Friday, September 12, 2014

சினங்கொண்ட ஊழியனின் குமுறல் : CAB சிஸ்டம் நடப்பது என்ன?

முன் அறிவிப்பு : இந்தப் பதிவில் வரும் சம்பவங்களோ அல்லது கருத்துக்களோ எந்த ஒரு தனி நபரையோ அல்லது எந்த ஒரு நிறுவனத்தையோ குறிப்பன அல்ல. இவை அனைத்தும் எனது மனக் குமுறல்களின் வெளிப்பாடு .

***********************************************************************************************************

பொதுவாக IT நிறுவனங்களில் பணி புரிபவர்கள் அனைவருமே எனது பார்வையில் போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்தவர்கள். வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே கோபத்தையும் தன்மானத்தையும் கழட்டி வைத்து விட்டு தான் அலுவலகம் நோக்கி புறப்பட வேண்டும். இப்படி பாவம் செய்தவர்களுள் கூடுதல் பாவம் செய்தவர்கள்  யார் என்றால் அது என்னைப் போல் ஒரு 'சப்போர்ட்' ப்ராஜெக்டில் பணி செய்பவர்கள் தான். சப்போர்ட் என்றால் வருடத்தில் 365 நாட்கள், 24x7 அயராது பணி செய்ய போடப்பட்ட ஒப்பந்தக் கிணற்றில் அறிந்தே தற்கொலைக்கு விழுவது. 

நான் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தாலும் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ எதுவாக இருந்தாலும் விடுமுறை கிடையாது. கிறிஸ்துவனாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது, முஸ்லிமாக இருந்தாலும் ரம்ஜானுக்கும் விடுமுறை கிடையாது, இந்துவாக இருந்தாலும் தீபாவளி-பொங்கல் எதுவானாலும் கணினியுடன் தான். இதுவல்லவா வேற்றுமையில் ஒற்றுமை! இதில் உச்சகட்டம் என்னவென்றால் நாங்கள் பணிபுரியும் அயல்நாட்டு அலுவலகத்தில் அவர்கள் அவர்களது தேசிய விடுமுறைகளை கொண்டாடும் போதும் இங்கு அவர்களது மென்பொருள் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணி எங்களுடையது.

ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் வீதம், இருபத்து நான்கு மணிநேரங்களை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். காலை (06:30 - 15:30), மாலை( 13:30 to 22:30), இரவு ( 22:00 - 07:00) என்று மூன்று ஷிப்டுகளில் எங்கள் பணி. ஷிப்டானது வாரந்தோறும் மாறும்.  

ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருக்கும் இந்த கம்பனிகளுக்கு சரியான நேரத்தில் ஊழியன் உள்ளே வரவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப் பட்டது இந்த cab system.     

பொதுவாக மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் என்றாலே 'வீட்டுக்கு கார் வந்து கூப்டிட்டு போய் திரும்ப கார்லையே வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுர்ராங்க. செம வசதியான வேலைப்பா' என்று நினைப்பவர்கள், தனி நபர் cabஇல் அலுவலகம் சென்றது எல்லாம் நம்ம சிம்ரன் அக்கா 'நிலவைக் கொண்டுவா: கட்டிலில் கட்டிவை'னு ஆணையிட்ட காலத்தோடையே போனது என்பதை உணர வேண்டும். எனது இந்த cab சேவை அனுபவங்கள் முழுக்க முழக்க கசப்பானவையே.  தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து, சமீபத்தில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். 

'எப்படி?' என்ற உங்களது கேள்விக்கான பதில் இந்தப் பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது கிடைக்கும். ஆகவே எனது cab அனுபவங்களை  அந்தக் கொலைக்கு முன் மற்றும் பின் என்று இரு பிரிவுகளாக பிரிக்கின்றேன்.       

கொலைக்கு முன்:

காலை ஏழு மணிக்கு முன்னர் அலுவலகம் வருபவர்களுக்கு cab. ஏழிற்குப் பின் என்றால் அலுவலக பேருந்துகள். மாலை வீடு திரும்புபவர்களுக்கு  கடைசி அலுவலக பேருந்து இரவு பத்து மணி வரை இருக்கும். அதற்கு பிறகு வீடு திரும்புபவர்களுக்கு cab சேவைதான். இது இல்லமால் சொந்த வாகனங்களில் மற்றும் அரசுப் பேருந்துகளில் அலுவலகம் வருபவர்களும் உண்டு. எந்த நேரமும் அலுவலகத்தினுள் வரலாம், போகலாம். இரவு பத்து மணி முதல் அடுத்த நாள் காலை ஏழு மணி, இந்த இடைவெளியில்  அலுவலகம் உள் வருபவர்கள் அல்லது அலுவகத்தில்   இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மட்டுமே cab. பகல் வேளைகளில் cab சேவையை பயன்படுத்தும் ஒரு சில புண்ணிய ஆத்மாக்களைப் பற்றி நாம் பேசப் போவது இல்லை. 

காலை ஷிப்ட் :

தொடங்குவது 06 30 மணிக்கு. எனது கைபேசியில் அலாரம் அடிக்கும் முன் cab டிரைவரிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். நான் வசிப்பது தாம்பரம் என்பதால், எனது வழியில் பெரும்பாலும் நான் தான் முதல் பிக்-அப். புறப்படும் நேரம் குறித்து அந்த அறை தூக்கத்தில் ஒரு வாக்குவாதம் நடத்தி,  தூக்கம் கலையமல் அடித்து பிடித்து, குளித்தும் குளிக்காமலும் தயாராகி cabஇல் ஏறி புறப்பட்டுச் சென்றால், அடுத்த ஆள் ஏறுவதற்காக அடுத்த பாயிண்டில் காத்திருக்க வைத்து விடுவார்கள். முதல் நபரான நான் தாமதம் செய்தால் பிறருக்கு இடையூறு என்று நினைத்து நான் விரைந்து கிளம்பினால் இப்படி என்னைக் காக்க வைக்கும் சிலரை என்ன செய்வது?  

சந்தோஷபுரத்தில் ஒரு பெண்மணி உண்டு, cab டிரைவர் 'பாய்ண்டுக்கு வந்தாச்சு' என்று சொல்லி பதினைந்து நிமிடங்கள் கடந்தால் தான் வீட்டை விட்டு வெளியில் வருவார். எனவே இவரைக் கையாள அனைத்து டிரைவர்களும் ஒரு யுக்தியைக் கையாண்டனர். எனது வீட்டில் இருந்து புறப்படும் பொழுதே 'பாய்ண்டுக்கு வந்தாச்சு' என்று சொல்லிவிடுவர்.

இங்கு அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இந்த cabகள் அனைத்துமே NON-AC, பெரும்பாலும்  indica. இன்டிகாவில் நான்கு பேர் செல்லும் வழக்கத்தில், பின் சீட்டில் நடுவில் அமர்பவர் கதி அதோ கதி தான். முதலில் ஏறி டிரைவர் அருகில் இருக்கும் முன் சீட்டில் சுகமாக அமர்ந்தாலும், நான்கவதாக ஏறும் பெண்மணி 'Excuse me! Can you take the back seat?' என்று நம்மை பின்னாடி தள்ளி விடுவார். இதுவே travera அல்லது sumo என்றால் குறைந்தது ஆறு அல்லது ஏழு நபர்கள். இவர்கள் அனைவரையும் பிக்-அப் செய்து கொண்டு அலுவலகம் செல்வதற்குள் ஒரு வழியாகி விடும். உள்ளே நுழையும் பொழுது அனைவரது அடையாள அட்டை மற்றும் கார் டிக்கியை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிப்பர்.

காதலனுடன் கைபேசியில் கொஞ்சும் பெண்மணிகள், மனைவியுடன் சண்டை பிடிக்கும் கணவன்மார்கள், குறட்டை விட்டு தூங்கும் குண்டோதரன்கள், Micheal Schumacher போல் சீரிப் பாயும் சில டிரைவர்கள்,  என தினம் தினம் ஒரு அனுபவம் தான்.   

மாலை ஷிப்ட்: 

முடிவது 10.30 மணிக்கு. இந்த நேரத்தில் அலுவலக பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தால், சப்போர்ட் ப்ராஜெக்டில் இருப்பவர்களுக்கு வீடு செல்ல cab தான் ஒரே வழி. வட்டாரம் வாரியாக cab கொடுக்கும் கவுன்டர்கள் இருக்கும். அங்கு செல்ல Q வில் நின்று, எனது அலுவலக அடையாள எண்ணை கணினியில் பதிவு செய்தால், நான் இந்த நேரத்திற்கு cab புக் செய்துள்ளேனா இல்லையா என்று காட்டும். 'ஆம்' என்றால் உள்ளே செல்லலாம். 'இல்லை' என்றால் எனக்கு cab தரமாட்டார்கள். அவர்களிடம் மன்றாடுவதை விட்டு வெளியில் சென்று எவனிடமாவது லிப்ட் கேட்டு வீடு செல்வது உசிதம். இங்கு 'நான்' என்று குறிப்பிடுவது ஒரு ஆண் பாலை. இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் இந்த விதி முறைகள் செல்லாது, எந்த நேரமும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை என்று அவர்களை முன்பதிவு இல்லை என்றாலும் அனுமதித்து விடுவர். 
             
'ஆம்' என்று கணினி எனக்கு பச்சை விளக்கு காட்டிய பின், எனது பாதைக்கு இருக்கும் கவுன்டருக்கு சென்று அங்கிருக்கும் cab co-ordinator இடம் எனது இடத்தை சொன்னால் எனக்கு ஒரு cab நோட்டு கொடுப்பார். அதில் என் தகவல்களை நிரப்பி விட்டு, அந்த வண்டியில் சென்று அமர்ந்துகொண்டு இன்டிகாவாக இருந்தால் மேலும் மூவர் வரவும் அல்லது சுமோ போன்ற வண்டியாக இருந்தால் மேலும் ஏழு பேர் வரவும் காத்திருக்க வேண்டும்.      

அனைவரும் ஏறிய பின், மீண்டும் ஒரு சோதனை நடக்கும். அங்கு எங்கள் அடையாள அட்டைகளை ஸ்வைப் செய்த பின் செல்ல அனுமதிப்பர். அதன் பின் கோவிலில் சாமி சிலையை சுற்றுவது போல் அலுவலத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு தொடங்கிய இடத்தின் மிக அருகில் இருக்கும் கேட் வழியாக வெளியே செல்லும் பொழுது மீண்டும் ஒரு சோதனை. இங்கு சீட் பெல்ட் மற்றும் கார் டிக்கியை சோதனை செய்வர். ஒரு வழியாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தால், இந்த இடைப்பட்ட இடங்களில் இறங்குபவர்கள் 'லெப்ட்' 'ரைட்' என்று பல சந்துகளில் சுத்தவிடுவர். இவர்கள் அனைவரையும் இறக்கி விட்டு இறுதியாக நான் வீடு வந்து சேர்வதற்குள் நடுநிசியாகிவிடும்.      

இப்படி சுத்தி சுத்தி, தாம்பரம் வந்த முதல் இரண்டு மாதத்திலேயே, சோழிங்கநல்லூரில் இருந்து தாம்பரம் வரை இருக்கும் அனைத்து சந்து பொந்துகளும் எனக்கு அத்துப்படி. உங்களுடைய வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல உங்களுக்கு எத்தனை வழிகள் தெரியும்? அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து இருக்குமா. ஆனால் என்னால் எனது அலுவலகத்திற்கு பத்து நாட்கள் வெவ்வேறு வழிகளில் செல்ல முடியும்.  புதிதாக ஏதேனும் டிரைவர் வந்தால் நான் வழி சொல்லி அழைத்துச் சென்ற நாட்களும் உண்டு.


