Monday, April 8, 2013

களவு - பகுதி இரண்டு

*முன் குறிப்பு : இக்கதையை படிக்கும் முன், முதல் பகுதியை படித்து பின் தொடரவும். களவு - பகுதி ஒன்று *

களவு - பகுதி இரண்டு : 

எல்லாப் பொருள்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினார்கள் கம்பத்துக்க்காரரும், அவரது குடும்பத்தினரும். அந்த வீட்டில் நான்கு சக்கர வண்டிகள் நிறுத்த இடம் இல்லாததால் வண்டியை தெருவில் நிறுத்துவது வழக்கம். அவர் மகன் வண்டியை நிறுத்திய இடத்திற்கு சென்ற பொழுது, அங்கு 'J' என்று சுண்ணக் கோலால் எழுதி இருந்தது. வண்டியை காணவில்லை, கம்பத்துக்காரரின் மகன் தெரு முழுக்க தேடினார், அவரது இஸ்திரி போட்ட சட்டை, வியர்வையால் நனைந்தது. 'வண்டியை வாங்கி ஆறு மாதம் கூட ஆக வில்லை' என்பதை எண்ணி அவர் மகன் சோர்ந்து போனார். அந்த வட்டார காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துவிட்டு பின் பேருந்தில் மருத்துவமனை சென்றனர். 

சம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆகியும், எந்த தகவலும் இல்லை. கம்பத்துக்காரரின் மகன் காப்புறுதிப் பணம் கோரல் முறைகளை ஆராயந்துகொண்டிருந்தார். நம் கம்பத்துக்காரருக்கு எதுவுமே சரியாகப்படவில்லை, தன் மகனை கட்டாயப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச்சென்றார். அங்கு சென்றால் 'குற்ற்றவாளி யாருன்னு தெரியும். அவனை தேடிக்கொண்டு தான் இருக்கோம். மேலும் தகவல் கிடைத்தால் கால் பண்ணுவோம்' என்று அவர்கள் கூறிய பதில் இவரை பெரிதும் சமாதனப்படுத்தவில்லை. ஏமாற்றத்துடன் வெளியேறியபோது ஒரு இன்ப அதிர்ச்சி. 

பவன் சிங்க் endeavour காரில் வந்து இறங்கினார். கம்பத்துக்காரரை பார்த்தவுடன் விரைந்து வந்து அவரை வணங்கினார். அவர் மகன் உற்பட அங்கு இருந்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி தான், ஏனெனில் பவன் சிங் இப்போது சென்னை மாநகர காவல் துறை ஆணையர். 

'நீங்க எங்கையா இங்க? சென்னை வந்தவுடன் எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாமே' என்று கம்பத்துக்காரரிடம் கேட்டார். (வாசகர் விருப்பத்திற்கு ஏற்ப பவன் சிங் இந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் புலமை பெற்றார்.) 

'மருத்துவம் பார்க்க சென்னை வந்தேன், மகன் கார் களவு போனதற்கு புகார் பதிவு செய்திருந்தோம் , அதை பற்றி விசாரிக்க தான் இங்கு வந்தோம்.' 

'வாங்க உள்ள, நான் என்ன நிலவரம்னு கேட்கிறேன்.' மூவரும் உள்ளே சென்றனர். 

பவன் இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்து 'என்னய்யா இவங்க கேஸ் என்ன நிலைமைல இருக்கு' 

இன்ஸ்பெக்டர், 'சார் இதுவும் அந்த ஜானியோட கைவரிசைதான். எங்களால ஒன்றும் செய்ய முடியல.' 

பவன் கம்பத்துக்காரரை நோக்கி 'இந்த ஜானி எங்களுக்கு பெரிய சவாலா இருக்கான். இவன பத்தி எங்க கிட்ட இருக்கறது இவனோட இருபது வருசத்துக்கு முன்னால் எடுத்த போட்டோ தான். இவன் எந்த கார் திருடினாலும், அது இருந்த இடத்துல 'J'னு ஒரு அடையாளம் விட்டுடுவான். இது வரைக்கும் உங்க காரோட சேர்த்து நாற்பத்து மூன்று கார திருடி இருக்கான். ஐயா, சைக்கிள் திருடிக்கொண்டு  இருந்த மண்ணாங்கட்டிய சூனம்பேடு காவல் நிலையத்துல புடித்து கொடுத்திங்களே நியாபகம் இருக்கா?' 

' ஆமாம், நல்லா நியாபகம் இருக்கு. நீங்க எங்க ஊர்ல பார்த்த கடைசி வழக்கு.' 

'அந்த மண்ணாங்கட்டியோட இரண்டாவது சம்சாரம் மகன்தான் இந்த ஜானி. இவனோட மண்ணாங்கட்டியும் கூட்டுன்னு ஒரு சந்தேகமும் இருக்கு. நாளையோட நான் பணியில் இருந்து ஓய்வுபெறப்போறேன். நீங்க நாளை மறுநாள் ஞாயிறு அன்று என் வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு உதவ சரியான ஆள் ஒருத்தர அறிமுகம் செய்றேன்'. 

அந்த ஞாயிறு பவன் சிங் வீட்டில் கம்பத்துக்காரர், அவர் மகன், பவன் சிங் மூவரும்  காத்திருந்தனர். அந்த ஒருத்தர்- ஆறு ஆடி உயரம், மாநிறம், படர்ந்த நெற்றி, வடுகு இன்றி தூக்கி வாரிய முடி, வரிசை ஒழுங்கு செய்யப்பட்ட மீசை, சுத்தமாக சவரம் செய்த முகம், கை மடிக்க பட்ட வெள்ளை சட்டை, நீல நிற ஜீன்ஸ் காற்சட்டை, கருப்பு  தோலினால் ஆன கச்சை. 'இவர் பெயர் கே.கே. . B.A. வரலாறு படித்து வெள்ளி பதக்கம் பெற்றவர். இந்திய தொல்பொருள் துறையில் பணி புரிந்தவர். இப்போது எங்களுக்குகாக உளவறியும் ஒற்றர். துப்பறிவதில் திறமைசாலி என்றும் சொல்லலாம். உங்களுக்கு உதவ இவரின் உதவியை மறைமுகமாக நாடியுள்ளேன் .' 

கே.கே. உடன் கம்பத்துக்காரர் தனியே பேசினார், சந்திப்பு முடிந்து, கம்பத்துக்காரரும் அவர் மகனும் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அரசு பள்ளியின் வாசலில் நிறைய வண்டிகள் நிறுத்தபட்டிருந்தன. கம்பத்துக்காரர் தன் மகனிடம் 'எதுக்கு இந்த கூட்டம், இன்று ஞாயியிற்று கிழமைதானே? ' என்று கேட்டார். 

'ஆதார்னு ஒரு அடையாள அட்டை கொடுத்துக்கொண்டு இருக்காங்க. அமேரிக்கால இருக்கற மாதிரி, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்படும். அந்த எண்ணோட, கை ரேகை, விழித்திரை மற்றும் அந்த நபரின் வங்கி கணக்கு இணைக்க படும். அரசு வழங்கும் மாணியங்கள் பணமாக எல்லா குடிமகனையும் சென்றடையும். ' 

'அப்ப எல்லா நியாய விலை கடைகளும் மூடப்படும்னு சொல்லு. ஐந்து வருடம் கழித்து அரசாங்க அரிசி விலை கிலோ ரூபாய் இருபதுன்னு வச்சிக்கோ. அப்ப ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு முப்பது கிலோன்னு, அறநூறு ரூபாய் அரசு தரும். கடையில் அந்த காச கொடுத்து பதினைந்து கிலோ அரிசி கூட வாங்க முடியாது. தனி மனித சுகந்திரத்துக்கு பூட்டுன்னும் சொல்லலாம். உன் கை ரேகை அவங்க கிட்ட இருந்தா, நீ ஒரு பேருந்துல ஏறினாலும் அவங்களுக்கு தெரிந்து விடும். '

'இது  ஒன்றும் எல்லாருக்கும் கட்டாயம் இல்லையே.' 

'அப்படித்தான் சொல்றாங்க, ஆனா வங்கி கடன் வாங்கரதுல இருந்து எல்லா ஆவணங்களுக்கும் அத கேட்பாங்க, அப்ப வேற வழி இல்லாம பதிய வேண்டிய கட்டாயம் வந்து விடும்.' 

ஒரு வாரம் கழித்து, ஒரு செவ்வாய் அன்று, பவன் சிங் வீட்டில் இருந்து கார் வந்தது, கம்பத்துக்காரரை அழைத்து செல்ல. அவர் மனைவியை வீட்டில் விட்டு விட்டு அவர் மட்டும்  சென்றார். மாலை  ஆறு மணிக்கு திரும்பி வந்தவர்  முகம் சற்று தோய்ந்து இருந்தது. அவர் மனைவியிடம் உடனடியாக புறப்பட சொன்னார். 'இது பாவம் நிறைந்த ஊர். நாம நம்ம ஊருக்கே திரும்பிபோகலாம்.' என்று அவர் மனைவியிடம் எல்லோருக்கும் கேட்பது போல் கூறி விட்டு வெளியேறினார். 

பேருந்தில் செல்லும் பொழுது அவர் மனைவி அவரிடம் 'என்ன ஆச்சுங்க?' என்று கேட்க, அவர் கூறிய நிகழ்வுகள் பின் வருமாறு.

நான் அன்று பவன் சிங்கின் வீட்டிற்கு சென்ற போது, கே.கே.வும் எனக்காக காத்திருந்தார்.

கே.கே. : நீங்க சொன்னது போல அந்த 'J' எழுதியிருந்தது Calcium sulfate நிறைந்த சுண்ணக் கோலால் என்று ஆய்வக அறிக்கை வந்திருக்கு. ஆனா நம்ம ஜானி எப்பவுமே, Calcium carbonate நிறைந்த இயற்கையா கிடைக்கற, கோலக் கல்லத்தான் பயன் படுத்துவான். சம்பவம் நடந்த எடத்துல எப்பவும் போல் பீடி துண்டு இல்லன்னு போலீஸ் அறிக்கை சொல்லுது. நீங்க சந்தேகப்பட்ட மாதிரியே இது ஜானி வேல இல்ல. வேற ஒருத்தன் திருடிட்டு,  ஜானி மேல பழி விழ வச்சிட்டு, அழகா தப்பிக்க நடந்த முயற்சி. திருட்டு போன கார் உதிரி பாகங்கள் விக்கற கடைங்கள சோதனை செய்தோம். உங்க வண்டியோட  என்ஜின் எண் எங்களுக்கு தடம்பார்க்க, வித்தவன் சிக்கினான்.

க.கா  : இதுக்கு மேல நானே சொல்றேன். நீங்க பிடிச்ச ஆள், வேற ஒருத்தன கை காட்ட, அவன் என் மகன கை கட்டினான் இல்லையா ?

கே.கே. : பக்கா. எப்படி சரியா சொன்னீங்க?

க.கா  : என் மகன இந்த திருட்டு பெரிசா பாதிக்கல. எப்பவும் தேள் கொட்டின மாதிரி தான் என் கிட்ட இத பத்தி பேசினான். அவன் மேல எனக்கு சந்தேகம் வலுவானது அவன் காப்பீட்டு வேலைகள்ல இறங்கிய போதுதான் .

ப.சி :  உங்க ஆற்றல் கொஞ்சம்கூட குறையல.

க.கா  : எனக்காக நீங்க இதை எல்லாம் மறைக்க வேண்டும்  கே.கே. .

ப.சி :  கவலைப் படாதிங்க  இது உங்களுக்காக நடத்தப்பட்ட விசாரணை.

கே.கே. : நம்ம மூன்று பேர தவற யாருக்கும் தெரியாது.

சோகத்துடன் வீடு திரும்பினேன். அந்த ஏமாற்றத்தை பொறுக்கமுடியாமல், என் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், ஊர் திரும்ப முடிவுசெய்தேன்.

கம்பத்துக்காரர் தன் மனைவியிடம் பேருந்தில் மேலும் தொடர 'இவன் என் ரத்தமே கிடையாது. தப்பி பொறந்துட்டான். காசுக்காக அலையுற ஒரு பேய். என் வம்ச பெருமையை காப்பாத்த போறவன் என் பேரன் மட்டும் தான்'.  மழை சாரல் தூவ, பேருந்தின் சன்னலை மூட முயன்றார் கம்பத்துக்காரர். தாழ்ப்பாள் கையுடன் வந்தது. (இந்த இடத்தில பின்னணி இசை உங்கள் மனதில் ஒலிக்க) அவர் மனைவியின் கை பேசி ஒலித்தது. கைபேசி அவர் காதில் கூறிய இரகசியத்தை கேட்ட பின், அவர் மனைவி பதற்றத்துடன் "ஐயோ முருகா!........................ஏங்க ..நம்ம பேரன காணமாம்ங்க".

களவு தொடரும்.........

களவு - பகுதி மூன்று

6 comments:

 1. இப்போ பேரனையே காணோமா...? சுவாரஸ்யம்...

  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரை கண்டிப்பாக இருக்கும் என்ற எண்ணத்துடன் உள் நுழைந்தேன் . மிக்க நன்றி.

   Delete
 2. கம்பதுகாரருக்கு பவன் சிங் மூலம் கெத் ஏற்படுத்தி இருந்தது அருமை ரூபக்

  ஆதார் அட்டை பற்றி சிறுகதையில் ஓரிரு வரிகளில் சிறப்பாக முளுமையாக பகிர்ந்தது அழகு

  நாளுக்கு நாள் எழுத்து மிகவும் மேம்பட்டுள்ளது.... வாழ்த்துக்கள்... தொடர்ந்து நிறைய சிறுகதைகள் படிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. தங்களின் ஊக்கம் என்னை வழி நடத்தும்.

   Delete
 3. can be the best short film if this story is filmed.. best wishes for the future director.

  ReplyDelete
 4. நல்ல அருமையான நடை.. கதையும் நன்றாக போகிறது.. வாழ்த்துக்கள்.. தொடருகிறேன்..

  ReplyDelete