Wednesday, October 1, 2014

தேன் மிட்டாய் - ஜூன் & ஜூலை 2014

மே மாதத்திற்கு பின் மூன்று மாதங்கள் தேன் மிட்டாய் ஏன் தடை பட்டது என்பதற்கு என்னால் பல காரணங்கள் சொல்ல முடியும். சில சம்பவங்களின் மீது பழி சுமத்தி விட்டு நான் கருணை கோரப் போவதில்லை. எனது பாதையை விட்டு சற்று தடுமாறினேன், மீண்டும் உங்கள் ஆதரவுடன் உற்சாகமாய் எனது எழுத்தை தொடருவேன் என்ற நம்பிக்கையில்....    


தநஉஉஇதசநுகஉ

இது என்ன என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை இந்தப் பதிவின் முடிவில்....


பேருந்து நிழற்குடை 

சென்ற தேன் மிட்டாயில்(மே 2014) நான் OMR சோழிங்கநல்லூரில் பேருந்து நிழற்குடை இல்லாததை பற்றி எழுதியிருந்தேன். அம்மை குணமாகி ஜூன் மாதம் அலுவலகம் செல்லத் தொடங்கிய பொழுது OMR சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் நடப்பதைக் கண்டு வியந்தேன். 'நம்ம தேன் மிட்டாயை யாரோ பெரிய ஆள் படிக்கராங்கப் போல' என்று என்னுள் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. துரைப்பாக்கம் முதல் சிறுசேரி வரை OMR சாலையின் இரு புறமும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரு நிழழ்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் இது வரவேற்கக் கூடிய மாற்றம் என்றாலும், நான்கு கம்பங்களை எழுப்பி நான்கு அடி அகலத்தில் அதன் மேல் தகரத்தை வைத்து விட்டால் மக்களுக்கு நிழல் கிடைக்குமா என்ற கேள்வி வலுக்கிறது. கதிரவன் உச்சியில் இருக்கும் வேளை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த நிழற்குடைகள் தம் பணியை செய்யாதது வருத்தமே.   

டாஸ்மாக் எலைட்       

நாவலூரில் 'கோரமண்டல் பிளாசா' என்று ஒரு மால் உண்டு. ஐந்து மாடிகள் கொண்ட இந்த மாலில் நான்கு ஆண்டுகளாக இயங்கிவருது AGS திரையரங்கம் தான். சில ஆண்டுகளுக்கு முன்  Dominos  மற்றும் சில மாதங்களுக்கு முன் KFC, மற்றும் நான்காவது தளத்தில் உள்ள பூட் கோர்ட்டில் சில பிரபலமாகாத உணவகங்கள் இவை மட்டும் தான் இங்கு இருப்பவை. மீதம் உள்ள கடைகள் அனைத்தும் கட்டுமான வேலை மட்டும் முடிந்த நிலையில் கண்ணாடிக் கதவுகளுடன் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. ஒரு நாள் அலுவலகம் முடித்து விட்டு, படம் பார்க்க அங்கு நுழைவாயிலில் அடி வைத்த பொழுது, நான்கு பெண்கள் ஒரு கடையில் இருந்து வெளியேறுவதைக் கண்டு என் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. அவர்கள் வெளி வந்த வாசலில் 'TASMAC' என்ற எழுத்துக்கள் மின் ஒளியில் ஜொலித்தன. இந்த டாஸ்மாக் தெருமுனையில் இருக்கும் மற்ற டாஸ்மாக்களை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. சூப்பர் மார்க்கெட் போல் பல வெளி நாட்டு இறக்குமதி ரக சரக்குகள் அடிக்கி வைக்கப் பட்டிருந்தன. வரிசையாக பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டு விண்டோ ஷாப்பிங் செய்த பொழுது சில வற்றின் விலைகளையும் கவனித்தேன். சற்று அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுது எனக்கு விளங்கியது இது ஏன் 'டாஸ்மாக் எலைட்' என்று. இதே போல் ஒரு கடையை சமீபத்தில் ஸ்பென்சர் பிளாசாவிலும் கண்டேன். வளர்க குடி ! வாழ்க குடிமக்கள்!                 

களவானிகளும் காவல் துறையும்

நண்பர் ஒருவர் தனது குடும்ப விழாவிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம் அவரது இல்லம் கொள்ளையடிக்கப்பட்டது. சில ஆயிரம் ரொக்கம் மற்றும் சில சவரன் நகைகள் மட்டும் எடுக்கப்பட்டிருந்தன. மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் எதையும் தொட வில்லை. காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சினிமாவில் வருவது போல் அவர்கள் வலை வீசி தேடி கொள்ளையர்களை பிடிப்போம் என்று வசனம் எல்லாம் பேசவில்லை. அடாவடியாக கண்டுபிடிக்க லஞ்சமும் கேட்கவில்லை. 'அவர்கள் பிடிபட்டாலும் உங்கள் பொருள் மற்றும் பணம் கிடைக்காது' என்று நேர்மையாக பதில் சொல்லி விட்டனர். இன்றளவும் அந்த கொல்லையர்கள் பிடிக்கப் படவில்லை. சம்பவம் நடந்த வீடு அந்த வட்டார காவல் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் என்பது குறிப்பிடத்தக்கது.    

உணவு

என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இருக்கும் பண்புகளில் மிகவும் உயர்ந்தது விருந்தோம்பல். மற்றவர்களின் பசியை போக்கும் பொழுது  நமக்கு கிடைக்கும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. எங்கு சென்றாலும் நானாக முன் சென்று பரிமாறும் வேலையை எடுத்துக்கொள்வேன். நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்கு நான் சென்றிருந்த பொழுது அங்கு பந்தியில் பரிமாறும் வாய்ப்பு கிட்டியது. நான் எங்கும் காணாத ஒரு நிகழ்வு அங்கு நடந்தது.   ஒரு 100 பேர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட ஒரு உணவுக் கூடம். வந்தவர்கள் அனைவரும் உணவருந்தி விட, கடைசி பந்தி நடந்து கொண்டிருந்த வேளை. பந்தியின் எல்லையில் இருவர் மட்டும் அந்தக் கூட்டத்துடன் சற்றும் ஒட்டமால் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதுவும் அசுர வேகத்தில். முதலில் அவர்கள் அங்கு திருமணக் கூடத்தில் பணிபுரிபவர்களாக இருக்கும் என்று எண்ணினேன். கடைக் கண்ணால் அவர்களை கவனிக்க தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆட்களிடம் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். ஒரு ஓரமாக நின்றுகொண்டு அவர்களையே கவனித்தேன். அவர்கள் இலைக்கு வந்து உணவில் இரு கை உண்டு விட்டு, மீதம் இருந்த அனைத்தும் அவர்கள் மடியில் இருந்த பழைய டால்டா டின்னிற்குள்  சென்றது. அடுத்து இரண்டு முறை அவர்கள் போதும் என்ற அளவிற்கு நான் பரிமாறினேன். நான் கவினத்ததாக அவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. 

அப்பா ஊட்டு ரோடு 

தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி மார்ஜியானவில் சென்று கொண்டிருந்தேன். பல்லாவரம் கடந்து திருசூலம் அருகில் செல்லும் பொழுது, பழைய ஹீரோ ஹோண்டா CD 100 இல் ஒருவர், வெள்ளை பனியனுடன் அழுக்கான தலை முடியுடன் எனக்கு முன் வந்தார். அவருக்கு முன் ரோட் காலியாக இருந்த பொழுதும் அவர் ஓரம் ஒதுங்காமல் சாலையின் மத்தியிலே சென்றுகொண்டிருக்க, நானும் ஓயாமல் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தேன். வேண்டுமென்றே அந்த ஆசாமி சாலையின் மத்தியில் சென்று கொண்டிருக்க எனக்குள் உஷ்ணம் தலைக்கு ஏறியது. அப்படியே அவனை அடித்து தூக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கோபத்தை அடிக்கி நானும் ஒரு வேஷதாரியாக, சாலை சற்று அகலமான பொழுது அவனை முந்தி சீறிப் பாய்ந்தேன்.

கல்வி      

'நான் அந்த காலத்து SSLC தான், ஆனா அது  இந்த காலத்து B.Scக்கு சமம்' என்று என் தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு. நீங்களும் எங்காவது சில பெரியவர்கள் இப்படி பேசிக் கேட்டிருக்கலாம். இதன் அர்த்தம் எனக்கு விளங்கியதே இல்லை. சமீபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து பார்த்த பொழுது நான் படித்ததற்கும் அதில் தற்போது இருப்பதற்கும் எவ்வளோ மாற்றங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி சற்று எளிமையாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. நான் பள்ளி பயின்ற காலத்திலேயே SSLC முறைக்கும்  CBSE கல்வி முறைக்கும் அத்தனை வித்யாசங்கள் இருக்கும். தற்பொழுது இந்த தரத்தை கொண்டு CBSE மாணவர்களுடன் தமிழக மாணவர்கள் போட்டியிடுவது மிகவும் கடினமாகி விடும். இயற்கையாக இருக்கும் மனித ஆற்றலை வளரவிடாமல், மனப்பாடம் செய்து ஒரு மாணவனின் மூளையை சோம்பேறியாக்கும் இந்த கல்வி முறையை பற்றி என்னவென்று சொல்வது. பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு செய்தி தவறு என்று தெரிந்த போதிலும், அந்த தவறான செய்தியையே பொதுத் தேர்வில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்கள் வற்புறுத்தும் கொடுமைகளும் இங்கு உண்டு.   

        
தநஉஉஇதசநுகஉ

இது நான் அலுவலகம் செல்லும்பொழுது கண்ட ஒரு சுமோ ரக வாகனத்தில் நம்பர் ப்ளேட்டில் எழுதியிருந்தவை. சத்தியமா எனக்கு புரியலைங்க. தமிழ் பற்று தேவைதான். அதற்கென்று  இப்படியா?     

14 comments:

 1. திருமணச் சாப்பாட்டுப் பந்தியில் இப்படி நடப்பதை நானும் பார்த்திருக்கிறேன்! ஒரு வயதான தம்பதியர் அநேகமாகத் தங்கள் பெறக் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்று தெரிந்தது. ஸ்பெஷல் ஐட்டம்ஸ் எல்லாம் மட்டும் பலமுறை வாங்கப்பட்டு மின்னல் வேகத்தில் டிபன் பாக்சுக்குள் மறைந்தன!!!

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற சம்பவங்கள், நமது உணவை வீண் செய்யயும் பொழுது ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட வைக்கின்றது

   Delete
 2. தானத்தில் சிறந்தது அன்னதானம்தான் ரூபக். அவர்கள் தங்களை நம்பியிருக்கும் ஜீவன்களுக்காக உணவு எடுததுச் செல்ல அனுமதித்தது நல்ல செயல். /// உன் இடத்துல நானாயிருந்தா பொறுமையிழந்து போய் மார்ஜியானாவைக் கொண்டு அவன் வண்டியின் பின்பக்கம் இடிச்சுக் கீழ விழ வெச்சிருப்பேன்யா.. நீ நல்லவன்... /// மனப்பாடத் திறமை இருந்த காரணத்தாலதான் சிறுவயதில் நான் முதல் மதிப்பெண் வாங்கினேன்ங்கறது அப்பட்டமான நிஜம். பின்னால நாமளாதான் அறிவை வளர்த்துக்கணும்ங்கற நிலைலதான் இன்னிக்கும் கல்வித்துறை இருக்குது. வாட் டு டூ..? புரியல.... /// தேன் மிட்டாய்ல நீரு எழுதினதும் நிழற்குடை போட்டுட்டாங்களா...? அடாடா... ஓவர்நைட்ல ஒபாமா ரேஞ்சுக்குப் பிரபலமாய்ட்டயே பிரதர்.... அவ்வ்வ்வ்வ் /// நம்ம காவல் துறை கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டு அவங்க பின்னால அலையறது இருக்கே... பட், அவங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.. /// நம்பர் பிளேட்ல இப்படி எழுதறது சட்டவிரோதம்னு நினைக்கறேன். கான்ஸ்டபிள் எப்படி நம்பரைக் குறிச்சுட்டு கேஸ் எழுதுவாராம்..? /// டாஸ்மாக் என்றால் என்ன..? புரியலையே.... ஹி.... ஹி.... ஹி...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா... டாஸ்மாக் அது துபாய்ல இருக்கற ஒரு ஊரு போல :)

