பல நாட்களுக்கு முன், 'சென்னையில் செய்ய வேண்டிய நூறு விஷயங்கள்' என்று இணைப்பில் வந்த ஒரு பட்டியல், நான் செய்த பலவற்றின் நினைவுகளைத் தூண்டினாலும், செய்யாத சில வற்றின் மீது என் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பட்டியலில் நான் செய்யாதவற்றில் ஒன்றான, பெசன்ட் நகரில் இருக்கும் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் சூரியோதயத்தை ரசிப்பது. இந்த எண்ணம் பல நாட்களாக ஆழ் மனதில் பதிந்துகிடக்க, மிக சமீபத்தில் அரங்கேறியது.
ஒரு நாள் நடுநிசியில் அலுவல் முடிந்து வீடு திரும்பும் பொழுது, மறுநாள் விடியல் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் என்ற தீர்மானத்துடன் நித்ரா தேவியை அடைந்தேன். வேலை நேர ஒழுங்கற்ற IT துறையில், தாமதமாக படுத்து அதிகாலையில் எழும் பழக்கம் இருக்கவே, அடுத்த நாள் ஐந்து மணிக்கெல்லாம் என் ஸ்ப்ளென்டரில் பெசன்ட் நகர் நோக்கிய பயணத்தை தொடங்கினேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் நண்பன், கன்யா குமரியில் நடுக்கடலில் இருந்து சூரியன் உதிக்கும் இயற்கையின் விந்தையைக் காண ஆவலுடன் அழைத்துச் சென்றதும், மேகக் கூட்டங்கள் வில்லன் போல் வந்து, நடுவானம் வரும் வரை சூரியனை மறைத்து வைத்து எங்களுடன் விளையாடிய கண்ணாம் பூச்சி ஆட்டத்தின் நினைவுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே, பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையை அடைந்தேன்.
கடற்கரை மணலை அடைந்தும், மேலும் செல்லுமாறு கூகுள் அம்மணி வழி காட்ட, அங்கு மணல் தவிர சாலை ஏதும் கண்ணில் படாததால், அருகில் தன் வழக்கமான அதிகாலை நடை பயிற்சிகளை மேற்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடையவரை வழி கேட்டேன். அவர் என்னை அழைத்துக்கொண்டு கூகுள் அம்மணி காட்டிய வழியை நோக்கி நடக்க, 'இவரும் என்னுடன் வருவாரோ?' என்ற எனது சந்தேகம் அடுத்த வினாடி அவர் செல்லும் பாதையை சுட்டி காட்டி விட்டு, தன் நடை பயிற்சியை தொடர திரும்பிய பொழுது தீர்ந்தது. மேலும் அங்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் தன் பெயரை சொல்லும்படி கூறிவிட்டு, பெருமிதத்துடன் விடைபெற்றார். 'என்ன பிரச்சனை வந்து விடும்' என்று எண்ணிக் கொண்டே அவர் சொல்லிய அந்தப் பாதையை தொடர்ந்தேன். தெருவிளக்குகள் இல்லாத ஒரு மணல் சாலையில் எனது ஸ்ப்ளென்டரின் மங்கிய ஒளி வழிகாட்ட, சாலையின் நடுவே கடலை நோக்கி ஓடிய கழிவு நீர் கால்வாய்களை பற்றி அந்த வழி காட்டியவர் எச்சரித்தால், கழிவு நீர் மேலே அடிக்காமல் நிதானமாக வண்டியை செலுத்திக்கொண்டு இலக்கை நோக்கிச் சென்றேன்.
