Monday, September 9, 2013

சேட்டைக்காரனும் பிரெஞ்சுகாரியும்

பதிவர் திருவிழா முடிந்த மறுதினம் என் கிராமத்திற்கு சென்று வரவேண்டிய கட்டாயம். என்னிடம் இருப்பது அதி நவீன கைபேசி என்பதால், எப்பொழுதும் எனக்கு சுஜாதா புத்தகங்களே பயணத் துணை. ஆனால் ஒரு வித்தியாசத்திற்காக இம்முறை பதிவர் திருவிழாவில் வெளியிடப் பட்ட சேட்டைக்காரனின் 'மொட்டைத் தலையும் முழங்காலும்' புத்தகம் என்னுடன் பயணிக்கத் தொடங்கியது.


கோயம்பேடு சென்று PRTCஇல் புஷ் பேக் வசதி கொண்ட புதுச்சேரி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், பேருந்தை ஒரு முறை ஸ்கேன் செய்தேன், நம் கண்ணுக்கு ஏதேனும் விருந்து கிடைக்குமா என்று. வழக்கம் போல் பாட்டிகளும் ஆண்டிகளும் மட்டுமே இருந்தனர். ஒரு பிரெஞ்சு தம்பதியர் மட்டும் அந்தக் கூட்டத்தோடு பொருந்தாமல் தனியே இருந்தனர். அந்த அம்மணி வெள்ளாவி வைத்து வெளுத்து, சரவண பவன் காரக் குழம்பு நிற தலை முடியுடன் இருந்தது என்னைப் பெரிதும் கவராததால், சேட்டையுடன் பேங்க் ஆப் டுபாக்கூரினுள் நுழைந்தேன். பேருந்து புதுவையை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. 

எனக்கு சன்னல் சீட்டு கிடைக்காமல், இரண்டு சீட் வரிசையில் நான் அமர்ந்திருக்க, எனது வலது புற இரண்டு சீட் வரிசையில் அந்த பிரெஞ்ச் அம்மணி அவள் கணவனுடன்(அப்படித்தான் இருக்கணும்) அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பேருந்தில் திடீர் என்று ஒரு சலசலப்பு, ஒரு சில ஆண்கள் அங்கும் இங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். அந்த பிரெஞ்சு அம்மணியும் கூந்தல் காற்றில் பறக்க, ஒரு கையால் அவள் முடியை முடிந்துக் கொண்டு, பொதுத் தேர்வில் ஹால் டிக்கெட் துளைத்த மாணவி போல் பரிதாபமுடன் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். நம்ம சேட்டையின் " 'கம்'னு கெட' கதையில் நாற்காலிக்கு அடியில் இருக்கும் சூவிங் கம்மை ஜிம்மி தேடிக் கலைப்பாயிறுந்தது. 

என் காலில் ஏதோ தடுக்க, அதை என் கையில் நான் எடுத்து பார்த்து, கண்ணில் இருக்கும் காட்சி மூளைக்கு சென்று 'அந்த பொருள் ஹேர் கிளிப்' என்று பதில் வரும் சில நொடிகளில், என் கையில் இருந்து அதைப் பிடிங்கிய ஒரு சொட்டைத் தலையன் அதை அந்த பிரெஞ்ச் அம்மணியிடம் கொடுத்தான். அவனுக்கு வாயால் நன்றி கூறி, எனக்கு மனமார அவள் கண்களால் நன்றி சொன்னாள். பேருந்து கூவத்தூரில் இருக்கும் அரசு பேருந்துகள் இலைப்பாரும் உணவகத்தில்(?) நிற்க, அந்த அம்மணியின் கணவன் ஊதுகுழல் வாசிக்க செல்ல, அவள் என்னுடன் வந்து ஆங்கிலத்தில் உரையாடியது மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் கீழே. 

'வணக்கம். என் பெயர் ஜூலி. நான் இந்தப் பேருந்தில் வெகு நேரமாய் உங்களையே கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் புத்தகத்தை படித்து சிரித்துக் கொண்டே இருக்கறீர்கள். என்ன என்று கேட்கலாம் என்றால் என் கணவன் அது நாகரீகம் இல்லை என்று என்னை தடுத்தார். அதனால் அவர் சென்றவுடன் கேட்கிறேன். இது என்ன புத்தகம்?' என்று அவள் சேட்டைக்காரனின் புத்தகத்தின் அட்டையை பார்த்தாள். (அவள் பேசியது தூய ஆங்கிலம் என்பதால் இங்கு தூய தமிழ்... அவ்வவ்). 

' சேட்டைக்காரன் என்பவர் தான் இணையத்தில் எழுதிய நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்' என்று நான் கூறுகையில் அந்தப் புத்தகத்தை வாங்கி, 'இவர்தான் சேட்டைக்காரனா?' என்று நாகேஷ் படத்தை காட்டி கேட்டாள்.

'இல்லை இவர் அவருக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். இவர் தான் சேட்டைக்காரன்' என்று பின் பக்க அட்டையை காட்டினேன்.

'மிகவும் முதியவராக இருக்காரே இவர் நகைச்சுவையா உங்களை சிரிக்க வைக்கிறது?' என்று ஆச்சரியத்துடன் கேட்டு, காற்றில் நெற்றியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அவள் காரக்குழம்பு நிற முடியை காதுக்கு பின் தள்ளினால்.

'அவர் பார்கத்தான் முதியவர். ஆனால் எண்ணத்திலும் குசும்பிலும் இளையவர். அவர் சொல்லும் உவமைகள் பிரமாதமாக இருக்கும்.'

'எங்க அவர் சொன்ன உவமைகள் சில வற்றை எனக்கு சொல்லுங்களேன்' என்று மிட்டாய் வாங்க அடம் பிடிக்கும் சிறு குழந்தை போல் என்னிடம் கெஞ்சினாள். நானும் அவரின் சில உவமைகளை பட்டியலிட்டேன்.  

மெட்டி' வடிவுக்கரசி மாதிரி மென்மையாக இருந்த அந்த அம்மணி 'அருணாச்சலம்' வடிவுக்கரசி மாதிரி ஆக்ரோஷமாக முறைத்தார்.

பீர்க்கங்கரணை தண்ணித் தொட்டிக்கு பீட்டர் இங்கிலாண்டு சட்டை போட்டுவிட்டது போல.

'கொண்டலேறுபள்ளி  கோபாலராம ரெட்டி !'

'என்ன சார் , உங்க பேரைக் கேட்டா  காந்தாராவ் நடிச்ச பழைய தெலுங்குப் படப் பெயரைச் சொல்றீங்க?'  

உரித்த பனங்கிழங்குக்கு உடுப்பு மாட்டி விட்டது போல் ஒரு இளைஞன் கேட்டான்

சூடாமணி சூடாகி ஏடாகூடமணியாவதற்குள், வெங்கடசாமி லிஸ்டுடன் வெளியேறினார்

'சர்க்கரை அஞ்சு கிலோ'

'ஒரே பாக்கெட்டா தரட்டுமா? ரெண்டு ரெண்டு கிலோ பாக்கெட்ட ஒரு ஒரு கிலோ பாக்கெட்டா தரட்டுமா' 

'என்னாலே அஞ்சு கிலோ பாக்கெட்தைத் தூக்க முடியாது. நீங்க சொல்ற மாதிரி மூணு பாக்கெட்டா கொடுத்திடுங்க'

References: இடுப்பொடியூர் வரலாறு" பேராசிரியர் அடுப்பங்கரையூர் அடங்காவாயர் 

குக்கரில் வேகவைத்த குருணை அரிசி போல்க் குழைந்தான் பன்னீர் செல்வம்

'என்ன மாமா இப்பயெல்லாம் உங்களைப் பார்க்கவே முடியலை?'

'அவளோ அசிங்கமாவா இருக்கேன் ?' 

இதைக் கேட்டவுடன் அவள் சிரித்த வேகத்தில் அவள் எச்சில் என் முகத்தில் சீறிப் பாய்ந்தது. 

'மன்னிக்கவும்' என்று அவள் கைகுட்டையால் என் முகத்தை துடைத்து விட்டு, 'மேலும் சொல்லுங்கள்' என்றாள். 

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கிட்டாமணியின் முகம் ஆயுதபூஜையன்று வண்டி டயரின் கீழே வைத்து நசுக்கப் பட்ட எலுமிச்சம்பழம் போலக் காணப்பட்டது

"அட நாராயணா! நோக்கு எப்படி என் பேரு தெரியும் ? " மாமி திடுக்கிட்டு கேட்டாள்.

"ஆமா, திருவல்லிக்கேணியிலே பின்னே என்ன ஆஞ்சலினா ஜோலின்னா பேரு வைச்சிருப்பாங்க?" 

'துண்டுக்கடி' ராஜாமணி என்ற இடுகுறிப்பெயர், 'முட்டுச்சந்து' ராஜாமணி என்ற என்ற காரணப்பெயர், 'மூக்குறிஞ்சி' ராஜாமணி என்ற வினையாலணையும் பெயர். அண்மைக்காலமாக அவரை எல்லோரும் 'எலிமினேட்டர்' ராஜாமணி என்றுதான் அன்போடு அழிக்கிறார்கள்.

'நரம்படி நாராயணன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா ?'

'ஐயையோ  இல்லை சார் !' என்று கையெடுத்துக் கும்பிட்டான் வைத்தி.

'அபப்டின்னா  இனிமே அது நான் தான்!' என்று உறுமினார் செக்யூரிட்டி ஆபிசர்.      
      

'இந்தப் படங்கள் எல்லாம் நல்லா இருக்கே. அவரே வரைஞ்சதா?' என்று என்னைப் பார்த்து கேட்டாள், 'இல்லை, கணேஷ் சார் அவர் ஓவியர் நண்பர் மூலம் வரைந்தது' என்று நான் சொல்லி முடிக்கும் பொழுது அவள் கணவன் பேருந்தை நோக்கி நடந்து வருவதை நாங்கள் இருவருமே கண்டோம்.

'எனக்கு இந்த புத்தகம் வேண்டும்?' என்றாள்.

கர்நாடகம் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டது போன்ற அதிர்ச்சியுடன் 'தமிழ் புத்தகத்தை வைத்து நீ என்னப் பண்ணுவாய்?' என்று கேட்டேன்.

'ஒரு தமிழ் நாட்டை சேர்ந்த தோழி என் வீட்டருகில் இருக்கிறாள். அவளை எனக்கு மொழி பெயர்க்க சொல்லுவேன்' என்று கூறி என் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

'சரி. இந்தப் புத்தகத்தை எடுத்துக்கோ' என்று அவளிடம் நான் கொடுக்க, வாங்கலாமா வேணாமா என்ற தயக்கத்துடன் 'அப்ப உங்களுக்கு?' என்று கேட்டாள்.

'நான் கணேஷ் சார் கிட்ட சொல்லி வேற புத்தகம் வாங்கிக்கறேன்' என்று அவிளிடம் கொடுத்துவிட்டேன்.

புத்தகம் கையில் கிடைத்தவுடன், மிட்டாய் கிடைத்த குழந்தை போல் அவள் முகம் பிரகாசமானது. பேருந்து தன் ஓட்டத்தை மீண்டும் தொடர, 'இவர மாதிரி எழுத்தாற்றல் நமக்கும் இருந்திருந்தா இந்த மாதிரி நிறைய பெண்பால் விசிறிகள் கிடைத்திருப்பார்களே' என்று என்னுள் ஏங்கிக் கொண்டேன்.

26 comments:

 1. அருமை அருமை
  வித்தியாசமானமுறையில் மிகச் சிறப்பான
  நூல் விமர்சனம்.பா
  யாசத்தில் முந்திரிகளைப்
  எடுத்துத் தந்ததை சுவைத்தேன்
  ஆயினும் பாயாசத்தோடு முந்திரியின் சுவை
  எத்தனை அருமை என்பது அதை சுவைத்துப் பார்த்தால்தான்
  தெரியும்
  .நான் பாதிப் பாயாஸத்தை குடித்து விட்டேன்
  மீதியை இன்று குடித்து விடுவேன்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. இன்னும் நிறைய முந்திரிகளை எடுத்து இங்கு பகிர முடியவில்லை.. படிப்பவர்கள் சுவைக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

   Delete
 2. வித்தியாசமானதொரு புத்தக விமர்சனம் ரூபக்... ஒரு புத்தககம் குறித்து மற்றொருவருடன் உரையாடுவது போன்ற விமர்சன நடை அருமை.. அதிலும் பிரெஞ்சுக்காரியவே கவுதிட்டியேப்பா...

  சேட்டை அவர்களின் தாக்கம் பதிவு முழுவதும் பரவிக் கிடக்கிறது அருமை அருமை.. நானும் படிக்கத் தொடங்கிவிட்டேன்.. பல இடங்களில் குபீர்ச் சிரிப்பு..

  ஆமா ஜூலி நம்பர் வாங்கியாச்சா...

  ReplyDelete
  Replies
  1. நம்பர் எல்லாம் எதுக்கு சீனு , நான் ரொம்ப நல்ல பையன்.
   skype Id மட்டும் தான் வாங்கினேன்.

   Delete
 3. புத்தகம் கையில் கிடைத்தவுடன், மிட்டாய் கிடைத்த குழந்தை போல் அவள் முகம் பிரகாசமானது.

  அருமையான புத்தக விமர்சனம் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 4. ஹா... ஹா... இனிமையான பயணம்... விரைவில் உங்கள் ஏக்கம் தீரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ... தங்கள் வருகைக்கு நன்றி D.D.

   Delete
 5. புத்தக விமர்சனத்துக்கு நன்றி! இன்னும் பதிவை முழுசா படிக்கலை
  பண்டிகை வேலை இருக்கு! வந்து நிதானமா படிக்குறேன்! இது சும்மா ட்ரெய்லர்

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கே முன்னோட்டம் விட்ட முதல் பதிவர் நீங்களாத்தான் இருக்க முடியும் அக்கா

   Delete
 6. கலக்கலான புத்தக விமர்சனம்... இந்த மாதிரி எழுதுறதுக்கு யாராவது கத்துக்கொடுங்கபா...

  ReplyDelete
  Replies
  1. நல்ல நாள் அதுவுமா ஒரு கனவ உண்மை மாதிரி எழுதி கடுப்பேத்தன உங்களுக்கா சொல்லித் தரனும்

   Delete
 7. அவர் பார்க்கத்தான் ஒல்லி ஆனா காமடியிலே கில்லி?

  ReplyDelete
 8. இன்றைய சூடான செய்தி.. போன வாரம் வரை வரை T151 க்காக காத்திருந்த அந்த வளர்ந்து வரும் (?!!) பதிவர் பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி பேசுகிறார். பிரெஞ்சு தாடி வைத்து அலைகிறார். பிரெஞ்சு ப்ரைஸ் (French Fries) மட்டுமே சாப்பிடுகிறார். அதுமட்டுமா அடிபட்டால் பிரெஞ்சு ஆயில் தான் பயன்படுத்துகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. இதுக்கெல்லாம் காரணம் என்ன?

  ஹிஹிஹி..

  ReplyDelete
  Replies
  1. 'City of Love' என்று புகழப் படும் Paris செல்லவும் அவருக்கு ஆசை உண்டாம். Je suis heureux

   Delete
 9. //கர்நாடகம் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டது போன்ற அதிர்ச்சியுடன் //

  ஹா...ஹா...ஹா...

  வித்தியாசமான விமர்சனம். இப்படிக் கூட பாராட்டலாமா ரூபக்? அருமை.

  ReplyDelete
  Replies
  1. சீனு சொல்லியது போல் சேட்டைக்காரன் அவர்களின் கதைகளைப் படித்த தாக்கம் தான். தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி சார்

   Delete
 10. வித்தியாசமான புத்தக விமர்சனம் .. புத்தகம் எங்கு கிடைக்குமென்று தெரியவில்லை. இணையத்தில் வந்தால் வாங்கலாம் என்றிருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி :) ஆன்லைனில் வாங்க http://settaikkaran.blogspot.in/ , தளத்தில் இணைப்பு கொடுத்திருக்கிறார்

   Delete
 11. என்னோட புஸ்தகத்தை ஃப்ரெஞ்சுலே மொழிபெயர்த்துப் படிக்கப்போறாங்களா அம்மணி? :-)) மொழிபெயர்ப்பதற்கு முன்னாலே அந்தப் பக்கத்து வீட்டுக்காரத் தோழியோட விழிபெயர்ந்திடாம இருந்தா சரி! :-)

  படிச்சீங்க; சிரிச்சீங்க! சந்தோஷமா ஒரு பதிவும் போட்டுட்டீங்க! புத்தகத்தோட நோக்கம் நிறைவேறினது மாதிரி இருக்கு! ரொம்ப நன்றி!:-)

  ReplyDelete
  Replies
  1. // வீட்டுக்காரத் தோழியோட விழிபெயர்ந்திடாம இருந்தா சரி// ஹா ஹா ..

   மிக்க நன்றி சார் ... நீங்க மேலும் இது போன்ற நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும் என்பதே என் ஆசை :)

   Delete