிப்பது போன்ற எழுத்து நடை வெகுவாய் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு :) படத்தை பாருங்க, அவர் யாருன்னு தெரியும்.

      Delete
  2. good description rubak...will watch the movie soon and respond u

    ReplyDelete