சில அலுவல்கள் காரணமாக எழுத்துக்கு நெடுநாள் இடைவெளி விட்டிருந்தேன். மீண்டும் உங்களை உற்சாகத்துடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
சென்ற மாதத்தின் தொடர்ச்சி
பெண்களின் பின் சென்றால் அது எப்போழுதும் ஏமாற்றம் தான் என்பது பெண்களின் பின்னழகை ரசித்து பின் தொடர்ந்து, முன்னழகைக் கண்டு மனம் புண்ணான பல ஆண்கள் அறிந்த உண்மை என்பதால் அந்த சம்பவத்தை பற்றி மேலும் பேசப் போவதில்லை.
கல்யாண சீசன்
என்னமோ எதோ தெரியவில்லை, இந்த மாதம் எதிர்பாராத பல கல்யாண சேதிகள் என் காதுக்கு வந்து சேர்ந்தன. ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், மறுபுறம் மனதை ஒரு இனம் தெரியாத சோகம் வந்து சூழ்ந்து கொண்டது. சில திருமணங்கள் முன்பே திட்டமிட்ட பொழுதும் நாட்கள் நெருங்கும் பொழுது தான் பிரிவின் வலி மேலும் அதிகமாகின்றது.
இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிகின்றது.
1.எத்தனை தமிழ் சினிமாவில் கேலி செய்த பொழுதும், தமிழ் நாட்டில் இன்னும் அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு மௌசு குறையவில்லை.
2.ஆண்-பெண் நட்பு என்பது அந்தப் பெண்ணின் திருமணம் வரையில் தான். எவ்வளவு தான் மனிதர்கள் தாங்கள் நாகரிகமாகவும் மிகவும் 'பிராக்டிகலாகவும்' மாறிவிட்டதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருக்கும் மிருக குணமான சந்தேகம் இன்னும் மாறவில்லை.
மாங்காய் லஞ்சம்
சிப்காட் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு மாமரம் உண்டு என்பதை கவனிக்கும் அளவு கூட நேரம் இல்லாத சாபம் பெற்றவர்கள் சக மென்பொருள் தோழர்கள். ஒரு நாள் பேருந்து வரக் காத்திருக்கும் பொழுது 'தொப்' என்ற சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்த பொழுது மூன்று சிறுவர்கள் தேர்ந்த கல் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு மாங்கனி ஏற்கனவே இருந்தது. நான் எறிய பேருந்தில் அவர்களும் ஏற, நாங்கள் நால்வரும் ஓட்டுனரின் இடது பக்கம் இருக்கும் சீட்டில் அமர்ந்தோம்.
மூவரில் சற்று உயரமாக இருந்தவன் ' அண்ணா இந்தப் பையன் கிட்ட பாஸ் இல்ல. செக் பண்ணுங்க' என்று சற்று குள்ளமாக இருந்த சிறுவனை ஓட்டுனரிடம் மாட்டிவிட்டான்.
டோல் கேட்டில் வண்டியை நகர்த்திக் கொண்டே ஓட்டுனர் ' உன் வீடு எங்கடா' என்று கேட்க, அந்தச் சிறுவன் ஒரு வினாடியும் தாமதிக்காமல் 'துபாய்ல', என்று சொல்ல சற்று சத்தமாகவே நான் சிரிக்க, ஓட்டுனர் முகம் காற்று போன சைக்கிள் டுயுப் போல சுருங்கியது.
நாவலூர் - சத்யபாமா பேருந்து நிருந்தங்களுக்கு இடையில் ஒரு மாந்தோப்பு சாலை ஓரமாக உண்டு. அதைக் கடக்கும் பொழுது அந்த சிறுவர்கள் ' பார்ரா எவ்வளோ மாங்கா' என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டு, 'அண்ணா அந்தத் தோப்பு பக்கத்துல ஓரமா நிறுத்துங்க' என்று பணிந்தான்.
ஓட்டுனரோ 'இங்க ஸ்டாப் எல்லாம் இல்ல, அடுத்த ஸ்டாப்ல இறங்கி நடந்து வாங்க' என்று மறுக்க, அந்தச் சிறுவனோ 'நீங்க திரும்பி வரப்ப மாங்கா தர்றேன்' என்று வியாபாரம் பேசத் தொடங்கினான்.
மாங்காய்த் திருட சிறுவர்கள் லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு சமுதாயம் மேலோங்கியுள்ளதைக் கண்டு அகமகிழ்ந்தேன்.
எங்கும் தமிழ்
இந்த மாதம் அதிக நேரம் மருத்துவமணையில் செலவழிக்கும் பொழுது என்னைச் சிந்திக்க வைத்தது ஒரு பெயர் பலகை.
