Showing posts with label தள்ளு வண்டி கடை. Show all posts
Showing posts with label தள்ளு வண்டி கடை. Show all posts

Thursday, December 26, 2013

சாப்பாட்டு ராமன் - முட்டை காளான் பிரை

பல நாட்கள் அலுவல் மிகுதியால் பட்டினியாக இருந்த ராமனுக்கு அவன் நண்பன் மூலம் இந்த மாதம் ஒரு கையேந்தி பவன் அறிமுகமானது. 

பாடியில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் சாலையில், செந்தில் நகர் பேருந்து நிறுத்ததிற்கு அருகில் இருக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை ஒட்டியது போல் செல்லும் விவேகானந்தா நகர் மெயின் ரோட்டில் இருப்பது தான் யெகோவா பாஸ்ட்புட். நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், மற்றும் சில சிக்கென் சைடுகள் கிடைப்பது விலைப்பட்டியலுடன், வண்டியில் ஜொலித்தது.     



 ராமன் அவன் நண்பனுடன் ஆர்டர் செய்தது, சிக்கன்  ப்ரைட் ரைஸ், பெப்பர் சிக்கென், சிக்கென் லாலிபாப் மற்றும் முட்டை காளான். ஆர்டர் தயாராகும் நேரத்தில் கடையை சற்று நோட்டமிட நேரம் கிடைத்தது. உள் பக்கம் மிகவும் சுத்தமாக இருந்தது. பொதுவாக மக்கள் தள்ளு வண்டிக் கடைகளை  விரும்பாதது சுத்தம் இல்லை என்று தான். ஆனால் இந்தக் கடை ஒரு விதி விளக்கு தான். பார்சல் வாங்குபவர்களுக்கு கூட அலுமுனியம் பாயில் கொண்டு, தரமான உணவகங்களில் தருவது போலவே உணவு கொடுக்கப் பட்டது கூடுதல் சிறப்பு. 



முதலில்   ப்ரைட் ரைஸுடன், ஆறு துண்டுகளுடன் சிக்கென் லாலிபாப் வந்தது.  இரண்டும் திடமான சூட்டுடன் சுவைக்க நன்றாக இருந்தது. அடுத்து வந்த முட்டை காளான் பிரை, எழுதும் பொழுதும் சுவை நினைவில் தோன்றி நாவை ஊறச் செய்கின்றது. 

சிக்கென் லாலிபாப் + முட்டை காளான் ப்ரை

முன்பே வேக வைத்த சிறிய காளான் துண்டுகளை, வெங்காயம், உப்பு, காரம், சில மசாலாக்கள், சேர்த்து ஒரு கடாயில் முட்டை உடைத்து ஊற்றி செய்த அந்த உணவு வகை, ஒரு மாறுபட்ட முட்டை பொடிமாஸ் போலவே இருந்தது. முட்டை, காளான், வெங்காயம் இவற்றின் கலவை நாவிற்கு புத்துணர்ச்சி தந்தது.இதை பார்சல் வாங்கிக்கொண்டு சப்பாத்தி,தோசை போன்ற டிபன்களுக்கு சைடாகவும் சுவைக்கலாம்.        
        
பெப்பர் சிக்கென் 

இறுதியாக வந்த பெப்பர் சிக்கென் மீது தான் இம்முறை ராமன் கொண்ட தீராக் காதல். காளான் போலவே சிறிதாக வெட்டப்பட்ட சிக்கென் துண்டுகள், மசாலாக் கலவையுடன், பெப்பர் சேர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மெதுவாக இருந்த எலும்பு இல்லாத அந்த சிக்கென், மேலே இருந்த மிளகுத் தூள் கலவை மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட கருவேப்பிலை, இவை மூன்றும் சேர்ந்து சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவையை அளித்தன. 



விலை விவரங்கள் படத்திலேயே இருக்கும். அந்தப் பக்கம் சென்றால்,   யெகோவா பாஸ்ட்புடில் சுவைத்துவிட்டு ராமனிடம் சொல்லுங்கள்.

ராமன்ஸ் காம்போ

நீங்கள் பெருமாள் கோயில் புளியோதரை உண்டதுண்டா! அதன் சுவையே தனி. என்னதான் நாஸ்திகம் பேசினாலும் நம் ராமன் பிரசாதங்களை விடுவதில்லை! பயணங்களின் சிறந்த உணவான புளியோதரையுடன் அவித்த முட்டை சேர்த்து உண்டு பாருங்கள். அவித்த முட்டையும் புளியோதரையும் ஒரு விசேஷமான கூட்டணி.            
   

Thursday, July 4, 2013

சாப்பாட்டு ராமன் - மழை சாரலில் பஜ்ஜி

தாம்பரம் சென்ற பின் அம்பத்தூர் பக்கத்து ஊர் போல் ஆகிவிட்டது. திங்கட் கிழமை,   எனக்கு விடுப்பு என்பதால் உறவுகளை சந்திக்கலாம் என்று புறப்பட்டு, சென்னை புறவழிச்சாலை வழியே முகப்பேரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு ஸ்ப்ளென்டரில் சென்றேன். என் ஏழு வயது அத்தை மகன் ஆண்டிராய்ட் ஸ்லேடில் (அதுதான்பா இந்த tablet) சில பல மாயங்களை காட்டினான். இதுவரை டச் போன் கூட பயன்படுத்த முடியாத என் இயலாமையை எண்ணி அங்கிருந்து விடைபெற்று அம்பத்தூர் அருகில் திருமுல்லைவாயலில் இருக்கும் என் பாட்டி வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினேன்.  

முகப்பேரின் அடையாளங்களான மேடும் பள்ளமும் நிறைந்த சாலைகளை கடந்து, திருமங்கலம் டு வாவின் செல்லும் பிரதான சாலையை நெருங்கும் போது, அம்புகள் போல் நீர்த்துளிகளை வருணன் பூமியின் மேல் தாக்க, அனைவரையும் போல் வண்டியை ஓரங்கட்டி விட்டு, மூடியிருந்த ஒரு கடையின் முன் இருந்த சிமெண்ட் சீட்டின் கீழ் மழைக்கு ஒதுங்கினேன். மழையின் வேகம் சற்று குறைந்தது, என் மூளையில் இருந்து ராம் பேசினான் "முட்டாள் ரூபக் ! மழை + வண்டி + பையில் பணம் இந்த நிலை எப்பொழுதும் வராது, நம் கையில் என்ன ஸ்மார்ட் போனா இருக்கு மழையை கண்டு அஞ்ச, விடுறா வண்டிய அந்த பஜ்ஜி கடைக்கு" .

நீங்கள் மழையில் நனைந்து, அந்த ஈரத்துடன் பஜ்ஜி சுவைத்ததுண்டா? இல்லை என்றால் உம் வாழ்வில் பெரும் சுகத்தை இழந்து உள்ளீர். சில ஆண்டுகளுக்கு முன், அம்பத்தூரில் இருந்த போது, என் நண்பன் ஒரு தள்ளு வண்டி கடைக்கு அழைத்து சென்றதுண்டு, நான் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். அந்த கடையை நோக்கி, மழையில் நனைந்த படி, சாலைகளில் சக்கரத்துடன் நீந்தி, ஆடை நனைய கடையை அடைந்தேன். அங்கு எல்லா தட்டுகளும் காலியாக இருந்தன, உருளைக் கிழங்கு போண்டா இரும்புச் சட்டியில் தயாராகிக் கொண்டிருந்தது, காத்திருந்தேன்.



அம்பத்தூர் தொழிற் பேட்டையில் இருக்கும் AMBIT IT பார்க் எதிரே செல்லும் முதல் குறுக்கு தெரு வழியாக, முருகன் இட்லி கடையை கடந்து சென்று, வலது புறம் திரும்பினால் இந்த கடை இருக்கும். அல்லது திருமங்கலத்தில் இருந்து வரும் போது, மங்கல் ஏறி பூங்காவை தாண்டி வலது புற பாரத் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் சந்தில் திரும்பி சுமார் 500 மீட்டர் சென்றாலும், இடது புறத்தில் இந்த கடைக்கு வரலாம்.



இங்கு சமோசா, உ. கிழங்கு போண்டா, வாழக்கா பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி, காலி பிளவர் பகோடா முதலியவை கிடைக்கும். காலி பிளவர் பகோடா நூறு கிராம் 15 ரூபாய், மற்றவை எது சாப்பிட்டாலும் ஐந்து ரூபாய். கடையில் மொத்தம் ஐந்து பேர், மூன்று சப்ளை சிறுவர்கள், ஒரு பஜ்ஜி மாஸ்டர், ஒரு காஷியர் கம் உரிமையாளர்.





சூடான உ. கிழங்கு போண்டா வந்து இறங்கிய அடுத்த நொடி, இவளோ நேரம் எங்கு இருந்தார்கள் என்று யோசிப்பதற்குள் அனைவரும் வந்து சூரையாடினர், கடைசியில் அந்த தட்டில் மிஞ்சியது மூன்று போண்டா, அதிலும் ஒருவருடன் சண்டை போட்டு, இரண்டு நான் வாங்கினேன், அவருக்கு ஒன்று மட்டுமே. அடுத்து மிளகாய் பஜ்ஜி தயாராகிக்கொண்டிருக்க, உருளைக் கிழங்கு போண்டாவை இருவகை சட்னியுடன் நான் சுவைதுக்கொண்டே சில புகைப் படங்களை க்ளிக் செய்தேன்.



அடுத்து வந்த மிளகா பஜ்ஜிக்கு, போட்டி அதிகம் இருந்தாலும், என் ஹெல்மெட் கொண்டு அனைவரையும் அடித்து தள்ளி முந்தி விட்டேன். நம் தேவை அறிந்து மிளகா பஜ்ஜியை இரண்டாக வெட்டி கொடுப்பது சிறப்பு. காத்திருந்து, சண்டையிட்டு, எல்லா வகைகளையும் சுவைத்த பின் தான் அங்கிருந்து கிளம்ப மனம் வந்தது. சமோசா மட்டும் மாலையுடன் முடிந்தது ஏமாற்றம். மொத்த பில் நாற்பது ரூபாய் தான், ஆனால் நனைந்த சட்டையுடன் மழை சாரலில் சூடான-சுவையான பஜ்ஜியை சாப்பிட்டதில் எத்தனை ஆனந்தம்.

இந்த கையேந்தி பவன் செயல்படும் நேரம் மாலை மூன்று மணி முதல் இரவு 8 30 மணி வரை. உரிமையாளரிடம் பேசியதில் அவர் சொந்த ஊர் மருதூர் என்று தெரிந்தது, ' ஏன் சார் என் ஊர் எல்லாம் கேட்கறிங்க' என்று அவர் கேட்க 'உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்' என்று நான் கூற, 'அட உங்க எழுத்தால, என் தலையில எழுதனது மாறவா போகுது?' என்று ஏளனமாய் அவர் கேட்டார். கூட்ட நெரிசலில் அவரிடம் தொடர்ந்து  பேச முடியவில்லை, முக்கியமாக கடையின் பெயர் கேட்கவில்லை, நண்பர்கள் அந்த பக்கம் சென்றால் கடையின் பெயரை கேட்டு சொல்லுங்களேன். இருபது நிமிட பயணத்திற்கு பின் நான் என் பாட்டி வீடு சென்றடையும் பொழுது, மழையில் நனைந்ததற்கான எந்த தடையமுமின்றி, இஸ்திரி போட்டது போல் விறைப்பாக இருந்தது என் சட்டை, இதுதான் சார் சென்னையின் உஷ்ணம்!