Tuesday, December 31, 2013

தேன் மிட்டாய் - டிசம்பர் 2013

திருமண வரவேற்பு

சமீப காலமாக திருமண வரவேற்பு களுக்கு செல்லும் பொழுது ஒரு சோதனை/வேதனை தானாக வந்து சேர்ந்துக் கொள்கிறது.  நாட்டில் இருக்கும் எல்லா மதத் திருமணங்களிலும் இதே நிலை தான். மணப்பெண்ணும் மணப் பையனும் வரக் காத்திருக்கும் மக்கள், அவர்கள் மேடை ஏறியவுடன், வேகமாக மேடையை நோக்கிச் சென்று ஒரு பெரிய வரிசையை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்த வரிசையில் காத்திருந்து, மணமக்களுக்கு பரிசுகளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு பின் உணவருந்தச் செல்கின்றனர். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் வருபவர்கள் இந்த வரிசையில் நிற்காமல் நேராக மேடை ஏறும்போது சற்று ஆத்திரம் வரத்தான் செய்கிறது. 

குடிமகன் 

செந்தில் நகர் அருகே இருக்கும் நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, என் ஸ்பிளன்டரில் மெயின் ரோடை நோக்கி வந்து கொண்டிருந்தேன். திடீரென இருவர் சாலையில் தோன்ற, ஒரு கணம் தடுமாறி பின் வண்டியை வலதுபுறம் திருப்பி, வேகத்தடையில் தள்ளாடி நிறுத்தினேன். இருவரில் ஒருத்தான் '...தா என்ன பார்த்து வரமாட்டியா' என்று  சண்டைக்கு வந்தான்.அவன் பேசிய அந்த வார்த்தை என்னை கோபப்படுத்தியது, என் ரத்தம் கொதித்தது. என் ஹெல்மெட் கண்ணாடியை மேலே உயர்த்தி, முறைத்த படி அவனை நோக்கினேன், என் மூக்கில் இருந்த சளியையும் ஓரங்கட்டியது அவன் மேல் வீசிய சாராய வாசனை. 'யோவ். ரோட பார்த்து கிராஸ் பண்ணத் தெரியாதா' என்று நானும் சண்டைக்குத் தயார் என்று என் குரலை உயர்த்தினேன்.  ஐநூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் காவல் நிலையம், அவன் குடி போதை இவை இரண்டும் என் பக்கம் வலுவை சேர்க்க, அவனுடன் வந்த மற்றொருவன் 'யாருக்கும் எதுவும் ஆகல. நீங்க போங்க சார். வாடா " என்று அவனை இழுத்துக்கொண்டுச் சென்றான்.

நவீன சரஸ்வதி சபதம் 

பல நாட்களுக்கு பிறகு என் நண்பனை சந்திக்கச் சென்ற பொழுது, அவன் படம் பார்க்க போகலாம் என்று கட்டாயப்படுத்தினான். அதுவும் நவீன சரஸ்வதி சபதம் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். வலையில் ஏற்கனவே அந்தப் படத்தின் விமர்சனத்தை படித்திருந்தபடியால் கெஞ்சினேன் கதறினேன், வேண்டாம் என்று. இருந்தும் அவன் கேட்பதாய் இல்லை. பெரம்பூரில் ஸ்பெக்ட்ரம் மாலில் இருக்கும் சத்யமின் S2 திரையரங்கில் நவீன சரஸ்வதி சபதம் காணச் சென்றாம். படம் துவங்கி பத்து நிமிடத்திற்கு மேலாகவே, டிக்கெட் கவுன்டரில் இருக்கும் பெண் டிக்கெட் கொடுக்க தயங்கினாலும், என் நண்பன் விடவில்லை. உள்ளே சென்றால் மொத்த இருக்கைகளும் காலியாக இருந்தன. சென்னையில் இப்படி காலியாக ஒரு திரையரங்கில் படம் பார்த்ததே இல்லை. சுமாரான படமானாலும், தனியாக பெரிய திரையில் படம் பார்த்த அனுபவம் சுகம் தான். 

தமிழ் ஆட்சி மொழி 

வெறும் 54லட்சம் மக்கள் தொகையைக்கொண்ட சிறு தீவான சிங்கையில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதைக்கண்டு பெருமை கொள்வதா, இல்லைத் தாய் தமிழ் நாட்டில் தமிழுக்கு உரிய மரியாதை இல்லாததைக்கண்டு வருந்த்வதா என்று எனக்கு தெரியவில்லை.   

கைபேசி 

என் கிராமத்தில் இருந்து ECR வழியாக அரசுப் பேருந்தில் சென்னை வந்த பொழுது ஓட்டுனருக்கு பின் இருக்கையே எனக்கு கிடைத்தது. கோவலம் தாண்டி மாமல்லபுரம் நோக்கி வண்டி சென்றுகொண்டிருந்த பொழுது, ஓட்டுனர் ஏதோ பேசத் தொடங்க நான் அவரை நோக்க, அவர் ஒரு கையில் கைபேசி இருந்தது என்னுள் திகிலை கிளப்பியது. பேருந்தில் இருக்கும் அறுவது அப்பாவி மக்களின் உயிரை பணய வைத்து பேசும் அந்த உரையாடல் அவசியம்தானா?      
           
சீட் பெல்ட் 

சோழிங்கநல்லூரில் இறங்கி, C51 வரக் காத்திருந்தேன். ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவு சாலையைத் தடுத்து விட்டு, அனைத்து சீருந்துகளையும் போக்குவரத்துக் காவல்துறை 'சீட் பெல்டுக்காக' சோதனை செய்துகொண்டிருந்தது. பல வாகனங்கள் ஓரங்கட்ட்டப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. நானும் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது ஒரு விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தேன். எந்தெந்த சீருந்துகளை காவல் துறை நிறுத்தப் போகிறது என்று என்னை வாகனங்கள் கடக்கும் பொழுதே கணிதுக்கொண்டிருந்தேன். என் கணிப்பும் சரியாகவே இருந்தது. எதிரில் ஒரு வெள்ளை நிற இன்னோவா, ஏதோ ஒரு கட்சிக் கொடி பறக்க வந்தது. ஓட்டுனர் சீட் பெல்ட் போடவில்லை. அந்த வண்டியை போக்குவரத்துக் காவல் துறை நிறுத்துமா ?          

அன்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

9 comments:

 1. புத்தாண்டு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 2. உலகத்தை அழகா கவனிச்சிருக்கீங்க..உங்க ஒவ்வொரு பத்தியிலும் தெரிகிறது.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரூபக்ராம்

  ReplyDelete
 3. வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. /ஏதோ ஒரு கட்சிக் கொடி பறக்க வந்தது. ஓட்டுனர் சீட் பெல்ட் போடவில்லை. அந்த வண்டியை போக்குவரத்துக் காவல் துறை நிறுத்துமா ?/

  நிறுத்தினால் தனது கிழிந்துவிடும் என்பதால் 'போலாம் ரைட்' சொல்லி இருப்பார்.

  ReplyDelete
 5. திருமண வரவேற்புகள் : கடமைகளாகிவிட்ட சம்பிரதாயங்கள்!

  ந.ச.ச.... :))))

  'அந்த' வண்டியை காவலர் நிறுத்தியிருக்க மாட்டார்! சரிதானே?

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. எனக்கும் இந்த திருமண வரவேற்புகள் அலுப்பைத் தருகின்றன. பரிசு தந்துவிட்டு, சாப்பாட்டுப் பந்தியில் இடம் பிடிக்க ஓட வேண்டும்!
  கைபேசியில் பேசியபடியே வாகனம் ஓட்டுவது ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் வரை நீக்கமற நிறைந்திருக்கிறது. எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை.
  நன்றாக எல்லாவற்றையும் கவனித்து உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள், ரூபக்!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அன்புடையீர்.
  தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 8. சுவையான தேன் மிட்டாய்.....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete