Thursday, January 30, 2014

தேன் மிட்டாய் - ஜனவரி 2014

குழாய் குடிநீர் 

பள்ளி காலத்தில் எனக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. மற்றவர்களை போல் தண்ணீர் குடிக்க பாட்டில் எடுத்துக் கொண்டு செல்ல மாட்டேன். குடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி, கையில் தேங்கும் நீரை, மிருக  பாணியில் பருகுவது என் வழக்கம்.  அவ்வாறு நீர் குடிக்கும் பொழுது சொல்ல முடியாத ஒரு நிறைவு என் மனதிலும் வயிறிலும் தோன்றும். கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது நாகரீக நடிப்பில் இந்தப் பழக்கத்தை கைவிட வேண்டிய கட்டாயம் தோன்றி, நாளடைவில் நான் அதை அறவே மறந்துப்போனேன். 

சமீபத்தில் Phoenix மால் சென்ற பொழுது, தாகம் மிகுதியாலும் கொள்ளை விலையில் விற்கப் படும் பாட்டில் நீரை தவிர்க்கவும், குடிநீர் குறியீட்டை தேடி அலைந்து, கீழே உள்ள படத்தில் இருக்கும் இடத்தை அடைந்தேன். கீழ் இருக்கும் குமிழை அழுத்தினால், மேலே இருக்கும் குழாயில் இருந்து வரும் நீரை, வாய் வழியாக குடிக்கும் படி வடிவமைக்கப் பட்டிருந்ததைக் கண்டு வியந்தேன். நாகரீகத்தின் சின்னமாக பலர் எண்ணும் இத்தகைய மாலில், நான் மறந்த நீர் பருகும் பழக்கத்தை என் மனதில் உதிக்கச் செய்தது மட்டும் இல்லாமல் என் தகாம் அடங்கும் வரை நீரும் வழங்கிய இந்த நவீன குழாய் ஒரு விந்தை தான்.
              
அருவருப்பு ஏற்படுத்திய தொகுப்பாளர்கள் 

கல்லூரியில் இருந்தே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை விட்டிருந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சில சமயம் சில நிகழ்சிகளை பார்க்க நேரிட்டுவிடும். அப்படி ஒரு சமயம் இந்தப் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தொலைகாட்சி சேனல்களை மாற்றிக் கொண்டே சென்றபொழுது ஒரு தனியார் இசை சேனலில் நான் கண்ட காட்சி என்னை  திடுக்கிடச் செய்தது.

திரை முன் இரு பெண்கள் நேயர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல் ஒளிபரப்பும் நிகழ்ச்சி அது. இசை சேனலில் எல்லா நிகழ்சிகளும் அதே தான் என்பது வேறு விஷயம்.

அன்று பண்டிகை என்பதால் நிகழ்சியை தொகுப்பும் அந்தப்  பெண்கள் சேலை அணிந்திருந்ததை எண்ணி மனம் முதலில் குளிர்ந்தாளும். சற்று நேரத்தில் அந்தக் குளிர்ச்சி என் மனதில் அருவருப்பாக மாறியது. அவர்கள் மேல் பாதி உடம்பில் சேலை-ரவிக்கையும், கீழ் பாதி உடலில் ஜீன்ஸ் பாண்டும் அணிந்திருந்த அந்தக் கர்ண கொடூரத்தை நான் ஏன் பார்த்துத் தொலைத்தேன்?           

மினிமெல்ட் ஐஸ் கிரீம் 

இம்மாத புத்தகக் கண்காட்சி சென்றிருந்த பொழுது, கோவை ஆவி வெளியே இருந்த ஐஸ் கிரீம் வண்டியைக் கண்டவுடன் விரைந்து சென்றவர், அது அமெரிக்காவில் 'future ice cream' என்று அவர் உண்டதாகவும் சுவைக்க நன்றாக இருக்கும் என்றும் பரிந்துரை செய்தார். வழக்கமான ஐஸ் கிரீம் போல் இல்லாமல், அவை ஜெவ்வரிசி போன்ற சிறிய வடிவத்தில் இருந்தன. நாவில் வைத்தவுடன் அந்த சிறிய பந்துகள் விரைந்து உருகி சுவை அரும்புகளுக்கு புத்துணர்ச்சி தந்தன.    


போக்குவரத்து நெரிசல் 

சம்பவம் 1
இம்மாதம் ஒரு நாள் என் splendour இல் தியாகராய நகர் சென்று திரும்புகையில், கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் இருந்தது. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத வகையில் சாலையை வாகனங்கள் மறைத்துக்கொண்டிருந்தன. சற்றும் நகர முடியாததால்,வண்டி என்ஜினை அணைத்து விட்டு,வழி கிடைக்க காத்திருந்தேன். 

இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் வருவது இயல்பு தான், பெரும்பாலும் Pheonix  மாலில் இருந்து  வெளிவரும் வாகனங்களே இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் இரு சக்கர வாகனம் செல்ல ஒரு நாளும் இது போல் கடினப் பட்டது கிடையாது, எப்படியாவது சந்துகளில் நுழைந்து செல்லும் வழகத்திற்கு மாறாக இன்ற இந்த கடின நெரிசலுக்கான காரணம் என் என்று என் மனம் சிந்தனை செய்தது. இருபது நிமிட நேரத்திற்கு பின் இரு பேருந்துகளுக்கு இடையில் தோன்றிய இடைவெளியில் என் வாகனத்தை செலுத்தி முந்தத் தொடங்கினேன், அதன் பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டி செல்ல இடம் கிடைத்து முன்னேறினேன்.              

நெரிசலை கடந்த பொழுது தான் அதன் காரணத்தை அறிய முடிந்தது. ஒரு இரங்கல் ஊர்வலம். ஆடம்பரமாக ஜோடிக்கப்பட்ட பாடை, பல நூறு வெடிகள் என சாலையில் ஒரே அமர்க்களம் தான். இறந்தவரை சந்தோஷமாக இடுகாடு கொண்டு செல்வது அவசியம் என்றாலும், இப்படி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதை செய்வது நியாயமா?      

சம்பவம் 2
ஒரு வழியாக அந்த வெடிகளில் சிக்காமல் வேளச்சேரியை கடந்து, பள்ளிக்கரணை வழியாக தாம்பரம் நோக்கி செல்லத் தொடங்கினேன். பள்ளிக்கரணை எல்லை முடிந்து மேடவாக்கத்தை நெருங்க இருந்த இடத்திலல் மீண்டும் போக்குவரத்து தடைபட்டது.

முதல் சம்பவம் நடந்த சாலை எப்பொழுதும் பரபரப்பான சாலை , ஆனால் இந்த மேடவாக்கம் நோக்கி செல்லும் சாலையில் அவ்வளவு பரபரப்பு இருக்காது.போக்குவரத்து அதிகமானாலும் குறைவான வேகத்தில் வாகனங்கள் தடையின்றி செல்லும். அந்த நெரிசலில் வழி கண்டறிந்து முன்னேறி சென்ற பொழுது தான் காரணமும் இன்னதென்று புரிந்தது.

மின் விளக்குகள் ஜொலிக்கும் பல்லக்கின் பின்னால் நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். வேதங்களில் சொல்லப்படும் கடவுள் என்பவர் மக்களின் இன்னல்களை போக்கத்தான் வழி செய்வார் என்று தானே சொல்கிறது, ஆனால் இன்றோ கடவுள் பெயரால் ஏற்படும் இத்தகைய இன்னல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.   

http://vasagarkoodam.blogspot.com

அழியும்  பசுமை

அலுவலகம் சென்று வரும் தாம்பரம்-மேடவாக்கம் சாலை சென்னை மாநகரின் புறநகர் சாலை தானா என்று எனக்கு பலமுறை சந்தேகம் வந்ததுண்டு. காரணம்: இரு புறமும் வளர்ந்துள்ள புசுமையான மரங்கள் கதிரவன் சுட்டெரிக்கும் வேளையில் நிழலும்,சந்திரன் பிரகாசிக்கும் வேளையில் குளிர்ந்த காற்றும் வீசி சாலை பயணிகளுக்கு குதூகலத்தை தந்து வந்ததுதான். அந்த சாலையை தற்பொழுது நாலு வழிப் பாதையாக மாற்றும் வேலைகள் நடப்பதால், சாலையோரம் இருந்த அந்த மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன. இப்படியே சென்றால் நகர் புறங்களில் பசுமையை எங்குதான் காண்பது.    

கலங்கரை விளக்கம் 

என் கிராமத்தின் கடற்கரையின் அருகில் புதிதாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தில், பத்து ரூபாய் கட்டணத்துடன் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப் படுகின்றனர். சென்னை கலங்கரை விளக்கத்தின் அளவு உயரம் இல்லை என்றாலும் அதன் உச்சியில் நிற்கும் பொழுது, ஒரு புறம்: பறந்து விரிந்த வங்கக் கடலும், அதன் மேல் மீன் பிடிக் படகுகளும், மறுபுறம்: பசுமையான தென்னை மரங்களும் அவற்றில் இருந்து வீசும் காற்றும் அடங்கிய காட்சிகள் மனதைக் கொள்ளை கொண்டன.            


நாகரீக கொள்ளை

இப்பொழுது எல்லாம் இந்த மால்களுக்கு செல்ல சற்று பயமாகவே உள்ளது. என்னை கதிகலங்கச் செய்வது அங்கு வசூலிக்கப் படும் பார்க்கிங் கட்டணம் தான். இந்த பார்க்கிங் கட்டணங்களை குறித்து நான் எழுதிய முந்தைய பதிவான வசூல் மன்னர்களுடன் இப்பொழுது இணைய விரும்பும் புது உறுப்பினர் வேளச்சேரியில் தோன்றியுள்ள Phoenix மால். 

சீருந்துகளின் பார்க்கிங் கட்டணம்:
       


இரு சக்கர வாகனங்களின் பார்க்கிங் கட்டணம்: உங்களுடைய வாகனம் உள்ளே நுழையும் பொழுதே உங்களுக்கு ஒரு சீட்டில் நேரம் அச்சடித்து கொடுக்கப்படும். அதை வைத்துதான் உங்கள் உள்ளிருப்பு நேரம் கணக்கிடப்படும். ஒரு வேளை அந்த சீட்டை தொலைத்து விட்டால், சுளையாக 350 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். 
  
ஒரு கார் நிற்கும் இடத்தில ஆறு பைக்குகளை நிறுத்தலாமே. எல்லா இடங்களிலும் பைக் பார்க்கிங் கட்டணம் குறைவாக இருக்கும் பொழுது இங்கு மட்டும் கார் பார்க்கிங் கட்டணத்தை விட பைக் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பது  ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.   

10 comments:

 1. தண்ணீர் பருகும் முறை புதுமையான பழைமைதான் சரி, எல்லோரும் வாய் வைத்துக் குடிக்கும் இடத்தில் நாமும்....! சுகாதாரமா என்ன?

  ஆஹா... புத்தகக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு வந்து விட்டேனே... ஐஸ் க்ரீமைக் கவனிக்கவில்லையே...

  ReplyDelete
 2. அப்பா.. பீனிக்ஸ் மால் அராஜகம், தண்ணீர் தாகம், சம்பவங்கள், ஐஸ்க்ரீம் என பல சுவைகளை உள்ளடக்கி வந்தது இந்த தேன்மிட்டாய்..

  ReplyDelete
 3. Intha Thenmittaayil indru kaaram konjam jasthiyaaga irunthathu Ram !!

  ReplyDelete
 4. தண்ணீர் பருகும் முறை துபாய் ஏர்போர்டிலும் டில்லி ஏர்போர்டிலும் இருக்கிறது, எனக்கு அது சற்று அருவருப்பாகவே தோன்றியது, சிலர் அதில் வாய் வைத்து குடிக்கின்றனர்...!

  பல்சுவை விருந்து அருமை...!

  ReplyDelete
 5. மாலில் இருப்பது வியப்பு தான்... இருக்க வேண்டும் என்று நினைத்தவர் உங்களின் ரசனையோடு இருக்கலாம்...

  ஐஸ் கிரீமா அது...!

  வாசகர் கூடம், ஆதங்கங்கள் உட்பட மற்ற தேன்மிட்டாய் அருமை...

  ReplyDelete
 6. அந்த ஐஸ்கிரீமை மிஸ் செய்துட்டேன். எங்காச்சும் கிடைக்கும் தேடணும். தண்ணீர் பருகும் முறை எனக்கும் பிடிக்கலை.

  ReplyDelete
 7. குடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி, கையில் தேங்கும் நீரை, மிருக பாணியில் பருகுவது என் வழக்கம்.
  >>
  அதான் நம் முன்னோர்கள் பாணி. கிணற்றில், ஆற்றில், குளத்தில் நீர் பருகிய முறை.

  ReplyDelete
 8. இன்று தேன் மிட்டாய்களுக்கிடையில் பச்சைமிளகாய் சேர்ந்துட்டுதுப் போல! செம காரம்

  ReplyDelete
 9. These type of water fountains are in public places in US and School/colleges/work etc. But People will hold their mouth away from the pipe for hygienic reasons.It is nice to see similar setup in India.

  ReplyDelete
 10. சுவையான தேன்மிட்டாய்.

  வட இந்தியாவில் தண்ணீர் குப்பிகள் இருந்தாலும் கையில் விட்டு தான் குடிப்பார்கள்......

  ReplyDelete