Monday, April 22, 2013

என் வாழ்வில் - அனுபவங்கள்

அதிகாலை நான்கு மணி, கனவில் காஜல் வந்து தாலாட்டு பாடற சமயம், தட்டி எழுப்பியது கைபேசி.'சார் cab டிரைவர் பேசறேன். இன்னைக்கு office வரிங்களா?', 'வரேன்.' என்று கூறி கைபேசியின் நாக்கை வெட்டினேன் (அதுதாங்க silent mode). விழிப்பு வந்து, எழுந்து பார்த்தா மணி ஆறு. cab டிரைவர் போன் செய்து பார்த்துட்டு, நான் அழைப்பை எடுக்காததால் கெளம்பிவிட்டார். அவசரமாக தயார் ஆகி என் வண்டியில் கிளம்பினேன். வண்டி நின்ற பொழுது தான் பெட்ரோல் பல நாட்களாக ரிசர்வில் இருப்பது நினைவில் வந்தது. இரண்டு முறை நன்றாக வண்டியை ஆட்டி விட்டு, திரும்ப ஸ்டார்ட் செய்து கிளம்பினேன், இனி ரொம்ப தூரம் செல்லாது என்று தெரிந்தது. கடைசி சொட்டு பெட்ரோலை இஞ்சின் குடித்து முடித்த பொழுது பங்க் வந்திருந்தது, இன்ஜினியரிங் தேர்வில் கண்டிப்பாக பெயில் ஆகி விடுவேனோ என்று நினைத்த பாடத்தில், 36 மதிப்பெண் பெற்று 'just பாஸ்' ஆன பொழுது கிடைத்த அதே சந்தோசம் இத்தருணத்தில் மீண்டும் என் நெஞ்சில் மலர்ந்தது.

'எவளோ போடணும்?' 

'200 ரூபாய்க்கு போடுங்க.'

இப்ப சம்பளம் எல்லாம் நேரா கார்டுக்கு தன போகுது, எங்க போனாலும் கார்ட தேய்க்கரதுனால,கையில் காசு வைத்துக்கொள்வதேயில்லை. இன்றும் அப்படித்தான். 

'இந்தாங்க கார்டு.'

'சார் எட்டு மணியில் இருந்து பத்து மணி வரைதான் கார்டு. நைட்ல எங்க ஆளுங்க தப்பான தொகையை டைப் பண்ணுவதாலே பல பிரச்சனைகள் வருது, அதனால எங்க முதலாளி நைட்ல மெசினை பூட்டிடுறாரு. வண்டியை விட்டு விட்டு, ATMல காசு எடுத்துட்டு வந்துடுங்க.'

அவன் காட்டிய திசையை நோக்கி நடந்தேன். முதலில் ஒரு ATMஐ கண்டேன் 'out of service' என்று பலகை தொங்கியது. BSNL தொலைபேசிக்கு அடுத்து அதிகம் அவுட் ஆகுவது இந்த வங்கி ATM தான். வங்கி பேரைச் சொல்ல மாட்டேன், என் மேல் அவங்க வழக்கு போட வேண்டும்னு உங்களுக்கு ஆசைதானே, நடக்காது. 

அடுத்த ATMஇல் நுழைந்து 500 ரூபாய் எடுக்க முயன்றேன், '334.76 வைப்பு வைத்துக்கொண்டு உனக்கு 500 ரூபா கேக்குதா?' என்று இயந்திரம் திட்டியது. சமாதானம் ஆகி '300 ரூபாய் மட்டும் கொடு' என்றேன். 'எடுத்துகொண்டு ஓடிவிடு. இதோட காசு இல்லாம பந்தா காட்ட இந்த பக்கம் வராதே' என்று அது துப்பியது. 

ஒரு வயதான பாட்டி உள்ளே நுழைந்தாள். 'தம்பி, நல்ல ஜில்லின்னு இருக்கே, இந்த கடை முதலாளி யாரு?' என்று என்னிடம் வினவினாள். எல்லாம் நேரக்கொடுமை என்று எண்ணி, பெட்ரோல் பங்க் சென்று, காசை கொடுத்து விட்டு என் பயணத்தை தொடர்ந்தேன். 

சந்திப்பில் சிகப்பு விளக்கு ஒளி வீச, முன்னால் நின்று கொண்டிருந்த இன்னோவா கார் அருகில் சென்ற போக்குவரத்து காவல் ஒரு கும்பிடு வைத்தது. சற்று முன் நகர்ந்து பார்த்தேன், அந்த வண்டி முன் ஒரு கட்சி கொடி பறந்து கொண்டிருந்தது.இலைன்னு சொன்னா தாத்தா என்னை தமிழ்த்துரோகினு சொல்லிடுவாரு, கருப்புசிவப்புன்னா அம்மா இங்கிலீஷ்ல திட்டுவாங்க, காவின்னு சொன்னா 'அடப் பாவி.நீ பயங்கரவாதி'னு பகுத்தறிவாளர்கள் சொல்லுவாங்க. நமக்கு எதுக்கு வம்பு, இந்தியா கொடி என்றே வைத்துக்கொள்ளுங்க.முன்பு எல்லாம் கம்பத்தில் பறக்க விட்டாங்க, இப்ப கொஞ்சம் பெரிய கார் இருந்தாலே பறக்க விட்டுடறாங்க, எந்த காவல் துறையும் மடக்காது, சுங்க சாவடில காசு கொடுக்காம போய்டலாம் பாருங்க. 

அலுவலகம் செல்வதற்குள் என்னைத்தேடி பல போன் கால்கள், பல சிக்கல்கள். சீக்கரம் வந்தா நம்மல நாயா கூட மதிக்க மாட்டாங்க, ஒரு நாள் தாமதம் ஆனா அவ்வளவுதான். 

வேலை பார்த்துட்டு, முடிக்கும் போது தெரியாமல் 'F12' பொத்தானை அழுத்திவிட, இரண்டு மணி நேரம் டைப் செய்தது எல்லாம் காணாமல் போனது. மீண்டும் அதே வேலையை சலிப்புடன் செய்து முடிக்கும் போது மணி 3 30. இன்று காலை உணவும் இல்லை, மத்திய உணவும் இல்லை. எங்கள் ஐயா காமராசர் மட்டும் இப்பொழுது முதல்வராக இருந்தால், ITயில் வேலை பார்க்கும் அனைவருக்கும் மூன்று வேளை 'கட்டாய உணவு' திட்டம் கொண்டுவந்திருப்பார். 

வண்டி எடுத்து கொண்டு கெளம்பினேன், எல்லா உணவகங்களும் மூடி இருந்தன, எங்குமே உணவு இல்லை. நான்கு மணிக்கு மேல் மத்திய உணவு கிடைப்பது மிகவும் கடிது என்பதை இன்றுதான் அனுபவிக்கிறேன். ஓர் இடத்தில மட்டும் விற்காமல் மீதி இருந்த (ஈ) பிரியாணி கிடைத்தது, ஒரு தூய தமிழனாக ஈக்களை எடுத்து போட்டு விட்டு சாப்பிட்டேன். 

வீட்டை அடைந்தவுடன், அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது, நான் என் பென்டிரைவை மறந்து வைத்துவிட்டேன் என்று. அதில் நாளை நடக்க போகும் 'client presentation'னுக்கான slides இருக்கிறது, அவற்றில் சில மாற்றங்கள் செய்ய என் மேலாளர் சொல்லி இருந்தார். சட்டென்று ஒரு வியூகம் அமைத்தேன், என் நண்பனை அழைத்து அவனை அதை வாங்கி வரச் சொன்னேன், அவன் வரும் அலுவலகப் பேருந்து என் ஸ்டாப் வழியாகத்தான் செல்லும் என்பதால்.

'நண்பா என் ஸ்டாப்ல ஒரு நிமிஷம் இறங்கி பென்டிரைவை கொடுத்துட்டு போய்டு.'

'இல்ல நண்பா , இந்த டிரைவர் கொஞ்சம் சிடு மூஞ்சி, ஒத்துக்க மாட்டான்.'

'எல்லா பஸ்சும் எங்க ஸ்டாப் கிட்ட இருக்கற ஸ்பீட் breakerல வேகம் குறையும், நீ சன்னல் ஓரம் ஒட்கர்ந்திரு, நான் ரோட் ஓரம் நிக்கறேன், தூக்கி போட்டு விடு' என்று சிங்கம் படம் சூர்யா போல் ஒரு திட்டம் போட்டேன்.

'எங்க பஸ் வருது ? '........'நான் leftல இருக்கேன் பாரு' .......'அட முட்டா பயலே இந்த பக்கம் ஒட்கார மாட்டியா'...........'சீக்கரம்'.

அவன் பேருந்து அந்த வேகத்தடை மேல் ஏற, அவன் பென்டிரைவை எறிய, நான் யுவராஜ் போல் தாவி பிடிக்க, பேருந்து நிறுத்தத்தில் இருந்த அனனவரும் கை தட்டினர். அந்த ஐந்து நிமிடம் நானும் ஹீரோன்னு நினைத்தேன், நான் ஹீரோ ஆகும் தருணம் இன்றைக்கு இல்லை என்பது பிற்பாடு தான் புரிந்தது. வேகத் தடையில் அவன் பேருந்தின் வேகம் குறைய, மற்றொரு பேருந்து அதன் அருகில் வர, அவன் எனக்கு டாட்டா மட்டும் காட்டினான். என் மேலாளர் வாயில் நாளை நான் நாறப்போகிறேன் என்பதை எண்ணி, நேற்று காலை விளக்கிய என் பற்களை 'ஈ....ஈ...' என்று அவனை பார்த்து இளித்தேன்.

10 comments:

  1. பெட்ரோல் ரிசர்வ் ஆகுற மாதிரி பணத்தையும் கொஞ்சம் ரிசர்வ் பண்ணி வச்சுக்கங்க//

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.... நல்ல யோசனை, முயற்சிக்கிறேன். கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. அழகான தள வடிவமைப்பு . எதார்த்தமான எழுத்து நடை . வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  3. சுவாரஸ்யம்!நன்று

    ReplyDelete
  4. kalavu paguthiku piragu enakku migavum pidithathu intha sirukathai...

    naan rasithavai,

    1."கைபேசியின் நாக்கை வெட்டினேன்"
    2. 36 மதிப்பெண் பெற்று 'just பாஸ்' ஆன பொழுது கிடைத்த அதே சந்தோசம்
    3. ATM paesiyaathaaka ulla karpanai
    4. pen drive - catch pidathu.

    onnu matum puriyala,

    தூய தமிழனாக ஈக்களை எடுத்து போட்டு விட்டு சாப்பிட்டேன். ithu ethai kurikirathu ....

    vazhakkam pol, nalla sol nadai koodiya ethaartha anubavangal....

    pin kurippu: unakku kooriyathai pola, tamilil elutha muyandren...neraya vaarthaigal, google translatle vara villai...ATM il unakku nadantha athe tharunam enakku..koodiya seekiram eluthuvaen, em mozhiyil :)

    ReplyDelete
  5. படித்து ரசித்தமைக்கு நன்றி . முயற்சியை விடாதே எழுத்து விரைவில் வரும்.

    உணவின் தரம் எப்படி இருந்தாலும், பல நேரம் நாம் எதுவும் கேள்வி கேட்காமல் தான் சாப்பிடுகிறோம். உணவின் தரம் பல உணவகங்களில் சற்று குறைவாகவே இருப்பது தான் என் கவலை.

    ReplyDelete