Monday, December 8, 2014

சாப்பாட்டு ராமன் - நாயர் மெஸ் (சேப்பாக்கம்) & சோழிங்கநல்லூர் பானி பூரி

நாயர் மெஸ் (சேப்பாக்கம்)

உயிரின்றி இருபத்து ஏழு நாட்கள் செயல்படமால் இருந்த எனது கணினியை, உயிர்பிக்கும் பொருட்டு சில சாதனங்கள் வாங்க என் நண்பனுடன் ரிட்சி ஸ்ட்ரீட் சென்றிருந்தேன். அன்று தான் என் நண்பன், பல மாதங்கள் செயல்படாமல் இருந்த ராமனை மீண்டும் அவதரிக்கச் செய்தான். 'இங்க நாயர் மெஸ்னு ஒரு கடை இருக்காம், அங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அங்க போய் சாப்பிடுவோமா?' என்று கேட்டவுடன், பல நாள் சுவை மறந்திருந்த நாக்கு துடிக்க, உடனே ராமனும் வழிமொழிந்தான். 

வாலாஜா சாலை வரை சென்று, சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கிற்கு முன், வலது புறம் இருந்த முஹம்மத் அப்துல்லா சாலையில் திரும்பினோம். என் நண்பன் அந்தக் கடைக்கு சென்றதும் கிடையாது, அது எங்கிருக்கும் என்றும் தெரியாது. அவனுக்கு தெரிந்த வாய் வழி ஞானம் அந்தச் சாலை வரை தான். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் வழி கேட்க, ஒரு கார் சென்றால் வேறு வாகனங்கள் செல்ல கூட வழியில்லாத ஒரு சின்ன முட்டுச் சந்தை எங்களுக்கு காட்டினர். சில அடிகள் அந்த சந்தினுள் சென்றவுடனே எங்கள் இரு சக்கர வண்டியை, ஏற்கனவே  ஓரமாக நிறுத்தப் பட்டிருந்த வண்டிகளுடன் நிறுத்திவிட்டு மெல்ல நடந்தோம்.

அந்த சந்தின் இறுதிக்கு வந்த போது, ஒரு சிறிய உணவகம் தென்பட்டடது,  அங்கு எந்த ஒரு விளம்பரப் பலகையும் இல்லாததால் சற்று தயங்கி, எதிரில் வந்த ஒருவரிடம் விசாரிக்க, அவர் உடனே  'இதுதாங்க நாயர் மெஸ்' என்று சிரித்தார். கீழ் உள்ள புகைப்படத்தில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருக்க, மேலே குளிர் சாதன அறைக்கு சென்றோம். உள்ளே நுழைந்தவுடன் பல அரசு அலுவலகத்தில் இருப்பது  போன்ற உணர்வு தானாகவே வந்து விட்டது. காரணம், இஸ்த்ரி போட்டு இன் செய்யப்பட்ட சட்டைகளுடன், நரைக்க தொடங்கியும், நரைத்து விட்ட முடிகளுடனும் அங்கு நிறைந்திருந்த அதிகாரிகள். 'வழக்கமாக அரசு அதிகாரிகளை மதிய உணவு வேளைகளில் அங்கு காண முடியுமாம். பல பெரிய தலைகளும் இங்குதான் உணவு வாங்குவார்கள்' என்ற தனது செவி வழி ஞானத்தை என் நண்பன் என்னுடன் பகிர்ந்து கொண்டான்.

Image courtesy - Google

மேசைப் பணியாளர், தலை வாழை இலையை மேசை மேல் விரித்தவுடனே எனக்கு அந்த இடத்தின் மீது ஒரு மதிப்பு தோன்றியது. பொதுவாக சென்னையில் வாழை இலையில் உணவு பரிமாறும் இடங்கள் மிகக் குறைவு. மிகப் பெரிய சைவ உணவகங்கள் கூட தட்டில் இலையை வெட்டி வைத்து தான் உணவு பரிமாறுகின்றனர்.  என் நண்பன் தனக்கு ஒரு அசைவ சாப்பாடு சொல்ல, நான் எனக்கு ஒரு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தேன். மெனு கார்ட் என்று ஒன்று அங்கு இல்லாதது குறிப்பிடத்தக்கது.

Image courtesy - Google

ஒரு பொரியல், கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், மோர் என்று வழக்கமான வகைகளுடன், மீன் குழம்பு அல்லது கோழி குழம்பு அல்லது மட்டன் குழம்பு தேர்வு செய்து கொள்ளலாம். இவைகளுடன் அளவில்லா சாப்பாடு. என் நண்பன் தனக்கு ஒரு வஞ்சரம் மீன் ப்ரை ஆர்டர் செய்திருந்தான். வீட்டு சாப்பாடு போல் அனைத்தும் சுவையாக இருந்தது.

வஞ்சர மீனுடன் சாப்பாடு
நாயர் மெஸ் என்பதால் கேரளா வகை பிரியாணி வந்து விடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் காத்திருந்த பொழுது, தமிழக மட்டன் பிரியாணியாக உள்ளே ஒரு முட்டையுடன் வந்தது. மட்டன் பிரியாணிக்கும் கோழி முட்டைக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியாதபோதும், பல கடைகளில் காரணம் தெரியாத இந்த வழக்கம் தொத்திக்கொண்டு விட்டது. பிரியாணி சுவையும் நன்றாகவே இருந்தது. இங்கு என்னை ஆச்சரியப் படுத்திய விசயம் அந்த பிரியாணியுடன் வந்த ஒரு லெக் பீஸ் தந்தூரி சிக்கன். அங்கு இருந்த கூட்டத்தில் சற்றும் ஒட்டாத இரு வாலிபர்களாக, தந்தூரி சிக்கனைக் கண்டு நான் 'ழே' என்று முழிக்க, 'அது பிரியாணியுடன் வரும் காம்போ' என்று அந்த மேசைப் பணியாளர் விளக்கினர்.        

சிக்கன் தந்தூரியுடன் பிரியாணி 

சுவையான தரமான உணவை உண்ட ஒரு திருப்தி இருந்தபொழுதும், அந்த கம்போ தந்தூரியால் பில் எவ்வளவு வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.  பில் வந்தவுடன் எனக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மட்டன் பிரியாணியின் காம்போ விலை வெறும் நூற்று அறுபது ரூபாய். பொதுவாக எல்லா உணவகங்களிலும் இருக்கும் மட்டன் பிரியாணியின் விலை தான் என்பதால் எனக்கு அந்த தந்தூரி சிக்கென் இலவசமாக வந்தது போல் தோன்றியது. நண்பன் உண்ட அசைவ சாப்பாடு எழுபது ரூபாய். வஞ்சரம் ப்ரை நூற்று என்பது ரூபாய். 

பில் செலுத்தியபோழுது அனைவருக்கும் போல் எங்களுக்கும் ஒரு மலை வாழைப்பழமும் ஒரு பீடாவும் இலவசமாக வழங்கினர். சாப்பாடு மற்றும் பிரியாணி பிரியர்களுக்கு சுவையுடன் கூடிய தரமான மலிவு விலை உணவு இங்கு உண்டு.       

சோழிங்கநல்லூர் பானி பூரி 
பொதுவாக தமிழகத்தில் கிடைக்கும் பானி பூரியில் அசல் வடக்கு சுவை இருப்பது இல்லை என்று பல நாள் குறை பட்டிருந்த ராமனுக்கு, அந்தக் குறையை தீர்க்கும் விதத்தில் பானி பூரி கிடைக்கின்றது என்றால், ராமன் செல்ல மறுப்பானா? 

சோழிங்கநல்லூர் சந்திப்பின் அருகில் கரூர் வைஸ்யா வங்கி செல்லும் சர்விஸ் சாலையில் ஒரு பானி பூரி கூடையுடன் இன் செய்த சட்டையுடன் ஒரு ஆபிசர் போல கம்பிரமாக காட்சி தந்தார் அந்த வடக்கு நண்பர்.  கடை தொடக்க நேரத்திலேயே நாங்கள் சென்றதால், அவர் தயார் செய்துகொண்டிருந்த பொழுது  ஹிந்தியில் பேசியதை என் நண்பர் மொழி பெயர்த்தது: 

சென்னையில் அசல் பானி பூரி சுவையுடன் தினமும் மாலை  நான்கு மணி முதல் இரவு  பத்து மணி வரை வியாபாரம் செய்துவருகிறேன்.  சாலையின் மறுப்பக்கம் accenture கம்பெனி வாசலில் இவருக்கும் அந்தக் கடையும் என்னுடையது தான்.


ஒரே இடத்தில இரண்டு கடைகள் இருக்கும் பொதும், இவர் கடையில் பானி பூரி வாங்க மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்று பெருமையுடன் கூறினார்.   அவரது அந்த பாணி, மிகவும் காரமாக அசல் வடக்கு சுவையுடன் இருப்பது தான் அவரது கைவண்ணம். பத்து ரூபாய்க்கு ஆறு பூரிகள். ராமனால் ஒரு ரவுண்டுடன் நிறுத்த முடியவில்லை. மற்றுமொரு ரவுண்டு சென்றான்.

சுக்கா பூரி தயார் நிலையில் 
வடக்கு ஸ்பெஷல் பானி பூரி என்றாலே கடைசியாக கொடுக்கப் படும் சுக்கா பூரி தான். சுக்கா பூரி என்பது தண்ணி இல்லாமல் வெறும் பூரியின் உள் உருளை மசாலா கலப்பு சேர்ந்து தரப்படுவது. இவர் அந்த சுக்கா பூரியில் உருளை மசாலாவுடன், மேலும் சில மசாலா வகைகளை இணைத்து பினிஷிங் டச்சாக எலுமிச்சை சாரை பிழிந்து தந்து ராமனை தன் வசப்படுத்திவிட்டார். 

9 comments:

 1. அடுத்த முறை சென்னக்கு வரும் பொழுது நாயர் கடைக்கு சென்று விட வேண்டியதுதான்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 2. ரவுண்டு கட்டி அடித்ததை ரசித்தேன்... சுவைத்தேன்... ஹா...ஹ....

  ReplyDelete
 3. அவ்வப்போது நல்ல உனவு வகைகளை அடையாள‌ம் காட்டி வருகிறீர்கள்! வெளியூர் செல்கையில் இந்த கண்டு பிடிப்புகள் மிக உதவியாக இருக்கும்! இனிய நன்றி!!

  ReplyDelete
 4. சற்றே இடைவெளிக்குப் பிறகு ராமனின் வருகை! :)

  ரசித்தேன் ரூபக்.....

  ReplyDelete
 5. ராமனை மதுரையில் சந்தித்தது மகிழ்ச்சி.

  சின்னதா ஒரு திருத்தம். பாணி பூரியை பானி பூரி என்று மாற்றலாம்.. தண்ணீரில் முக்கி எடுக்கறாங்களே!

  இன்னும் சில ஒற்றுப்பிழைகள் இருந்தாலும்..... பானி பூரி தின்னும்போது கற்கள் கடிபட வேணாமேன்னு இத்தோடு நிறுத்திக்கறேன்.

  டீச்சரா இருப்பது ரொம்பக் கஷ்டம்:(

  ReplyDelete
 6. ரசித்தோம் ராமனை - ரூபக்!

  ReplyDelete
 7. NAYAR MESS FOOD IS NOT SUPER.ITS NOT WORTHY.

  ReplyDelete
 8. Nair mess food not good as it was before

  ReplyDelete