Monday, March 24, 2014

சிம்லா ஸ்பெஷல் - ரயில் பயணம்

சில ஆங்கிலப் படங்களிலும், தமிழ் சினிமா பாடல்களிலும் காட்டப்பட்டப் பனிப் பிரதேசங்களைப் பார்த்து, சிறுவயது முதலே உறைப்பனியை கையில் எடுத்து விளையாட வேண்டும் என்ற ஆசை மனதில் வளர்ந்து கொண்டு இருந்தது. பொருளாதார சிக்கல்களால் அலுவலகம் சேரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அலுவலகம் சேர்ந்து கல்லூரி நண்பர்களுடன் கலந்து பேசி, ஏழு பேர் கொண்ட குழு உருவாகி, டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் வேளையில் மனாலி செல்வது என்று முடிவானது.    

டிசம்பர் மாதம் என்பதால் அங்கு குளிர் உச்சக்கட்டத்தை அடைந்து, பனி உருவாகும் என்பது எங்கள் எண்ணம். அதே வானிலை மோசமான நிலையை அடைந்தால், சாலையில் பனிச் சரிவுகள் உண்டாகி, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு, அங்கேயே சில நாட்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகலாம் என்ற ஒரு செய்தியும் எங்களை கலக்கியது. பல குழப்பங்களுக்கு நடுவே எங்கள் இலக்கு சற்று மேற்கு திரும்பி, சிம்லா செல்வது என்று முடிவானது.       
   ​
ஏழு பேர் என்பதால், நால்வர்  மற்றும் மூவராக பிரித்து ரயில் சீட்டு முன்பதிவு செய்துகொண்டோம். வெய்டிங் லிஸ்ட் தான் என்றாலும் நிச்சயம் கன்பார்ம் ஆகி விடும் என்ற நம்பிக்கை முன்பதிவு செய்த என் நண்பனுக்கு அதிகமாகவே இருந்தது. சில நாட்கள் கழித்து நண்பர்கள் மூவர் பின்வாங்க, என்னுடன் சேர்த்து நால்வர் மட்டுமே செல்வது என்று இறுதியானது. நான், எனது நண்பன், எனது நண்பனின் பள்ளி நண்பன், மற்றும் அவனின் அண்ணன், இதுவே எங்கள் பயணக் கூழு.  மூவருக்கு என முன் பதிவு செய்த சீட்டில் என்னைத் தவிர மற்ற இருவரும் பின்வாங்க, தனிமையான ரயில் பயணம் எனக்காக காத்திருந்ததை அப்பொழுது நான் அறியேன். 

எனக்கும் எனது  நண்பனுக்கும்(பின் வாங்கியவர்களில் ஒருவன்) கல்லூரி முதலே ஒரு ஆசை உண்டு. முக்கால் காற்சட்டை அணிந்து, தோளில் பையுடன், கலர்க் கண்ணாடி அணித்து ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி போல் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான். என் நண்பன் என்னுடன் வராவிடினும், முக்கால் காற்சட்டையுடன் 2012, டிசம்பர் 21 ஆம் நாள் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, பனியைத் தேடிய  என் பயணம் ஆரம்பமாகியது.  

எனது நண்பனின் எண்ணம் போலே முன்பதிவு செய்த டிக்கெட்கள் கன்பார்ம்  ஆகின. மூவர் S3 யிலும் நான் மட்டும் S8 யிலும் என்று கணினி முடிவு செய்திருந்தது. சென்ட்ரலில் இறங்கியவுடன் ஹிக்கின் பாதம்ஸ் சென்று, மூன்று சுஜாதாவின் நாவல்களை வாங்கிக்கொண்டேன்.     

பயணிகள் பெயர் பட்டியல் வழக்கம் போல் தந்த ஏமாற்றத்துடன், எனது பெட்டியில் நான் அடியெடுத்து வைக்கும் பொழுது எதிரே ஒரு பூட்டு-சங்கிலி வியாபாரி வந்து என்னை தடுத்தார். பூட்டுடன் வலுவான சங்கிலி எனது உடமைகளை ரயிலில் பாதுகாக்க உதவும் என்று சொல்லி,  அறுபது ரூபாய்க்கு என்னிடம் விற்றார். இன்றளவும் எனது அனைத்து ரயில் பயணங்களிலும் அந்த பூட்டு சங்கிலி எனது உடமைகளுக்கு ஒரு அரணாக உள்ளது.  

எனது அனைத்து ரயில் பயணங்களுக்கும் மூன்று ஒற்றுமைகள் உண்டு:

1) கட்டாயமாக டூத் பிரஷ் எடுத்துச் செல்ல மறந்திடுவேன்.

2) எனது இருக்கை கழிவறைக்கு மிக அருகில் அமைவது வழக்கம்.

3) எனது வயதில் இருந்து +/- மூன்று வயது பெண்பால் பயணிகள் எனது பெட்டியில் பயணிக்கும் பாக்கியம் இதுவரை எனக்கு கிட்டவில்லை. (எல்லாம் ஆண்டிகளும் பாட்டிகளும் தான்)


இந்தப் பயணமும் இந்த ஒற்றுமைகளுக்கு விதிவிலக்கு அல்ல. ரயில் தொடங்கும் முன் என் மற்ற நண்பர்களை சந்தித்தேன், என்னிடம் இருந்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டுச் சென்றனர். எல்லாப் பெட்டிகளும் இணைக்கப் பட்டவை தானே இடையில் அவர்களை சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். வாங்கிய சங்கிலியுடன் எனது பையை கீழே பூட்டி விட்டு, சைடு அப்பர் பெர்த்தில்  நான்  ஏறி அமர, MAS - Durronto எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து தனது புது தில்லி நோக்கிய பயணத்தை தொடங்கியது.
பயணக் குழு

இரவு உணவு வீட்டில் இருந்து கொண்டுவந்த புளியோதரை மட்டும் அவித்த முட்டையுடன் முடித்த பொழுது, தமிழக உணவின் சுவையை அடுத்த எட்டு நாட்களுக்கு நான் இழக்கப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை. இரவு ரயில் ஆந்திராவை கடக்கும் பொழுது, காலை அலுவலகம் சென்று வந்த களைப்பில் நன்கு உறங்கி விட்டேன். காலை உணவாக பிரட் ஒம்லெட் ஆர்டர் செய்துகொண்டேன். அருகில் இருந்தவர் உண்ட பொங்கல் வடையைக் கண்ட பொழுதே எனது   பிரட் ஒம்லெட் பன் மடங்கு மேல் எனத் தோன்றியது.

ஆந்திராவை முழுவதும் கடந்து வடக்கு நோக்கி செல்ல, ரயில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நிற்கத் தொடங்கியது. அந்த ஊர்களில் ஏறுபவர் ஓபன் டிக்கெட் வாங்கினாலும், ஸ்லீப்பர் பெட்டிக்குள் ஏறி காலியாக இருக்கும் இடங்களை தங்கள் வசமாக்கி, அந்த சீட்டுக்கு உரியவரை ஓரம் ஒதுக்கி விட்டனர். எனக்கு சைடு அப்பர்  என்பதால் எனது அருகில் யாரும் வரவில்லை. எனது இருக்கையை காலியாக விட்டு நான் அசையமுடியாத, எனது மற்ற நண்பர்களையும் காணசெல்ல  முடியவில்லை. இருப்பினும் என் நண்பன் தன் இருக்கைக்கு ஒரு தமிழரரை காவல் வைத்து விட்டு, என்னைக் காண வந்தான். அவன் பெட்டியிலும் இதே நிலை தான் என்று புலம்பினான். ரயில் ஊர்களை நெருங்கும் பொழுது கழிவறைக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டேன்.         

மதியமும் இரவும், முட்டை பிரியாணியுடனும்  (சுவை தக்காளி சாதம் போலத் தான் இருந்தது), எனக்கு வழித்துணையாக பயணித்த  சுஜாததாவுடனும் சென்றது. தனிமையில் இரவு வருவதற்குள் அந்த ஒரு பகல் பல யுகங்கள் போல் தோன்றியது. அதிகாலை வேளையில் குளிர்ந்த வானிலை என்னை எழுப்ப, ரயில்  பனி மூட்டம் காரணமாக சற்று மெதுவாக செல்வதை உணர்ந்தேன். சீட்டை விட்டு இறங்கிய போது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த பலரும் எனது முக்கால் காற்சட்டையை பார்த்து வியந்தனர். ரயில் ஆக்ராவை அடையும் பொழுது, என்னால் குளிரை பொறுக்க முடியாமல், ஜீனுடன் சூவையும் மாற்றிக்கொண்டேன். குளிரில் மதுபானங்கள் பருகுவது எதற்கு என்பதை அந்த நிமிடம் என் அருகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் என்னிடம் சொல்லி, நக்கலாக சிரித்தார்.      

ஏழு மணிநேர தாமதமத்துடன் ரயில், நிஷாமுத்தின் ரயில் நிலையத்தை அடைய, பல வித எதிர்பார்க்புகளுடன், என் நண்பர்கள் மூவர் படை சூழ டிசம்பர் 23 அதிகாலை தலை நகரில், எனது வலது காலை எடுத்து வைத்தேன்.

நிசாமுதினில் இருந்து முதலில் நாங்கள் சென்ற இடம் புது டில்லி ரயில் நிலையம். நிசாமுதின் மற்றும் புது டில்லி ரயில் நிலையம், நமது எக்மோர் மற்றும் சென்ட்ரல் போல் என்று நானே யூகித்துக்கொண்டேன். வளர்ச்சியின் உச்சகட்டத்தில் நம் தலை நகரம் இருக்கும் என்ற எண்ணத்துடன், ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கோ ஏழ்மை தலை விரித்தாடும் கோலத்தை கண்டேன். சென்னை சென்ட்ரலை விடவும் அதிக அளவில் தங்க இடம் இல்லாமல் நடைமேடையில் மக்கள் வசிப்பதைக் கண்டேன். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல் சென்னையில் நான் கண்டிராத மனித ரிக்சாக்களை அங்குக் கண்டு மனம் நொந்தேன். பல எதிர்பார்ப்புக்களுடன் தலை நகரில் வந்து இறங்கிய எனக்கு பெருத்த ஏமாற்றம் தான்.   

இந்திய ரயில்களுக்கும் நேரம் தவருவதுக்கும் ஒரு இனம் புரியா பந்தம் இருப்பதாலும், சென்னையில் இருந்து புது டில்லி  செல்லும் ரயில்கள் என்றுமே சரியான நேரத்திற்கு செல்வதில்லை என்பதாலும், டில்லியில் இருந்து எங்களது சிம்லா பயணத்திற்கு டிசம்பர் 24 அன்றே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். தினமும் காலை ஆறு மணிக்கு ஒரு முறை  மட்டும் கல்கா செல்லும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் அது.  என் நண்பனின் முன் யோசனைப் படி செயல் படாமல், அன்றே முன்பதிவு செய்திருந்தால் நிச்சயம் அந்த ரயிலை தவற விட்டிருப்போம். ஒரு நாள் பொழுது டில்லியில் என்றானது. 

புது டில்லி ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் MEM இன்டர்நேஷனல் ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொண்டு, டில்லியை சுற்றக் கிளம்பினோம். தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற்று மொழி எதுவும் கற்காதது அவமானமாக உள்ளது. குறிப்பாக ஹிந்தி தெரியாமல் வட தேசம் நோக்கி சென்றோமானால் ஒரு எலியைக் கூட யானை என்று ஏமாற்றி நம் தலையில் கட்டுபவர்கள் அதிகம். எங்களுக்கு மிக அருகில் அதிருஷ்ட தேவதை இருந்ததால், எங்கள் குழுவில் இருந்த நண்பனின் அண்ணனுக்கு  ஹிந்தி சரளமாக பேசவும் படிக்கவும் தெரியும். அவரது ஹிந்தி பேச்சினால் எங்கள் பயணத்தில் 4000 ரூபாய் வரை சேமித்தோம் என்பது இன்றளவும் நம்ப முடியாத உண்மை. மேலும் அவர் உயற்கல்வி பயின்றது டில்லியில் என்பதால், அவரது தலைமையில் எங்கள் தலை நகர் உலா தொடங்கியது. 

டில்லியில் அதிக பிரபலமான சில அங்காடித் தெருக்களுக்கு செல்வது என்று முடிவு செய்துகொண்டு, அங்கு பயணிக்க மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். மெட்ரோவில் எங்கு செல்லவேண்டுமானாலும் டோக்கன் தான். நமது இலக்கை சொல்லி காசு கொடுத்தால் அதற்கு ஒரு டோக்கன் தருகின்றனர், அதை பயன்படுத்தி தான் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முடியும். அதே போல் நம் இலக்கை அடைந்த உடன் அதை பயன் படுத்தினால் தான் ரயில் நிலையத்தை விட்டு வெளிய வர முடியும். இங்கு வழக்கமாக பயணிப்பவர்கள் பாஸ் வைத்துள்ளனர், பயண தூரத்தை நுழைவு மற்றும் வெளியேறும் ஸ்டேஷன் மூலம் கணினி கணித்துக் கொண்டு அதற்கேற்ப காசு கழித்துக்கொள்கிறது. 

அந்த ரயில் நிலையத்தில் வழக்கமாக காணப்படும் பாண் பராக் மற்றும் எச்சில் கரைகள் சுவரில் இல்லாததை கண்டு வியந்தேன். மெட்ரோ ரயில் வந்தவுடன் தானியங்கிக் கதவு திறந்து எங்களை வரவேற்தது. அந்த ரயிலின் உள்ளே சென்றவுடன், 'அம்மம்மா நாம் இந்தியாவில் தான் உள்ளோமா?' என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். மேல்நாட்டு சினிமாவில் காண்பது போன்ற மிகவும் சுத்தமாக, தட்ப வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதியுடன் நவீனமாக இருந்தது. ஒரு நாளைக்கு பல லட்சம் மக்கள் டில்லியில் மெட்ரோவை பயன்படுத்தினாலும்  இவ்வளவு சுத்தமாக வைத்திருப்பது பெரிய விஷயம் தான்.
மெட்ரோ ரயிலினுள்
டில்லியில் ரோட்டோரக் கடைகளுக்கு பஞ்சமே கிடையாது. எத்தனை வகைகள். எத்தனை கடைகள். இங்கு சாப்பாட்டு ராமன் அவதாரம் எடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் சற்று சுருக்கமாக கையேந்தி பவன்களை பற்றி சொல்லி விடுகிறேன். எமது நண்பரின் அண்ணன் டில்லியில் படித்தால் அவருக்கு பரிட்சயமான கடைகளுக்கு அழைத்துச் சென்றார். முதலில் குல்ச்சா வாங்கித் தந்தார், பின் பன்னீர் பிரட் பஜ்ஜி, ஆலு டிக்கி, ரசகுல்லா, பாணி பூரி, சிக்கன் மோமோ என அனைத்து வகைக்கடைகளிலும் ஒரு வேட்டை தான். எல்லாமே ரோட்டோரக் கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி வந்து விட்டு டில்லி அப்பளத்தை தவற விடுவோமா, அதையும் கொறித்து விட்டோம். இரவு ஒரு கோழிக்கு மோட்சம் கொடுத்துவிட்டு எங்கள் தலை நகர உலாவை முடித்து விட்டு அறைக்கு திரும்பினோம். 

மறு நாள் காலை, டில்லியில் வரலாறு காணாத பனி பொழிந்த அந்த வேளையில் கல்கா நோக்கி செல்லும் ரயில் பிடிக்க புது டில்லி ரயில் நிலையம் நோக்கி சென்றோம். ரயிலுக்காக காத்திருந்த வேளையில் அங்கு நடைமேடையில் ஒரு தள்ளு வண்டியை சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்க அங்கு சென்று பார்த்தோம். அங்கு பூரி விற்றுகொண்டிருன்தனர். பத்து ரூபாய்க்கு எட்டு பூரிக்கள் சப்ஜியுடன் தந்தனர். பூரிக்கு உருளை மசாலா மட்டுமே உண்டு பழக்கப் பட்ட நாக்கு அங்கு பசியின் பிடியில் அந்த நீர் போன்ற சப்ஜியுடன் வயிற்றை நிரப்பியது. 

ஆறு மணிக்கு இந்த ரயிலை பிடித்து கல்கா சென்று, அங்கிருந்து மலை வழியாக சிம்லா செல்லும் டாய் ரயிலில் செல்வதுதான் எங்கள் திட்டம். அந்த டாய் ரயில் நமது ஊட்டி ரயில் போல, அதில் சென்றால் தான் சிம்லா மலைகளின் இயற்கை எழிலை நன்கு அனுபவிக்க முடியுமாம். மணி ஏழானது, பின் எட்டானது, பின் ஒன்பது மணியையும் கடந்தது. தனது சேவை நாட்களில் ஷதாப்தி ரயில் என்றுமே நேரம் தவறியதில்லையாம். எங்கள் அதிஷ்டம் அதையும் தொத்திக்கொண்டது. ஷதாப்தி ரயில் வருமா, டாய் ரயிலை பிடித்து விடுவோமா?        

தொடரும்.... 

1 comment:

  1. தொடர்ச்சி சொல்லுங்கள்

    ReplyDelete