இரவு ஷிப்ட்:


இந்த ஷிப்டில் அலுவலகம் செல்பவர்களுக்கு இரு வழியும் cab சேவை உண்டு. உள்ளே செல்வது மார்னிங் ஷிப்ட் பிக்-அப் போலவும், அதிகாலை வீடு திரும்புவது ஈவ்னிங் ஷிப்ட் ட்ராப் போலவும் இருக்கும். ஆனால் அந்த ட்ராப் சற்று கடினமாக இருக்கும். காரணம் நான்கு பேர் வந்தால் தான் வண்டியை நகர்த்த அனுமதி கொடுப்பர். இரவு வேளையில் அலுவலகம் வருபவர்களே மிகக் குறைவு இதில் நமது வழியில் வரும் ஊழியர்கள் மிகவும் சொற்பம். நால்வர் வரக் காத்திருந்து புறப்படுவதற்குள் கதிரவன் தன் UV கதிர்களை பூமியின் மீது ஏவத் தொடங்கி இருப்பான்.

கொலைக்கு பின்:        

காலை மற்றும் இரவு ஷிப்ட்களில் பெரிதாக ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் விதி இந்த மாலை ஷிப்டை மட்டும் அதிகமாக பாதித்தது. காரணம் அந்தக் கொலைக்கு பின்னர் ஊழியர்களைப் பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அலுவலகம் கொண்டு வந்த சில விதிமுறைகள். 'நாங்க மோசமானவங்கல்லையே ரொம்ப மோசமானவங்க' என்ற சினிமா வசனம் போல் அந்த விதிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று பின்வருவது தான்.

இரவு 8:30 மணிக்கு அலுவலக வாசல் வெளியில் செல்பவர்களுக்கு சாத்தப்படும். MTC பேருந்தில் செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு வெளியில் செல்ல அனுமதி கிடையாது. 8:30 மணிக்கு மேல் வெளியில் செல்வது என்றால் சொந்த சீருந்தோ அல்லது அலுவலக cabஇலோ தான் செல்ல முடியும். 

இந்த சட்டம் இரு பாலருக்கும் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. 'பொம்பள புள்ளைங்கள வெளிய தனியா விடலனா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. பைக்ல போகும் பசங்கள எதுக்குலே நிறுத்தனும்?' இப்படி உங்கள் மனதினுள் தோன்றும். அதே எண்ணம் தான் என்னைப் போல் பலருக்கு தோன்றியது. இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால், எந்த நேரமாக இருந்தாலும் எப்படி வந்தாலும் அலுவலகம் உள் செல்ல தடை இல்லை. ஏனெனில் நாங்கள் உள்ளே வருவதில் அவர்களுக்கு லாபம் அல்லவா.

அது போகட்டும். இந்த நேரங்களை மாற்றியதால் பொதுவாக அலுவலகத்தில் இருந்து செல்லும் 10 மணி கடைசி பேருந்து 08:15 மணிக்கே புறப்படும் படி மாற்றப்பட்டது. இதனால் மாலை ஷிப்ட் வடிவத்தில்   பணிபுரியும் பலரும் cab சேவையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 10:30 மணிக்கு cab சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. சராசரியாக நாள் ஒன்றிக்கு குறைந்தது ஆயிரம் ஊழியர்களாவது இந்த நேரத்தில் cab பெற வந்து காத்திருக்க தொடங்கினர். இதனால் புதிதாய் ஒரு விதியும் பிறந்தது. பெண்களுக்கு Q வில் நிற்க விலக்கு அளிக்கப்பட்டது.

அவசர அவசரமாக வேலைகளை முடித்து விட்டு பதினைந்து நிமிடங்கள் முன்பே வந்து வரிசையில் காத்திருந்தாலும், எனக்கு பிறகு எனது ப்ராஜெக்டில் இருந்து கிளம்பிய பெண் தோழி எனக்கு டாட்டா காட்டி விட்டு என்னை முந்திக்கொண்டு cab கவுன்டரினுள் செல்லும் பொழுது என் மனதில் 'என்ன மாதிரி பெண்? ஆதிக்க சமுதாயத்தில் வாழ்கின்றோம் நாம்?' என்ற கேள்வி தோன்றும்.    

எனக்கு பின்னே வந்த அனைத்து மகளிரும் உள்ளே சென்று cab புத்தகத்தில் கையொப்பம் இட்ட பின் ஆண்கள் Q திறக்கப் படும். நான் உள்ளே செல்வதற்குள் எங்கள் தாம்பரம் வட்டாரம் இன்டிகா cab அனைத்தும் முடிந்து விடும். எனக்கு கிடைப்பதோ sumo இன வாகனங்கள். பல்லைக் கடித்துக்கொண்டு மற்றவர்களை போல் மாத சம்பளம் மட்டும் சரியாக வந்தால் போதும் என்று பல மாதங்கள் இப்படியே கடத்தி விட்டேன். ஆனால் இந்த வாரம் முழுவதும் மாலை ஷிப்டில் எனது பொறுமை சோதிக்கப்பட்டு உடைக்கப் பட்டு விட்டடது.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அலுவலகத்தில் இருந்து எனது இல்லம் 25 கிலோ மீட்டர் தூரம். எனது ஸ்ப்ளேன்டரில், என் தந்தை செல்லும் 50 KM/H வேகத்தில் சென்றாலும் முப்பது நிமிடங்களில் எனது இல்லம் சென்றடைந்துவிடுவேன்.

இந்த வாரம் திங்கட்கிழமை, பத்து மணிக்கே என் வேலைகளை முடித்து விட்டு, மன்னன் படத்தில் செயின்-மோதிரம் வாங்க ரஜினியும் கவுண்டமணியும் வரிசையில் முந்திச் செல்வது போல் சென்று, வரிசையில் பத்தாவது ஆளாக நின்று, அனைத்து மகளிரும் உள்ளே சென்ற பின்பு நாங்களும் வழி தொடர்ந்து சென்று, சோதனைகளை கடந்து, எனது வட்டார கவுன்டரை அடைந்தால் ஒரு cab புத்தகமும் இல்லை. காத்திருந்து காத்திருந்து,ஒரு வழியாக ஒரு புத்தகம் வந்தது. எலும்புத் துண்டை கண்ட நாய் போல, கண்கள் ஒளிர அந்த புத்தகத்தை வாங்கினால் அதில் டெம்போ என எழுதி இருந்தது. டெம்போ என்றால் பன்னிரண்டு பேர் செல்லும் வாகனம். அங்கு அருகில் இருந்த ஒரு பெண்மணி 'இது வீடு வரை போகாது. மெயின் ரோட்லையே எறக்கி விட்டுடுவாங்க' என்று சொல்லி எழுத மறுத்து விட்டார்.  பிரதான சாலையில் இருந்து எனது இல்லம் சரியாக 1.5 KM தூரம். 'நடந்து செல்வதா அல்லது காத்திருப்பதா?' என்று என் மனதில் நடந்த விவாதத்தில் நடந்து செல்வதே மேல் என்று முடிவு செய்து விட்டு என் பெயரை அதில் எழுதி விட்டேன்.

என்னைத் தொடர்ந்து பத்து பேர் எங்கள் வழி ஆட்கள் அதில் எழுதிடவே அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாகனத்தை நோக்கிச் சென்றோம். நோட்டை எடுத்துச் செல்லும் பொழுதும் சோதனை செய்யப் பட்டு ஒரு முத்திரை குத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டை, இறுதிக்கட்ட முத்திரைக்காக  ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று அமர்ந்தோம். ஓட்டுனர் வந்து எண்ணிக்கை பார்க்க ஒருவர் குறைகையில், அந்த நபர் வரக் காத்திருந்து, வந்தவுடன் புறப்பட்டு, வெளியில் செல்லும் கேட் அருகில் இறுதிக்கட்ட சோதனையை முடித்து விட்டு வண்டி அலுவலகத்தை விட்டு வெளியேறும் பொழுது மணி 11. அதன் பிறகு 'ரைட்' லெப்ட்' என்று ஒவ்வொருவராக பல சந்துகளுள் சென்று அவரவர் வீடுகளுக்கு அருகில் சென்று இறக்கி விட்டு நான் என் வீடு வந்து சென்றடையும் பொழுது மணி 11 45.

அந்த நிமிடம் அந்த நொடி எனது பொறுமை தகர்க்கப் பட்டது. 10:30 மணிக்கு எனது இரு சக்கர வண்டியில் கிளம்பி இருந்தாலும் 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்திருப்பேன். அயல்நாட்டில் இருந்துகொண்டு குறைந்த ஊதியத்திற்கு நம்மை அடிமைப் படுத்தி வேலை வந்குபவனுக்காக உழைக்க நாம் ஏன் இத்தனை இன்னல்களுக்கும் மன உளைச்சளுக்கும் ஆளாக வேண்டும் என்ற கோபம் தலைக்கு ஏறியது. இத்தனை இன்னல்கள் இருக்கு என்று சொன்ன பொழுதும் அதை பெரிதாக பொருட் படுத்தாத உயர் அதிகாரிகளை ஒரு மாத காலமாவது ஷிப்ட் அடிப்படையில் அலுவலகம் வந்து இந்த cab சேவையை பயன் படுத்த வைக்க வேண்டும் என்ற ஆத்திரம் பிறந்தது. 'இத்தனை ஆயிரம் ஊழியர்களை வைத்து cab சேவையை சரி வர செய்வது எவ்வளவு கடினம் தெரியுமா உனக்கு' என்று இந்தப் பதிவை பார்த்து சம்மந்தப்பட்ட சிலர் கேட்கலாம். அய்யா! உங்களை நான் எனக்காக ஒரு தனி கார் கேட்கவில்லை, என்னை என் போக்கில் என் வசதிற்கு ஏற்ப எனது இரு சக்கர வண்டியில் வந்து செல்ல விடுங்கள் என்று தான் கேட்கின்றேன்.        
             
தனிமனித சுதந்திரம் பறி போவதைக் கண்டு இங்கு நாங்கள் யாரும் பொங்கி எழ மாட்டோம். எத்தனை விதிகள் போட்டாலும் எதிர்த்து பேச மாட்டோம். எங்கள் குறிக்கோள் பணம் சேர்ப்பது அல்லது ஏற்கனவே கடனில் இருக்கும் குடும்பத்தை மீட்பது. அதற்காக எவ்வளவு அடி அடித்தாலும் அசராமல் வாங்கிக்கொண்டே  தான் இருப்போம். தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நின்ற காலமெல்லாம் கப்பல் ஏறிப் போய்விட்டது.
      
      வாழ்க சுதந்திரம்! 

21 comments:

 1. எத்தனை வேதனை.... எத்தனை மனக்குமுறல்... அந்த நாள்லயே ‘ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்’ன்னு வாத்யார் பாடியிருப்பார். அந்த மாதிரி இதுல உள்ள கஷ்டங்கள் அனுபவிக்கற உன்ன மாதிரி ஆட்களுக்குத்தான் தெரியும். இத்தனைக்கும் மேல.... பொறுமை உடைக்கப்பட்டாலும் பொங்கி எழுந்து ப்ளாக்ல எழுதறதைத் தவிர வேற எதும் செய்ய முடியாத நிலைமைங்கறது பெருங் கொடுமை... பெருங்கொடுமை....

  ReplyDelete
  Replies
  1. எழத முடிகிறது என்பதே எனக்கு பெரிய ஆறுதல் தான் சார். எழுத்தால் பல மாற்றங்கள் வந்திருக்குன்னு பலர் சொல்ல கேட்டிருக்கேன். இங்க இந்தப் பதிவு ஒரு பிள்ளையார் சுழி போட்டது ஒரு தொடக்கம் தான்

   Delete
 2. Naa anupavitha kodumai la nee anupavithathu Paathi than ..nee tambaram 25km naa thiruvotriyur 50km

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவி! என்ன கொடுமைடா இது?! இதற்கெல்லாம் ஐடி துறை என்ன பதில் சொல்லும்? சம்பளம் கொடுத்துவிட்டால் அடிமைகளா?

   Delete
  2. @சிவா 'நீ எலினா நான் பூனைடா'னு சினிமா வசனம் மாதரியே சொல்ற. but same blood

   Delete
  3. @ துளசி சார் . நல்லாவே பதில் சொல்லுவாங்க, ஆனா நம்ம கேட்ட கேள்விக்கா அந்த பதில் இருக்காது

   Delete
 3. படித்தாலே அழுகை வருகிறது. இவ்வளவு கஷ்டமா.. அதுசரி, cab freeயா, கட்டணம் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்களா?

  கடைசி பாராவுக்கு முதல் பாரா படித்தபோது 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்... அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்' என்ற காதலால் பாதிக்கப் பட்டவனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் சார். cabபிற்கு என்று கட்டணம் எதுவும் வாங்க மாட்டார்கள். ஆனால் cab vendorகளுக்கு பணம் ப்ராஜெக்ட் budgetஇல் இருந்துதான் போகும். எல்லாமே கண்துடைப்பு. எப்படி பார்த்தாலும் நம் உழைப்பின் கூலியில் அதுவும் அடக்கம்

   Delete
  2. இல்லை ரூபக்... சில நிறுவனங்களில் பணம் வாங்குகிறார்கள். அதனால்தான் கேட்டேன். அதுவும் கிலோமீட்டர் அளவைப் பொறுத்து.

   Delete
 4. ரூபக்...மனதை என்னவோ செய்துவிட்டது...சத்தியமாக....எவ்வளவு கஷ்டங்கள்? அதுவும் இறுதியாசச் சொல்லப்பட்ட இரு பத்திகளும் உண்மையை நச்சென்று பளிச்சிடவைக்கிறது...உண்மைகள் கசக்கத்தானே செய்யும்.....ரூபக்...ஏன் உங்களது வண்டியில் செல்ல அனுமதிப்பதில்லை..?

  ஐடி துறை என்பது என்ன வேதனையானது என்பது தெரிகின்றது....

  ReplyDelete
  Replies
  1. முதலில் அனுமதித்து தான் இருந்தார்கள். ஒரு பெண் இருந்துவிட்டு நிறுவனத்தின் பெயர் அடிவாங்கிவிடவே எழுந்த சமாளிப்பு நடவடிக்கைகள் இது. 8 30 மணிக்கு மேல் ஒரு ஊழியன் வெளியில் சென்றால் ஆபத்து என்று அனுமதிக்க மறுத்து விட்டனர். நல்ல விசயம் தான். பெண்களுக்கு மட்டும் அல்லாது ஆண்களின் பாதுகாப்பிற்கும் அக்கறை செலுத்துவதை நான் இருகரம் கூப்பி வரவேற்கின்றேன். வெளியில் அனுமதிக்காது போல் 8 30 மணிக்கு மேல் எவரையும் வேலை பார்க்கக் கூடாது என்று சொல்வது அல்லவா நியாயம். அதை செய்தால் அவர்களுக்கு லாபம் வராது. எனவே பிறந்தது இந்த கட்டாயம் .

   Delete
 5. நீங்கள் உங்கள் வண்டியில் போவதில் அவர்களுகென்ன இடர்பாடு! முட்டளுக்கு எடுத்துக் காட்டு முகமது துக்களக் அல்ல! இவர்கள்தான்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா. ஒரு சிலரை தவிர்த்து ஆணையிடும் நிலையில் இருப்பவர்கள் எல்லாருமே சுயநல வாதிகள் தான் ஐயா

   Delete
  2. அய்யா,

   எல்லாம் (facilities teamக்கு வரும்) கட்டிங் மகிமைதான் ஐயா.
   கூடவே பணியாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்தி விட்டோம் என்ற பில்டப் வேறு.
   ஒரே கல்லில் ரண்டு மாங்காய்.

   அவர்கள் துக்ளக் என நினைத்தால் நாம்தான் துக்ளக் ஆவோம்.

   Delete
 6. ஒரு பக்கம் இது போன்ற வேதனை நிலை. இதில் மன அமைதி இழப்பது மிகுந்த சோகம்.
  ஆனால் இன்னொரு பக்கம் இந்த துறையில் இருப்பவர்கள் பற்பல வீடுகளை வாங்கி இள வயதிலேயே கொடி கட்டி பறக்கின்றனர். மற்றவர்களை விட அவர்களுக்கே பற்பல முதலீடு வகைகள் தெரிந்து கலக்குகின்றனர்.
  ஆக நீங்களும் சில நண்பர்களும் சேர்ந்து கார் பூலிங் செய்வது சற்று சிரமத்தை தணிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. 'கார் பூலிங் ' என்பது என்னைப் போல் வாரம் ஒரு ஷிப்ட் அடிப்படையில் பணி புரிபவர்க்கு சாத்தியம் இல்லாத ஒன்று. தினமும் ஒரே நேரத்தில் அலுவலகம் செல்பவர்களுக்கு இந்த முறை உதவும்.

   Delete
 7. வேதனையான வாழ்க்கை தான் ரூபக்....

  தில்லியின் இரவுகளில், இப்படி பல வாகனங்கள் சென்றபடியே இருப்பதைப் பார்க்கும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை இந்தப் பதிவு பிரதிபலிக்கிறது. வழியில் அடுத்த பயணிக்காய் காத்திருக்கும் பல வாகனங்கள் - உள்ளே கண்களை மூடி இருக்கும் சிலர் என பார்க்கும்போதெல்லாம் அவர்கள் படும் இன்னல்கள் எத்தனையோ என தோன்றும்.....

  சொந்த வாகனத்தில் செல்ல விடுவது தான் நல்லது.

  ReplyDelete
 8. அதுவும் இந்த கேப் ஓட்டுநர்கள் இருக்காங்களே. அவனுகளுக்கு ஹெட்லைட்டு டிப்பு, நிதானம், 2/3 கியர், பிரேக், மிதவேகம் எல்லாம் என்னவென்றே தெரியாது. ஹைபீம் ஹெட்லைட்டு, ஹாரன், ஆபத்தான ஓவர்டேக், 5வது கியர், weaving, மிதமிஞ்சிய வேகம், சாலையை மறித்து சண்டை போடுவது இவை மட்டுமே தெரியும்.

  ReplyDelete
 9. வணக்கம் தல ..
  நெடு நாளைக்குப் பிந்தி தூசி தட்டியிருந்தாலும்
  கொஞ்சம் காட்டமாகத்தான் இருக்கிறது குமுறல் ...
  அந்த வகையறா பணி செய்யாதவர்களை கூட, இன்னல் படும் உங்கள் போன்றாரின் நிலையை உணர வைக்கிறது எழுத்து ...

  மாற்றங்கள் வரும் நம்புவோம், ரூல்ஸ் எப்போதும் உடைபடாததல்ல, உடைபடும் என்று நம்புகிறேன்

  ReplyDelete
 10. No amount of words can match the grievance that we experience with the cab system.

  ReplyDelete
 11. நியாயமான மனக் குமுறல்.மனித உரிமைகளை பறிக்கும் செயல்கள் நெடுகாலம் நீடிக்காது. விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்

  ReplyDelete