அந்த கும் இருட்டில் இரு புறமும் புதர்கள் இருக்க, எதிரே ஒரு சின்ன கான்க்ரீட் பாலம் தென்பட, நான் வண்டியை நிறுத்தவும் கூகுள் அம்மணி 'You have reached your destination' என்று உறைக்கவும் சரியாக இருந்தது. வண்டியை பூட்டி விட்டு, மணலில் இருந்து இரண்டு அடி மேலே இருந்த அந்த பாலத்தில் ஏறி நடக்கத் தொடங்கினேன். மை இருட்டு நிலவிய அந்த அதிகாலை வேளையில், என்னைத் தவிர வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதது, எனக்குள் கிலியை கிளப்பினாலும், மன உறுதியுடன் நடந்தேன். இரண்டு நிமிட நடையில் அந்த பாலம் உடைந்து கிடந்த இடத்தை அடைந்தேன். இயற்கையாகவே, சில நிமிடங்கள் இருட்டில் இருந்தால் பார்க்கும் சக்தி பெரும் மனிதக் கண்களுக்கு, அங்கு இருந்த நிலவொளியும் உதவ, அடுத்த முனைக்கும் இந்த முனைக்கும் இடையில் தண்ணீர் ஓடுவதை காண முடிந்தது. அப்பொழுது மணி 5 35. அருகில் இருந்த அடுக்கு மாடிகளின் பிம்பத்தை சந்திரன் அடையாறு நதியில் பிரதிபலித்த அந்த அற்புதக் காட்சியை அந்த வீடுகளில் உறங்கிக் கொண்டிருப்பவர் அறிவரோ?
நேரம் கடந்தபோதும் சூரியன் உதயமாவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாததால், அன்று கதிரவன் உதயமாகும் நேரத்தை கைபேசியில் இணையத்தின் உதவியுடன் ஆராய்ந்த சமயம் இந்த ப்ரோக்கன் ப்ரிட்ஜின் வரலாற்றையும் ஆராயத் தொடங்கினேன். அச்சமயம் எனக்கு கிடைத்த சில தகவல்கள் தனிமையில் இருளில் இருந்த எனக்கு மேலும் பீதியை கிளப்பியது. 1960களில், எலியட்ஸ் கடற்கரை முதல் சாந்தோம் வரை செல்லும் மீனவர்கள் போக்குவரத்திற்கு அனுகூலமாக, அடையாறு முகத்துவாரத்தின் மேல் கட்டப்பட்ட இந்த பாலத்தின் ஒரு பகுதி 1977 இல் அடையாறு நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சேதமடைந்து, பழுது பார்க்கப்படமால் போகவே இந்த 'ப்ரோக்கன் பிரிட்ஜ்' உருவானது. காலப்போக்கில், ஆதவனின் பார்வை இருக்கும் போதும் சினிமா படம் பிடிக்கும் இடமாகவும், அவன் பார்வை மறைந்த பின் பல சட்டத்துக்குமாறான செயல்களின் மையமாகவும் செயல்படுவதான தகவல்கள் இருந்தன. வழிகாட்டியின் எச்சரிக்கைக்கான காரணம் விளங்கும் வேளையில், அந்த இடத்தில அமானுஷ்ய சக்திகள் இயங்குவாதாக அந்த வட்டார மக்கள் சொல்வதுண்டு என்ற செய்தி என்னுள் திகில் உண்டாக்க, இப்படிப்பட்ட இடத்தில் எனது ஸ்பளென்டர் நிறுத்திய இடத்தில் இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுந்தது.
ப்ரோக்கன் பிரிட்ஜ் |
பாலம் உடைந்த இடத்தில இருந்த நான், பாலத்தின் தொடக்கத்தை நோக்கி அந்த இருளில் விரைந்தேன். பாலத்தை நோக்கி வந்த ஒரு இருசக்கர வண்டி, சட்டென்று கடற்கரை பக்கம் திரும்ப எனது பயம் அதிகரித்தது. சந்திர ஒளியில் என் வண்டியின் கண்ணாடி மின்ன நிம்மதிப் பெருமூச்சு விட்டு, இவ்வளவு தூரம் வந்ததிற்கு சூரியோதயம் காணமல் திரும்புவதில்லை என்று மனதை உறுதி படுத்திக்கொண்டு, வண்டி என் கண்பார்வையில் இருக்கும் இடத்தில பாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு கிழக்கு வானத்தை நோக்கினேன்.
சூரியன் முழுமையாக உதயமான பின்பு, அடையாறு வங்கக் கடலில் சங்கமமாகும் இடத்தில தான் அந்த பாலம் உடைந்திருப்பதை கண்டேன். ஆற்றின் நீர் கடலில் சென்று கலக்கும் பொழுதும், கடல் நீர் தன் எல்லையத் தாண்டாமல் நிற்பது இயற்கையின் விந்தை தான். ஒரு புறம் வேகமாக ஓடி வரும் அடையாறு நீர், மறு புறம் அலைகளுடன் சீறிக் கொண்டிருக்கும் வங்கக் கடல் நீர், இவை இரண்டும் சங்கமமாகும் இடத்தில நிலவும் ஒரு வகை அமைதி. இவற்றைக் கண்டவுடன், பாலத்தின் நுனியில் இருந்து அருகில் இருந்த மணற்பரப்பின் மேல் தாவி குதித்து, கடற்கரையை நோக்கிச் சென்றேன். அங்கு எனக்கு கிடைத்த பேரமைதியை ரசித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கு நடைப் பயிற்சி செய்து கொண்டு வந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் 'தம்பி இந்த இடத்துல தனியா எல்லாம் இருக்கக் கூடாது. ஆள் நடமாட்டம் இருக்கற இடத்துக்கு போய்டு' என்று அதிகாரம் கலந்த அக்கறையுடன் கூறினார். மை இருட்டில் அந்தப் பாலத்தின் மேல் தனியாக நான் அமர்ந்திருந்ததை பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோ என்று என் மனதினுள் நினைக்க, இதழில் தோன்றிய புன்முறுவலுடன் அந்த இடத்தை விட்டு நகர தொடங்கினேன்.
முதலில் இருளாக இருந்த வானில், ஒரு கருப்பு அட்டையின் நுனியில் காவியை சிறு கோடுகளாக தடவியது போல், கதிரவனின் கதிர்கள் மெல்ல படறத் தொடங்கின. நேரம் செல்லச் செல்ல என்னைச் சுற்றி நல்ல வெளிச்சம் தோண்றியபொழுதும், வானில் செந்நிறக் கதிர்களை அன்றி கதிரவனை காண முடியவில்லை. கன்னியாகுமரியில் நடந்த ஏமாற்றம் இங்கும் ஏற்படுமோ என்று நான் நம்பிக்கை இழக்கும் தருவாயில், அசத்தலாக திரையில் முதல் காட்சியில் தோன்றும் ஒரு மாஸ் நாயகன் போல, கடல் நீர் பரப்புக்கு அருகில் தோன்றிய ஒரு மேக கூட்டத்தைப் பிளந்து கொண்டு எழுந்த ஆதவன் தன் மென்மையான காலைக் கதிர்களை வீசி, நீல நிறக் கடல் நீரை செந்நிறமாக காட்சியளிக்கச் செய்தான்.
கடற்கரையை விட்டு விலகும் முன், அந்த உடைந்த பாலத்தை ஒரு முறை பார்த்தேன். ஏழு எட்டு பேர் கொண்ட ஒரு இளைஞர் பட்டாளம், சூரியோதயத்துடன் தமது காலை டாஸ்மாக் பஜனையையும் தொடங்கியிருந்தனர். பெண்களோ அல்லது தனியாகவோ செல்ல முடியாத இந்த இடத்தில, வாழ்க்கையில் கிடைக்கும் மாபெரும் சந்தோஷங்கள் அனைத்தும் இலவசம் தான் என்பதை செயற்கையாக தோன்றியுள்ள இந்த இயற்கை உணர்த்தியது.
கடற்கரையில் இருந்து தெரியும் பாலத்தின் காட்சி |
Tweet | ||
அப்பாடா...! ஓர் ஆசை நிறைவேறி விட்டது - சிறிது திகிலுடன்...
ReplyDeleteஆகா
ReplyDeleteஅருமை
அருமை
தம +1
என்ன ஒரு அனுபவம்! உள்ளூரில் இப்படி ஒரு இடமா? அமானுஷ்யம் என்பதே மனிதத்தன்மை இல்லாத செயல்கள் நடக்கும் இடமாய் இருக்கும் போல!
ReplyDelete