Thursday, March 6, 2014

சாப்பாட்டு ராமன் - புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில் விழுங்கியதும் : சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்ததும்

புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்

இம்மாதம் அரசன் வீட்டு கல்யாணதிற்காக அரியலூர் செல்கையில், அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சரித்திர கோவில்களை பார்த்துவிட்டு செல்வது என்று முடிவுசெய்தோம். காலையில் குடுமியான் மலை குடவரைக் கோவிலில் குடுமியானுடன் துவார பாலகர்களை தரிசித்து விட்டு, பின் சித்தன்ன வாசல் சிற்பங்களின் வர்ண ரகசியங்களை அலசிவிட்டு, உச்சி வெய்யில் வேளையில் நார்தாமாலை சோழ கோவிலை கண்ட பின் மலையில் இருந்து கீழே  இறங்கும் பொழுது ராமனின் வயிர் சத்தம் போடத் தொடங்கிவிட்டது. 

நார்த்தாமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் போது, கைபேசியில் அழைத்த நண்பர் 'சிவகாசிக்காரன்' ராம் குமார், புதுக்கோட்டை வந்து உண்ணும் படி பணித்தார். (சில அலுவல்களால் அவர் வரமுடியாமல் போனது ). புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பழநியப்பா மெஸ் தான் அவர்  எங்களுக்கு பரிந்துரை செய்தது.


உணவகத்தின் பார்கிங் இடம் ஒரு நூறு மீட்டர் முன்பே இருக்க, வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு, 'பழநியப்பா மெஸ்' என்று தெரிந்த பெயர் பலகையை நோக்கி நடந்தோம். பிரதான சாலையில் சற்று சிறிய வாசலுடனே இருக்க, சின்ன உணவகம் என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே  உணவகம் எதிர்பார்த்ததை விசாலமாக இருக்க, கூட்டமாக இருந்த மேசைகளைக் கடந்து உள்ளே இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே, குளிர் சாதன அறைக்கு அருகில் சென்றுவிட்டோம்.

இரண்டு குளிர் சாதன அறைகளுக்கு நடுவில் இருள் சூழ்ந்த குகை போன்று வடிவமைக்கப்பட்ட அறை ஒன்று இருந்தது. உள்ளே அனுமதிப்பார்களா என்று நாங்கள் சற்று தயங்க, எங்களை மேசைப்பணியாளர் உள்ளே அழைத்து அமர வைத்தார். அந்த செயற்கை குகையினுள் அவர் மின் விளக்கை உயிர்பிக்கும் பொழுது மணி நான்கு.         

பொதுவாக இந்த நேரத்தில் பெரும்பாலான உணவகங்கள் மதிய உணவை நிறுத்தும் நேரத்தில் கடைசி ஆட்களாக உள்ளே சென்று விட்டோம். சாப்பாடு மற்றும் பரோட்டா மட்டும் தான் உள்ளது மற்ற அனைத்தும் முடிந்து விட்டது என்று தெளிவாக சொல்லிய பின்னே ஆர்டர் எடுக்கத் தொடங்கினர். பிரியாணி இல்லாதது ராமனுக்கு ஏமாற்றம் என்றாலும் பரோட்டா இருந்தது அவனுக்கு மனம் ஆறுதல் தந்தது.

பரோட்டா வர காத்திருந்த சமயம் சீனுவின் இலையில் இருந்து சுவைத்த மீன் குழம்பின் சுவையானது,  பரோட்டா வேண்டாம் என்று சொல்லிவிட்டு  சாப்பாடு வாங்க ஆவியைத் தூண்டியது. .பரோட்டா  வர காத்திருக்க பொறுக்காமல், சைட் டிஷ் ஆர்டர் செய்யலாம் என்று அழைத்த பொழுது மேசைப்பணியாளர் சட்டென்று வெளியே சென்று விட்டார். ஒரு வேலை என்னென்ன வகைகள் காலியாகாமல் இருக்கின்றன என்று பார்க்கச் சென்றாரோ என்று தன்னுள் எண்ணிக்கொண்டு காத்திருந்தான்  ராமன்.குகைக்குள் திரும்ப வந்த மேசைப்பணியாளர், தன கையில் ஒரு பெரிய செவ்வக வடிவ தட்டை ஏந்தி ராமனின் அருகில் வந்தார். அந்தத் தட்டில் பல வகை உயிரினங்கள் மசாலாக் கலைவையுடன் நாவில் உமிழ் நீர் சுரக்கச் செய்தன. இரால், மீன், கோழி, காடை என     எந்த ஒரு ஜீவனுக்கும் பங்கம் வராத விதத்தில், அனைத்து​ வகைகளிலும் ஒவ்வொரு சைட் டிஷ் ஆர்டர் செய்தான்.


பரோட்டா சாதாரணமாக இருந்தாலும், அந்த பசியில் அது கிடைத்தால் போதும் என்று உண்டுகொண்டிருந்த ராமனுக்கு ஜீவன் தந்தது முதலில் வந்த துண்டு மீன் வறுவல். அந்தச் சிறிய துண்டு மீன் வறுவல் ராமன் வீட்டில் சமைப்பது போன்ற சுவையை தந்ததால் அவன் அதை மேலும் ஒரு ப்ளேட் வாங்கிக்கொண்டான். அடுத்து வந்த கோழியும் காடையும் செட்டிநாடு பாணியில் சுவையாக இருந்தன.       

அங்கு சுவையில் முதல் இடத்தை பிடித்தது இரால் வறுவல் தான். மோறுமொறுவென சரியான மசாலாக் கலவையுடன் சுவை அரும்புகளுக்கு விருந்தாக அமைந்தது. வழக்கம் போல் ஒரு ஹால்ப் பாயிலை அப்படியே முழுசாகத் தன் உணவுக் குழாய் வழியாக வயிரினுள் இறக்கி தன் மத்திய உணவை ராமன் முடித்துக்கொண்டான். ஐவர் மனதார உண்டதற்கு பில் தொகை 834 ரூபாய் தான்.  

சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்தது

அஞ்சப்பர் உணவகம் எனக்கு முதன் முறை அறிமுகமானது பாண்டி பஜார் சென்றபொழுதுதான். அங்கு அவர்களின் சேவையும் உணவின் சுவையும் செட்டிநாடு பாணியில் அருமையாக இருக்க என் மனதில் நன் மதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் அசோக் நகரில் ஒரு நிகழிச்சியில் பங்குபெற்று வீடு திரும்பும் பொழுது உணவு உண்ண உணவகம் தேடினோம்.  அசோக் நகர் வட்டாரத்தில் இருக்கும் பிரதான உணவகங்கள் சரவண பவன், கே.எப்.சி. , மெக்.டொனால்ட்ஸ், அஞ்சப்பர், திண்டுக்கல் தலப்பாகட்டி.           

அஞ்சப்பரில் உன்பது என்று ஒரு மனதாக முடிவு செய்து அந்த உணவாக வாசலை அடையும் பொழுது மணி 9:35. கீழ் தளத்தில் கூட்டம் மிகுதியாக இருந்ததால், முதல் மாடிக்கு சென்று அமர்ந்தோம். மேசைப் பணியாளர் மற்ற மேசைகளை கவனித்துக் கொண்டிருக்க, என்ன உணவு ஆர்டர்  செய்வது என்று முடிவு செய்துகொண்டோம். எங்கள் மேசைக்கு அவர் வரும் பொழுது மணி 9 : 45. இருவர் மட்டும் தவிர்த்து மற்றவர் அனைவரும் பிரியாணியும்தந்தூரியும் ஆர்டர் செய்தோம். இருவர் தோசை மற்றும் நான் ஆர்டர் செய்தனர்.   

9:52க்கு மேசைப் பணியாளர் மீண்டும் திரும்பி வந்து பிரியாணி தீர்ந்து விட்டதாகவும், ப்ரைட் ரைஸ் மட்டும் தான் இருப்பதாக கூறினார். நண்பர் ஒருவர்  கோபம் கொண்டு 'ஆர்டர் எடுக்கும் முன்னாடி எது இருக்கு இல்லை என்று பார்க்க மாட்டிங்களா?' என்று சினங்கொள்ள , மேசைப் பணியாளர் 'நான் ஆர்டர் எடுக்கும் போது இருந்தது, அதற்குள்ளேயும் வேறு டேபிள்கு போயிடுச்சு' என்றார். வேறு வழியின்றி மீண்டும் ஆர்டர் கொடுத்தோம்.        

மணி 10:01. மீண்டும் அவர் திரும்பி வந்து 'பரோட்டா, இடியாப்பம், நான் மட்டும் தான் இருக்கிறது' என்றார். மெனு கார்டில் இருக்கும் ஒரு உணவு வகை ஆர்டர் கொடுத்த பின் இல்லை என்று மறுமொழி சொல்லியதில் அவருக்கு துளியும் வருத்தம் இல்லை. ஒரு மக்கள் சேவை வேலையில் இருப்பவருக்கு, மக்கள் நோகாமல் பணிவாக பதில் சொல்லவும் தெரியவில்லை. 'அது இல்ல. இதுதான் இருக்கு. என்ன வேணும்?' இது போலத் தான் இருந்தது அவர் கொடுத்த பதில்கள். எங்கள் கோபம் பசியுடன் போட்டியிட்டு,  இந்நேரத்தில் வேறு உணவகம் தேடிச் செல்ல முடியாததால் இறுதியில் பசியே வென்று,  பரோட்டா, இடியாப்பம், நான் வகைகளை மீண்டும் ஆர்டர் செய்தோம். 

முதலில் ஆர்டர் செய்த தோசையும், ஒரு நானும்,  இரு தந்தூரிகளில்  ஒன்று மட்டும் முதலில் 10 15க்கு வந்தது. அடுத்து இடியாப்பமும் பரோட்டாவும் 10:20 க்கு வந்தது. இருவர் மட்டும் இடியாப்பம் பரோட்டா ஆர்டர் செய்தோம், மற்றவர்கள் நான் தான் ஆர்டர் செய்தனர். அனைவரின் பசியும் அடங்கத் தொடங்கிய 10:27 க்கு நான் வந்தது. நான் வந்து பத்து நிமிடங்கள் கடந்தே இரண்டாவது    தந்தூரி வந்தது. 

உணவு தாமதமாக வந்தாலும், அதன் சுவை படு கேவலமாக இருந்தது. அந்த நான்கள் சைக்கிள் சக்கரம் செய்யும் ரப்பரின் பதத்தில் இருந்தன. அஞ்சப்பரில் நான் இதவரை இவ்வளவு மோசமான சுவையும் சேவையும் கண்டதில்லை.   அசோக் நகரில் இருக்கும் அஞ்சப்பர் செல்லும் நண்பர்கள் தங்கள் பொறுமையை சோதனை செய்ய நல்ல உணவகமாக இருக்கும் என்பது ராமனின் எண்ணம்.         ​

---------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் வாசகர் கூடத்தில் எழுதிய பதிவை வாசிக்க இங்கு சொடுக்கவும் :

முகில் கண்ணா அசத்திட்டடா நீ!


11 comments:

 1. "சுவையான' அனுபவங்கள்!

  ReplyDelete
 2. உங்களின் எண்ணம் பலருக்கும் உதவும்...

  ReplyDelete
 3. புதுக்கோட்¬ பழனியப்பா மெஸ் போன சமயத்துல இருந்த அசுரப் பசியில நானே ராமனா மாறி விழுங்கித் தள்ளினேன். ஆனா அந்தப் பசியிலயும் கடமையை(?) மறக்காம போட்டோ எடுத்துட்டு சாப்பிட்ட ராமனின் சேவை(!) உணர்ச்சியை வியக்கிறேன். அங்கு சாப்பிட்ட உணவு வகைகளைப் பொறுத்தமட்டில் ராமனின் கருத்தை நானும் ‘டிட்டோ!’ அப்புறம்... இனி ‘அ’வில் துவங்கும் உணவு விடுதிகளுக்கே போகக் கூடாது என்று அன்றைய இரவு நொந்த அனுபவத்துக்கப்புறம் நானும் சிவாவும் முடிவு பண்ணிட்டோம் தெரியுமா?

  ReplyDelete
 4. யோவ் என்னய்யா ....! இலையில ஒரு மலையையே குமிச்சு வச்சுருக்காப்புல தி.போ.சீ ...?

  ReplyDelete
  Replies
  1. கண்ணு வைக்கதேப்பா.. வளர்ற புள்ள..

   Delete
  2. இது ரெண்டாவது ரவுண்டுங்கறது உபரி தகவல்..

   Delete
 5. நல்லவேளை, அன்னைக்கு திங்கட் கிழமையா போச்சு இல்லேன்னா, அந்த அஞ்சப்பர் ஹோட்டல்ல என்ன நடந்திருக்கும்னே தெரியாது..

  ReplyDelete
 6. எங்க ஊருக்கு வந்திட்டு இரண்டு முக்கியமானவற்றை (மிஸ் பண்ணி) இழந்திட்டீங்களே? வரும்போதே கேட்டிருக்கலாம்ல? 1.திருமயம் கோட்டையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்திய பாறை ஓவியங்கள். பார்க்க -http://valarumkavithai.blogspot.in/2013/11/5000.html
  2. திருவையாறு அசோகா அல்வா, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி எல்லாம் இப்ப எல்லா ஊர்லயும் கிடைக்கும் ஆனா, எங்க புதுக்கோட்டை முட்டை மாஸ் வேற எங்கயும் கிடைக்காது. மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ்! அடுத்த தடவை சொல்லிட்டு வாங்க டபுள் மாஸ் போடச் சொல்லிடுவோம்!

  ReplyDelete
 7. நல்லதொரு அனுபவம்! ரசனையாக எழுதியிருக்கின்றீர்கள்! அந்த மேசையில் உள்ளவை எல்லாம்....ம்ம்ம்ம்ம்ம்ம் சாப்பாட்டு ராமன் என்ற தலைப்பிற்காகவோ??!!!!!!!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 8. சுவை..... உங்கள் பதிவில்.... வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. எங்கள் ஊர் பழனியப்பா வந்து சாப்பிட்டதற்கு நன்றி. 40 வருடங்களாக தரம் குறையாத உணவு இதன் சிறப்பு. அஞ்சப்பர் ஒரு சாக்கடை . தரமற்ற உணவுகள். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பப் பூ சர்க்கரை . சென்னை வாசிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete