Monday, November 11, 2013

நித்ரா - 4.ஒப்பந்தம்


நம்பிக்கை இழந்த பாஸ்கர் , வேலைக்காரன் கொடுத்த காபியை  சோகத்துடன் குடிக்க முயலும் பொழுது, 'மீண்டும் மீண்டும் என்னை வந்து தீண்டும் மன்மதனே' என்று சில்க் ஸ்மிதா அவன் கைபேசியில் பாட, 'புதிய எண்  யாராக இருக்கும்' என்று காதில் வைத்து ' ஹலோ யாரு' என்று இவன் சொல்ல, மறுமுனையில் சில நிமிட மௌனத்திற்குப் பின், ஒரு பெண் குரல் அவள் பெயரை சொல்லியது.

'நித்ரா'.

இனி 

நித்ரா  தன்னை சந்தித்து பேச வேண்டும் என்று சொல்லியவுடன் துள்ளி குதித்து, அண்ணா நகர் நோக்கிப்  புறப்பட்டான் பாஸ்கர். நித்ரா முகப்பேரில் இருக்கும் காபி டேயில் பாஸ்கர் வர காத்திருந்தாள். பாசி பச்சை நிறத்தில் ஒரு மேலாடை அணிந்திருந்த நித்ரா, பாஸ்கரை கண்டவுடன் மெல்லிய புன்னகை செய்தாள் . அந்தப் புன்னகை அவளின் அனைத்து சத்தையும் உறிஞ்சது போல் அவள் முகம் சோர்ந்திருந்தது. 

Image Courtesy  - Google

அவள் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்த பாஸ்கர் அவளை உன்னிப்பாக கவனித்தான் . வகுடு இன்றி சற்றே பின் தள்ளி சீவப்பட்ட குதிரைவால் கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், கம்மல் இன்றி காலியாக இருந்த காது ஓட்டைகள் அவள் மேல் ஒரு சோக வலையை வீசிக்கொண்டிருக்க. ஒரு அழகிய பெண்ணிற்குரிய அனைத்து இலக்கணங்களும் அவளிடம் இருந்ததும் மகிழ்ச்சி இல்லாததால் அவள் அழகு வெளிப்படவில்லை. 

அவள் கண்கள் அவனை நேராக பார்கவில்லை, அவள் கைபேசியையே பார்த்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள். இவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை, 'வர சொல்லிட்டு பேசாம இருக்கிங்க. உங்களுக்கு நான் என்ன செய்யனும் ?' என்று பாஸ்கர் உடைத்தான் .


ஏதோ ஒன்று சொல்ல அவள் மெல்லிய உதடுகள் அசைந்து, ஒரு வித தயக்கத்தில் மீண்டும் மூடிக் கொண்டன . 'நித்ரா, நான் இப்பதான் உங்க ப்ரண்ட் ஸ்வேதாவ பார்த்துட்டு வர்றேன். உங்க வாழ்க்கைல நடந்தது ஒரு அளவுக்கு எனக்கு தெரியும். நீங்க தயங்காம நேரா விஷயத்துக்கு வரலாம் ' என்று கூறி அவன் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.

'மிஸ்டர் பாஸ்கர்.உங்க கார்ட பார்த்துட்டுதான் நான் உங்கள வரச்சொன்னேன். உங்களால எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ?' என்று எதிரில்   இருப்பவர் மறுக்காமல் சம்மதிக்கும் தொனியில் கேட்டாள். அந்தத் தொனியில் கேட்டால், நூறு ரூபாய்க்கு சில்லரை தர முகம் சுளிக்கும் நடத்துனர் கூட, ஐநூறு ரூபாய்க்கு புன்னகையுடன் சில்லரை தருவார், பாவம் பாஸ்கரால் எப்படி மறுக்க முடியும் .

'நித்ரா உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ நான் தயார். நேராக விசயத்துக்கு வாங்க ' என்று அழுத்தமாக பேசினான். 

'எனக்கு வந்த நோயால், என் உடம்புக்கு வந்த வேதனையை விட, மனதுக்கு வந்த வலி தான் அதிகம். நான் சாகரத பத்தி கவல படல. சொல்லப் போனா சீக்கரம் சாகனும்னு தான் எனக்கு தோணுது ' அவளை குறிக்கிட வந்த பாஸ்கர் அவள் கை சைகையைக் கண்டு அமைதியாக, நித்ரா மேலும் தொடர்ந்தாள் 'சாகும் போது முழு கௌரவத்தோட சாகனும்னு ஆசைப் படறேன். அதுக்கு நீங்கதான் எனக்கு உதவி செய்யனும். உடல் உறவு மட்டும் தான் இந்த நோய்க்கு காரணம் இல்ல அப்படின்னு என்ன சுத்தி இருக்கறவங்களுக்கு நான் நிரூபிக்கணம். உங்களால என் நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியுமா?' என்று மீண்டும் அதே மனோகரமான தொனியில் கேட்டாள். 

'என்னால உங்களுக்கு நிச்சயம் உதவ முடியும். ஆனா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும். எங்க instituteல நான் செய்த researchல, ஒரு கொரங்குக்கு இருந்த AIDS நோய குணப்படுத்த முடிஞ்சது. இத மனிதர்கள் கிட்டயும் செயல்படுத்தி வெற்றி கிடைக்கனும், அப்பறம்தான் அரசாங்கம் உதவியோட பொது மக்கள் கிட்ட கொண்டு போக முடியும். எனக்கு அதுக்காக ஒரு AIDS  நோயாளி தேவ? நீங்க இந்த டெஸ்ட்கு சம்மதிச்சா நான் உங்களுக்கு உதவறேன். என்னோட முறையால உங்க நோய் குணமாக 99.99% வாய்ப்பு  இருக்கு. என்ன சொல்றிங்க?' என்று அவன் சொல்லி முடிக்கும் பொழுது அவள் முகத்தில் குழப்ப நிலை தெளிவாக தெரிந்தது . 

'கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ ' என்று பாஸ்கர் சிந்திக்கத் தொடங்க , 'Done. என் கேள்விக்கு பதில் கிடைத்த உடனே, நான் உங்க researchக்கு உதவறேன்' என்று சொன்னபோதும் அவள் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தென்படவில்லை.  

பாஸ்கர் 'இப்பவே என் வேலைய ஆரம்பிக்கறேன். நான் உங்க கிட்ட சில கேள்விகள் கேட்பேன்,நீங்க நல்லா யோசிச்சு பதில் சொல்லணும்.'  தன் காபி கப்பை பார்த்துக் கொண்டே, 'எந்த விதத்திலயாவது யாருடனாவது ஏதேனும் ஒரு வகையில உங்கத் திருமணத்திற்கு பின் உடல் உறவு கொண்டிருக்கிங்களா? ' என்று தயக்கத்துடன் கேட்டான். எதுவும் பதில் வராததால் நிமிர்ந்து பார்த்தான். 

அங்கு அவள் இல்லை.  

தொடரும் ...

7 comments:

  1. நித்ராவுக்கு ஏதாவது ஒரு வகையில்HIV பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்...

    ஆமா கடைசியில ரகுன்னு சொல்றீங்களே, யார் அந்த ரகு?

    ReplyDelete
    Replies
    1. விசாரணை அடுத்த பதிவில் தொடரும். அதைத் திருத்தி விட்டேன், கவனக் குறைவு :) நன்றி ஸ்.பை.

      Delete
  2. //மெல்லிய புன்னை செய்தாள் .// புன்னகை சின்னதா இருக்குன்றதால புன்னைன்னு எல்லாம் எழுதப்படாது.. ;-)

    ReplyDelete
    Replies
    1. யோவ் ஆவி இவரு கண்ணாடி ஸ்பை கூட சேர்ந்துட்டு இது கூட எழுதலன்னா எப்படிய்யா?புன்னை.....ஹா ஹா ஹா ஹா ஏடா கூடமா ஆகுதுய்யா...

      Delete
  3. பொன்னகை அல்ல, புன்னகையே ஒரு பெண்ணுக்கு அழகு என அழகாக வர்ணித்துள்ளீர்கள் நித்ரா எனும் பேரழகியை...( நித்ராங்கிற பேர படிக்கும்போதெல்லாம் அனாவசியமா மாதவி முகம் நினைவில் வந்து போவது எனக்கு மட்டும்தானோ?)

    ReplyDelete
  4. ஒரு டி.என்.ஏ டெஸ்ட் போதுமே அதை நிரூபிக்க.. கடைசியா கேட்டாலும் சரியான கேள்விய கேட்டிருக்கார்.. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..

    ReplyDelete
  5. கேள்வி கேட்டாச்சு.. என்ன பதில் சொல்வாங்கன்னு மேலே படிச்சா ஆளையே காணோமே! :(

    அடுத்த பகுதிக்கான ஆவலைத் தூண்டிய கடைசி வரிகள்... காத்திருப்புடன்!

    ReplyDelete