Friday, March 27, 2015

தேன் மிட்டாய் - மார்ச் 2015

விளம்பரப் பலகைகள் 
மார்ச் மாதம் சில பரபலங்களின் அவதாரத் திருநாள் கொண்டாட்டங்களால் சென்னையின் சிங்காரம், பல அரசியல் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகளால் மெருகேறியிருந்தது. முக்கிய சாலைகளில் தொடங்கி, அந்தத் தெருவில் வசிக்கும் மக்கள் தவிர்த்து மற்றவர்கள் செல்லாத முட்டுச் சந்துகள் வரை விளம்பரப் பலகைகள் நிரம்பி வழிந்தன. தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டி மக்கள் முன்னேற்றத்தில் அன்றி விளம்பரப் பலகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவில் காணப்பட்டது. சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் சுமார் இருநூறு மீட்டர் தூரத்திற்கு நீண்ட விளம்பரப் பலகை ஒன்று என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.  இவற்றை அகற்ற டிராபிக் ராமசாமி என்று ஒரு முதியவர் போராடி, சிறை சென்று திரும்பியது எத்தனை பேருக்கு தெரியும் ? 

இலவசப் பயணம் 

ஒரு சனிக்கிழமை, அலுவலகம் முடித்து விட்டு, என் கிராமத்திற்குச்  செல்ல, அலுவலக வாசலில் பேருந்து வரக் காத்திருந்தேன். பங்குனி வெய்யிலில் இனி தாங்காது என்று, இரு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்க தொடங்கினேன். யமஹா fz இல், ஆஜானுபாகமான உடலுடன் ஒருத்தன் என் விண்ணப்ப சைகைக்கு இசைந்து வண்டியை நிறுத்த நானும் அவன் வண்டியில் ஏறிக் கொண்டேன். OMR  சாலையை அடைந்தவுடன் நான் செல்லுமிடம் சோழிங்கநல்லூர் என்று அறிந்தவுடன் அங்கேயே என்னை விடுவதாக அவன் கூற, பேருந்தை முந்தி விரைவாக சென்று விடலாம் என்று நானும் அவனுடனே பயணித்தேன். 

ஐந்து நிமிட பயணத்திற்கு பின் அவன் கைபேசி ஒலிக்க, தன் இடக் கையால் அதை எடுத்து பேச முயன்றான். சரியாக கேட்காததால் அழைப்பை துண்டித்தான். மீண்டும் ஒலிக்க, இடக்கையில் கைபேசியை காதின் மேல் சாய்த்துக் கொண்டு, ஒற்றைக் கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே பேசினான். சீருந்தில் ஓட்டுனர்  கைபேசி  பயன்படுத்தினாலே ஆபத்து, இவனோ இரு சக்கர வண்டியில் ஒற்றைக் கையில் மிகவும் சாதரணமாக கைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை செலுத்த என்னுள் திகில் கிளம்பியது. 'வண்டியை நிறுத்தி விட்டு பேசுங்க'  என்று நான் சொல்லிய பொழுது அவன் யானைக் கண்கள் வீசிய அனல் பார்வை அவன் தோற்றத்தை மேலும் கொடூரமாக்கியது. சோழிங்கநல்லூர் வந்தவுடன் வேகமாக இறங்கி சாலையைக் கடந்து ECR  நோக்கி நடந்தேன், இல்லை ஓடினேன் என்றே சொல்லலாம்.        

   
மகளிர் மட்டும் 

ஐந்து நிமிடம் தான் ECR சாலையில் காத்திருந்தேன் என்றாலும், சோழிங்கநல்லூர் சந்திப்பில் அக்கரைபேருந்து நிறுத்தத்தில் நிழழ்குடை இல்லாததாலும் நிழல் தர ஒரு மரமும் இல்லாததாலும், சில வினாடிகளில் சூரியக் கதிர்கள் என் உடலில் ஊடுருவி என்னை வியர்வையில் குளிக்கச் செய்தன. பேருந்து வந்தவுடன் அடித்து பிடித்து முதல் ஆளாக ஏறி, கண்ணில் முதலில் பட்ட ஒரு காலி இருக்கையை நோக்கிச் சென்று, என் மூட்டை முடிச்சிகளை மேலே வைத்து விட்டு அந்த இடத்தில அமர ஆயத்தமானேன். அந்த காலி இருக்கை சாளரத்தின் அருகில் இருக்கவே, அதற்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியை சற்று நகர்ந்து வழி விடச் சொன்னேன். ஆனால் அவரோ, சிறிதும் அசையாமல்  'லேடீஸ் வராங்க அவங்க ஒட்காருவாங்க' என்றார் . கோபம் என் தலைக்கேறி 'இங்க லேடீஸ் சீட்னு எங்கயும் எழுதி இல்லையே' என்று கடிந்தேன். சற்றும் தன் நிலையில் இருந்து மாறாமல் 'லேடீஸ் இருந்தா லேடீஸ் தான் பக்கத்துல உட்காருவாங்க' என்றார். சூரியக் கதிர்களின் உஷ்னத்தை விட பல மடங்கு எனக்குள் கோப ஜுவாலை எரிந்தாலும், சண்டைப் பிடித்து அந்தப் பெண் அருகில் அமர்ந்து எனது பயணத்தை சங்கடத்துடன் தொடர உடன்பாடு இன்றி, அமைதியாக பின்னே வந்த பெண்மணிக்கு வழி விட்டு நகர்ந்தேன். இந்த சம்பாஷனைகள் நடந்து முடிவதற்குள் மீதம் இருந்த காலி இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்துவிட, டிக்கெட் கொடுக்கும் பொழுது நடத்துனர் என்னிடம் மாமல்லபுரத்தில் இடம் காலியாகும் என்று ஆறுதல் அளித்தார். 