Out-Patients - புறநோயாளிகள்
In-Patients - உள் நோயாளிகள்
புறம் என்பதிற்கு எதிர் அகம் தானே. அப்படியென்றால் அகநோயளிகள் என்றுதானே இருக்க வேண்டும். அல்லது உள் என்பதிற்கு எதிர்மறையாக 'வெளி நோயாளிகள்' என்றல்லவா இருக்க வேண்டும். இது என்னையா குழப்பம்?
சேவை மையம்
இரவு தூங்கப் போகும் பொழுது என் கைபேசியை சார்ஜில் போட்டு விட்டு பத்து மணி நேரம் கடந்த பின்பும் 75% மட்டுமே சார்ஜ் ஏறி இருந்தது. 100% சார்ஜ் பூர்த்தி ஆனாலே ஆறு மணி நேரம் தான் தாங்கும், இப்படி பொறுமையாக சார்ஜ் ஏறினால் என் பாடு அதோ கதிதான் என்பதால் இணையத்தில் தாம்பரத்தில் இருக்கும் சாம்சங் சேவை மையத்தை தேடித் பிடித்து அங்கு சென்றடையும் பொழுது மாலை ஆறு மணி பத்து நிமிடம். சேவை மைய வரவேற்பில் இருந்த அம்மையார் ஆறு மணியுடன் அவர்கள் சேவை முடிந்ததால் நாளை வரச் சொன்னார். நானோ எனக்கு இரவுப் பணி இருப்பதால் சற்று தாமதமாகி விட்டது, நாளை மீண்டும் வருவது கடினம், இன்றே எடுத்துக் கொள்ளுங்கள் என்று போராடினேன். மேலும் பத்து நாட்கள் கடந்தால் எனது வார்ரன்ட்டி காலம் முடிவடையும் என்ற காலக் கெடு வேறு.
அந்த அம்மையார் 'செக் பண்ணி என்ட்ரி போடணும். ஒரு மணி நேரம் ஆகும். நாளைக்கு வாங்க' என்று என் வேண்டுகோளுக்கு இணங்காமல், சக அலுவலரிடம் 'ஆறு மணிக்கு கதவ சாத்த சொன்னன்தான உன்ன' என்றவுடன், எனக்கு மேலும் அங்கு கெஞ்ச பிடிக்காமல் வீடு திரும்பினேன்.
மறுநாள் இரவுப் பணி முடித்து, என் உறக்கத்தை பாதியில் தடைபோட்டு விட்டு, கதிரவன் சுட்டெரிக்கும் நடுப்பகலில் அந்தச் சேவை மையம் சென்றடைந்தேன். அதே அம்மையார். இம்முறை என்னுடைய பெயர் மற்றும் கைபேசி எண்ணை, ஒரு கோடு போட்ட சிறு நோட்டில் குறித்துக் கொண்டு 'பத்து நாள் கழித்து புதுசு வந்தவுடன் கால் பண்ணுவோம்' என்றார் . 'நேத்து என்னமோ செக் பண்ணனும், ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னது' என்று எனக்குள் ஒரு கோவம் எழுந்த போதும், எனது சுபாவம் அதை விழுங்கி விட அமைதியாக வீடு திரும்பினேன்.
பத்து நாட்கள் கழித்து அழைப்பு வர, எனது பழுதடைந்த சார்ஜர், மற்றும் ரசீதின் நகலுடன் சென்றேன். அன்றும் அதே அம்மையார். ஒரு வழியாக எனது சார்ஜரை திரும்ப வாங்கிக்கொண்டு புதுசு கொடுத்தார். இறுதிவரை அதை அவர் முதல் நாள் சொல்லியது போல் செக் செய்யவே இல்லை. ஆனால் இம்முறை 'ரூபக் சார்! ரூபக் சார்' என்று ஒரே மரியாதைதான். நான் வலையில் எழுதிவிடுவேன் என்ற பயமோ?
கவனம் தேவை
OMR சாலையில் செல்லும் கல்லூரி வாகனங்களில் எழுதி இருக்கும் வாசகம் 'கல்லூரி வாகனம் கவனம் தேவை' . இதற்கு பல நாட்களாக தவறான அர்த்தம் புரிந்து கொண்டிருந்தேன். சமீபத்தில் அந்த கல்லூரி வாகனம் ஒன்று என்னை சாலையில் கடந்த பொழுதுதான் அந்த வாசகத்தின் உண்மையான அர்த்தம் எனக்கு புரிந்தது. கல்லூரி வாகனம் வந்தால் நாம் கவனமாக ஒதுங்கி செல்ல வேண்டும் போல. OMR சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வாசகத்தின் அர்த்தம் புரியாமல் இருக்க முடியாது.
மாத்தி பேசு
சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் C51 ஏறி காலை ஏழு மணிக்கு தாம்பரம் சென்றுகொண்டிருக்கையில், சுங்கச் சாவடிக்கு முன் குடும்பமாக நால்வர் பேருந்தில் ஏறி, ஸ்டேஜ் க்ளோஸ் செய்துகொண்டிருந்த நடத்துனரிடம் அவர்கள் 'தாம்பரம்' என்று சொல்ல, அவர்களை இருக்கையில் அமரும்படி நடத்துனர் சைகை செய்துவிட்டு தன் பணியை தொடர்ந்தார்.
தம் பணியை முடித்து அவர்களிடம் டிக்கெட் கொடுக்க அணுகும் பொழுது நால்வரிடமும் ஏற்கனவே ஒரு நாள் பாஸ் இருந்தது. அவர்கள் நால்வருக்கும் சேர்த்து ஸ்டேஜ் கிளோஸ் செய்த நடத்துனர் சற்றே கோபமுற்று சண்டைப் பிடிக்கத் தொடங்கினார். சண்டை வலுக்க அவர்கள் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்டனர்.
புலம்பிக் கொண்டே நடத்துனர் மற்றவர்களிடம் டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார். ஒருவர் 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்க, நடத்துனரின் முகம் சிவக்க, 'காலையில நோட்டு நோட்டா நீட்டனா. நான் எங்க போறது' என்று அவர் தன் வாயில் வயலின் வாசிக்க தொடங்கும் பொழுது, அந்த 500 ரூபாய் தாளை நீட்டியவர் 'அவங்க அந்த ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஏறிய உடனே காட்டியிருக்கணும்' என்றவுடன் நடத்துனரின் கோபம் மீண்டும் அவர்கள் மேல் திரும்ப, இவருக்கு சில்லரையும் கிடைத்தது.
Octopus
ஒரு தனியார் தொலைகாட்சியில், சமையல் நிகழ்ச்சி ஒன்றில் octopus சீன முறையில் சமையல் செய்யும் காட்சியை பார்த்தது முதல் அந்த உணவை உண்ண வேண்டும் என்று எண்ணும் பொழுதெல்லாம் நாவில் உமிழ் நீர் சுரக்கின்றது. நான் எப்பொழுது சீனா சென்று அதை உண்பது? அது போகட்டும். இந்த octopus என்றால் தமிழில் என்ன?
இன்று வாசகர் கூடத்தில் நான் எழுதிய பதிவு - சொர்க்கத் தீவு
இன்று வாசகர் கூடத்தில் நான் எழுதிய பதிவு - சொர்க்கத் தீவு
Tweet | ||
octopus என்றால் தமிழில் எண்காலி! :)))
ReplyDeleteஎல்லாமே சுவாரஸ்யம் ரூபக்!
//எண்காலி//
Deleteஏன் சார் அர்த்தம் கேட்ட ரூபக்கை இப்படி திட்டறீங்க? ;-)
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்
Deleteஅந்த சாம்சங் பொண்ணு உங்கள் அழகைக் கண்டு ரசிக்க விரும்பி மீண்டும் மீண்டும் அலைய வைத்தாளே என்னவோ...? ஹி... ஹி... ஹி... கல்லூரி வாகனங்களின் அதிவேகத்தை நானும் கவனித்ததுண்டு. அந்த கண்டக்டர் மேட்டர் சுவாரஸ்யம். எதிரிக்கு எதிரி நண்பன்ங்கற மாதிரி அவங்களைத் திட்டினதும் இவருக்குச சில்லரை கிடைச்சிட்டுதே...! என்னது....? சீன உணவுல ஆக்டோபஸ்ஸா...? மனிதன் சாப்பிடாத உயிரினம் சக மனிதன் மட்டும்தான் போலும்!
ReplyDeleteஇப்படித்தான் நான் சென்னை வந்த போது ரிலையன்சில் எதோ கேட்க வேண்டி வாத்தியாரையும் அழைத்துக் கொண்டு போய், அங்கு வேலை செய்யும் பெண், விளக்கி கூறியது புரியாமல் (?!) நான்கைந்து முறை சென்று விளக்கம் கேட்டு வந்த சம்பவம் நடந்தது..ஹிஹிஹி
Deleteகணேஷ் சார் அந்த அம்மணிக்கு காலேஜ் படிக்கற வயசுல பசங்க இருப்பாங்க.
Deleteஆவி - நீங்க எதையும் ஒரு முறை கண்ட வாலிபர் :)
மாறாதைய்யா மாறாது... மனமும் குணமும் மாறாது...
ReplyDeleteவருகைக்கு நன்றி
Delete//கோவம் எழுந்த போதும், எனது சுபாவம் அதை விழுங்கி விட // பொங்கி எழுந்த அந்நியனை அம்பி அமுக்கிவிட.. ஹஹஹா..
ReplyDeleteஹா ஹா ஹா
Deleteதிருட்டு மாங்கா, பேருந்தில் சில்லறை பிரச்சினை ..ம்ம்ம் பல்சுவை தேன்மிட்டாய்....சேவை மையத்தில் ஒரே மரியாதை போல!!
ReplyDeleteவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி :)
Deleteஎனக்கு மிக நெருக்கமான தோழி அவர், திருமணத்துக்குப் பின் அவரிடம் ஒரு முக்கிய தகவல் வேண்டி நான் போன் செய்தபோது எடுக்கவில்லை. அப்புறம் என்ன, இரண்டு மூன்று sms மட்டும் அனுப்பி பதில்களை sms மூலம் பெற்றுக்கொண்டேன்.
ReplyDeleteபெண்கள் உடன் நட்பு நம் சமூகத்தில் சில காலம் வரை தான்
Deleteஅந்த சாம்சங் பெண்ணிடம் www.rupakram.com இல் எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தீர்களா? அல்லது ஒருவேளை அவர் கூகிளில் rubakram என்று தேடியிருப்பாரோ!
ReplyDeleteஆனால் அவர் வயதிற்கு என்னை ஏன் தேடவேண்டும் . அந்த அம்மணிக்கு காலேஜ் படிக்கற வயசுல பசங்க இருப்பாங்க
Deleteஅத்தனையும் அருமை..பஸ்பாஸ் கண்டெக்டர் கோபம்தான் புரியல..சென்னைல இருந்தா புரிஞ்சிருக்குமோ என்னவோ?தேவயில்லாத வர்ணிப்ப்புகளே இல்லாம தெளிச்சி விட்டிங்க..
ReplyDeleteகார விட்டுட்டு பஸ்ல போறது யார பார்க்கவோ? ஆவி ஸ்பை கொஞ்சம் கவனிங்க...வர வர ஆளு சரியில்ல.
இது யாரையோ குத்துற மாதிரி இருக்கே :-)
Deleteஎல்லா இடத்துக்கும் கார் ல போனா கம்பனிக்கு கட்டுபடி ஆகாது
Deleteஒவ்வொரு அனுபவமும் சுவையாக ரசிக்கும் படி பகிர்ந்தது சிறப்பு! நன்றி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி
Delete'ரூபக் சார்! ரூபக் சார்' என்று ஒரே மரியாதைதான். நான் வலையில் எழுதிவிடுவேன் என்ற பயமோ
ReplyDelete>>
நீங்க பதிவர்ன்ற
உண்மையை சொல்லிட்டீங்களா!?
பாடிகார்ட் முனீஸ்வரன் மேல சத்தியமா இல்லைங்க
Deleteமாங்காய் பேரம் - :(((
ReplyDeleteசாம்சங் அனுபவம் - எனக்கு நோக்கியா சேவை மையத்தில் கிடைத்த அனுபவத்தினை நினைவூட்டியது..... ரொம்பவே படுத்தினாங்க - ஒரு பேட்டரி மாற்ற.....
நடத்துனர் - எதிரிக்கு எதிரி நண்பன்! 500-ரூபாய் நோட்டுக்காரர் சரியாகத் தான் பிடித்திருக்கிறார்!
இனிமையான தேன் மிட்டாய். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரூபக்.
எல்லா சேவை மையங்களிலும் எரிச்சல் தான் கிடைக்கின்றது. நாம் பொருள் வாங்கும் பொழுது அவர்கள் முகத்தில் தோன்றும் புன்னகை அந்த பொருளை பழுது பார்க்கும் பொழுதும் தோன்றினால் நன்றாக இருக்கும்
Deleteஆண்-பெண் நட்பு என்பது அந்தப் பெண்ணின் திருமணம் வரையில் தான். எவ்வளவு தான் மனிதர்கள் தாங்கள் நாகரிகமாகவும் மிகவும் 'பிராக்டிகலாகவும்' மாறிவிட்டதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருக்கும் மிருக குணமான சந்தேகம் இன்னும் மாறவில்லை.//
ReplyDeleteமிகவும் சரியே ரூபக்!
புறத்திலிருந்து வருவதால் புற நோயாளிகள்! உள்ளே இருப்பதால் உள் நோயாளிகள்! ஆனாலும் தங்கள் கேள்வி சரிதான்! போனா போகுது விடுங்க...இங்க பல இடங்களில் தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும் அது சரியாக உபயோகிக்கப்படுவதில்லை!
மாங்காய் அருமை!
எல்லாமே நல்ல விவரணம் கலந்த தேன்மிட்டாய்! ரூபக்!
தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி :) தொடர்ந்து வாருங்கள்
Delete