பல நாட்களாக, உணவு வேட்டைக்கு செல்லாமல் அமைதியாக இருந்த ராமனுக்கு தான் சென்ற ஆண்டு டில்லியின் சாலைகளில் உண்ட ஆலு டிக்கியின் சுவை சில நாட்களாக அவனை தூங்கவிடாமல் தவிக்கச் செய்தது. அவனும் பல இடங்களில் சென்னையில் அதை உண்டு, திருப்தி இல்லாமல் சோர்ந்து போய் இருந்த வேளையில், சௌகார்பேட்டையில் சுவையான ஆலு டிக்கி கிடைக்கும் தகவல் அறிந்து, துள்ளி குதித்து தயாரானான்.
ப்ராட்வே பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் சௌகார்பேட்டைக்கு செல்ல ராமன் பீச் ரயில் ஏறி 'போர்ட்' (Fort)இல் இறங்கி, பேருந்து நிலையம் வழியே, உயர் நீதி மன்றத்தின் எதிர் திசையில் நடந்து, ஒரு காவல் துறை பூத்தை கடந்தால் அதைத் தொடர்ந்து வரும் வலது பக்க சந்து தான் 'மின்ட் ஸ்ட்ரீட்' (Mint Street). அந்த வீதியில் நுழைந்தவுடன் அவனுக்கு சென்னையில் தான் இருக்கிறோமா என்ற பெரும் சந்தேகம் தோன்றியது. பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல், குஜராத்தி ஆண்களும் பெண்களும் அந்தச் சாலையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர்.
தெரு எங்கும் சேலைக் கடைகள் தான், அதன் பின் தான் இந்தச் சாலையோர உணவுகள். இங்கு குஜராத்திய வகை சேலைகளை, ஹிந்தி தெரிந்தால் பேரம் பேசி மலிவு விலையில் வாங்கலாம். இந்தத் தெருவில் உள்ள சீலைக் கடைகளின் சிறப்பு என்ன வென்றால், நம்மைத் தரையில் மெத்தையின் மேல் அமரவைத்து தான் சேலையை விரித்து காண்பிப்பார்கள். புருஷர்கள், ஸ்திரீகள் (சிவகாமியின் சபதம் படித்துக் கொண்டிருக்கும் தாக்கம்) சேலை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு குட்டி தூக்கம் போட்டு ஓய்வெடுக்கலாம். ரங்கநாதன் தெரு போல் கால் வலிக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுன்னு ஆரம்பிச்சிட்டு சேலைன்னு போய்ட்டனேன்னு நீங்க திட்டறது எனக்கு கேட்கறது, இதோ வந்துட்டேன்.
அப்படியே சேலை பொம்மைகளை பார்த்துக் கொண்டு, அந்தக் சாலையில் நடக்கையில், இடது புறம் வரும் 'காக்காடா ராம்பிரசாத்' ஸ்வீட் கடை தான் நம் ராமன் தேடிச் சென்றது. இந்த கடை இனிப்பிற்கு பெயர் போனது என்றாலும், இங்கு கிடைக்கும் ஆலு டிக்கியின் சுவை அருமை என்ற செய்தி ராமனை வந்து சேர்ந்ததால், ஆலு டிக்கியும் பானி பூரியும் மட்டும் ஆர்டர் செய்தான். ஆலு டிக்கி ஐம்பது ரூபாய், பானி பூரி இருபத்து ஐந்து ரூபாய். விலை அதிகம் என்று உங்களைப் போலத்தான் ராமனும் முதலில் ஷாக் ஆனான்.
ஆலு எண்ணையில் பொறிக்கப் படுகையிலே, பானி பூரி கொடுக்கப் பட்டது. கையில் ஒரு சிறிய தொன்னை கொடுத்து, முதலில் 'புதின்' என்று எழுதி, சிவப்பு துணியால் மூடப் பட்டிருந்த மண் பானையில், பூரியை நனைத்து கொடுத்தான். இரண்டாவது 'ஜல் ஜீரா' (புளி) என்று எழுதியிருந்த பானையில் இருந்தும், 'ஹிங்' (பெருங்காயம் என்று சுவையில் இருந்து யூகித்தேன்) என்று எழுதியிருந்த பானையில் இருந்தும் இரண்டு இரண்டு பூரி, மொத்தம் ஆறு பூரி. எப்பொழுதும் புதினா ரசத்திலேயே பானி பூரி சாப்பிட்டு பழகிய நாவிற்கு இது புது சுவையாக இருந்தது. ராமன் ஒரு பூரி சாப்பிட்டு முடித்த பின் தான், கடைக்காரன் அடுத்த பூரி தயார் செய்வதால் எந்த அவசரமும் இன்றி நிதானமாக சுவைக்க முடிகிறது.
இதற்கிடையில் பொறிக்கப் பட்ட ஆலு, பிட்சா போல் ஆறு துண்டாக வெட்டப் பட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் தயிர் ஊற்றி, சாட் மசாலா மற்றும் வேறு பெயர் தெரியாத வாசனைப் பொருட்கள் மழைச் சாரல் போல் தூவப் பட்டு, ஓமபொடி மற்றும் துருவிய காரெட், பீட்ரூட், கௌஸ் முதலிய காய்கறிகள் மேலே அலங்கரிக்கப் பட்டு, கிரீடத்தில் பன்னீர் துண்டு ஒன்று வைத்து கைக்கு வந்தது. புகைப்படம் எடுக்கும் வரை ராமனை கட்டுப் படுத்துவது, ஒரு குழந்தையை சாக்லேட் சாப்படாமல் தடுப்பதை விட பெரும் பாடானது.
அந்த ருசி நாவில் உள்ள சுவை அரும்புகளுக்கு, மாமல்லனைக் கண்ட சிவகாமி கொண்டது போல், புத்துணர்ச்சியும் குதூகளமும் கொடுத்தது. தாகம் தீர்க்க பாதாம் பால் என்பது ரூபாய் கொடுத்து வாங்கிய ராமன், பாதாம் பருப்பு சற்று அதிகமாக இருந்தது என்றே இறுதியில் முடிவுக்கு வந்தான். இங்கு கிடைக்கும் பாதாம் பாலும் சற்று பிரபலம் தான். வயிறும் மனமும் நிறைந்தது. விலை கூடுதலேனும், கிடைத்த சுவை திருப்தி அளித்தது. அருகில் ஒருவர் வாங்கிய பிரட் சான்ட்விச் பார்க்க வித்யாசமாக இருந்தது. மாதக் கடைசி என்பதால், மேலும் எதுவும் சுவைக்க முடியாமல், அடுத்த மாத முதல் வாரத்திலே மீண்டும் வர வேண்டும் என்ற சபதம் செய்து கொண்டு, சாலையோர பொம்மைகளை ரசித்த படியே வீடு திரும்பினான் ராமன்.
Tweet | ||