   Delete
 3. ரொம்ப நாளைக்கு அப்புறம் சுவையான தேன்மிட்டாய் ரூபக்...

  நானா இருந்தா அந்த பைக் ஆசாமியை நாலு திட்டு திட்டிட்டு வந்திருப்பேன்.....

  இன்னிக்கு குடிமகள்களும் அதிகமாகிட்டு வர்றாங்கங்கிறதுக்கு ஆதாரம் எலைட் கடைகள்...

  ReplyDelete
 4. தங்களின் தேன்மிட்டாய் மிஸ் ஆனதற்கு காரணம் புரிந்தது! தற்போது உங்கள் உடல் நலம் நன்றாகி விட்டதா? பார்த்துக் கொள்ளுங்கள்.

  தேன்மிட்டாய் தங்கள் கைகளில், எழுத்துக்களில் சுவையாக இருக்கின்றது. ஆனால் கசப்பும் தெரிகின்றதே! சம்ப்வங்களைத்தான் சொல்லுகின்றோம்.

  நம்பர் ப்ளேட் சட்ட விரோதமானது! ஏன் யாரும் கண்டு கொள்ளவில்லை?

  திருமணங்களில் அப்படி நடப்பது உண்டுதான்...ஆனால் பாவம் அவர்கள் வறுமை காரணமாக இருக்கலாம்....உங்கள் செயல் பாராட்டத்தக்கதே!

  பெண்களும் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள்! அரசின் சாதனை!
  ம்ம்ம் இந்த டாஸ்மாக் எலைட் பார்த்தோம்....

  போலீஸ்காரர்களின் நேர்மையான பதில்! ஹ்ஹாஹ்ஹ..

  நம் கல்வி முறை மாற வேண்டும்  ReplyDelete
  Replies
  1. உடல் குணமாகி விட்டாலும், அவள் விட்டுச் சென்ற தழும்புகள் இன்னும் மறையவில்லை...

   Delete
 5. தேன் மிட்டாய். - காரம் கொஞ்சம் அதிகம்
  ... :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா . மிக்க நன்றி விஜயன்

   Delete
 6. எங்க வீட்ல திருடு போனப்ப ஏதாவது கொஞ்சம் முடிஞ்சா வாங்கித்தர்ரேன்னாங்க... ஒரு ஆறு மாசம் போலிஸ் ஸ்டேஷனுக்கு அலைந்து பார்த்துட்டு அப்புறம் விட்டுட்டோம்...

  ReplyDelete
  Replies
  1. சட்ட ஒழுங்கு இந்தியாவில் மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது

   Delete
 7. அன்புள்ள அய்யா திரு.ரூபக் ராம்

  வணக்கம்.
  தநஉஉஇதசநுகஉ

  இது நான் அலுவலகம் செல்லும்பொழுது கண்ட ஒரு சுமோ ரக வாகனத்தில் நம்பர் ப்ளேட்டில் எழுதியிருந்தவை. சத்தியமா எனக்கு புரியலைங்க. தமிழ் பற்று தேவைதான். அதற்கென்று இப்படியா?

  நீங்க சொல்வது உண்மைதான்,


  எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
  -மாறத அன்வுடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. நான் தங்களை விட சிறியவன், 'அய்யா' என்று என்னை அழைக்க வேண்டாம். தங்கள் தளத்தை தொடருகிறேன்.

   Delete