அந்த பெண்மணியின் வயது எப்படியும் அறுபதிற்கு அருகில் இருக்கும். அவரது பெயரன் போல் இருக்கும் என்னை அவர் அருகில் அமர விடாமல் தடுத்தது எது. பெண்களுக்கே உண்டான பண்புகளா அல்லது இந்த சமுதாயமா? இந்த ஒன்று மட்டும் எப்பொழுதும் எனக்கு விளங்குவது இல்லை. மாநகரப் பேருந்தில் பெண்கள் எந்த இருக்கையில் அமர்ந்தாலும் அமைதியாகப் போகும் ஆண்கள் ஒரு புறம் இருக்க. பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடது புற வரிசையில் எப்பொழுதும் பெண்களே அமர்ந்தாலும், பேருந்தின் பின் புறம் இருக்கும்  ஒற்றை வரிசையில் ஒரு ஆண் மகன் உட்கார்ந்தாலே சண்டை பிடிக்கும் சில பெண்களும் உண்டு. அப்படி அவர்கள் சண்டை பிடிக்கும் அதே நேரத்தில் ஆண்கள் வரிசையில் சில பெண்களும் அமர்ந்திருப்பதை ஒரு பொருட்டாக மதியாதது தான் விந்தையிலும் விந்தை. அதை என்றுமே எந்த ஆணும் சட்டை செய்வதில்லை. ஆண்கள் இந்த விஷயத்தில் நிச்சயம் தியாகச் செம்மல்கள் தான்.      

பொதுக்கூட்டம் 

கிராமத்திற்கு போகும்போது தான் இப்படி ஒரு கசப்பான அனுபவம் என்றால், சென்னை திரும்புகையில் அதுக்கும் மேல் ஒரு அனுபவம் கிடைத்தது. பொதுவாக, சோழிங்கநல்லூர் ECR இல் இறங்கி, பழைய எண் 'C 51'/ புதிய எண் '99'  கொண்ட வழித்தடப் பேருந்தில் பயணம் செய்தால் நாற்பது நிமிடங்களில் தாம்பரம் சென்றடையலாம். க்ளோபல் ஹாஸ்பிடல் வரை தடையின்றி வந்தப் பேருந்து அதன் பின் ஆமை வேகத்தில் சாலையில் ஊரத் தொடங்கியது. எந்த நேரத்திலும் போக்குவரத்து பெரிதும் தடைப்படாமல், வாகனங்கள் ஒரே சீராக செல்லும் இந்தச் சாலையில், இந்த எதிர்பாரத நெரிசலின் காரணம், மேடவாக்கத்தில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு அரசியல் கூட்டம் என்ற செய்தி காற்றில் வேகமாக பரவியது. பத்து நிமிடங்களில் கடக்க வேண்டிய மேடவாக்கத்தை கடக்க அன்று எழுபத்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகின. பேருந்தில் அமர இடமும் இன்றி, ஜன சமுத்திரத்தில் பலரின் வியர்வையில் முக்க, அது ஒரு துக்க அனுபவமாகவே மாறியது. அந்த அரசியல் கட்சியின் மீது இங்கு எழுத முடியாத பல தகாத வார்த்தை அம்புகளை எய்தும் என் கோபம் தணியவில்லை. 




பேருந்து சாலையில் அந்தப் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தை கடந்த பொழுது, அந்த மேடையில் ஏறி 'கூட்டம் போட பல காலி இடங்கள் இருக்க, இப்படி நடு ரோட்ல....' என்று அவர்கள் சட்டையை பிடித்து பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அப்படி கேட்டால் ஏற்படும் பின் விளைவுகளை உன்னால் சம்மாளிக்க முடியுமா  என்று என் மூளை என்னைக் கேட்க, ஆத்திரத்தை அடிமைத் தனம் வென்றது. பணம் கொடுத்து கூட்டம் கூட்டி பேசினாலும், அன்று அந்த போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் மட்டும் தான் சம்பாதித்தோம் என்பதை அந்தக் கட்சி உணருவதெப்போது?                 

7 comments:

  1. அடிமைத்தனத்தால்தான் இன்னும் அப்படியே இருக்கிறோம்...

    ReplyDelete
  2. கோபத்தில் கூட தியாகச் செம்மல் ஆக வேண்டும்...! வேற வழி...?

    ReplyDelete
  3. துணிவு இருந்தாலும் பணிவோடுதான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது பல சமயங்களில்!

    ReplyDelete
  4. துணிவு இருந்தாலும் பணிவோடுதான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது பல சமயங்களில்!

    ReplyDelete
  5. வெறுப்பேற்றும் அரசியல்கட்சிகள்.

    ReplyDelete
  6. வெறுப்பேற்றும் அரசியல்கட்சிகள்.

    ReplyDelete
  7. வணக்கம்...

    வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தாங்கள் விழாவிற்கு வர முடியா விட்டாலும், தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் வழங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete