Tuesday, April 30, 2013

களவு - பகுதி மூன்று*******************************************முன் குறிப்பு *********************************************
இப்பகுதியை படிக்கத் தொடங்கும் முன், முதல் இரண்டு பகுதிகளை படித்து விட்டு பின் தொடரவும். நன்றி. 
*********************************************************************************************************

களவு - பகுதி மூன்று 

அன்று - 1983 

இந்த ஆண்டு நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் தந்தாலும், ஆற்காடு கிராம விவசாயிகள் அனைவரும் சோகத்தில் தான் இருந்தனர், காரணம் வீரபாபு. ஒருத்தனுக்கா ஊரே பயப்படுகிறது என்று நினைக்காதிங்க, இருபது பேர் கொண்ட வழிப்பறி கூட்டத்தின் தலைவன் தான் இந்த வீரபாபு. ஊரை விட்டு வெளியில் இருந்த சிவன் மலைக் காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்தான். ஆற்காடு கிராமம் மூன்று புறமும் ஏரி சூழ்ந்து உள்ளமையால், வெளியே வர இந்த காட்டு வழி மட்டும் தான் உள்ளது.

இவன் அட்டகாசம் தாங்க முடியாமல், ஊர் மக்கள் இவனுடன் ஒரு சமரசம் செய்து கொண்டனர், எந்த பொருள் விற்க சென்றாலும் அதில் பாதி அவனுக்கு என்று. ஊருக்குள் இவன் ஒரு உளவாளி வைத்திருந்தது தெரியாமல், சென்ற முறை இவனது பங்கை ஏமாற்ற முயன்ற போது அவன் தகவல் அறிந்து  ஊரையே சூரையாடி விட்டான். 

இவனை எப்படியாவது அடக்க வேண்டும் என்று ஊர் பெரியவர்கள் இருவரும் 'முனீஸ்வரன் கோவில்' பூசாரியும் ஏரிக்கரையில் பௌர்ணமி நிலவொளியில்  ஒரு  ரகசிய கூட்டம் போட்டனர். ஊர் தலைவரை 'பெரியவர்' என்றும் அவர் தம்பியை 'சின்னவர்' என்றே அனைவரும் அழைப்பர், நம் கதைக்கு அவர்கள் பெயர் முக்கியம் இல்லை என்பதால் நாமும் அப்படியே வைத்துக்கொள்ளலாம். பெரியவர் தலை முழுவதும் நரைத்து, சோப்பு நுரை போல் இருந்தது, வயது சுமார் எழுபது இருக்கும். சின்னவரை முதுமை நெருங்கிக்கொண்டு இருப்பதை, உப்பு-மிளகு கலந்த நிறத்தில் இருந்த அவர் தலை முடி காட்டிக்கொடுத்தது.        

சின்னவர்  சோகத்துடன்,  'என்றும் வற்றாத ஏரி, ஏரிப்பாய்ச்சலான நிலம், உற்சாகமா உழைக்கும் மக்கள், எல்லாம் இருந்தும் நாம் பஞ்சத்தில் தான் இருக்கிறோம்.' என்று வருந்தினார்.பாதி விளைச்சலை வீரபாபுவுக்கு கொடுத்து விடுவதால்,  மீதியில் தம்  தினசரி உப்பு-புளி செலவுக்கே சரியாக போகின்றது என்று பெரியவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது,  பூசாரி வருவதைக்கண்டார். முகத்தில் முடி தவிர தெரிந்தது கண்கள் மட்டும் தான், நெஞ்சு வரை வளர்ந்த தாடி, விரிந்த கூந்தல், வெள்ளை வேஷ்டி, நம்மைப் போல் அவரை முன் பின்  காணதவர், இந்த பௌர்ணமி ஒளியில் அவரை கண்டால் ஆவி என்றே எண்ணத்தோன்றும் படியான தோற்றம்.          

பூசாரி 'பெரியவா, சின்னவா ரெண்டு பேரும் இந்த வேளையில வரச் சொல்ல என்ன அவசரம்'என்று கேட்க,சின்னவர் மூன்று நாட்களுக்கு முன்பு சதுரங்கபட்டினம் சென்றதையும், அங்கு இருந்த கம்பத்துக்காரர் உதவியை நாடியதையும், அவர் சொன்ன திட்டத்தையும் விளக்கமா கூறினார். வீரபாபு பற்றி அவர் அறிந்தும் இங்கு உதவ வருவது பூசாரிக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. சின்னவர் ஆவேசத்துடன்,  'இம்முறை நாம் அவனுக்கு எதுவும் கொடுக்க கூடாது' என்று கூறி தன் தோளில் இருந்த துண்டை உதறினார். ' ஈஸ்வரா! நீதான் காப்பாத்தனும்' என்று கோவில் இருந்த திசையை நோக்கி , தன் கைகளை ஏந்தி, வணங்கினார். பெரியவர் குறுநகையுடன்  'அவன் பேசியே வீரபாபுவ விரட்டிடுவான்  பூசாரி, கவலைப்படாதிங்க. ' என்று கூறி முடிக்கும் போது மாட்டு வண்டி வரும் சத்தம் கேட்டது.   

ஒற்றை மாடு பூட்டிய சக்கர வண்டியில் வந்து இறங்கினார்  கம்பத்துக்காரர், கம்பீரமாக. 'என்ன ஆற்காட்டன், இந்த கெழம் இன்னும் சாகலையா? ' என்று மூத்த பெரியவரை பார்த்து நகைத்தார். பெரியவர்  'இது வைரம் பாய்ஞ்ச கட்ட, உன் கட்ட எரியறத பார்க்காம இந்த கட்ட காடு போகாது.'  என்று முறைத்தார். சின்னவர் இடையில் புகுந்து  'உங்க பங்காளி சண்டய கொஞ்சம் நிறுத்துங்க. முதல்ல  வீரபாபு .' என்று தன் கையில் இருந்த பையை  கம்பத்துக்காரரிடம் கொடுத்தார். 

மறுநாள் காலை முனீஸ்வரன் கோவிலில் 'உங்க கஷ்டம் எல்லாம் முடியப்போவுது.இந்த அறுவடை விளைச்சல் எல்லாம் முழுசா உங்களுக்குத்தான், எவன் வந்தாலும் நான் பார்த்துக்கறேன்.' என்று பூசாரி முனி போன்ற ஆக்ரோஷத்துடன் தன் கூந்தலை விரித்து ஆடினார். ஊர் கூடி ஒரு மனதாக மொத்த விளைச்சலையும் விற்க முடிவு செய்தனர்.

அன்று இரவு ஒருத்தன் மட்டும் ஊர் எல்லையைத் தாண்டி மலைப்பகுதியில் நுழைந்தான், தன் பின் ஒருவன் தொடர்வதை அறியாமல். மேலே ஏறி, ஒரு அருவியை கடந்து சென்ற போது தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது, பின் தொடர்ந்தவன் சற்று இடைவெளி விட்டு ஒரு புதரில் ஒழிந்து கொண்டு நடப்பதை கவனித்தான். 

ஆறு அடி உயரம், எருமை போன்ற நிறம், யானை போன்ற உடம்பு, 'வாடா மானங்கெட்டவனே' என்றான் கட்டை குரலில்.

'அண்ணே நீங்களே இப்படி சொல்லலாமா? ' என்று வீரபாபு அருகில் சென்று  பம்மினான் இவன். 

ஊர் மக்கள் போட்ட ரகசியத் திட்டத்தையும், வெளி ஊரில் இருந்து ஆள் வந்திருப்பதையும் அவனிடம் சொல்ல,  'எந்த ஊரா இருந்தா என்ன. இந்த வழியாத்தன வெளிய போகணும். ஹா ஹா ஹா ', P.S. வீரப்பா போன்ற அவன் சிரிப்பு மலை எங்கும் எதிரொலிக்க பின் தொடர்ந்து வந்த எட்டி ஊரை நோக்கி கீழே இறங்கினான். 

இன்று - 2013 

கம்பதுக்காரர் மாமல்லபுறத்தில் இறங்கி, தன் மனைவியுடன் சாலையைக் கடந்து சென்னை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி, வீடு வந்து அடையும் போது, பவன் சிங் அவருக்காக காத்திருந்தார்.

கம்பதுக்காரர் தன் தோளில் மாட்டியிருந்த பையை கீழே வைக்கும் போது, அவர் சட்டை சற்று விலக, அவர் இடது மார்பில் இருந்த மா இலை போன்ற தழும்பு, வெளியே தெரிந்தது. அதை கண்டு பவன் சிங்  ஆச்சரியத்துடன் வினவ  'அது வீரபாபு கொடுத்த பரிசு' என்று பெருமிதத்துடன் கூறினார்.   

அவர் பேரன் வேலுவைக் கடத்தியது, அவர்  மகன் தன் காரை களவு செய்ய  ஏற்பாடு செய்த 'என்ஜின்' மோகன் என்றும்,  கார் சிக்கவே அந்தக் கடுப்பில் அவர்  மகனை பழிவாங்க இதை செய்துள்ளதாகவும், பவன் சிங் கூறிய அந்த நொடி கம்பதுக்காரர் தன மகனை பார்த்த பார்வை சொல்லியது ஒரே ஒரு அர்த்தம் தான், அவர் மகன் பயந்து உள்ளே சென்றார்.  

கே.கே. உள்ளே நுழைந்தவுடன்  'முதல் கால் பூந்தமல்லியில் இருந்து, இரண்டாவது கால் புழலில் இருந்து, மூன்று மணிநேர இடைவெளியில், இரண்டுமே காயின் போன்ல இருந்து.' என்று தகவல்களை கொட்டினார். தொலைபேசி அடித்தது, அதை ஒலிபெருக்கியில் வைத்து ஆன் செய்தார் கே.கே.    'என்ஜின்' மோகன்  'இருபத்து ஐம்பது லட்சம் நாள கால பத்து மணிக்கு வரணும், எங்க எப்பன்னு காலைல சொல்றேன்.நைனா அதுகாட்டியும் போலீஸ் ஆண்ட போனா உன் புள்ள ஒடம்பு கூட உனக்கு கிடிக்காது' என்றான். 

'என் பையன் தான். எனக்கு முக்கியம். நான் காசு கொடுத்திடுறேன். அவன ஒன்னும் செய்யாதே'என்று   கம்பதுக்காரரின் மகன் சொல்லி முடிப்பதற்குள் தொலைபேசி அமைதியானது.  சோபாவில் அமர்ந்தவர்கள் அசையவில்லை. 

திடீரென்று ஒரு வாலிபன் மூச்சு இறைக்க வீட்டிற்க்குள் ஓடி வந்தான். 

'அ.....ங்...கிள் ........அங்கி....ள். வே...லு....... என்...ன காண்.....டக்ட் ..............பண்....றா......ன்.' அவன் கம்பதுக்காரர் பேரன் வேலுவின் உயிர் தோழன். அவனுக்கு நீர் கொடுத்து, உட்கார வைத்து, அவன் நிதானம் ஆன உடன் மீண்டும் தொடர்ந்தான். 

 'எனக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியல தாத்தா. ஆனா நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு GPS  Locator Watch செய்துகிட்டு இருக்கோம்,  அவன் அந்த வாட்ச கட்டிட்டு இருக்கான், அதுல கொஞ்சம் பிரச்சன இருந்துச்சு, அவன் அத எப்படியோ சரி செய்ஞ்சி இருக்கான், நான் ட்ராக்கர் ஆன் செய்தப்ப அதுல அவனோட transmitter சிக்னல் காண்பிச்சுது.' 

பவன் சிங் வேகமாக, 'அப்ப அது அவன் எங்க இருக்கான்னு சொல்லி இருக்கும் இல்ல?' என்று கேட்க அவன் அந்த கருவி முழுமை அடைய map உடன் அதை  இணைக்க வேண்டிய அவசியத்தை சொன்னான். கே.கே. காவல் துரையின் உதவியுடன் அந்த கருவியை இணைக்க முயன்றார்.    

க.கா: 'தம்பி இது என்னனு எனக்கு சுத்தமா புரியல. கொஞ்சம் தெளிவா சொல்றியா?'

வே.ந : 'சொல்றேன் தாத்தா. வளர்ந்த நாடுகள்ல, அவங்க குழந்தைங்கள கண்காணிக்க பயன் படுத்தறதுதான் இந்த GPS Locator Watch. உங்க வாட்ச்ல இத பொறுத்திட்டா, இந்த உலகத்துல நீங்க எந்த மூலைல இருந்தாலும்  கண்டுபிடிக்க முடியும். வெளி நாடுகள்ல இத வீட்டு செல்ல பிராணிகள கண்காணிக்க கூட யூஸ் பண்றாங்க. நம்ம நாட்டுல இப்போதைக்கு கார்ல மட்டும் தான் பிரபலமா இருக்கு, காரணம் இதோட விலை. இந்திய ரூபா படி ஒரு GPS Locator Watch எட்டு ஆயிரம் ரூபாயில் இருந்து இருக்கு. எல்லா மக்களுக்கும் கிடைக்கற மாதிரியும், ஒரு பொத்தனை அழுத்தினா போலீசுக்கு  தகவல் போற மாதிரியும் இத மலிவு விலைல நானும் வேலுவும் செய்துகொண்டு இருந்தோம்.இப்ப அதுவே அவனுக்கு உதவுது.' என்று முடித்தான்.  


க.கா: 'சபாஷ்!..குழந்தைங்கள கடத்தரவங்களுக்கு இது ஒரு சவாலா இருக்கும்.  விஞ்ஞானம் என்ன பல சமயம் வியப்புல தள்ளிடுது.'

கே.கே. மூன்று மணி நேரம் முயன்று, ராஜேந்திரனின் உதவியுடன் இறுதியாக அதை வேலை செய்ய வைத்து, வேலுவை அடைத்து இருக்கும் இடம் புழல் அருகில் இருக்கும் ஒரு கிடங்கு என்று கண்டறிந்தார். பவன் சிங் அந்த வட்டார காவல் துறைக்கு தகவல் சொல்லி அந்த இடத்தை கண்காணிக்க சொன்னார். கம்பதுக்காரர், பவன் சிங், கே.கே. மூவரும் கே.கே.வின் பிகோவில் சென்னை புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.  

பவன் சிங்  தன் நெற்றி வியர்வையை தொடைத்துக்கொண்டே 'என்னயா ஏ.சி. எபக்டே இல்ல.'  என்று கேட்டார். கே.கே. 'Gas பில் பண்ணனும் சார், மாச கடைசி' என்று அசடு வழிய 'இப்போதைக்கு சன்னல இறக்கி விட்டுடுங்க.' என்றார்.கம்பதுக்காரர் கண்ணாடியை இறக்க முயன்ற போது,அந்த குமிழ்வடிவக் கைப்பிடி அவர் கையுடன் வந்தது.

களவு தொடரும்.....

களவு - பகுதி நான்கு

10 comments:

 1. அன்றும் இன்றும் சுவாரஸ்யம்...

  GPS Locator Watch - ஆயிரம் (8000) எல்லாம் இப்போது மதிப்பே இல்லை... தகவலுக்கு நன்றி...

  அடுத்த என்னவாயிற்று...?

  ஆவலுடன்...

  ReplyDelete
  Replies
  1. முதல் கருத்துரைக்கும், படித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. //முடி தவிர தெரிந்தது கண்கள் மட்டும் தான், நெஞ்சு வரை வளர்ந்த தாடி, விரிந்த கூந்தல், வெள்ளை வேஷ்டி, நம்மைப் போல் அவரை முன் பின் காணதவர், இந்த பௌர்ணமி ஒளியில் அவரை கண்டால் ஆவி என்றே எண்ணத்தோன்றும் படியான தோற்றம். // இந்த வரிகளில் பூசாரியை வர்ணித்த விதம் கண்முன் வந்து சென்றது ரூபக், அந்தக் கற்பனையை ரசித்தேன்

  கம்பதுகாரர் ஆற்காட்டாரை கலைக்கும் இடம் சூப்பர்
  அன்று இன்று என்றபடி தொடங்கும் கதை வகையறாக்களை படித்து வெகுநாளாகியது... மீண்டும் உன் பதிவில் படிக்கக் கிடைத்ததும் போகிற போக்கில் GPS பற்றி சொல்லியது அருமை

  அடுத்த என்னவாயிற்று...?

  ஆவலுடன்...

  ReplyDelete
  Replies
  1. பூசாரி உங்கள் கண் முன் வந்ததில் பெருமிதம்.

   சமீபத்தில் 'விடாது கருப்பு' டீ.வி. தொடர் பார்த்த போது வந்தது இந்த 'அன்று' 'இன்று' யோசனை. ரசித்து பாராட்டியமைக்கு நன்றி.

   Delete
 3. முதலில் என் பாராட்டுக்கள்.. Flow கெடாமல் அழகாக எழுதுகிறீர்கள்.. உங்கள் கதை சீரான வேகத்தோடு இருக்கிறது... எந்த இடத்திலும் ஸ்லோவாகவும் இல்லை, திடீரென்று வேகம் எடுக்கவும் இல்லை.. நிதானமாக படிக்க மிகவும் அழகாக இருக்கிறது.. அதற்கு காரணம் உங்கள் நடை.. அதை விட்டு விடாதீர்கள்..
  //சமீபத்தில் 'விடாது கருப்பு' டீ.வி. தொடர் பார்த்த போது வந்தது இந்த 'அன்று' 'இன்று' யோசனை. // எந்த டிவியில் போடுகிறார்கள்?

  ReplyDelete
 4. ரசித்து பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே. கண்டிப்பாக நடை மாறாமல் கவனமுடன் பயணிக்கிறேன்.

  சிறு வயதில் பார்த்து வியந்த நாகாவின் தொடர், மறு ஒளிபரப்பு இல்லை, பழைய தொடரை இணையத்தில் download செய்தே பார்த்தேன்.

  ReplyDelete
 5. 1983 il kadaisiyil nadanthathu enna (vijay tv gopinath voice), athai therinthu kolla aarvam...
  kalavu thodara vaazhthukkal...

  ReplyDelete
 6. ரொம்ப சுவாரஸ்யமாப் போகிறது!நன்று

  ReplyDelete
 7. படித்து, ரசித்து, பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete