Saturday, November 30, 2013

தேன் மிட்டாய் - நவம்பர் 2013

திருநங்கை ?

அழகான ஒரு மாலைப் பொழுதில், பௌர்ணமி நிலவை வங்கக் கரையின் அலைகள் வீச பெசென்ட் நகர் கடற்கரையில், மணலில் வானைப் பார்த்தவாறு  படுத்துக் கொண்டு, இயற்கையை  ரசித்து கொண்டிருந்த சமயம், என் கால் அருகில் யாரோ வந்து நிற்பது போல் உணர எழுந்து அமர்ந்தேன். என் அருகில் நின்றுகொண்டிருந்த அந்த திருநங்கை என்னிடம் இரவல் கேட்பது போல் கையை நீட்டினாள். யாருக்கும் பிட்சை கொடுப்பது எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு விஷயம், இருப்பினும் இந்த திருநங்கைகள் தொட்டு விட்டு ஏற்படும் அருவெறுப்பை தவிர்க்க அவர்களுக்கு மட்டும் உடனே காசு கொடுத்து விடுவேன்.

ரயில் பயணங்கள், சுங்கச் சாவடிகள் என பல இடங்களில் இவர்களால் இம்மாதிரி வழிப்பறி அனுபவித்து உண்டு. கடற்கரையில் இதுவே முதல் முறை. என் பணப்பையை திறந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

'என்ன தம்பி நாலு பேரா வந்துட்டு பத்து ரூபா தர, ஆளுக்கு பத்து சேர்த்து நாற்பது ரூபாயா கொடு' என்றாள் அந்த பெண் உடையில் இருந்த திருநங்கை.

என்னுடன் வந்த மூவர் கடற்கரையில் நீரில் சற்று தள்ளி இருக்க, முப்பது  நிமிடங்களுக்கு மேலாக நான் தனியாகத் தான் இருக்கின்றேன், எப்படி இவள் நாங்கள் ஒன்றாக வந்ததை கவனித்தாள் என்ற ஆச்சரியம் ஒரு புறம் இருக்க, 'கடற்கரைக்கு வர இவளுக்கு இது என்ன நுழைவுக் கட்டணமா' என்று என் மனதில் கோவம் எழ 'சில்லறை இல்லை இதை வாங்கிக்கொண்டு போங்க' என்று மீண்டும் நீட்டினேன்.  

அவள் ஏற்க மறுத்து, நாற்பது ரூபாய் தான் வாங்குவேன் என்று பிடிவாதத்துடன் நின்றாள். ஐந்து நிமிட வாக்கு வாதத்திற்கு பிறகு அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் அந்த பத்து ரூபாய் தாளை மீண்டும் என் பணப்பையினுள் சொருகி விடலாம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றிய சமயம் அந்த பத்து ரூபாயை என்னிடம் வாங்கிக்கொண்டு 'நீ நாசமா போய்டுவ' என்ற சபித்து விட்டு சென்றாள்.

என் உதடுகள் இங்கு எழுத முடியாத ஒரு வார்த்தையை முணுமுணுத்ததை அவள் கவனிக்காமல் அடுத்து அருகில் இருந்த காதல் ஜோடியை ஏமாற்றி பணம் பிடுங்க சென்று விட்டாள்.

எதற்காக தோன்றியது இந்தப் பழக்கம். இந்தத் திருநங்கைகளுக்கு பணம் கொடுத்து அவர்கள் நம்மை வாழ்த்தினால் நாம் நன்றாக இருப்போம் என்ற வதந்தியை எந்த முட்டாள் பரப்பியது என்ற கோபம் என்னுள் கொழுந்து விட்டு எரிந்தது அந்த நிமிடம். அவர்களால் உழைக்க முடியாதா? ஏன் அரசாங்கம் எவ்வளவு சலுகைகளை கொட்டி கொடுக்கிறது. இப்படி சிலர் செய்யும் அடாவடித்தனத்தால்   அந்த பிரிவினை இந்திய மக்கள் சமூகத்தில்  சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.


தீபாவளித் திருநாள் 

தீபாவளிக்கு முன் தினம் அலுவலகத்தின் உள்ளிருக்கும் சரவணபவனில் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனை நடை பெற்றது. பல நாள் ஒருவரும் தீண்டாமல் எலிகளுக்கு இறையான இனிப்புகள் கூட அன்று மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்தன. 12 மணிக்கு தொடங்கிய விற்பனை ஒரு மணிக்கு முடிந்து விட்ட ஏமாற்றத்தில், அடுத்த நான்கு மணி விற்பனையிலாவது வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடம் இருந்தேன். சூப்பர் ஸ்டார் படத்திற்கு முதல் நாள் டிக்கெட் வாங்க நடப்பது போன்ற அடிதடி நடந்தது, நான்கு மணி விற்பனையில். வியாபாரம் பல மடங்கு லாபம் அன்று. இன்று வாங்க ஆள் இல்லாமல் அந்த இனிப்புகளில் ஈ மொய்த்துக்கொண்டிருந்ததைக் கண்ட பொழுது, என்னுள் எழுந்த கேள்வி  'தீபாவளி அன்று உண்டால் தான் அந்தத் தித்திப்புக்கள் இனிக்குமா என்ன?'    

ஆண்டிராய்டும் கர்ப்பமும்

ஒரு வழியாக நானும் இம்மாதம்  ஆண்டிராய்ட் கைபேசிக்கு மாறிவிட்டேன். கைபேசி கையில் வந்தவுடன் சில appகளை தரவிறக்கிக் கொண்டிருந்தேன். யாருக்கும் கைபேசி வாங்கியதை சொல்லவில்லை. அந்த சில appகளின் உள் நுழைந்துடனே அனைவருக்கும் தெரிந்துவிட்டது நான் ஆண்டிராய்ட் கைபேசி பயன்படுத்துவது. அந்த நிமிடம் தான் ஆண்டிராய்டையும் கர்ப்பத்தையும் மறைக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தேன்.

நாட்டின் நிலைமை 

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் நான் எடுத்த புகைப்படம்.

பூட்டப்பட்ட குப்பைத் தொட்டி !


ஹைதராபாத் 

ஹைதராபாத் சென்றிருந்த பொழுது அங்கு சில விசயங்கள் புதியதாக இருந்தது. எந்தப் பொது இடத்திற்க்குச் சென்றாலும், சத்யம் திரையரங்கில் செய்வது போல், உடல் முழுவதும் தடவி சோதித்த பின்னே உள் அனுமதிக்கின்றனர். சமீபத்தில் நடந்த சில குண்டு விபத்துக்களே இந்த சோதனைகளுக்கு கராணம் என்று உள்ளூர் நண்பர் கூற  அறிந்து கொண்டேன். ஒரு உணவகத்தின் உள்ளே செல்லவும் சோதனை செய்த பொழுதுதான், தமிழகத்தில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர முடிந்தது.    

இரண்டாம் உலகம்

புரியாத மொழியில் படம் எடுக்கும் ஒருவன் எதையோ காட்டி உலகம் என்றும், யாரையோ ஒருவரை காட்டி கடவுள் என்றும் அவன் கற்பனையில் சொன்னால், அதை கை தட்டி ரசித்து ஏற்றுக்கொள்ளும் உலகம்; தமிழ் மொழியில் படம் எடுக்கும் ஒருவன் தன் கற்பனை உலகத்தை உருவாக்கினால் அதில் பல ஓட்டைகள் கண்டுபிடித்து கேள்விகள் கேட்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை?. எனக்கு இரண்டாம் உலகம் பிடிக்கத்தான் செய்தது.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள் 

அலுவல்கள் சற்று அதிகரித்து விட்டதால், மற்ற வலைத் தளங்களுக்கு வந்து கருதுரையிட முடிவதில்லை, அங்கொன்று இங்கொன்றுமாக படிப்பது மட்டும் உண்டு. கூடிய விரைவில் எல்லா வலைப்பூக்களுக்கும் நான் வருகை தரும் வரை மன்னித்து பொறுத்தருள வேண்டுகிறேன்.

அக்காமார்களே அண்ணன்மார்களே,மற்றவர்கள் வலைப்பூக்களை கைபேசியயில் படிக்க ஏதுவாக ஆண்டிராய்ட் app ஏதேனும் உள்ளதா ?

70 comments:

  1. அக்காமார்களே அண்ணன்மார்களே,மற்றவர்கள் வலைப்பூக்களை கைபேசியயில் படிக்க ஏதுவாக ஆண்டிராய்ட் app ஏதேனும் உள்ளதா ?//ஆம் இருக்கிறது.நான் அதில்தான் பார்த்துப் பதிவிடுகிறேன்.பதிலும் தருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . app பெயரை சொல்லலாமே

      Delete
  2. ரசித்துப் படித்தேன். பூட்டப்பட்ட குப்பைத் தொட்டியும் நாம் பாதுகாப்பாக இருக்கும் லட்சணமும் ரசிக்க வைத்தன!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா :) வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார் :)

      Delete
  3. அவர்கள் தொட்டால் ஏன் அருவெறுப்பு ரூபக்? அரசு என்னென்ன சலுகைகள் கொடுக்கிறது என்று தெரியப்படுத்தவும்...அது போக நாம் எந்தளவிற்கு மதிக்கிறோம் வாழ்வதற்கு இடமளிக்கிறோம் திருநங்கைகளை ? எனது ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் இவர்களுக்கு மட்டுமே ஐம்பது அறுபது ரூபாய் கொடுக்கப்படும்.......

    என் உன் அலுவலகத்தில் இவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க ரெடியாகாத போது அவர்களிடம் என்ன நேர்மையை எதிர்பார்க்கிறீர்கள்?
    சமீபத்தில் திருநங்கை ஒருவரை டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத அரசு அனுமதித்திருக்கும் செய்தி படித்திர்களா?. இட ஒதுக்கீடு கொடுத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய அவர்களுக்கு, தேர்வு எழுதவே அனுமதிக்காத அவலமல்லவா நீடிக்கிறது....

    ரூபக் நண்பா சினிமா தியேட்டரில் குளிர்பானத்திற்கு இருமடங்கு விலை வசூலிக்கும் போது நமது கோபம் அருவெறுப்பு எல்லாம் எங்கே சென்று விடுகிறது ...
    இன்னும் சில வருடங்களில் அவர்கள் உங்களை தொந்திரவு செய்யாத நிலை ஏற்பட வேண்டுமெனில் நாம் அவர்களை அங்கீகரிக்கும் போது மட்டுமே நடக்கும் ..சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனம் ஒரு நாள் வெகுண்டெழும் ..இப்போது அவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள் ..


    Living Smile Vidya Swapna Karthickஇங் புகைப்படம்வை பகிர்ந்துகொண்டார்
    28 நவம்பர் · தொகுத்தது
    Our comrade from Transgender community MsSwapna, filed a case in Madras High Court to allow the TNPSC to write exam as a Female and also we all together asked to give transwomen and transmen reservation.

    Swapna achieved her goal, write TNPSC exam as Female gender. My hearty wishes dear Swapna... You have opened a new gate to this community... We're extremely proud of you...

    And also the court has given 3 weeks time to the govt regarding reservation.

    Waiting for the positive verdict...
    பல போரட்டங்கள் தொடர்ந்து செய்து இந்த வெற்றியினை பெற்றுள்ளோம்...
    இந்த போரட்டங்களுக்கு உதவிய என்னுடைய தாயார், திருநங்கை பானு, டாக்டர் செல்வி, எழுத்தாளர் வித்தியா, ஏஞ்சல் கிளாடி, நாணலைச் சேர்ந்த நண்பர்கள், விழித்தெழு மதுரையைச் சேர்ந்த நண்பர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாலாமன், சந்தோஷ், Thandavamoorthy Manampathy, ராகவ் தோழர், சிவா தோழர், பத்திரிக்கை தோழர்கள், திருநங்கை தோழிகள் மற்றும் பல முகநுல் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.... பல படிகள் ஏறி செல்ல இது முதற்படியாக அமைய வேண்டும்.. — with Ayesha Farook and 34 பிறர் in Madurai.

    ReplyDelete
    Replies
    1. சதீஷ்,

      முதலில் உங்கள் தாயாருக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. ஆனால் அதே சமயம் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.. நண்பர் ரூபக் நிச்சயமாக ஒட்டுமொத்த திருநங்கைகளை அருவருப்பு என்று கூறவில்லை.. காசு கொடுக்கவில்லை என இரயில், பஸ், பீச் மற்றும் இன்ன பிற பொது இடங்களிலும் நம்மை வசை பாடும் ஒரு சில பேரை மட்டும் தான் குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

      இது எனக்கே நடந்த விஷயம் தான்.. பணம் கேட்டு மற்றவர்கள் முன்னில் அவ்வளவு ஆபாசமாக நடந்து கொண்டும், மட்டமான வார்த்தைகளால் கேலி செய்தும் செல்லும் இவர்கள் மேல் கண்டிப்பாக மரியாதை வைக்க முடியாது..

      அதே சமயம் "கோவை நேரம்" ஜீவா தன்னுடைய எல்லா வீட்டு விஷேசங்களுக்கும் ஒரு திருநங்கையான சங்கீதா என்பவரிடம் தான் உணவு ஆர்டர் கொடுப்பார்.. நானே பல முறை சென்று வாங்கியிருக்கிறேன்.. அப்போது அவரிடம் எனக்கு அருவருப்பு தோன்றவில்லை.. மாறாக உழைத்து உண்ணும் அவரைப் பார்த்த போது மரியாதை தான் வந்தது.. மக்களை ஏய்த்து பிழைக்கும் எவருக்கும் (அது திருநங்கைகளோ, மற்றவர்களோ) நாம் ஆதரவு செய்தல் தவறு.. இது போன்றோருக்கு உண்மையில் உதவி செய்யும் தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து பணியாற்ற நானும் தயாராய் இருக்கிறேன்..

      நான் கூறியவற்றில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்..!

      Delete
    2. உங்களிடம் இருந்து இப்படி ஒரு பின்னூட்டம் வரவில்லை என்றால் தான் நான் ஆச்சரியபடுவேன்...

      எனது அலுவலகத்தில் அதாவது நானும் ரூபக்கும் வேலை செய்யும் எங்கள் அலுவலகத்தில் திருநங்கைகளை நான் பார்த்துள்ளேன்...

      ரூபக் கூறியதில் இரண்டு விசயங்களை கூர்ந்து கவனியுங்கள், அருவருப்பு என்பது எதனால் என்றால் அவர்கள் மீது ஒரு பிம்பம் படிந்துள்ளது அல்லது படியபட்டுள்ளது அதாவது அவர்கள் பாலியல் தொழிலாளிகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற அளவில், மேலும் அவர்களுடன் மளுக் கட்ட முடியாது.

      அவர்கள் நம்மிடம் பணம் பெரும் பொழுது அவர்களின் தொடுகையை சட்டென வேறு மாதிரி உணர்வுகளை தூண்டுவது குறித்து பலரும் என்னிடமும் நான் பலரிடமும் கூறியுள்ளேன்... அதனால் இது ஒரு பெரும்பான்மை ஆண் புத்தி...

      இரண்டு நாம் பணம் பெற பர்ஸ் எடுக்கும் பொழுது அதில் 500 1000 என்று அவர்களே வலுகட்டாயமாக எடுத்துக் கொண்ட நிகழ்வுகளை கண்கூடாக பார்த்துள்ளேன்...

      அவர்களை மனிதனாக நான் தயார், ஆனால் ஒட்டு மொத்த சமுதாயமும் தயாரா என்றால் நிச்சயம் தயார் இல்லை தான், காரணம் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் நீங்களும் நானும் ரூபக்கும் நம் போன்றவர்களும் குறைந்த அளவில் தானே விரவிக் கிடக்கிறோம்... மற்றவர்கள் கடற்கரைப் பக்கம் இச்சைக்கு கூடிக் கொண்டு ஒதுங்குபவர்களாக தானே இருகிறார்கள்...

      மாற்றம் முதலில் தொடங்க வேண்டியது அவர்களிடம் இருந்து, அது தொடங்க ஆரம்பித்து விட்டது... கூடிய சீக்கிரம் இந்நிலை மாறும்,..

      இரண்டாவது பிச்சையை ரூபக் எதிர்க்கிறான், அதனுள் பொதிந்து கிடக்கும் ஆழமான மூட நம்பிக்கைக்கு எதிராக ஒரு படி முன்னெடுத்து வைத்துள்ளான்.. அதனையும் ஆக்கபூர்வமாக பார்க்க வேண்டும்..



      Delete
    3. //அவர்களை மனிதனாக நான் தயார்,// அவர்களை மனிதனாக பார்க்க நான் தயார்,

      Delete
    4. /// நானும் ரூபக்கும் வேலை செய்யும் எங்கள் அலுவலகத்தில் ///

      இது புதிய தகவல்...

      Delete
    5. விளக்கமாக பதில் அளித்த ஆவிக்கும் சீனுவிற்கும் நன்றி.

      @சதீஷ் : அரசாங்க சலுகைகள் பற்றி செய்திகளில் கேட்ட நியாபகம் தான். அரசு இயந்திரம் செயல் படுவது பற்றி ஆராயவேண்டாம். எனது கருத்து அந்த மொத்த சமூகத்தின் மேல் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பணம் பிடுங்கும் சிலரின் மேல் தான். சீனு கூறியது போல் எம் அலுவலகத்தில் அவர்கள் பணி புரிகின்றனர். எங்கள் அலுவலகத்தை போன்ற மென்பொருள் நிறுவனமான Wiproவில், விஜய் டீவி 'இப்படிக்கு ரோஸ்' என்ற நிகழ்ச்சி புகழ் திருநங்கை ரோஸ் தான் புதுமுக பணியாளர்களுக்கு அவர்தான் trainer. யாரும் அவரைக்கண்டு அருவருத்து அவர் வகுப்புகளைக் புறக்கணிப்பது இல்லை. நாங்களும் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆவி கூறிய திருநங்கை சங்கீதாவைக் கண்டு நான் பல சமயம் பெருமைப் பட்டுள்ளேன். இப்படி பல முன்னேற்றப் பாதையில் அடிவைக்கும் சமயத்திலும், சிறுமையாக சில பணம் பிடுங்கிப் பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
      //ரூபக் நண்பா சினிமா தியேட்டரில் குளிர்பானத்திற்கு இருமடங்கு விலை வசூலிக்கும் போது நமது கோபம் அருவெறுப்பு எல்லாம் எங்கே சென்று விடுகிறது ...// அதைக் கண்டு சினங்காத நாளே இல்லை. பல சமயங்களில் எதையும் வாங்காமல் வருவதுண்டு. எனக்கு ஒரு பழக்கம் உண்டு ரோடுக் கடைகளில் நான் பேரம் பேசுவது கிடையாது. அவர்கள் பத்து இருவது ரூபாய் அதிகம் கேட்கிறார்கள் என்று தெரிந்தாலும் நான் யோசிக்காமல் கொடுத்து விடுவேன். அந்த இருபது ரூபாயில் அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகப்போவதில்லை என்று நமக்கு தெரியும். நாற்பது ரூபாய் கொடுப்பதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, அதைக் கேட்ட முறை தான் தவறு என்று சொல்கிறேன்.

      Delete

    6. ஆவி என்னய்யா நீ மன்னிப்பு அது இதுன்னு சங்கடப்படுத்தாதிங்க ........
      இல்லை ஆவி ஏற்கனவே நமது சமூகம் கிண்டலடிப்பதும் ஒதுக்கி வைப்பதும் இருக்கிறது..இது இன்னும் அவர்களை தவறாகவே சித்தரிக்கும்...எல்லாரும் எல்லாம் பெற்றுவிடுவதில்லை...சங்கிதா வித்யா ஆயிஷா போன்றவர்கள் பல தடைகள் தாண்டி வந்துள்ளனர் ....இந்த இனத்திற்கு போதுமான வாய்ப்புகளோ வசதிகளோ செய்து கொடுக்காமல் விமர்சிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை....நாம் அங்கிகரிக்காத போது இது தொடரத்தான் செய்யும் .....
      ஏன் என் மனைவி நான் உறங்கி கொண்டிருந்தால் அவரே அவர்களை அழைத்து பணம் கொடுத்து விடுவார் ..காரணம் நாம் இன்னும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை ..இன்னும் திரைப்படங்களில் நடைமுறையில் கிண்டலடித்து திரிகிறோம் நண்பா......
      உங்கள் தொண்டுள்ள மனதை வரவேற்கிறேன் நண்பா......உதவி என்பது வேறு...உரிமை என்பது வேறு......அவர்களுக்கான உரிமைகளை கொடுக்காமல் உதவி செய்வோமானால் எத்தனை பேருக்கு கொடுக்க முடியும் ? திருநங்கைகள் இப்போது தங்கள் சமூகத்தை முன்னேற்ற முயற்சிக்க ஆரம்பித்துள்ளனர் .....நாம நமது எழுத்துக்களால் ஏன் முட்டுப்போடனும்?
      இவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட நம்மைபோலவே பிறந்து உறவுகள் நண்பர்கள் பள்ளியில் என பல இடங்களில் கேலி செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியவர்கள்தான் ஆவி.......இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே நாம்தான் ஆவி....
      வசையாடல் ஆபாசமாக நடத்தல் என்பது தவறே...வருந்துகிறேன்..திருந்துவார்கள்...அந்த இனம் நம்மை விட பல மடங்கு பின்னால் உள்ளது நாம்தான் உதவி செய்ய போராட இயலவில்லை என்றாலும் இன்னும் இன்னும் குறையடிக்காமல் இருக்கலாமே ...
      ஆபாசம் வசையாடல் என்பது இவர்கள் மட்டும்தான் செய்கிறார்களா? நமது சினிமா? அத விடுங்க இவர்களை குறித்து எவ்வளவு மோசமாக ஆபாசமாக காட்டுகிறார்கள்? அதற்க்கு நாம் என்ன செய்தோம் நண்பா?
      உங்கள் மூலம் சங்கிதா என்பவரை அறிந்து கொண்டது மகிழ்ச்சி...ஜீவாவின் மனதை அறிந்து கொண்டேன்...உங்களுக்குள் உள்ள உதவும் நல்லெண்ணம் தெரிந்து கொண்டேன்......நன்றி ஆவி..வெறும் அரட்டை கும்மியடிக்காமல் இந்த விஷயத்தை பேசுவது சந்தோசமாக உள்ளது
      முக்கியமான விஷயம் தாயார் என்பது எனது தாயார் அல்ல..வித்யாவின் தாயார் ஆவார்
      இன்னும் பேசலாம் ஆவி ...நான் ஏதும் தவறாக எழுதியிருந்தால் ஆவி மன்னிக்கவும்....:)

      Delete
    7. மொத்தத்தில் இங்கு அடிப்படை காரணிகளை விட்டு விட்டு திருநங்கைகளை விமர்சிப்பது என்ன நியாயம்? அதோடு சிலர் இப்படி செய்வது என்று சொல்கிறீர்கள் அதற்கு முன்பே பல இடங்களில் இப்படி வழிப்பறி அனுபவம் என்கிறீர்கள்.....
      ரூபக் இந்த பின்னூட்டம் உங்களின் பதிவுக்கானது மட்டுமல்ல பல பெறின் மனநிலையை எதிரொலிக்கிறது என்பதனாலேயே...


      ####ஏன் பாலியல் தொழில், பிச்சை எடுத்தல்:-
      முன்பு எல்லா இடங்களிலும் புறக்கணிப்பு, அவமானம், இழிவான பேச்சுக்கள் என பல்வேறு அவலங்களை கண்டு திருநங்கைகள் தங்களின் வயிற்று பிழைப்புக்காக வாழ்வாதாரம் இல்லாமல் வேறு வழியின்றி விபச்சாரம், பிச்சை எடுத்தல் போன்ற செயலில் தள்ளப்பட்டனர். பெரும்பாலும் அவர்கள் யாரும் விரும்பி அந்த செயலில் எடுபடவில்லை. ஒரு சில திருநங்கைகள் கடைகளில் ட்ரெயினில் அடாவடியாக செயல்பட்டு பணம் பறிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. சில திருநங்கைகள் அப்படி அடாவடியாக செயல்படுவதை நானும் ஆதரிக்கவில்லை, நியாயப்படுத்தவில்லை. அப்படி ஒரு சிலரின் செயலால் ஒட்டுமொத்த திருநங்கைகளை குறைக்கூறி புறக்கணிப்பது நியாயம் ஆகாது, நல்ல வாழ நிலைகள் இருந்தும் ஆண்களில் பெண்களில் தீய செயலில் ஈடுபடுவோர் இல்லையா? அவர்களை போல தான் திருநங்கைகளில் ஒரு சிலரும் தீய செயலில் ஈடுபடுகின்றனர். வாழும் வழி உள்ள ஆண்களும் பெண்களும் இத்தகைய தீய செயலில் ஈடுபடும் போது வாழ வழி கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் ஒரு சில திருநங்கைகள் இத்தகைய செயலில் ஈடுபடுவது பெரிய வியப்பு இல்லை தோழர்களே! அதற்கு சமூகமே காரணம் முழு பொறுப்பு!

      உங்களால் முடியுமா?
      உங்கள் கடைகளில், உங்கள் அலுவலகத்தில், உங்கள் தொழிற்சாலைகளில் வேலை தேடி வரும் திருநங்கைகளை வேலைக்கு அமர்த்துங்கள். அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு பணிக்கொடுங்கள். சில திருநங்கைகள் வேலைக்கு சென்ற இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். அதனால் வேலையை விட்டு வெளியேறி பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தினர். இது என் தோழிக்களுக்கு நேர்ந்த சம்பவம். வேலை செய்யும் இடத்தில் திருநங்கைகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

      நாங்களே மாற்றம் ஏற்படுத்துக்கிறோம் !
      தற்போது சூழ்நிலை மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது. பெரும்பாலும் திருநங்கைகள் ட்ரெயினில், கடைகளில் பிச்சை எடுப்பது கணிசமாக குறைந்து வருகிறது, பாலியல் தொழில் உள்ள திருநங்கைகளும் தங்களின் நிலையை மாற்றி கொண்டு வருகிறார்கள். திருநங்கைகள் தங்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு நாட்டியம், ஊடகம், தன்னார்வ தொண்டு நிறுவனம், இட்லிக்கடை, பூக்கடை, பெட்டிக்கடை, தள்ளுவண்டிக்கடை, அழகு நிலையம், சுயஉதவி குழுக்களை அமைத்தல், சமையல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு தங்களின் நிலையை தாங்களே மாற்றி வருகிறார்கள். அப்படி சமுகத்தில் இருக்கும் திருநங்கைகளை ஊக்குவியுங்கள், அதரவுக்கொடுங்கள் தோழர்களே!
      -ஆயிஷா பாரூக்

      Delete
    8. ’’மாற்று பாலினத்தவரைப் போல இங்கே வேட்டையாடப்பட்ட இன்னொரு சமூகம் இல்லை. மாற்று பாலினத்தவர் நடத்தப்படும் விதம் ஒட்டுமொத்த மனித சமுகத்தின் அவமானம். வேறொரு உடலுக்குள் சிறைப்பட்ட மனதின் துயரத்திற்கு இணையான இன்னொரு துயரம் இல்லை. மாற்று பாலினத்தவர்கள் வன்முறையாளர்களாக சில சமயம் கருதப்படுகின்றர். இந்த சமூகம் அவர்கள் மேல் இழைத்திருக்கும் வன்முறையோடு ஒப்பிட்டால் அவர்களது வன்முறை ஒன்றுமே இல்லை. அப்படி ஒரு எதிர் மறை குணத்தோடு ஒரு மாற்று பாலினத்தவர் இருந்தால் அதற்கான எல்லா நியாயமும் அவருக்கு உண்டு. இன்று கல்வியினாலும் அரசியல் விழிப்புணர்ச்சியினாலும் தங்கள் மேல் இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து மாற்று பாலினத்தவர்கள் உரத்து முழங்குகிறார்கள். இந்த நீதிக்கான போரின் நாம் ஒவ்வொருவரும் இணைந்து நிற்க வேண்டும்’’

      #இதை சொன்னவர் பெயர் சொன்னால் இன்னும் விமர்சிக்கப்படும் என்பதால் அவர் பெயர் வேண்டாம்....

      @ரூபக் ...

      Delete
    9. ஆச்சரியமாய் தீவிரவாதியின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன், இருந்தும் ரூபக்கின் கருத்துகளையும் நாம் சிந்திக்க வேண்டும் என்று கூற விரும்புகிறேன்...

      Delete
    10. ஆச்சரியமாய் தீவிரவாதியின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்,### இந்த நாள் வரலாற்றின் பொன்னாள் மனப்பாடம் பண்ணி வைச்சிக்கணும்...சில பல இடங்களில் உங்களோடு நானும் என்னோடு நீங்களும் ஒத்துப் போவது வெளிப்படும் .......

      Delete
  4. மற்ற மிட்டாய் அனைத்தும் சுவையாக உள்ளது...சொல்லனும்னு சொல்லல..உண்மையாவே அதிலும் கர்ப்பமும் ஆண்ட்ராய்டும் :) :) தொடருங்கள் ரூபக்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி :) அண்ணே உங்கள் கருத்துரையின் வார்த்தை அளவு என் பதிவின் அளவையும் தாண்டியதை கண்டு வியந்தேன் :)

      Delete
    2. நீ நல்லவனா ? கெட்டவனா? யோவ் கலாய்க்கிறீயா?

      Delete
    3. யோவ் இதெல்லாம் தெரியாம நீங்க பார்டர்ல இருந்து , என்னத்த பண்ணி .... ? உங்களை நம்பி கல்யாணம் வேற பண்ணி வைச்சுட்டாங்க ...

      Delete
    4. கல்யாணம் செய்ததால்தான் ஒன்னும் புரில எனக்கு அரசா

      Delete
    5. கல்யாணம் செய்ததால்தான் ஒன்னும் புரில எனக்கு அரசா

      :)

      Delete
  5. //ஆண்டிராய்டும் கர்ப்பமும்// இரசித்தேன்..

    ReplyDelete
  6. // 'தீபாவளி அன்று உண்டால் தான் அந்தத் தித்திப்புக்கள் இனிக்குமா என்ன?' // இனிப்பு என்பது எல்லாநாளிலும் இனிப்பது தான்.. எல்லா நாளிலும் இருக்கும் உற்சாகதிற்கும் பண்டிகை தின உற்சாகதிற்கும் இடைப்பட்ட நூலளவு வித்தியாசம் தான் உன் கேள்விக்கான பதில் :-))))))))

    பண்டிகை தினம் என்பது மத நிகழ்வுகள் என்று மட்டும் அல்ல, பிறந்தநாள், திருமண நாள், வேலையில் சேர்ந்த நாள்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் மக்களின் மனதில் இருக்கும் ஒரு மாயை என்று நினைக்கிறேன் :)

      Delete
    2. மக்களே மாயை என்பது என் எண்ணம்

      காண்பதெல்லாம் மறையும் என்றால் மறைவதுஎல்லாம் காண்போம் என்றால்
      நீயும் ஊர் பிழையோ வெறும் காட்சிப் பிழை தானோ

      என்பது பாரதியின் எண்ணம் :-)))))))

      Delete
  7. யோவ் சீனு...புதிய தத்துவம் 10,001 ஆ?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அண்ணன் மெட்ராசின் ட்ரைனிங்

      Delete
  8. /// மற்ற வலைத் தளங்களுக்கு வந்து கருதுரையிட முடிவதில்லை...///

    சென்னை பதிவர்கள் முக்கியமாக பதிவர் திருவிழா செயல்வீரர்கள் எப்படி...? எனக்கு தெரிந்து உங்களுக்குள்ளே ஒரு Group...

    ReplyDelete
    Replies
    1. சென்னைப் பதிவர்கள் என்று ஒரு போதும் பிரித்து கிடையாது. தமிழ் பதிவர்கள் என்றே நான் பார்த்தது. group என்று ஒன்றும் கிடையாது, அப்படி இருப்பின் அதில் நீங்களும் ஒரு உறுப்பினர் தான். :)

      Delete
    2. இத்தனைக்கும் மின்வெட்டு அங்கு இல்லை... (அடுத்த இரு நாள் தகவலை யோசிக்க வேண்டாம்...)

      வேண்டுமென்றால் ஒரு List அனுப்பட்டுமா...? உங்களுக்குள்ளே கும்மி என்பதை நிருப்பிக்கவும் வேண்டுமோ...?

      Delete
    3. DD விடாதீங்கோ ... ! இந்த ஆள் சப்பக்கட்டு கட்டுராப்புல .... இவி(ய்)ங்க ஒரு பெரிய குருப்பாத்தான் திரியுறா(ய்)ங்க ...!

      போகட்டும் ... காமெடி கும்மி , டெர்ரர் கும்மி வரிசையில நாமளும் ஒரு கும்மி ஆரம்"பிச்சுடுவோம்".

      ( ஆனா dd என்னப்போயி நீங்க தப்பா நினைச்சுட்டீங்களே )

      Delete
    4. குருப்பா இருப்பதில் என்ன சார் தப்பிருக்கு ...

      Delete
    5. லிஸ்ட் கொடுங்க சார் .. எல்லாத்தையும் தூக்கிரலாம் ....

      Delete
    6. போகட்டும் ... காமெடி கும்மி , டெர்ரர் கும்மி வரிசையில நாமளும் ஒரு கும்மி ஆரம்"பிச்சுடுவோம்".// ஜீவன் அண்ணே ... DD தான் தலைவர் , நீங்க செயலாளர், நான் தான் கொ . ப. செ ... போடுற கமெண்ட்ல எல்லோரும் பதிவுலகத்தை ஓடனும் ..

      Delete
    7. @ அரசன் // குருப்பா இருப்பதில் என்ன சார் தப்பிருக்கு .//

      உங்க நேர்மை எனக்கு புட்ச்சுருக்கு .... நக்கலுக்கு சொல்லலைங்க நெஜமாவே ....! ஆமா அதுலென்ன தப்பிருக்கு ...

      Delete
    8. உண்மையில் இங்கு நிறைய குருப்பு இருக்கிறது ஜீவன் அண்ணே , என்ன வெளிப்படையாய் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள்ளே நிறைய வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் , நாம ஒப்பனா இருக்கிறோம் தல ... குருப்பு வைத்துக் கொள்வது தவறென்றால் என் கண்ணோட்டத்தில் பிளாக் வைத்துக்கொள்வதும் தவறு தான் .. என்னண்ணே நான் சொல்றது

      Delete
    9. நான் சும்மா இந்த பக்கம் வந்தேன்.. கருத்தெல்லாம் ஒன்னும் தெரிவிக்கலைங்கோ

      Delete
  9. //மக்களுக்கு ஒரு வேண்டுகோள் //

    மக்கள் எழுத்தாளர் ரூபக் ராம் வாழ்க ...! வாழ்க ...! வாழ்க ...!

    காரசாரமான தேன்மிட்டாய் ....!

    ReplyDelete
    Replies
    1. ஜீவன் சுப்பு ஏன்யா இப்படி எத்திவிடுற? இரும் நீர் ஒரு ஸ்டேட்டஸ் போட்டதும் வர்றோம் அப்பத்தான் நாமள்லாம் ஒரே குருப்புன்னு தெரியும்

      Delete
    2. அண்ணேன் தீவிரவாதி அண்ணேன் ... மீ பாவம் விட்டுருங்க...

      அப்புறம் எத்தியும் ஏத்தியும் விடல ...!

      Delete
    3. சரிதான் இந்தப்பய பயப்புடுற மாதிரி நடிக்கிறான்....இவன்கிட்ட சூதானமா இருக்கோணும் சதிசு ...

      Delete
  10. பெங்களூரு போகும்போது ட்ரெயின்லயும், திருப்பதி போகும்போது நள்ளிரவில் அதுவும் மலை அடிவார டோல்கேட்டி திருநங்கைகள் அட்டகாசம் முகம் சுளிக்க செய்தது. இத்தனைக்கும், போலீஸ், செக்யூரிட்டி ஆட்கள்ன்னு இருந்தும்...,

    ReplyDelete
    Replies
    1. டோல்கேட்டே ஒரு பெரிய வழிப்பறிதாங்க அக்கா ...அவ்வ்வ்வவ்

      Delete
  11. "அண்ணன்மார்களே,மற்றவர்கள் வலைப்பூக்களை கைபேசியயில் படிக்க ஏதுவாக ஆண்டிராய்ட் அப்ப் ஏதேனும் உள்ளதா ?"

    இதற்கு எதுகுன்னே தனி அப்ஸ்.
    ஒவ்வொரு வலை பதிவிலும் உள்ள ஈமெயில் சப்கிரிப்சன் செய்யலாமே.எல்லாமே மெயிலுக்கு வந்துடும் .
    உங்க பதிவே அப்படிதான் படிக்கிறேன்.

    ReplyDelete
  12. வணக்கம் ரூபக் ...

    உங்களுக்கு நேர்ந்த ஒரு சில திருநங்கைகளின் அடாவடித்தனங்களை வைத்து ஒட்டு மொத்தமாய் அவர்கள் சரியில்லாதவர்கள் தான் என்ற பிம்பத்தை இந்த பதிவும் , அதற்கு வந்த கருத்துரைகளும் உருவாக்கு கின்றன.

    அவர்களை சக மனிதர்களாய் பார்க்காத நாம், அவர்கள் ஒழுங்கீனமற்றவர்கள் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்கள்.
    அவர்களின் அந்த மாதிரி நடவடிக்கைகளுக்கு நாமும் ஒரு மறைமுக காரணிதான் என்று உணர மறுக்கிறோம் .. தோழர் சீனு சொன்னது போல் நான் மாறத்தயார் ஆனால் இச்சமூகம் மாறத்தயாரா ? என்று கூறிவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறோம். இல்லையேல் நகர்த்தப் படுகிறோம்.

    பள்ளியிலிருந்து தொடங்கி செல்லும் இடமெல்லாம் விரட்டி அடிக்கப் படுகையில் அவர்களின் செய்கைகள் இப்படித்தான் இருக்கும். சலுகைகள் என்கிற மந்திரத்தை சொல்கிறதே தவிர அரசாங்கம், அதை உருப்படியாய் நிறைவேற்ற முயற்சி எடுத்ததில்லை.

    இம்மாம் பெரிய ஜனநாயக நாட்டில் இரண்டு மூன்று பெயர்களை மட்டுமே உதாரணத்துக்கு சொல்லும் அவல நிலையில் இருக்கிறோம் அது தலைவர்களாக இருந்தாலும் சரி , திருநங்கைகளாக இருந்தாலும் சரி ... மற்றவர்களின் கதி ?

    அவர்களின் மொழியோ , நடவடிக்கைகளோ , அருவறுப்பை உண்டு பண்ணலாம் ரூபக், அதை பலர் படிக்கும் பொது வெளியில் பகிர்ந்து அவர்களின் நிலையை இன்னும் தாழ்த்தி அவர்கள் இப்படி பட்டவர்கள் தான் என்ற முத்திரை குத்த வேண்டாமே என்பது கருத்து ...

    எல்லா இடங்களிலும் எல்லோரும் நல்லவர்கள் கிடையாது , எல்லோரும் தீயவர்களும் கிடையாது, அது போல் திரு நங்கைகளிலும் சிலரின் நடவடிக்கையால் மிகப் பெரும்பாலானவர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுகிறது என்பதை மனதில் வையுங்கள் ரூபக் ...

    ReplyDelete
  13. தீவிரவாதியின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. இங்கிட்டு பாருய்யா கோர்த்து விடுதான்

      Delete
  14. அரசாங்க சலுகைகள் பற்றி செய்திகளில் கேட்ட நியாபகம் தான். அரசு இயந்திரம் செயல் படுவது பற்றி ஆராயவேண்டாம். எனது கருத்து அந்த மொத்த சமூகத்தின் மேல் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்//

    ஒட்டு மொத்தமாக சொல்லவில்ல என்பது எங்களுக்கு புரிந்தாலும் , சாதரணமாய் படிக்க வரும் பொது நண்பர்களுக்கு ஒட்டு மொத்த திருநங்கைகளை சாடியது போன்ற பிம்பத்தை உண்டு பண்ணும் ..

    ReplyDelete
  15. இரண்டு நாம் பணம் பெற பர்ஸ் எடுக்கும் பொழுது அதில் 500 1000 என்று அவர்களே வலுகட்டாயமாக எடுத்துக் கொண்ட நிகழ்வுகளை கண்கூடாக பார்த்துள்ளேன்...
    //

    யாராவது ஒரு சிலர் பண்ணுவார்கள் சீனு .. எல்லோரும் பண்ணுவார்களா என்ன ?

    ReplyDelete
    Replies
    1. பதினாலு வருட இந்திய பயணங்களில் இவர்களுடன் கட்டாயம் சந்திப்பு நடக்கும்...விஜயவாடா பக்கம் இவர்கள் மிக முரட்டுத்தனம் காட்டுவார்கள் என்பர்...ஆனால் இது வரை எங்கேயும் ஐநூறு ஆயிரம் எடுத்தோ பத்து ரூபாய்க்கு மேல் வற்புறுத்தியோ பார்த்ததில்லை....ஆச்சரியாமா இருக்கு சீனு

      Delete
  16. அதாவது அவர்கள் பாலியல் தொழிலாளிகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற அளவில், மேலும் அவர்களுடன் மளுக் கட்ட முடியாது.// அந்த தொழிலுக்கு அவர்களை தள்ளிய சமூகத்தில் இருந்து கொண்டு தான் இந்த கருத்தை பதிகிறீர்கள் என்று மனதில் கொள்ளுங்கள் சீனு .. நீங்களும் ஒரு காரணி , நானும் ஒரு காரணி .... தவறுகள் செய்வது நாம் , தண்டனை அவர்களுக்கு ???? (அவர்களில் இருக்கும் சில கறுப்பு ஆடுகளுக்கு நான் மல்லுகட்டவில்லை )

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய சமுதாயத்தை நான் பார்த்த நான் பார்க்கின்ற என்னால் பார்க்கபடுகின்ற சமுதாயத்தை தான் என்னால் எடை போட முடியும்... இரவு நேர மெரினாவின் நிலவொளியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளை பார்த்துள்ளேன், மேலும் படித்துள்ளேன்.

      அதே நேரம் நான் பார்ப்பது மட்டுமே சமுதாயம் இல்லை என்பதும் எனக்குத் தெரியும் அதனால் நான் இங்கு திருநங்கைகளை குறை கூற வரவில்லை. நான் இங்கே வசை பாடுவது ஒட்டுமொத்த பெரும்பான்மை ஆண் சமுதாயத்தையும். பெரும்பான்மை என்பது இங்கே ஏதோ ஒரு கட்டத்தில் நீங்களும் நானும் வந்து விடுகிறோம்...

      அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் அவர்களை நிம்மதியாக ஒழுக்கமாக வாழ விடுவதில்லை.

      அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் அவர்களை நாமும் நிம்மதியாக ஒழுக்கமாக வாழ விடுவதில்லை.

      இதை நம்மில் பலபேர் புரிந்து கொள்வதில்லை. அடித்துச் சொல்ல முடியும் பலபேர் என்று.

      நம்மைப் போல ஓரிருவர் மனதில் உள்ள மாற்றங்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தின் வேண்டும், பரவச் செய்ய வேண்டும்.

      இங்கே மாற்றம் என்பது இரு பக்கமும் வர வேண்டும், அவர்கள் பக்கம் வர ஆரம்பித்துள்ளது, அது நல்ல விஷயம், அந்த மாற்றம் நம் பக்கமும் வர வேண்டும் என்பதையே நான் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்...

      Delete
    2. நான் இங்கே வசை பாடுவது ஒட்டுமொத்த பெரும்பான்மை ஆண் சமுதாயத்தையும். பெரும்பான்மை என்பது இங்கே ஏதோ ஒரு கட்டத்தில் நீங்களும் நானும் வந்து விடுகிறோம்...//

      நீங்கள் வசைபாடுவது வரவேற்க கூடியது தோழர் சீனு ... வாழ்த்துகிறேன் ... நீங்கள் போட்டிருந்த கருத்துக்கள் திருநங்கைகள் அனைவரும் அருவருக்க கூடிய மனிதப் பிறவிகள் போலும் நீங்கள் சப்போர்ட் பண்ணுவது போலவும் இருந்தமையால் தான் என் கருத்தை பதிந்தேன் ... இதை இந்த மாதிரி ஒரு பதிவில் விவாதிக்க கூடாது எனவும் ,இதற்கென்றே ஒரு தனி பதிவு போட்டு விவாதிக்க விரும்புகிறேன் சீனு

      Delete
    3. தனிப்பதிவை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்கிறேன் அரசன் ...

      Delete
  17. ஆழமான மூட நம்பிக்கைக்கு எதிராக ஒரு படி முன்னெடுத்து வைத்துள்ளான்.. அதனையும் ஆக்கபூர்வமாக பார்க்க வேண்டும்.. //

    யோவ் சீனு ... படித்த நாம் தான் இன்னும் சில பழையதுகளை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம். நண்பர்களாக நாம் தனியாக பேச வேண்டிய ஒரு விசயத்தை பொது வெளியில் பகிர்ந்தது எனக்கு பிடிக்கவில்லை, சிலரின் தவறான செய்கைகளை குட்டுவதில் தவறில்லை, அதே நேரத்தில் ஒன்றும் தெரியாத அப்பாவிகளும் பாதிக்காதவண்ணம் இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து ..

    ReplyDelete
    Replies
    1. பொதுவெளியில் பகிர்தலிலும் தப்பில்லை தோழர்.... நாளை இதைப் படிக்கும் பொதுவெளி தனக்கான தன் கேள்வியை கேட்டு பதில் தேட முயற்சிக்கும் பாருங்கள் அது தான் நமக்கும் நம்மை போன்ற பதிவர்களுக்கு வேண்டும்

      Delete
    2. அவர்களை பொது வெளியில் பகிரவேண்டாம் என்று சொல்லவில்லை தலைவரே , அவர்களுக்கு ஊக்கம் கொடுக்குறமாதிரி சில விடயங்களை செய்துவிட்டு சிலரின் தவறுகளை குட்டலாம் நாகரிகமாக ... என்று சொல்ல வந்தேன் ..

      Delete
  18. நாட்டின் நிலையை மிக அற்புதமாக சொல்கிறது புகைப்படம் ... வாழ்க இந்தியா இந்த லட்சணத்தில் நாம் வல்லரசு ஆகியே தீரவேண்டும் ம்ம்ம்....

    ReplyDelete
  19. செல்லும் இவர்கள் மேல் கண்டிப்பாக மரியாதை வைக்க முடியாது.. //

    @ ஆவிண்ணே நீங்க மரியாதை கொடுக்கலைன்னாலும் பழிக்காமல் இருக்கலாமே என்பது எண்ணம் ...

    ReplyDelete
  20. அரசன் & சதீஷ் ....!

    கட்டாயமா பணம் கொடுத்தாதான் போவேன்னு சொல்ற திருநங்கைகளை எப்படி நாசூக்காக/ நாகரீகமாக சமாளிப்பது ... சொல்லுங்களேன் ப்ளீஸ் ....! எனக்கும் கசப்பான அனுபவங்கள் தான் ...?

    பெரும்பாலும் நீங்க சொல்ற உழைக்கும் திருநங்கைகளை தொலைக்காட்சிகளிலும் , அச்சுப்பத்திரிக்கைகளிலும் தான் பார்த்திருக்கிறேன் , கேட்டிருக்கிறேன் ....!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவன் அண்ணே வணக்கம் ..

      அந்த மாதிரி திருநங்கைகளை நீங்கள் சாடுங்கள் , சவுக்கெடுத்து விளாசுங்கள் அது உங்கள் விருப்பம் ... இங்கு சொல்ல வருவது அந்த மாதிரி சிலரால் தான் ஒட்டுமொத்த திருநங்கைகளையும் இழிவான நிலையில் பார்க்கும் அவலத்தில் இருக்கிறது என்றுதான் ...

      Delete
    2. ஜீவன் சுப்பு.....இது நமக்கான தண்டனை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் அங்கேயே தீட்டுங்கள் காவல்துறையை நாடுங்கள் அவர்களின் சங்க முகவரி அறிந்து செய்தி அனுப்புங்கள்.....கட்சி கொடி கட்டி வசூலிக்கும் ஆட்களை இது போல எதிர்தவர்கல்தானே நாம்.......ஆனால் இங்கே அவர்கள் மீதான விமர்சனம் என்று இன்னும் ஒதுக்கி விடாதிர்கள்

      Delete
  21. காலையில் வாசிக்கும் போதே பாதி இடை நிறுத்தியே வெளியேறினேன்.. காரணம் திரு நங்கைகள் குறித்த தாக்கம் குறைவான அல்லது அற்ற நாட்டில் சூழ் நிலையில் வாழ்வது தான்..

    பதிவின் படி

    அந்த இடத்தில திரு நங்கைக்கு பதில் யார் உங்களோடு அவ்வாறு நடந்து இருந்தாலும் கடுப்பு தான் தோன்றி இருக்கும் என்பது நிச்சயம்.. ஆனால் தொடர்ச்சியாக உங்கள் பதிவு அவர்களை விளித்தே செல்கிறது..

    அண்ணகர் பிறப்பின் காரணம் அவர்கள் இல்லை என்பது திண்ணம், எப்படி குப்புறக்கா படுத்து யோசித்தாலும் நாகரிகமடையாத மக்களும், வாய்ப்பளிக்காத சமூகமும், சகஜமாக ஏற்று கொள்ளாத முன்னைய ஜெனரேசனுமே அவர்களின் இன்றைய நிலைக்கு காரணமாக இருந்து இருக்கிறார்கள்.

    பகுத்தறிவு பெருகி பாரபட்சம் குன்றி போகும் நிலையுலுள்ள ஒரு சமுகத்தில் இருந்து இப்படி ஒரு பதிவு அடுத்த தலைமுறையாலும் திருநங்கைகள் மேல் சேறு இறைக்க படுவது போலவே எனக்கு தோன்றுகின்றது..

    //அந்த பிரிவினை இந்திய மக்கள் சமூகத்தில் சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.//

    சிறு பான்மைக்கு நேரும் அவலம் தான். என்ன சில இடத்தில மொழி, இனம் அங்கு பாலினம்.

    ReplyDelete
    Replies
    1. அதான்யா உன்னைய தல ன்னு சொல்றோம் ...மிக எளிதா சொல்லிட்டே..கூடவே மொழி இனம் என்ற வார்த்தையில் உன்னோட பீலிங் புரியுதுய்யா ...

      Delete
  22. // 'தீபாவளி அன்று உண்டால் தான் அந்தத் தித்திப்புக்கள் இனிக்குமா என்ன?' //

    அதானே.....

    ஆண்ட்ராய்டும் கர்ப்பமும் மறைக்க முடியாது - சரி தான்....

    தேன் மிட்டாய் இனித்தது...

    ReplyDelete
  23. ஆன்டிராய்ட் அப்படித்தான் மறைக்க முடியாது...
    நல்ல பதிவு...

    ReplyDelete