Monday, February 17, 2014

திறந்தவெளி திரையரங்கம் (Prarthana Drive-in Cinemas)

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியில் செல்வேனா மாட்டேனா என்ற குழப்பம் இறுதிவரை இருந்தமையால் எவ்வித முன் ஏற்பாடுகளும் செய்திருக்கவில்லை. மதியம் நான்கு மணி போல் வெளியே போகலாம் என்று முடிவான பின்பு எங்கு செல்வது என்ற குழப்பம் எழுந்தது. காதலர் தினத்தன்று என் ஆசை நாயகி மார்ஜியானா(Honda- city) உடன் வெளியில் செல்வதுதானே நியாயம். இருவருக்கும் உகந்த இடம் தேடி அலைகையில் என் மூளையில் மின்னல் போல ஒளித்த இடம் தான் பிரார்த்தனா, கிழக்கு கடற்கரைக் சாலையில் அமைந்திருக்கும், சென்னையின் ஒரே ஒரு டிரைவ்-இன்  திரையரங்கம்.

கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் செய்வதற்காக பெங்களுரு சென்றிருந்த பொழுது, அங்கு DRDOவில் இருக்கும் ஒரு திறந்தவெளி திரையரங்கில் சினிமா பார்க்கும் அனுபவம் கிட்டியது. கீழ் இருந்து மேல் வரை சாய்வாக சிமெண்ட் பெஞ்சுகள் அமைக்கப்பட்ட கூரை இல்லாத திரையரங்கம் அது. ஒரு உள் விளையாட்டு அரங்கின் பின் சுவரில், வெள்ளை நிறம் தீட்டப் பட்டு, அதையே திரையாக உபயோகித்தனர். படம் சற்று சுமார் என்றாலும் எனக்கு அந்த அனுபவம் புதுமையாக இருந்தது. திரையருகில் பூரண சந்திரன் தோன்றியதும், எங்களுடன் நட்சத்திரங்களும் அந்தப் படத்தை பார்த்த காட்சியும்  இன்றும் என் மனதில் உற்சாகமூட்டுகிறது.

எனது முதல் திறந்தவெளி திரையரங்க அனுபவம் கிடைத்த பின் எனக்கு சென்னையில் இருக்கும் பிரார்த்தனா திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அந்த ஆசை காதலர் தினத்தில் என் மர்ஜியானாவுடன் பூர்த்தியடைய வேண்டும் என்றிருந்திருக்கிறது. மார்ஜியானாவை அழைத்துக்கொண்டு திரையரங்கை அடைகையில் மணி 5 45. அங்கு வாசல் பூட்டப் பட்டு இருக்க, வாசற்காவலன் ஆறு மணிக்கு தான் உள்ளே அனுமதிப்பதாக கூறினான்.அவனிடம் டிக்கெட் மட்டும் வாங்கிக்கொள்கிறேன் என்று கேட்ட பொழுது, ஏராளமான டிக்கெட் உள்ளது என்றும், பொறுமையாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் சொல்லி நகைத்தான். அந்தச் சிரிப்பின் அர்த்தம் பதிவின் முடிவில் தெரியவரும்.

காத்திருந்த அந்த நேரத்தில், என் கைபேசியில் இணையத்தில் டிக்கெட் இருக்கின்றதா என்று பார்க்க செல்லும் பொழுது தான் தெரிந்தது அங்கு திரையாகும் படம் 'இது கதிர்வேலன் காதல்' என்று. எனக்கு உதை (உதயநிதி ஸ்டாலினின் திரையுலக பெயராம்)  மீது  எள்ளவும் ஈர்ப்பு இல்லை என்றாலும், என் மார்ஜியானவை நான் ஏமாற்ற விரும்பாததால்,மனதை திடப் படுத்திக்கொண்டு காத்திருந்தேன். 

இங்கு பிரார்த்தனா, ஆராதனா என்று இரண்டு திரைகள் உண்டு. ஆராதனா வழக்கமான நான்கு காட்சிகள் கொண்ட இன்டோர் திரையரங்கம். பிரார்த்தனா திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்கம், இதுபோல் தமிழகத்தில் வேறு திரையரங்கம் உள்ளதா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை பதியவும்)  இங்கு நாள் ஒன்றிற்கு 7 மற்றும் 1௦ மணி என இரண்டு காட்சிகள் தான். இதன் காரணமும் எளிது, இருட்டிய பின்தான் படத்தை திரையிட முடியும்.

சரியாக ஆறு மணிக்கு வாசல் திறக்கப்பட்டது, சீருந்துகளுக்கு என்று இருந்த வரிசையில், மார்ஜியானாவுடன் மூன்றாவது ஆளாக காத்திருந்தேன். சுங்கச் சாவடி போல் இருந்த டிக்கெட் கவுன்டரை கடந்து, மற்றொரு வாசல் வழியே சென்றால் தான் திரையரங்கை அடையலாம். காரில் நபர் ஒருவருக்கு டிக்கெட் கட்டணம் 12௦ ரூபாய், காருக்கு கட்டணம் 5௦ ரூபாய். பல மால்கள் மற்றும் சில திரையரங்குகளில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான கட்டணமே. எனக்கு 120 மற்றும் மர்ஜியானவுக்கு5௦ ரூபாய் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொண்டு இரண்டாவது வாசலை கடந்தோம். 
             
அடுத்து இருந்த சோதனைச்சாவடியில் எங்கள் டிக்கெட்களை பரிசோதித்த பின்னர் உள்ளே அனுமதித்தனர். வெள்ளை நிற வண்ணம் பூசிய ஒரு பெரிய திரையின் முன்னே விசாலமான மைதானம் போல் இருந்தது அந்த டிரைவ்-இன் திரையரங்கம். A, B, C என மூன்று வரிசிகளுக்கு வழிகாட்ட, மூன்று பலகைகள் இருந்தன. C வரிசைக்கு பின்னே காரில் வராதவர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு என்று சுமார் நூறு  இருக்கைகள் இருந்தன. அங்கு அமர்ந்து பார்பதற்கு கட்டணம் 6௦ ரூபாய். 

மூன்று வரிசைகளையும் பிரிக்க தனித்தனியே,வளைவான 'ராம்ப்'கள் இருந்தன. இந்த ராம்ப்களை ஒரு ராட்சத வேகத்தடைகள் என்றே சொல்லலாம். நாவலூர் சுங்கச் சாவடி முன் இருக்கும் வேகத்தடையை விட சற்று உயரம் அதிகமாக இருந்தது. வரிசைகளை பிரிக்க இந்த ராம்ப்கள், அடுத்த வரிசைக்கு போகவேண்டும் என்றால் பின்னே வந்து தான் செல்ல வேண்டும்.7 மணி காட்சிக்கு 6 மணிக்கே வந்ததன் பயன், எந்த இடத்தை வேண்டுமானாலும் நாங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மார்ஜியானாவின் விருப்பம் போல், நடு வரிசையான B வரிசைக்குள் சென்று, அதன் நடுவில் திரைக்கு நேர் எதிரே நின்றோம். ராம்ப் மீது ஆங்காங்கே சிவப்பு வண்ணம் தொப்பியுடன் மூன்று அடி உயர கம்பங்கள் இருந்தன. இரண்டு கம்பங்களுக்கு இடையில் இரண்டு கார்கள் நிறுத்த வேண்டும். எங்கள் கம்பத்தின் அருகில், மார்ஜியானாவின் முன்னங்கால் (front wheel) ராம்ப் மேல் பொருந்த நின்றோம். அடுத்த அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கார்கள் உள்ளே வரத் தொடங்கின.    
           

காதலர் தினம் என்பதால் அதிகம் ஜோடிகளே இருப்பார்கள் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றம் தான். குட்டி குழந்தைகள் மற்றும் வயோதிகர்களுடன் குடும்பங்களே பெரும்பாலும் காணப்பட்டன. முன் வரிசையில் இருந்த காரின் டிக்கி திறந்தது, அதன் உள்ளிருந்து இரு வெள்ளை நாற்காலிகள் வெளியே எடுக்கப்பட்டன. காரின் முன், 'ராம்ப்'பின் கீழே அதைப் போட்டுக்கொண்டு அமர்ந்தனர். இதையே ஆச்சரியமாக பார்த்த எனக்கு, என் பக்கத்து காரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட பாய் வியப்பை கூட்டியது.     

ராம்ப் முன் தரையில் அந்த பாயை விரித்து, அதன் மேல் ஜமக்காளம் விரித்து, தலையனைகளுடன் தரையில் படுத்துக்கொண்டே படம் பார்க்க தயாரானார்கள்.மார்ஜியானாவிடம் நாற்காலியும், ஜமக்காளமும் இல்லாததால், அவள் மடியிலையே (front seat) அமர்ந்துகொண்டு படத்தை ரசிக்கத் தயாரானேன். சரியாக 7 மணிக்கு கதிரவன் முழுவதும் மறைந்து இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையில், 'இது கதிர்வேலனின் காதல்' துவங்கியது.

ஒளிக்கு வெள்ளை நிற சுவர். ஒலிக்கு என்ன என்று நீங்கள் கேட்கவே இல்லையே. முன்பு சொன்னேனே மூன்று அடி உயர கம்பங்கள், அவற்றின் உச்சியில் தான் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு காருக்கும் ஒரு ஸ்பீக்கர் என்று கச்சிதமாக ஒலியில் எந்தக் குறையும் இல்லை. நயன்தாராவை என்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்த சமயம், 'டோக் டோக்' என்ற சத்தம் என் கவனத்தை கவர்ந்தது.


அருகில் ஒருவர் நின்றுகொண்டு, 'பூட் ஆர்டர்' என்று, மெனுவை வேகமாக பட்டியலிட்டார். எனக்கு ரயில் பயணங்கள் தான் நினைவுக்கு வந்தது. சில்லி பரோட்டா மற்றும் கோபி மஞ்சுரியன் ஆர்டர் செய்தேன். சொல்லியதுபோல் சரியாக இடைவேளைக்கு முன் சூடான உணவு கொடுக்கப்பட்டது. இங்கு சாப்பாட்டு ராமன் அவதாரம் எடுக்கும் அளவிற்கு உணவு அருமை என்று சொல்லமுடியாவிட்டாலும், பசிக்கு சுமாராக இருந்தது. வீட்டில் இருந்து உணவு கொண்டுவருவது உசிதம். 

நயன்தாராவை தவிர்த்து படத்தில் என்னை எதுவும் பெரிதும் கவரவில்லை. பலருக்கும் அந்த எண்ணமே என்பது படம் முடியும் முன் வெளியேறிய கார்களின் மூலம் நன்கு தெரிந்தது.தனிமையில் மார்ஜியானாவின் அரவணைப்பில் திறந்தவெளி திரையில் படம் பார்த்த அனுபவம் தந்த ஆனந்தத்தை சொல்ல வார்த்தை இல்லை.அடுத்த முறை பாயுடன் வரவேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.                         

9 comments:

 1. புதிய அனுபவம்தான். தஞ்சை ஹவுசிங் யூனிட், மற்றும் மதுரையில் ரேஸ் கோர்ஸ் காலனி மற்றும் ரிசர்வ் லைன் குடியிருப்புகளில் பெரிய திறந்தவெளியில் படம் போடுவார்கள். அங்கு மணலில் படுத்து நிலவொளியில் படம் பார்த்த அனுபவம் உண்டு!

  ReplyDelete
 2. இருமுறை சென்றதுண்டு... தரையில் படுத்துக்கொண்டே படம் பார்ப்பது தனி சுகம் தான்...

  ReplyDelete
 3. பிரார்த்தனா இன்னும் போனதில்லை.. போகத் தூண்டும்படி இருந்தது உங்கள் விவரிப்பு..

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய அடுத்த சென்னை விஜயத்தில் சென்று விடுவோம் ஆவி பாஸ்...

   Delete
 4. வணக்கம் ரூபக்...

  எங்கள் கிராமத்தில் இது போல தியேட்டர் இருக்கிறது. பட் கார் உள்ளே போகாது. சிமெண்ட் சீட்டில் போட்டு இருப்பார்கள். எங்கள் ஊரிற்கு பக்கத்தில் இன்னொரு ஊரிலும் இந்த திறந்தவெளி தியேட்டர்கள் உள்ளன... விரைவில் சந்திப்போம் அதற்கான பதிவோடு...

  ReplyDelete
 5. அந்த காலத்து டூரிங் கொட்டாய்ன்னு சொல்லுங்க. என்ன அந்த காலத்துல கார் இல்ல. அது ஒண்ணுதான் மைனஸ்

  ReplyDelete
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் :ராஜி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

  வலைச்சர தள இணைப்பு : பொறந்த வீட்டுப் புராணம்

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு.... Drive in Cinema.... புதியதாக இருக்கிறது. தில்லியில் இருப்பதாய் தெரியவில்லை.

  ReplyDelete