Wednesday, June 12, 2013

VITயில் நான்

VIT என்ற பெயரில் பல குழப்பங்கள் இருப்பதால், முதலில் இந்த தலைப்பை தெளிவு செய்ய விரும்பிகிறேன். நான் வேலூரில் இருந்த போது வேலூர் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி செல்ல நேர்ந்த அனுபவம் குறித்த ஒரு கட்டுரை இது.

நான் L.K.G முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தது வேலூர் காந்தி நகரில் உள்ள வில்லியம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில். ( ஒன்பது ஆண்டுகளுக்கு முன், வகுப்பு கடிதங்களில் என் பள்ளியின் பெயரை எழுதிய நினைவு). 1960 ஆம் ஆண்டு 'டவுன்ஷிப் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்' என்ற பெயரில் தொடங்கப் பட்ட இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது நான் சேர்ந்த போது. நான் வளர வளர பள்ளியும் பிளஸ் 2 வரை உயர்ந்தாலும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாய் குறைந்து கொண்டு  இருந்தது. பல புது பள்ளிகள் ஆடம்பரமாக மக்களை இழுத்தபொழுதும் என் பள்ளி கல்வி சேவையையே மையமாகக் கொண்டு செயல்பட்டதால் பெரும் அளவில் பொருளாதார வளர்ச்சி பெற வில்லை.

வெறும் ஐந்து நிமிட நடையில் இருக்கும் தெருமுனையில் தான் எனது ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி.பின் இடப் பற்றாக் குறை காரணமாக புதிதாய் இடம் வாங்கி, ஆறாம் வகுப்பு முதல் வெள்ளைக்கல் மேடு நோக்கி சென்றது எனது பழைய புதிய பள்ளி. இந்த வெள்ளைக்கல் மேடு VITக்கு மிக அருகாமையில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் ஸ்கூலில் இருந்து ஹை ஸ்கூல் தினமும் பள்ளி பேருந்தில் செல்வது வழக்கம், செல்லும் வழியில் VECஐ (அன்றைய  VIT ) தரிசித்து , அடுத்து வரும் இடது புற சந்தில் திரும்பி சற்று தூரம் சென்றால், வயல்வெளிகளுக்கு நடுவில், முள் வேளி சூழ, ஒரு கால்பந்து மைதானத்துடன் அமைதியாய் காட்சி தரும் இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய எனது பள்ளி.

என் பள்ளியை பற்றி நினைத்தாலே எனக்கு நினைவில் வருது எங்கள் தாளாளர் செரீனா வில்லியம்ஸ் அவர்கள் தான். ஆங்கிலத்தில் 'Dynamic leadership' என்று ஒரு கோட்பாடு உண்டு, அதை நான் இந்த பெண்ணில் தான் முதன் முதலில் கண்டேன். இவரை சாதித்த பல பெண்களுடன் ஒப்பிட முடிந்தாலும், எங்கள் பள்ளியை பொறுத்த வரை அவர் ஒரு லேடி ஹிட்லர் தான். 

சிலரை பார்த்தால் பயம் வரும், ஆனால் இவரை போன்ற சிலரை நினைத்தாலே மரியாதை கலந்த பயம் வரும். ஒரு சின்ன உதாரணம் சொன்னால் உங்களுக்கு புரியும்.  பள்ளியில் ஒரே ஆட்டம் பாட்டம் கூச்சல் என்று இருக்கும் சமயம், அவரது  பியட் கம்பெனியின் ப்ரீமியர் சீருந்து பள்ளியை நெருங்கும் ஓசை கேட்ட அடுத்த நொடி, 'என்னப்பா இங்க இருந்த ஸ்கூலக் காணம்' என்று ஆச்சரியப்படும் படி தலை கீழாக ஒழுக்கமா மாறி இருக்கும்.  அப்படி ஒரு பயம் அவர் மீது, மாணவர் முதல் ஆசிரியர் வரை.  

வகுப்பு தலைவன் என்பதால், யாருக்கு என்ன வேண்டுமானாலும் என்னைத்தான் அவரிடம் தூது அனுப்புவர், இப்படி பல சமயங்களில் அவருடன் உரையாடியதுண்டு. ஒரு முறை அரையாண்டு தொடங்க இருக்கும் சமயம், PT வகுப்பில் விளையாட வேண்டும் என்று அனைவரும் என்னை அவரிடம் அனுமதி கேட்க அனுப்பினர். அவர் அறையில் நாற்காலியில் அமர்ந்து எதோ பைல்களை அலசிக்கொண்டு இருந்தார் , நான் உள்ளே சென்றவுடன், சற்று நிமிர்ந்து தன் மூக்கின் நுனியில் இருக்கும் வெள்ளை அரை ப்ரேம் கண்ணாடி வழியே ஒரு பார்வை பார்த்தார் பாருங்கள், அந்த தருணம் என் அத்தனை நாடிகளும் அடங்கி விட்டது. What a powerful woman! எப்படியோ எதையோ நடுக்கத்துடன் உளறி, வந்த காரணத்தை கூறி விளையாட அனைவருக்கும் அனுமதி வாங்கி விட்டேன்.  

இப்படி ஒரு புஜபல பராகிரமம் நிறைந்த செரீனா வில்லியம்ஸ் பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்றாலும், இப்போதைக்கு நம் தலைப்பிற்கு திரும்ப சென்று விடலாம். நான் போடும் மொக்கை தமாஷ்களை கேட்டு ரெட்டை சடை அசைந்தால் என் உள்ளம் விமானத்தில் பறந்து இந்திரலோகம் சென்று ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு வகுபிற்கு திரும்பும், ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இனி. 

எல்லா மாலையும் பள்ளி முடித்து, இரண்டு தெரு தள்ளி இருக்கும் என் நண்பன் S.நவீன் (இங்கு நமக்கு தேவை S என்ற initial கொண்டவன்) வீட்டில் கிரிக்கெட் விளையாடுவதுண்டு. அப்படிப்பட்ட அன்றைய தினத்தில்   பக்கத்துக்கு வீட்டு நாயை யார் ஏமாற்றி பந்தை எடுப்பது என்று கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருந்த போது என்றுமே என்னைத் தேடி வராத என் அம்மா அங்குவந்தது ஆச்சரியம் என்றால் வந்ததும் என்னிடம் கூறிய செய்தி அதைவிட ஆச்சரியம், அதாவது என் இனிய தாலாளர் செரீனா வில்லியம்ஸ் என் வீட்டு தொலைபேசிக்கு அழைத்து, உடனே என்னை அவர் வீடு வரச் சொல்லி இருந்தார் என்ற செய்தியை சொன்னார். நவீன் அண்ணன் எனக்கு வழி சொல்ல, என் மிதி வண்டியில் அவர் வீடு சென்ற போது, வாசலில் ஸ்டீவ்  சார் எனக்காக காத்திருந்தார். 

என்னை அழைத்து உள்ளே சென்றார். கணவனை இயற்கை அழைத்து கொள்ள, மகன்களை வெளி நாட்டு மோகம் அழைத்து செல்ல அவர் மட்டும் தனிமையில் வாழ்ந்து வந்தார். 'VITல நடக்கும் maths model போட்டிக்கு நீ ஏன் கலந்துக்கல...உம்... இப்பவே இவன அழைச்சிட்டு ஸ்கூல்க்கு போங்க, ஏதாவது மாடல் இருக்கும், அத சாம்பிள்கு கொடுங்க. இவன் நாளைக்கு கலந்துப்பான்' என்ற அந்த ஆசிரியர் ஸ்டிவை நோக்கி ஆங்கிலத்தில் சொன்னார்.சிலரிடம் முடியாது என்று சொல்ல நம் வாய் வராது, அவரிடமும் அப்படித்தான், தலையாட்டிய படியே சிலையாக நின்றேன். 'It's late but never to late' என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு, அதையே என் மனதில் சொல்லிக்கொண்டு என்னை நானே சமாதானம் செய்து, ஸ்டிவ் சாரின் டி.வி.எஸ். இல் பள்ளி சென்றோம்.

யாரும் இல்லாமல் பூட்டப்பட்டு, மிகவும் அமைதியாய் என் பள்ளியைக் கண்டது அதுவே முதல் முறை. அப்பொழுதே அமைதியின் பால் ஒரு காதல் கொண்டேன். ஸ்டீவ் சார் எனக்கு 'Pythagoras  Theorem' வரைந்து இருந்த மாடல் ஒன்றை கொடுத்தார். வீடு திரும்பி என் அத்தையின் உதவியுடன் அந்த மாடலுக்கு தெர்மோகோல் உருவம் கொடுக்க, வண்ணக் காகிதங்கள் ஆடை கொடுக்க. அது உயிர் பெற்று VIT செல்ல தயாரானது.                                             

மறுநாள் காலை வழக்கம் போல் ஹை ஸ்கூல் செல்லும் பள்ளி பேருந்தில் ஏறி, VIT வாசலில் சக பள்ளி மாணவர்களுடன் இறங்கிக் கொண்டேன். என்னை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான், பெயர் கொடுக்காதவன் எப்படி வந்தேன் என்று, முழு கதை கேட்டவுடன் அவர்கள் காதில் புகை தான். நான் கால் பதித்த முதல் கல்லூரி VIT, உள்ளே சென்றவுடன் எல்லா கட்டிடங்களையும் இணைக்க தார் சாலை, பல வடிவங்களில் இருந்த பிரம்மாண்ட கட்டிடங்கள், வண்டிகள் பல உலா வர, ஆடை வரம்பு இன்றி பல அக்காக்களும் வர, அந்த நாள் இனிதே தொடங்கியது.ஒரு வகுப்பில் எங்கள் மாடல்களை வைக்க ஏற்பாடு செய்திருந்தனர், அங்கு சென்று எல்லாம் தயார் செய்து பார்வையாளர்களுக்காக காத்திருந்தோம். ஒரு வர் பின் ஒருவர் வந்து பார்வையிட, அனைவருக்கும் Pythagoras தியரத்தை மீண்டும் மீண்டும் விளக்கினேன். இன்று கூட நீங்கள் என்னை தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் பிழை இன்றி ஒப்பித்து விடுவேன். பார்வை நேரம் முடிந்து மாலை அரங்கில் முடிவுகள் அறிவிக்க படும் என்று சொல்லினர், அங்கு இருந்த பிற மாடல்களை கண்டபொழுது  எனக்கு முடிவு தெரிந்து விட்டது.மத்த பிரிவுகளில் கலந்து கொண்ட என் பள்ளி மாணவர்களை பார்க்க சென்றேன். முதல் ஆச்சரியம் கான்டீன், என்ன சாப்படற எல்லா வகைகளும் உள்ளே கிடைக்குதா?, என் பள்ளியில் ஒரு பொட்டி கடை கூட இருக்காது. அங்கு அந்த மத்திய நேரத்தில் உலா வந்தவர்கள் யாருமே தனித்து இல்லை,  ஜோடியாக எல்லா மர நிழல்களிலும் காதல் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். சின்ன பையன எப்படி கெடுத்து இருக்காங்கன்னு பாருங்க மை லார்ட்.

இங்கு வெளி நாட்டு நீக்ரோக்கள் சற்றே அதிகம். நான் முடி திருத்தும் கடையில், அமட்டன் அவர்களின் இரண்டு மில்லி மீட்டர் நீள முடியை வெட்ட போராடும் காட்சிகளை நான் கண்டு வியந்ததுண்டு.  மாலை அரங்கம் சென்றோம், ஒரு திரை அரங்கம் போல், மேல் இருந்து தாழ்வாக, ஒலி-ஒளி வசதிகளுடன்  மிரட்டலாக இருந்தது. கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று என் மனதில் ஆழமாக பதிந்தது. ஆனால் நான் படித்த வேலம்மாள் கல்லூரியோ, இங்கு சொல்லி மாளாது.

நான் எதிர்பார்த்த படி வெற்றி கிடைக்கா விட்டாலும், ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது என்பது மறுக்க முடியா உண்மை. என் தோழி VITயில் முதுகலை படிக்க போகிறாள் என்ற செய்தியே என் நெஞ்சில் புதைந்து இருந்த அத்தனை நினைவுகளை தட்டி எழுப்ப காரணமாக அமைந்துவிட்டது,  அவள் உதவியுடன், திருமணம் ஆகும் முன், ஒரு நாள் மீண்டும் VIT செல்ல வேண்டும் என்ற பேராசையுடனும், என் வாழ்க்கை பாதையை அமைத்து தந்த என் பள்ளியையும், செரீனா வில்லியம்ஸ்சையும் காண வேண்டும்  என்ற ஆசையுடனும் இந்த பதிவை எழுதிவிட்டேன்.                                              

17 comments:

 1. எழுத்து நடையில் முதிச்சி தெரிகிறது ரூபக்... வாழ்த்துக்கள்...

  பழைய ஞாபகங்களைக் கிளப்பி விட்ட அந்தத் தோழி யாரோ....

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   //பழைய ஞாபகங்களைக் கிளப்பி விட்ட அந்தத் தோழி யாரோ....// அது மட்டும் ரகசியம் :)

   Delete
 2. மலரும் பள்ளி நினைவுகள் அருமை..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. கருத்துரையிட்டு பாராட்டியமைக்கு என் நன்றிகள்

   Delete
 3. உங்களுக்கு செரீனா வில்லியம்ஸ் போல ஒவ்வொருவனின் நினைவுகளிலும் ஒரு ஆசிரியர்/தலைமை ஆசிரியர் உறைந்து தான் போயிருக்கிறார்கள். பள்ளிக்கால நினைவுகளை இப்போது இழை பிசகாமல் அழகாய்ச் சொல்ல முடிந்தது வெகு சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. கொட்டு வாங்குவது சற்றே குறைந்ததில் மகிழ்ச்சி. ரசித்து பாராட்டிய கணேஷ் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

   Delete
 4. மரியாதை கலந்த பயம் இருந்ததினால் தான், அந்த இனிய நினைவுகளை எழுத முடிந்தது... தொடரும் (தொடர் பதிவு) தொடரலாம்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. //மரியாதை கலந்த பயம் இருந்ததினால் தான், அந்த இனிய நினைவுகளை எழுத முடிந்தது...//மிகவும் உண்மை

   //(தொடர் பதிவு) தொடரலாம்.// இயன்றவரை முயற்சிக்கிறேன்.

   மிக்க நன்றி D.D.

   Delete
 5. அருமையான எழுத்து நடை.. ரசித்து எழுதுகிறீர்கள்.. முடிவை இன்னும் கொஞ்சம் catchyயாக வைத்திருக்கலாம்.. நல்ல அப்திவு.. வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே.

   //முடிவை இன்னும் கொஞ்சம் catchyயாக வைத்திருக்கலாம்..// மனதில் பட்டதை எழுதிவிட்டேன், யோசித்திருந்தால் நீங்கள் எதிர்பார்ப்பது போல் முடித்து இருக்கலாமோ என்னவோ.

   Delete
 6. நன்றாக எழுதுகிறீர்கள்.
  வேலூரி இன்ஸ்டிட்யூட் பத்தித் தெரியாமலே போச்சே..! சுவையான நினைவுகள்.

  (வேலூர்னா எனக்கு ஞாபகம் வரது ஜெயிலு மட்டும்தான்.. என்ன செய்ய, சகவாசம் அப்படி..)

  ReplyDelete
 7. மிக்க நன்றி அப்பாதுரை சார்.

  //வேலூர்னா எனக்கு ஞாபகம் வரது ஜெயிலு மட்டும்தான்.. என்ன செய்ய, சகவாசம் அப்படி..// ஹா ஹா. வேலூர்ல ஜெயிலத் தவிர நிறைய விசயங்கள் இருக்கு.

  ReplyDelete
 8. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_8499.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி D.D சார், வாசித்து மகிழ்ந்தேன்

   Delete
 9. great post about school memories

  ReplyDelete
 10. Feeling very glad and thankful to have read this post Rubak :) awesome writing and memory :)
  Congrats..!!

  ReplyDelete