Monday, June 16, 2014

முகண் - சிறுகதை

***************************************** BASED ON A TRUE STORY  *******************************
இந்தக் கதை ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை என்றபோதும், இதில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே.   
*******************************************************************************************************
05-May-2049

வழக்கத்திற்கு மாறாக உற்சாகத்துடனும், தன் கணவன் இன்று அனுமதிச் சீட்டுடன் வருவான் என்ற நம்பிக்கையுடனும் தனது படுக்கை அறையை வாசனை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்துக்கொண்டு இருந்தாள் ஈகா. அவளது சிந்தனை முழுவதுமே அவள் கணவன் மீதும் அவன் கொண்டு வரவிருந்த அனுமதிச்சீட்டின் மீதுமே இருந்தது. அன்று காலை மின்னஞ்சல் வழியே அரசாங்கத்திடம் இருந்து 'குழந்தைப்பேறு அனுமதி விண்ணப்பம்' வந்ததில் இருந்து அவளுக்கு தலைகால் புரியவில்லை, திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் குழந்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்க அனுமதிக்காக காத்திருந்தவள் அல்லவா. 

இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ஜீவா தலைமையிலான சர்வாதிகார அரசு 2030 ஆம் ஆண்டு உத்தரவு ஒன்று பிரப்பித்தது. "அரசு அனுமதி இல்லாமல் யாரேனும் பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது. மீறினால் குடியுரிமை பறிக்கப்பட்டு, அன்டார்டிக்காவிற்கு நாடுகடத்தப் படுவர்" என்ற பயங்கர ஆணையை பிறப்பித்திருந்தது. நாள் ஒன்றிற்கு நூறு குழந்தைகள் மட்டும் பிறக்க அனுமதி கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டு, அதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி, பதினைந்து ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய வல்லரசாக இந்தியா உருப்பெற்றுள்ளது. 

ஈகா தன் கணவன் சிவா வருவதை கண்காணிப்பு திரையில் கண்டவுடன், கதவிற்கு பின் சென்று மறைந்துகொண்டு, அவன் உள்ளே வந்தவுடன் அவனை பின் புறமாக கட்டியணைத்தாள். சிவா சற்றும் உணர்ச்சியின்றி அவளை விளக்கிவிட்டு, சோபாவில் சென்றமர்ந்தான். ஏமாற்றத்துடன் அருகில் சென்ற ஈகாவிடம், எதுவும் பேசாமல், அந்த அனுமதிப் பத்திரத்தை வழங்கினான். அதைப் பார்த்தவுடன் அதிர்ந்து போன ஈகா, அவளது மோதிரத்தின் முத்திரை சிவாவின் கன்னத்தில் பதியும்படி நல்ல பலமாக ஒரு முறை அறைந்தாள். 

சிவா கொண்டுவந்த அனுமதியில் குழந்தைப்பெறுவதற்கு மாறாக குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதற்கான அனுமதி இருந்தது தான் அவளது சினத்தின் காரணம். குழந்தை பெற்றுக்கொள்ளும் அனுமதி கிடைத்தபோதிலும், அனாதை குழைந்தையை தத்தெடுத்து வளர்க்கும் அனுமதியை மாற்றி வாங்கி வந்ததால் அவனை தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினாள். எதையும் பொருட்படுத்தாத சிவா, தன் வீட்டு பரணையில் இருந்து ஒரு சிறிய நாற்பது பக்க நோட்டை கொண்டுவந்து அவளிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னான். அதில் தமிழில் எழுதி இருக்கவே ஈகா நிதானமாக எழுத்துக் கூட்டி படிக்கத் தொடங்கினாள்.

30-April-2014

சீனு, சீனி, ஸ்ரீனி, சீனுவாசன், ஸ்ரீனிவாசன் என்று பலரும் என் பெயரை பலவாறு உச்சரிக்கும் அதிர்ஷ்டம் கொண்ட சீனிவாசன் நான். தென்காசி காற்றை சுவாசித்து வளர்ந்த நான் சென்னையின் உஷ்ணக் காற்றை உட்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறேன். பலரைப்போல் அறிவியலில் இளங்கலை பயின்று, முதுகலையில் கணினி பயன்பாட்டு அறிவியல் பயின்று, சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளான சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் இருக்கும் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், பல்லாயிரகணக்கான மனித மந்தையில் ஒருவனாக வேலை பார்க்கும், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களுக்கு சற்றும் மாறாத ஒருவன். 

என்ன வேலை என்று கேட்கின்றீர்களா? உங்களுக்கு மட்டும் சொல்கின்றேன், யாரிடமும் கூறிவிடாதீர்கள், அது பரம ரகசியம். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின், மென்பொருள் இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணி. அந்த இயந்திரத்திற்கும் ஒரு பெண்ணுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஒரு பெண் எப்பொழுது சிரிப்பால் இல்லை அழுவாள் என்று யாராலும் கணிக்க முடியாதோ, அது போலத்தான் அந்த இயந்திரமும். எந்த நேரத்தில் பழுதாகும் என்று யாராலும் கணிக்க முடியாத ஒரு மாய வஸ்து. எங்கள் நிறுவனம் அந்த அமெரிக்க நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின்படி உடனுக்குடன் பழுது பார்க்க வேண்டும் இல்லையேல் எங்களைப் பதம் பார்ப்பார்கள். இங்கு பழுது பார்க்கும் என்னைப் போன்றவர்கள் தான் இந்த அமைப்பின் அடிமட்டம். எப்படி ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றாலும் தோற்றாலும் காரணம் கங்குலி என்பரோ, அப்படித்தான் இங்கு நாங்கள். எங்களுக்கு பழியிலும் புகழிலும் என்றுமே குறைவில்லை. 

நேற்று (29-April-2014 அன்று) அந்த இயந்திரத்தில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு பயன்பாடு பழுதாகிவிட, அதை நான் மட்டுமே சீர் செய்ய முடியும் என்ற நிலை தோன்றிய கட்டாயத்தின் பேரில், நேற்று காலை பத்து மணிக்கு அலுவலகம் வந்த நான், அலுவலகத்தை விட்டு, எனது இருசக்கர வண்டியில் புறப்படத் தயாரான பொழுது மணி நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட மூன்று, நாள் 30-April-2014. வன்பொருள் இயந்திரத்தை நாள் முழுவதும் பழுது பார்க்கும் அளவிலான சோர்வும், மன உளைச்சலும், மென்பொருள் இயந்திரத்தை ஒரு மணி நேரம் பழுதுபார்த்தாலே அடைந்து விடுவோம். அப்படியென்றால் பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்ததால் நான் பெற்ற சோர்வை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அலுவலக அடித்தள பார்க்கிங் செல்ல வெளியில் வரும் பொழுது தான் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்ததை கவனித்தேன். உள்ளே இருப்பவர்கள் வெளியில் நடக்கும் நிகழ்வுகளால் வேலையில் இருந்து கவனம் சிதறி விடக் கூடாது என்பதற்காக, ஒலி, ஒளி, காற்று இவை எதுவும் உள் நுழையாதபடி வடிவமைக்கப்பட்ட ஒரு நாகரீக கண்ணாடிச் சிறை அது.

மழையில் நான் நனைந்தாலும் பரவாயில்லை எனது ஆண்டிராய்டு கைபேசி நனையக் கூடாது என்று எண்ணிக் கொண்டு எனது கைபேசியை கையில் எடுக்கும் பொழுது தான் கவனித்தேன் அதுவும் என்னைப்போல் உயிரற்று கிடந்ததை. முன்பெல்லாம், எனது பேசிக் மாடல் நோக்கியா கைபேசியில் ஒரு முறை முழு சார்ஜ் ஏற்றி விட்டால் போதும் குறைந்தது மூன்று நாள் வரை உயிருடன் இருக்கும். இந்த ஆண்டிராய்டு கைபேசி வந்ததில் இருந்து, எங்கு சென்றாலும் போனுடன் சேர்த்து சார்ஜரையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இன்று சார்ஜரை மறந்ததால் இந்த நிலை. அதே நிமிடம் தான் நான் மறந்த மற்றொன்று நினைவுக்கு வந்தது. அது என்னுடைய இரவு உணவு. பித்து பிடித்தவன் போல் நீரும் அன்ன ஆகாரம் இன்றி வேலை செய்ததை எண்ணி வருந்துவதா இல்லை பெருமை படுவதா என்று எனக்கு தெரியவில்லை.

அலுவலகத்தை விட்டு வெளியே சென்றால் சிங்கிள் டீ கூட கிடைக்காது அதிகாலை என்பதாலும், எனது கைபேசியை மழையில் இருந்து காக்க ஒரு பிளாஸ்டிக் பை தேவை பட்ட காரணத்தாலும், வேறு வழியின்றி அலுவலகத்தின் உள் இருக்கும் சரவண பவனை நோக்கி நடந்தேன். அங்கு கவுன்டரில் சுகமாய்த் தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி விசாரித்தால் 'தோசை மட்டும் தான் இருக்கு,சாம்பார் இல்ல' என்று சிவந்த கண்களால் கணினித் திரையை பார்த்துக்கொண்டேமேலும் சிவந்தான். வேறு வழியின்றி அந்த தோசையையும், பிளாஸ்டிக் கவருக்காக ஒரு உருளை சிப்ஸும் வாங்கினேன். இவர்கள் கொடுக்கும் தோசையின் மகத்துவம் என்னவென்றால், கல்லில் இருந்து எடுக்கபடும் அந்த பேப்பர் போன்ற தோசை தட்டை அடையும் முன், சூடான கல்லில் இருந்து எடுத்ததற்கான எந்தத் தடையமும் இன்றி நொடியில் ஆறி இருக்கும் என்பது தான். 

கைபேசியை பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு, நான் நனைந்தாலும் பரவாயில்லை, வீடு சென்று படுக்கையில் எந்தச் சலனனும் இன்றி உறங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணத்தை தொடங்கினேன். கன மழை என்பதால் வண்டி ஓட்டக் கடினமாக இருந்தாலும், அந்நேரத்தில் மிக சொற்ப வாகனங்களே OMR சாலையில் சென்றுகொண்டிருந்ததால், முன்னெச்சரிக்கையுடன் இன்டிகேட்டர் போட்டுக்கொண்டு சாலை ஓரமாகவே சென்றுகொண்டிருந்தேன். மழைத்துளிகள் எனது ஹெல்மெட் கண்ணாடியில் பட்டு சாலையை மறைத்தால், கண்ணாடியை மேல் தூக்கி விட்டு இன்னும் மெதுவாக வாகனத்தை செலுத்தினேன். மழை தனது உச்சகட்டத்தை எட்டி இருந்தது. மழை நீர் துளிகள், ஊசி குத்துவதுபோல் எனது முகத்தை துளைத்துக் கொண்டிருந்தன. 

சாலையிலும் நீர் வரத்து சற்று அதிகரித்து இருந்தது. 'இது போன்ற சமயங்களில் டயர் நனைந்து போவதால் , பிரேக் பிடிக்கும் பொழுது வண்டி வழுக்கி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதனால் மிகவும் மெதுவாக சென்றால் தான் வண்டியை நமது கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும்' என்று எனக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்த தந்தையின் குரல் எனக்குள் பிரதிபலித்துக் கொண்டிருந்த சமயம் நான் புனித ஜோசப் பொறியியல் கல்லூரியை கடந்து சத்யபாமா பல்கலைக் கழகத்தின் அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென ஒருவர் நான் வருவதை கவனிக்காமல் சாலையை தனது சைக்கிளில் கடக்க முயல்கிறார் என்பதை நான் கவனித்துவிட்டேன். ஹாரனை அடித்து அவரை எச்சரித்து கொண்டே எனது வண்டியின் பின் பிரேக்கை அழுத்தினேன்.

பிரேக் பிடித்தும் அவரது சைக்கிள் நிற்காததால், சற்று பயந்து போன அந்த சைக்கிள்காரர், தனது காலை சாலையில் ஊன்றி அவரது சைக்கிளை நிறுத்தும் சமயம், அவரது முன் சக்கரம் எனது வண்டியின் முன் சக்கரத்தை மிகவும் லேசாக முத்தமிட்டது. இவரும் நிம்மதி பெரு மூச்சு விட, அவர் என்னைப் பார்த்து புன்னகைத்த அடுத்த நொடி அவரும் அவர் சைக்கிளும் வானில் பறக்க, அவரை அடித்த டெம்போ எந்தக் கவலையும் இன்றி அசுர வேகத்தில் மறைந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்த நான் மீள்வதற்குள் மழை நின்று விட்டது. எனது வண்டியை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நான் ஓட, சிதறு தேங்காய் போல அவரது சைக்கிள் சிதறிக்கிடந்தது. அவர் அதைத் தாண்டி சாலை ஓரத்தில் இருந்த மணலில் விழுந்து நினைவின்றி கிடந்தார். அவரது காலில் இருந்து ரத்தம், குழாயில் இருந்து வரும் நீர் போல ஓடி மழை நீருடன் கலந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவர் உடலில் உயிர் இருந்தது. இல்லை இருந்தும் இல்லாமல் இருந்தது. 

எனது பான்ட் பாக்கெட்டைத் தடவினேன் அதில் கைக்குட்டை இல்லை என்பதை அறிந்தவுடன் எனது வண்டியை நோக்கி ஓடினேன். மழையில் நனைந்து ஈரமாயிருந்த வண்டி துடைக்கும் துணியை சாலையில் தேங்கி இருந்த நீரில் அலசி விட்டு அவரது வலது முட்டிக்கு கீழே இறுக்கி கட்டினேன். ஆம்புலன்சை அழைக்க எனது கைபேசியில் உயிர் இல்லை, அந்த இடத்தில மனித நடமாட்டமும் இல்லை. அவரிடம் கைபேசி உள்ளதா என்று தேடத் தொடங்கிய பொழுது அவரது சட்டையில் இருந்த அடையாள அட்டை இருந்தது. அவர் பெயர் கோபால் என்றும் அவர் ஒரு அரசாங்க துப்புரவு தொழிலாளி என்பதையும் வாசித்த சமயம் அவரது சைக்கிளுக்கு அருகில் கைபேசியும் சிதறுகாயாக உடைந்திருப்பதைக் கண்டேன். அந்த சிம்கார்டை மட்டும் எனது பைக்குள் போட்டுக் கொண்டு, சாலையின் மத்தியில் வாகனம் ஏதேனும் வர காத்திருந்தேன்.

சுமார் பத்து நிமிடம் கழித்து சாலையின் எதிர் புறத்தில் வந்த வாகனத்தை ஓடிச் சென்று நிறுத்தி, அதன் ஓட்டுனரிடம் உடனே ஆம்புலன்சை அழைக்கச் சொன்னேன். எப்பொழுதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தின் அருகில் ஒரு அரசு ஆம்புலன்ஸ் இருப்பதை கவனித்ததுண்டு. ஐந்தாவது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றிச் செல்ல, அவரை அப்படியே விட மனமின்றி, நானும் எனது வண்டியில் அவர்களை பின் தொடர்ந்தேன். சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கிய அரசு மருத்துவமனையில் கோபாலுக்கு அவசர முதலுதவி சிகிச்சை தொடங்கும் பொழுது மணி 4:15. அவரது வீட்டிற்கு தகவல் சொல்லலாம் என்று அவரது அடையாள அட்டையை எடுத்து மீண்டும் பார்த்தேன் அதில் அவரது கைபேசி எண் மட்டும் தான் இருந்தது.

ஒரு காவல் துறை அதிகாரி (கான்ஸ்டபில்) என்னை விசாரிக்க, நான் நடந்ததை சொல்லி முடித்த பிறகு 'நம்பர் நோட் பண்ணிங்களா' என்று கேட்க, நான் 'இல்லை' என்று தலையாட்ட, பின் எனது முகவரி மற்றும் கைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டார். அவரிடம் அந்த அடையாள அட்டையைக் கொடுத்தவுடன், அவர் அந்த விலாசத்திற்கு ஆள் அனுப்பி தகவல் சொல்வதாக கூறினார்.

இதற்குள் அந்த மருத்துவர் என்னிடம் வந்து 'அவருக்கு வேண்டிய முதலுதவி கொடுத்தாச்சு, பெரிய ஆபத்து ஒன்னும் இல்லை. ஆனால் அவர் காலில் அடி பலமாக இருக்கு. அறுவை சிகிச்சை செய்யணும். இங்கு அதற்கான வசதி இல்லை. நீங்க ஒரு நல்ல தனியார் ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோயிடுங்க' என்று கூறினார். 'இதற்கு மேல் அவரது குடும்பம் பார்த்துக் கொள்ளட்டும் நான் போய் என் பொழப்பை பார்க்கின்றேன் ' என்று நான் சொல்ல முற்பட்டாலும் எனது மனிதாபிமானம் என்னைத் தடுத்து விட்டது.

உலகில் கஷ்டத்தில் இருக்கும் அனைவரையும் என்னால் காத்து உதவ முடியாத ஒரு சுய நல வாழ்க்கை வாழும் எனக்கு, என் கண் முன் வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதிலாவது ஒரு அல்ப சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பினேன். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நான் முற்பட, அதை தடுக்க முயன்ற அந்த காவல் துறை அதிகாரிக்கு என்னிடம் இருந்த ஒற்றை ஐநூறு ரூபாய்த் தாளை அவர் கையில் வைத்து, நான் செல்லும் தனியார் மருத்துவமனைக்கு கோபாலின் குடும்பத்தை அனுப்ப சொல்லி விட்டு ஆம்புலன்சுடன் சென்றேன். அந்தத் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அழைத்துச் செல்ல, அங்கு வரவேற்பில் இருந்த பெண்ணிடம் எனது கைபேசிக்கு உயிர் ஊட்ட அவள் உதவியை நாடினேன்.

அவளிடம் எனது கைபேசிக்கு பொருந்தும் சார்ஜர் இருக்க, அளவான புன்னைகையுடன் எனது கைபேசியை வாங்கி அவள் இடத்தில இருந்த பிளக் பாயிண்டில் சார்ஜரை சொருகினாள். நான் அங்கிருந்து திரும்பியவுடன் அந்த மருத்துவர் 'அவருக்கு பிளோ ணீ அம்புயுடேஷன்(below knee amputation) பண்ணனும். அவரு வீட்டுக்கு தகவல் சொல்லி சீக்கரம் வரச் சொல்லுங்க. பார்ட்டி தௌசந்(forty thousand) கட்டணும்' என்று அவர் நிதானமாக சொல்லி முடிபதற்குள், வரவேற்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றால் அந்தப் பெண் ஒருவரை கை காட்டி அவர் கோபாலை தேடி வந்ததாக சொன்னாள். இம்முறையும் அதே அளவில் புன்னகை.

உயரம் சற்று கம்மியாக, தலை முடி நரைக்கத் தொடங்கிய நிலையில் இருந்த அந்த ஆசாமி என்னிடம் வந்து 'நான் ராமசாமி. கோபாலோட தோஸ்து. அவனோட பக்கத்துக்கு ஊடு தான். என்ன ஆச்சு?' என்று கேட்டார். சத்யபாமா முதல் இந்த தனியார் மருத்துவமனை வரை முழு கதையையும் சொன்னேன். சற்றே கலங்கிய ராமசாமி சுவரின் ஓரம் வரிசையாக இருந்த இருக்கைகளின் ஒன்றில் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தார். அவரது அருகில் சென்று அமர்ந்து 'அவர் வீட்ல இருந்து யாரும் வரலையா?' என்று கேட்டேன்.

'அவன் சின்ன வயசுலையே அவங்க அப்பா அம்மா செத்துட்டாங்க. என் ஆத்தாதான் அவனையும் வளர்த்துச்சு. அவனுக்கு இருக்குறது அவங்க அப்பா விட்டுட்டு போன ஒரு குடிசையும் அப்பறம் அவன் அடம் பிடுச்சு கட்டிக்கின இந்தப் பொண்ணும் தான்' என்று அவர் சொல்லியவுடன் நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். என்ன நடக்கின்றது என்பது கூடத் தெரியாமல் ஏதோ ஒரு உலகில், என்னவோ, யாரிடமோ பேசிகொண்டிருந்தாள். அவளது முந்தானை விலகி இருப்பதை சரி செய்ய வேண்டிய அவசியத்தை அவள் கைகளுக்கு உணர்த்த முடியாத நிலையில் அவள் மூளை இருப்பதை நான் உணர்ந்த பொழுது, 'கோபால் யு ஆர் கிரேட்' என்று என்னுள் சொல்லிக்கொண்டேன். ராமசாமி 'இந்தப் பொண்ணு மூணு மாசம் முழுவாம வேற இருக்கு. இனி இந்த மூணு உசுர அந்த கருப்பன் தான் காப்பாத்தணும்' என்றார்.

அவர்களுக்கு அது மிகவும் பெரிய தொகை என்பதையும், கருப்பன் வந்து காப்பாத்துவதற்குள் அவர் நிலை மோசமாகி விடும் என்பதையும் நான் உணர்ந்தேன். அவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, வரவேற்பை நோக்கிச் சென்று, எனது கைபேசியை அந்தப் பெண்ணிடம் கேட்டேன். அவளுடைய சிரிப்பின் அளவே உயிர் பெற்றிருந்த எனது கைபேசியை நீட்டினாள். கைபேசியை ஆன் செய்த பொழுது மணி 07:30. அன்று மாதத்தின் கடைசி நாள் என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன். தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் சம்பளம் வந்துவிடும். எனக்கும் அம்மாத சம்பளம் வந்தவுடன், வங்கி இருப்பு 37 ஆயிரம் ரூபாய் என்று குறுந்தகவல் வந்திருந்தது. நீங்கள் என்ன நினைகின்றீர்களோ அதே தான் நானும் செய்தேன். உடனே சென்று 35 ஆயிரம் ரூபாயை செலுத்தி, சிகிச்சையை தொடங்கச் சொல்லிவிட்டு, என் நண்பனுக்கு அழைத்து 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வரச் சொன்னேன். 

ஒரு மணி நேரத்திற்குள் காசுடன் வந்த என் நண்பன், நடந்ததை அறிந்தவுடன் 'அதுதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்ட இல்ல. மூடிட்டு வீட்டுக்கு வர வேண்டியது தான. பேர் தெரியாத யாருக்கோ இப்படி காச தூக்கி கொடுக்கற. உனக்கு அறிவே இல்லயா' என்று என்னை திட்டத் தொடங்கினான். அவனை பொருட்படுத்தாமல் ஐந்தாயிரத்தை செலுத்திவிட்டு, மீதம் இருந்த ஐந்தாயிரத்தை ராமசாமியிடம் 'மருந்துச் செலவுக்கு இத வச்சிக்கோங்க. அவர பார்த்துக்கோங்க. நான் அப்பறம் வர்றேன்' என்றவுடன், ராமசாமியின் கண்ணில் நீர் தானாக ஒழுகத் தொடங்கியது, கைகூப்பி எனக்கு நன்றி சொன்னார். ஒரு உயிரை காப்பாத்திய பெருமையுடன் அன்று பகல் முழுவதும் நிம்மதியாக உறங்கினேன்.

மூன்று நாட்கள் கழித்து கோபாலை சந்திக்க அந்த மருத்துவமனைக்குச் சென்றேன். ஒற்றை காலை இழந்து சுய நினைவுடன் இருந்த கோபால், 'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைங்க. நான் பூட்ருந்தா என் சரோஜா என்ன ஆயிருக்கும். கலைனர் காப்பீட்டு திட்டத்துல இருந்த காசு வந்ததும் உங்களுக்கு கொடுத்துர்றேன்' என்றார். 'காசு பற்றி கவலை வேண்டாம், உடலை பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அவருக்கு ஆதரவு சொல்லி வீடு திரும்பினேன். ஒரு மாத சம்பளம் முழுவதையும் இழந்ததால் அந்த மாசத்தை ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. வீட்டு வாடகையை நண்பர்கள் பார்த்துக்கொண்ட பொழுதும், அந்த மாதத்தின் பல நாட்கள் இரண்டு வேளை மட்டுமே உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இரண்டு வாரம் கழித்து அவரை பார்க்கச் சென்ற பொழுது, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து வந்த இருபது ஆயிரம் ரூபாயை, நான் மறுத்தும், கட்டாயப் படுத்தி என்னிடம் கொடுத்தார். மீதி பணத்தை மூன்று மாதத்தில் திரும்பத் தருவதாக அவர் சொன்னதை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அதில் பத்தாயிரத்தை எனது நண்பனிடம் கொடுத்து விட்டு, மீதம் இருந்த பணத்தில் ஒரு வீல் chair உம், ஒரு பேசிக் மாடல் நோக்கியா போனும் வாங்கினேன். அவரது சிம் கார்டை அதில் போட்டு அவரிடம் இரண்டையும் கொடுத்து விட்டேன்.

நான்கு மாதங்களுக்கு பிறகு அவரது ஓய்வுத் தொகையை வைத்து அவர் தொடங்கிய ஒரு சின்ன ரீசார்ஜ் கடையை திறக்கும் பொழுது என்னையும் அழைந்திருந்தார். என் வாழ்வில் நான் சந்தித்த பல மனிதர்களில், கோபாலைப்போல் தன்னபிக்கை உடையவர்களை நான் கண்டதில்லை. ஊனம் என்பது உடலில் இல்லை ஒருவரின் மனதில் தான் இருக்கின்றது என்பதை எனக்கு புரியவைத்தவர் கோபால். ஒன்பதாவது மாதம் ஒரு அழகான ஆண்பிள்ளையை அவர் மனைவி ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையைக் கண்ட அந்த கணமே 'அவனின் செலவுகளுக்கு நான் பொறுப்பெடுத்துக் கொண்டு அவனுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தேன். இதை கோபாலிடம் கூறியபொழுது அவர் உடன்படவில்லை, தன் மகனைத் தன்னால் ஆளாக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். ராமசாமி எனக்கு துணையாக அவர் மனதை மாற்ற உதவினார். என்னிடமிருந்த ஒரே ஒரு கோரிக்கையை கோபாலிடம் கூறினேன். 'இவன் வளர்ந்து எனக்கு ஒன்றும் செய்யத் தேவையில்லை, ஆனா இவன் ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலே எனக்குப் போதும்' என்று நான் உறுதியாக கூற கோபால் உடன்பட்டார். 

05-May-2049 

அதை முழுவதும் படித்து முடித்து, புல்லரித்து இருந்த ஈகாவின் காது அருகில் சென்று சிவா 'அந்தப் பையன் நான் தான்' என்று சொல்லியவுடன், அவள் கண்களில் இருந்து பெருகிய நீர் கன்னத்தின் வழியாக வடிந்து அவள் கையையும் தாய்மையையும் நனைத்தது.

18 comments:

 1. யோவ், என் இனிய இயந்திரா (நிலா - ஈகா ) + பதிவுலக காதல் மன்னன் இரண்டையும் சரிவிகத்தில் கலந்து படிச்சா நாங்க கண்டிபிடிக்க மாட்டோம்னு நினைச்சீங்களா..? ஹஹஹா.. ஆனா முடிவு சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா . காதல் மன்னனுக்கு ஹீரோயின் தரலைன்னு ஒரே வருத்தம்

   Delete
 2. கதையின் ரகசியத்தை நான் சொல்றதுக்கு முன்னாலயே ஆவி உடைச்சிட்டார். பதிவுலக காதல் மன்னனை கேரக்டரா கொண்டு வந்ததாலயோ... இல்ல... அவன் கூடவே பழகற தோஷமோ... ரொம்ப்ப்ப நீஈஈஈளமா கதை வந்துருச்சு. ஹா... ஹா... ஹா... நெகிழ்ச்சி + மனிதாபிமானம் இவற்றால் கதை சிறப்புப் பெறுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி .அவர் காற்று என் மீது அடித்து கதையை நீள மாக்கிவிட்டது

   Delete
 3. இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சிட்டிருந்தேன், சூப்பர்....

  ReplyDelete
 4. கொஞ்சமாவேனும் Edit பண்ணியிருக்கலாம் . Anyway well try ..!

  :(

  "முழக்க " -முழுக்க

  வழக்கத்திற்கு மாறாக "உற்சாகத்துடன்", தன் கணவன் இன்று அனுமதிச் சீட்டுடன் வருவான் என்ற "நம்பிக்கையுடன்" -//

  உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும்

  //கண்ணத்தில்// - கன்னத்தில் ?

  //பொறுபெடுத்துக்// - ப்

  //வீல் சாரும்// chair ம்

  :)


  //ஒலி, ஒளி, காற்று இவை எதுவும் உள் நுழையாதபடி வடிவமைக்கப்பட்ட ஒரு நாகரீக கண்ணாடிச் சிறை அது.//

  //அவளுடைய சிரிப்பின் அளவே உயிர் பெற்றிருந்த எனது கைபேசியை நீட்டினாள். //

  //அவள் கண்களில் இருந்து பெருகிய நீர் கன்னத்தின் வழியாக வடிந்து அவள் கையையும் நனைத்தது.//

  தாய்மையையும் நனைத்தது :)

  ReplyDelete
  Replies
  1. //கொஞ்சமாவேனும் Edit பண்ணியிருக்கலாம் // edit பண்ண தோனல. கரெக்டா flow இருக்கற feeling.

   அடுத்த முறை பிழைகளை குறைக்க தீவிரமாக செயல்படுகிறேன்

   //தாய்மையையும் நனைத்தது :)// nice touch :)

   Delete
 5. சூப்பர். ஹே என் கண்ணாடி தம்பி ஹீரோ ஆகிட்டான். ஆனா, ஒரு டூயட் இல்ல, ரொமான்ஸ் இல்லன்னு அந்த காதல் மன்னன் வருத்தப்படுவானே!

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் அவருக்கு தடை செய்யப் பட்ட விஷயங்கள்

   Delete
 6. வார்த்தைகளின் தேர்வு, வாக்கியங்களின் அமைப்பு எல்லாம் க்ளாஸ்.. பல தமிழ் வார்த்தைகளை ரசித்து திரும்ப திரும்ப படித்துப்பார்த்தேன்.. வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. சீனுவே கதாப்பாத்திரம வரும்போது அவரது ஸ்டைல் உடன் சேர்ந்து கொண்டது. மிக்க நன்றி :)

   Delete
 7. ஜீவன் சுப்பை வழிமொழிகிறேன் .....இன்னும் இன்னும் சிறப்பா எழுதுங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. மனிதாபிமானத்தை முக்கிய படுத்திய கதை. நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. சிறப்பான கதை.

  பாராட்டுகள் ரூபக்.

  ReplyDelete
 10. அருமையான விறுவிறுப்பான கதை..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. If the vendor doesn’t qualify, he returns the player’s Ante and all other bets obtain motion. If you understand much about blackjack you’re probably considering that Spanish 21 holds a really excessive casino advantage. By 파라오카지노 removing all of the 10’s, Spanish 21 positive aspects a rise in home advantage by about 25%. If you’ve never played Blackjack and wish to give it a strive, just visit any of our tables the place considered one of our friendly table recreation sellers shall be happy to teach you. We've received it all - every thing from the high-stakes type of blackjack, to the thrill of roulette. With these Maine gaming tables are ready for you, odds are you're in for the time of your life.

  ReplyDelete